நேற்று கிழக்கில் நடந்தது இனி முல்லைத்தீவிலா? (வாக்குமூலம்-55)

நேற்று கிழக்கில் நடந்தது இனி முல்லைத்தீவிலா? (வாக்குமூலம்-55)

 — தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் —

எதிர்வரும் உள்ளூர் அதிகார சபைத் தேர்தலுக்காக முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைத்துரைப்பற்று பிரதேச சபைக்கான தமிழரசுக் கட்சியின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. இதனை எதிர்த்து தமிழரசுக் கட்சி (சுமந்திரன்) நீதிமன்றம் சென்றும் சரிவரவில்லை. இந்த நிலையில் தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமின் கட்டுப்பாட்டிலுள்ள (பினாமிக்) கட்சியான ‘ஐக்கிய தேசியக் கூட்டமைப்பு’ எனும் கட்சியின் (‘தராசு’ ச் சின்னம்) உள்வாங்கப்படவுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. ஐக்கிய தேசியக் கூட்டமைப்புப் பட்டியலிலுள்ள வேட்பாளர்கள் ராஜினாமாச் செய்து தமிழரசுக் கட்சி வேட்பாளர்களுக்கு இடம் கொடுப்பார்கள் என அறியக்கிடக்கிறது. ‘தராசு’ ச் சின்னத்திற்கு வாக்களிக்கும் படி தமிழரசுக் கட்சி பிரச்சாரம் செய்யப் போகிறது.

இதன் சட்ட ரீதியான – அரசியல் ரீதியான சாத்தியப்பாடுகள் குறித்துப் பேசுவது இப்பத்தியின் நோக்கமல்ல. ஆனால், இத்தகைய அரசியல் கொடுக்கல் வாங்கல்களின் பின்னணியில் தமிழ் மக்களின் நலன்கள் தமிழரசுக் கட்சியினால் முஸ்லிம் அரசியல்வாதிகளிடம் தாரைவார்க்கப்பட்டிருக்கும் என்பது நிச்சயம். இது குறித்து இப்பத்தி வரலாற்று ரீதியாகப் பேசமுற்படுகிறது.

சேலை முள்ளில் விழுந்தாலும் சரி அல்லது முள் சேலையில் விழுந்தாலும் சரி பாதிப்பு சேலைக்குத்தான். அதுபோலவே சம்பந்தன் ஹக்கீமின் தோளில் கை போட்டாலும் சரி அல்லது ஹக்கீம் போய் சம்பந்தனின் காலில் விழுந்தாலும் சரி நட்டம் தமிழ் மக்களுக்குத்தான். 

தமிழரசுக் கட்சியின் ஸ்தாபக தலைவர் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் (தந்தை செல்வா) தன்னளவில் அவர் நேர்மையான, ஊழல் இல்லாத, கண்ணியம் மிக்க அரசியல் தலைவராக இருந்திருக்கலாம். அது வேறு விடயம். ஆனால்,  தமிழரசுக் கட்சியும் அதன் மறுவடிவங்களான தமிழர் விடுதலைக்கூட்டணி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் வரலாறு முழுவதும் தமது பாராளுமன்றப் பதவி அரசியல் நலன்களைப் பேணுவதற்காகக் கிழக்கு மாகாணத் தமிழர்களின் சமூக பொருளாதார அரசியல் நலன்கள் யாவும் முஸ்லிம் அரசியல்வாதிகளிடம் அடகு வைக்கப்பட்டே வந்துள்ளன. அது இப்போது வன்னிப் பிரதேசத்திற்கும் (முல்லைத்தீவு மாவட்டத்திற்கும்) நீண்டிருப்பதற்கான அடையாளமே மேற்கூறப்பட்ட கரைத்துறைப்பற்று பிரதேச சபை விவகாரம்.

இக் கூற்றினை அரசியல் வரலாற்று ரீதியாக நோக்குவோம். 

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அமைப்பு விதிகளில் விதி 2-(அ) நோக்கம் என்ற உபதலைப்பின் கீழ் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.

“ஐக்கிய இலங்கைச் சமஸ்டியின் அங்கமாக சுய நிர்ணய உரிமைக் கொள்கைப்படி ஓர் சுயாட்சித் தமிழரசும், ஓர் சுயாட்சி முஸ்லீம் அரசும் நிறுவி இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்களுடைய அரசியல், பொருளாதார கலாச்சார விடுதலையைக் காண்பதே கட்சியின் நோக்கமாகும்”

தமிழரசுக் கட்சிக்கு (தமிழ் மக்களுக்கு) இப்படி ஒரு அமைப்பு விதி அவசியம்தானா? என்ற கேள்விக்கான விடையைத் தமிழ் மக்களின் சிந்தனைக்கே விடுகிறேன். 

அடுத்ததாகக் கவனத்திற்குரியதொரு விடயம் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபக தலைவர் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் (தந்தை செல்வா) அவர்களுக்கும் இலங்கையின் முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்காவுக்குமிடையில் 1957 இல் கைச்சாத்தான ‘பண்டா – செல்வா’ ஒப்பந்தம் ஆகும். 

இந்த ஒப்பந்தத்தில் தமிழரசுக் கட்சி வட மாகாணத்துக்கு ஒரு பிராந்திய சபையையும் (கிழக்கு மாகாணத் தமிழர்களுடன் முறையான கலந்துரையாடலை மேற்கொள்ளாமல்) கிழக்கு மாகாணத்துக்கு இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட பிராந்திய சபைகளையும் முன்மொழிந்தது. அதாவது கிழக்கு மாகாணத்தை இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட பிராந்தியங்களாகத் துண்டாடுவது.

தமிழரசுக் கட்சியின் அமைப்பு விதிகளில் கூறப்பட்டுள்ள நோக்கமும் ‘பண்டா – செல்வா’ ஒப்பந்தத்தில் உள்ள தமிழரசுக் கட்சியின் முன்மொழிவும் ‘தமிழ்த் தேசிய அரசியல்’ முன்வைக்கும் இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைந்த மொழிவாரிச் (Linguistic) சுயாட்சி அலகுக்கு முரண்பாடானவையாகும். அதேவேளை,1987 இந்திய – இலங்கை சமாதான ஒப்பந்தத்தின் உடனடி விளைவான வடக்கு கிழக்கு மாகாணங்கள் தற்காலிகமாகவேனும் இணைந்த ஒற்றை அதிகாரப் பகிர்வு அலகைத் தமிழீழ விடுதலைப் புலிகள் சீர்குலைத்தமை இதைவிட இன்னும் முரண்பாடானதாகும்.

இந்த முரண்பாட்டு அரசியலைத் ‘தமிழ்த் தேசியவாதிகள்’ (தமிழரசுவாதிகள்) இன்னும்தான் உணர்ந்து கொண்டதாகத் தெரியவில்லை.

இனி தமிழரசுக் கட்சியின் கடந்த கால அரசியல் செயற்பாடுகள் சிலவற்றை எடுத்து நோக்குவோம். 

1949 இல் இலங்கைத் தமிழரசுக் கட்சி எஸ்.ஜே.வி.செல்வநாயகம் (தந்தை செல்வா) தலைமையில் தோற்றம்பெற்ற பின்னர் ‘தமிழ் பேசும் மக்கள்’ என்ற வார்த்தைப் பிரயோகத்தினூடாக முஸ்லிம்களையும் தமிழர்களுடன் சேர்த்துத் தமது பாராளுமன்ற அரசியல் – தேர்தல் அரசியல் தேவைகளுக்காகத் தமிழர்களாக அடையாளப்படுத்தியமை அக்கட்சி இழைத்த மாபெரும் அரசியல் தவறாகும். முஸ்லிம்களின் அரசியல் தலைவர்களான ரி.பி.ஜாயா காலத்திலிருந்து எம்.எச்.எம்.அஷ்ரப் ஊடாக இன்றைய ரவூப் ஹக்கீம் காலம் வரை எவருமே முஸ்லிம்களைத் தமிழர்களோடு அடையாளப்படுத்த விரும்பியிருக்காதபோது அதற்கு மாறாக முஸ்லிம்களைத் தமிழர்களோடு வில்லங்கமாக அடையாளப்படுத்தித் தமிழரசுக் கட்சி அரசியல் செய்தமைதான் கிழக்கு மாகாணத்தில் தமிழ் முஸ்லிம் உறவில் விரிசலுக்கு வித்திட்டது. 

தமிழரசுக் கட்சியில் நின்று தேர்தல்களில் போட்டியிட்டுத் தமிழர்களுடைய வாக்குகளால் வென்ற முஸ்லிம் அரசியல்வாதிகளாலேயே கிழக்கு மாகாணத்தில் தமிழ் முஸ்லிம் உறவு முதலில் சீர்குலைக்கப்பட்டது.

1956 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின்போது கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு – திருகோணமலை ஆகிய இரு மாவட்டங்களிலும் பொத்துவில் – கல்முனை – பட்டிருப்பு – மட்டக்களப்பு – திருகோணமலை – மூதூர் ஆகிய ஆறு தேர்தல் தொகுதிகளுமே நடைமுறையில் இருந்தன. இவற்றில் பொத்துவில் மற்றும் கல்முனை தொகுதிகளில் முறையே எம்.எம்.முஸ்தபா மற்றும் எம்.எஸ்.காரியப்பர் ஆகியோரைத் தமிழரசுக் கட்சி வேட்பாளர்களாக நிறுத்தித் தமிழர்களின் வாக்குகள் மூலம் அவர்களை வெற்றி பெற வைத்தது. இவர்கள் தமிழரசுக் கட்சியின் கொள்கைகளை மனதார ஏற்றுக்கொண்டு அல்லது தமிழ்த் தேசியத்தின்பால் கொண்ட ஈர்ப்பினால் தமிழரசுக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டவர்கள் அல்லர். தத்தம் தேர்தல் வெற்றிகளுக்காகத் தமிழர்களின் வாக்குகளைப் பெறும் ஒரே நோக்கத்துடன் மட்டும்தான் தமிழரசுக் கட்சியில் இணைந்து போட்டியிட்டார்கள்.

இவர்களில் எம்.எஸ்.காரியப்பர் 1947 இல் நடைபெற்ற இலங்கையின் சோல்பரி அரசியலமைப்பின் கீழான முதலாவது பாராளுமன்றத் தேர்தலில் கல்முனைத் தொகுதியில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்டு வெற்றியீட்டி பிரதமர் டி.எஸ்.சேனநாயக்கா தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் உள்நாட்டு அலுவல்கள் மற்றும் கிராம அபிவிருத்தி பிரதி அமைச்சராகப் பதவி வகித்தவர். மட்டுமல்ல, அப்போதைய மட்டக்களப்பு மாவட்டத்தின் தென்பகுதியில் அமைந்திருந்த ‘பட்டிப்பளை’ ஆற்றுப்பிரதேசத்தில் வெளிமாவட்டங்களிலிருந்து அரச அனுசரணையுடன் சிங்கள மக்கள் குடியேற்றப்படுவதற்குக் காரணமாயிருந்த ‘கல்லோயா’ நீர்ப்பாசனத் திட்டத்தின் பிரதான கூறாகிய ‘சேனநாயக்க சமுத்திரம்’ எனும் நீர்த்தேக்கத்தை உருவாக்கக் காரணமாயிருந்து இத்திட்டத்திற்குப் பாரிய பங்களிப்புச் செய்தவருமாவார். (இச்சிங்களக் குடியேற்றத்தினால்தான் அப்போதைய மட்டக்களப்பு மாவட்டத்தின் தென்பகுதியில் 1959இல் ‘அம்பாறை’ எனும் சிங்களப் பெரும்பான்மைத் தேர்தல் தொகுதியும் பின்னர் 1961 இல் அப்போதைய மட்டக்களப்பு மாவட்டத்தின் தென்பகுதி துண்டாடப்பட்டு ‘அம்பாறை’ எனும் புதிய நிர்வாக மாவட்டமும் உருவாகும் நிலையேற்பட்டது) 

அப்படிப்பட்ட பின்னணியைக் கொண்ட எம்.எஸ்.காரியப்பரைத் தேடிப் பிடித்துத்தான் தமிழரசுக்கட்சி 1956 இல் கல்முனைத் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தித் தமிழர்களுடைய வாக்குகளால் வெற்றிபெற வைத்தது. தேர்தலில் வெற்றி பெற்ற எம்..எஸ்.காரியப்பர் ஆறு மாதங்களின் பின்னர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க தலைமையிலான ‘மக்கள் ஐக்கிய முன்னணி’ அரசில் இணைந்து பிரதி நீதி அமைச்சர் பதவியும் பெற்றுக் கொண்டு தமிழர்களுக்குப் பாதகமான – பாரபட்சமான பல நடவடிக்கைகளையும் மேற்கொண்டார். இதற்கு முன்னர் 1952 ல் நடைபெற்ற கல்முனைப் பட்டின சபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று அதன் தலைவராகவும் பதவிவகித்து அப்பதவிக் காலத்திலும் கல்முனைப் பிரதேசத் தமிழர்களுக்குப் பாரபட்சமான பல செயற்பாடுகளை மேற்கொண்டிருந்தவராவார். இன்று கல்முனை நகரம் தமிழர்களிடமிருந்து பறிபோய் விட்டமைக்கும் கல்முனை வடக்குப் பிரதேச செயலக விவகாரம் பூதாகரமான பிரச்சனையாக உருவெடுத்திருப்பதற்கும் எம்.எஸ்.காரியப்பர் அரசியல் அதிகாரத்திலிருந்தபோது அன்று மேற்கொண்ட  தமிழர் விரோதச் செயற்பாடுகளே அடிகோலின. 

அன்றிலிருந்து இன்றுவரை தமிழரசுக் கட்சிக்குத் தேவைப்பட்டதெல்லாம் கிழக்கிலிருந்து தமது கட்சியில் எவரென்றாலும் பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படுவதன் மூலம் பாராளுமன்றத்தில் தமது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்வதே தவிர, அத்தகையோரால் கிழக்குத் தமிழர்களுக்கு ஏற்படக்கூடிய சமூக பொருளாதார அரசியல் பாதிப்புகள் குறித்த கவலையோ கரிசனையோ தமிழரசுக் கட்சிக்கு ஒருபோதும் இருந்தது கிடையாது. 

இன்னுமோர் உதாரணத்தைக் காட்டலாம்.

1959 ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கையின் தேர்தல் தொகுதி எல்லைகள் மீள் நிர்ணயத்தின்போது (தற்போதைய அம்பாறை மாவட்டத்தையும் உள்ளடக்கிய) அப்போதைய மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடா, மட்டக்களப்பு (இரட்டை அங்கத்தவர் தொகுதி), பட்டிருப்பு, அம்பாறை, கல்முனை, நிந்தவூர், பொத்துவில் ஆகிய ஏழு தேர்தல் தொகுதிகள் ஏற்படுத்தப்பெற்றன.

இவற்றில் அப்போதைய மட்டக்களப்பு மாவட்டத்தின் தென்பகுதியில் (தற்போதைய அம்பாறை மாவட்டத்தில்) அம்பாறை, கல்முனை, நிந்தவூர், பொத்துவில் ஆகிய நான்கு தேர்தல் தொகுதிகளும் அடங்கின. அம்பாறை சிங்களப் பெரும்பான்மைத் தேர்தல் தொகுதியாகவும் கல்முனை, நிந்தவூர், பொத்துவில் என்பன முஸ்லிம் பெரும்பான்மைத் தேர்தல் தொகுதிகளாகவும் எல்லைகள் வகுக்கப்பட்டன. அப்போதைய மட்டக்களப்பு மாவட்டத்தின் தென்பகுதியில் வாழ்ந்த தமிழர்களுக்கு (தற்போதைய அம்பாறை மாவட்ட தமிழர்கள்) ப் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் கிடைக்க முடியாத வகையிலேதான் திட்டமிட்டுப் புதிய கல்முனை, நிந்தவூர், பொத்துவில் தொகுதிகளின் எல்லைகள் இத்தொகுதிகள் எல்லாவற்றிலும் முஸ்லீம்களே பெரும்பான்மையாக வருமாறு வகுக்கப்பெற்றன. அப்போதைய மட்டக்களப்பு மாவட்டத்தின் தென்பகுதியை 1959 தேர்தல் தொகுதி எல்லைகள் மீள் நிர்ணயத்தின் முன்பு (1947-1959) பழைய கல்முனை மற்றும் பொத்துவில் தொகுதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்திய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆட்சியில் உள்ளோரிடமிருந்த அரசியல் செல்வாக்கினைப் பயன்படுத்தி எதிர்காலத்தில் தங்கள் தேர்தல் வெற்றிகளை உறுதி செய்யும் வகையிலேயும் இப்பிரதேசத்தில் வாழ்ந்த தமிழ் மக்களுக்குப் பிரதிநிதித்துவம் கிடைக்காத வகையிலேயும் புதிதாக 1959இல் உருவான கல்முனை – பொத்துவில் – நிந்தவூர் தொகுதிகளின் எல்லைகளை மீள்நிர்ணயம் செய்துகொள்வதில் இப்பிரதேச முஸ்லிம் அரசியல்வாதிகள் வெற்றியீட்டினர். முஸ்லிம் அரசியல்வாதிகளின் இவ்வாறான தமிழர் விரோதச் செயற்பாடுகளுக்கு அப்போதைய பட்டிருப்புத்தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராகவிருந்த தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த எஸ்.எம்.இராசமாணிக்கமும் தனது எதிர்காலத் தேர்தல் வெற்றிக்கான சுயலாபம் கருதி உறுதுணையாகவே நடந்துகொண்டார்.

1959 தேர்தல் தொகுதி எல்லைகள் நிர்ணயத்தின் போது மட்டக்களப்பில் (அப்போதைய மட்டக்களப்பு மாவட்டத்தின் வடபகுதியில் வாழ்ந்த முஸ்லிம்களுக்கு – ஏறாவூர் மற்றும் காத்தான்குடியில்) வாழ்ந்த முஸ்லிம்களுக்குப் பிரதிநிதித்துவம் கிடைக்கும் வகையில் தமிழர் ஒருவரும் முஸ்லீம் ஒருவரும் தேர்ந்தெடுக்கப்படக் கூடியவாறு புதிய மட்டக்களப்புத் தொகுதி இரட்டை அங்கத்தவர் தொகுதியாக்கப்பெற்றது.

அதேபோல் முஸ்லிம் ஒருவரும் தமிழர் ஒருவரும் தேர்ந்தெடுக்கப்படக் கூடியவாறு திருகோணமலை மாவட்டத்தில் புதிய மூதூர் தொகுதி இரட்டை அங்கத்தவர் தொகுதியாக்கப்பட்டது. 

ஆனால், இதே வாய்ப்பு அப்போதைய மட்டக்களப்பு மாவட்டத்தின் தென்பகுதியில் வாழ்ந்த அதாவது புதியபொத்துவில் – கல்முனை – நிந்தவூர் தொகுதிகளில் பரவலாக அடங்கிய தமிழர்களுக்கு (தற்போதைய அம்பாறை மாவட்டத் தமிழர்களுக்கு) வழங்கப்படாது அவர்கள் அரசியல் அனாதைகளாக்கப்பட்டார்கள். 

1959 இல் உருவான புதிய பட்டிருப்பு, நிந்தவூர் மற்றும் கல்முனைத் (பொத்துவில் தொகுதி உட்பட) தொகுதிகளில் எதிர்காலத்தில் தத்தம் தேர்தல் வெற்றிகளை உறுதி செய்யும் நோக்கில் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த எஸ்.எம்.இராசமாணிக்கமும் முஸ்லிம் அரசியல்வாதிகளான எம்.எஸ்.காரியப்பரும் எம்.எம்.முஸ்தபாவும் ஒருத்தருக்கொருத்தர் அனுசரணையாக நடந்து கொண்டனரே தவிர இப்பிரதேசத் தமிழர்களின் அரசியல் எதிர்காலம் தமிழரசுக் கட்சியால் அக்கறையோடு அணுகப்படவில்லை. இதனையிட்டு அப்போதைய தமிழரசுக் கட்சி அக்கறை செலுத்தாதது இப்பிரதேசத் தமிழ் மக்களுக்கு அக்கட்சி இழைத்த மாபெரும் அரசியல் துரோகமாகும். இத்துரோகத்தினால், அம்பாறை மாவட்டத் தமிழர்கள் 1947 ஆம் ஆண்டிலிருந்து பின்னாளில்1976 ஆம் ஆண்டின் தேர்தல் தொகுதி எல்லைகள் மீள் நிர்ணயத்தின் போது உருவான புதியபொத்துவில் தொகுதி இரட்டை அங்கத்தவர் தொகுதியாக உருவாக்கப்பட்டதன் அடிப்படையில் 1977-இல் (12.09.1977) நடந்த பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் பொத்துவில் தொகுதியின் இரண்டாவது பாராளுமன்ற உறுப்பினராகக் காலஞ்சென்ற ம.கனகரட்ணம் அவர்கள் தெரிவுசெய்யப்படும் வரை சுமார் 30 ஆண்டுகள் (1947-1977) தங்களுக்கென்று தங்களால் தெரிவுசெய்யப்பட்ட தமிழ்ப் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தைக் கொண்டிருக்கவில்லை. 

1959இல் சுமார் 35 000 முஸ்லிம்களுக்காகப் புதிய மட்டக்களப்புத் தேர்தல் தொகுதி இரட்டை அங்கத்தவர் தொகுதியாக்கப்பட்டது. இந்த வாய்ப்பு அப்போதைய மட்டக்களப்பு மாவட்டத்தின் தென்பகுதியில் வாழ்ந்த தற்போதைய அம்பாறை மாவட்டத் தமிழர்களுக்கு -சுமார் 45,000 தமிழர்களுக்கு வழங்கப்படவில்லை. சுமார் 45,000 சிங்களவர்களுக்கு ஒரு பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் ‘அம்பாறை’ தேர்தல் தொகுதி மூலமும், சுமார் 90,000 முஸ்லிம்களுக்கு மூன்று பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் கல்முனை – நிந்தவூர் – பொத்துவில் தேர்தல் தொகுதிகள் மூலமும் கிடைக்கப்பெற சுமார் 45,000 தமிழர்கள் அரசியல் பிரதிநிதித்துவமின்றி நிராதரவாக விடப்பட்டார்கள். உண்மையில் என்ன நடந்திருக்க வேண்டுமென்றால் 1959 இல் உருவான புதிய கல்முனை – நிந்தவூர் – பொத்துவில் ஆகிய மூன்று தொகுதிகளிலொன்றை அல்லது மூன்றில் ஏதாவது இரண்டு தொகுதிகளை இணைத்து அதனை இரட்டை அங்கத்தவர் தொகுதியாக்கித் தமிழர்களுக்கு ஒரு பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் கிடைக்க ஆவன செய்யப்பெற்றிருக்க வேண்டும். அல்லது இப்பிரதேசத்திலிருந்து தமிழர் ஒருவரும் தேர்ந்தெடுக்கப்படக்கூடியவாறு தமிழ்ப் பெரும்பான்மைத் தேர்தல் தொகுதி ஒன்றிற்கான எல்லைகள் வகுக்கப் பெற்றிருக்கவேண்டும். ஆனால், தமிழரசுக் கட்சி இதில் எந்தவிதமான அக்கறையும் எடுத்துக் கொள்ளவில்லை. தமிழரசுக் கட்சியினர் கிழக்கிலங்கைத் தமிழர்களை எப்போதுமே எடுப்பார் கைப்பிள்ளையாக்கியே வந்துள்ளனர்.

தமிழரசுக் கட்சியைப் பொறுத்தவரை அது தோற்றம் பெற்ற காலத்திலிருந்தே கிழக்குத் தமிழர்களின் சமூக பொருளாதார அரசியல் முன்னேற்றங்களைவிடத் தங்கள் கட்சிக்கெனப் பாராளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றுக் கொள்வதில்தான் அக்கறையாக இருந்தார்கள். மக்கள் நலனைவிடக் கட்சி நலனுக்கும் கட்சிக்கு உதவக்கூடிய தனிநபர் நலன்களுக்குமே முன்னுரிமையளித்தார்கள். அதற்காக வேண்டிக் கிழக்கு மாகாண முஸ்லிம் அரசியல்வாதிகளின்முகம் கோணாமல் நடந்து கொண்டார்கள். கிழக்கு மாகாணத் தமிழர்களுக்குக் கிழக்கு மாகாண முஸ்லிம் அரசியல்வாதிகளினால் (அவர்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாகவிருந்தாலும்) திட்டமிட்டுப் பாரபட்சங்கள் இழைக்கப்பட்ட வேளைகளிலெல்லாம் தமிழரசுக் கட்சி தனது கட்சி நலன்களுக்காகப் பாராமுகமாக நடந்து கொண்டமை கிழக்கு மாகாணத் தமிழர்களின் அரசியல் வரலாற்றில் வேதனையுடன் பதிவு செய்யப்பட வேண்டிய கசப்பான அனுபவங்களாகும். மேட்டுக்குடி அரசியல் சிந்தனைகளால் வார்த்தெடுக்கப்பட்ட தமிழரசுக் கட்சிக்கு விவசாய மனோபாவம் கொண்ட அப்பாவிக் கிழக்குத் தமிழர்கள் மீது உண்மையான வாஞ்சை கிடையாது. கிழக்குத் தமிழர்கள் மீது ஆத்மார்த்தமான அக்கறை கிடையாது. அக்கட்சிக்குத் தேவைப்பட்டதெல்லாம் பாராளுமன்றத்தில் தங்கள் கட்சிக்கான ஆசனங்களின் எண்ணிக்கையைக் கூட்டிக் கொள்வதற்கான இம்மக்களின் வாக்குகளும் தமிழரசுக் கட்சித் தலைமைகளுக்குத் தலையாட்டக் கூடிய சில ‘பச்சைத்தண்ணி’ அல்லது கட்சிகளுக்குப் பிரச்சாரம் பண்ணக்கூடிய ‘சத்தவெடி’ த் தலைவர்கள்  மட்டுமே. இன்றும்கூட இதுதான் தொடர்கதையாகத் தொடர்கிறது. இன்னும் இது போன்ற வேதனையான சம்பவங்களையும் உதாரணங்களையும் அடுத்த பத்தியிலும் (வாக்குமூலம்-56) பார்க்கலாம்.