‘அம்பாறையில் நடந்த துரோகம்’ (வாக்குமூலம்-56)

‘அம்பாறையில் நடந்த துரோகம்’ (வாக்குமூலம்-56)

— தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் —

இப்பத்தியில் கல்முனை வடக்குப் பிரதேச செயலக விவகாரத்தைப் பார்க்கலாம்.

முன்பு 100% தமிழர்களைக் கொண்டு 03 குறிச்சிகளை உள்ளடக்கியதாகத் தனியான ‘உடையார்பிரிவு’ ஆக விளங்கிய கல்முனைக் கிராமத்தை 05 குறிச்சிகளைக் கொண்டதாகவும் முஸ்லிம் கிராமமாகவும் விளங்கிய அயல் கிராமமான கல்முனைக்குடிக் கிராமத்துடன் (கல்முனை வேறு; கல்முனைக்குடி வேறு) கல்முனைத் தமிழர்களின் அரசியல் அபிலாசைகளைப் புறக்கணித்து இணைத்துத்தான் முஸ்லிம் பெரும்பான்மையாக வருமாறு 07 வட்டாரங்களுடன் ‘கல்முனைப்பட்டினசபை’ (Town Council) 1947 இல் உருவாக்கப்பெற்றது.

அன்றிலிருந்து கல்முனைத் தமிழர்களின் கோரிக்கை என்னவெனில், இக் கல்முனைப் பட்டினசபையைக் கல்முனைக் கிராமத்திற்கும் கல்முனைக்குடிக் கிராமத்திற்கும் இடையில் எல்லையாக விளங்கும் தரவைப் பிள்ளையார் கோயில் வீதியைப் பிரிக்கும் எல்லையாகக் கொண்டு வடபகுதியைத் தமிழ்ப் பெரும்பான்மை உள்ளூராட்சி அலகாகவும் தென்பகுதியை முஸ்லிம் பெரும்பான்மை உள்ளூராட்சி அலகாகவும் இரு தனித்தனி உள்ளூராட்சி அலகுகளை உருவாக்க வேண்டுமென்பதே. 

இவ்ஆரம்பக் கோரிக்கையின் படிமுறை மாற்றமே – வடிவமே இன்றைய  கல்முனை வடக்குப் பிரதேச செயலக விவகாரம்.

1965 இல் ஆட்சியமைத்த பிரதமர் டட்லி சேனநாயக்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்துடன் தமிழரசுக் கட்சி கூட்டுச் சேர்ந்திருந்த அரசாங்கத்தில் தமிழரசுக் கட்சியின் சார்பில் நியமனம் பெற்ற அப்போதைய செனட் சபை உறுப்பினரான காலஞ்சென்ற மு.திருச்செல்வம் கி.யூ.சி. அவர்கள் (காலஞ்சென்ற நீலன் திருச்செல்வத்தின் தந்தை) தமிழரசுக் கட்சியின் சார்பில் ஸ்தல ஸ்தாபன (உள்ளூராட்சி) அமைச்சராகப் பதவி வகித்தார். அதாவது விடய அமைச்சரும் இவரே. அமைச்சர் திருச்செல்வம் அன்று நினைத்திருந்தால் ஒரு வர்த்தமானி அறிவித்தல் மூலம் அன்றே கல்முனைத் தமிழர்களின் மேற்படி ஆரம்பக் கோரிக்கையை நிறைவேற்றிக் கொடுத்திருக்கலாம். அதற்கான அதிகாரம் அவரிடம் இருந்தது.

ஆனால், அதனை அவரோ அவரை அமைச்சராக்கிய தமிழரசுக் கட்சியோ செய்யவில்லை. காரணம் கல்முனைத் தமிழர்களின் இந் நியாயமான கோரிக்கையை நிறைவேற்றிக் கொடுத்தால் அது வழமையாகப் பாராளுமன்றத் தேர்தலில் கல்முனைத் தொகுதியிலே தமிழரசுக் கட்சி சார்பாக நிறுத்தப்படும் முஸ்லிம் வேட்பாளரின் வெற்றியைப் பாதிக்கும் (முஸ்லிம்கள் தமிழரசுக் கட்சியின் முஸ்லிம் வேட்பாளர்களுக்கு வாக்களிக்காமல் விட்டால்) என்பதே. கல்முனைத் தமிழர்களின் இந்நியாயமான கோரிக்கையை நிறைவேற்றிக் கொடுத்து அவர்களின் இருப்பை – பாதுகாப்பை உறுதிப்படுத்துவதைவிட – எதிர்காலத்தில் கல்முனைத் தமிழர்கள் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை, தமது கட்சிக்குப் பாராளுமன்ற உறுப்பினரொருவரை இழந்துவிடக்கூடாதென்பதுதான் தமிழரசுக் கட்சிக்கு முன்னுரிமையாகவும் முக்கியத்துவமாகவும் இருந்தது. இதுதான் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் (தந்தை செல்வா) தலைமையில் தமிழரசுக் கட்சி முன்னெடுத்த ‘தமிழ் பேசும்’ மக்களுக்கான ‘தமிழ்த் தேசிய’ (?) அரசியலாகும். இவ்வாறான தமிழரசுக் கட்சியின் துரோகச் செயற்பாடே கல்முனைத் தமிழர்களின் இன்றைய அவல நிலைக்கு முழுக்க முழுக்கக் காரணமாகும்.

வரலாற்றின் இன்னொரு விடயத்தையும் இப்பத்தியில் பதிவு செய்தல் பொருத்தம்.

1960 ஜூலை பொதுத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்திலே இரட்டை அங்கத்தவர் தொகுதியாக விளங்கிய மூதூர்த் தொகுதியின் முதலாவது பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவான தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த ரி.ஏகாம்பரம் அவர்கள் 23.03.1961 அன்று காலமானார். அப்போது மூதூர் இரட்டை அங்கத்தவர் தொகுதியின் இரண்டாவது பாராளுமன்ற உறுப்பினராக ஏ.எல்.அப்துல் மஜீத் (ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி) விளங்கினார். தமிழர் ஒருவரும் முஸ்லிம் ஒருவரும் வரக்கூடியவாறு -அந்த நோக்கத்திற்காகவே 1959இல் நடைபெற்ற தேர்தல் தொகுதி எல்லைகள் மீள் நிர்ணயத்தின் போது உருவாக்கபெற்ற மூதூர் இரட்டை அங்கத்தவர் தொகுதியில் ஏகாம்பரம் அவர்களின் மரணத்தினால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்புவதற்கான இடைத்தேர்தலில் (28.06.1962 அன்று) தமிழ் -முஸ்லிம் நல்லிணக்கம்-ஒற்றுமை பற்றியும் ‘தமிழ்பேசும் மக்கள்’ என்றும் வாய்கிழியப் பேசும் தமிழரசுக் கட்சி தமிழர் பிரதிநிதியொருவரின் வெற்றிடத்தை நிரப்புவதற்கானதொரு இடைத்தேர்தலில் தமிழர் ஒருவரையே வேட்பாளராக நிறுத்தி அவருக்கு முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்றுக் கொடுத்து வெற்றிபெறச் செய்திருக்கவேண்டும். தமிழ்-முஸ்லிம் நல்லிணக்கத்தை-ஒற்றுமையை இதன் மூலம் வெளிப்படுத்தியிருக்க வேண்டும். ‘தமிழ் பேசும் மக்கள்’ என்று அக்கட்சி அரசியலில் பயன்படுத்தும் வார்த்தைக்கு அர்த்தம் கற்பித்திருக்க வேண்டும்.

ஆனால், முஸ்லிம்கள் தமிழ் வேட்பாளர்களுக்கு (தமிழரசுக் கட்சி சார்பாக நிறுத்தப்படும் தமிழ் வேட்பாளர்களுக்கு) வாக்களிக்கமாட்டார்கள் என்ற உண்மையைப் புரிந்து கொண்ட தமிழரசுக்கட்சி 1960 ஜூலை பொதுத் தேர்தலில் மூதூர் இரட்டை அங்கத்தவர் தொகுதியிலே ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டுத் தோல்வியுற்றிருந்த எம்.இ.எச்.முகமட் அலியை இடைத்தேர்தலில் தமது கட்சியின் வேட்பாளராக நிறுத்தி அவருக்குத் தமிழ் மக்களின் வாக்குகளையும் பெற்றுக் கொடுத்து வெற்றியீட்டச் செய்து மூதூர் இரட்டை அங்கத்தவர் தொகுதியின் இரு பாராளுமன்ற உறுப்பினர்களுமே முஸ்லிம்களாக (எம்.எல்.அப்துல் மஜீத்-ஸ்ரீ.ல.சு.க.; எம் இ எச் முகமட் அலி-தமிழரசுக் கட்சி) இருக்க வழிசமைத்தனர். பல்அங்கத்தவர் தொகுதிகள் ஏற்படுத்தப்பட்டதன் ஜனநாயக நோக்கத்தை தமிழரசுக் கட்சி சிதறடித்து மூதூர்த் தொகுதிவாழ் தமிழ் மக்களின் தலையில் மண்ணையள்ளிப் போட்டது. தமிழரசுக் கட்சியின் (சந்தர்ப்பவாதப்) பேச்சாகிய தமிழ்-முஸ்லிம் நல்லிணக்கம்- ஒற்றுமை என்பவை எங்கே போயிற்று? ‘தமிழ் பேசும் மக்கள்’ என்னும் வார்த்தையின் அர்த்தம்என்னவாயிற்று? இதுதானா ‘தமிழ்த் தேசிய அரசியல்’ ? கிழக்குத் தமிழர்களின் நலன்களைத் தமது தனிப்பட்ட பாராளுமன்ற நலன்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக முஸ்லிம் அரசியல்வாதிகளிடம் காலத்திற்குக் காலம் தாரைவார்த்ததுதான் தமிழரசுக் கட்சி ‘தமிழ் பேசும் மக்கள்’ என்று கூறி இதுவரை காலமும் முன்னெடுத்துவரும் ‘போலி’ த் தமிழ்த் தேசிய அரசியலின் அறுவடையாகும்.

அடுத்து, 2000 ஆம் ஆண்டின் பாராளுமன்றப் பொதுத் தேர்தலின் போது திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் (அம்பாறை நிர்வாக மாவட்டம்) என்ன நடந்ததென்பதைப் பார்ப்போம்.

இந்த இடத்தில் அதற்கு முந்திய 1994 ஆம் ஆண்டின் பாராளுமன்றப் பொதுத் தேர்தலின் போது திகாமடுல்ல (அம்பாறை) தேர்தல் மாவட்டத்தில் என்ன நடந்தது என்பதை அறிந்துகொண்டால்தான் 2000 ஆம் ஆண்டின் விடயத்தை முழுமையாகப் புரிந்து கொள்ளமுடியும். அப்போது (1994) தமிழரசுக் கட்சி அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசுடன் இணைந்து ‘தமிழர் விடுதலைக் கூட்டணி’ என்ற வடிவத்தை எடுத்திருந்தது. தற்போது ‘தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு’ என்று தனது வடிவத்தை மாற்றியது போல. வடிவங்கள் மாறினாலும் அரங்கேறுவது தமிழரசுக் கட்சியின் ‘தர்பார்’தான். அந்த விபரங்களை அடுத்த பத்தியில் (வாக்குமூலம்- 57) பார்ப்போம்.