— கேணல் ஆர். ஹரிஹரன் —
ரஷ்யா உக்ரைன் மீது தொடுத்த போர் துவங்கி பிப்ரவரி 24 அன்று ஓராண்டு முடிந்தது. போரின் உக்கிரம் தாற்காலிகமாக சற்று தணிந்திருந்தாலும் எவரும் சமாதானத்தைப் பற்றி பேசக்கூட தயாராக இல்லை. இத்தகைய சூழ்நிலையில், பிப்ரவரி 20-அன்று, முன்னறிவுப்பு ஏதும் இல்லாமல், உக்ரைன் தலைநகரான கியேவுக்கு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ரகசிய பயணம் மேற்கொண்டது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.
அமெரிக்க அதிபர் வழக்கமாக தனது விசேஷ விமானத்தில் பயணிப்பார். சென்ற ஆண்டு அதிபர் பைடன் உக்ரைன் போன போது அவ்விமானத்தில் போனார். அதற்கு மாறாக, இம்முறை பைடன் ரயில் மூலமாக உக்ரைன் தலை நகரை அடைந்தது போது, விமான தாக்குதலை அறிவிக்கும் சைரன்கள் ஒலித்தன. ஆனால் அத்தகைய தாக்குதல் அசம்பாவிதம் எதுவும் நிகழவில்லை. இந்த நிகழ்வு உலக ஊடகங்கள் இடையே மேலும் சலசலப்பை உண்டாக்கியது.
உக்ரைன் எல்லை நாடான போலந்துக்கு அமெரிக்க அதிபர் போகப் போவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. அப்போது அவர் அதிபர் உக்ரைன் தலைநகர் செல்வாரா என்ற கேள்விக்கு, அதற்கு அதிபரின் பாதுகாப்பு கருதி அத்தகைய பயணம் மேற்கொள்ளமாட்டார் என சில செய்திகள் கூறின. அப்படி இருக்கையில், பைடன் உக்ரைனுக்கு ரகசியப் பயணத்தை மேற்கொள்ளவே, மர்மம் மேலும் அதிகரித்தது.
பொதுவாக, ஊடகங்கள் பார்வையில் ரஷ்யா உக்ரைன் மீது தொடர்ந்து நடத்திவரும் ஏவுகணைத் தாக்குதல்களை தவிர்க்கவே அமெரிக்க அதிபரின் பயணம் ரகசியமாக மேற்கொள்ளப்பட்டது எனக்கருதப்பட்டிது. ஆனால், இப்பயணம் நிகழ்ந்த பிறகு, ரஷ்ய உளவுத்துறை அமைப்பின் இயக்குனர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் ஒரு டெலிகிராம் சேனலுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் “உண்மையில், கியேவுக்கு பைடனின் வருகையை பற்றி அமெரிக்கா ரஷ்யாவிற்கு ராஜதந்திர சேனல்கள் மூலம் அறிவித்து இருந்தது. ஆனால், நாங்கள் அவருடைய பாதுகாப்பிற்கு எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை,” என்று கூறினார்!
அப்படி ரஷ்ய உளவுத்துறை இயக்குனர் கூறினாலும், பைடன் உக்ரைன் விஜயம் செய்த அதே நாளன்று, ரஷ்யா அதன் அதி நவீன கண்டம் விட்டு கண்டம் பாயும் சர்மத் ஏவுகணையை சோதனை செய்தது. பல அணு ஆயுத போர்க்கப்பல்கள் திறனை விட வலிமை வாய்ந்த இந்த ஏவுகணைக்கு மேற்கத்திய நாடுகளில் சாத்தான் -2 (Satan II) என்ற செல்ல பெயர் உண்டு. அந்த சோதனை நடத்தப் போவதாக ரஷ்யா அமெரிக்காவுக்கு முன்கூட்டியே அறிவித்திருந்தது. அந்த ஏவுகணை முதல் முறை சோதனையில் ஏற்கனவே வெற்றி கண்டுள்ளது. அதிர்ஷ்ட வசமாக இரண்டாம் முறை நடந்த சோதனையில் ரஷ்யாவுக்கு வெற்றி கிட்டவில்லை.
ஆனால், அத்தகைய ஆபத்தான சூழ்நிலையில் அதிபர் பைடன் அந்த ரகசிய பயணத்தை மேற்கொண்டதற்கு என்ன காரணம்? வெள்ளை மாளிகையின் கூற்றுப்படி உக்ரைனின் ஆளுமைக்கும், பிராந்திய ஒருமைப்பாட்டிலும் அமெரிக்காவின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தும் நோக்கம்தான் காரணம்!
நாட்டின் அதிபர்கள் வெளிநாடுகளுக்கு ரகசிய பயணம் மேற்கொள்வது புதிதல்ல. ஆனால் அத்தகைய பயணங்களை அதிபர்கள் எத்தகைய சூழ்லைகளில் மேற்கொண்டார்கள் என்பதே முக்கியம். உதாரணமாக, சிரிய அதிபர் பஷார் அல்-அஸாத் ரஷ்ய அதிபர் புடினை சந்திக்க பலமுறை முன்னறிவுப்பு இல்லாத ரகசிய பயணங்களை மேற்கொண்டுள்ளார். அதற்கு, சிரியாவில் தொடர்ந்து வரும் உள்நாட்டு போரால் ஏற்பட்டுள்ள பாதுகாப்பற்ற சூழ்நிலையைத் தவிர, சர்வதேச அரசியல் காரணங்களும் உண்டு.
அமெரிக்க அதிபர் ரகசியமாக மற்ற நாடுகளுக்கு பயணிப்பது இது முதல் முறை அல்ல. பைடனுக்கு முன்னால் பதவி வகுத்த அதிபர்கள் பலர் அரசியல் மற்றும் ராஜதந்திர காரணங்களுக்காக அத்தகைய பயணங்களை மேற்கொண்டுள்ளார்கள். அத்தகைய பயணங்களில்கூட, அதிபரின் பாதுகாப்புக்கு குந்தகம் விளையாமல் இருக்க விசேஷ ரகசியப் படையினர் (Secret Service) எப்போதுமே தயாராய் இருப்பார்கள். தற்போது தீவிரவாதம் தலைவிரித்தாடும் உலக சூழ்நிலையில், அமெரிக்க அதிபரின் ரகசிய படையினர் விரிவாக்கப் பட்டு, 4500 ஆள் பலம் கொண்டதாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ரகசிய ப் படையினருக்கு தெரியாமல் அமெரிக்க அதிபர் வெள்ளை மாளிகையை விட்டு வெளியே போவது கூட கடினம்.
ஈராக்கின் சர்வாதிகாரி சதாம் ஹுசைன் வீழ்த்தப்பட்ட எட்டு மாதங்களுக்கு பின், அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ், நவம்பர் 2003-இல் ரகசிய பயணம் மேற்கொண்டார். அப்போது ஈராக்கில் அமெரிக்க ஆக்கிரமிப்புப் படைகளுக்கு எதிரான உணர்வு நாடெங்கும் வளர்ந்து, கிளர்ச்சியாக மாறி வந்த சூழல். அப்போது நடந்த அமெரிக்க வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவில் அதிபர் புஷ் முன்னறிவுப்பு இல்லாமல் மேடையில் தோன்றினார். ராணுவ வீரர்கள் ஆரவாரத்துடனும் கரவொலியுடனும் அவரை வரவேற்றனர். அதிபரின் அந்த முன்னறிவுப்பு இல்லாத பயணம், பாதுகாப்பை மட்டும் கருத்தில் கொள்ளாமல், ராணுவ வீரர்களை ஊக்குவிக்க மேற்கொண்ட திடீர் பயணம்.
அத்தகைய முன்னறிவுப்பு இல்லாத பயணங்கள் பலவற்றை அமெரிக்க அதிபர் ஒபாமா ஆப்கானிஸ்தான் போரின் போது மேற்கொண்டார். அது போலவே, பிரிட்டன் பிரதமர் டோனி ப்ளேரும் ஆப்கானிஸ்தானில் படையினரை சந்திக்க முன்னறவிப்பு இல்லாமல் போனார். அந்த பயணங்கள் பெரும்பாலும் தீவிரவாதிகளின் தாக்குதலை தவிர்க்கவே ரகசியமாக மேற்கொள்ளப்பட்டன.
நாட்டு தலைவர்களின் சில ரகசிய பயணங்கள் பன்னாட்டு பிரச்சினைகளில் பெரும் திருப்பம் ஏற்படுத்தியதாக சரித்திரம் கூறுகிறது. லெபனானின் பிரதமர் ஸாத் அல்-ஹரீரியின் சவுதி அரேபியாவுக்கு நவம்பர் 2017-ல் மேற்கொண்ட திடீர் பயணம் அவற்றில் ஒன்றாகும். ஹரீரி, சவுதி தொலைக்காட்சியில் தனது பிரதமர் பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்தார். மேலும், ஈரான் நாட்டை ஆதரவாளர்களால் தனது நாட்டில், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் கூறினார். அவரது பேச்சால் ஏற்கனவே புகைந்து கொண்டிருந்த சவுதி-ஈரான் உறவுகள் மேலும் சீர்குலைந்தன. அதை தொடர்ந்து, லெபானின் அரசியலில் பெரும் தாக்கம் ஏற்பட்டது. எகிப்து அதிபர் அன்வர் சதாத் 1977-ம் ஆண்டு நவம்பர் மாதம் அரேபிய நாடுகளின் பரம எதிரியாக கருதப்படும் இஸ்ரேலுக்கு ரகசிய பயணம் மேற்கொண்டார். அப்போது, இஸ்ரேல் பாராளுமன்றமான “கெனெஸ்ஸத்”தில் சதாத் ஆற்றிய உரை சரித்திர முக்கியம் வாய்ந்தது. அதில், சதாத் பாலஸ்தீனத்திற்கு நியாயம் கிடைக்கவும், அந்நாட்டில் நிரந்தர அமைதி காக்கவும்தான் இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று அறிவித்தார். இதற்கு எகிப்திலும், பல அரேபிய நாடுகளிலும் எதிர்ப்பு தோன்றினாலும், அரேபிய நாடுகளின் இஸ்ரேல் உறவில் சதாத்தின் செயல் பெரும் திருப்பு முனையாகும்.
அதிபர் சதாத் எடுத்த அந்த அமைதி காக்கும் முயற்சிக்காக அவருக்கும், அவருடன் பேச்சு நடத்திய அப்போதைய இஸ்ரேல் அதிபர் மெனகென் பிகன் அவர்களுக்கும் கூட்டாக 1978-ம் ஆண்டு உலக சமாதானத்திற்கான நோபல் பரிசு அளிக்கப்பட்டது.
ஆனால், அத்தகைய புகழ் பெற்ற சதாத்தின் ரகசிய பயணம் பதினோறு ஆண்டுகள் கழித்து அவரின் உயிருக்கே உலை வைத்தது. அதிபர் சதாத் எகிப்திய ராணுவத்தின் வெற்றி விழா அணிவகுப்பை பார்வையிடும் போது, ஓர் எகிப்திய ராணுவ அதிகாரியின் தலைமையில் நாலு பேர் கொண்ட தீவிரவாதக் குழு அவரை சுட்டுக் கொன்றது. சதாத் மேற்கொண்ட இஸ்ரேல் நல்லிணக்க முயற்சியை எதிர்த்த அந்த தீவிரவாதிகளின் தாக்குதலில், சதாத்தை தவிர மேலும் பத்து பேர் கொல்லப்பட்டனர். அந்த தாக்குதலை தொடர்ந்து எகிப்தில் ஆட்சியை கைப்பற்ற தீவிரவாதிகளின் கிளர்ச்சி வெடித்த போது, சதாக்கை அடுத்து பதவி ஏற்ற அதிபர் ஹூஸேனி முபாரக் முதல் காரியமாக ராணுவத்தை உபயோகித்து அதை ஒடுக்கினார். .
அமெரிக்க அதிபரின் உக்ரைன் பயணத்திற்கு ஒரு நாள் முன்னால் 59வது மியூனிச் பாதுகாப்பு மாநாடு ஜெர்மனியில் முடிவடைந்தது. இந்த ஆண்டு அங்கு நடந்த விவாதங்கள் உக்ரைட் போரை பற்றியதே. அதில் பல பன்னாட்டு தலைவர்களும் பங்குபெற்றனர். அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் தலைமையில் 50 பேர் கொண்ட குழு பங்குபற்றியது. கமலா ஹாரிஸ் ரஷ்யா மனிதகுலத்திற்கு எதிரி என்று குற்றம் சாட்டி, உக்ரேனிய அரசுக்கு அமெரிக்காவின் நீடித்த ஆதரவை உறுதியளித்தார். பிரிட்டிஷ் பிரதம மந்திரி ரிஷி சுனக், கியேவிற்கு பிரிட்டனின் இராணுவ ஆதரவை இரட்டிப்பாக்க உறுதியளித்தார். போரில் நீண்ட காலத்திற்கு, உக்ரைனை ஆதரிக்கும் என்று அவர்கள் அனைவரும் கூறினர்.
ஆனால் மாநாட்டின் வெளியே உக்ரைன் போரை விமர்சித்த பலர் ரஷ்யாவின் வசந்தகாலத் தாக்குதலைப் பற்றி கவலை கொண்டிருந்தனர். ஆகவே அவர்கள் போர் தொடர்ந்து நீடிப்பதை விரும்பவில்லை. மேற்கத்திய ஆதரவு தற்போதைய பொருளாதார நெருக்கத்தில் காலவரையின்றி இருக்க முடியாது என்று பலர் கருதினர். ஆகவே அதற்கு அரசியல் ஆதரவு குறையும், அதனால். நீண்ட போரில், மாஸ்கோ கை ஓங்கலாம் என்ற கருத்து மேலோங்கி இருந்தது.
ஒருவேளை அத்தகைய உணர்வுகளை உணர்ந்த, ஜெலென்ஸ்கி தனது உரையில் “உங்கள் உதவி எங்களுக்கு வேகமாக வேண்டும். நாங்கள் விரைந்து செல்ல வேண்டும்,” என்று வேண்டுகோள் விடுத்தார். ஆனால், முழுமையான தீர்வுகள் எதுவும் வெளிவரவில்லை.
ஒட்டு மொத்தமாக அதிபர் பைடன் பயணம் அவரது உள்நாட்டு அரசியலுக்கு உதவினாலும், உக்ரைனுக்கு எந்த அளவில் உதவும் என்பது விடை காணாத கேள்வியே!