சாதிகள் இல்லையடி பாப்பா..! மௌன உடைவுகள் – 27

சாதிகள் இல்லையடி பாப்பா..! மௌன உடைவுகள் – 27

   — அழகு குணசீலன் —

வர்ணாச்சிரம மதநெறி மூட்டிய நெருப்பு – சாதி வெறி காலங்களைக் கடந்து எரிந்துகொண்டிருக்கிறது. விடுதலைக்கு போராடிய ஒரு இனத்தின் விடுதலைக்கு எவையெல்லாம்விரோதமானவையோ, அவை எல்லாம் நடந்தன, நடந்துகொண்டிருக்கின்றன. இந்த எரிகின்ற நெருப்பில் எண்ணெய் வார்த்து இருக்கிறார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.

சாதிச்சண்டை, சமயச்சண்டை, ஊர்ச்சண்டை என்று குறுந்தமிழ்த்தேசியம் ஈன்ற குட்டிகள் சமூகத்தில் தலைவிரித்தாடுகின்றன. இந்தப்போக்கு அண்மைக்காலத்தில் அதிகரித்துவருவது அவதானிக்கத்தக்கது. இது சமூக அரசியல் வரட்சியின் வெளிப்பாடு. இந்த நிலையில் அண்மையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாணத்தில் சாதிப்பிரிவினை இல்லை என்று சேர்ரிபிக்கட் வழங்கியிருக்கிறார். அவரின் இந்த கூற்று அவர் உடுத்திருந்த வேட்டியில் கறையை ஏற்படுத்தியிருக்கிறது.

“சாதி இரண்டொழிய வேறில்லை”, “சாதிகள் இல்லையடி பாப்பா” என்ற வாசகங்களை புரிந்து(?) கொண்டுதான் சிங்கள மொழி ஊடகவியலாளரின் கேள்விக்கு அமைச்சர் டக்ளஸ்தேவானந்தா பதில் அளித்தாரா? என்று கேட்கத் தோன்றுகிறது. டக்ளஸின் நாவில் இருந்து இந்தப் பதிலை பலரும் எதிர்பார்க்கவில்லை என்பது சமூக ஊடக கருத்துப் பதிவுகளில் வெளிப்படுகிறது..

அருண்.சித்தார்த்தா தாங்கள் பாட்டன், பூட்டன் காலத்தில் இருந்தே சாதிவெறிக்கும், தடிப்புக்கும், திமிருக்கும் முகம்கொடுத்து வருகின்றோம் என்று கூறுகின்றார். ஐ.நா. அறிக்கை வடக்கில் சாதிவேறுபாடு இருக்கிறது என்று கூறுகிறது. இத்துத்துவா சிவசேனையின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தனே இந்துக்கள் இதற்காக வெட்கப்படவேண்டாமா..? இது மனித உரிமை மீறல் இல்லையா…? என்று ஜெனிவாவுக்கு காவடி எடுப்பவர்களைப் பார்த்து கேட்கிற அளவுக்கும், இன்று சாதியம் யாழ் சமூகத்தில் ஊறி இருக்கின்றது.

ஆனால்…!

ஈ.பி.ஆர்.எல்.எப். இன் அன்றைய புரட்சிகர மக்கள் படையின் படைத்துறைத் தளபதி டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாணத்தில் சாதிகள் இல்லை என்று கூறுகிறார். எல்லாவற்றையும் டக்ளஸ் மறந்திருந்தாலும் அவரின் ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பை யாழ் சாதித்தடியர்கள் “இழிசனர் அமைப்பு” என்று அழைத்ததை டக்ளஸால் எப்படி மறக்கமுடிந்தது என்று கேட்கத்தோன்றுகின்றது….? 

ஊருக்கு ஊர், கோயிலுக்கு கோயில், சமூகத்திற்கு சமூகம், ஒழுங்கைக்கு ஒழுங்கை சாதியின் பெயரால் வாள்வெட்டும், கத்திக்குத்தும், கழுத்தறுப்பும் யாழ்ப்பாணத்தில் நாளாந்த செய்தியாக இருக்கும்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சாதிவெறிக்கு வெள்ளையடிக்கும் அரசியலின் பின்னணி என்ன? இது ஆரியர்குளத்தில் அரசியல் வலை வீச்சா…? அல்லது சைவ வினாவிடை ஆறுமுகநாவலரின் வாரிசுகளின் வாக்குகளுக்காக சாமரைவீச்சா…?

சமூக ஊடகப் பதிவுகளைப் பார்க்கும்போது அவரைத் தோழர் என்று அழைப்பவர்கள் டக்ளஸிடம் இருந்து இந்த நிலைப்பாட்டை எதிர்பார்க்கவில்லை. அதிர்ச்சியில் இருக்கிறார்கள். மறுபக்கத்தில் ஏதாவது மறுப்பை பதிவிட்டு தங்களின் தோழமையுடன் கூடிய விமர்சனத்தை முன்வைக்கிறார்கள். இன்னொரு பிரிவினர் பாம்புக்கும் நோகாத கம்புக்கும் நோகாத அரசியலை பேசுகிறார்கள். டக்ளஸ் தேவானந்தாவை நன்கு அறிந்த சிலர் “இது ஒன்றும் எங்களுக்கு புதிதல்ல, நாம் அறிந்தே இருக்கிறோம்” என்று டக்ளஸ் உடனான கடந்தகால அனுபவ அரசியலை குணாம்சத்தை பேசுகிறார்கள்.

ஈ.பி.டி.பி.யின் அரசியலை, டக்ளஸ் தேவாநந்தாவின் தலைமைத்துவத்தை கிழி…கிழி… என பிய்த்துவாங்குகின்ற தமிழ்த்தேசிய அரசியல், இது விடயத்தில் தமது மேட்டுக்குடி அரசியலுக்கு நட்டம் ஏற்படாதவாறு கண்டும் காணாததுமாக முகத்தை மறுபக்கம் திருப்பிக்கொள்கிறது. ஏனெனில் விடுதலைப்புலிகள் தமது காலத்தில் சாதிப்பாகுபாட்டை அழித்துவிட்டோம் என்றே பிரச்சாரம் செய்தார்கள். சாதி, சமய வேறுபாடுகளைக் கடந்த ஒரு தேசிய மக்கள் திரட்சி பற்றியே அப்போது மட்டும் அல்ல இப்போதும் அவர்களின் ஊடகவியலாளர்களும், ஊடகங்களும் பேசுகின்றன. ஆனால்  சமூக உள்ளகக் கட்டமைப்பு அப்படியல்ல. டக்ளஸ், மற்றும் புலிகளின் கருத்தை மறுதலிப்பதாக அது இருக்கிறது. இதனால் தமிழ்த்தேசியத்தின் மௌனம் டக்ளஸ் புலிகளின் கருத்துக்கு வலுச்சேர்த்துவிட்டார் என்பதாக அமைகிறது.

ஆனாலும்…! ஆறுதல் தருகின்ற ஒரு விடயம் என்னவெனில் இது விடயத்தில் டக்ளஸ் மீது காரசாரமான விமர்சனத்தை முன்வைப்பவர்கள் தமிழ்த்தேசிய மாற்றுக்கருத்தாளர்கள் என்பதாகும். ஒரு வகையில் “ஒரு உட்கட்சி ஜனநாயக விமர்சனம்” ஒன்றை அவர்கள் செய்கிறார்கள். அவர்களில் பலர் டக்ளஸ்ஸை இன்னும் தோழர் என்றே விழிக்கிறார்கள்.

சர்ச்சைக்குரிய இந்தக் கருத்துக்கு பின்னரும் டக்ளஸ்ஸை தோழர் என்று அழைப்பது இயக்கங்கள் கொள்கைகளுக்கு அப்பால் உதட்டளவில் வளர்த்துவிட்ட வார்த்தை பழக்கதோஷமா? அல்லது ஒரு மரியாதைத் தோழமையா? என்பது அவர்களுக்கே வெளிச்சம்.

யாழ்ப்பாணத்தில் சாதிப்பிரச்சினை இருக்கிறது என்று டக்ளஸின் கருத்தை மறுதலித்து ஆய்வறிக்கைகளையும், நூல்களையும், ஆதாரங்களையும் பட்டியல் இட்டு நிறுவவேண்டிய தேவை இங்கு அவசியமற்றது. ஏனெனில் இது ஒரு சமூகப்பிரச்சினை. மக்கள் நாளாந்தம் தங்கள் சமூக, பொருளாதார, அரசியல் செயற்பாடுகளின் போது எதிர்கொள்கின்ற, அனுபவிக்கின்ற, கண்முன்னே காண்கின்ற பிரச்சினைகள். உடல், உள ரீதியான வன்முறைகள்.

இந்தப் பிரச்சினை இலங்கையின் சிங்கள, தமிழ் சமூகங்களின் பொதுவானதும், தமிழ்ச் சமூகத்தில் சிறப்பாகவும் ஆழவும் வேரூன்றியும் உள்ள ஒன்று. அப்படி ஒன்றும் இல்லை என்று டக்ளஸ் அதை மறுத்தால், யாழ்ப்பாணத்தில் சாதிப்பிரச்சினை இல்லை என்பதை ஆதாரபூர்வமாக நிரூபிக்கவேண்டிய பொறுப்பு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு உள்ள தார்மீக கடமையாகும். வாய்க்கு வந்தமாதிரி அவர் கூறிவிட்டு போகமுடியாது.

அதை டக்ளஸ் செய்வாரா….?  

இல்லையேல்.., புலிகளின் நுனிப்புல் அரசியலையே டக்ளஸும் மேய்கிறார் என்ற கதையாகிவிடும்