— நீலாவணை இந்திரா —
(விஞ்ஞான பீடம் – கொழும்புப் பல்கலைக்கழகம்)
ஈழத்துத் தமிழ் நவீன இலக்கியப் பரப்பில் தங்களது நெடிய பார்வையை வைத்திருப்பவர்களுக்குத் தெரிந்த வெளிப்படையான உண்மை யாதெனில் ஈழத்து எழுத்தாளர்களும், புலம் பெயர் புலைமையாளர்களும் தங்களது கடிவாளம் பூட்டிய பேனாவினை சாதியப் புலத்திற்குப் பின்னரும், போர்ச்சூழலின் முன்னரும், பின்னருமாகவே ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள் என்பதாகும். நீண்ட குடிமுறை, சாதிய வரலாற்றைக் கொண்ட ஈழத்தமிழர்கள் முப்பது வருடகாலமாக யுத்தச் சூழலில் வாழ்ந்ததில் அவர்களுக்குள் இருந்த காதல், வீரம், கருணை, காமம் எதுவொன்றாக இருந்தாலும் அது சாதிய இலக்கியமாகவோ, அல்லது போரிலக்கியமாகவோதான் பொத்துக்கொண்டுவருகிறது. இதைத் தவறென்றும் கூறிவிட முடியாது. ‘இலக்கியம் காலத்தின் கண்ணாடி’ என்ற வசனம் உண்மையென்றால் தமிழர்கள் யுத்தம் தாண்டி வந்த சூழலையும், சாதியை மிதித்தேறிக் கடக்க முடியாதிருக்கும் கடுமையினையும் தங்களது படைப்புக்களில் பதியம் வைப்பதில் தவறொன்றுமில்லை. அப்படி வருகிற கவிதை, உரைநடைப்படைப்புக்களுக்கே மவுசு அதிகம் என்பதாலும், தமிழ் நாட்டுச் சந்தையில் தாறுமாறாக விற்றுத்தள்ளுவதாலும் அவர்கள் அதைனையே மீண்டும் மீண்டும் மாற்றி எழுதி குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் இப்படியே எழுதிக் கொண்டிருக்கிற நேரத்தில், எப்படித் தமிழ் சினிமா மசாலாப்படங்களின் மாய வலையில் வீழ்ந்திருப்பதை பிடிக்காத தமிழ் ரசிகர்கள் மலையாள, பிரெஞ்சு, துருக்கிய படங்களை பார்க்கத் துவங்கிவிட்டார்களோ அப்படித்தான் இலக்கிய வாசகர்களும் ரஷ்ய நாவல் வரிசையில் தொடங்கி மொழிபெயர்ப்பு இலக்கியங்களுக்குள் குதித்துவிட்டார்கள். இப்போது டால்ஸ்டாய், காப்ஃகா, ட்ரோவ்ஸ்கி, ஹருகி முரகாமி, சார்லஸ் புக்கோவ்ஸ்கி என்று அவர்களின் வாசிப்பு நீண்டு கொண்டிருக்கிறது.
இப்படியான ஒரு வாசக அனுபவத்தை முன்னிறுத்தியே இப்போது இந்த இலக்கிய விமர்சனத்திற்குள் உங்களை அழைத்துச் செல்கிறேன். நான் ரஷ்யா வரை செல்லவில்லை. நாம் சொல்கிற போர்க்கதைகளை விடுத்து எளிய சாமான்ய மக்களிடமும் இந்த பயங்கரவாதச் சூழல் மாற்றங்களைப் புகுத்தியிருக்கிறது என்று கூறுகின்ற சகோதர மொழி பெண் எழுத்தாளர் தக்ஷிலா சுவர்ணமாலியின் ஒரு சிறுகதைக்குள்ளே உங்களை வரவேற்கிறேன்.
சிங்கள எழுத்துலகில் காத்யான அமரசிங்ஹ, இசுரு சாமர ஷோமவீர, சந்தினிப்ரார்த்தனா, சுநேத்ரா ராஜ கருணாநாயக்க, மனுஷா பிரபாஷினி திசாநாயக்க போன்றோரது மொழிபெயர்ப்புக் கதைகள் தமிழ் வாசகர் பரப்புக்குள் முக்கிய இடம் பிடித்துள்ளன. 2020-2021 அரச இலக்கிய விருதுகளின் சிறந்த மொழிபெயர்ப்பு சிறுகதை நூலுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்ற அயல் பெண்களின் கதைகள் நூலில் இருக்கும் ‘பொட்டு’ எனும் கதையை தொட்டுச்செல்வோம். குறித்த தொகுப்பிலும், தக்ஷிலா சுவர்ணமாலியின் ‘அந்திம காலத்தின் இறுதி நேசம்’ எனும் மொழிபெயர்ப்புத் தொகுப்பிலும் இடம்பெற்றுள்ள குறித்த கதையானது. எம்.ரிஷான் ஷெரீப் என்பவரால் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. வழக்கமான இலக்கிய விமர்சனத்திற்கு அப்பால் நின்று கதையை அணுகும் போது….
இந்த ஜீவிதம் வாழ்தலைக் குறிக்கிறது, எப்படியாவது வாழ்ந்துவிட வேண்டுமென்பதைக் குறிக்கிறது. சிறு மழையிலும் மூழ்கிவிடக் கூடும் என்று இருக்கிற வீட்டின் வெளிப்புற அறையினை வாடகைக்குக் கொடுப்பதில் தான் தனக்காக மாத வருமானம் அடங்கியுள்ளது எனும் நிலையில் வாழுகின்ற ஸந்தா எனும் கைம்பெண்ணின் நிலையை எந்தவொரு பட்டாம்பூச்சி விளைவுகளும் (butterfly effects) ஏற்படுத்திவிடவில்லை. பயங்கரவாதமே ஏற்படுத்தியது. “தோடம்பழப் பெட்டியை தலையில் சுமந்தவாறு அன்றைய வருமானத்திற்காக புறக்கோட்டையில் அலைந்து கொண்டிருந்த அவளது கணவனை குண்டொன்று தின்று செரித்திருந்தது. “தமிழர்கள் பரப்பிலேயே போரின் வடுக்களை காண்கிற நாங்கள் சாமான்ய சிங்கள மக்களிடமும் அவ்வடு இருக்கின்றது என்பதை உணர்வதேயில்லை. இதுவும் ஒரு போரிலக்கியம்தானே என்றால் ஆம் என்பேன். இருந்தாலும் இப்படியொரு கோணத்தை நாம் திறனாய்வு செய்ததேயில்லை. இருந்தாலும் இக்கதை வேறொன்றைச் சொல்லிச் செல்கிறது.
இந்த ஸந்தாவின் வீட்டில் தற்போது அறை காலியாகவுள்ளது. ஹொரவப்பொத்தானையைச்சேர்ந்த பெண் ஒருத்தி அந்த அறையை வாடகைக்கு காலி செய்த பிறகு ஸந்தாவின் மாத வருமானத்தில் துண்டு விழுந்தது. எப்போதும் அவளுக்கு துணையாக இருக்கும் அயலட்டையைச் சேர்ந்த மார்க்கிரட் சகோதரிதான் ரகுநாதன் என்ற தமிழரை இப்போது அழைத்து வருகிறாள்.
முன்கதை கூறல் (flashback ) எனும் பின்நவீனத்துவ இலக்கிய உத்தியில் நகரும் கதை, புதிதாக அறைக்கு வந்திருக்கும் ரகுநாதன் என்பவரை ஏற்கனவே அறையில் இருந்த ஹொரவப்பொத்தான சகோதரியோடு ஒப்பிட்டு நிகழ்கால, இறந்தகால அலைகளாகக் கட்டமைக்கப்படுகிறது. கதையின் கதை சொல்லியாக இருக்கும் ஸந்தா எனும் பெண்ணும், வாடகை அறையில் இருக்கும் ரகுநாதனும் பிரதான கதா மாந்தர்களாக அமையும் வண்ணம் கட்டமைக்கப்பட்ட கதையில், கதையின் தலைப்பிற்கான பகுதி வருகிற இடம் தமிழ் வாசகர்களுக்கு மட்டுமே புதியதொரு கோணத்தை திறந்து விடுகிறது.
ரகுநாதன் ‘நீங்கள் பொட்டு வைத்தால் இன்னும் அழகாக இருப்பீர்கள்?’ என்று ஸந்தாவிடம் கூறுகிறான். அதற்கு ஸந்தாவோ சிங்கள முறைப்படி தான் பொட்டு வைப்பதில்லையே. தமிழ் பெண்களுக்கு பூவும், சேலையும், பொட்டும் அடையாளங்களாக இருக்கின்றன. முஸ்லீம் பெண்களுக்கோ பர்தா அடையாளமாக இருக்கிறது. தங்களுக்கு ஏதும் இப்படி இல்லை என்பதாக கதை கூறுகிறது. சிங்களத்தில் வாசிப்பவர்களுக்கு இது சாதாரணமாகத் தோன்றலாம். ஆனால் மொழிபெயர்ப்பில் இவ்வசனம் பெரிய பாய்ச்சலை நிகழ்த்துகிறது.
நீங்கள் பொட்டு வைத்தால் அழகாக இருப்பீர்கள் என்று ரகுநாதன் சொல்வது ஒரு விதவைப் பெண்ணிடம் சொல்லும் வார்த்தையா?! உடனே அவள் சிங்களப் பெண்ணாக இல்லாமல் தமிழ்ப் பெண்ணாக இருந்திருக்க முகாரி ராகமொன்று பின்னணியில் ஓடியிருக்கும். அவள் ரகுநாதனை ஐயா என்று அழைத்து, பின்னர் அண்ணா என்று அழைத்து அவன் மோட்டார் சைக்கிள் பழுதுபார்க்கும் போது வந்த பழைய ஒயில் திரவக்கறையை அவளுக்குப் பொட்டாக வைக்கும் கணத்தை வாசிக்கும் தமிழ் வாசகர்களுக்கு ‘பொத்தி வச்ச மல்லிகை மொட்டு பூத்திருச்சு வெட்கத்தை விட்டு…’ என்று இளையராஜா பாடல் பின்னணியில் ஓடுவதாக இருக்கும். அதன் பின்னர் அவள் அண்ணா என்று கூப்பிட்டாலும் ரகுநாதனை ‘ரகு’ என்று அழைப்பதில் உள்ள கனிவு வடமொழிச் சொல்லான விதவையை தமிழ், பொட்டு வைத்து கைம்பெண் ஆக்கிவிடுகிறது. என்பதைப் போல பொட்டிழந்த, பொட்டு வைக்காத சிங்களத்திக்கு தமிழன் ஒருவன் பொட்டு வைக்கிறான் என்பதாக அழகாகிறது. இது தமிழ் வாசகர்களுக்கு மட்டுமே தோன்றும் இடைக்காலப் படத்தின் அழகை சிறுகதை தருகிறது. அவர்கள் இருவரும் முரளியையும், ரேவதியைப் போலவும் மனதில் பதிந்து கொள்கிறார்கள்.
இப்படிப்பட்ட ரகுநாதன் பக்கத்து அறையில் இருக்கும் போது இடையில் உள்ள பலகை இடைவெளிகளால் அவனை அடிக்கடி பார்க்கும் ஸந்தா அவனைக் காதலிக்கிறாள் என்றால் தக்ஷிலா இன்னுமொரு பெண்ணின் உளவியல் உத்தியையும் அங்கு வைக்கிறார். அந்தப் பலகை இடைவெளிகளினூடு அவள் கள்ளத்தனமாகப் பார்ப்பது போல ரகு தன்னைப் பார்ப்பதில்லை என்று ஸந்தா நம்புவதாகச் சொல்லப்படும் கணம் ஒரு பெண் ஒருவனை மனதார விரும்புவதற்குத் தேவையான நம்பிக்கையை கூட ஸந்தா அவன் மீது வைப்பதாக கதை, மறைமுகமான ஸந்தாவினது காதலை குறித்து நிற்கிறது.
இப்போது கதையில் முரண்நகை. இதை வாசகர்கள் இரண்டு விதமாக அணுகலாம் அவர் அவர் விருப்பத்தை பொறுத்தது. இந்தத் திருப்பம் இப்படியானதா என்பதை உங்கள் முடிவிற்கு விடவே நானும் எண்ணுகிறேன். எனது முடிவு இதுவென்று எதையும் திணிக்கும் விருப்பமும் எனக்கில்லை.
கதையின் உச்சகட்டத்தில் ரகுநாதனைத் தேடிக் கொண்டு வரும் போலீஸ் அவனைப் பிடித்து ஜீப்பில் ஏற்றுகிறது.
அதற்கு ஏற்கனவே தயாராக இருந்தவன் போல அவனும் ஏறிச் செல்கிறான் என்ற ஒரு வசனமும். பலகை இடைவெளிகளினூடு அவனது அறையை அவள் பார்க்கும் போது ரகு சில வயர்களோடும், தகட்டுத் துண்டங்களோடும் இருந்தான் என்று ஒரு நிகழ்வும் கதையில் சொல்லப்படுகிறது. அப்படியானால் அவன் உண்மையில் கலகக்காரனா, தீவிரவாதியா? இப்படி ஒருவன் வைத்த குண்டுதானே அவளது கணவனைக் கொன்றது. அப்படியானால் அவள் கணவனைக் கொன்றவன் என்கிற நிலையிலுள்ளவனையே அவள் விரும்பினாளா?!
இல்லை, அவன் வேறு தவறுக்காக பொலீஸ் வரும் போது அமைதியாக ஏறிச் சென்றானா? உண்மையில் அவள் பார்த்தது குண்டு என்று சொல்லப்படவில்லை, ஒரு வேளை அவை அவனுடைய மோட்டார் வாகனத்தின் உதிரிப்பாகங்களா? இப்படியாகவும் பார்க்கலாம்.
எது எவ்வாறாக இருப்பினும் அவள் அண்ணா என்று ரகுவை அழைத்தாலும் கடையில் அவனுக்காக அவள் ரகு… ரகு… என்று போலீஸ் ஜீப்பின் பின்னால் அவனுக்காக அழுதபடி ஓடும் காட்சி அவன்மீது அவளுக்கு உண்டாகியிருந்த தீராக்காதலை கூறும் விதமாகவே இருக்கிறது.
கதையின் கூறலில் பின்நவீனத்துவத்திற்கான பல உத்திகள் தென்படினும் மொழிபெயர்ப்பாளருடைய மொழி ஆளுகையும் , தமிழைக் கடத்தியுள்ள விதமும் கதையை ஒரு எளிமையான ஓட்டத்துடன் சமர்ப்பிக்கிறது. பொட்டு என்ற இச்சிறு கதையின் உட்பொருள் சிங்கள மொழியை விட தமிழிற்கே பெரிதும் பொருந்திப்போவதாக உள்ளமையே இக்கதை தமிழ்ப்பரப்பில் பேசப்பட்டதற்கான அடிப்படை காரணமாகக்கூட இருக்கலாம்.
கதையின் முடிவு எதிர்பாராத ஒரு முடிவில் வைக்கப்பட்டாலும் கதை அதிபயங்கர சுவாரசியமானதா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். காரணம் ஒரு பெண்ணின் உளவியலை காலம் காலமாக விபரிக்கும் கதைகளெல்லாம் கடையில் காதலிலோ அல்லது பகையிலோதானே முடிகிறது. இரண்டுக்கும் இடைப்பட்ட இடைவெளியில் சூன்யப் புள்ளியில் இருக்கும் அறியமுடியாத பெண்ணின் மனத்தினைப் பற்றி பெண் எழுத்தாளர்களாலேயே எழுதமுடியவில்லை என்றால் கடினம். இதை எழுதிக் கொண்டிருக்கும் என்னாலும் எழுவது கடினமே.
பீடி எனும் நாவலின் மூலம் மீளவும் தமிழ் இலக்கியப் பரப்பிற்குள் பிரபலமடைந்துள்ள தக்ஷிலா சுவர்ணமாலியின் திடல், நந்தியாவட்டை பூக்கள், அந்திம காலத்தின் இறுதி நேசம் போன்ற கதைகளும் கவனிப்புக்குள்ளாகி வருகின்றது. மேலும் மொழிபெயர்ப்பாளர் ரிஷான் ஷெரீப் இன் இப்பணி தமிழுலகிற்கு பல முக்கிய படைப்புக்களை அடையாளம் காட்டுவதோடு நின்றுவிடாமல் சிங்கள மொழிக்கு தமிழின் முக்கிய கதைகளையும் அறிமுகப்படுத்துகிறது. இது வரவேற்கத்தக்கதே.
எது எவ்வாறாயினும் ஸந்தா – ரகு வின் இக் கதை நடுத்தர வர்க்கத்தில் போரும் அதன் பின்னரான வாழ்தலும் என்றே கூற முடிகிறது. காதலோ காமமோ இல்லாத கதை நம்மை ஈர்ப்பதிலை. அப்படி இந்தக் கதையில் வரும் காதல் புரியாத புதிரோடு நிறையாமல் கடந்தேறுகிறது