கிழக்கு அரசியலில் நாம் மனிதர்கள் கட்சி! (மௌன உடைவுகள் – 26)

கிழக்கு அரசியலில் நாம் மனிதர்கள் கட்சி! (மௌன உடைவுகள் – 26)

         — அழகு குணசீலன் —

மேற்கத்திய நாடுகளில் பொதுவாக கட்சிகளின் பெயர்களில் அரசியல், சமூக, பொருளாதார சிந்தாந்தங்கள் பிரதிபலிக்கப்படுவது வழக்கம். கீழைத்தேசங்களில் அரசியல் கட்சியின் பெயர்களை இனமும், மொழியும், மதமும் பிடித்துக்கொள்கின்றன. இது அரசியலுக்கு இந்த அடையாளங்களை முதன்மைப்படுத்தவேண்டிய தேவையை கட்சிகளுக்கு ஏற்படுத்திவிடுகிறது.

இலங்கையில் கடந்த நூற்றாண்டில் இந்த இன, மத, மொழி, அடையாள அரசியல் நிலைப்பாடானது மானிட தர்மத்திற்கும், மனிதத்திற்கும், மனிதாபிமானத்திற்கும், மனித உரிமைகள், அரசியல் அறநெறிக்கும் எதிரானதாகவே தொடர்ந்து வந்திருப்பதை நாம் அவதானிக்க முடியும். இதனை பொதுவாக இலங்கையின் தேசிய அரசியலிலும் குறிப்பாக வடக்கு, கிழக்கு, மலையக அரசியலிலும் காணமுடிகிறது.

இந்த அடிப்படையில் நோக்கும்போது கிழக்கு அரசியல் வானில் தோற்றம் பெற்றுள்ள “நாம் மனிதர்கள் கட்சி” அதன் பெயரிலேயே மற்றைய மரபுரீதியான கட்சிகளில் இருந்து வேறுபட்டுநிற்கிறது. இருப்பினும் இந்த பெயரளவிலான மாற்றம் மட்டுமே மாற்றத்திற்கான வழியாக அமைந்துவிட முடியுமா..?

ஒவ்வொரு கட்சியும் தனக்கு என ஒரு வட்டத்தை இன, மத, மொழியின் பெயரால் வரைந்து அதற்குள் நின்று அந்தக் கோட்டைத் தாண்டாது செயற்படுகின்ற இலங்கையின் இன்றைய அரசியல் சூழலில், அடுத்த வட்டத்திற்குள் என்ன நடக்கின்றது என்பதைக்கூட அறிந்துகொள்ள ஆர்வமற்றுள்ள நிலையில் அந்த அடையாள அரசியல் கோட்டை தாண்டி செயற்பட விரும்புகிறது “நாம் மனிதர்கள்”.

நாம் மனிதர்கள் கட்சி அரசியல் சித்தாந்தங்களையோ, சமூக அடையாளங்களையோ தனது பெயரில் சுமக்காமல் நாம் மனிதர்கள் என்று மனிதத்தை சுமந்து நிற்கிறது. “நாம் மனிதர்கள்” என்ற வார்தைகளில் அது பேசுகின்ற அரசியலை  வேறுபடுத்தி காட்டுகிறது. மனிதர்கள் என்ற வார்த்தைக்குள் அடங்கியிருக்கின்ற சமூக, பொருளாதார, அரசியல் ஒரு பரந்துபட்ட சிந்தனையையும், பன்மைத்துவத்தையும், சமூக நீதியையும் குறித்து நிற்கின்றது என்று கொள்ளலாம்.

இலங்கையின் கிழக்கில் தமிழ், முஸ்லீம் மக்களுக்கென தனியான அரசியல் தலைமைத்துவம் உருவாகவேண்டும் என்ற எண்ணம் நீண்டகாலமாக இருந்தபோதும் அதற்கான வாய்ப்பும் வசதியும் சாத்தியப்படவில்லை. கிழக்கின் தமிழ் அரசியல்வாதிகள் யாழ்ப்பாணத் தலைமைகளுக்கும், முஸ்லீம் அரசியல்வாதிகள் கொழும்பு தலைமைகளுக்கும் குடை பிடிப்பவர்களாகவே இருந்தனர்.

முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் உதயம் இந்த சிந்தனையின் வழிப்பட்டது எனினும், அது கிழக்கின் முஸ்லீம் சமூகத்திற்கான அரசியல் தலைமைத்துவத்தை தொடர முடியவில்லை. இன்று அந்த இலக்கில் அது தோற்றுப்போய்விட்டது. இந்த  இக்கட்டான நிலையைத்தான் தமிழ்த்தேசிய அரசியலும், மலையக அரசியலும் தமிழ் மக்களுக்கு கொடுத்துள்ளன.

கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களுக்கு தனித்துவமான அரசியல் தலைமைத்துவம் ஒன்றின் தேவையும், கட்டாயமும் விடுதலைப்புலிகளில் இருந்து கருணா அம்மான் பிரிந்தபோது முக்கியமானதாக உணரப்பட்டது. இந்தச் சூழல் பல தசாப்தங்களாக நிலவிய எண்ணக்கருவுக்கு வடிவம் கொடுக்க வாய்ப்பாக அமைந்தது. எனினும் துரதிஸ்டவசமாக கிழக்கு தமிழர்களுக்கு அந்த தலைமையை கருணாவினால் பல்வேறு காரணங்களாலும், காலச்சூழலாலும் இதுவரை வழங்கமுடியாமற்போனது. மக்களும் அதற்கு தேவையான ஆதரவை ஜனநாயக ரீதியாக அவருக்கு வழங்கவில்லை.

ஆனாலும் அந்த எண்ணக்கருவின் வழிவந்ததாகவே தமிழர் மகாசபை, தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி, மற்றும் தேர்தல் கால கிழக்கு தமிழ் கட்சிகளும் அமைந்துள்ளன. முஸ்லீம் காங்கிரஸ் போன்றே இந்தக் கட்சிகளும் கிழக்கில் தமிழர்களுக்கான கட்சிகளாகிவிட்டன. அதேவேளை தாமே வரைந்த அந்த அடையாள வட்டத்தை தாண்டமுடியாதுள்ளன . 

இந்த சூழலே நாம் மனிதர்கள் கட்சியின் தோற்றத்தை கிழக்கின் சமூக, பொருளாதார, அரசியலில் கொள்கையளவில் முக்கியப் படுத்துகிறது. இதற்கு காரணம் கிழக்கிற்கான தனித்துவ அரசியல் தலைமைத்துவம் தொடர்பான நாம் மனிதர்களின் நிலைப்பாடு. இந்த இன, மதமொழி அடையாளக் கோடுகளைத்தாண்டி கிழக்கின் ஆட்புல உரிமையை கோடிட்டுக் காட்டுகிறது. இது மூவின மக்கள் வாழும் கிழக்கின் தனித்துவ அரசியல் செயற்பாட்டிற்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும். அதே வேளை நாம் மனிதர்கள் கட்சி கிழக்கு மக்களின் தனித்துவமான சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கின்ற அரசியல் கட்சிகளுடன் இணைந்து செயற்படத் தயாராய் இருப்பதாக அறிவித்திருப்பதும் கிழக்கு தமிழர் அரசியலுக்கு பலம் சேர்க்கும் ஒன்றாகும். 

இப் புதிய கட்சியின் பொதுச்செயலாளர் ஹரிஷ் அலி உதுமான். “எனது உம்மா சேலையும், வாப்பா வேட்டியும் கட்டியிருந்த காலச்சூழலில் பிறந்து வளர்ந்தவன் நான்” என்று தமிழ் முஸ்லீம் சமூகங்களின் அன்றைய உறவை வெளிப்படையாகப் பேசுபவர். அன்றைய சுமூகமான பல்கலாச்சார, பண்பாட்டு சூழலையும், மட்டக்களப்பின் முதுசமான மண்முனை வாழ்வியலையும் உண்மையாகவே உரத்துப் பேசுகின்றவர் என்பது இங்கு சுட்டிக்காட்டப்படவேண்டிய ஒன்று. சுய இலாப அரசியலை தவிர்த்து இந்த உண்மையைப் பேசுவதற்கான துணிச்சல் இன்று யாருக்கு இருக்கிறது?

(*)  எமது மக்கள் எனும் சக்தி மிக்க அத்தியாயத்தின் மீது கிழக்கு மக்களுக்கான, விசேடமாக அரசியல் அந்தஸ்த்து அற்றிருக்கும் சோனகர்களுக்கான வளமான அரசியல் சமூக இயக்கம் ஒன்றை தமிழ்மக்கள் சமூகத்துடன் இணைந்து கட்டி எழுப்புவது. இது முஸ்லீம் சமூகத்தை தனியாகப் பிரித்து நாம் மனிதர்கள் கட்சி ஓடவில்லை என்பதை காட்டுகிறது.

(*)13 வது திருத்தத்தின் அடிப்படையில் கட்டி எழுப்பப்பட்டுள்ள கிழக்கு மாகாணத்தின் ஆள்புல எல்லையை இக் கட்சி அங்கீகரிக்கிறது. கிழக்கு மக்களின் விருப்பத்திற்கு மாறாக இதை ஆக்கிரமிக்க முயலும் யாழ்.மையவாத தமிழ்த்தேசிய, சிங்கள தேசிய, மற்றும் கண்டி ரவூப் ஹக்கீம் தலைமைத்துவத்தையும் நாம் மனிதர்கள் கட்சி நிராகரிக்கிறது.

(*) இலங்கையின் சிங்கள, தமிழ், முஸ்லீம், மலையகத் தமிழ் மக்களை நான்கு தனித் தேசிய இனங்களாக இக்கட்சி பிரகடனம் செய்கிறது. கிழக்கின் அரசியல் தலைமைத்துவங்களோடு மட்டும் அன்றி கிழக்கின் தனித்துவத்தை அங்கீகரிக்கும் தென்னிலங்கை அரசியல் கட்சிகளுடன் ஒன்றிணைந்த ஒரு பலமான கிழக்கிற்கான ஒரு அரசியல் பேரமைப்பை அது கோரி நிற்கிறது.

இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வில் நாம் மனிதர்கள் கட்சி பின்வரும் விடயங்களை வலியுறுத்தி நிற்பதை அதன் அறிக்கைகளில் காணமுடியும்.

1. கிழக்கு வாழ் மக்கள் தமது அரசியல் தலைவிதியை நிர்ணயிக்கும் உரிமை உடையவர்கள்.

2. இனப்பிரச்சினைக்கான தீர்வில் கிழக்கின் தனித்துவமும், கிழக்கு மக்களின் பன்மைத்துவமும் நிறைந்த வாழ்வியலும் பேணப்பட வேண்டும்.

3.அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகளில் கிழக்கு மாகாணத்தை மற்றைய மாகாணங்களுடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட வேண்டும்.

4.  இணைப்பு கோரிக்கை “கிழக்கு ஆக்கிரமிப்பு” என்ற வகையில் சட்டரீதியாக தடைசெய்யப்பட வேண்டும். இதைக்கோரும் கட்சிகள் பேச்சுவார்த்தைகளில் பங்குகொள்ள தடைவிதிக்கப்பட வேண்டும்.

நாம் மனிதர்கள் கட்சியின் சமூக, பொருளாதார கொள்கை பல முக்கிய விடயங்களை சமூகநீதியின் அடிப்படையில் பேசுகிறது.

#. கிழக்கு மாகாணத்தில் நகரங்களுக்கும், கிராமங்களுக்கும் இடையில் கல்வியில் நிலவும் “அசமத்துவம்” களையப்பட வேண்டும்.

#. இனங்களுக்கான தனித்தனி பாடசாலை முறை படிப்படியாக ஒழிக்கப்பட்டு, ரியூசன் கற்கைமுறையும், மாணவர்கள் மீதான “கல்விச் சித்திரவதையும்”  சட்ட ரீதியாக தடைசெய்யப்பட வேண்டும்.

#.கிழக்கின் நில,கடல்,காட்டு வளப் பயன்பாட்டில் பாரம்பரிய- நவீன கலப்பு முறைகளை உள்வாங்கும் கொள்கைத் திட்டம் அவசியம். 

#. யதார்த்தமான நிலச்சீர்திருத்தம், மற்றும் புதிய விவசாய குடியேற்றத்திட்டங்கள் மூலம் நிலமற்றவர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படவேண்டும்.

#. பெண்கள் மீதான சட்ட, சமூக, பொருளாதார, பாலியல் சுரண்டல்கள் தடைசெய்யப்படவேண்டும், வீட்டு வன்முறைக்கு எதிரான சட்டங்களும் வகுக்கப்படுவதுடன் கல்வி, தொழில் தேர்வு உரிமைகளும், சிறுவர், வயோதிபர் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும்.

இவ்வாறு சமூக, பொருளாதார, அரசியல் பரந்துபட்ட பார்வையைக் கொண்டுள்ள நாம் மனிதர்கள் கட்சியின் கொள்கைத்திட்டங்களை அக்கட்சியின் செயற்பாட்டு அரசியலைக் கொண்டே மதிப்பீடு செய்யமுடியும்.

கிழக்கு மாகாணத்தின் சமூக கட்டமைப்பில் மூவினங்களுக்கும் இடையிலான தனித்துவ அடையாளங்களை அங்கீகரிக்கின்ற அரசியல் நிலைப்பாட்டில் நாம் மனிதர்கள் கட்சி பேசுகின்ற இரு விடயங்கள் விமர்சனத்திற்குட்பட்டவை.

ஒன்று இன ரீதியான பாடசாலை முறையை இல்லாமல் செய்வது.  இதன் மூலம் ஒரு இனக்குழுவின் தனித்துவ அடையாளங்களை இலங்கை போன்ற பல்கலாச்சார விழுமியங்களைக் கொண்ட ஒரு நாட்டில் எவ்வாறு உத்தரவாதப் படுத்துவது என்பதாகும். இது காலப்போக்கில் ஒரு நாடு, ஒரு சட்டம் என்ற நிலைப்பாட்டை வலியுறுத்துவதாக அமைந்துவிடுகின்றது. இது ஒற்றைத் தேசியத்தை நோக்கிய பயணமாகும்.

கல்வி நிர்வாகத்தைப் பற்றிப் பேசுகின்ற நாம் மனிதர்கள் கட்சி, பொது நிர்வாக கட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் மட்டும் இனரீதியான பிரிக்கப்பட்டிருந்தது பற்றி பேசவில்லை. கல்முனை பிரதேச செயலக மோதல் இந்த இனரீதியான பொதுநிர்வாக முறையின் விளைவு. ஆனால் அதேமுறைமையை கோரி நிற்கின்ற மலையக தமிழ்மக்களுக்கு அது மறுக்கப்பட்டு வருகிறது. ஒருவகையில் பல இன மக்கள் வாழ்கின்ற சமூக கட்டமைப்பில் நிர்வாக அதிகாரத்தை பகிர்வு செய்தல் என்ற வகையில் இந்த அணுகுமுறை முன்னேற்றமானது எனினும் அந்த உரிமை மற்றைய மக்களுக்கும் வழங்கப்படவேண்டும். 

கிழக்கு மாகாண அரசியலுக்கு சவாலாக அமைகின்ற முக்கியமான விடயம் காணிப்பிரச்சினை. இதனை நாம் மனிதர்கள் கட்சி கருவது போன்று வெறும் குடியேற்றத்திட்டங்களால் மட்டும் தீர்க்கமுடியுமா? என்பதும் கேள்விக்குரியது. ஏனெனில் குடியேற்றங்கள் ஏற்கனவே பல பிரச்சினைகளையும் இனங்களுக்கு இடையிலான உறவுகளையும் சிதைத்துள்ளன.

எனினும் மாற்றுச் சிந்தனைகளைக் கொண்டுள்ள இக்கட்சியின் அரசியல் பிரவேசம் கிழக்கில் ஒரு  மாற்றத்திற்கான ஒரு வழியை காட்டுவதாக அமைகிறது. இடிந்து வீழ்ந்துள்ள தமிழ்-முஸ்லீம் உறவுப்பாலத்தை கட்டி எழுப்புவதற்கு அனைத்துத் தரப்புக்குமான அழைப்பாக அமைகிறது.