பாவனைப் போரும் செயற்பாட்டு அரசியலும்

பாவனைப் போரும் செயற்பாட்டு அரசியலும்

— கருணாகரன் —

பலரும் கருதியதைப் போலவே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உடைந்து விட்டது. இந்த உடைவினால் தனித்து விடப்பட்டிருப்பது தமிழரசுக் கட்சியே. ஆனாலும் அது தன்னைப் பலமானதாகக் கருதிக் கொண்டிருக்கிறது. இதற்குக் காரணம், அதனுடைய வீட்டுச் சின்னமாகும். எத்தகைய நிலையிலும் மக்கள் வீட்டுச் சின்னத்துக்கே வாக்களிப்பார்கள் என்ற பலமான எண்ணம் தமிழரசுக் கட்சியினருக்குண்டு. இதுவே அவர்களுடைய தைரியமாகும். இதற்குக் காரணம், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை வீட்டுச் சின்னமாகவே மக்களிற் பலரும் அறிந்துள்ளனர். தமிழரசுக்கட்சிக்கு விடுதலைப் புலிகள் உருவாக்கிக் கொடுத்த அருமையான வாய்ப்பிது. இதனால் இளையதலைமுறையினரின் மனதில் கூட்டமைப்பு என்றால் அது வீட்டுச் சின்னம் என்ற புரிதலே உள்ளது. இன்னொன்று கிராமப்புற மக்களைப் பொறுத்தவரையில் அவர்களுக்கு கூட்டமைப்பில் ஏற்பட்டுள்ள உடைவைப் பற்றியோ, தமிழரசுக் கட்சி தனித்து விடப்பட்டிருப்பதைப் பற்றியோ எதுவுமே தெரியாது. இதெல்லாம் தமிழரசுக் கட்சிக்கு வாய்ப்பாகவே உள்ளன.

 வெளியே ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட், ரெலொ மற்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சி போன்றவை ஒன்றிணைந்து கூட்டாக நிற்கின்றன. இவையே “தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு” என்று தம்மைப் பிரகடனம் செய்துள்ளன. தமக்கான சின்னம் குத்து விளக்கு என்றும் அறிவித்துள்ளன. எதிர்காலத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை முறைப்படி பதிவு செய்யவுள்ளதாகவும் இந்த அணி கூறுகின்றது.

இருந்தாலும் இந்த அணி பெரும் சவாலை எதிர்கொண்டே உள்ளது. கூட்டமைப்பின் பெயரில் ஒரு பெரிய அணியாக இயங்கினாலும் இவர்களுடைய குத்துவிளக்குச் சின்னம் மக்களுக்குப் புதிது. இந்தப் புதிய சின்னத்தை மக்களிடம் அறிமுகப்படுத்த வேண்டும் என்றால் வீட்டுச் சின்னத்தை நிராகரிக்கச் செய்ய வேண்டும். 

கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக வீட்டுச் சின்னத்தை மக்களிடம் அறிமுகப்படுத்தி விட்டு இப்பொழுது அதை மறுதலிப்பது என்றால் அது மக்களிடம் குழப்பத்தை உண்டாக்கும். அதற்கான நியாமான காரணத்தை, தெளிவான விளக்கத்தை அடிமட்ட மக்கள் வரையில் (கிராமங்கள் வரையில்) கொண்டு செல்ல வேண்டும். அதை ஒரு பெரிய வேலைத்திட்டமாக முன்னெடுக்கவேண்டும். அணியில் உள்ள தலைவர்கள் தொடக்கம் அடிமட்ட உறுப்பினர்கள் வரையில் இதைச்செய்ய வேண்டும். அவர்கள் கிராமங்களை நோக்கிச் செல்ல வேண்டும். இதற்காகக் கடுமையாக உழைக்க வேண்டும். பொருத்தமான திட்டங்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும். தனியே ஊடகங்களை மட்டும் நம்பி இருக்க முடியாது.

ஏனென்றால், இந்தப் பிளவைக் குறித்து ஊடகங்களும் அரசியல் எழுத்தாளர்களும் இன்னும் தெளிவான நிலைப்பாட்டை எடுத்திருப்பதாகத் தெரியவில்லை. பலரும் இரண்டு தரப்பையும் அனுசரித்துப் போவதையே காணக் கூடியதாக உள்ளது.  அண்மையில் கிளிநொச்சியில் தமிழரசுக்கட்சி நடத்திய பெண்கள் நாள் நிகழ்விலும் ஆனையிறவில் நடராஜர் சிலை திறப்பின்போதும் அரசியல் எழுத்தாளரான கே.ரி.கணேசலிங்கம் கலந்து கொண்டிருந்தார். நாளைக்கு இன்னொரு நிகழ்வை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு (குத்துவிளக்கு அணி) அழைத்தால் அங்கும் இவர் செல்லக்கூடும். இதெல்லாம் அவருடைய சொந்த விருப்பமும் தெரிவுமாக இருக்கலாம். அதற்கான உரிமை அவருக்குண்டு. இப்படித்தான் பலரும் உள்ளனர். ஆனால், அரசியல் ஆய்வாளர்கள் என்று கூறிக்கொண்டு, மக்களுக்கு வழிகாட்டுகிறோம் என்று இப்படிச் செயற்பட முடியாது.

உண்மையில் எந்த அணி சரியான நிலைப்பாட்டில் உள்ளது? எது தவறாகச் செயற்படுகிறது என்பதை இவர்கள் தெளிவாக மக்களுக்குச் சொல்ல வேண்டும். மக்களுக்கு மட்டுமல்ல, சம்மந்தப்பட்ட தரப்பினருக்கும்தான். அதைச் சொல்லாத வரையில் குத்துவிளக்கு அணியினர் தாமே மக்களுக்கு உண்மை நிலவரத்தைச் சொல்ல வேண்டும்.

இதேவேளை கூட்டமைப்பில் நடந்துள்ள பிளவில் நாம் ஒரு தெளிவான பிரிகோட்டைப் பார்க்கமுடிகிறது. இரண்டு அணிகளும் மிகத் தெளிவான அரசியற் பயணப்பாதையைக் கொண்டன என்பதே அதுவாகும். தமிழரசுக் கட்சியோ எப்போதும் “பாவனைப் போர்” செய்யும் வழிமுறையைக் கொண்டது. 1960 களுக்குப் பின்னர் அது எத்தகைய போராட்டங்களையும் செய்ததில்லை. அதற்கு முன்பு செய்த சத்தியாக்கிரகப் போராட்டமே அதனுடைய ஒரே அரசியல் முதலீடாக இன்னும் உள்ளது. தவிர, உரத்துப் பேசுதலே (பாவனைப் போரே) அதனுடைய வழிமுறையாகும். இப்போது கூட கூட்டமைப்பிலுள்ள சிறிதரன், சாணக்கியன் போன்றோரே தமிழரசுக் கட்சியின் முன்னணிப் பிரமுகர்களாக உள்ளனர். இவர்களுடைய உரத்த குரலே இதற்குக் காரணம். அடுத்த நிலையில் உள்ளவர் சுமந்திரன். அவரும் பல சந்தர்ப்பங்களிலும் Politician னாக நடந்துகொள்வதற்குப் பதிலாக Police Man னாகவே நடந்து கொள்கிறார். கட்சிக்குள்ளும் மக்கள் மத்தியிலும் சுமந்திரனின் நடத்தைகள் இப்படியே உள்ளன. ஆனாலும் அவரிடமிருக்கும் மிரட்டும் தொனியே அவரை மேலெழுப்பிக் காட்டுகிறது. உண்மையில் பெரும்பாலானவர்களுக்கு இந்த மாதிரி உரத்துப் பேசுவோரே (பாவனைப் போர் வீரர்களே) விருப்பத்துக்குரியவர்களாக உள்ளனர் போலும். இல்லையென்றால் இவர்கள் எப்படி முன்னணியில் நிற்க முடியும்? இவர்களுக்குத்தான் ஊடகங்களும் முன்னுரிமை அளிக்கின்றனவே!

ஏனைய ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட், ரெலொ மற்றும் ஜனநாயகப் போராளிகள் அணியினரோ அப்படியல்ல. அவர்களைப்  பொறுத்தவரையில் அளவுக்கு அதிகமாகப் பேசுவதை விட எதையாவது உருப்படியாகச் செய்ய வேண்டும் என்று சிந்திப்பவர்கள். தொடக்கத்திலிருந்தே செயற்பாட்டு அரசியல் வழிமுறையைக் கொண்டவர்கள். மக்களுக்காகத் தம்மை அர்ப்பணிக்கும் பாரம்பரியத்தைச் சேர்ந்தவர்கள். தியாக வரலாறு இவர்களுக்கே உண்டு. மக்களுடன் நெருக்கமான அரசியல் உறவைக் கொண்டிருந்தவர்கள். (இப்பொழுது அப்படி உள்ளதா என்பது கேள்வியே) ஆனாலும் மக்களின் மீதான மெய்யான கரிசனை இவர்களை விட்டு நீங்கவில்லை. செயற்பாட்டு அரசியற் பாரம்பரியத்தைச் சேர்ந்தவர்கள் எங்கே நின்றாலும் எதையாவது செய்து தீரவேண்டும் என்ற விருப்பத்துடன் இருப்பவர்கள் என்பதற்கு மேலும் ஒரு சான்று அவர்கள் அரசாங்கத்துடன் இணைந்து நின்றாலும் சரி, வெளியே எதிர்த்தரப்பில் நின்றாலும் சரி எதையாவது மக்களுக்குச் செய்ய வேண்டும் என்று முயற்சிப்பவர்கள். ஆனால் தமிழரசுக் கட்சியினரிடம் இந்தக் குணமில்லை. அவர்கள் தங்களுடைய தேவைகள், நலன்களை மிகச் சாதுரியமாகச் செய்துகொள்வார்கள். மக்களைப் பற்றிச் சிந்திக்க மாட்டார்கள். இதை ஆதரத்துடனேயே இங்கே முன்வைக்கிறேன். எளிய, அண்மைய சான்று, கடந்த ரணில் விக்கிரமசிங்க – மைத்திரிபாலசிறிசேன ஆட்சிக் காலத்தில் அரசாங்கத்துக்கு இணக்கமாக தமிழரசுக் கட்சி செயற்பட்டது. இருந்தும் அது மக்களுக்கு உருப்படியாக எதையும் செய்யவில்லை. அப்படித்தான் முன்னரும்.

என்பதால்தான் இந்த உடைவு தவிர்க்க முடியாமல் நிகழ்ந்திருக்கிறது. இது வரலாற்று விதியின் விளைவு. பாவனைப் போர் வீரர்களும் செயல் வீரர்களும் ஒன்றாக நீண்ட காலம்  பயணிக்கமுடியாது என்பதே இதற்கான காரணமாகும். ஆகவே இந்தத் தெளிவான வரலாற்று விதியை மக்கள் புரிந்து கொள்வது அவசியம். இன்று இந்தப் பிரிகோடு துலக்கமாகி விட்டது. இனியும் எதற்காகவும் சமரசம் செய்ய முடியாது என்ற நிலையில்தான் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உடைந்தது. தமிழரசுக் கட்சி தனித்தது. தமிழரசுக் கட்சி மட்டுமல்ல, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசும்தான். அது அப்படித்தான் நிகழும். வரலாற்று விதி இதுவே.

இந்த வரலாற்று விதியை அரசியல் ஆய்வாளர்களும் ஊடகத்துறையினரும் புரிந்து கொள்வது அவசியமாகும். இப்பொழுது தாம் எந்தப் பக்கம் நிற்கிறோம் என்பதை வெளிப்படுத்திக் கொள்ளவேண்டிய ஒரு கட்டாயம் வரலாற்றின் முன்னே ஆய்வாளர்களுக்கும் ஊடகத்துறையினருக்கும் புத்திஜீவிகளுக்கும் வந்துள்ளது. இதை அவர்கள் வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும். அதாவது வெளிப்படையாகச் சொல்ல வேண்டும். இனியும் தடுமாற்றங்களுக்குள்ளாகக் கூடாது.

இது ஏறக்குறைய 1970 களில் உருவான நிலையே ஆகும். அந்தச் சூழல் மறுபடியும் இப்பொழுது வந்துள்ளது. ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்ட வெற்றிடத்தில்தான் தமிழரசுக் கட்சி மீள எழுந்தது. இருந்தாலும் அதன் செயற்பாடற்ற தன்மையும் மேட்டுக்குடி மனப்பாங்கும் அதனை மறுபடியும் தோற்கடிக்கும் நிலைக்குக் கொண்டு வந்துள்ளது. காலம் அப்படித்தான் தன் விதியைக் கொண்டிருக்கும். அதைத் தொடர்ந்தும் ஏமாற்ற முடியாது. அது தனக்குத் தேவையானதைத் தேர்ந்து கொள்ளும்.

1970 கள் வரையிலும் இலங்கைத் தமிழரசுக் கட்சியும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசும் மேற்கொண்டு வந்த “பாவனைப் போர்” அரசியல் 1970 களின் இறுதியில் வெளுத்தது. செயலின்மையை மறைப்பதற்கே இவை இனவாதத்தைப் பயன்படுத்துகின்றன. இதனால்தான் அது எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தின் காலத்திலேயே காலாவதியாகப் போக வேண்டிய நிலைக்குள்ளாகியது. “தமிழ் மக்களை இனிக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்” என்று செல்வநாயம் மக்களைப் பார்த்துக் கைவிரிக்க வேண்டிய நிலை வந்தது அதனுடைய அரசியல் முறைமையினாலேயே. இல்லையெனில் ஒரு தலைவர் தன்னுடைய மக்களுக்குச் சரியான வழியைக் காட்டுவதற்குப் பதிலாக கடவுள்தான் இனி உங்களைக் காப்பாற்ற வேண்டும் என்று கையை விரிப்பாரா? அது ஒரு தலைவருக்கும் ஒரு தலைமைக்கும் அழகாகுமா?

கடவுள் காப்பாற்ற மாட்டார். நாம்தான் மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்று எழுந்த இளைஞர் படைதான் பின்னர் வந்த காலத்தில் மக்களைப் பாதுகாத்தது. செயற்பாட்டு அரசியலை முன்னெடுக்கும் போராளிகள் எழுச்சியடைந்தனர். திட்டமிட்ட குடியேற்றங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட நில ஆக்கிரமிப்பை இளைஞர் இயக்கங்களே தடுத்து நிறுத்தின. அவைதான் தமிழ் மொழிச் சமூகத்தினருக்கு எதிரான அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலை முறியடித்துத் தாம் ஒரு புதிய நிகழ்ச்சி நிரலை உருவாக்கின. பேச்சுவார்த்தை மேசையை நோக்கி வரவேண்டிய நிர்ப்பந்தத்தை அரசாங்கத்துக்கு உருவாக்கியது போராளிகளேயாகும். மாவட்ட அபிவிருத்திச் சபையே போதும் என்ற அளவில் தம்முடைய அரசியல் கோரிக்கையை சுருக்கிக் கொண்ட  தமிழரசுக் கட்சி + தமிழ்க்காங்கிரஸ் = தமிழர் விடுதலைக் கூட்டணியை நிராகரித்து விட்டு அதற்கப்பால் பயணித்தது இளைஞர் இயக்கங்களே. அதன் விளைவே இன்றுள்ள மாகாணசபையாகும். இது கூடப் போதாதென்றே தொடர் போராட்டம் நிகழ்த்தப்பட்டது. அவைதான் தமிழ் மக்களின் பிரச்சினையை பிராந்திய, சர்வதேச மட்டத்திற்குக் கொண்டுசென்றன. போராளிகள்  உருவாக்கிய அரசியல் அடித்தளமே இன்றுள்ளதாகும். காரணம், செயற்பாட்டு அரசியலே மக்களுக்குத் தேவையாக இருந்தது. இந்த அணிகளின் வரலாற்றுத் தவறுகள் காரணமாகவும் சந்தர்ப்பவசமாகவும் தமிழரசு இதற்குள் புகுந்து நிற்கிறது. நின்றுகொண்டு தன்னை விரிவாக்கிக் கொள்ள முயற்சிக்கிறது.

 தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்குள் நடந்தது இந்த மோதல்தான் என்பது தெளிவு. செயற்பாட்டுத் தரப்பினருக்கும் பாவனைப் போர்த் தரப்பினருக்குமிடையிலான இழுபறிகள். இறுதியில் இதற்கான இடமில்லை என்ற நிலையில் தமிழரசுக் கட்சி தனித்து விடப்பட்டதும் ஏனைய அணிகள் ஒன்றிணைந்ததும் இதனால்தான். வரலாற்று விதியின்படி பொருத்தமற்றதைக் காலம் கழித்தே தீரும். அதுவே நிகழ்ந்துள்ளது. செயற்பாட்டுத் தரப்பினராகிய குத்துவிளக்கு அணியினர், தம்மைப் பலப்படுத்திக் கொள்வதற்கு கிழக்கிலும் வடக்கிலும் உள்ள மேலும் பொருத்தமான தரப்புகளை உள்ளீர்த்துக் கொள்ள வேண்டும். 

தனித்து நிற்கின்ற தமிழரசுக் கட்சியும் நீண்ட காலத்துக்குத் தாக்குப்பிடிக்கக் கூடிய நிலையில் இல்லை. ஒன்று, ஏற்கனவே சொல்லப்பட்டுள்ளதைப்போல, அது பாவனைப் போரை விட்டு எளிதில் செயற்பாட்டு அரசியலை எளிதில் முன்னெடுக்கும் என்று தெரியவில்லை. அடுத்தது, அதன் கட்டுக்கோப்பில் உள்ள தளர்வும் நோய்க் கூறுகளுமாகும். அதனிடத்தில் உள்ள அரசியல் குழப்ப நிலையும் பதவி ஆசையும் அதைச் சிதைத்தே தீரும். மாவை சேனாதிராஜா தமிழரசுக் கட்சியின் தலைவராக இருந்தாலும் அவருடைய கட்டுப்பாட்டையும் நெறிப்படுத்தலையும் இழந்த நிலையில்தான் தமிழரசுக் கட்சி உள்ளது.

இனி இதை (தமிழரசுக் கட்சியை) மக்களும் கழித்து விட வேண்டும். இல்லையேல் மக்களுக்கு அதுவே தண்டனையாகும். நீங்கள் தேவையற்ற எந்தப் பொருளை வைத்திருந்தாலும் அது கழிவாகும். கழிவு குப்பையாகவே இருக்கும். குப்பையை எரிக்க வேண்டும். அல்லது புதைத்துவிட வேண்டும். இல்லையென்றால் அதனால் உங்களுக்குப் பாதிப்பே ஏற்படும். பொருத்தமில்லை, பயனில்லை என்றால் நாமே நட்டு வளர்த்த தென்னையையோ மாமரத்தையோ நாம் வெட்டி நீக்கிவிடுவதில்லையா, அதைப்போலத்தான் தயக்கமில்லாமல் அதை நீக்கிவிட வேண்டும். இல்லையென்றால் அதனால் நமக்கே பாதிப்பு.