— தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் —
சியாம் நிகாயா, ராமன்ஞ நிகாயா, அமரபுர நிகாயா ஆகிய பீடங்களின் மூன்று மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை 02.02.2023 அன்று சந்தித்து 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்தக் கூடாது என்று எழுத்தில் வலியுறுத்தியுள்ளனர்.
1987-இல் இலங்கைப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இப் 13 ஆவது திருத்தச் சட்டம் கடந்த 35 வருடங்களாக இலங்கை அரசியலமைப்பின் ஓர் அங்கமாக அமுலிலிருந்தே வருகிறது. அது முழுமையாக அமுல்படுத்தப் படவில்லையென்பதே பிரச்சினை. ஆனால் அது அமுலில்தான் இருந்தது. அதனால் இலங்கை நாட்டின் சுயாதீனத் தன்மை, ஒருமைப்பாடு, தேசிய பாதுகாப்பு என்பவற்றிற்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.
அப்படியிருக்கும் போது, 13 ஆவது திருத்தம் அமுல்படுத்தப்பட்டால் இலங்கையின் இறைமையைச் சீர்குலைக்கும் என்று மகாநாயக்க தேரர்கள் கூறியிருப்பது நகைப்புக்குரியதும் உண்மைக்குப் புறம்பானதுமாகும்.
பதிமூன்றாவது திருத்தம் பாராளுமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றப்பட முன்னர் அப்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக விளங்கிய திருமதி. சிறிமாவோ பண்டாரநாயக்க அவர்கள் இச்சட்டமூலம் பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பங்கு பெரும்பான்மையால் நிறைவேற்றப்பட்டு பின் சர்வஜன வாக்கெடுப்பு மூலம் மக்களால் அங்கீகரிக்கப்பெற்று இவையாவும் நிறைவேறினவென்று சபாநாயகர் சான்றுப்படுத்தும்போது மட்டுமே இச் சட்டமூலம் சட்டமாக முடியும் என வாதிட்டிருந்தார். ஆனால், உச்ச நீதிமன்றம் 13 ஆவது திருத்தம் இலங்கையின் ஒற்றையாட்சிக் கட்டமைப்பை மீறவில்லையென்று கூறி இச்சட்டமூலம் நிறைவேற்றப்படுவதற்குச் சர்வ ஜன வாக்கெடுப்பு தேவையற்றது எனத் தீர்மானித்தது.
இதன் அடிப்படையில் நோக்கும்போது மேற்போந்த மகாநாயக்க தேரர்களின் அச்சம் ஆதாரமற்றதாகும்.
13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல் செய்வதில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதி பூண்டிருக்கிறார்.
முன்னாள் ஜனாதிபதியும் 13 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்ட போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தராக விளங்கியவருமான மஹிந்த ராஜபக்ச ’13’க்கு மேல் செல்வதற்கும் (13+)தான் ஆதரவு என்று கூறியுள்ளார்.
இந்திய – இலங்கை சமாதான ஒப்பந்தத்தை அப்போது எதிர்த்த முன்னாள் பிரதமரும் பின்னாளில் ஜனாதிபதியுமான ரணசிங்க பிரேமதாசாவின் மகனான தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஒற்றையாட்சிக் கட்டமைப்பின் கீழ் 13ஆவது திருத்தத்தின் முழுமையான அமுலாக்கலுக்குத் தனது முழு ஆதரவுண்டு எனக் கூறியுள்ளார்.
ஆரம்பத்திலிருந்தே இந்திய – இலங்கை சமாதான ஒப்பந்தத்தை எதிர்த்த ஜே வி பி கட்சி இப்போது 13ஆவது திருத்தத்தின் முழுமையான அமுலாக்கலை எதிர்க்கப்போவதில்லையென அறிவித்துள்ளது.
இன்று இலங்கையில் உள்நாட்டு அரசியலில் எழுந்துள்ள இத்தகைய சூழலைத் தமிழர் தரப்பு சாதமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
மாறாகத் தமிழர் தரப்பில் உள்ள ‘அவசரக் குடுக்கை’அரசியல்வாதிகள் சிலர் 13 ஆவது திருத்தத்தின் முழுமையான அமுலாக்கலை எதிர்க்கும் இனவாதிகளான விமல்வீரவன்ச, உதயகமன்வில, சரத்வீரசேகர, சரத்பொன்சேகா போன்ற அரசியல்வாதிகளின் அபத்தமான கூற்றுகளுக்கும் மேற்போந்த மகாநாயக்க தேரர்களுக்கும் பதிலளிக்கப் போய் – எதிர்வினையாற்றப்போய் தமிழர்களுக்குச் சாதகமாகக் கனிந்துவரும் சூழலை ‘நுணலும் தன் வாயால் கெடும்’ என்ற கதையாகக் குழப்பிவிடப் பார்க்கிறார்கள். ‘வாக்குப்பெட்டி’ அரசியலுக்காக தங்களைத் தீவிர தமிழ்த் தேசியவாதிகளாக மக்களுக்குப் போலியாகக் காட்டப் புறப்பட்டிருக்கும் இத்தகைய ‘ஆசாடபூதி’ அரசியல்வாதிகள் குறித்துத் தமிழ் மக்கள் கவனமாக இருக்க வேண்டும். எரிகின்ற பௌத்த – சிங்களப் பேரினவாத நெருப்பில் எண்ணெய் ஊற்றுகிற செயல்களாகத் தமிழர் தரப்பின் நடவடிக்கைகள் அமைந்துவிடக் கூடாது.
இதேவேளை, இந்திய தமிழ்நாடு பாரதிய ஜனதாக் கட்சி (BJP) யின் தலைவர் அண்ணாமலை டெல்லியில் 02.02.2023 அன்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் ‘இலங்கையில் 13 ஆவது திருத்தத்தை எந்த மாற்றமும் இல்லாமல் உடனடியாக நடைமுறைப்படுத்த மத்திய அரசு தலையிட வேண்டும்’ என்ற கோரிக்கை மனுவைக் கையளித்துள்ளார்.
மட்டுமல்லாமல், இலங்கையின் 75 ஆவது சுதந்திர தின விழாவில் (04.02.2023) கலந்து கொள்ளவருகை தந்திருந்த இந்திய வெளியுறவுத்துறை இராஜாங்க அமைச்சர் வி.முரளிதரன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்பின்போது 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.
இப்படியாகத் தமிழர்களுக்குச் சாதகமான காலம் கனிந்து வரும் சூழலில், பௌத்த சிங்களப் பேரினவாத சக்திகளுக்கு எதிர்வினையாற்றப்போய் உணர்ச்சி மேலீட்டினால் தமிழர் தரப்பு தவறிழைத்து விடாமல் நிலைமைகளை நிதானமாகக் கையாளவேண்டும்.
குறிப்பாகத் தற்போதைய தமிழரசுக் கட்சி தனது தேர்தல் தேவைகளுக்காகவும்- சுயலாப அரசியலுக்காகவும்- சரிந்துவிட்ட தனது வாக்கு வங்கியைச் சரி செய்து கொள்வதற்காகவும் வேண்டி மீண்டும் அப்பாவித் தமிழ் மக்களை உணர்ச்சி மைய அரசியலுக்குள் இழுத்து அவர்களை உசுப்பேற்றி அதில் பதவி சுகக் குளிர் காய்வதற்கு மீண்டும் முனைகிறது. இது குறித்துத் தமிழ் மக்கள் எச்சரிக்கையாகவும் கவனமாகவும் நடந்து கொள்ள வேண்டும்.
இனப் பிரச்சனைக்கான திருப்தியான நிரந்தரத் தீர்வை அதிகாரப் பகிர்வு நடைமுறைகளினூடாக அடையும் பயணத்தில் தமிழர் தரப்பு எதிர்காலத்தில் தமது தடங்களைப் புத்திசாலித்தனமாக எடுத்து வைக்க வேண்டும். அதற்கான முதல் அடிதான் 13 ஆவது திருத்தத்தின் முழுமையான அமுலாக்கல். 13ஆவது திருத்தத்தின் முழுமையான அமுலாக்கல் அவசியமாகவும் அவசரமாகவும் தேவைப்படுவது இலங்கைத் தமிழருக்கே தவிர இலங்கையின் ஏனைய சமூகத்தினருக்கோ அல்லது இலங்கை அரசாங்கத்திற்கோ அல்லது இந்தியாவுக்கோ அல்லது சர்வதேச சமூகத்திற்கோ அல்ல. ‘அழுதும் பிள்ளை அவளே பெற வேண்டும்’. 13 ஆவது திருத்தத்தின் முழுமையான அமுலாக்கத்தைத் தமிழர்கள் தவறவிடுவார்களாயின் அதற்கு மேல் தமிழர்களுக்கு எதுவுமே கிடைக்க முடியாததொரு நிலையேற்பட்டுவிடும். அதற்குப் பின் தமிழர்களுக்குக் கைகொடுக்க எவருமே இருக்க மாட்டார்கள். கண் கெட்டபின் சூரிய நமஸ்காரம் பண்ண முடியாது.
எனவே, வெறுமனே உணர்ச்சி மைய ஆர்ப்பாட்ட அரசியலைக் கைவிட்டு அமைதியான அறிவு மைய அரசியலுக்குத் தமிழர்கள் தம்மைத் தகவமைத்துக் கொள்ளல் அவசியம். அதற்கு உகந்த தருணம் இதுதான்.