~~~ அழகு குணசீலன் ~~~
தமிழ்த்தேசிய அரசியலானது தொடர்ச்சியாக பொருள் முதல்வாத சிந்தனையில் கட்டி அமைக்கப்பட்டது. யாழ்ப்பாண “மணி ஓடர்” பொருளாதாரம் இதன் ஒரு பகுதி. பிரித்தானிய ஆட்சியின் பிரித்தாளும் தந்திரத்தையும், ஆங்கிலக் கல்வியையும் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட யாழ். மேட்டுக்குடியினர் கொழும்பிலும், கொழும்புக்கு வெளியிலும் தமிழர்களின் விகிதாசாரத்திற்கு அதிகமாக நியாயமற்ற வகையில் பெருமளவான வேலை வாய்ப்புக்களை பெற்றுக்கொண்டனர்.
சுதந்திரத்தின் பின்னர் விதேசிய கொள்கைகளில் இருந்து இலங்கையை படிப்படியாக மீட்கவேண்டிய தேவை சுதந்திர இலங்கையின் சுதேசிய கொள்கை வகுப்பாளர்களுக்கு இருந்தது. இதன் ஒரு விளைவாகவே தனிச் சிங்களச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இன விகிதாசாரத்தில் பெரும்பான்மையாக இருந்த சிங்கள இளைஞர்களுக்கு சுயபாசை கல்வியை ஊட்டி அதனூடாக அரச, தனியார் துறை வேலை வாய்ப்புக்களில் அவர்களுக்குரிய நியாயமான வேலைவாய்ப்பு விகிதாசாரத்தை உறுதிப்படுத்துவதே இதன் அடிப்படையான நோக்கம். அதேவேளை சாதாரண தமிழ் மாணவர்களும் தாய்மொழியில் கற்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டது.
முன்னாள் யூகோசிலாவியா, துருக்கியின் குர்திஸ்தான் பிரதேசங்களில் சிறுபான்மையினர் தங்கள் தாய்மொழியில் கற்பதற்கு தடைவிதிக்கப்பட்டது. யூகோசிலாவியாவில் சேர்பிய, குறோசிய மொழிகளை உள்வாங்கி கலப்பு மொழி ஒன்று “சேர்பகுறோசிஷ்” உருவாக்கப்பட்டது. இவ்வாறான நிலை தமிழர்களுக்கு ஆயுதப்போராட்ட காலத்திலும் கூட ஏற்படவில்லை. கொழும்பு அரசு தொடர்ந்தும் நிதி ஒதுக்கீடுகளைச் செய்தது. அரச ஊழியர்களுக்கு சம்பளங்களை வழங்கியது. புலிகள் இந்த வருமானத்திற்கு வரிவிதித்தார்கள். அப்போது எந்த தொழிற்சங்கங்களும், எந்த ஸ்டாலினும் இது பற்றி பேசவில்லை.
பொருள் முதல்வாத வெறும் பொருளாதார இலாப நட்டக்கணக்கை கணிப்பிட்ட யாழ். மேட்டுக்குடி தலைமைகள் சமஷ்டியையும் நிராகரித்து, நியாயமற்ற 50:50 கோரிக்கையும் இழந்த நிலையில் சிங்கள தேசியவாதத் தலைமைகள் படிப்படியாக பெரும்பான்மை சிங்கள மக்களின் நலன்சார்ந்து செயற்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. அதே நேரம் வடக்கு தலைமைகளின் உள்நோக்கையும் அவர்களால் அடையாளம் காண முடிந்தது. தங்களது பொருள் முதல்வாத கருத்தியலின் கழுத்து நெரிக்கப்படுவதை. உணர்ந்து கொண்ட வடக்கு தமிழ்த் தலைமைகளுக்கு இருவழிகள் இருந்தன.
ஒன்று தமது நியாயமற்ற கோரிக்கைகளை நிறுத்தி இணக்க அரசியல் கொள்கை ஒன்றை வகுத்து மக்கள் நலன் சார்ந்து அரசியல் செய்வது. மற்றையது இணக்க அரசியலை நிராகரித்து மேட்டுக்குடி நலன் சார்ந்து எதிர்ப்பு அரசியல் செய்வது. வடக்கு தலைமைகள் இண்டாவதைத் தெரிவு செய்தார்கள். 75 ஆண்டுகள் கடந்தும் அதே தொடர்கிறது. தொடர்ந்தும் எதிர்ப்பு அரசியல் தோல்விக்கு மேல் தோல்வியையே சந்தித்து வருகிறது. தோல்வியுற்ற எதிர்ப்பு அரசியல் கொள்கை ஒன்றை தொடர்ந்தும் கடைப்பிடிக்கின்ற கசாப்புக்கடை அரசியல் உலகில் தமிழ்த்தேசிய அரசியலில்தான் இருக்கமுடியும்.
சிங்கள மொழி எதிர்ப்பு, சிறிஎதிர்ப்பு, தார் பூசல், கறுப்புக்கொடி, கறுப்புப்பட்டி, கர்த்தால், பகிஸ்கரிப்பு, கடையடைப்பு என்று தொடர்ந்தும் அதே எதிர்ப்பு அரசியல் போராட்ட வடிவங்களே தொடர்கின்றன. இவை கடந்த முக்கால் நூற்றாண்டு காலத்தில் தமிழ் மக்களுக்கு பெற்றுத்தந்த அரசியல் உரிமைகளை இவர்களால் பட்டியலிடமுடியுமா? இன்று கறுப்பு சுதந்திரம் பேசும் வடக்கு தலைமைகள் விதேசிய காலனித்துவ மேலாண்மைக்கு கால் கழுவிக்கொண்டு சுதேசிய அரசியலை விலை பேசியவர்கள். சிங்களத் தேசிய தலைமைகள், இடதுசாரிகளுடன் இணைந்து சுதேசிய சுதந்திர அரசியலை கட்டி எழுப்பியவர்கள். தமிழ்த்தேசியம் இன்றும் இந்திய விதேசியத்தையே குறுக்கு வழியில் கூவி அழைக்கிறது. இவர்கள் விதேசியத் தலையீட்டை எதிர்ப்பதாயின் ஏன் சீனாவை மட்டும் எதிர்க்கவேண்டும்? மேற்குலகில் தலையீட்டை ஏன் எதிர்ப்பதில்லை? இதன் பெயர் கறுப்பு அரசியல் .
இவர்கள் இவ்வாறு வடக்கிலும், கிழக்கிலும் தமிழ் மக்களை தங்களின் பதவிகளுக்காக பலிகொடுத்துக் கொண்டிருக்க சிங்கள தேசியத் தலைமைகள் காலத்திற்கு பொருத்தமான கொள்கைகளை வகுத்து முன்னேறிக் கொண்டிருந்தார்கள். தங்கள் கொள்கைகளை மறுபரிசீலனை செய்யத் தயாரில்லாத தமிழ்த் தலைமைகளுக்கு இருந்த ஒரேவழி குறுந்தேசியவாத- இனவாத அரசியலை உரிமை என்ற பெயரில் கையில் எடுப்பதுதான். அதே நேரம் தாழ்த்தப்பட்ட-தலித்துக்களின், வன்னி மற்றும் கிழக்குத் தமிழர்களின், முஸ்லீம்களின், மலையக மக்களின் உரிமைகளை இவர்களே மறுத்தார்கள். ஒட்டுமொத்தமாக மேட்டுக்குடி அரசியல் கருத்தியல் முழுக்க முழுக்க மேட்டுக்குடி நலன்களை முதன்மைப்படுத்தியே செயற்படுத்தப்பட்டது.
இந்த விடயங்கள் தொடர்பாக இடதுசாரி தமிழ்த்தலைமைகள் பேசத் தொடங்கியபோது அவர்களுக்கு எதிரான அரசியலை மேற்கொண்டு அவர்கள் சிங்கள அரசியலின் கைக்கூலிகள் என்றும், தமிழ் இனத்துரோகிகள் என்றும் பொய்யுரை மேற்கொள்ளப்பட்டது. தமிழ்த்தேசிய இனவாதத்திற்கு எதிராக இடதுசாரி சக்திகள் கொள்கைசார் முற்போக்கு அரசியலைச் செய்ய முடியவில்லை. பொதுவான தொழிற்சங்க நடவடிக்கைகள், ஒட்டுமொத்த தொழிலாளர் நலன் சார்ந்த அரசியலை மேட்டுக்குடி தலைமைகள் சுய பாதுகாப்பு கருதி தவிர்த்துக்கொண்டார்கள். தொழிலாளர் வர்க்கத்தை பிரித்து மொழிவாரி தனித்தமிழ் தொழிற்சங்கங்கள் அரசியல் இலாபத்திற்காக அமைக்கப்பட்டன. இன்று இது மொழிவாரி ஆயர் அமைப்பில் போய் நிற்கிறது.
1980 அரசாங்க எதிர்ப்பு பொது வேலை நிறுத்தம் , 1982 இல் ஜே.ஆர் ஜெயவர்த்தன அரசாங்கம் நடாத்திய மக்கள் கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு போன்றவற்றில் தமிழ்த்தேசிய குறுந்தேசியவாதம் நன்கு வெளிப்பட்டது. இவை சிங்கள தேசத்தின் பிரச்சினைகள் என்று இவர்கள் ஒதுங்கிக்கொண்டார்கள். இதன் மூலம் சிங்கள மேட்டுக்குடியைச் சேர்ந்த ஜே.ஆரின் அரசாங்கத்தை மறைமுகமாக ஆதரித்தார்கள். இதன் மூலம் தமிழர் அரசியல் இடதுசாரிகளை ஒதுக்கி தனிமைப்படுத்தியது. இதன் தொடர்ச்சி காலப்போக்கில் தமிழ்த்தேசியம் ஒன்றுபட்ட இலங்கைக்குள் சமூகங்களுக்கு இடையே ஒருங்கிணைந்த வாழ்வை நிராகரிப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இடதுசாரிகள் மேற்கொண்ட தமிழ் மக்கள் நலன் சார்ந்த அனைத்தையும் தென்னிலங்கை முதலாளித்துவ சக்திகளுடன் இணைந்து தமிழ்த் தலைமைகள் ஒத்துழைப்பு வழங்கவில்லை. இது இடதுசாரிகளை தமிழர் அரசியலில் படிப்படியாக விலக்கி வைத்ததுடன், பேரினவாத அரசியலின் பக்கம் தள்ளுவதாகவும் அமைந்தது.
யாழ். பல்கலைக்கழகம் சிறிமாவோ பண்டாரநாயக்கா தலைமையிலான இடதுசாரி கூட்டு அரசாங்க காலத்திலே அமைக்கப்பட்டது. அதற்கு வழக்கம் போல் கறுப்புக்கொடி காட்டி நடித்த தமிழ்த்தேசியம் உள்ளூர் பல்கலைக்கழகம் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்படுவதை ஆதரித்தது. இவர்கள் காட்டியிருக்க வேண்டியது கறுப்புக்கொடி அல்ல மாறாக பச்சைக்கொடி. தமிழர் விடுதலைக் கூட்டணி பல்கலைக்கழகம் அமைப்பதற்கு நாம் எதிர்ப்பில்லை, ஆனால் எங்கள் கட்சி கொள்கையின்படி அது திருகோணமலையில் அமையவேண்டும் என்று கேட்டிருக்கவேண்டுமா? இல்லையா? யாழ் குடாநாட்டிற்குள் குதிரை ஓட்டுவதை விடவும் திருகோணமலையைப் பாதுகாக்கவேண்டியதேவை இருந்ததா..? இல்லையா..?
பல்கலைக்கழகம் அன்று திருகோணமலையில் தூரப்பார்வையுடன் அமைக்கப்பட்டிருந்தால் இன்று திருகோணமலை பெற்றிருக்கக்கூடிய நன்மைகள் அதிகமானவை. அவ்வாறு செய்யாததால் வேலைவாய்ப்பு, காணிப் பயன்பாடு, சர்வதேச கவன ஈர்ப்பு, பிராந்திய அபிவிருத்தி போன்ற பல நன்மைகள் திருகோணமலைக்கு இதன் மூலம் மறுக்கப்பட்டன. இதே கதைதான் இந்திய தூதரகம் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்ட கதையும். இணைந்த வடக்கு கிழக்கை கோருகின்ற இவர்கள் இந்திய தூதரகம் மாகாண சபை நிர்வாகம் உள்ள அல்லது அவர்கள் கூறுகின்ற தமிழீழத் தலைநகரில் அமைக்கப்பட வேண்டும் என்று கோரவில்லை. தமிழீழம் இந்தியாவுக்கு பாதுகாப்பு என்று கோசம் போடும் இவர்கள் திருமலையின் பாதுகாப்பை யாழ்ப்பாண மேட்டுக்குடி கருத்தியலுக்கு பலிகொடுத்துள்ளார்கள்.
தமிழரசு மு.திருச்செல்வம் உள்ளூராட்சி அமைச்சராக இருந்தபோது தீர்த்து வைக்காத நழுவல் – வைக்கோல் இழுத்தவழி அரசியலே இன்றும் கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலக விடயத்தில் எரிந்து கொண்டிருக்கிறது. மன்னம்பிட்டிவரை நீண்டிருந்த மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லையை இன்றைய புனாணை வரை குறுக்கிய பெருமை தமிழரசுக் கட்சிக்குரியது. மன்னம்பிட்டி மக்களுக்கு அன்று அமைச்சர் திருச்செல்வம் எதிர்கால சிந்தனையுடன் ஒருஆலோசனையை வழங்கி அந்த மக்கள் பொலநறுவை மாவட்டத்துடன் இணைவதைத் தடுத்திருக்கமுடியும். அவர்கள் மட்டக்களப்பு கச்சேரிக்கு வந்து செல்கின்ற தூரப் பிரச்சினைக்கு ஒரு நடமாடும் அன்றைய D.R.O காரியாலயத்தை அமைத்துக் கொடுத்திருக்கமுடியும் அல்லது அந்தப் பிரதேசத்தில் உள்ள கிராமங்களை உள்ளடக்கிய ஒரு புதிய D.R.O காரியாலயத்தை நிரந்தரமாக அமைத்திருக்க முடியும். (D.R.O/ A.G.A/D.S.O )
இவ்வாறான சந்தர்ப்பங்கள் எல்லாவற்றையும் சொந்த பாராளுமன்ற கதிரைகளுக்காக கொழும்புக்கு அடவு வைத்துவிட்டவர்கள் இவர்கள் .
இன்று சிங்களவர்கள் தமிழர்களின் சுதந்திரத்தைப் பறித்து விட்டார்கள் என்று கறுப்புக்கொடி பிடிக்கிறார்கள். தூரநோக்கும், எதிர்காலம் பார்வையும் அற்றும், கிடைத்த வாய்ப்புக்களை பயன்படுத்த தவறியமை குறித்தும் இந்த மேட்டுக்குடி கருத்தியலாளர்கள் தங்களுக்கு தாங்களே முகத்தில் கரியைப் பூசிக்கொள்ளவேண்டும். தமிழ்த்தேசிய எதிர்ப்பு அரசியல் இடதுசாரிகளையும் சிங்கள தேசியவாதிகள் பக்கம் தள்ளிவிட்டதற்கான பொறுப்பையும் இவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். மொத்தத்தில் வெறுமனே சிங்கள தேசியவாத அரசியல் மட்டும் சிறுபான்மை தேசிய இனங்களின் உரிமை மறுப்புக்கு/பறிப்புக்கு காரணம் அல்ல தமிழ்த்தேசிய அரசியலுக்கும் அதில் பெரும் பங்கு உண்டு.
சகல தரப்பு மேட்டுக்குடி தலைமைகளும் இணைந்து சாதாரண மக்களின் உரிமைகளை, சுதந்திரத்தைப் பறித்துக்கொண்டார்கள். ஆகவே தமிழ்த்தேசிய பாராளுமன்ற அரசியல்வாதிகள் கறுப்பு சுதந்திரம் பற்றி பேச எந்த அருகதையும் அற்றவர்கள். ஏனெனில் அவர்களும் மக்களின் உரிமைகளைப் பறித்ததில் பங்குதாரர்கள். யார் மக்களின் உரிமைகள் பறிபோகத் துணை நின்றார்களோ, பறித்தார்களோ அவர்களும் மக்களோடு மக்களாக நின்று உரிமைக்கு குரல் கொடுக்கிறார்கள், கொடி பிடிக்கிறார்கள்.
ஆக, கோழி திருடியவன் கூடநின்று தேடுகிறான்..!