— வீரகத்தி தனபாலசிங்கம் —
இலங்கையில் அண்மைய நாட்களாக குரங்குகள் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துக்கொண்டிருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. சீனாவுக்கு குரங்குகளை ஏற்றுமதி செய்வதற்கான முயற்சிகளில் அரசாங்கம் இறங்கியிருப்பதாக வெளியான செய்திகளை அடுத்து கட்சி தாவும் அரசியல்வாதிகளை கேலி செய்து கார்ட்டூன்களை பிரசுரிப்பதில் பத்திரிகைகளும் ஒருவித சந்தோசத்தை அனுபவிக்கின்ற அதேவேளை சில சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆர்வலர்கள் அரசியல்வாதிகளைப் போன்று குரங்குகள் நாட்டுக்கு எந்த தீமையையும் செய்யவில்லை. குரங்குகளை வெளிநாட்டுக்கு அனுப்புவதை விடுத்து அரசியல்வாதிகளை அனுப்பலாம் என்று கேலி பேசுகிறார்கள்.
இந்த ‘குரங்கு விவகாரம்’ தொடர்பில் கிளம்பிய சர்ச்சைக்கு ஊடகங்கள் சில வேளைகளில் மனிதர்களின் பிரச்சினைகளுக்கு கொடுக்காத முக்கியத்துவத்தை கூட கொடுக்கின்றன.
எமது நாட்டில் பொதுவாக காணப்படுபவை பொன் மண்ணிறமுடைய சிறியவகை குரங்குகளே. அவற்றின் தலையில் தொப்பி போன்று மயிர் வளர்ந்திருக்கும். அதனால் அவற்றை ஆங்கிலத்தில் Toque monkeys என்று அழைக்கிறார்கள்.
சீனாவில் உள்ள மிருகக்காட்சி சாலைகளுக்கு ஒரு இலட்சம் இலங்கை குரங்குகளை வழங்குமாறு சீன பிரதிநிதிகள் குழுவொன்று வேண்டுகோள் விடுத்ததாக விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர சிங்கள — தமிழ் புத்தாண்டுக்கு ஓரிரு நாட்கள் முன்னதாக அறிவித்ததை அடுத்தே சர்ச்சை மூண்டது. இந்த வேண்டுகோள் குறித்து விவசாய அமைச்சில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றதாகவும் குரங்குகளை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வது தொடர்பில் எழக்கூடிய சட்ட விவகாரங்களை ஆராய்வதற்கு அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் குழுவொன்றை உடனடியாக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட விருப்பதாகவும் அவர் கூறினார்.
நாட்டில் மேற்கூறப்பட்ட வகை குரங்குகளின் குடித்தொகை சுமார் 30 இலட்சம் என்றும் ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் படி இவையே பயிர்களுக்கு பாரிய சேதத்தை விழைவிப்பதாகவும் குடித்தொகையைக் குறைப்பதற்கு இதுவரையில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளினால் பயன் ஏற்படவில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
பயிர்களுக்கு குரங்குகளினால் ஏற்படும் சேதத்தை கருத்திற்கொண்டு நோக்கும்போது இன்னொரு நாடு அந்த குரங்குகளை பெரும் எண்ணிக்கையில் வாங்குவதற்கு முன்வந்திருப்பது மகிழ்ச்சிக்குரிய விடயம் என்று விவசாய அமைச்சு கலந்துரையாடலில் கூறப்பட்டதாம்.
விவசாய அமைச்சரிடம் மேற்படி ஆராய்ச்சி நிலையத்தினால் கையளிக்கப்பட்ட ஆய்வு அறிக்கையொன்று நாட்டில் வன விலங்குகளின் குடித்தொகை தற்போதைய வனங்களின் அடர்த்தியுடன் ஒப்பிடும்போது தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு பெருகிவிட்டது என்று கூறுவதாகவும் விவசாய அமைச்சு அறிவித்தது.
குரங்குகளினாலும் பெரிய அணில்களினாலும் ஒவ்வொரு வருடமும் சுமார் பத்து கோடி தேங்காய்கள் நாசமாக்கப்படுவதாகவும் இதனால் ஒரு கோடி 93 இலட்சம் அமெரிக்க டொலர்கள் இழப்பு ஏற்படுவதாகவும் அறிக்கையை மேற்கோள் காட்டி அமைச்சர் கூறினார். வனவிலங்குகளினால் பயிர்களுக்கு ஏற்படுகின்ற சேதங்களின் விளைவான இழப்புகளை மொத்தமாக பார்த்தால் அது 8 கோடி 75 இலட்சம் டொலர்களுக்கு சமமானதாகும் என்று அறிக்கை கூறுகிறது.
பயிர்களுக்கு பெரும் சேதத்தை விளைவிக்கும் குரங்குகள் உட்பட வேறு ஐந்து வனவிலங்குகளை ஒழித்துக்கட்டவேண்டும் என்று முன்னர் ஒரு தடவை அமரவீர கூறியிருந்தார். மயில்கள், பெரிய அணில்கள், முள்ளம்பன்றி மற்றும் காட்டுப் பன்றி ஆகியவை இந்த பட்டியலில் அடங்குகி்ன்றன.
இவற்றை கொலை செய்வதற்கு விவசாயிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என்று பெப்ரவரியில் அமைச்சர் கூறியிருந்த போதிலும் அது தொடர்பில் கிளம்பிய சர்ச்சையை அடுத்து அவ்வாறு கொலைக்கு அனுமதிப்பது குறித்து அரசாங்கம் தீர்மானம் எதையும் எடுக்கவில்லை என்று பின்வாங்கிக் கொண்டார்.
ஆனால், பயிர்களுக்கு ஏற்படும் சேதத்தை தடுப்பதை மாத்திரம் காரணமாகக் காட்டி மிருகங்களை ஏற்றுமதி செய்வதை சாதாரணமான ஒரு விடயமாக எடுக்கமுடியாது என்று சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் வனவிலங்கு நலன்களில் அக்கறை கொண்ட அமைப்புகளிடம் இருந்து மறுநாளே எதிர்ப்புக் கிளம்பியது.
ஒரு இலட்சம் குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வது குறித்து ஆராய குழுவொன்றை நியமிப்பதற்கான ஏற்பாடு குறித்து கேள்வியெழுப்பிய சுற்றுச்சூழல் விவகார சட்டத்தரணி கலாநிதி ஜகத் குணவர்தன தற்போதைய சட்ட ஏற்பாடுகள் மிருகங்களை ஏற்றுமதி செய்வதை அனுமதிக்கவில்லை என்று சுட்டிக்காட்டினார். எந்த அடிப்படையில் பெரும் எண்ணிக்கையான குரங்குகளை ஏற்றுமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது? இலங்கையின் குரங்குகளுக்கு பொருத்தமான சீதோஷ்ண நிலை சீனாவில் இருக்கிறதா? அந்த நாட்டில் உள்ள மிருகக்காட்சி சாலைகளுக்கு இந்தளவு பெரிய எண்ணிக்கையில் ஏன் எமது குரங்குகள் தேவைப்படுகின்றன? என்ற கேள்விகள் குறித்து ஆராயவேண்டியது அவசியமாகும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
தற்போதைய சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் இயற்கைப் பாதுகாப்பு நோக்கங்களுக்காகவும் பரிமாற்றத் திட்டங்களின் அடிப்படையிலும் மாத்திரமே வெளிநாடுகளுக்கு எமது விலங்குகளை ஏற்றுமதி செய்யமுடியும் என்று கலாநிதி குணவர்தன சுட்டிக்காட்டினார்.
அதேவேளை, ஒரு இலட்சம் இலங்கை குரங்குகளினதும் பயணம் சீனாவில் உள்ள ஆய்வுகூடங்களில் போய்முடிவடையக்கூடும் என்று சந்தேகம் வெளியிட்ட சுற்றுச்சூழல் நீதிக்கான நிலையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் ஹேமந்த விதானகே அவை மருத்துவ மற்றும் அழகுசாதன உற்பத்திப் பொருட்களின் பரிசோதனைகளுக்கு பயன்படுத்தப்படலாம் என்று கூறியிருக்கிறார்.
மிருகக்காட்சி சாலைகள் பற்றிய வரைவிலக்கணத்தைப் பொறுத்தவரை, உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரமாணத்திற்கு அமைவாக சீனாவில் 18 மிருகக்காட்சி சாலைகளே இருக்கின்றன. இலங்கையில் இருந்து அனுப்பப்படக்கூடிய ஒரு இலட்சம் குரங்குகளை அந்த மிருகக்காட்சி சாலைகளுக்கு பகிர்ந்தளிப்பதானால் ஒவ்வொரு பூங்காவுக்கும் 5000 க்கும் அதிகமான குரங்குகள் வழங்கப்படும். இது நம்பகத்தன்மை வாய்ந்ததாக இல்லை. எதற்காக மிருகக்காட்சி சாலைகளுக்கு இந்தளவு எண்ணிக்கையில் குரங்குகள்? என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.
“இந்த குரங்குகளை சீனாவின் மிருகக்காட்சி சாலைகளுக்கு அனுப்புவதாக இருந்தால் அவை இலங்கையில் மிருகக்காட்சி சாலை மிருகங்களாக பராமரிக்கப்பட்டிருக்க வேண்டும். அங்கேயே பிறந்து வளர்ந்திருக்கவேண்டும். எமது மிருகக்காட்சி சாலைகளில் ஒரு இலட்சம் குரங்குகள் இல்லை. அதனால் எமது நாட்டின் சட்டத்தின் கீழ் இந்த ஏற்றுமதி முயற்சியை நியாயப்படுத்தமுடியாது.
“ஸ்ரீ தலதா மாளிகை, அநுராதபுரம் மற்றும் மிகிந்தலை போன்ற ஆலயப் பகுதிகளில் இருந்தே குரங்குகளை பிடிக்கவேண்டியிருக்கும். மனிதர்களாகிய எம்மைப் போன்று இந்த பகுதிகளில் வாழ்வதற்கான உரிமை குரங்குகளுக்கு இருக்கிறது. அதனால் மதத்தலங்களில் இருந்து அவற்றை சீன ஆய்வுகூடங்களுக்கு அனுப்புவதை எதுவிதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. தனது சொந்த விருப்பின்பேரில் அமைச்சர் மிருகங்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவது குறித்து தீர்மானிக்கமுடியாது. அவர் இந்த முயற்சியை கைவிட வேண்டும். அவ்வாறு அவர் செய்யாவிட்டால் சுற்றுச்சூழல் நீதிக்கான நிலையம் தற்போதைய வனவிலங்கு சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கும்” என்று விதானகே கூறினார்.
முன்னாள் வனவிலங்கு பாதுகாப்பு அமைச்சரான நவின் திசாநாயக்கவும் இலங்கை குரங்குகள் சீனாவின் ஆய்வுகூடங்களை சென்றடையக்கூடிய சாத்தியம் இருப்பதால் இந்த ஏற்றுமதி முயற்சியை தான் கடுமையாக எதிர்ப்பதாகவும் மிருகக்காட்சி சாலைகளுக்கு இடையிலான பரிமாற்றத் திட்டங்களின் அடிப்படையில் மாத்திரமே மிருகங்களை வெளிநாடுகளுக்கு அனுப்பமுடியும் என்று குரல் கொடுத்தார். அவற்றின் இயற்கையான வாழ்விடங்களில் சுற்றித்திரிந்து முழு வாழ்நாளையும் கழிப்பதற்கு இந்த மிருகங்களுக்கு சகல உரிமையும் இருக்கிறது என்றும் அவர் வாதிட்டார்.
வன விலங்குகளின் குடித்தொகையை குறைப்பதற்கு வகைதொகையின்றி அறிவியல் பூர்வமற்றமுறையில் கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படக்கூடிய நடவடிக்கைகள் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கை செய்கிறார்கள். குரங்குகள் பெரும் சேதத்தை ஏற்படுத்துபவையாக இருந்தாலும் அவை சூழல்தொகுதி சமநிலையைப் பேணுவதில் பயனுடைய பங்கை வகிப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆர்வலரும் மருத்துவருமான முரளி வல்லிபுரநாதன் ‘கொழும்பு ரெலிகிராவுக்கு’ எழுதிய கட்டுரையொன்றில் குரங்குகளின் குடித்தொகையை பெருமளவில் குறைப்பதற்கு மேற்கொள்ளப்படக்கூடிய நடவடிக்கைகள் சுற்றுச்சூழலுக்கு ஏற்படுத்தக்கூடிய பாதிப்புக்களை விளக்கிக்கூறியிருக்கிறார்.
“விவசாய அமைச்சர் கூறுவது போன்று இலங்கையில் மேற்குறிப்பிட்ட வகை குரங்குகளின் குடித்தொகை 30 இலட்சமாக இருக்கமுடியாது. அது மிகைப்படுத்தப்பட்ட ஒரு எண்ணிக்கை. இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான குரங்குகளே இருக்கக்கூடும். ஒரு இலட்சம் குரங்குகளை வெளிநாட்டுக்கு அனுப்பினால் இலங்கையில் அவற்றின் தொகை அரைவாசியாகக் குறையும். அதனால் சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும்” என்று அவர் கூறியிருக்கிறார்.
குரங்குகளுக்கான சீன கிராக்கி ஒன்றும் புதிய விடயமல்ல. சர்வதேச ரீதியில் சட்டபூர்வமாகவும் சட்டவிரோதமாகவும் குரங்கு வியாபாரம் பரந்தளவில் இடம்பெறுகின்றது. இலங்யைில் காணப்படுவதைப் போன்ற குரங்கு வகைகளை மேற்குநாடுகள் பிரதானமாக மருந்து ஆராய்ச்சி நோக்கத்துக்காகவே இறக்குமதி செய்கின்றன.இந்த குரங்குகளின் மரபணுக்கூறும் வேறுபல அம்சங்களும் மனிதர்களினதை ஒத்ததாக இருக்கிறது. இந்த நூற்றாண்டின் முதல் இருபது வருடங்களில் அமெரிக்கா மாத்திரம் பரிசோதனை நோக்கங்களுக்காக 482,000 குரங்குகளை இற்குமதி செய்ததாக வல்லிபுரநாதன் கூறுகிறார். காடழித்தலை தடுப்பதே குரங்குப் பிரச்சினையை கையாள்வதற்கு அர்த்தபுஷ்டியான வழி என்பது அவரது நிலைப்பாடு.
இது இவ்வாறிருக்க, இன்னொரு சுற்றுச்சூழல் ஆர்வலரான நயனக்க ரண்வெல்ல தாங்கள் மேற்கொண்ட விசாரணைகளின் படி உயிருடன் இருக்கும்போதே அவற்றின் மூளைகளை உண்பதற்காகவே குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதிசெய்ய திட்டமிடப்படுவதாகவும் இந்த திட்டத்தின் பின்னணியில் தெங்கு அபிவிருத்தி சபையின் உயரதிகாரி ஒருவரின் மனைவி இருப்பதாக கூறப்படுவதாகவும் தெரிவித்தார்.
இந்த மிருகங்களை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யவேண்டும் என்று ஒரேயொரு அரசியல்வாதியே உரத்துக்குரல் கொடுத்ததை காணக்கூடியதாக இருந்தது. குரங்குகளை மாத்திரமல்ல, சாத்தியமானால் மயில்களையும் ஏற்றுமதி செய்யவேண்டும் என்று கூறிய ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார சுற்றுச் சூழலியலாளர்கள் உட்பட குரங்குகள் ஏற்றுமதியை எதிர்ப்பவர்கள் குரங்குகளும் மயில்களும் பயிர்களுக்கு சேதத்தை விழைவித்து விவசாய சமூகத்துக்கு ஏற்படுத்தியிருக்கும் இழப்புக்களை வனாத்தவில்லு, ஆனைமடுவ மற்றும் அநுராதபுரம் போன்ற பகுதிகளுக்கு நேரடியாக சென்று பார்வையிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இந்த குரங்குகள் ஏற்றுமதி விவகாரம் குறித்து கடந்த வாரம் அமைச்சரவையில் விளக்கமளித்த அமைச்சர் அமரவீர அதன் சாத்தியத்தன்மை குறித்து ஆராய்வதற்கு விவசாய, வனவிலங்குகள், பெருந்தோட்ட மற்றும் நீதி அமைச்சுக்களின் அதிகாரிகளை உள்ளடக்கிய குழுவொன்றை நியமிப்பதற்கு அங்கீகாரம் கோரி அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் பத்திரம் ஒன்றை சமர்ப்பிக்கப்போவதாக கூறினார்.
குரங்குகள் ஏற்றுமதிக்கான யோசனையை சீன தனியார் நிறுவனம் ஒன்றே சமர்ப்பித்ததாகவும் சீன அரசாங்கத்துக்கு இதில் எந்த சம்பந்தமும் கிடையாது என்று கூறிய அமைச்சர் யோசனை ஒப்பேறுமானால் ஒரு இலட்சம் குரங்குகளும் ஒரே தடவையில் அனுப்பப்படப் போவதில்லை. கட்டங் கட்டமாகவே அனுப்பப்படும் என்றும் குறிப்பிட்டார்.
இது இவ்வாறிருக்க, இலங்கை குரங்குகளை சீனாவுக்கு அனுப்பும் முயற்சி குறித்து இந்திய அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டு செல்வதற்கும் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை கற்கைகள் நிலையம் என்ற அமைப்பு முயற்சிக்கிறது.
கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகத்துக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கும் அந்த நிலையத்தின் தேசிய அமைப்பாளர் ரவீந்திர காரியவாசம் குரங்குகளை சீனாவுக்கு அனுப்புவது இலங்கையினதும் இந்தியாவினதும் கலாசாரங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் இருநாடுகளின் குரங்குகளுக்கும் இடையில் மரபணு மற்றும் கலாசாரத் தொடர்புகள் இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த சர்ச்சைகளை எல்லாம் கவனத்தில் எடுத்த கொழும்பில் உள்ள சீனத்தூதரகம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகங்களில் தவறான தகவல்கள் வெளியிடப்படுவதாக கூறியிருக்கிறது.
இலங்கையில் இருந்து குரங்குகளை ஏற்றுமதி செய்வதற்கு எந்தவொரு சீன தனியார் நிறுவனமும் கோரிக்கை விடுத்தது பற்றி தங்களுக்கு எதுவும் தெரியாது என்று சீனாவில் வனவிலங்குகள் மற்றும் தாவர வகைகளின் இறக்குமதி, ஏற்றுமதியை கண்காணித்து நிருவகிக்கும் பிரதான அரசாங்க திணைக்களமான தேசிய காடு வளர்ப்பு, மேய்சசல் தரை நிருவாகம் தெளிவுபடுத்தியிருப்பதாக தூதரகம் கடந்த புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருக்கிறது. குரங்கு ஏற்றுமதி குறித்து எந்த விண்ணப்பமும் எந்தவொரு தரப்பிடம் இருந்தும் அந்த நிருவாகத்துக்கு கிடைக்கப்பெறவில்லை என்று அறிக்கை கூறுகிறது.
சீன தூதரகத்தின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது விவசாய அமைச்சர் ஏற்றுமதி குறித்து கூறியதும் அமைச்சரவைக்கு அளித்த விளக்கமும் எல்லாமே பொய்ப் பேச்சா என்ற கேள்வி எழுந்தது.
இதையடுத்து விவசாய அமைச்சின் செயலாளர் குணதாச அமரசிங்க குரங்குகள் இனப்பெருக்க நோக்கத்துக்காகவே சீனாவுக்கு அனுப்பப்படவிருப்பதாகவும் ‘Animal Breeding Limited’ என்ற சீன கம்பனியே ஒரு இலட்சம் குரங்குகளை கேட்டதாகவும் கடந்த வெள்ளியன்று அறிவித்தார்.
சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், விவசாயிகள், பொதுமக்கள், சுற்றுலாத்துறையினர், மதத்தலைவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் என்று சம்பந்தப்பட்ட பல்வேறு தரப்புகளும் கலந்துரையாடுவதற்கான ஏற்பாடுகளை விவசாய அமைச்சு செய்திருப்பதாகவும் அவர்கள் எல்லோரினதும் கருத்துக்களில் நியாயமானவற்றையும் ஏற்புடையவற்றையும் கருத்தில் எடுத்து குரங்குகளை அனுப்புவது குறித்து சிறந்த தீர்மானம் எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
காடுகள் மற்றும் வனப்பாதுகாப்பு பகுதிகளில் இருந்து அல்ல பயிர்ச்செய்கை சேதத்துக்குள்ளாகும் பகுதிகளில் இருந்தே குரங்குகள் ஏற்றுமதிக்காக பிடிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார். இந்த அளவில் குரங்குப் பிரச்சினை இப்போது இருக்கிறது.
(நன்றி : ஈழநாடு)