‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர்  (வாக்குமூலம் 53)

‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர் (வாக்குமூலம் 53)

       — தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் —

இறுதியாக ரெலோவும், புளொட்டும், தமிழரசுக் கட்சியும் இணைந்ததாகவிருந்த ஆகப் பிந்திய (பழைய) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து தமிழரசுக் கட்சி தன்னை விடுவித்துக்கொண்டு நடைபெறப்போகின்ற உள்ளூர் அதிகார சபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதென்று தீர்மானித்ததன் பின்னர், ரெலொவும், புளொட்டும் சேர்ந்து சுரேஷ் பிரேமச்சந்திரனையும் (முன்னாள் ஈபிஆர்எல்எப்) ரெலோவிலிருந்து முன்பு பிரிந்து வந்து சிறீகாந்தாவும் சிவாஜிலிங்கமும் அமைத்த தமிழ்த் தேசியக் கட்சியையும் ஜனநாயகப் போராளிகள் கட்சியையும் தங்களுடன் இணைத்துக் கொண்டு ‘ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி’ எனும் ஏற்கெனவே (2007 இல்) தேர்தல்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த கட்சியின் ‘குத்து விளக்கு’ச் சின்னத்தின் கீழ் தம்மை ஐந்து கட்சிகள் இணைந்த (புதிய)  ‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு’ ஆகப் பகிரங்கப்படுத்தி எதிர்வரும் உள்ளூர் அதிகார சபைத் தேர்தலில் தனியான அணியாகப் போட்டியிடுகின்றது.

நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறனுமின்றி வஞ்சனை செய்து வாய்ச் சொல்லில் வீரம் காட்டித் தமிழ் மக்களை ஏமாற்றித் தேர்தல்களில் வாக்கு வேட்டையாடிவரும் இப் ‘பழைய’ மற்றும் ‘புதிய’ தமிழ்த் தேசியக் கூட்டமைப்புகளின் அரசியல் ‘தகிடுதத்தங்கள்’ நிறைந்த வரலாற்றை அதன் ஆரம்பத்திலிருந்தே இப்பத்தியில் பதிவு செய்ய வேண்டியுள்ளது. காரணம் இப் ‘போலி’த் தமிழ்த்தேசியக் கட்சிகளிடம் தமிழ் மக்கள் மீண்டும் மீண்டும் ஏமாறக்கூடாதென எச்சரிக்கை செய்வதற்காகவே. ஓடுகிறவனைக் கண்டால் துரத்துபவனுக்கு இலேசு என்பதைப் போலத் தமிழ் மக்கள் ஏமாறத் தயாராகவிருக்குமட்டும் இக்கட்சிகள் அவ்வப்போது தனித்தனியாகவும் கூட்டுச்சேர்ந்தும் அணிகளாகப் பிரிந்து நின்றும் தமிழ் மக்களைக் காலம் முழுவதும் ஏமாற்றிக்கொண்டேயிருக்கும். தமிழ் மக்களின் அறியாமையும் அவலங்களும் மறதியுமே இக்கட்சிகளின் அரசியல் முதலீடுகளாகும்.

இத்தகையதொரு பின்புலத்தில் ‘பழைய குருடி கதவை திறடி’ எனும் கதையாக தமிழ் அரசியற் பொது வெளியில் தன்னை அடிக்க ஆளில்லையென்ற தலைக்கனத்திலுள்ள தமிழரசுக் கட்சியும் (வீட்டு சின்னம்); தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்று ‘லேபிள்’ ஒட்டிக்கொண்டும் தன்னைப் பிரபாகரனின் வாரிசாகக் கற்பிதம் பண்ணிக் கொண்டும் உலாவரும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசும் (சைக்கிள் சின்னம்); ஓய்வு பெற்ற நீதியரசர் என்ற பிம்பத்தை வைத்துக்கொண்டு எங்கே போனாலும் தனக்கு முதலிடம் அல்லது தலைமைப் பொறுப்பு அல்லது அதிகாரம் வேண்டுமென்று அடம்பிடித்தலையும் அரசியல் பிற்போக்குத்தனம் கொண்ட சி வி விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியும் (மான் சின்னம்) – இவர் பெயர் மாற்றம் பெற்ற முன்னாள் ஈ.பி.ஆர்.எல்.எப். ஆன ‘தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி’ என்ற கட்சிக்கும் (மீன் சின்னம்) தலைவராகவும் உள்ளார் என்பது தமிழ் மக்கள் அறிந்து கொள்ள வேண்டிய இவரது இன்னுமொரு அரசியல் குளறுபடியாகும் – தனித்தனியாகவும் ரெலோவும் புளொட்டும் தேர்தல்கள் திணைக்களத்தில் தற்போது அப்படி ஒரு பெயர் இல்லாத (இல்லாத கட்சியான) சுரேஷ் பிரேமச்சந்திரனின் ஈபிஆர்எல்எப் உம் தேர்தல்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்படாத கட்சிகளான ஸ்ரீகாந்தா தலைமையிலான தமிழ்த் தேசியக் கட்சியும் மற்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சியும் சேர்ந்து ‘ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின்’ யின் கீழ் (குத்துவிளக்குச் சின்னம்) கூட்டாகவும் நின்று தமிழ் மக்களை வழமைபோல் மீண்டும் ஏமாற்றுவதற்கு எதிர்வரும் உள்ளூர் அதிகார சபைத் தேர்தலில் வடக்கு கிழக்கில் களமிறங்கியுள்ளன. இவர்கள் அனைவரும் வாக்குப்பெட்டி அரசியல்வாதிகளே.

இனி இப்பத்தித் தொடரின் இரண்டாம் பந்தியில் குறிப்பிட்டவாறு ‘பழைய’ மற்றும் ‘புதிய’ தமிழ்த்தேசியக் கூட்டமைப்புகளின் வரலாற்றை அவற்றின் தோற்றுவாயிலிருந்து திரும்பிப் பார்ப்போம்.

ஆரம்பத் ‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு’ தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினால் 2001 இல் உருவாக்கப்பட்டது. அதில் பங்காளிக் கட்சிகளாக அப்போது இரா.சம்பந்தன் செயலாளர் நாயகமாக விளங்கிய தமிழர் விடுதலைக் கூட்டணியும் (இத் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவராக வீ.ஆனந்தசங்கரி இருந்தார்) – அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸும்-தமிழீழ விடுதலை இயக்கமும் (ரெலோ)-ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியும் (ஈ பி ஆர் எல் எப்) இணைந்தன. இதில் ‘புளொட்’ இணைத்துக் கொள்ளப்படவில்லை. காரணம் அனைவரும் அறிந்ததே. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும் புளொட் தலைவர் உமாமகேஸ்வரனும் முன்பு ஒன்றாயிருந்து பின் முரண்பட்டுப் பிரிந்துதான் தனித்தனியே மேற்படி இயக்கங்களுக்குத் தலைவரானார்கள். பிரிவுக்கு முன்னர் புலிகளின் தலைவராக உமாமகேஸ்வரனே விளங்கினார். உமா மகேஸ்வரன் புலிகளை விட்டுப் பிரிந்து சென்று ‘புளொட்’ ஐ உருவாக்கிய பின் இருவருக்குமிடையே கீரியும் பாம்பும் போல் 1981இல் சென்னை பாண்டிபஜாரில் ஆளையாள் சுட்டுக் கொல்ல முயற்சிக்கும் அளவுக்குப் பகைமையே வளர்ந்து வந்தது. இந்தப் பின்னணியிலேயே ஆரம்ப காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் புளொட் இணைத்துக் கொள்ளப்படவில்லை. ஆரம்பத்திலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் புளொட்டை இணைத்துக் கொள்ளாமல் விட்டமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஐக்கியத்தின் முதற் கோணலாகும். ஐக்கியம் என்பது அனைவரும் இணைந்ததுதானே. இந்த ஆரம்பத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவராக அப்போதைய தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவரான ஆனந்த சங்கரியே தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2001 டிசம்பர் 5ஆம் தேதி நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் (‘புளொட்’ தவிர்ந்த) மேற்படி கட்சிகள்யாவும் இணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தின் கீழேயே போட்டியிட்டன.

இத்தேர்தலுக்கு முன்பு தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் அதன் செயலாளர் நாயகம் இரா.சம்பந்தனும் – அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் சார்பில் அதன் அப்போதைய பொதுச்செயலாளர் நல்லையா குமரகுருபரனும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் சார்பில் அதன் முதல்வர் சிறீகாந்தாவும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் சார்பில் அதன் செயலாளர் நாயகம் சுரேஷ் பிரேமச்சந்திரனும் கையெழுத்திட்டு 22.10.2001 அன்று ஓர் ஊடக அறிக்கையை வெளியிட்டிருந்தார்கள். அந்த ஊடக அறிக்கையில் பின்வருமாறு கூறப்பட்டிருந்தன. 

‘தமிழ் மக்களின் ஏகோபித்த விருப்பத்திற்கேற்ப தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ் ஈழ விடுதலை இயக்கம், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், ஈழமக்கள் மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஆகியவை ஒன்று சேர்ந்து இந்த கூட்டு அமைப்பை ஆரம்பித்து எதிர்வரும் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட தீர்மானித்துள்ளோம்’…..

‘தேர்தலின் பின்பும் எங்கள் கூட்டமைப்பு தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வுகாண தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி அந்த அடிப்படையில்தான் இந்த கூட்டமைப்பு இயங்கும்’……..

இதற்குப் பின்னர் நடைபெற்ற 2004 ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்பு தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவராக விளங்கிய வீ.ஆனந்தசங்கரி, புலிகள் இயக்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் தனக்கு ஆட்சேபனையில்லை; ஆனால் புலிகளைத் தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என்பதை தன்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. அது ஜனநாயகக் கோட்பாடுகளுக்கு எதிரானது எனக்கூறி முரண்பட்டார். அப்போது பின்னாளில் தமிழரசுக் கட்சியின் செயலாளராக வந்த துரைராசசிங்கம் ஆனந்தசங்கரியின் நிலைப்பாட்டையே ஆதரித்திருந்தார்.  

ஆரம்பத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் முரண்பட்ட ஆனந்தசங்கரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளேயே ஓரங்கட்டப்பட்டார். அவ்வாறு அவர் ஓரங்கட்டப்பட்டமைக்கு மாவை சேனாதிராசாதான் காரணம் என்பதே ஆனந்தசங்கரியின் குற்றச்சாட்டு. இறுதியில் இத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ‘வேண்டாப் பொண்டாட்டி’ யாகிவிட்ட ஆனந்தசங்கரி நீதிமன்றம்வரை சென்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தையும் தனக்குச் சொந்தமாக்கிக்கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விட்டு வெளியேறினார். புலிகள் இருக்கும்போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஏற்பட்ட முதலாவது உடைவு இது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விட்டு தமிழர் விடுதலைக் கூட்டணி வெளியேறியதும் அதுவரை கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக இயங்காமலிருந்த இலங்கைத் தமிழரசுக் கட்சி தூசு தட்டி எடுக்கப்பட்டுத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து தமிழர் விடுதலைக் கூட்டணி வெளியேறிய வெற்றிடத்தில் இட்டு நிரப்பப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராகத் தமிழரசுக் கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஆனார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் நடந்த முதலாவது வெட்டி ஒட்டுதல் இதுவாகும். இதனால் 2004 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்திலேயே போட்டியிட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அதிகாரம் செலுத்தும்-தர்பார் நடத்தும் தலைமைக் கட்சியாகத் தமிழரசுக் கட்சிதன்னை ஆக்கிக் கொண்டது. 

2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற இறுதி யுத்தத்தில் புலிகள் தோற்கடிக்கப்பட வேண்டுமென உள்ளூர விரும்பிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அப்பாவித் தமிழ் மக்கள் அழிவுக்குள்ளான போதிலும்கூட அதனைக் கண்டு கொள்ளாமல்-யுத்த நிறுத்தம் கோரி எந்தவிதமான அரசியல் நடவடிக்கைகளிலும் காத்திரமாக ஈடுபடாது யுத்தத்தைப் பொறுப்பில்லாமல் புதினம் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

யுத்தம் முடிந்த பின்னர் நடைபெற்ற 2010 ஆம் ஆண்டுத் தேர்தலின்போது புலிகளின் தீவிர ஆதரவாளர்களாகத் தம்மைக் காட்டிக்கொள்ளும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸுக்கு இரா சம்பந்தன் ‘காய்’ வெட்டினார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஏற்பட்ட இரண்டாவது உடைவு இது. 

பின் 2013 ஆம் ஆண்டு (21.09.2013) நடைபெற்ற வட மாகாண சபைக்கான மாகாண சபைத் தேர்தலில் இரா.சம்பந்தனால் இழுத்துவரப்பட்டு முதலமைச்சராகவும் ஆக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் (தமிழரசுக் கட்சியுடன் குறிப்பாகச் சுமந்திரனுடன்) முரண்படத் தொடங்கி ‘தமிழ் மக்கள் பேரவை’யை உருவாக்கினார். (தற்போது தனக்கென ‘தமிழ் மக்கள் கூட்டணி’ என்னும் தனிக் கட்சியை தேர்தல்கள் திணைக்களத்தில் பதிவு செய்து ‘மான்’ சின்னமும் பெற்றுவிட்டார்). இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஏற்பட்ட மூன்றாவது உடைவு.   

இந்த உடைவுகளினதும் வெட்டி ஒட்டுதல்களினதும் இறுதி விளைவாகத் தமிழரசுக் கட்சியும் ரெலோவும் புளொட்டும் என மூன்று கட்சிகளே இணைந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே தேறியது. தமிழர் தரப்பின் ஐக்கியம் கழுதை தேய்ந்து கட்டெறும்பாகிய அல்லது உலக்கை தேய்ந்து உளிப்பிடியாகிய கதை இது. 

இடையிலே 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற வட மாகாண சபைத் தேர்தலில் ஆரம்பத்தில் (தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உருவாகிய 2001 இல்) இணைத்துக் கொள்ளப்படாத புளொட்டும் இடையிலே வெளியேறிய ஆனந்தசங்கரியின் தமிழர் விடுதலைக் கூட்டணியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைத்துக்கொள்ளப்பட்ட ‘ஒட்டு’ வேலை நடந்த காரணத்தால்தான் (இம்மாகா சபைத் தேர்தலின் பின்னர் ஆனந்தசங்கரி இரண்டாவது தடவையாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விட்டு வெளியேறினார்). இறுதியாகத் தேறிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ‘புளொட்’டும் பங்காளிக் கட்சிகளில் ஒன்றாக இருக்கும் நிலையேற்பட்டது. இல்லாது போனால் தமிழரசுக் கட்சியும் ரெலோவும் என ஆக இரு கட்சிகளின் கூட்டாகத்தான் (பழைய) தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தேறியிருக்கும். 

சி.வி. விக்னேஸ்வரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் (தமிழரசுக் கட்சியுடன்-சுமந்திரனுடன்) முரண்பட்டுச் சென்று தமிழ் மக்கள் பேரவையை ஆரம்பித்தவுடன் அவருடைய ஓய்வு பெற்ற நீதி அரசர் என்ற பிம்பத்தினாலும் பட்டுவேட்டி மேலங்கி சால்வை தாடியில் வெளிப்பட்ட அவரது பெரி மனிதர்-பிரமுகர்-தோற்றத்தினாலும் கவரப்பட்ட சித்தார்த்தன் (புளொட்), சுரேஷ் பிரேமச்சந்திரன் (ஈ பி ஆர் எல் எப்), அடைக்கலம் செல்வநாதன் (ரெலோ) ஆகியோர் கொஞ்சக் காலம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் ‘தர்பார்’ நடத்திய தமிழரசுக் கட்சியுடன் கறுவிக்கொண்டு தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு வாலையும் தமிழ் மக்கள் பேரவைக்குத் தலையையும் காட்டிக்கொண்டு விலாங்குமீன் போக்கில் திரிந்தனர். இவர்கள் மூவருக்கும் இருந்த பயம் என்னவெனில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலிருந்து (தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் இருந்து) வெளியேறிவிட்டால் எங்கே தேர்தல்களில் தாம் தோற்றுவிடுவோமோ? என்பதுதான். இதனால் இறுதியில் ரெலோவும் புளொட்டும் சி.வி. விக்னேஸ்வரனின் பக்கம் தலையைக் காட்டாமல் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எனும் பெயர்ப் பலகையின் கீழ் தமிழரசுக் கட்சியுடன் பட்டும் படாமலும் ஓடும் புளியம்பழமும் போல ஒட்டியும் ஒட்டாமலும் பல்லைக் கடித்துக் கொண்டு காலத்தைக் கழிக்கலாயின. 

தனித்து விடப்பட்ட ஈபிஆர்எல்எப் சுரேஷ் பிரேமச்சந்திரனுக்கோ கொள்கை அடிப்படையில் தனது கட்சியின் சொந்தக் காலில் நிற்பதற்குரிய அரசியல் ஓர்மம் இருக்கவில்லை. சி.வி. விக்னேஸ்வரனுக்கோ 2020 ஆம் ஆண்டுப் பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்குக் கட்சிகளைத் தேடும் நிலை. ‘புளொட்’ சித்தார்த்தன் தனது ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி- DPLF (நங்கூரம் சின்னம்) கட்சிக்கு மேலதிகமாகக் கைகாவலுக்கு வேறொரு புளொட் உறுப்பினரின் பெயரில் ‘ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி’ (குத்துவிளக்குச் சின்னம்) என்னும் பதிவு செய்யப்பட்ட (பினாமி) அரசியல் கட்சியையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். கட்சி தேடி அலைந்த சி.வி. விக்னேஸ்வரன் இக் குத்துவிளக்குக் கட்சியைத் தனக்குத் தரும்படி சித்தார்த்தனை நாடியதாகவும் சித்தார்த்தன் மறுத்துவிட்டதாகவும்கூட அப்போது கதை அடிபட்டது. 

இந்த நிலையில்தான் சி வி விக்னேஸ்வரன் சுரேஷ்பிரேமச்சந்திரனை நாடினார். அதனால் ‘பூ’ ச்சின்னத்தில் அமைந்த ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈ பி ஆர் எல் எப்) பெயரைத் ‘தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி’ யென மாற்றியும் அதன் சின்னத்தைப் பூவிலிருந்து மீனுக்கு மாற்றியும் மறுவடிவம் எடுத்த ஈபிஆர்எல்எப் ஆன புதிய தமிழ் மக்கள் தேசியக் கூட்டணிக்குத் தலைவராக சி வி விக்னேஸ்வரனை ஆக்கியும் ஈபிஆர்எல்எப் ஐத் தாரைவார்த்தார். 

இப்போது சுரேஷ் பிரேமச்சந்திரனின் நிலை பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்கைப் பிடித்தகதை. சி.வி. விக்னேஸ்வரன் தனது சொந்தக் கட்சியான தமிழ் மக்கள் கூட்டணியை எப்படியோ தேர்தல் திணைக்களத்தில் அங்கீகரிக்கப்பட்டதோர் அரசியல் கட்சியாகப் பதிவுசெய்து அதற்கு ‘மான்’ சின்னமும் பெற்றுக் கொண்டுவிட்டார். தற்போது சி.வி. விக்னேஸ்வரன் ‘மீன்’ சின்னத்தை கொண்ட’ தமிழ் மக்கள் தேசியக்  கூட்டணி’ (பெயர் மாற்றம் பெற்ற ஈ பி ஆர் எல் எப்) மற்றும் ‘மான்’ சின்னமுடைய ‘தமிழ் மக்கள் கூட்டணி’ ஆகிய இரு கட்சிகளுக்கும் ஏககாலத்தில் தலைவர். தேர்தல் விதிகளின்படி ஒருவர் சமகாலத்தில் இரு பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்குத் தலைவராக இருக்க முடியுமா? சி.வி. விக்னேஸ்வரன் இப்போது சுரேஷ் பிரேமச்சந்திரனின் தோளில் ஏறியமர்ந்து சுரேஷ் பிரேமச்சந்திரனின் காதைக் கடித்துவிட்டார். 

அண்மையில் எதிர்வரும் உள்ளூர் அதிகாரசபைத் தேர்தலில் தமிழரசுக் கட்சி தனது வீட்டுச் சின்னத்தில் தனித்துப் போட்டியிடத் தீர்மானித்த பின்பு (பழைய) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து ‘அம்போ’ எனக் கழற்றிவிடப்பட்ட ரெலோவும் புளொட்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எனும் பெயர்ப் பலகையைத் தமிழரசுக் கட்சியிடமிருந்து பிடுங்கி எடுத்துக்கொண்டு தங்களுடன் சுரேஷ் பிரேமச்சந்திரனையும் ரெலோவில் இருந்து முன்பு பிரிந்து சென்று ‘தமிழ்த்தேசியக் கட்சி’ அமைத்த (பதிவு செய்யப்படாதது) சிறீகாந்தா மற்றும் சிவாஜிலிங்கம் ஆகியோரையும் சி.வி. விக்னேஸ்வரனையும் ஜனநாயகப் போராளிகள் கட்சியையும் (பதிவு செய்யப்படாதது) இணைத்துக்கொண்டு புதிய ‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு’ அமைக்கமுயன்றனர். சி.வி. விக்னேஸ்வரனோ தனது சொந்தக் கட்சியான தமிழ் மக்கள் கூட்டணியின் மான் சின்னத்தில் போட்டியிடவேண்டும் அல்லது தான் குத்து விளக்குச் சின்னத்தில் போட்டியிடுவதாயின் அக்கட்சியின் செயலாளர் பதவி தனக்குத் தரப்பட வேண்டுமென்று அடம்பிடித்து அது சரி வராததால் தனி வழி போய் விட்டார். 

இறுதியாக ‘ரெலோ’ வும் ‘புளொட்’ டும் சுரேஷ் பிரேமச்சந்திரனும் (ஈ பி ஆர் எல் எப் என்ற கட்சி இப்போது இல்லை) சிறீகாந்தாவும் (இவர் தற்போது தலைவராகவும் சிவாஜிலிங்கம் செயலாளராகவும் இருக்கும் தமிழ்த் தேசியக் கட்சி பதிவு செய்யப்படாததாகும்) ஜனநாயகப் போராளிகள் கட்சியும் (பதிவு செய்யப்படாதது) கூட்டுச் சேர்ந்து (புதிய) ‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு’ என்னும் பெயர்ப் பலகையின் கீழ் ஏற்கெனவே தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டிருந்ததும்- ‘புளொட்’ சித்தார்த்தனின் கட்டுப்பாட்டில் பினாமிக் கட்சியாக இருந்ததுமான ‘ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி’யின் குத்து விளக்குச் சின்னத்தில் எதிர்வரும் உள்ளூர் அதிகார சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ளனர். ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியையும் அதன் குத்து விளக்குச் சின்னத்தையும் ஏதோ புதிய அரசியல் கூட்டமைப்பு போல (Political Alliance) மக்களுக்குப் போலியாகக் காட்டுகின்றனர். 

இந்த அரசியல் நிகழ்வுகளை ஒரு பகுப்பாய்வோடும் நுட்பமாகவும் நோக்கினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆரம்பித்த காலத்திலிருந்தே இன்றுவரை இக்கட்சிகளாலும் இக்கட்சிகளின் தலைவர்களாலும் ‘தமிழ்த் தேசிய அரசியல்’ எனும் போர்வையில் முன்னெடுக்கப்பட்டு வரும் ‘போலி’த் தமிழ்த் தேசிய அரசியல் பதவி நாற்காலிகளையும் அப்பதவி நாற்காலிகளால் கிடைக்கக்கூடிய சுகபோகங்களையும் நோக்கமாகக் கொண்ட தேர்தல் மைய அரசியலே (வாக்குப்பெட்டி அரசியலே) தவிர தமிழ் மக்களைச் சமூக பொருளாதார ரீதியாகக் கை தூக்கிவிடும் மக்கள் மைய – கொள்கை மைய அரசியல் அல்லவென்பது புரியவரும். 

உண்மையில், (ஆரம்பத்) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தேர்தல்கள் திணைக்களத்தில் தனியான அரசியல் கட்சியாகப் பதிவு செய்யத் தமிழரசுக் கட்சி தடையாக இருந்த ஆரம்பக் காலகட்டத்திலேயே அப்போது அதில் பங்காளிக் கட்சிகளாகவிருந்த ரெலோவும் ஈ.பி.ஆர்.எல்.எஃப். உம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விட்டு வெளியேறி ஏற்கெனவே வெளியில் நின்ற புளொட் ஐயும் இணைத்துக் கொண்டு மற்றும் இணைய விரும்பும் ஏனைய பதிவுசெய்யப்பட்ட தமிழ் அரசியல் கட்சிகளையும் இணைத்துக் கொண்டும் (புதிய) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பதிவு செய்து அதற்கெனப் புதிய சின்னமொன்றையும் பெற்றிருந்தால் அதிலொரு நேர்மையும் நியாயமும் கொள்கையும் இருந்திருக்கும். அதனைச் செய்யத் தவறிவிட்டு – தேர்தல்களில் தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் போட்டியிடும் (வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்டால்தான் வெல்லலாமெனும் எடுகோளில்) ஆசையில் காலத்தைக் கழித்துவிட்டு-தமிழரசுக் கட்சி எதிர்வரும் உள்ளூர் அதிகார சபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடத் தீர்மானித்த பின்னர் திடீரென்று ‘ஞானம்’ பெற்றுத் தாம் தேர்தல்களில் கூட்டாகப் போட்டியிடுவதற்குச் சின்னம் தேடியே ரெலோ அடைக்கலநாதனும் புளொட் சித்தார்த்தனும் முன்னாள் ஈபிஆர்எல்எஃப் சுரேஷ் பிரேமச்சந்திரனும் குத்து விளக்கைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு புறப்பட்டுள்ளனர். இதில் தமிழ்த் தேசியக் கட்சியும் ஜனநாயகப் போராளிகள் கட்சியும் போடுகாய்களே.

இவ்வாறு தமிழரசுக் கட்சி வீட்டுச் சின்னத்துடன் தனிவழி சென்றதும் ஏனையோர் குத்து விளக்குச் சின்னத்துடன் புறப்பட்டுள்ளதும் தனிநபர் மற்றும் கட்சி நலன்களுக்காகவுமே தவிர இதில் தமிழ்த்தேசியமோ அல்லது மக்கள் நலனோ கிஞ்சிற்றும் இல்லை. விடுதலைப் புலிகளின் பதிலிகளாகத் தம்மைக் காட்டிக்கொள்ளும் இவர்கள் விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்ட கூட்டமைப்பை இவ்வாறு சிதறு தேங்காயாக சிதறடித்துவிட்டிருக்கிறார்கள். இதனை ஒட்டுமொத்தத் தமிழ் மக்களும் உணர்ந்து கொள்ளவேண்டும்.

தமிழ் மக்கள் இன்று அவாவி நிற்பது மக்கள் நலனையே முதன்மைப்படுத்திய-மக்களுக்குப் பொறுப்புக் கூறக்கூடிய-உண்மையான, நேர்மையான, வெளிப்படையான-வினைத்திறன் மிக்க செயற்பாட்டு அரசியலயே. இதுவே மாற்று அரசியல் ஆகும். இந்த மாற்று அரசியலுக்கான அடித்தளத்தை எதிர்வரும் உள்ளூர் அதிகார சபைத் தேர்தலின் போதாவது அமைக்க வேண்டுமாயின் மக்கள் அறிவு பூர்வமாகவும் அனுபவத்தின் அடிப்படையிலும் சிந்தித்துச் செயற்படத் துணிய வேண்டும். 

மாற்றத்திற்கான- மாற்று அரசியலுக்கான ஒரே வழி-உடனடி வழி-எதிர்வரும் உள்ளூர் அதிகாரசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கட்சிகளெனத் தம்மை நாமகரணம் சூட்டிக்கொண்டும் தாமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எனப் பெயர்ப்பலகைகளைக் காவிக்கொண்டும் தமிழ் மக்களைத் தொடர்ந்தும் வஞ்சித்து வாக்கு வேட்டையாடப் புறப்பட்டுள்ள தமிழரசுக் கட்சியையும் (வீட்டுச்சின்னம்) ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியையும் (குத்துவிளக்குச் சின்னம்) மற்றும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசையும் (சைக்கிள் சின்னம்) தமிழ் மக்கள் கூட்டணியையும் (மான் சின்னம்) இவற்றோடு சேர்த்து தமிழர் விடுதலைக் கூட்டணியையும் (உதயசூரியன் சின்னம்) ஒரு சேர முற்றாக நிராகரிப்பதாகும். அப்போதுதான் தமிழர்களுடைய அரசியல் பொதுவெளியில் புதிய ‘மாற்றம்’ பிறப்பதற்கான இடைவெளி ஏற்படும்.