— வீரகத்தி தனபாலசிங்கம் —
உள்ளூராட்சி தேர்தல்கள் குறித்து இப்போது பேச்சுக்கள் அடங்கிக்கொண்டு போகின்றன. தேர்தல் ஆணைக்குழுவையும் தேர்தல் கண்காணிப்புடன் சம்பந்தப்பட்ட சிவில் சமூக அமைப்புக்கள் ஒன்றிரண்டையும் தவிர வேறு எவரும் அதைப் பற்றி பெரிதாக பேசுவதாக இல்லை.
தங்களால் இயன்றவரை வீதிப் போராட்டங்களையும் செய்து நீதித்துறையையும் நாடிய எதிர்க்கட்சிகளினால் அந்த தேர்தல்கள் விடயத்தில் அரசாங்கத்தை அதன் நிலைப்பாட்டில் இருந்து கொஞ்சமேனும் அசைக்கமுடியாமல் போய்விட்டது. உயர்நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி தேர்தல் ஆணைக்குழுவின் செயற்பாடுகளுக்கு இடையூறு விழைவிக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக மக்களை வீதிக்கு இறக்க முடியும் என்ற எதிரணியின் குறிப்பாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் எதிர்பார்ப்புக்கள் பலிக்கவில்லை என்றுதான் கூறவேண்டும்.
எதுவிதத்திலும் குறைந்த பட்சம் இந்த வருட இறுதிக்குள் உள்ளூராட்சி தேர்தல்களை நடத்துவதற்கு அனுமதிக்கப்போவதில்லை என்பதில் மிகுந்த உறுதியாக இருக்கும் ஜனாதிபதிரணில் விக்கிரமசிங்கவும் அரசாங்கமும் ஜனாதிபதி தேர்தல் குறித்து தீவிரமாக பேச ஆரம்பித்திருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது.
நீதித்துறை தலையீடு செய்யாத பட்சத்தில் அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக உள்ளூராட்சி தேர்தல்கள் நடத்தப்படுவதற்கான சாத்தியம் இல்லை என்று சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தல்களுக்கான மக்கள் நடவடிக்கை (பவ்ரல்) அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி கடந்த வாரம் கூறியது கவனிக்கத்தக்கது.
“ஜனாதிபதி தேர்தல் அடுத்த வருடம் நவம்பரில் நடத்தப்படவேண்டும். அதற்கான ஏற்பாடுகள் ஆகஸ்டில் அல்லது செப்டெம்பரில் தொடங்கும். ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக உள்ளூராட்சி தேர்தல்கள் நடத்தப்படுவதாக இருந்தால் நீதித்துறையின் தலையீட்டின் ஊடாக மாத்திரமே அதற்கான சாத்தியம் தோன்றமுடியும். அந்த தேர்தல்கள் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்படக்கூடிய சாத்தியம் இருக்கிறது.”
“நிறைவேற்று அதிகாரம் தேர்தல் சட்டங்களையும் அரசியலமைப்பு ஏற்பாடுகளையும் ஒதுக்கித்தள்ளுகிறது. இது ஆபத்தானது. உள்ளூராட்சி தேர்தல்களை நடத்தாமல் விடுவதற்கு அரசாங்கம் கூறுகின்ற அதே காரணங்களைக் காட்டி ஜனாதிபதி தேர்தலையும் கூட ஒத்திவைக்கக்கூடிய சாத்தியமும் இருக்கிறது” என்று அவர் கூறினார்.
தேர்தல் ஆணைக்குழு உள்ளூராட்சி தேர்தல்களை கடந்தவாரம் இரண்டாவது தடவையாகவும் ஒத்திவைத்தது. முதலில் மார்ச் 9 தேர்தல்களை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. அரசாங்கம் நிதியை வழங்காத காரணத்தால் அது ஏப்ரல் 25க்கு ஒத்திவைக்கப்பட்டது. இப்போது அந்த திகதியிலும் தேர்தல்களை நடத்தமுடியாமல் போய்விட்டது.
அந்த தேர்தல்களை மீண்டும் எப்போது நடத்தக்கூடியதாக இருக்கும் என்பதை திட்டவட்டமாக சொல்லமுடியாத நிலையில் ஆணைக்குழு இருக்கிறது. உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பிரகாரம் நிதியை அரசாங்கம் எப்போது வழங்கும் என்பதைப் பொறுத்தே புதிய திகதியை தீர்மானிக்கக்கூடியதாக இருக்கும் என்று ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமான் சிறீ இரத்நாயக்க கூறியிருக்கிறார். தேர்தல்களை நடத்துவதற்கு நிதியை வழங்குவது தொடர்பில் நேர அட்டவணையொன்றை தருமாறு ஆணைக்குழுவின் தலைவர் நிமால் புஞ்சிஹேவா அரசாங்கத்தை கேட்டிருக்கிறார்.
இது இவ்வாறிருக்க, அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவிருப்பதாக ஏற்கெனவே கூறியிருக்கும் ஜனாதிபதி விக்கிரமசிங்க அடுத்த வருட முற்பகுதியில் அந்த தேர்தலை நடத்துவது குறித்து சகல அரசியல் கட்சிகளுடனும் தேர்தல் ஆணைக்குழு, திறைசேரி மற்றும் சட்டமாஅதிபருடனும் கலந்தாலோசிக்கவிருப்பதாக சிறுபான்மை கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான அண்மைய சந்திப்பு ஒன்றில் அறிவித்ததாக ஊடகங்களில் செய்தி வெளியாகியது.
மக்களினால் தெரிவுசெய்யப்படும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியே தனது ஐந்து வருட பதவிக்காலத்தில் நான்கு வருடங்கள் நிறைவடைந்த நிலையில் — அதுவும் இரண்டாவது பதவிக்காலத்துக்கு மக்களின் ஆணையைப் பெறவிரும்பினால் மாத்திரம் — உரிய காலத்துக்கு முன்கூட்டியே ஜனாதிபதி தேர்தலை நடத்தமுடியும் என்று அரசியலமைப்புக்கான மூன்றாவது திருத்தத்தின் ஏற்பாடுகளில் கூறப்பட்டுள்ளதாக அரசியலமைப்பு சட்ட நிபுணர்கள் ஏற்கெனவே பல தடவைகள் சுட்டிக்காட்டியிருந்தார்கள்.
மக்கள் கிளர்ச்சியை அடுத்து கடந்த வருடம் ஜூலை நடுப்பகுதியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகியதை அடுத்து அவரின் எஞ்சிய பதவிக்காலத்துக்கே விக்கிரமசிங்கவை பாராளுமன்றம் ஜனாதிபதியாக தெரிவுசெய்தது. அவ்வாறு பாராளுமன்றத்தினால் தெரிவாகும் ஜனாதிபதி அந்த எஞ்சிய பதவி்காலத்தை நிறைவு செய்யவேண்டும் என்றும் உரிய காலத்துக்கு முன்கூட்டியே ஜனாதிபதி தேர்தலை அவர் நடத்த முடியாது என்றும் அந்த ஏற்பாடுகள் கூறுகின்றன.
கடந்த வாரம் இதை முன்னாள் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரியவும் சுட்டிக்காட்டினார். தனது அபிப்பிராயத்தின்படி ஜனாதிபதி தேர்தலை அடுத்த வருடம் இறுதிப்பகுதியில் மாத்திரமே நடத்த முடியும் என்றும் தற்போதைய ஜனாதிபதியினால் திடீர் ஜனாதிபதி தேர்தல் ஒன்றுக்கு செல்லமுடியாது என்றும் அவர் கூறினார்.
ஆனால், அதேவேளை, பாராளுமன்றத்தினால் தெரிவாகும் ஜனாதிபதிக்கும் உரிய காலத்துக்கு முன்கூட்டியே ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான அதிகாரம் இருப்பதாக சில சட்ட நிபுணர்கள் இன்னொரு வாதத்தை முன்வைப்பதாக ஊடகங்கள் கூறுகின்றன. ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் சரியான வியாக்கியானத்தைப் பெறுவதற்கு உயர்நீதிமன்றத்தை நாடவேண்டியிருக்கிறது என்பது இவர்களது அபிப்பிராயம்.
இவை எல்லாவற்றையும் தெரியாதவரல்லவே ஜனாதிபதி விக்கிரமசிங்க. அடுத்த வருட முற்பகுதியில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவது குறித்து அவர் பல தடவைகள் கருத்து வெளியிட்டிருந்தார்.
இடைநடுவில் பதவி விலகும் ஜனாதிபதியின் எஞ்சிய பதவிக்காலத்துக்கு பாராளுமன்றத்தினால் தெரிவாகும் ஜனாதிபதியும் முன்னையவரின் பதவிக்காலத்தில் நான்கு வருடங்கள் நிறைவடையும் நிலையில் உரிய காலத்துக்கு முன்கூட்டியே ஜனாதிபதி தேர்தலை நடத்தக்கூடியதாக அரசியலமைப்புக்கு திருத்தம் ஒன்றை கொண்டுவருவதற்கு விக்கிரமசிங்க உத்தேசிப்பதாக சில அரசியல் அவதானிகள் கூறுகிறார்கள்.
அவ்வாறு கொண்டுவரப்படக்கூடிய திருத்தம் ஒன்றை பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றுவதற்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்காத பட்சத்தில் தேர்தல்களை நடத்தி மக்களிடம் புதிய ஆணை பெறப்படவேண்டும் என்று அவை தொடர்ச்சியாக விடுத்துவரும் கோரிக்கையின் ‘பாசாங்குத்தனத்தை’ விக்கிரமசிங்கவினால் அம்பலப்படுத்தக்கூடியதாக இருக்கும் என்று பிரபல அரசியல் ஆய்வாளரும் மூத்த பத்திரிகையாளருமான டி.பி.எஸ்.ஜெயராஜ் கடந்த வாரம் எழுதியிருந்தார்.
உள்ளூராட்சி தேர்தல்களையோ, மாகாணசபை தேர்தல்களையோ அல்லது பாராளுமன்ற தேர்தலையோ தற்போதைய சூழ்நிலையில் நடத்தினால் தங்களால் வெற்றிபெற முடியாது என்பது அரசாங்க கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் நன்றாக தெரியும். அதனால் அந்த தேர்தல்களில் எதையும் தற்போதைக்கு நடத்துவதை தவிர்த்து, பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு மேற்கொள்ளப்படுகின்ற தற்போதைய நடவடிக்கைகளில் காணப்படும் மேம்பாடுகளை தங்களுக்கு அனுகூலமான முறையில் பயன்படுத்தி நேரடியாக ஜனாதிபதி தேர்தலுக்கு சென்றால் தங்களால் வெற்றிபெறமுடியும் என்று அவை நம்புகின்றன.
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக களமிறங்கக்கூடிய அரசியல் அனுபவமும் வல்லமையும் கொண்ட வேட்பாளர்கள் எதிரணி கட்சிகள் மத்தியில் இல்லை என்ற ஒரு தோற்றப்பாடு உருவாக்கப்படுகிறது.
இலங்கை வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்க ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொள்வதற்கு எவருமே முன்வராத ஒரு நேரத்தில் — தனது கட்சியின் சார்பில் தனியொரு உறுப்பினராக பாராளுமன்றத்தில் இருந்த விக்கிரமசிங்க சவால்களுக்கு முகங்கொடுக்க துணிச்சலுடன் முன்வந்ததாலும் சர்வதேச சமூகத்தின் உதவியுடன் பொருளாதார மீட்சிக்கு அவர் தலைமையிலான அரசாங்கம் கடந்த பல மாதங்களாக முன்னெடுத்துவரும் நடவடிக்கைகள் மக்களின் இடர்பாடுகளில் தணிவை ஏற்படுத்திவருவதாலும் அவரது மதிப்பு ஒப்பீட்டளவில் உயர்ந்திருக்கிறது என்பது உண்மையே.
ஆனால் , அந்த மதிப்பு கடந்த பாராளுமன்ற தேர்தலில் முற்று முழுதாகத் துடைத்தெறியப்பட்ட ஐக்கிய தேசிய கட்சிக்கு மக்கள் மத்தியில் ஆதரவை மீட்டெடுக்க எந்தளவுக்கு உதவியிருக்கிறது என்பது கேள்விக்குரியது. வெறுமனே தனது கட்சியின் வேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கினால் நேரக்கூடிய கதியை விங்கிரமசிங்க நன்கு அறிவார். அதனால்தான் பல்வேறு கட்சிகளுடனும் பேச்சுக்களில் ஈடுபடுவதில் அவர் ஆர்வம் காட்டுகிறார்.
உள்ளூராட்சி தேர்தல்களை நடத்துவதற்கு அனுமதிக்கப்போவதில்லை என்பதில் ஜனாதிபதி மிகவும் உறுதியாக இருந்துவந்தாலும் கூட அவரது கட்சி நியமனப்பத்திரங்களை சமர்ப்பிப்பதை தவிர்க்கவில்லை. ராஜபக்சாக்களின் பொதுஜன பெரமுனவுடன் தேர்தல் கூட்டணியை அவர் அமைத்துக்கொள்ளவேண்டியதாயிற்று.
எந்த தேர்தல் நடந்தாலும் தங்களது கட்சி வெற்றிபெறும் என்று ராஜபக்சாக்களும் பரிவாரங்களும் வீண்பெருமை பேசுவது போன்று விக்கிரமசிங்க ஒருபோதும் பேசுவதில்லை.
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்சாக்களின் ஆதரவுடனேயே அவர் களமிறங்குவார் என்று முதலில் பரவலாக பேச்சுக்கள் அடிபட்டன. ஆனால், இப்போது பொதுஜன பெரமுனவின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளரை நிறுத்துவது குறித்து அதன் பொதுச் செயலாளர் சாகர காரியவாசம் உட்பட முக்கியஸ்தர்கள் பேச ஆரம்பித்திருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. கட்சியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் நிதியமைச்சருமான பசில் ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவதற்கும் நாட்டுக்கு தலைமை தாங்கி வழிநடத்துவதற்கும் மிகவும் பொருத்தமானவர் என்று கூறும் அவர்கள் புதுவருட கொண்டாட்டங்களுக்கு பிறகு தங்களுக்கு புதிய தலைவர் ஒருவர் கிடைப்பார் என்றும் சொல்கிறார்கள். ஆனால் இரட்டைக் குடியுரிமைகொண்ட அவர் தனக்கு அடுத்த தேசிய தேர்தல் எதிலும் போட்டியிடும் உத்தேசம் இருப்பதாக இதுவரையில் பகிரங்கமாக கூறவில்லை.
அமைச்சர்களாக பதவி வகிக்கும் பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்களில் பலர் ஜனாதிபதி தேர்தலில் விக்கிரமசிங்க போட்டியிட்டால் அவரை ஆதரிப்பதற்கு விரும்புவதாகவும் அதேவேளை சிலர் பசில் ராஜபக்சவுக்கு விசுவாசமாக இருப்பதாகவும் அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.
இதனிடையே விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக அடுத்த பதவிக்காலத்துக்கு மக்கள் போட்டியின்றி தெரிவு செய்யவேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான வஜிர அபேவர்தன வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அதேவேளை, எதிர்கால தேசிய தேர்தல்களில் போட்டியிடுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி அமைக்கவிருக்கும் ‘மெகா’ கூட்டணியில் ஐக்கிய தேசிய கட்சியும் விக்கிரமசிங்கவும் இணைய முன்வரவேண்டும் என்றும் அந்த கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவே இருப்பார், அவரை எதிரணியின் பொது வேட்பாளர் என்று அழைக்கலாம் என்றும் அந்த கட்சியின் முக்கியமான பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறியிருக்கிறார். ஐக்கிய தேசிய கட்சி வாக்கு வங்கி இல்லாத, சிறுபான்மை கட்சி என்று அவர் வர்ணித்தார்.
ஆனால், ஐக்கிய மக்கள் சக்தி அமைக்கக்கூடிய எந்தவொரு கூட்டணியிலும் ஐக்கிய தேசியகட்சி இணையப் போவதில்லை என்று கூறியிருக்கும் அதன் பொதுச்செயலாளர் பாலித ரங்கேபண்டார முதலில் எதிர்க்கட்சி தலைவர் பதவியை பிரேமதாச காப்பாற்றிக் கொள்வதில் அக்கறைகாட்ட வேண்டும் என்று குறிப்பிட்டார்.
பிரேமதாசவின் தலைமைத்துவப் பாணியில் விரக்தியடைந்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒரு குழுவினர் அரசாங்கத்தில் இணைந்து விக்கிரமசிங்கவின் பொருளாதார மீட்சி திட்டங்களுக்கு ஆதரவு அளிக்க தயாராவதாக கூறப்படுகின்ற அதேவேளை அவர்களை தன்னுடன் தொடர்ந்தும் வைத்திருப்பதற்கு அவர் கடுமையான பிரயத்தனங்களை செய்யவேண்டியிருக்கின்ற சூழ்நிலையில் இத்தகைய எதிரெதிர் அறிக்கைகள் வெளியாகிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
தனது கட்சியை மீண்டும் கட்டியெழுப்புவதில் இருக்கக்கூடிய சவால்களை விக்கிரமசிங்க நன்கு அறிவார். அதனால் அவர் பொருளாதார மீட்சிக்கு தனது நிருவாகம் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் நாளடைவில் பல அரசியல் சக்திகளினதும் மக்களினதும் ஆதரவை தனக்கு பெற்றுத்தரும் என்ற நம்பிக்கையில், ஜனாதிபதி தேர்தலில் தான் வெற்றி பெறுவதற்கான வியூகங்களை வகுப்பதிலேயே குறிப்பாக கவனம் செலுத்துகிறார்.
மக்கள் கிளர்ச்சியின் விளைவான நெருக்கடியில் இருந்து விடுபடுவதற்கு விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக்கிய ராஜபக்சாக்கள் ஜனாதிபதி தேர்தலில் அவரை ஆதரிப்பார்களா என்பது முக்கியமான கேள்வி. தங்களது ஜனாதிபதி வேட்பாளரை விரைவில் அறிவிப்பது குறித்த பொதுஜன பெரமுன முக்கியஸ்தர்களின் பேச்சுக்கள் விக்கிரமசிங்கவுடன் கடுமையான ஒரு பேரத்துக்கான முஸ்தீபுகள் போன்று தெரிகிறது.
(நன்றி; ஈழநாடு)