— தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் —
காலைக்கதிர் மின்னிதழில் அதன் ஆசிரியர் எழுதிவரும் ‘இனி இது இரகசியம் அல்ல’ பத்தியில் (09.02.2023), ‘இந்திய இலங்கை ஒப்பந்தம் தமிழர்களின் பிரச்சனைக்குத் தீர்வுகாணும் நோக்கில் உருவாக்கப்பட்டது. இருப்பினும் அந்த ஒப்பந்தத்தில் அதனோடு தொடர்புபட்ட ஒரு தரப்பான தமிழர்களுக்கு எந்த வகிபாகவும் கிடையாது. ஒரு தரப்பாக அவர்கள் அந்த ஒப்பந்தத்திற்குள் உள்வாங்கப்படவேயில்லை. அதாவது தமிழர்களின் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக செய்யப்பட்ட ஒப்பந்தத்தில் தமிழர்களுக்கு இடமில்லை.‘ எனக் குறிப்பிட்டுள்ளார். இக் கூற்றின் உள்ளடக்கம் தவறானது. 1987 ஜூலை 29 இல் கைச்சாத்தான இவ் ஒப்பந்தத்தில் இலங்கைத் தரப்பில் எவரும் கையெழுத்திடவில்லையே தவிர, இந்த ஒப்பந்தத்தில் அதனோடு தொடர்புபட்ட ஒரு தரப்பான தமிழர்களுக்கு எந்த வகிபாகமும் கிடையாது என்ற ‘காலைக்கதிர்’ மின்னிதழ் ஆசிரியரின் கூற்று தவறானதாகும்.
முன்னாள் ஜனாதிபதி ஜே ஆர் ஜெயவர்த்தன தலைமையிலான இலங்கை (யூ.என்.பி.) அரசாங்கத்தின் அனுசரணையுடன் 1983 ஜூலை இல் நிகழ்ந்த தமிழர்களுக்கு எதிரான நாடளாவிய இனக்கலவரம் இந்தியாவின் தலையீட்டினால்தான் ஓடி அடங்கிற்று என்ற உண்மையை இலங்கைத் தமிழர்கள் மறக்கக்கூடாது. இக் கலவர காலத்தின்போதிருந்த இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் தன்னுடைய வெளிவிவகார அமைச்சர் நரசிம்மராவை 29.07.1983 அன்று கொழும்புக்கு அனுப்பியதன் மூலம் இந்தியாவின் நேரடி இராஜதந்திர தலையீட்டை மேற்கொண்டார். இந்த இராஜதந்திர தலையீட்டின் இறுதி விளைவுதான் இந்திய – இலங்கை சமாதான ஒப்பந்தம். இந்த ஒப்பந்தத்தில் இலங்கைத் தமிழர் தரப்பின் வகிபாகம் என்ன என்பதை வெளிப்படுத்துவதே இப் பத்தியின் நோக்கமாகும்.
1977 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் பெரும்பான்மையான வடகிழக்கு மாகாணத் தமிழர்களால் அங்கீகரிக்கப்பட்டு இலங்கைத் தமிழர்களின் அரசியல் தலைமையை ஏற்றிருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் அ. அமிர்தலிங்கம் அவர்கள் இந்திய – இலங்கை சமாதான ஒப்பந்தம் கைச்சாத்தானதன் பின்னர் ‘இந்திய – இலங்கை சமாதான ஒப்பந்தம் வந்த வரலாறு’ என்ற தலைப்பில் ஒரு கைநூலை எழுதி வெளியிட்டிருந்தார். அதில் இந்த ஒப்பந்தம் வந்ததன் பின்னணியில் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைமை ஆற்றிய வகிபாகம் விலாவாரியாக விவரிக்கப்பட்டிருந்தது. ‘காலைக்கதிர்’ மின்னிதழ் ஆசிரியருக்கு இந்த நூலைப்படிக்கும் சந்தர்ப்பம் வாய்க்கவில்லையோ அல்லது வசதிக்காகப் படிக்கவில்லையென்பதுபோல் காண்பிக்கிறாரோ தெரியவில்லை.
இது ஒருபுறமிருக்க இந்த விடயம் சம்பந்தமாக சில வரலாற்று நிகழ்வுகளை இங்கு பதிவு செய்தல் அவசியமாகிறது.
* 1983 யூலைக் கலவரத்தைத் தொடர்ந்து சென்னை சென்ற அமிர்தலிங்கம் அவர்கள் பின்னர் புதுடெல்லி சென்று இந்தியப் பிரதமர் திருமதி இந்திரா காந்தியுடனும் இந்திய வெளிவிவகார அமைச்சர் நரசிம்மராவுடனும் ஏனைய பிரமுகர்களுடனும் பேச்சு வார்த்தை மேற்கொண்டார்.
* 25.08.1983 இல் இந்திய வெளிவிவகாரக் கொள்கைகள் திட்டமிடல் கமிஷனின் தலைவர் ஜி. பார்த்தசாரதி இந்திய அரசாங்கத்தின் தூதுவராகக் கொழும்பு வந்தார். இலங்கைத் தமிழர் பிரச்சினையைத் தீர்ப்பதில் நடுவர் பணியை ஏற்றிருந்த பார்த்தசாரதி மூன்று தடவைகள் இலங்கைக்கு வந்திருந்தார்.
* 1983 நவம்பரில் பொதுநலவாய அமைப்பு நாடுகளின் மாநாடு டெல்லியில் நடைபெற்றது. இம்மாநாட்டின் முடிவில் 30.11.1983 அன்று இந்தியப் பிரதமர் திருமதி இந்திரா காந்தி அவர்கள் இலங்கை ஜனாதிபதி ஜே ஆர் ஜெயவர்த்தன, அமைச்சர் தொண்டமான், அமிர்தலிங்கம் ஆகியோருடன் பார்த்தசாரதியும் உடனிருக்க தனித்தனியே இலங்கைத் தமிழர் பிரச்சினை பற்றி விவாதித்தார். இப்பேச்சுவார்த்தைகளின் பெறுபேறுதான் பின்னாளில் இந்திய இலங்கை சமாதான ஒப்பந்தத்திற்கு அடிப்படையாக அமைந்த இணைப்பு ‘C’ என அழைக்கப்பட்ட ஆவணமாகும்.
* இதன் பின்னர் திருமதி இந்திரா காந்தியின் மரணம் சம்பவிக்கிறது. அவரின் மகன் ராஜீவ் காந்தி இந்தியப் பிரதமராகிறார்.
* இந்திய அரசாங்கத்தின் ஏற்பாட்டில் இலங்கைத் தமிழர் தரப்பில் தமிழ்ப் போராளி இயக்கங்களும் தமிழர் விடுதலைக் கூட்டணியும் கலந்து கொண்ட இலங்கை அரசு தரப்புடனான பேச்சு வார்த்தை 08.07.1985 அன்று பூட்டான் நாட்டுத் தலைநகர் திம்புவில் நடைபெற்றது. இது திம்புப் பேச்சு வார்த்தை என அழைக்கப்படுகிறது.
* இலங்கைத் தமிழர்களின் இனப்பிரச்சனைக்கான தீர்வாகத் தமிழர் விடுதலைக் கூட்டணி 1985 டிசம்பரில் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியிடம் சமர்ப்பித்த யோசனைகளை இந்திய பிரதமர் பாராட்டியதுடன், யோசனைகளை டாக்காவில் நடைபெற்ற தெற்காசிய மாநாட்டின் போது ராஜீவ்காந்தி ஜே.ஆர். ஜெயவர்த்தனாவிடம் தானே நேரில் கையளித்தார்.
* பின்னர் ஜே ஆர் ஜெயவர்த்தனா அரசியல் தீர்வு முயற்சிகளை நிராகரித்து இராணுவத் தீர்வை முன்னெடுக்கும் நோக்கில் 1987 மே யில் யாழ்ப்பாணத்தில் வடமராட்சியில் தமிழீழவிடுதலைப் புலிகளுக்கு எதிராக மேற்கொண்ட இராணுவ நடவடிக்கைகள் (ஒபரேசன் லிபரேசன்) இந்தியாவின் இராஜதந்திர மற்றும் இராணுவ நடவடிக்கைச் சமிக்ஞை (ஒபரேசன் பூமாலை) மூலமே நிறுத்தப்பட்டன. அதில் ஒன்றுதான் இந்திய விமானங்கள் இலங்கையின் வான்பரப்பிற்குள் பிரவேசித்து உணவுப் பொட்டலங்களை யாழ்ப்பாணம் வடமராட்சிப் பிரதேசத்தில் விநியோகித்த நிகழ்வு.
* இத்தகைய நிகழ்வுகளின் பின்புலத்தில் இலங்கைத் தமிழர்களால் தேர்தல்களில் அங்கீகாரம் பெற்ற தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைமையினதும் தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் ஈரோஸ் தவிர்ந்த ஏனைய போராளி இயக்கங்களினதும் ஒப்புதலுடன்தான் இந்திய- இலங்கை சமாதான ஒப்பந்தத்தில் இலங்கைத் தமிழர் தரப்பில் இராஜதந்திர அணுகு முறையுடன் இந்தியா கைச்சாத்திட்டதே தவிர, இதனை வைத்துக்கொண்டு முழுப் பூசணிக்காயைச் சோற்றுக்குள் மறைப்பது போல் இந்திய – இலங்கை சமாதான ஒப்பந்தத்தில் இலங்கைத் தமிழர் தரப்புக்கு எந்த வகிபாகமும் கிடையாது என்று ‘காலைக்கதிர்’ மின்னிதழ் ஆசிரியர் கூறுவது தவறானதும் துரதிஷ்டவசமானதுமாகும்.
பெரும்பாலான தமிழ் ஊடகங்களும் தமிழர்களிடையேயுள்ள ‘புத்திஜீவி’ களில் பெரும்பாலானவர்களும் மக்களுக்கு நேர்மையாகவும் வெளிப்படையாகவும் துணிவுடனும் உண்மைகளை எடுத்துச் சொல்லாமல் தங்களுக்கும் அல்லது தாம் சார்ந்த கட்சிகளுக்கும் இயக்கங்களுக்கும் ‘வாசி’யானவற்றையே மக்களுக்குக் கூறி வந்ததும் இலங்கைத் தமிழர்களின் இன்றைய இக்கட்டான நிலைக்குக் காரணமாகும். இலங்கைத் தமிழர்கள் இதனையும் கவனத்திலெடுத்துத்தான் தங்கள் எதிர்கால அரசியல் பயணத்தைத் திட்டமிடவேண்டும்.