சொந்த மண்ணின் சுகந்த நினைவுகள்! ( 38 )

சொந்த மண்ணின் சுகந்த நினைவுகள்! ( 38 )

   — சட்டத்தரணி, பாடும்மீன். சு.ஸ்ரீகந்தராசா —

இது என் கதையல்ல,

என்னைத் தாங்கிய என் மண்ணின் கதை

இன்றைய சமுதாயத்தினர் தெரிந்து கொள்வதற்காகவும், எதிர்காலத்தினர் அறிந்துகொள்வதற்கான ஒரு பதிவாகவும், 1983 ஜூலையில் இலங்கையில் நடைபெற்ற இனக்கலவரத்தின் பின்னணி பற்றிய தகவலை இங்கு தருவது பொருத்தமானதும் அவசியமானதுமாகும்.

1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23 ஆம்திகதி, இரவு யாழ்ப்பாணம்,  திருநெல்வேலியில், தமிழீழ விடுதலைப் புலிகள், இராணுவத் தொடரணி மீது கண்ணிவெடித் தாக்குதலையும், துப்பாக்கிப் பிரயோகத்தையும் செய்திருந்தார்கள்.  அதில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டார்கள். அதனைத் தொடர்ந்து, யாழ்ப்பாணத்தில் 24 ஆம் 25 ஆம் திகதிகளில் இராணுவத்தினரால் தமிழர்கள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதில் 51 தமிழர்கள் உயிரிழந்தார்கள்.

விடுதலைப்புலிகளின் தாக்குதலில், உயிரிழந்த இராணுவத்தினரின் சடலங்கள் ஜீலை 24 ஆம் திகதி கொழும்பிற்குக் கொண்டு செல்லப்படவுள்ள தகவல் கொழும்பு எங்கும் பரவியது. அன்று பிற்பகலில் இருந்து கனத்தை பொது மயானத்திலும் இரத்மலானை விமான நிலையத்திலும் மக்கள் திரண்டிருந்தார்கள்.  சிங்களவர்களைத் தமிழர்கள் கொன்றுவிட்டார்கள் என்ற செய்தி கொழும்பில் பரவத்தொடங்கியது. உயிரிழந்த இராணுவத்தினரின் உடல்களைக் கொண்டுவரும் விமானம் அன்று பிற்பகல் இரத்மலானை விமான நிலையத்திற்கு வந்து சேரவிருப்பதாகத் தகவல் கிடைத்திருந்ததால் காத்திருந்த சிங்கள மக்கள் இரவு 9.30 மணிவரையில் அந்த விமானம் வரத்தாமதமானதால் ஆத்திரமடைந்தார்கள். பல்வேறு வதந்திகள் பரவவும், தமிழர்களுக்கு எதிரான சிந்தனைகள் உக்கிரம் பெறவும் அந்த விமானத்தின் தாமதம் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல அமைந்தது என்று சொல்லலாம்.

கொழும்பில் தமிழர்கள் தேடித்தேடித் தாக்கப்பட்டார்கள். அந்த நிலைமை நாடெங்கும் பரவியது. தமிழ் மக்களின் வீடுகளும், வர்த்தக நிலையங்களும் தீ வைத்துக் கொழுத்தப்பட்டன. உடைமைகள் அழிக்கப்பட்டன. சொத்துகள் சூறையாடப்பட்டன. வெலிக்கடைச் சிறைச் சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளில் 35 பேர் ஜீலை 25 ஆம் திகதியும், 18 பேர் ஜூலை 27 ஆம் திகதியும் சிறைச்சாலைக்குள் வைத்தே சிங்களக் கைதிகளால் கொல்லப்பட்டார்கள்.

1977 ஆவணி அமளி என்ற இனக்கலவர காலத்தைப் போல் அல்லாது, 1983 ஜூலை இனக்கலவரகாலத்தில் ஒவ்வொரு நாளும் அம்மாவுக்குச் செய்தி அனுப்பவும், எனது காதலியுடன் பேசவும் தொலைபேசி வசதி இருந்தது. பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரி அகதிகள் முகாமில்தான் நான் தங்கியிருந்தேன். அங்கிருந்து நடைதூரத்தில் இருந்தது நான் முன்னர் பணியாற்றிய பிரதேச அபிவிருத்தி அமைச்சு.

அங்கிருந்த மேல்நிலை அதிகாரிகள் முதல் சிற்றூழியர்கள் வரை பெரும்பாலானவர்கள் என்னோடு அன்பும் மதிப்பும் உடையவர்களாயிருந்தவர்கள். அதனால் ஒவ்வொரு நாளும் அமைச்சிற்குச் சென்று, அங்கிருந்து ஊருக்குத் தொடர்பு கொள்ள முடிந்தது. அதனால் நான் நலமாக இருக்கும் தகவல் அம்மாவுக்கு ஒவ்வொரு நாளும் கிடைப்பதால், இந்த இனக்கலவரத்தில் அம்மா உண்ணாமல், உறங்காமல் உடல் வருந்தி அல்லல்படும் நிலைமை குறைவாக இருந்தது.

இனக்கலவரம் காரணமாக, கடமைக்குச் செல்ல முடியாமல் வீட்டில் தங்கியிருந்த காலப்பகுதியில் (1977 ஆவணி அமளிக் காலத்தைப்போல) ஒவ்வொரு மாதமும் தபால் கட்டளை (Money Order ) மூலம் சம்பளப்பணத்தை எனது திணைக்களத்திலிருந்து அனுப்பிவைத்தார்கள்.

இனக்கலவரத்தால் வந்து நிற்கும் என்னை இனியும் தனியாக இருக்க விடக்கூடாது என்று எனக்குத் திருமணம் செய்து வைக்கவேண்டும் என்பது அம்மாவின் தீர்மானமாக இருந்தது. படிப்பு முடியட்டும் என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். அம்மா கேட்பதாக இல்லை. அதனால் அம்மா சொல்வதை நான் கேட்க வேண்டியிருந்தது. 1977 ஆம் ஆண்டில் இருவீட்டாரும் பேசி ஒப்புக்கொண்ட நாள் முதல் காதல் உறவைப் பேணிவரும் நானும் கோமளாவும் சேர்ந்து ஒரு முடிவெடுத்தோம். அடுத்த வருடம் திருமணம் செய்யலாம் என்றும், இப்போதைக்குப் பதிவுத் திருமணம் செய்துகொள்வது என்றும் எங்களது முடிவை அம்மாவிடமும், கோமளாவின் பெற்றோரிடமும் கூறினோம். எல்லோரும் சம்மதித்ததால், 1983 செப்டெம்பர் மாதம் 7 ஆம் திகதி எங்கள் பதிவுத் திருமணம் நடைபெற்றது. கோமளாவின் பெற்றோர், (திரு.திருமதி. சங்கரப்பிள்ளை) அதையே ஒரு திருமண விழாவைப்போல நடத்தினார்கள். 1990 ஆம் ஆண்டு ஜூலை மாதம் எங்கள் ஊருக்குள் பிரவேசித்த படையினரின் புண்ணியத்தால் (?) எங்கள் பதிவுத் திருமண விழாவின் ஒரு புகைப்படம் கூட எங்களிடம் இல்லாமல் போயிற்று. அந்த அல்லோலகல்லோலங்கள் பற்றிய விபரங்கள் தனியாக ஒரு பாகத்தில் பின்னர் வரும்.

1983 ஜூலைக் கலவரம் உலகத்தின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்தது. வடக்குக் கிழக்கிற்கு வெளியில் வாழ்ந்திருந்து உயிர் தப்பிய தமிழ் மக்கள் தத்தம் சொந்த ஊர்களுக்கு ஓடிக்கொண்டிருக்க, கொழும்பிலும் சுற்றுப் புறங்களிலும் இருந்த தமிழ் மக்களில் பலர் வெளிநாடுகளுக்கு அடைக்கலம் தேடிப் பறந்தார்கள். அதன் காரணமாக நாட்டு நிலைமையைச் சீரடைய வைக்கும் கட்டாயக் கடமை அரசாங்கத்திற்கு அவசியமாயிற்று.

மூன்றரை மாதங்களின் பின்னர், மீண்டும் நான் வேலைக்குத் திரும்பியபோது, நான் வந்திருக்கும் செய்தியறிந்து திணைக்களத்திலிருந்த உத்தியோகத்தர்களும், ஊழியர்களும் ஓடிவந்து என்னைச் சூழ்ந்துகொண்டார்கள். அவர்கள் அனைவருமே சிங்கள இனத்தவர்கள். சிலரின் கண்களில் கண்ணீர் சுரந்ததைக் கண்டபோது, மூன்று மாதங்களுக்கு முன்னர் இந்த நாட்டிலே நடந்ததென்ன, இங்கே இப்போது நடப்பதென்ன, கனவா நனவா என்று நான் வியந்துநின்றேன். எனது கடமைகளில் கைகொடுத்து உதவிய தோழியும், இன்னும் இரண்டு பெண் உத்தியோகத்தர்களும் குலுங்கிக் குலுங்கி அழுதார்கள்.  ஆனந்தத்துக்கம் என் தொண்டையை அடைத்தது.

நடைபெறாமல் போயிருந்த நான்கு பாடங்களுக்குமான பரீட்சைக்கு திகதி குறித்துக் கடிதம் வந்தது. இனக்கலவரத்தால் கொழும்பிலிருந்து தப்பியோடிய போது, அந்த நான்கு பாடங்களுக்குமான சுருக்கக் குறிப்புகளை (Short Notes) என்னுடன் எடுத்துச் சென்றிருந்தேன். ஊரில் இருந்த நாட்களில் முழுநேரமும் படிக்க முடியாமல் போயிருந்தாலும், கொண்டு சென்றிருந்த குறிப்புகளை ஐயம்திரிபறக் கற்று என்னேரமும் பரீட்சைக்குத் தயாரான நிலையிலேயே நான் இருந்தேன். அதனால், பரீட்சை அறிவிப்பு எனக்கு எவ்வித பதற்றத்தையும் தரவில்லை. உண்மையில் மகிழ்ச்சியாக இருந்தது என்றே சொல்ல வேண்டும்.

இலங்கையில், அந்தக்காலத்தில், ஒருவர் சட்டப் பட்டதாரியாக வேண்டுமெனில் அவர் கொழும்புப் பல்கலைக் கழகத்தின் சட்டபீடத்திற்குத் தெரிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். அல்லது, கொழும்புப் பலகலைக் கழகத்தில் வெளிவாரி மாணவராக (அதற்கான தகுதியிருந்தால்)   தன்னைப் பதிவு செய்து, தனியாகப் படித்துப் பரீட்சையில் சித்தி பெறவேண்டும். வேறெந்தப் பல்கலைக் கழகங்களிலும் சட்டபீடம் இருக்கவில்லை. நாவலயில் இருந்த ஒரேயொரு திறந்த பல்கலைக்கழகத்திலும் அப்போது ஆரம்பிக்கப்படவில்லை.

இந்தப் பின்னணியில், வெளிவாரி மாணவனாகப் பதிவுசெய்து, சட்ட முதற் பரீட்சையில் (First in Law) சித்தி பெற்று, சட்ட இறுதிப் பரீட்சையினை (LLB.Final) எழுதிக்கொண்டிருக்கும் போது தான், பாதி வழியில் என்னையும் பலிக்கடாவாக்கப் பார்த்த கறுப்பு ஜூலைக் கலவரம் மூண்டது. நான்காவது பாடம் எழுதி முடித்ததோடு இடைநிறுத்தப்பட்ட பரீட்சை, மிகுதியிருந்த நான்கு பாடங்களுக்கும் நடத்தப்படுவதாக கொழும்புப் பல்கலைக் கழகத்தால் அனுப்பப்பட்டிருந்த,  அனுமதி அட்டை அந்த அறிவிப்புக் கடிதத்துடன் வந்திருந்தது.

சட்ட இறுதிப் பரீட்சையில் சித்திபெற்றுச் சட்டப் பட்டதாரியாகிய ( LLB) பின்னர், சட்டத்தரணியாவதற்கு இலங்கைச் சட்டக்கல்லூரியின் இறுதிப் பரீட்சையில் தோற்றி, சித்தி பெற வேண்டும்.  காலதாமதம் செய்யாமல், அடுத்த வருடமே அதிலும் சித்திபெற்றேன். அதன் பின்னர், உயர் நீதிமன்றச் சட்டத்தரணியாக நியமிக்கப்படுவதற்கு, சிரேஸ்ட சட்டத்தரணி ஒருவரிடம் ஆறு மாதங்கள் பயிற்சி பெறவேண்டிய தேவைப்பாடு உள்ளது. அப்போது மட்டக்களப்பு, கல்முனை நீதிமன்றங்களில் மிகவும் திறமையும், பிரபல்யமும் உள்ள சட்டத்தரணியாக இருந்தவர்களில் முன்னணி வகித்த எம்.எச்.எம்.அஸ்ரஃப் அவர்களிடம் அந்தப் பயிற்சியைப் பெறுவதற்கு விரும்பினேன். அவருடன் ஏற்கனவே எனக்கு அறிமுகம் இருந்தது. என்னுடன், சட்டத்தரணி பரீட்சையில் சித்திபெற்றிருந்த நண்பர்களான, இப்பொழுது மட்டக்களப்பில் பிரபல சட்டத்தரணிகளாக விளங்கும், திரு.நாராயணபிள்ளை, திரு.மகாலிங்கசிவம் ஆகிய நாங்கள் மூவரும் அவரை அணுகிக் கேட்டபோது அவர் முழு மனதுடன் சம்மதித்தார். நாங்கள் அவரிடம் பயிற்சியைத் தொடங்கினோம்.

எம்.எச்.எம்.அஸ்ரஃப்

அவருடன் கல்முனை மாவட்ட நீதிமன்றத்திற்குள் நாங்கள் நுழையும் காட்சி இப்பொழுதும் என் மனக் கண்ணில் திரைப்படம் போலத் தோன்றுகிறது. காரிலிருந்து இறங்கிக் கமுக்கட்டுக்குள் கோப்புகளை இடுக்கிக்கொண்டு கம்பீரமாக அவர் முன்னே செல்வார். அவர் இறுமாந்து செல்வார், நாம் இறும்பூது கொள்வோம். அப்படியே நாங்கள் அவர் பின்னே சென்று நீதிமன்றத்தில் அவருக்குப் பக்கத்தில் அமர்வோம்.

இப்போதையைப் போல செல்லிடத் தொலைபேசியும், அதில் அனைத்தையும் சிக்கவைக்கும் கமெராவும் இருந்திருந்தால், அந்தக் காட்சிகளையெல்லாம் ஒரு குறும்படமாகவே எடுத்து வைத்திருந்திருப்பேன்.

இந்த இடத்தில் இன்னுமொரு நினைவைப் பகிர்ந்துகொள்வது பொருத்தமென நினைக்கிறேன்.

ஒருநாள் நாராயணபிள்ளையும் நானும் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் வீட்டில் இருந்துவரும் போது இரவு எட்டு மணிக்கு மேலாகிவிட்டது. கல்முனையிலிருந்து நாங்கள் பஸ்ஸில் வந்துகொண்டிருக்கும்போது, இடைவழியில் பஸ்ஸை நிறுத்தி அதிரடிப்படையினர் ஏறினார்கள். ஒவ்வொருவரையும் விசாரித்தார்கள். இருவரும் அருகருகே இருப்பதற்கு இடம் கிடைக்காமையால், நான் பஸ்ஸின் முன்பக்கத்திலும், அவர் பின் பக்கத்திலும் வெவ்வேறு இருக்கைகளில் அமர்ந்திருந்தோம்.

என்ன நடந்ததென்று தெரியவில்லை, அவர்களில் ஒருவன் நாராயணபிள்ளையை விசாரித்துக்கொண்டிருக்கும்போதே, துப்பாக்கியால் அவரது தலையில் அடித்திருக்கிறான். சிறிது நேரத்தில் படையினர் இறங்கிவிட்டார்கள். நாராயணபிள்ளையின் தலையில் இருந்து இரத்தம் வடிந்துகொண்டிருந்தது. அப்போது, களுவாஞ்சிகுடியில் எங்கள் வீட்டுக்கு அருகாமையிலேயே பஸ்தரிப்பு நிலையம் இருந்தது. அதனால் அவர் எங்கள் வீட்டில்தான் தனது இருசக்கர வண்டியை வைத்துவிட்டு, பஸ் எடுப்பது வழக்கம். அன்றும் அப்படித்தான்.

வீட்டுக்குச் சென்றதும் அம்மா மிகவும் பதற்றமடைந்தா. தலையில் இருந்த காயத்திலிருந்து அப்போதும் இரத்தம் கசிந்துகொண்டிருந்தது. தலையைக் கழுவி, காயத்தைத் துடைத்த பின்னர், அம்மா ஒரு மருந்தை அந்தக் காயத்தில் அப்பி விரல்களால் அமர்த்தினார். சிறிது நேரத்தில் இரத்தக்கசிவு நின்றுவிட்டது. அம்மா போட்ட அந்த மருந்து என்ன தெரியுமா? தனிக் கோப்பித்தூள்! அதன் பின்னர் எவ்வளவு சொல்லியும் கேட்காமல், நண்பர் தன் இருசக்கர வண்டியில் அவரது ஊரான போரதீவுக்குச் சென்றார்.

ஏற்கனவே பல வருடங்களாக ஆசிரியராகக் கடமையாற்றும் ஒருவர், திருமணமான ஒரு குடும்பத்தலைவர், ஒரு சட்டப்பட்டதாரி, சட்டத்தரணியாகத் தகுதி பெற்றிருப்பவர் –  இவை எவற்றையுமே கருத்தில் கொள்ளாமல் அவர் தாக்கப்பட்டிருக்கிறார் என்றால், எத்தகைய அந்தஸ்த்தில் இருப்பவர் என்றாலும், எவ்வித தவறும் செய்யாமல் இருந்தாலும், உயிருக்கு அச்சுறுத்தலை எதிர்நோக்கிக் கொண்டிருந்த ஒரு சூழ்நிலையில்தான் அன்று வாழ்ந்துகொண்டிருந்தோம் என்பதை இன்றைய சமுதாயம் அறிந்துகொள்ளவேண்டும் என்பதற்காகவே இந்த விடயத்தை இங்கு குறிப்பிட்டேன்.

அந்தப் பயிற்சிக் காலத்தின் போது மட்டுமல்லாமல், பின்னர் நான் சட்டத்தரணியாகத் தனியாகத் தொழிலாற்றிய காலத்திலும், கல்முனை நீதிமன்றத்தில் பணியாற்றிய சட்டத்தரணிகள், மூத்தவர்கள் இளையவர்கள் என்றில்லாமல் பெரும்பாலும் எல்லோருமே மிகவும் அன்புடன் பழகினார்கள். ஆதரவு காட்டினார்கள். தொழிலில் ஆற்றுப்படுத்தினார்கள்!

எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள், முழுநேர அரசியலில் ஈடுபடத் தொடங்கியிராத காலம் அது. 1980 ஆம் ஆண்டு அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் என்ற அமைப்பை அவர் ஆரம்பித்திருந்தாலும், அது ஒரு சமூக மேம்பாட்டுக்கான இயக்கமாகவே இயங்கிக்கொண்டிருந்தது. அதனால், எங்களுடன் அதிக நேரத்தைச் அவரால் செலவிடக்கூடியதாக இருந்தது. அவர் ஒரு திறமையான சட்டத்தரணி மட்டுமல்ல, அருமையானதோர் ஆசிரியரும், நற்பண்புகள் நிறைந்த இனிமையான மனிதரும் ஆவார். சட்டத்தொழிலின் பல்வேறு நுணுக்கங்களை, சிலவேளைகளில் தீவிரமான தொனியோடும், சிலவேளைகளில் நகைச்சுவை உணர்வோடும் அவர் சொல்லித்தரும் போது அற்புதமாக இருக்கும். ஆனால், அவரிடம் தொடர்ந்து பயிற்சியைப் பெற முடியாதவாறு, இடர் ஒன்று வந்து இடையிலே தடை போட்டது! அது என்ன?  

(தொடரும்)