அவள் எதிர்த்து பேசினாள்.

அவள் எதிர்த்து பேசினாள்.

அவள் எதிர்த்து பேசினால்
தலைக்கனம் சிறிதென்பார்
செவிமடுக்கச் சினமென்பார்
உண்மைக்கு காலமில்லையென்பார்
ஊமைக்கு வாய்த்த காலமென்பார்

அவள் எதிர்த்து பேசினால்
காதில் விழவில்லையென்பார்
பேச்சிலொன்றும் குறையில்லையென்பார்
பெரும் வசையென்பார்
வேறு வழியில்லையென்பார்

அவள் எதிர்த்து பேசினால்
சட்டமா கதையென்பார்
சரித்திரப் பிழையென்பார்
நாக்கு நீளுதென்பார்
உலக நாசம் தொடங்கிற்றென்பார்

அவள் எதிர்த்துப் பேசினால்
பீடை பிடித்திற்றென்பார்
பின்னிப் பிணைந்ததென்பார்
எல்லாம் விதியென்பார்
எங்கள் வினையிது என்பார்

அவள் எதிர்த்து பேசினால்
கட்டுக் கதையென்பார்
கருத்து முரணென்பார்
காலக் கொடுமையென்பார்
கச்சை கட்டியாடுதென்பார்

அவள் எதிர்த்து பேசினால்
இதுவா முறையென்பார்
இம்சை விடுதில்லையென்பார்
வாய்க் கொழுப்பென்பார்
வம்பு இழுப்பென்பார்

அவள் எதிர்த்து பேசினால்
வெற்றிப் பிதற்றலென்பார்
வெறி பிடித்ததென்பார்
வெட்டி வேலையென்பார்
வேசம் போடுதென்பார்

அவள் எதிர்த்து பேசினால்
முளையில் முத்திற்றென்பார்
பஞ்சுதானே பத்திற்றென்பார்
பிஞ்சிலே பழுத்ததென்பார்
நெஞ்சிலே வஞ்சமென்பார்

அவள் எதிர்த்து பேசினால்
பரம்பரை அரிப்பென்பார்
பைத்தியம் அதுக்கென்பார்
ஓதுகை தொடங்கிற்றென்பார்
ஓலம் விடுதில்லையென்பார்

அவள் எதிர்த்து பேசினால்
கொஞ்சம் உழறலென்பார்
கோமாளி கூத்தென்பார்
நாய்ப் பிறப்பென்பார்
நக்கிப் பிழைப்பதென்பார்

இருந்தாலும் அவள் எதிர்த்து பேசுவாள்
தன் இலக்கை அடையும் வரையில்…

யோ.துஷாந்தினி
கிளிநொச்சி

thushanthiniy@gmail.com