சிறையுடைக்கும் பறவைகள் (நாவல்)-02

சிறையுடைக்கும் பறவைகள் (நாவல்)-02

~ இதயராசன் – Ithayarasan

அத்தியாயம் – 02  

ஆத்மார்த்தமாக விரும்பும் ஒரு இலக்கினை அடைய வேண்டுமென்று முயல்கின்ற போது,  சந்தர்ப்ப சூழ்நிலைகள் அவளுக்குச் சாதகமாக அமைந்து விடுகின்றது.

அவ்விதமே இன்றும் அமைந்தமையினை நினைந்து ஆச்சரியமடைந்தாள் ஜஸமின். ஆனால் உண்மை அப்படியானதில்லை, 

தனது திறனையும், பரந்த மனப் பாங்கினையும் எப்பொழுதும் விழிப்புடன் வைத்திருப்பதோடு, சூழ்நிலையைத் தனக்குச் சாதகமாகப்  பயன்படுத்திக் கொள்வதுமே அதன் உண்மைக் காரணமாகும்.

தியானம், விழிப்புநிலை, பல்துறைசார் அறிவு ஜஸ்மினுக்கு எப்படி ஒருங்கு வாய்த்தது, என்பதை நினைக்கும் பொழுது, ஊரில் புஸ்பராணியாக இருந்தபோது, எதிர்பாரது ஏற்பட்ட பந்தம் நினைவுத் திரையில் தோன்றியது.

கலையரசி ரீச்சரின் நட்புக்கிடைத்த நாளிலிருந்து, புஸ்பராணி; வழமைபோல் அதிகாலையில் எழுந்து, தியானத்தில் ஈடுபடுகின்றாள்.                                                                                                                                                                 

கலையரசி ரீச்சர், புஸ்பராணியின் தோழி செவ்வந்தியின் ஆசிரியை. ஏ.எல். படிக்கின்ற காலத்தில் ஒருமுறை தனது நண்பியுடன், அவரது மட்டுவில் வீட்டிற்குச் சென்றாள். 

சங்க இலக்கியத்தில் சில பாடல்களுக்கு விளக்கம் கேட்கவே போயிருந்தாள்.

ரீச்சர் வீட்டுக்குப் போகும்வரை கலையரசி ரீச்சர் ஒரு தமிழ் ஆசிரியை என்றே நினைத்திருந்தாள்.

ரீச்சர் வீடுதேடி வந்து சந்தேகம் கேட்கவந்த மாணவிகளை உபசரித்தவிதமும், பாடலைப் பதம் பிரித்து விளங்கப்படுத்திய நுட்பமும் நிறையவே புஸ்பராணியைக் கவர்ந்துவிட்டது.

ரீச்சரை உனக்கு அறிமுகப்படுத்துகிறேன், அவர் உனது சந்தேகத்தினைத் தீர்த்து வைப்பார் என்றே தோழி அழைத்துச் சென்றாள். அது நூறுவீதம் சரியாகவே இருந்தது. 

தேநீர் குடிக்கும்போது, புஸ்பராணி ஜோக்கிரபியில் ஒரு சந்தேகம் கேட்க, ஒரு ரீச்சரிடம் போகவேண்டும் என்று நண்பியிடம் சொன்னது காதில் விழுந்த ரீச்சர்,

“என்ன சந்தேகம் சொல்லும் பாப்பம்? ”

தமிழ் ரீச்சருக்கு என்ன தெரியப்போகிறது என்ற அசட்டையுடன், சந்தேகத்தினைச் சொன்னாள். 

ரீச்சர் தேநீர் குடிக்கும் இடத்தையே வகுப்பறையாக்கி, அந்தப்பாடத்தினை இலகுவாகப் புரியும்படி விளக்கினார்.

புஸ்பராணி; திகைத்துப் போய்விட்டாள். 

ரீச்சர், புத்தக அலுமாரியில் ஒரு புத்தகத்தினைத் தேடியெடுத்து அதில் குறிப்பிட்ட பகுதியை எடுத்துக்காட்டி வாசிக்கக் கொடுத்தார். 

புஸ்பராணிக்கு கலையரசி ரீச்சரிடமே புதிய சந்தேகமும் தோன்றியது. அதற்குக் காரணம் அவரது புத்தக அலுமாரியில் காணப்பட்ட பல்துறை சார்ந்த புத்தகங்களே!

ஒருமணி நேர பழக்கத்தால் ரீச்சருடன் சகசமாகப் பழக முடிந்தமையால் தனது சந்தேகத்தை நேரடியாகவே கேட்டாள். 

“ரீச்சர் நீங்கள், இலக்கியம், அறிவியல், அரசியல், என்று பல துறைசார்ந்த நூல்களையும் எப்படி ஒன்றாகவே படிக்க முடிகின்றது. எமக்குப் பாடப்புத்தகமே கசக்கின்றது.”

தயக்கமின்றி வெளிப்படையாகவே தனது வியப்பினைக் கேள்வியாக்கினாள்.

கலையரசி ரீச்சர் புன்னகைத்தவாறு,

“மகளே! இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. நாங்கள்  ஓ.எல். படிக்கும்போது, எல்லாத்துறை சார்ந்த பாடங்களையும் படிக்கின்றோம். பின்னர் ஏ.எல். படிக்கும்போது நான்கு பாடம் படிக்கின்றோம். அதுபோலவே இவையும். 

நாம் பரீட்சைக்கு என்று படிக்காமல் அந்தத் துறையிலுள்ள சந்தேகங்களைத் தீர்ப்பதற்காக நூல்களைத் தேடி வாசித்தால் அது சுமையாக இருக்காது. மனதை ஒரு நிலைப்படுத்தி, எமது கட்டுப்பாட்டில் வைத்திருப்தன் மூலம், நாம் நினைப்பதைச் சாதிக்க முடியும்.”

ரீச்சர் விளக்கமாகப் பதிலிறுத்தார்.

அன்றிலிருந்து, தியானப் பயிற்சிக்குச் சென்று, அதன் பயனை அனுபவ பூர்வமாக உணர்ந்து கொண்டதோடு, கலையரசி ரீச்சரோடு தனது தொடர்பைப் பேணிக் கொண்டாள். 

இப்போது லண்டன் வந்தபின். மம்மியின் உதவியால், தியான நிலையம்  இருந்த இடம் தேடிச் சென்று, அதில் உயர் பயிற்சியும் பெற்றுவிட்டாள்.

பதினேழு வயதில் அப்பாவின் அகால மரணம், வீட்டைவிட்டு வெளியேறியமை, கொழும்பில் அனுபவித்த லொட்ஜ் வாழ்க்கை, இன்றுவரை தொடரும் தனிமை, சோதனைகள் எல்லாவற்றினையும் கடந்து செல்லும் மனவலிமையை நல்குவது, இந்த தியானம் ஒன்றே.

ஜஸ்மின்; அன்று காலையில் வழமை போன்று, தியானத்தினை முடித்தபின் அன்றைய வேலைகளை வரிசைப்படுத்தி, ஞாபகத்தில் பதிய வைத்தவாறு, காலைத் தேநீரை அருந்திய பின்னர், பாரதியாரின் ஞானப்பாடலை, என்றுமில்லாத சந்தோஷத்துடன் உணர்வு கலந்து பாடினாள்.                                                                                                                                                                                                                                                       

‘அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் 

                                                                                           அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே!’

ஆறாம் வகுப்பில் சங்கீத ஆசிரியர் சொல்லிக் கொடுக்கப் பத்தொடு பதினொன்றாகத்தான், இந்தப் பாடலையும் பாடினாள். ஆனால் இந்தப் பாட்டின் பொருளுணர்ச்சியும், பாடலின் லயமும் சேர்ந்து, நிமிர்ந்து  உட்காரவைத்து தன்னம்பிக்கையை ஊட்டியது.  

தியானம் கற்கத்தொடங்கிய நாளிலிருந்து, தியானத்திற்குப் பின்னர் இந்தப் பாடலைப் பாடுவதை வழமையாகக் கொண்டுள்ளாள் ஜஸ்மின். மேலும் பாரதியார் பாடலைத் தேடித்தேடிப் பாடுவதில் ஒரு இன்பத்தினையும் கண்டாள்.

லண்டனுக்கு வந்து பத்து வருடங்கள் கடந்தாயிற்று, முதன் முதல் லண்டன் கீத்துறு விமான நிலையத்தில் வந்திறங்கிய போது, தான் பேந்தப் பேந்த விளித்ததையும், ஏஜென்சி சொல்லிக் கொடுத்த ஆங்கில வாசகத்தை மனப்பாடம் பண்ணி  கிளிப்பிள்ளை மாதிரி, விமானநிலைய அதிகாரிகள் என்ன கேட்டாலும், 

அதனையே திரும்பத் திரும்பச் சொன்ன மையையும் நினைத்துப் பார்க்கின்றாள்.

.”l am a Refugee. I’m from Sri Lanka.”

அதற்குமேலே ஒரு ஆங்கில வார்த்தையும் தெரியாமல், கைப்பாசையால் தண்ணீர் வாங்கிக் குடித்தபின்னர், தன்மீது இரக்கப்பட்டு மேற்கொண்டு கேள்வி கேட்காமல் நின்ற அந்த அதிகாரியிடம், கொழும்பு விமான நிலையத்தில் ஏஜென்சிக்காரன் எழுதிக்கொடுத்த றெஜீனா என்ற பெயரையும், அவரது முகவரி, தொலைபேசி இலக்கத்தையும் மனப்பாடம் பண்ணிய ஒழுங்கில் ஒப்புவித்தாள்.

அந்த இலக்கத்திற்குத் தொடர்புகொண்ட பின்னர், இம்மிகிறேஷன் அறையில் ஜஸ்மினை அமரவைத்தனர்.

அடுத்து ஒரு மணி நேரத்தில் அங்கு வந்து நின்ற, றெஜீனா என்றழைக்கப்படும் பெண்ணிடம் ஜஸ்மினை ஒப்படைத்தனர்.

றெஜீனா என்று சொல்லி வந்த பெண், இலங்கை ஏஜென்சியின் லண்டன் பிரதிநிதி. இரண்டு மணிநேரம் காரில் பயணம் செய்து, ஒரு தொடர்மாடிக் குடியிருப்பிற்கு அழைத்துச் சென்றார்.

அங்கு ஏற்கனவே ஜஸ்மினைப் போல அகதியாக வந்த பல நாட்டுப் பெண்கள் இருந்தனர்.

“இவர்களுடன் தங்கு. உனக்கு வேண்டிய வசதிகள் இங்கே தாராளமாகக் கிடைக்கும்.”

தனது தொலைபேசி இலக்கத்தினைக் கொடுத்து,

“ஏதாவது பிரச்சினை என்றால் போன் பண்ணு. உனது மாமா இங்குள்ள தொலைபேசிக்கு அழைப்பு எடுப்பார். அவர் விபரமாகச் சொல்லுவார்.”

தனது கடமை முடிந்த திருப்தியோடு தன்னை றெஜீனா என்று சொன்ன பெண் சென்றுவிட்டார்.

அங்கு தன்னைப் போலவே பல பெண்கள், உலகின் பல்வேறு பகுதியிலிருந்து, இன்னலுற்று அகதியாக வந்திருப்பதையும், அவர்களுக்கும் தமது தாய்மொழி தவிர வேற்று மொழி தெரியாது என்பதனையும் அறிந்த பொழுது, தன்னிடமிருந்த தாழ்வுச் சிக்கல் நீங்கித் தலை நிமிர்த்தி, அவர்களுடன் கைப்பாசையில் உரையாடியதையும் நினைக்க, எல்லாமே ஒரு கனவாகத் தோன்றி மறைந்தன. 

தான் ஒரு ஆர்மேனிய நாட்டுப் பெண்ணுடன், கைப்பாசையில் பேசியதும். ஏ.எல். படிக்கும்போது, கைதடி நவில்ஸ் பாடசாலையின் தொடர்பினால், ஓரளவு தெரிந்த சைகை மொழியுடன், கையால் மடியால் போட்டுப் பேசினாள்…

அந்தப் பெண் உடனே புரிந்துகொண்டு பதில் சொன்னதையும் அளவில்லா சந்தோஷத்தைக் கொடுத்தது. அடுத்த சில நிமிடங்களில் அதற்கும் ஒரு அடிவிழுந்தது. 

அந்தப் பெண்ணைத் தன்னைப் போலவே அரைகுறையென நினைத்தே தப்புத் தப்பாக சைகை மொழி பேசினாள். 

அந்தப் பெண் அவளிடம் உனக்கெப்படி இந்தப்பாஷ தெரியும் என்று கேட்க. அதற்கு பதில் சொல்ல, 

அந்தப் பெண் அவ்வாறான பாடசாலையின் தான் ரீச்சர் என்று சொல்லத் தலையைத் தொங்கப்போட வேண்டியதாயிற்று.

ஆர்மேனியப் பெண்ணின் பெயர் றீற்றா, யுத்தத்தினால் அகதியாக வந்தது பற்றியும் அறிந்து கொண்டாள். 

அந்தப் பெண்ணுடன் சிநேகிதமாகி, அவளிடமிருந்து சைகை மொழியை முறைப்படி கற்றுக்கொண்டதும். தொடர்ந்து ஆங்கில மொழியைக் கற்றுக்கொண்டதும் மறக்கமுடியாத வரலாறாகும்.

இவளது தகப்பன் சாதாரண விவசாயி. ஆனால் பல்துறை சார்ந்தவர்களுடன் நட்பாக இருந்தமையினால் கேள்வி ஞானத்தின் மூலமும் நிறையக் கற்றுக் கொண்டவர். 

தந்தையிடமிருந்து ஏன்? எதற்கு? என்ற கேள்வியில் தொடங்கிப் பல விடயங்களைக் கற்றுக்கொண்டவள் ஜஸ்மின். 

எந்த விடயத்தினையும் அந்தக்காலச் சூழ்நிலையுடன் பொருத்திப் பார்ப்பதன் மூலமே அதனை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும் என்பார் ஜஸ்மின்னின் தந்தை.

அத்தகைய நுண் பார்வையும், சமூகத்தின் மீதான அக்கறையுமே ஜஸ்மினை லண்டன்வரை துரத்தியுள்ளது என்பதை அவளைத்தவிர வேறு யாரறிவார்?

அந்தத் தொடர் மாடிக் குடியிருப்பில் ஒரு வருடம் தங்கியிருந்து ஆங்கிலத்தினைச் சிறந்த முறையில் கற்றதன் பேறாக, ஆங்கிலம் கற்பித்த ஆசிரியை றோஸியானாவின் நட்புக்கிடைத்தது. 

அங்கு கற்றவர்களில் ஜஸ்மின் ஆர்வமுடன் கற்பதோடு, இளவயதினள் என்பதினாலும் அதிக கரிசனை காட்டினார் ரீச்சர்.

இவள் எதனையும் துருவித் துருவி வினாவுவதன் மூலம் கற்றலில் மீதான ஆவலைப் புரிந்து கொண்டு, 

பல்கலைக்கழக மொழிப்பீடத்தில் ஆங்கிலத்தில் உயர் டிப்ளோமா படிப்பதற்கும், அரசின் உதவி பெறுவதற்கும் சிபார்சு செய்தார். 

அதன்படி கல்வி பயின்று, ஏ தரத்தில் சித்தியும் பெற்றதனால், மேலும் படிப்பதற்கு உதவியாகத் தனக்குத் தெரிந்த ஒரு றெஸ்ரோறன்சில் பகுதிநேர வேலைக்கு சிபார்சு செய்தமையை இன்றுவரை மறக்காமல் இருப்பதோடு, தனது நல்லது கெட்டவற்றை தோழமையுடன் பகிர்ந்து கொள்கின்றாள் ஜஸ்மின்.

றோஸியா ரீச்சர் இவளது வயதைக் கருத்திற்கொண்டு வழி தவறாமல் முன்னேற வேண்டுமென்ற,  ஆசிரியைக்குரிய பொறுப்புணர்வுடன் பழகுகின்றார். 

கிறிஸ்மஸ், புதுவருட கொண்டாட்டங்களை அவர்களுடனேயே கொண்டாடுகின்றாள். தனக்கு இக்கட்டான தருணங்களில் ரீச்சரிடம் ஆலோசனை பெறுவதாலேயே தனித்து நின்று சாதிக்க முடிகின்றது, என ஜஸ்மின் திடமாக நம்புகின்றாள்.

சண்ணின் கடையில் வேலை உறுதியானதிலிருந்து, ரூமுக்கு வந்து, கடமைகளை வழமைபோல் செய்தாலும், தான் லண்டனுக்கு வந்ததிலிருந்து நடைபெற்ற சம்பவங்களை நினைவு ஓட்டத்தில் மீட்டுப் பார்ப்பதில் நிறைவு கண்டாள். அதிலும் றோசியனா ரீச்சரை நினைப்பதில் தனது தாயைக்கண்டு கொண்டாள்.

லண்டன் சிற்றிக்கு அண்மையில் லூசியம் என்ற இடத்தில், றோஸியானா ரீச்சர் தனது தோழியின் வீட்டில் றூம் வாடகைக்கு எடுத்துக் கொடுத்து, தனது தோழி மேரிக்கு  ஜஸமினை அறிமுகம் செய்துவைத்தார்.

ஐந்து வருடங்கள் எவ்வித இடையூறுமின்றி அந்த றூமில் இருந்து வந்தாள். அவர்கள் வீட்டினை விற்று, புறநகருக்குப் போகும்போதுதான், இணையத்தின் மூலம் Catfort என்ற இடத்தில் றூம்மாறி இருக்கின்றாள்.

படித்துக்கொண்டு, பகுதிநேரமாக மூன்று நான்கு இடத்தில் வேலை செய்வதால், அப்பப்போ மாமாவின் மூலம் தாய்க்கு பணம் அனுப்பவும் முடிகின்றது.

(தொடரும்..)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *