~~~ ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி ஜயம்பதி விக்கிரமரத்ன ~~~
(தமிழில் – வி.சிவலிங்கம்.)
(சமீப காலமாக இலங்கை அரசியலில் 13வது திருத்த அமுலாக்கம் குறித்த விவாதங்கள் அதிகரித்துள்ளன. ஒரு புறத்தில் நாட்டின் பொருளாதாரம் பாதித்துள்ள வேளையில் இந்திய உதவிகளை நோக்கி இலங்கை அரசு தவிர்க்க முடியாத அளவுக்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்த நிலமைகளைப் பயன்படுத்தி இலங்கையின் இனப் பிரச்சனையில் காத்திரமான மாற்றங்களை நோக்கி குறிப்பாக அரசியல் அமைப்பின் 13வது திருத்த அமுலாக்கத்தின் அவசியத்தை இலங்கை அரசிற்கும், தமிழர் தரப்பிற்கும் இந்தியா உணர்த்தி வருகிறது. இதேவேளை இனவாத சக்திகளும் இம் மாற்றங்களைத் தடுக்க அணி திரண்டு வருகின்றன. இப் பின்னணியில் 13வது திருத்த அமுலாக்கத்தினைச் சாத்தியப்படுத்த எடுக்க வேண்டிய சில அடிப்படைகள் குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றில் வெளியான கட்டுரை இதுவாகும். தமிழில் – வி. சிவலிங்கம்.)
’13வது திருத்த அடிப்படையில் அரச காணிகளைப் பயன்படுத்துவது தொடர்பான தேசியக் கொள்கையை உருவாக்குவதற்குப் பொறுப்பான தேசிய காணி ஆணையத்தை அரசாங்கம் நிறுவுதல் வேண்டும். இந்த ஆணைக்குழுவில் அனைத்து மாகாண சபைகளினதும் பிரதிநிதிகளும் உள்ளடக்கப்படுவர். காணி ஆணையம் சகல மாகாணசபைகளினதும் பிரதிநிதிகளை உள்ளடக்கும் விதத்திலான தொழில்நுட்ப பொறிமுறைகளைக் கொண்டிருக்கும். இயற்கை வளங்களை மேம்படுத்தும் வகையிலான சமூக பொருளாதாரக் காரணிகளை மதிப்பீடு செய்வதற்குத் தொடர்புடைய துறைகள், தேசிய கொள்கை வகுப்பு, நிலம், அதன் பயன்பாடு போன்றவை தொடர்பான தொழில்நுட்ப அம்சங்களையும் உள்ளடக்கிய செயலகத்தையும் கொண்டிருக்கும். ஆனால் இவற்றில் அரசியல் அல்லது இனவாத அம்சங்கள் எதுவும் இருக்கமாட்டா.’
13வது அரசியல் யாப்புத் திருத்தம் விளிம்பு நிலை நிர்வாகங்களுக்கு அதிகாரப் பகிர்வினை அறிமுகப்படுத்தியது. இவ்வாறான செயற்பாடு அவற்றை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்த விவாதங்களே மீண்டும் செய்திகளாக வெளிவருகின்றன. ஜனாதிபதி விக்ரமசிங்க முதலில் விவாதங்களை ஆரம்பித்தார். பல்வேறு தரப்பினரிடமும் 13வது திருத்தத்தினை மேலும் முன்னேற்றும் வகையிலான மாற்றங்கள் அவசியமா? அதாவது 13 பிளஸ் குறித்து வினவினார். அப்போது அதிகார பரவலாக்கத்தினை ஆதரிப்பவரான சமகி ஜன பலவேகய கட்சியைச் சார்ந்த லக்ஸ்மன் கிரியெல தமது கட்சி அதனை ஆதரிப்பதாகக் கூறிய அதே வேளை ஜனாதிபதியின் சட்டவாக்க நிகழ்ச்சி நிரலுக்குத் தேவையான நாடாளுமன்றப் பெரும்பான்மையை மகிந்த ராஜபக்ஸ தலைமையிலான பொதுஜன பெரமுன வழங்குமா? என ஜனாதிபதியிடம் வினவினார். இவ்வாறாக ஜனாதிபதி மற்றும் கிரியெல்ல அழுத்தங்கள் கொடுத்த போது 13வது திருத்தத்தினை மேலும் மேம்படுத்துவதாக இந்தியாவுக்கு உறுதியளித்த மகிந்த ராஜபக்ஸ மிகவும் தயக்கத்துடன் எழுந்து 13 பிளஸ் என்றார்.
தேசியப் பிரச்சனைக்கான அரசியலமைப்புத் தீர்வொன்றில் ஒருமித்த கருத்தைப் பெறவதற்கு ஜனாதிபதி விக்ரமசிங்க மேற்கொண்ட முயற்சி சாத்தியப்படவில்லை. பொதுஜன பெரமுனவினர் தமது சிங்கள தேசியவாத தளத்திலிருந்து இறங்கி வரத் தயாராக இல்லை. ஒரு நீண்டகாலத் தீர்வுக்கான வாய்ப்புகள் சாத்தியமில்லை என உணர்ந்த ஜனாதிபதி பொதுஜன பெரமுனவின் ஆதரவைத் திரட்டும் நோக்கில் 13வது திருத்தத்தினை முழமையாக அல்லது சிறிய மாற்றங்களுடன் அமுல்படுத்தும் வகையில் தனது உத்தியை மாற்றியுள்ளார்.
அனைத்து கட்சித் தலைவர்களின் மாநாட்டின் முன்னைய கூட்டங்களில் கலந்து கொண்ட பல எதிர்க் கட்சிகள் ஜனவரி 27ம் திகதி நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் தவிர்த்தன. சமகி ஜன பலவேகய கட்சியினர் இக் கூட்டம் வெறும் ‘பேச்சு நிகழ்ச்சி’ எனத் தெரிவித்தது. அதன் கூட்டிலுள்ள இன்னொரு கட்சி மலையகத் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் ஜனாதிபதி எதனையும் கருத்தில் கொள்ளவில்லை என தமிழர் முற்போக்கு கூட்டணியினர் தெரிவித்தனர். சமகி ஜன பலவேகய இல் உள்ள இன்னொரு முஸ்லீம் கட்சியினர் அதில் கலந்துகொண்டனர். தேசிய மக்கள் சக்தி கட்சியினர் அதற்கு ஆதரவளித்தாலும் கொள்கை அளவில் 13வது திருத்தத்தினை முழுமையாக அமுல்படுத்துவது தொடர்பான ஜனாதிபதியின் அறிக்கை நம்பத் தகுந்ததாக இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூர்ய தெரிவித்தார்.
13வது திருத்தத்தின் நடைமுறைப்படுத்தப்படாத பகுதிகள், சட்டம், ஒழுங்கு (பொலீஸ் அதிகாரங்கள்) மற்றும் காணி போன்றவற்றை இணைக்க கடந்த 35 வருடங்களாகச் செயற்பட்ட அரசாங்கங்கள் மாகாணசபைகளுக்கு உரித்தான பல பகுதிகள் மற்றும் செயற்பாடுகளை மீளப்பெற்றுள்ளன. அவற்றில் விவசாய சேவைகள் ஒன்றாகும். 2013ம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட ‘திவிநெகும’ சட்டமானது அரசிடமிருந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பயன்படுத்தி கிராமிய அபிவிருத்தி தொடர்பான பல செயற்பாடுகள் மீளப் பொறுப்பேற்கப்பட்டதால் மத்திய அரசின் ஊடுருவல் என்பது அதன் உச்சமாக அமைந்தது.
அரசியலமைப்பு மற்றும் சட்ட மாற்றங்கள்
தேசிய காணி ஆணைக்குழு உருவாக்கப்படுவதன் அவசியத்தை ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார். இது 13வது திருத்த அமுலாக்கத்திற்குத் தேவையானதாகும். ஆனால் தொடர்ந்து வந்த அரசாங்கங்கள் அதனை மேற்கொள்ளவில்லை. மாகாண பொலீஸ் ஆணைக்குழுக்களைத் தொடர்வதா? அல்லது மாகாண பொலீசாரை தேசிய பொலீஸ் ஆணைக்குழுவின் கீழ் கொண்டுவருவதா? என்பது சம்பந்தமாக தீர்மானம் எடுக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டிருந்தார். தேசிய பொலீஸ் ஆணைக்குழுவின் கீழ் கொண்டு வருவதாயின் அவ்வாறான முயற்சி அதிகாரத்தை மையப்படுத்துவதாகவே அமையும். அது 13 மைனஸ் என்றே கருத வேண்டும். இது அதிகார பகிர்வுக்கு ஆதரவான சக்திகளுக்கு ஏமாற்றத்தையே ஏற்படுத்தும்.
13வது திருத்தம் கொண்டு வரப்பட்ட போது தேசிய பொலீஸ் ஆணைக்குழு இருக்கவில்லை. பொலீஸ் சேவையிலிருந்தவர்களின் நியமனங்கள், இட மாற்றங்கள் போன்றன பொதுச் சேவை ஆணைக்குழுவினால் கையாளப்பட்டன. பொதுச் சேவை ஆணைக்குழுவின் முடிவுகளை ரத்துச் செய்யும் அதிகாரம் அமைச்சர்களின் அமைச்சரவைக்கு உள்ளது. 13 வது திருத்தத்தின் மூலம் வழங்கப்பட்ட தேசிய பொலீஸ் ஆணைக்குழு மற்றும் மாகாண பொலீஸ் ஆணைக்குழுக்களை அமைப்பதற்கு 1990 ம் ஆண்டின் பொலீஸ் ஆணைக்குழுச் சட்டம் 13வது திருத்தத்தின் கீழ் மாகாண பொலீஸ் ஆணைக்குழுவில் பிரதிப் பொலீஸ் மா அதிபர், பொதுச் சேவை ஆணைக்குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட ஒருவர் ஜனாதிபதியுடன் கலந்தாலோசித்து முதலமைச்சரால் நியமனம் பெற்றவர் ஆகியோர் அடங்குவர். 13வது திருத்தம் முதல் 17வது, 19வது திருத்தங்களின் மூலம் ஒரு தேசிய பொலீஸ் ஆணைக்குழு நியமிக்கப்பட்டதும் இப்போது அரசியலமைப்பு சபையின் பரிந்துரையின் அடிப்படையில் ஜனாதிபதி அதன் உறுப்பினர்களை நியமிக்கிறார். இந்த மாற்றங்கள் மாகாண பொலீஸ் ஆணைக்குழுக்களிலும் பிரதிபலிக்கப்பட வேண்டும் என இக் கட்டுரையாளர் கருதுகிறார்.
மாகாண பொலீஸ் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் முதலமைச்சரால் கூட்டாக வழங்கப்பட்ட நியமனங்களைப் பரிசீலித்து அரசியலமைப்பு சபையால் பரிந்துரைக்கப்பட வேண்டும் என கடந்த நாடாளுமன்றத்தின் அரசியலமைப்புப் பேரவையின் சட்டம் மற்றும் ஒழுங்குக்கான உப குழு பரிந்துரைத்துள்ளது. அத்துடன் அந்தந்த மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் அரசியலமைப்புச் சபையின் பரிந்துரையின் பேரில் ஆளுனரால் நியமிக்கப்படும் மாகாண பொலீஸ் ஆணைக்குழு ஒரு சிறந்த வழிமுறை என்பதையும் இக் கட்டுரையாளர் சமர்ப்பிக்கின்றார். இது பொது மக்களிடமிருந்து வேட்பு மனுக்களைக் கோர வேண்டும் மற்றும் முதலமைச்சர் மற்றும் தலைவருடன் கலந்தாலோசிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட மாகாண எதிர்க்கட்சியின் அத்தகைய மாற்றத்திற்கு அரசியலமைப்பு மாற்றம் தேவைப்படலாம்.
13வது திருத்தத்தின் பிரகாரம் அரச காணிகளைப் பயன்படுத்துவது தொடர்பான கொள்கையை உருவாக்குவதற்குப் பொறுப்பான தேசிய காணி ஆணையத்தை அரசாங்கம் நிறுவ வேண்டும். இந்த ஆணைக்குழுவில் அனைத்து மாகாண சபைகளின் பிரதிநிதிகளும் உள்ளடங்குவர். இயற்கை வள மேலாண்மைக்கும் மற்றும் சமூக-பொருளாதார காரணிகளை மதிப்பீடு செய்வதற்குத் தேவையான அனைத்து தொடர்புடைய துறைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழில்நுட்ப செயலகத்தை ஆணையம் கொண்டிருக்கும். தேசியக் கொள்கை, காணி, பயன்பாடு பற்றிய தொழில்நுட்ப அம்சங்களைக் கொண்டிருக்கும். ஆனால் அரசியல் மற்றும் இனவாத அம்சங்கள் அங்கு இருக்கமாட்டா. மண், காலநிலை, மழைவீழ்ச்சி, மண் அரிப்பு, வன வளர்ப்பு, சுற்றுச் சூழல் காரணிகள், பொருளாதார வாய்ப்புகள் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு நிலத்தின் பயன்பாடு தொடர்பான பொதுவான விதிமுறைகளை ஆணையம் வகுக்கும். மாகாண சபைகள் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தும் போது தேசிய காணி ஆணைக்குழுவினால் உருவாக்கப்பட்ட தேசியக் கொள்கையை உரிய முறையில் மதித்தல் வேண்டும். தேசிய காணி ஆணையத்தின் அமைப்பு முதலியவற்றை அரசியல் யாப்பு கொண்டிருக்கவில்லை. எனவே ஆணைக்குழு அமைப்பது சாதாரண சட்டமாக அமைதல் வேண்டும்.
பரந்த ஒருமித்த பார்வை
ஜனாதிபதி விக்ரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ மற்றும் அவருக்கு அருகில் அமர்ந்திருந்த பிரதமர் தினேஷ் குணவர்த்தன ஆகியோர் 13வது திருத்தத்தினை முழுமையாக அமுல்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக சர்வ கட்சி சபையில் தெரிவித்தனர். ஜனாதிபதி விக்ரமசிங்க நம்பிக்கையுடன் தெரிவிப்பது போல் அவரது முயற்சிகளுக்கு அமைச்சரவையின் ஆதரவும், பொதுஜன பெரமுனவின் ஆதரவும் இருந்தால் 13வது திருத்தத்தினை முழுமையாக அமுல்படுத்துவது நிச்சயமாகச் சாத்தியமாகும். ஆனால் இப்பிரச்சனையில் எதிர்க் கட்சிகளையும் ஜனாதிபதி அணுகுவது அவசியம். சுமகி ஜன பலவேகயவினர் அதிகாரப் பகிர்வைத் தேசியப் பிரச்சனைக்குத் தீர்வாக கருதுகின்றனர். சஜீத் பிரேமதாஸவின் ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனம் பிரிக்கப்படாத மற்றும் பிரிக்க முடியாத இலங்கைக்குள் அதிகபட்ச அதிகாரப் பகிர்வினை உறுதியளித்தனர். 1994 இல் பிரேமதாஸ தமிழ், முஸ்லீம் மற்றும் மலையக தமிழர் அதிகமுள்ள பகுதிகளில் அதிக ஆதரவைப் பெற்றிருந்தார். 1994 இல் ஜனாதிபதி குமாரதுங்கவினால் பெற்ற ஆதரவுக்கு அடுத்தபடியாக அதிக சதவீதத்தில் அவர்களின் வாக்குளைப் பெற்றதோடு முஸ்லீம் மற்றும் மலையக மக்கள் அதிகாரப் பகிர்வினை ஆதரிக்கின்றனர். ஆனால் ஜனாதிபதி இம் மக்களைப் பாதிக்கும் அம்சங்கள் குறித்து அவர்களுடன் பேச வேண்டும்.
புதிய ‘ஹெலிகொப்டர்’ கூட்டணியால் 13வது திருத்தம் குறித்து ஒருமித்த நிலைப்பாட்டை எடுக்க முடியவில்லை. சந்திரிகாவின் அதிகார பகிர்வு பிரச்சாரத்தில் டல்லஸ், டிலான் பெரேரா ஆகியோர் முன்னணியில் செயற்பட்டனர். பேராசிரியர் ஜி எல் பீரிஸ் அவரது அதிகாரப் பகிர்வு முன்மொழிவுகளின் வடிவமைப்பாளராக இருந்தார். திஸ்ஸ விதாரண சர்வ கட்சி மாநாட்டின் செயல் முறை மூலம் தேசியப் பிரச்சனையில் ஒருமித்த கருத்தைப் பெறுவதில் பாராட்டத்தக்க பணி புரிந்தார். ‘உத்தர சபை’ இலுள்ள இடதுசாரிகள் அதிகாரப் பகிர்வினை வலுவாக ஆதரிப்பவர்களாகும். அதே சமயம் அவர்களின் தேசியவாதக் கூட்டாளிகள் அதற்கு எதிராக உள்ளனர். முன்னாள் ஜனாதிபதி சிறிசேன சர்வ கட்சி கூட்டத்தில் 13வது திருத்தத்தினை நடைமுறைப்படுத்த ஆதரவு தெரிவித்துப் பேசினார். ஜே.வி.பி மற்றும் என்.பி.பி இனர் 13வது திருத்த அமுலாக்கல் முயற்சிகளை எதிர்ப்பதற்கான வாய்ப்புகள் இல்லை.
13வது திருத்தத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதியால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நோக்கங்களை இலகுவாக நடைமறைப்படுத்த முடியும் என இலகுவில் கருத முடியாது. சிங்கள தேசியவாதிகள், ‘உத்தர சபை’ இன் சக்திகள் 13வது திருத்தத்தினை முழுமையாக அமுல்படுத்துவதற்கு எதிராக ஏற்கெனவே போர் முழக்கத்தை ஆரம்பித்துள்ளனர். மேலும் ஏனைய அனைத்து பொதுஜன பெரமுன கூறுகளும் முன்மொழியப்பட்ட மாற்றங்களை ஆதரிப்பதில் ஆர்வமாக இல்லை. அவர்களுடன் நாடாளுமன்றத்திற்கு வெளியே சிங்கள திவிரவாதிகளும் இணைந்து கொள்வது உறுதி. 13வது திருத்த்திற்கு எதிரான சக்திகள் நாட்டில் நிலவும் பொருளாதாரச் சீர்கேடுகளைக் காரணமாக வைத்து மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்த முயற்சிக்கும் இச் சூழலில் தற்போதைய முயற்சியின் உண்மைத் தன்மையையும் அதற்கான வாய்ப்புகளையும் அரசாங்கம் மக்களுக்கும், எதிர்க் கட்சிகளுக்கும் உணர்த்த வேண்டும். தீவிரவாதிகள் ‘பிரிவினைவாத’ கருத்துக்கைளை உயர்த்த இடமளிக்காமல் இருக்க விக்ரமசிங்கவும், அரசாங்கமும் இவ் விவாதங்களுக்கு நேராக முகம் கொடுத்துப் பதிலளிக்கவேண்டும். காளையை அடக்க வேண்டுமாயின் அதன் கொம்புகளைப் பற்றிக் கொள்ள வேண்டும். அதிகார பரவலாக்கத்தின் மூலம் அதிகாரப் பகிர்வின் அவசியம் குறித்த விபரங்களை மக்களுக்கு வழங்க வேண்டும். இது இனப் பிரச்சனைக்கான தீர்வு மட்டுமல்ல, விளிம்பு நிலை நிர்வாகங்களின் வளர்ச்சிக்கும் அவசியம். தற்போது காணப்படும் சக்திகளின் உள்ளிணைவை அவதானிக்கும் போது தற்போதைய அரசாங்கத்தால் தன்னிச்சையாக அதனைச் செய்ய முடியாது. எனவே பரந்த ஒருமித்த கருத்தை உருவாக்குதல் அவசியமாகும்.