ஐ.தே.க.வை மீளக் கட்டியெழுப்ப ஜனாதிபதி ரணிலால் முடியுமா?

ஐ.தே.க.வை மீளக் கட்டியெழுப்ப ஜனாதிபதி ரணிலால் முடியுமா?

— வீரகத்தி தனபாலசிங்கம் —

   தற்போதைய சூழ்நிலையில் பாராளுமன்ற தேர்தல் ஒன்று நடைபெறும் பட்சத்தில் எந்தவொரு கட்சியும் சபையில் அறுதிப்பெரும்பான்மை ஆசனங்களைப் பெறக்கூடிய வாய்ப்பு இல்லை என்று பொதுவில் ஒரு அபிப்பிராயம் நிலவுகிறது. சில அரசியல் அவதானிகளும் இதை பிரதிபலிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார்கள். அதனால் முக்கியமான அரசியல் கட்சிகளின் மக்கள் ஆதரவு நிலை குறித்து பார்வையை செலுத்துவதற்கு ஒரு தூண்டுதல் ஏற்பட்டது.

   கடந்த நூற்றாண்டில்  சுதந்திரத்துக்கு பிறகு பல தசாப்தங்களாக மாறிமாறி ஆட்சிசெய்த பிரதான அரசியல் கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் இப்போது மக்கள் ஆதரவை இழந்த கட்சிகளாகிவிட்டன. 

   சுதந்திர கட்சியை கைவிட்டு ராஜபக்சாக்கள் அமைத்த  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து வெளியேறிய அதன் முன்னாள் பிரதி தலைவர் சஜித் பிரேமதாச அமைத்த ஐக்கிய மக்கள் சக்தியும் புதிய இரு பிரதான அரசியல் கட்சிகளாக விளங்கக்கூடியதாக நாட்டின் அரசியல் கோலங்கள் மாற்றமடைந்தன. மிகவும் குறுகிய காலத்திற்குள் பொதுஜன பெரமுன கடந்த ஜனாதிபதி தேர்தலிலும் பாராளுமன்ற தேர்தலிலும் பெரு வெற்றி பெற்று ராஜபக்சாக்கள் மீண்டும் ஆட்சி வந்தனர். ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்றத்தில் ஐம்பதுக்கும் அதிகமான ஆசனங்களைக் கைப்பற்றியதை அடுத்து பிரேமதாச எதிர்க்கட்சி தலைவரானார். 

  தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்றத்தில் ஒரு ஆசனத்தைக் கூட பெறமுடியாத அளவுக்கு தேர்தல் வரைபடத்தில் இருந்து மக்களால் துடைத்தெறியப்பட்டது. அதற்கு நாடளாவிய ரீதியில் கிடைத்த இரண்டரை இலட்சம் வாக்குகளின் அடிப்படையில் ஒரேயொரு தேசியப் பட்டியல் ஆசனமே கிடைத்தது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் சுதந்திர கட்சி ராஜபக்சாக்களின் கட்சியுடன் கூட்டுச் சேராமல் தனியாக பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டிருந்தால் அதற்கு இருந்திருக்கக்கூடிய மக்கள் ஆதரவின் இலட்சணம் தெரியவந்திருக்கும்.

   ராஜபக்சாக்களை ஆட்சியில் இருந்து விரட்டிய மக்கள் கிளர்ச்சிக்கு பிறகு இப்போது பொதுஜன பெரமுனவின் மக்கள் ஆதரவு படுமோசமாக வீழ்ச்சி கண்டிருக்கிறது. அந்த கட்சியின் ஆதரவுடன் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக தெரிவான போதிலும் அதற்கு பிறகு ஐக்கிய தேசிய கட்சிக்கு மக்கள் ஆதரவில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டதற்கான அறிகுறிகளைக் காணமுடியவில்லை. 

   வரலாறு காணாத  பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்க வேறு எந்த தலைவரும் ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொள்ள முன்வராத நிலையில் சவாலுக்கு முகங்கொடுக்க விக்கிரமசிங்க துணிந்து முன்வந்ததனால் அவருக்கு கால அவகாசம் கொடுக்கவேண்டும் என்று கணிசமானளவு  மக்கள் நம்புகின்ற போதிலும், அதனால் ஐக்கிய தேசிய கட்சியின் மக்கள் ஆதரவு நிலையில் மாறுதல் ஏற்பட்டிருப்பதற்கு நம்பகமான அறிகுறியில்லை.  

அண்மையில் சில சிவில் சமூக அமைப்புக்களினால் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்புகள் பொதுஜன பெரமுனவும் ஐக்கிய தேசிய கட்சியும் மக்கள் ஆதரவில் ஐக்கிய மக்கள் சக்தியையும் ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) தலைமையிலான தேசிய மக்கள் சக்தியையும் விட மிகவும் தாழ்ந்த மட்டங்களில் இருப்பதையே வெளிக்காட்டுகின்றன.

  தற்போதைய சூழ்நிலையில் பாராளுமன்ற தேர்தல் ஒன்று நடைபெற்றால் தேசிய மக்கள் சக்திக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையில் மிகவும் நெருக்கமான போட்டி நிலவும் என்றும் அதேவேளை, இவ்விரு கட்சிகளும் கூட மொத்த வாக்குகளில் மூன்றில் ஒரு பங்கைப் பெறக்கூடிய வாய்ப்பு இல்லை என்றும் அந்த கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. இதை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்போது மக்கள் ஆதரவில் முன்னிலையில் இருக்கும் பிரதான அரசியல் கட்சிகளாக தேசிய மக்கள் சக்தியும் ஐக்கிய மக்கள் சக்தியுமே விளங்குகின்றன.

 ஜனாதிபதியும் அரசாங்கமும் பொருளாதாரத்தை மீட்டெடுக்க தற்போது சர்வதேச சமூகத்தின் உதவியுடன் முன்னெடுத்துவருகின்ற முயற்சிகள் நாளடைவில் மீண்டும் தங்களுக்கு மக்களின் ஆதரவைக் கொண்டுவரும் ஐக்கிய தேசிய கட்சியும் பொதுஜன பெரமுனவும் நம்பிக்கை வைக்கக்கூடும். ஆனால், தவறான ஆட்சிமுறையின் மூலமாக நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டுவந்த ராஜபக்சாக்களுக்கும் அவர்களை பாதுகாப்பதாக பரவலாக குற்றஞ்சாட்டப்படுகின்ற விக்கிரமசிங்கவுக்கும் எதிரான மக்களின் அதிருப்தியும் வெறுப்பும் பெரிதாக தணியும் என்று எதிர்பார்ப்பதற்கில்லை.

  மக்கள் கிளர்ச்சிக்கு வழிவகுத்த அரசியல் — பொருளாதார காரணிகள் இன்னமும் கையாளப்படாமல் அப்படியே இருக்கி்ன்றன. தவறான பொருளாதார முகாமைத்துவம், அதிகார துஷ்பிரயோகம், ஊழல் மோசடி, பொதுச்சொத்துக்கள் சூறையாடல், விரயம், சட்டத்தின் ஆட்சி சீர்குலைவு, அரசியலில் குடும்ப ஆதிக்கம் மற்றும் பொறுப்புக்கூறாமை ஆகியவையே அந்த காரணிகள்.

 உள்ளூராட்சி தேர்தல்களை நடத்துவதற்கு பணம் இல்லை என்று கூறி அரசாங்கம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு எதிராக கெடுபிடிகளை செய்கின்ற போதிலும், தேர்தல் ஒன்றுக்கு முகங்கொடுக்க ஜனாதிபதியோ ராஜபக்சாக்களோ தயாரில்லை என்பதே உண்மையான காரணம் என்பதை முழு நாடும் அறியும். மக்களின் ஜனநாயக உரிமைகளை மறுப்பதற்காக அரசாங்க இயந்திரம் முழுவீச்சில் முடுக்கிவிடப்படுகிறது.

   அதேவேளை, தங்களுக்கு மக்கள் மத்தியில் வளர்ந்திருக்கும் ஆதரவை நிரூபிப்பதற்கான ஒரு உடனடி வாய்ப்பாக உள்ளூராட்சி தேர்தல்களை நோக்கும் தேசிய மக்கள் சக்தியும் ஐக்கிய மக்கள் சக்தியும் அதை ஒத்திவைப்பதற்கு முயற்சிகளை இடையறாது முன்னெடுக்கும் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களை தீவிரப்படுத்தியிருக்கின்றன. 

உள்ளூராட்சி தேர்தலில் பொதுஜன பெரமுனவுக்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் ஏற்படக்கூடிய தோல்வி ஏற்கெனவே பதவியில் இருப்பதற்கான நியாயப்பாட்டைப் பொறுத்தவரை பெரும் சவாலை எதிர்நோக்கும் அரசாங்கத்துக்கு மேலும் நெருக்கடியைக் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

  இத்தகைய பின்புலத்தில், நாட்டில் இடம்பெறுகின்ற அரசியல் விவாதங்களை நோக்கும்போது பிரதான தேர்தல் போட்டி தேசிய மக்கள் சக்திக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையிலானதாகவே இருக்கப்போகிறது என்ற ஒரு தோற்றப்பாட்டை காணமுடிகிறது. தேசிய மக்கள் சக்திக்கு எதிரான தாக்குதல்களை நடத்தும்போது அரசாங்க தரப்பு மாத்திரமல்ல, ஐக்கிய மக்கள் சக்தியும் கூட ஜே.வி.பி.யின் ஆயுதக்கிளர்ச்சி காலப்பகுதியின் பயங்கரங்களை மக்களுக்கு நினைவுபடுத்துவதில் நாட்டம் காட்டுகின்றன. இதன் மூலம் இரு தரப்பினரும் தேசிய மக்கள் சக்தியின் வளர்ச்சியை அச்சுறுத்தலாக நோக்குகிறார்கள் என்பது தெரிகிறது.

   கடந்த காலத்தில் வழமையாக ஜே.வி.பி.யின் ஊர்வலங்களுக்கும் பேரணிகளுக்கும் ஆயிரக்கணக்கில் மக்கள் அணிதிரண்டு வந்தாலும் அந்த ஆதரவு தேர்தல்களில் வாக்குகளாக மாறுவதில்லை என்ற பழைய நிலைமை இனிமேலும் தொடரும் என்று நினைக்கமுடியாது.

   மக்கள் ஆதரவில் தேசிய மக்கள் சக்தியையும் ஐக்கிய மக்கள் சக்தியையும் விடவும் மிகவும் தாழ்ந்த நிலையில் இருக்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் பொதுஜன பெரமுனவுக்கும் அரசியல் களத்தில் இருக்கக்கூடிய எதிர்கால தகுநிலை என்ன என்ற ஒரு கேள்வி எழுகிறது.

  ஐக்கிய தேசிய கட்சியை பொறுத்தவரை பெரும்பாலும் அதன் வாக்கு வங்கி பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தியுடன் சென்றுவிட்டது என்பதை கடந்த பாராளுமன்ற தேர்தல் நிரூபித்தது. ராஜபக்சாக்களை பொறுத்தவரை மிகவும் குறுகிய காலத்தில் நாட்டின் மிகப்பெரிய கட்சியாக தாங்கள் கட்டியெழுப்பி தேர்தல்களில் சாதனை புரிந்த பொதுஜன பெரமுன இவ்வளவு சீக்கிரம் மக்களின் வெறுப்புக்குள்ளாகக்கூடிய சூழ்நிலை தோன்றும் என்று ஒருபோதும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். 

   எந்த தேர்தலை நடத்தினாலும் தாங்கள் வெற்றிபெறுவோம் என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவாசமும் அடிக்கடி கூறுவதை காணக்கூடியதாக இருக்கிறது. அவர்கள் தங்களை அதிகாரத்தில் இருந்து விரட்டிய இலங்கை வரலாறு காணாத மாபெரும் கிளர்ச்சியை மாதக்கணக்காக இரவு பகலாக நடத்திய மக்களின் உணர்வையும் விவேகத்தையும் நிந்தனை செய்கிறார்கள் என்றே கூறவேண்டும்.

  ஏற்கெனவே மக்கள் ஆதரவை இழந்துவிட்ட ஐக்கிய தேசிய கட்சி, அதன் தலைவர் ராஜபக்சாக்களுடன் அணிசேர்ந்து ஆட்சியை நடத்துகின்ற சூழ்நிலையில் — அதுவும் மக்கள் சொல்லொணா பொருளாதார இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் —   மீண்டும் மக்கள் ஆதரவைப்  பெற்று தேர்தல்களில் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெறக்கூடிய  அரசியல் சக்தியாக வெளிக்கிளம்ப முடியுமா?

   இந்த கேள்வியை, கடந்த பாராளுமன்ற தேர்தலில் கண்ட படுதோல்விக்கு பிறகு விக்கிரமசிங்கவுக்கு இருந்த மனநிலை குறித்து கட்சியின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரான நவின் த  திசாநாயக்க கடந்த வாரம் வெளியிட்ட தகவலுடன் பொருத்திப்பார்க்க வேண்டியிருக்கிறது.

   அந்த தோல்வியை அடுத்து கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்து விலகியவர் திசாநாயக்க. கொழும்பு ஆங்கிலப் பத்திரிகையொன்றுக்கு கடந்த செவ்வாய்க்கிழமை நேர்காணலொன்றை வழங்கிய அவர் பெரும் அவமானத்தை ஏற்படுத்திய தேர்தல் தோல்விக்குபிறகு அரசியலில் ஐக்கிய தேசிய கட்சியின் பொருத்தப்பாடு குறித்து மூத்த உறுப்பினர்களுடன் விக்கிரமசிங்க பல தடவைகள் ஆராய்ந்ததாகவும் கட்சியை கலைத்துவிடுவது குறித்து யோசனையை முன்வைத்ததாகவும் கூறியிருந்தார்.

  “ஆனால் கட்சி தொடர்ந்தும் இயங்கவேண்டும் என்று உறுப்பினர்கள் வலியுறுத்தினர். கடந்த பாராளுமன்ற தேர்தலில் கணிசமான ஆதரவாளர்கள் எமது கட்சிக்கு வாக்களிக்கவில்லை. அந்த வாக்குகளை மீண்டும் பெறமுடியும் என்ற உறுதியான நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஜனாதிபதி ஒரு நல்ல தலைவர். அவர் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஒரு சொத்து” என்றும் அவர் கூறினார்.

  பொதுஜன பெரமுன அரசியலில் தப்பிப்பிழைப்பதற்காக விக்கிரமசிங்கவை பயன்படுத்துகிறதா என்று கேட்கப்பட்டபோது “அவருக்கு இருக்கும் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்போது எவரும் அவரை பயன்படுத்த முடியாது. மாறாக அவர்தான் மற்றவர்களை பயன்படுத்துவார்” என்று திசாநாயக்க பதிலளித்தார்.

   இத்தகைய தகவல் வெளிவருவது இதுவே முதற்தடவை. இதற்கு முன்னர்  ஐக்கிய தேசியகட்சியை சேர்ந்த எவரும் இவ்வாறு கூறியதில்லை. கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு இரண்டரை வருடங்கள் கடந்த நிலையில் வெளியாகியிருக்கும் தகவல் நிச்சயமாக ஜனாதிபதிக்கு அரசியல் ரீதியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதே தவிர எந்த அனுகூலத்தையும் தருவதற்கில்லை.

   ஒருவேளை மீண்டும் கட்சியை பலமுடையதாக கட்டியெழுப்பக்கூடிய ஆற்றல் உள்ளவர் விக்கிரமசிங்க என்று உறுப்பினர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்காக திசாநாயக்க அவ்வாறு கூறியிருக்கக்கூடும். ஆனால் இலங்கையின் பழம்பெரும் கட்சியை கலைப்பது குறித்து யோசனை முன்வைக்கக்கூடிய அளவுக்கு கட்சியின் எதிர்காலம் குறித்து நம்பிக்கையற்றவராக அதன் தலைவர் இருந்தார் என்பது அவரின் ஆளுமைக்கு பெரிய இழுக்கு என்பதில் சந்தேகமில்லை.

   திசாநாயக்கவின் தகவல் குறித்து இதுவரையில் ஜனாதிபதியோ அல்லது கட்சியின் முக்கிய உறுப்பினர்களோ கருத்து எதையும் வெளியிட்டதாக இல்லை.

   ஐக்கிய தேசிய கட்சியின் வேறு எந்த தலைவரும் விக்கிரமசிங்கவை போன்று மிக நீண்டகாலம் தலைமைப் பொறுப்பில் இருந்ததில்லை. அடுத்த வருடத்துடன் அவர் கட்சியின் தலைவராகி முப்பது வருடங்கள் நிறைவடையப்போகிறது.

   அவரின் தலைமைக் காலத்தில் கட்சி ஒருபோதும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற முடியவில்லை. இரு தடவைகள் தோல்வி கண்ட அவர் அடுத்த இரு ஜனாதிபதி தேர்தல்களில் எதிரணியின் பொது வேட்பாளர்களையே ஆதரித்தார். இறுதியாக நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவை எதிர்த்து களமிறங்குவதற்கு சஜித் பிரேமதாச துணிச்சல் கொண்டாரே தவிர விக்கிரமசிங்க அதை நினைத்தும் பார்க்கவில்லை. 

  ஆனால், அரசியல் அதிசயமா அல்லது விசித்திரமா என்னவென்று கூறமுடியவில்லை விக்கிரமசிங்கவிடம் இருந்து கால்நூற்றாண்டு காலமாக நழுவிக்கொண்டு வந்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை கடந்த வருடத்தைய மக்கள் கிளர்ச்சியை அடுத்து தோன்றிய அரசியல் சூழ்நிலை அவர் வசமாக்கியது. எந்த ராஜபக்சாக்களின் அரசியல் அவரை சிங்கள மக்கள் மத்தியில் ஆதரவு இல்லாத ஒரு தலைவராக்கியதோ அதே ராஜபக்சாக்கள் அவரை ஜனாதிபதியாக்கி தங்களுக்கு பாதுகாப்பை தேடிக்கொண்டார்கள்.

   ஆனால், பாராளுமன்ற தேர்தலில் கண்ட படுமோசமான வரலாற்று தோல்வியில் இருந்து ஐக்கிய தேசிய கட்சியை மீட்டெடுப்பதற்கு தனது தற்போதைய அதிகார நிலையை பயன்படுத்துவதில் விக்கிரமசிங்க குறியாக இருப்பார் என்றபோதிலும் ராஜபக்சாக்களுடனான கூட்டு அவருக்கு உண்மையில் ஒரு பெரிய அரசியல் சுமையாகவே இருக்கும். ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டு சேருவதற்கு, தவறான ஆட்சிமுறை காரணமாக நாட்டு மக்களால் வெறுக்கப்பட்டு அபகீர்த்திக்குள்ளான ராஜபக்சாக்களை தவிர வேறு எவருமில்லை.

   விக்கிரமசிங்கவின் முப்பது வருடகால தலைமைத்துவம் விகிதாசாரப் பிரதிநிதித்துவ தேர்தல் முறையின் கீழ் கூட ஐக்கிய தேசிய கட்சியை பாராளுமன்றத்தில் ஒரு ஆசனத்தை பெறமுடியாத கட்சியாக அரசியல் வனாந்தரத்தில் விட்டது. கட்சிக்குள் அவரின் தலைமைத்துவத்துக்கு எதிராக இடையறாக உட்கிளர்ச்சிகள் மூண்டதைப் போன்று அதன் முன்னைய எந்தவொரு தலைவரும் நெருக்கடியைச் சந்தித்ததில்லை.

  தேசியப்பட்டியல் மூலமாக கிடைத்த ஒரு ஆசனத்தை பயன்படுத்தி அதுவும் பத்து மாதங்கள் கழித்து பாராளுமன்றத்துக்கு வந்த விக்கிரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பிறகு கடைப்பிடித்து வருகின்ற கொள்கைகளும் அணுகுமுறைகளும் ஒரு லிபரல் ஜனநாயகவாதியாக முன்னர்  நோக்கப்பட்ட நிலையில் இருந்து அவரை அதிகாரத்தை தக்கவைப்பதற்காக ஜனநாயக விரோத செயல்களில் ஈடுபடுகின்ற ஒரு எதேச்சாதிகாரியாக்கியிருப்பதை காண்கிறோம்.

  இறுதியாக, தற்போதைய பாராளுமன்றம் தெரிவு செய்யப்பட்டு இரண்டரை வருடங்கள் நிறைவடைந்த நிலையில் கடந்த மாதம் 20 ஆம் திகதி பாராளுமன்றத்தை எந்த நேரத்திலும் கலைத்து புதிய பொதுத் தேர்தலை அறிவிக்கக்கூடிய அரசியலமைப்பு ரீதியான அதிகாரத்தை அவர் பெற்றிருக்கிறார்.

  பொதுத்தேர்தலில் மக்கள் தெரிவின் மூலம் ஒரு ஆசனத்தைக் கூட பெறமுடியாத கட்சியின் தலைவர் இப்போது அந்த தேர்தல் மூலம் தெரிவான பாராளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரத்தை பெற்றிருக்கும் விசித்திரத்தைக் காண்கிறோம்.

  (நன்றி ; ஈழநாடு )