— தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் —
அண்மையில் இலங்கை வந்திருந்த இந்தியாவின் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (தமிழரசுக் கட்சி) பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் 19.02.2023 அன்று சந்தித்தபோது, அர்ஜுன் சம்பத் 13 வது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவிருப்பதாக இந்தியாவிடன் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருப்பதாகக் கூறிய வேளை, அதிகாரப் பகிர்வு என்பது இலங்கையின் ஒற்றையாட்சிகுள் சாத்தியமற்றது எனச் சிறீதரன் பதிலிறுத்துள்ளார்.
அப்படியாயின் இன்றைய அரசியல் சூழ்நிலையில் சிறீதரனோ அல்லது அவர் சார்ந்த தமிழரசுக்கட்சியோ அதிகாரப்பகிர்வை ஒற்றையாட்சிக் கட்டமைப்புக்குள் அல்லாது வேறு வழியில் (‘சமஷ்டி’ அரசியலமைப்புக் கட்டமைப்புக்குள்) அடைவதற்கான மாற்று வழியை வைத்திருக்கிறார்களா? எந்தவிதமான மாற்றுத் திட்டங்களோ தெளிவான அரசியல் பார்வையோ இல்லாமல் வெறுமனே தங்கள் சுயலாப அரசியலுக்காக வாயைச் சப்புவதுதான் சிறீதரன் போன்றவர்களின் வேலை.
இலங்கைத் தமிழரசுக் கட்சி தோற்றம் பெற்ற 1949 ஆம் ஆண்டிலிருந்து 1976 ஆம் ஆண்டின் வட்டுக்கோட்டைத் தமிழீழத் தனிநாட்டுத் தீர்மானம் வரை அகிம்சா வழியில் சமஷ்டிக்காகப் போராடிப்-பின்னர் 1976 ஆம் ஆண்டிலிருந்து 2009 மே 18 வரை ஆயுத வழியில் தமிழீழத் தனிநாட்டுக்காகப் போராடி எல்லாமே அழிவுகளையே அனுபவமாகத் தந்து தோல்வியைத் தழுவிய நிலையில் இறுதியில் இன்று தமிழ்த் தேசிய அரசியலானது தமிழ் மக்களைப் ‘பிச்சை வேணாம் நாயைப் பிடி’ எனும் நிலைக்குத் தள்ளி விட்டிருக்கும் நிலையில் சிறீதரனின் கூற்று யதார்த்த பூர்வமானதா? அரசியல் ஞானம் நிறைந்ததா? நடைமுறைச் சாத்தியமானதா? சும்மா ஒரு விடயத்தை இலக்கு (objective ஆக) இல்லாமல் சந்தர்ப்பத்திற்கேற்றவாறு சப்பித்துப்புவதால் (subjective ஆகவே) என்ன ஆகப் போகிறது.
தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த சிறீதரன் இப்படியென்றால், இவரை மேவும் வகையில் ‘இரு தேசம்; ஒரு நாடு’ கோஷம் போடும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எனும் பெயர்ப் பலகையுடன் திரியும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசின் தலைவர்) சிறீதரனைவிடப் பல படிகள் மேலே சென்று, அவரது கட்சியின் யாழ்ப்பாண அலுவலகத்தில் 20.02.2023 அன்று செய்தியாளர்களிடம் பேசும் போது ‘ஈழத் தமிழினம் அடியோடு நிராகரித்து வருகின்ற அரசமைப்பின் 13 வது திருத்தம்தான் தீர்வு என இந்தியா திணிக்க முயன்றால் அந்த இந்திய – இலங்கை ஒப்பந்தத்தையே கேள்விக்குட்படுத்துகிற நிலைக்கு நாங்கள் தள்ளப்படுவோம்’ என ஊளையிட்டுள்ளார்.
சிறீதரனும் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் வாக்கு வேட்டைக்காகத் தமக்குள் யார் தீவிரமான ‘போலி’ த் தமிழ்த் தேசியவாதிகள் என்று காட்டுவதற்குப் பேச்சுப் போட்டி நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எந்த உலகத்தில் இருந்து பேசுகிறார்? வரலாறு தெரியாமல் தனது வாசிக்காக உளறுகிறார். ஈழத் தமிழினம் 13 ஆவது திருத்தத்தை எப்போது அடியோடு நிராகரித்தது என்று கூறுவாரா?
இந்திய – இலங்கை சமாதான ஒப்பந்தத்தைத் தொடர்ந்து அதன் விளைவாக 1988 இல் (19.11.1988) வடக்கு கிழக்கு மாகாணங்கள் (தற்காலிகமாக) இணைந்த மாகாண சபை நிர்வாகத்தை ஏற்படுத்துவதற்கான முதலாவது தேர்தல் நடைபெற்றபோது, மாகாண சபைத் தேர்தலைப் பகிஸ்கரிக்கும்படி தமிழீழ விடுதலை புலிகள் எதிர்ப்பும் – அச்சுறுத்தலும் விடுத்ததற்கும் மத்தியில் அப்போது ஜனநாயக ரீதியில் தேர்தலிலினூடாகத் தமிழ் மக்களால் அங்கீகரிக்கப்பட்டுத் தமிழர்களின் அரசியல் தலைமையை ஏற்றிருந்த அப்போதைய தமிழர் விடுதலைக் கூட்டணிச் செயலாளர் நாயகம் அ.அமிர்தலிங்கம் மக்களுக்கு விடுத்த வேண்டுகோளை ஏற்றுத் தமிழ் மக்கள் தேர்தல்களில் பங்குகொண்டு வாக்களித்ததன் பேரில் வடகிழக்கு இணைந்த மாகாண அரசு அமைந்த வரலாறு கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்குத் தெரியாதா? தமிழ் மக்கள் பதின் மூன்றாவது திருத்தத்தை அடியோடு நிராகரித்ததாகக் கூறுவது அரசியல் முட்டாள்தனம் மட்டுமல்ல அப்பட்டமான பொய்யும் கூட.
முன்னாள் இலங்கை ஜனாதிபதி ஜே ஆர் ஜெயவர்த்தனா ஈழத்தமிழர்களின் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்காகத் தானாக மனம் விரும்பி இந்திய – இலங்கை சமாதான ஒப்பந்தத்தைக் கொண்டுவரவுமில்லை; அதில் கைச்சாத்திடவுமில்லை. ஈழத் தமிழர்களுக்கு உதவுவதற்கான இந்தியத் தலையீட்டினால்-அழுத்தத்தினால்தான் அவரால் இதில் கைச்சாத்திடப்பெற்றது என்பது முழு உலகமும் அறிந்த விடயம்.
இந்திய – இலங்கைச் சமாதான ஒப்பந்தத்தை அப்போதைய இலங்கைப் பிரதமர் பிரேமதாச எதிர்த்தார். ஜேவிபி எதிர்த்துக் கிளர்ச்சி செய்தது. திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்கா தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எதிர்த்தது. இவர்களெல்லாம் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக இதனை எதிர்த்தார்களா? இல்லை. ஆனால், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அப்போதைய பிரதமரும் பின்னாளில் (1988 இறுதியில்) ஜனாதிபதியாகவும் வந்த பிரேமதாசாவுடன் கூட்டை ஏற்படுத்திக் கொண்டு இந்திய- இலங்கை சமாதான ஒப்பந்தத்தின் விளைவான 13ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின் முறையான -முழுமையான அமுலாக்கலைச் சீர்குலைத்தது எத்துணை அரசியல் தவறானது என்பதை இன்று வரலாறு எண்பித்திருக்கிறது. பிரபாகரன் அன்று காட்டிய எதிர்ப்பு இறுதியில் பௌத்த – சிங்களப் பேரினவாத சக்திகளுக்குச் சார்பானதாக முடிந்ததே தவிர ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை பேரழிவுகளையே விட்டுச் சென்றுள்ளது.
இன்றுள்ள இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (முன்னாள் ஜனாதிபதி ஜே ஆர் ஜெயவர்த்தனாவின் மருமகன்) 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல் செய்ய உறுதி பூண்டுள்ளார். அப்போது ( 1987) ஒப்பந்தத்தை எதிர்த்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முக்கியஸ்தர்களில் ஒருவரான இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ பதிமூன்றுக்கு மேல் அதிகமாக (13+) ஆதரவு என்கிறார். ஒப்பந்தத்தை எதிர்த்த முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவின் மகனும் இன்றைய எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச ஒற்றையாட்சிக் கட்டமைப்புக்குள் 13 ஆவது திருத்தத்தின் முழுமையான அமுலாக்கலுக்குத் தனது முழுமையான ஆதரவு என்கிறார். இது நாள் வரை ஒப்பந்தத்தை எதிர்த்த ஜேவிபி இன்று 13 ஆவது திருத்தத்தின் முழுமையான அமுலாக்கலை எதிர்க்கப்போவதில்லை என அறிவிக்கிறது. இவற்றிற்கெல்லாம் ‘ஊக்கியாக’ (catalyst) இருப்பது இந்தியாதான் என்பது எல்லோருக்கும் புரிந்ததொன்றுதான்.
அதேவேளை, இனவாத மனோபாவம் கொண்ட சில பிக்குகளும் விமல் வீரவன்ச, உதய கம்மன்வில, சரத் வீரசேகர போன்ற இனவாத அரசியல்வாதிகளும் 13 ஐ எதிர்க்கிறார்கள்.
இறுதியாகக் கிடைத்த செய்தியின்படி, ‘இலங்கைக்கு சாபக்கேடான 13 ஆவது திருத்தச்சட்டத்தை 22 ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக இல்லாதொழிக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைக்கு நாம் முழுமையான ஆதரவை வழங்குவோம்’ எனப் பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்வில, சரத் வீரசேகர ஆகியோர் கூட்டாகத் தெரிவித்துள்ளனர் என அறியக்கிடக்கிறது.
இத்தகைய அரசியல் களநிலையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் பின்வரும் கேள்விகளை இப் பத்தி முன் வைக்கிறது.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களே!
நீங்கள் யார் பக்கம்? பௌத்த – சிங்களப் பேரினவாத அரசியல் சக்திகளின் பக்கமா? அல்லது உங்களுக்கு வாக்களித்த ஈழத் தமிழர்களின் பக்கமா?
மேலும், அன்றைய இந்து சமுத்திரப் பிராந்திய மற்றும் பூகோள அரசியலில் அமெரிக்காவின் நலன்களைப் பேணுவதற்கான காரணங்களுக்காக, பிரபாகரன் + பிரேமதாசா கூட்டு இந்திய இலங்கை சமாதான ஒப்பந்த அமுலாக்கலைச் சீர்குலைத்ததற்கான பின்னணியில் அமெரிக்க ஏகாதிபத்தியம் இருந்தது எனக் கூறப்பட்டது.
ஈழத் தமிழர்களிடையே 13 ஆவது திருத்தத்தின் முழுமையான அமுலாக்கலை வலியுறுத்தும் அரசியற் சக்திகளையெல்லாம் நீங்கள் (கஜேந்திரகுமார் பொன்னம்பலம்) பல இடங்களில் பல தடவைகள் இந்தியக் ‘கைக்கூலிகள்’ என வர்ணித்துள்ளீர்கள்.
அப்படியானால், இந்திய – இலங்கை சமாதான ஒப்பந்தத்தை இவ்வளவு தூரம் மூர்க்கமாக எதிர்க்கும் நீங்கள் யாருடைய ‘கைக்கூலி’?
உங்களுக்கு வாக்களித்த ஈழத் தமிழ் மக்களுக்கு இக் கேள்விகளுக்கான விடையை நேர்மையாகவும்-உண்மையாகவும்- வெளிப்படையாகவும்-துணிவுடனும் சுற்றிவளைக்காமல் வெளிச்சொல்வீர்களா?