மட்டக்களப்பு: அரசியல் இல்லாத…, அரசியல்வாதிகள்…! மௌன உடைவுகள் – 28

மட்டக்களப்பு: அரசியல் இல்லாத…, அரசியல்வாதிகள்…! மௌன உடைவுகள் – 28

       — அழகு குணசீலன் —

 இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் அரசியல் அமைப்பு ஜனநாயக விழுமியங்களைக் கொண்டது. இந்த ஜனநாயக விழுமியங்களை கொழும்பு பெரும்பான்மை சிங்கள அரசு கடைப்பிடிக்கின்றதா? இல்லையா? என்பது வேறு விடயம். ஆனால் இந்த ஜனநாயக உரிமையை கோரி நிற்கின்ற சிறுபான்மையினர் அவற்றைக் கைக்கொள்ள வேண்டும். தமிழர் அரசியல் எதைக் கோருகிறதோ அதைக் கடைப்பிடிக்கின்றதா? ஜனநாயகத்திற்கும் உரிமைகளுக்கும் மதிப்பளிக்கின்றதா? முன் மாதிரியான அரசியலைச் செய்கின்றதா? என்பதே இங்கு எழுப்பப்படுகின்ற கேள்வி.

மட்டக்களப்பு அரசியல் அண்மைக் காலமாக ஒரு வாய்வன் முறை – பேச்சு வன்முறை அரசியலாக மாறி வருகிறது. போகப் போக வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு முட்டியைத்தூக்குவதாக இருக்கிறது. இது கடந்தகால மட்டக்களப்பின் நாடாளுமன்ற ஜனநாயக அரசியலுக்கு முரணானது. ஒரு வகையில் சொன்னால் கொழும்பு பெரும்பான்மை சிங்கள நாடாளுமன்ற அரசியல் வன்முறையானது மட்டக்களப்பு பிரதேச, மாவட்ட நிர்வாகம் வரை இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது.

 இதை கொண்டு வந்திருப்பவர்கள் அதிகாரிகள் அல்ல.  சிங்கள ஆட்சியாளர்களும் அல்ல. மட்டக்களப்பு மக்களால் ஜனநாயக ரீதியாக தெரிவு செய்யப்பட்ட சட்டவாக்க சபை எனப்படும் நாடாளுமன்றத்தின் கண்ணியமான உறுப்பினர்கள். இவர்களின் கடமையே ஜனநாயகத்தின் பேணுகின்ற, பாதுகாக்கின்ற சட்டங்களை உருவாக்குவதுதான். நம்பலாமா…?

மக்கள் பிரதிநிதி ஒருவருக்கு எழுதப்படாததும், ஆனால் தன்னைத் தெரிவு செய்த மக்களின் கௌரவத்தையும், மரியாதையையும், காப்பாற்றுவதுடன், மக்களின் நன்மதிப்பைப் பெறவேண்டிய பொறுப்பும் இருக்கிறது. இது பரஸ்பர நம்பிக்கையுடன்கூடிய மக்களுக்கும்  இந்த அரசியல் வாதிகளுக்கும் இடையிலான “கனவான்கள்” ஒப்பந்தம் போன்றது. இது ஜனநாயக அரசியலின் அடிப்படை. மட்டக்களப்பின் அரசியலை அவதானிக்கையில் அது அரசியல் அற்ற, வெறும் அரசியல் வாதிகளை கொண்டதாக தெரிகிறது.

அரசியல் அற்ற ஆயுதப்போராட்டம் விட்டுச் சென்ற எச்சத்தின் மிச்சம் இது.

பெயரளவில் ஜனநாயகம் பேசிய ஆயுத அரசியலின் பிரசவம். விடுதலைப் புலிகளின் மக்கள் முன்னணி, விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு… இவை எல்லாம் ஆயுத அரசியலை ஓரளவுக்கு மறைத்து சர்வதேசத்தை ஏமாற்றுவதற்காக செய்யப்பட்ட செயற்பாடுகள். இதனால் தான் தமிழர் அரசியல் ஆயுதங்கள் மௌனித்து தசாப்தம் கடந்தும் இன்னும் ஜனநாயகத்தை குழி தோண்டிப் புதைப்பதாக உள்ளது. ஏட்டிக்குப் போட்டியான ஆயுத அரசியல் சிங்க தேசத்திலும் ஒன்றும் சிறப்பானதல்ல. இதில் இருந்து விடுபடுவதற்கும் புதிய ஜனநாயக அரசியல் தோற்றம் பெறுவதற்கும் வடக்கும் கிழக்கும் மட்டுமன்றி ஒட்டு மொத்த இலங்கைக்கும் இன்னும் பொறுமை தேவை.

அரசியல் என்ற சமூக விஞ்ஞானத்தில் ஜனநாயக மாண்பு அடிப்படையானது. இங்கு குறைந்தபட்சம் ஒரு உத்தியோக பூர்வ அமர்வில் எப்படி நடந்து கொள்வது என்பதையாவது அறிந்திருப்பது அவசியம். அது மட்டுமின்றி இது ஒரு முன் நிபந்தனையும் கூட.

(*) கூட்டத்திற்கு தலைமை தாங்குபவரின் அனுமதியை பெற்று கருத்துச் சொல்வது.

(*) ஒருவர் பேசி முடிந்த பின் மற்றவர் பேசுவது.

(*) ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் பேச விரும்பினால் விருப்பம் தெரிவித்த ஒழுங்கில் (கையை உயர்த்தி, எழுத்து மூலம் அல்லது வாய் மூலம்) தனக்குரிய நேரம் வரும் வரை பொறுமையுடன் காத்திருந்து பேசுவது.

(*) ஒருவர் பேசுகின்ற கருத்தை முழுமையாகக் கேட்டு அவர் என்ன சொல்ல வருகின்றார் என்பதை விளங்கி பதிலளிப்பது. இடையில் குறுக்கிட்டு அரைகுறை விளக்கத்துடன் பேசாதிருப்பது.

(*). ஒருவர் சொல்லுகின்ற கருத்தில் உடன்பாடோ இல்லையோ அவர் பேசி முடிந்தபின் அதற்கு பதிலளிப்பது அல்லது மாற்றுக் கருத்தை முன் வைப்பது.

(*) அவையில் பேசுகின்ற நாகரிகமான வார்த்தைகள் இல்லாத செம்மொழி அல்ல தமிழ் மொழி. யாருக்காவது மொழிப் பற்றாக்குறை இருந்தால் அவர் இது விடயத்தில் அதி கவனம் செலுத்த வேண்டும். குறைகுடம் போன்று தவறான வார்த்தைகளைப் பிரயோகித்து தளம்பிக் கொள்ளக்கூடாது.

(*)  இந்த ஒழுங்கு முறைகள் கட்சி அரசியலுக்கும், கொள்கை வேறுபாடுகளுக்கும், மாற்றுக் கருத்துக்களுக்கும் அப்பால் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டியவை. 

இவற்றை கூட்டத்தில் கலந்து கொள்பவர்கள் கடைப்பிடிக்காது தன்னிச்சையாக செயற்பட்டால், மக்கள் வழங்கிய அங்கீகாரத்தை தவறாகப் பயன்படுத்தினால், கூட்டங்களை குழப்பினால் குறிப்பிட்ட நபரை கூட்டத்தில் இருந்து வெளியேறக் கோரும் உரிமை கூட்டத்திற்கு தலைமை தாங்கும் எவருக்கும் உண்டு. இது சந்திரகாந்தனுக்கும் வியாளேந்திரனுக்கும், சாணக்கியனுக்கும், கருணாகரனுக்கும், நஸீர் அகமட்க்கும் பொதுவானது. சாணக்கியன் நாடாளுமன்ற அமர்வுக்கு தலைமை தாங்கும் போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று எதிர்பார்க்கின்றாரோ அவ்வாறே மற்றையவர்கள் தலைமை தாங்குகின்ற கூட்டங்கள் எங்கு நடந்தாலும் அவர் அந்த எதிர்பார்புகளுடன் செயற்பட வேண்டும். ஒரு சந்தர்ப்பத்தில் கூட்டங்களுக்கு தலைமை தாக்குகின்ற ஒருவர் இன்னொரு சந்தர்ப்பத்தில் அந்த விதி முறைகளை மீறாது இருக்க வேண்டும். அதுவே நாகரிகமான அரசியல். 

இந்த விடயங்களை ஒரு பாலர் பாடசாலை பிள்ளை பள்ளிக் கூடத்திற்கு செல்வதற்கு முன்னரேகற்றுக் கொள்கிறது. அந்தப் பிள்ளை முதலாம் வகுப்புக்கு செல்வதற்கான ஒரு தகுதியாகவும் இது கணிக்கப்படுகிறது. இது இல்லாமல் எத்தனை பட்டங்கள் இருந்தாலும், எத்தனை மொழியைப் பேசினாலும், வெளிநாடுகளில் பட்டங்களைப் பெற்றாலும், எத்தனை பதவிகளை வகித்தாலும் என்ன பிரயோசனம். ?

இந்தப் பதிவு யார் சரி? யார் பிழை? என்பதற்கு அப்பால், ஒரு உத்தியோகபூர்வ கூட்டத்தில் மக்களின் வரிப்பண சம்பளத்துடன் கலந்து கொள்ளும் அரசியல் வாதிகள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்த ஆதங்கம் மட்டுமே. நீங்கள் மக்களுக்கு சிரமதானம் செய்யவில்லை என்பதை மட்டும் சிரம் மேற்கொண்டு செயற்படுங்கள்.

குடல் ஏறக் கொழுத்தாலும் குட்டி ஆடு  …. குட்டி ஆடுதான்…!

அரசியலில் இன்னும் பாலர் வகுப்புத்தான்…!!