பண்பாட்டுப் புரிதலைக் குறித்த சில கேள்விகள் (பகுதி 01)

பண்பாட்டுப் புரிதலைக் குறித்த சில கேள்விகள் (பகுதி 01)

—கருணாகரன் —

பண்பாட்டுப் பெறுமானங்களை உருவாக்குவது எப்படி? என்ற கேள்வி தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. இன்னும் நிறைவான – சரியான பதில் கிட்டவில்லை என்பதே இதற்குக் காரணம். அப்படித்தான் இது தொடர்பான விவாதங்களும். முடிவற்றவையாகத் தொடர்கின்றன. ஆனால், இதற்குரிய பதிலைத் தொகுத்துக் கூறலாம். நாம் வாழும் முறையே பண்பாட்டுப் பெறுமானங்களாகின்றன.

நாம் வாழும் முறையென்பது, நம்முடைய சிந்தனையே ஆகும். நம்முடைய சிந்தனையின் ஆழமும் விரிவும் வீச்சும் எப்படி அமைகிறதோ அந்தளவுக்கு அவற்றின் பெறுமானமும் விரிந்து செழித்திருக்கும். அது குறைவுற்று வீழ்ச்சியடைந்திருந்தால் பெறுமானங்களிலும் சரிவே ஏற்பட்டிருக்கும்.

நம் பழைய பண்பாட்டுப் பெருமைகளைப் பேசுவதாலோ மரபென்று எதையும் காலப் பொருத்தம், சூழற் பொருத்தம் கருதாமல் பின்பற்றுவதாலோ பண்பாட்டுப் பெறுமானங்களை உருவாக்கமுடியாது. “பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல” என்ற அடிப்படையில் மிகத் துணிவுடன் பழையனவற்றில் பொருத்தமற்றவற்றைக் கழித்து விடத் துணிய வேண்டும். அதைப்போல புதியனவற்றைக் குறித்துச் சிந்தித்து, அவற்றை வாழ்க்கையில் இணைக்க வேண்டும். இதற்கும் துணிவு வேண்டும்.

அறிவு என்பதே துணிவினால்தான் ஒளிர்கிறது. துணிவற்ற அறிவு இருளுக்குச் சமம். உண்மையில் அறிவு என்பது சுடர்ந்து சுடர்ந்து அந்தத் துணிவைத் தூண்டும். அதனுடைய இயல்பான குணம் அது. இருக்கின்ற – நிலவுகின்ற குறைபாடுகளை நீக்கியெழுவதே அறிவின் அடிப்படை. இதில்லையெனில் நம்மிடம் அறிவு இல்லை. வெறும் தந்திரமே மிஞ்சியிருக்கிறது என்றே பொருளாகும். இது அறிவுக்கு எதிர்நிலையானது.

அறிவு புதியனவற்றை அறியவும் அறிந்தவற்றைப் பிரயோகப்படுத்தவும் விளையும். அதாவது புத்தாக்கத்தைக் காண விரும்பும். மனித குலம் வளர்ச்சியடைந்தது இந்த அடிப்படையிலேதான். குழந்தைகளிடத்திலே நாம் இந்தப் பண்பைக் காணலாம். அவர்கள் எதையாவது புதிதாகச் செய்ய விளைந்து கொண்டேயிருப்பர். அவர்களுடைய செயல்கள் நம்மை வியப்படைய வைப்பது இந்த அடிப்படையினால்தான்.

இன்று படித்துப் பட்டம் பெற்றவர்களில் பலரிடத்தும் நாம் காண்பது அறிவை அல்ல. அறத்தையும் அல்ல. அதிகரித்துக் கிடக்கும் அறமீறல்களையும் அறிவீனங்களையுமே. 

ஊழல், அதிகார துஸ்பிரயோகம், அணி சேர்க்கை தொடக்கம் தமக்கு மேலுள்ள தரப்பினரிடத்தில் (அரசியல் தரப்புகள், புலம்பெயர் பிரமுகர்கள் வரையில்) அடிபணிதல், வழிதல், சரணடைதல் போன்றவற்றையே. மட்டுமல்ல, சாதிய, சமூக வேறுபாடுகளையும் பால்நிலையிலான ஏற்றத்தாழ்வுகளையும் காண்கிறோம். 

அரசியல் தெரிவு, பண்பாட்டுப் புரிதல் போன்றவற்றிலும் இவர்களுடைய தவறுகளைக் காணமுடியும். எளிய உதாரணம், பிற்போக்கும் ஜனநாயக விரோதமான அல்லது இனவாதத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியற் கட்சிகளை அநேகமானோர் ஆதரிப்பதாகும். 

இதில் தமிழ், சிங்களம், முஸ்லிம் என்ற வேறுபாடெல்லாம் கிடையாது. எல்லாத் தரப்பிலும் அறிவைமறைத்து நிற்கும் மூடத்தனமே உண்டு. இதனால்தான் சிறிய நாடு அளவுக்கதிகமான அளவில் அகரீதியாகப் பிளவுண்டு கிடக்கிறது. 

இன்னொன்று, அரச தரப்பினால் நடத்தப்படுகின்ற பண்பாட்டு விழாக்கள் – நிகழ்வுகள். எந்தப்பண்பாட்டு விழா மெச்சும்படியாக உள்ளது? அல்லது வேறுபாடுகளையும் முன்மாதிரிகளையும் கொண்டுள்ளது? இவர்களால் வெளியிடப்படும் எந்தப் பண்பாட்டு மலர் கவனிக்கக் கூடியதாக, பெறுமானமுள்ளதாக உள்ளது? நிகழ்வுகளில் பேசப்படும் பேச்சுகள், நிகழ்ச்சிகள், நிகழ்ச்சி முறைமைகள், அவற்றின் ஒழுங்கமைப்புகள் எல்லாம் எப்படியுள்ளன? நாட்டுப் புறக்கலைஞர்களின் ஒரு சில நிகழ்வுகள் மட்டு்ம விலக்காக இருப்பதுண்டு. 

ஏனையவை ஒவ்வொன்றும் தமக்கு மேலுள்ள அதிகாரிகளுக்குச் செய்யப்படும் அபிஷேகங்களாகவே உள்ளன. 

இது எவ்வளவு இழிவானது, எவ்வளவு மடத்தனமானது? எவ்வளவு வெட்கக் கேடானது?

இவர்களுடைய படிப்பு, அறிவை உருவாக்கவில்லை. கண்ணியத்தையும் மானுட நேயத்தையும் உண்டாக்கவில்லை. மாற்றங்களையும் புதியனவற்றைத் தேடுவதையும் புதிதளித்தலையும் நிகழ்த்தவில்லை. பன்மைத் தன்மைகளைப் பற்றிச் சிந்திக்க வைக்கவில்லை. 

பண்பாடு என்பது பழமைகளைக் கேள்விக்கிடமின்றிப் பேணுவதாகும். நவீனத்தைப் புறந்தள்ளுவதாகும். அல்லது அதிலிருந்து விலகி நிற்றலாகும் என்ற அளவிலே புரிந்து கொள்ளவைத்துள்ளது. இது பண்பாட்டின் எதிர்நிலையாகும். 

பதிலாகச் சுயநலத்தையும் தன்மையத்தையுமே உண்டாக்கியிருக்கிறது. எப்படியாவது சுழித்துக்கொண்டு பெறக் கூடியதைப் பெற்று விட வேண்டும். அதிகாரப் படிநிலையில் மேலே சென்று விடவேண்டும் என எண்ண வைத்துள்ளது. (மருத்துவமனைகள், பல்கலைக்கழகம் போன்ற உயர் கல்வி நிறுவனங்கள், நிர்வாகப் பிரிவுகள் போன்றவற்றில் நடக்கும் திருக்கூத்துகள் இதற்காதாரம்). 

இதனால் தமக்குக் கீழுள்ளோரிடம் அதிகாரத்தைப் பிரயோகிப்பதையும் தமக்கு மேலுள்ள அதிகாரத்தைச் சேவிப்பதையுமே கொண்டிருக்கிறது. 

அப்படியென்றால், இது உண்டாக்கும் சமூக விளைவுகள் நிச்சயமாகப் பாரதூரமான எதிர்விளைவுகளையே உண்டாக்கும். அது சமூக வளர்ச்சியைப் பாதிக்கும். இதுதான் இன்று நிகழ்ந்திருப்பது.

அளவுக்கு அதிகமான முறையில் அரச திணைக்களங்களில் உத்தியோகத்தர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு வேலைக்கும் எனத் துறைகள் பிரிக்கப்பட்டு, அதற்கான அதிகாரிகளும் உத்தியோகத்தர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதற்குரிய வளங்களும் வழங்கப்பட்டுள்ளன. இதற்காக அரசாங்கத்தினால் (மக்களின் வரிப்பணம்) பெருமளவு செலவு செய்யப்படுகிறது.  

இது எதற்காக? அந்தத் துறைகளில் வளர்ச்சி ஏற்பட வேண்டும். அங்கே இலகு தன்மையும் விரைவும் உருவாக்கப்பட வேண்டும். மக்களுக்கு நிறைவான பயன் கிட்ட வேண்டும் என்பதற்காகத்தானே!

ஆனால், இது நிகழ்ந்திருக்கிறதா? என்றால் –

இல்லை என்று துணிந்து கூறிவிட முடியும். மக்களுக்கும் உத்தியோகத்தர்கள், அதிகாரிகளுக்கும் இடையிலான வெளி குறைக்கப்படுவதற்குப் பதிலாக மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

திட்டங்கள் ஒன்றாகவும் நடைமுறைகள் வேறொன்றாகவும் உள்ளன. அல்லது அவற்றின் மதிப்பீடோ மீளாய்வோ இல்லாதிருக்கிறது. அப்படி மீளாய்வு நடத்தப்பட்டாலும் அதில் கண்டறியப்பட்டவற்றின் அடிப்படையில் புதிய திட்டங்கள், மாற்று உபாயங்கள், புத்தாக்கங்கள் நிகழ்வாக இல்லை.

இப்படியே இதைக் குறைகாண் விடயமாக – எதிர்மறையுடன் நோக்கவில்லை. இதில் கவனிப்பும்மாற்றமும் நேர்நிலைத் தன்மையும் உண்டாக வேண்டும் என்ற நேக்கிலேயே இது பற்றி இங்கே உரையாடப்படுகிறது. இதைக்குறித்து மாற்றுச் சிந்தனையையும் மாற்று அபிப்பிராயங்களையும் யாரும் முன்வைக்கலாம். அது கூட பண்பாட்டின் முதிர்ச்சியான ஓர் வடிவமேயாகும். அறிவின் ஒழுங்கு அப்படித்தான் அமைய வேண்டும். முன்வைக்கப்படும் கருத்தை எதிர்த்து மறுதலிப்பதற்குப் பதிலாக அது பற்றிய உரையாடலை அதற்கான தருக்க அடிப்படையிலும் நியாயங்களின்படியும் உண்மையின் ஆதாரங்களோடும் முன்வைப்பதாக இருக்கவேண்டும்.

இதற்கு ஜனநாயக அடிப்படைகளைப் பேணும் மனமும் பண்பாட்டுச் சூழலும் அவசியம். பண்பாட்டின் அடிப்படைப் பண்புகளில் முதலாவது அது தன்னுள் கொண்டிருக்கும் ஜனநாயக உள்ளடக்கமாகும். ஜனநாயக உள்ளடக்கமற்ற எதுவும் பண்பாட்டுச் சிறப்பைப் பெறவே முடியாது. குடும்பத்திலும் வெளியிலும் ஜனநாயக உள்ளடக்கம் சிறப்புற்றிருக்குமாக இருந்தால் அது சமூக வளர்ச்சியாகவும் தேச வளர்ச்சியாகவும் இருக்கும். அதுதான் உயர்ந்த பண்பாட்டின் லட்சணமாகவும் இருக்கும். அதைப்போல ஜனநாயகப் பண்புகளைப் பேணும் மனதை அறிவு உருவாக்க வேண்டும். இவை சரிநிலையில் அமையும்போது செழுமையான பண்பாட்டுப் பரப்பு உருவாகும், விரிவடையும்.