ஜே.வி.பி.யிடம் ஏற்படவேண்டிய முக்கியமான ஒரு மாறுதல் 

ஜே.வி.பி.யிடம் ஏற்படவேண்டிய முக்கியமான ஒரு மாறுதல் 

          — வீரகத்தி தனபாலசிங்கம் —

கடந்த வருடத்தைய மக்கள் கிளர்ச்சிக்கு பின்னர் தோன்றிய அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்புகள் சகலதுமே ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.)வுக்கு தென்னிலங்கையில் மக்கள் ஆதரவு பெருமளவுக்கு அதிகரித்திருப்பதாகவே காட்டுகின்றன.       

வழமையாக ஜே.வி.பி.யின் ஊர்வலங்களிலும் பொதுக் கூட்டங்களிலும் ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டாலும் அதை தேர்தல்களில் வாக்குகளாக மாற்றுவதற்கு அவர்களால் முடிவதில்லை என்பதே இது காலவரையான அனுபவமாக இருந்திருக்கிறது. ஆனால், இனிமேலும், அவ்வாறு இருக்கப்போவதில்லை என்பதே பொதுவில் அரசியல் அவதானிகளின் நம்பிக்கையாக இருக்கிறது. 

கடந்த வாரம் வெளியான கருத்துக் கணிப்பு ஒன்று பொதுத்தேர்தல் நடைபெறும் பட்சத்தில் ஜே.வி.பி.தலைமையிலான கூட்டணியான தேசிய மக்கள் சக்திக்கும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையே நெருக்கமான போட்டி நிலவும் என்றும் இவ்விரு கட்சிகளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை விடவும் மக்கள் ஆதரவில் வெகுவாக முன்னிலையில் இருக்கின்றன என்றும் கூறியிருக்கிறது.

ஆனால், அதேவேளை தேசிய மக்கள் சக்தியோ ஐக்கிய மக்கள் சக்தியோ மொத்த வாக்குகளில் மூன்றில் ஒரு பங்கிற்கும் கூடுதலாகப் பெறக்கூடிய சாத்தியம் இல்லை என்றும் அந்த கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டது.

அண்மைக் காலமாக தேசிய மக்கள் சக்தியின் பேரணிகளில் முன்னரை விடவும் மிகவும் பெருமளவில் மக்கள் திரளுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. இதனால் பெரும் உற்சாகம் அடைந்திருக்கும் அதன் தலைவர்கள் அடுத்த பொதுத்தேர்தலில் தங்களிடம் ஆட்சிப்பொறுப்பை கையளிக்குமாறு பகிரங்கமாக மக்களைக் கேட்கிறார்கள். மக்கள் மத்தியில் தங்களுக்கு வளர்ந்திருப்பதாக நம்பப்படும் ஆதரவை நிரூபிப்பதற்கான ஒரு அரிய வாய்ப்பாக உள்ளூராட்சி தேர்தல்களை அவர்கள் கருதுகிறார்கள். அந்த தேர்தல்களை ஒத்திவைப்பதற்கு அரசாங்கம் முன்னெடுக்கும் முயற்சிகளை மிகவும் கடுமையாக ஜே.வி.பி. எதிர்ப்பதற்கு அதுவும் ஒரு காரணமாகும்.

கடந்த வாரம் கொழும்பில் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜே.வி.பி.யின் தலைவர் அநுரா குமார திசாநாயக்க உள்ளூராட்சி தேர்தல்களில் தேசிய மக்கள் சக்தி கணிசமான வெற்றியைப் பெறக்கூடிய அறிகுறிகள் அரசாங்கத்துக்கும் எதிர்க்கட்சிக்கும் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது என்றும் தனது அணிக்கு மக்கள் வெளிக்காட்டிவரும் ஆதரவு பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தியையும் மைத்திரிபால சிறிசேனவின் சுதந்திர கட்சியையும் பெருமளவுக்கு குழப்பத்துக்குள்ளாக்கியிருக்கிறது என்றும் குறிப்பிட்டார். விரைவாக மாறிவரும் அரசியல் சூழ்நிலையினால் அச்சமடைந்திருக்கும் அரசாங்கமும் எதிர்க்கட்சியும் தேசிய மக்கள் சக்திக்கு எதிராக பிரசாரங்களை முன்னெடுப்பதில் ஒரே நோக்கத்துடன் செயற்படுகின்றன என்றும் அவர் கூறினார்.

மக்கள் கிளர்ச்சியினால் ஆட்சியதிகாரத்தில் இருந்து விரட்டப்பட்ட ராஜபக்சாக்களின் பொதுஜன பெரமுனவின் மக்கள் ஆதரவு படுமோசமாக வீழ்ச்சி கண்டிருக்கிறது. கடந்த பொதுத்தேர்தலில் பாராளுமன்றத்தில் ஒரு ஆசனத்தைக் கூட கைப்பற்ற முடியாமல் போன ஐக்கிய தேசிய கட்சியின் நிலையும் எந்தவித முன்னேற்றத்தையும் கண்டதாக இல்லை. மக்கள் ஆணையை இழந்துவிட்டதாக பொதுவில் கருதப்படும் பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற ஆதரவில் அரசாங்கத்தை நடத்தும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மைய எதிர்காலத்தில் தேர்தல்களைச் சந்திப்பது குறித்து நினைத்துப் பார்க்கவும் தயாராயில்லை. கடந்த வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் அவரின் உரை இதை மேலும் தெளிவாக்கியிருக்கிறது.

இத்தகைய பின்புலத்தில், கருத்துக்கணிப்புகளின் பிரகாரம் மக்கள் ஆதரவில் முன்னணியில் நிற்கும் ஐக்கிய மக்கள் சக்தியும் தேசிய மக்கள் சக்தியும் ஊள்ளூராட்சி தேர்தல்களில் அடையக்கூடிய வெற்றிகள் பதவியில் இருப்பதற்கான நியாயப்பாடு தொடர்பில் ஏற்கெனவே சவாலுக்குள்ளாகியிருக்கும் அரசாங்கத்துக்கு மேலும் நெருக்கடிகளை உருவாக்கும் என்பதாலேயே அந்த தேர்தல்களை ஒத்திவைப்பதற்கு அதனால் இடையறாது முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. அரசாங்கத்துக்கு எதிரான மக்கள் உணர்வு உத்வேகத்தை தணிப்பதற்கு அரசாங்கத்துக்கு இருக்கக்கூடிய ஒரே மார்க்கம் தேர்தல் ஒத்திவைப்பேயாகும்.

அதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியும் தேசிய மக்கள் சக்தியும் மக்கள் ஆதரவில் முன்னணியில் இருப்பதற்கு பிரதான காரணம் அரசாங்கத்தின் மீது மக்களுக்கு இருக்கும் கடுமையான வெறுப்பே தவிர, மற்றும்படி இந்த கட்சிகள் ஆட்சிக்கு வந்தால் தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளுக்கு விரைவாக தீர்வுகளைக் காணக்கூடிய உருப்படியான மாற்றுத் திட்டங்கள் அவை கொண்டிருக்கின்றன என்ற நம்பிக்கையல்ல. மக்களின் நம்பிக்கையை பெருமளவுக்கு வென்றெடுக்கக்கூடிய பயனுறுதியுடைய திட்டங்களை அவை இதுவரை முன்வைத்ததாகவும் இல்லை.

ஆனால், அரசாங்கத்தின் மீதான தங்களது வெறுப்பை வெளிப்படுத்த வீதிப் போராட்டங்களுக்கு அப்பால் மக்களுக்கு ஒரு வடிகாலாக அமையக்கூடிய எந்தவொரு தேர்தலும் இந்த இரு கட்சிகளுக்கும் வாய்ப்பாக அமையும். அந்த வாய்ப்பை சாத்தியமானளவுக்கு தாமதிப்பதே அரசாங்கத்திடம் இருக்கக்கூடிய முக்கிய தந்திரோபாயமாகும்.

அதேவேளை, அரசாங்கமும் ஐக்கிய மக்கள் சக்தியும் தேசிய மக்கள் சக்திக்கு எதிராக பிரசாரங்களை தீவிரப்படுத்தியிருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. கடந்த கால கிளர்ச்சிகளில் ஜே.வி.பி.யின் பயங்கர நடவடிக்கைகளையும் தீவிர இடதுசாரிக் கொள்கைகளையும் அந்த பிரசாரங்களில் அவர்கள் மீண்டும் நினைவுபடுத்துகிறார்கள்.

எதிர்க்கட்சி தலைவர் பிரேமதாசவை பொறுத்தவரை, தேர்தல் போட்டி என்று வரும்போது ஜே.வி.பி.க்கு எதிரான பிரசாரங்களை தீவிரப்படுத்தவேண்டிய  அவசியம் ஏற்படுகிறது. எதிர்கால பாராளுமன்ற தேர்தல் ஒன்றில் அவரது ஐக்கிய மக்கள் சக்திக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் இடையில் நெருக்கமான போட்டி நிலவுவது மாத்திரமல்ல, சில முக்கிய மாகாணங்களில் தேசிய மக்கள் சக்தி முன்னணியில் இருப்பதாகவும் கிராமப்புறங்களிலும் அந்த கட்சி பெருமளவு வெற்றியைப் பெறக்கூடிய நிலையில் இருக்கிறது என்றும் கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.

ஜே.வி.பி.யின் முன்னைய தீவிர இடதுசாரிக் கொள்கைகளை நினைவுபடுத்தும் பிரேமதாச தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தால் அவர்கள் தனியார் சொத்துக்களை அரசுடைமையாக்குவார்கள் என்று அண்மையில் கூறியிருந்தார். அது முதலாளித்துவ மற்றும் நிலவுடைமை வர்க்கத்தவர்களுக்கு அவர் விடுத்த ஒரு பயமுறுத்தலேயாகும்.  

கடந்தவாரம் கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் கருத்தரங்கொன்றில் இதற்கு பதிலளித்த அநுரா குமார திசாநாயக்க சேறு பூசும் வழமையான அரசியல் செயற்பாடுகளை விடுத்து பொருளாதாரக் கொள்கைகள் தொடர்பில் பகிரங்க விவாதத்துக்கு வருமாறு பிரேமதாசவுக்கு சவால் விடுத்தார்.

“43 வருடங்களுக்கு முன்னர் 1980 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட கொள்கை அறிக்கை ஜே.வி.பி.யின் இணையத்தளத்தில் இருக்கிறது. எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் அதை மேற்கோள்காட்டி இன்று எமக்கு எதிராக பேசுகிறார்கள். தேசிய மக்கள் சக்தியின் கொள்கைகள் நவீன உலகிற்கு பொருத்தமான முறையில் இப்போது மாறிவிட்டன.”

“அந்த கொள்கை அறிக்கை உலகில் சோசலிச முகாம் பலம் பொருந்தியதாக விளங்கிய காலகட்டத்தில் ஜே.வி.பி.யின் 1979 மகாநாட்டில் அங்கீகரிக்கப்பட்டு 1980 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. சோசலிச முகாம் வீழ்ச்சிகண்டு இப்போது நான்கு தசாப்தங்களுக்கும் அதிகமான காலத்துக்குப் பிறகு அமெரிக்கா, ஐரோப்பா, சீனா, ரஷ்யா என்று புதிய அரசியல் முகாம்கள் வெளிக்கிளம்பிவிட்டன.”

“மக்களின் அபிலாசைகளும் தொழில் நுட்பம், சந்தை மற்றும் தொடர்புச் சாதனங்களும் முன்னென்றும் இல்லாத வகையில் மாற்றம் கண்டுவிட்டன. 1980 களின் உலகத்தை விடவும் முற்றிலும் வேறுபட்ட ஒரு உலகிலேயே நாம் இன்று  வாழ்கிறோம். நெகிழ்ச்சிப் போக்குடைய அரசியல் சக்தியாக விளங்கும் நாம் உலக அரங்கின் மாறுதல்களைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப எம்மை மாற்றிக்கொள்ளக்கூடியவர்களாக இருக்கிறோம்.”

“உலகின் மாறுதல்களுக்கு இசைவான முறையில் 2000, 2015, 2019 ஆம் ஆண்டுகளில் ஜே.வி.பி. பல்வேறு செயற்திட்டங்களை வெளியிட்டது.1980 ஆண்டில் இருந்ததை மேற்கோள் காட்டி சஜித் இப்போது ருவிட்டரில் பதிவுகளைச் செய்கிறார். அவருக்கு அந்தக் கால அரசியல் நிலைவரம் பற்றியோ அல்லது இந்தக்கால நிலைவரம் பற்றியோ எந்த விளக்கமும் இல்லை. புதிய நிவைரங்களை அவர் விளங்கிக்கொள்ள வேண்டும்” என்று திசாநாயக்க கூறினார்.

நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் இருந்த ஜே.வி.பி. இப்போது இல்லை என்பதும் அதன் தலைமையிலான தேசிய மக்கள் சக்தி நவீன உலகின் நிலைவரங்களுக்கு இசைவான முறையில் புதிய கொள்கைகளையும் அணுகுமுறைகளையும் கடைப்பிடிக்கும் புதிய அரசியல் சக்தியாக விளங்குகிறது என்பதுமே அந்த உரையின் மூலமாக அவர் செய்ய முனையும் பிரகடனமாகும். தங்களிடம் ஏற்பட்டிருப்பதாக திசாநாயக்க கூறுகின்ற அந்த ‘மாறுதல்’ நாடும் மக்களும் நீண்டகாலமாக எதிர்நோக்கி வந்திருக்கி்ன்ற முக்கியமான சகல பிரச்சினைகளையும் தழுவியதாக அமைந்திருக்கிறதா என்ற ஒரு கேள்வி எழுகிறது.

இந்த பத்தியில் ஏற்கெனவே சுட்டிக்காட்டியதைப் போன்று, ஜே.வி.பி. அரசியல் அரங்கிற்கு வந்த பிறகு இனப்பிரச்சினைக்கு அரசியல் இணக்கத் தீர்வைக் காண்பதற்கு அரசாங்கங்களினால் மேற்கொள்ளப்பட்ட சகல முயற்சிகளையும் எதிர்த்த ஒரு எதிர்மறையான வரலாற்றைக் கொண்டிருக்கிறது. அந்த வரலாற்றையும் மாற்றக்கூடியதாக தேசிய மக்கள் சக்தியின் மாறுதல் அமையாத பட்சத்தில், முன்னைய தவறான அரசியல் போக்குகளில் இருந்து விடுபட்ட புதிய ஒரு அரசியல் கலாசாரத்தை உருவாக்குவது அதனால் சாத்தியமில்லை.

இனப்பிரச்சினை விவகாரத்தில் ஜே.வி.பி.யின் கடந்த கால கொள்கைகளையும் அணுகுமுறைகளையும் விளக்குவதற்கு இங்கு இடவசதியில்லை. அதனால், அந்த பிரச்சினையில் அவர்களின் மாறாத அணுகுமுறையின் ஒரு பிந்திய உதாரணமாக, 1987 ஜூலை இந்திய — இலங்கை சமாதான உடன்படிக்கையை தொடர்ந்து மாகாணசபைகள் முறையை அறிமுகப்படுத்துவதற்காக 37 வருடங்களுக்கு முன்னர் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்புக்கான 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்போவதாக ஜனாதிபதி விக்கிரமசிங்க அறிவித்ததை அடுத்து மூண்டிருக்கும் தற்போதைய சர்ச்சையில் தேசிய மக்கள் சக்தியின் நிலைப்பாடு தொடர்பில் சில விடயங்களை சுட்டிக்காட்டுவது அவசியமாகிறது.

இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வாக 13 வது திருத்தம் ஏற்கெனவே முன்வைக்கப்பட்டு அரசியலமைப்பிலும் உள்ளடக்கப்பட்டிருப்பதால் அதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தாங்கள் விரும்புவதாகவும் ஆனால் அந்த திருத்தம் இனப்பிரச்சினைக்கு ஏற்புடைய ஒரு தீர்வாக அமையமுடியுமா என்பது குறித்து தங்கள் கட்சிக்குள் விவாதம் ஒன்று இருப்பதாகவும் தேசிய மக்கள் சக்தியின் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான கலாநிதி ஹரினி அமரசூரிய இம்மாத தொடக்கத்தில் கூறினார். 

தேசிய மக்கள் சக்தியின் தலைமைப் பொறுப்பை அவரிடம் கையளிக்க வேண்டும் என்று அவதானிகள் கருத்து தெரிவிக்கின்ற அளவுக்கு முற்போக்கான சிந்தனை கொண்ட ஒரு அறிவுஜீவியாக அடையாளம் காணப்பட்டிருப்பவர் அமரசூரிய.13 வது திருத்தத்தின் முழுமையான நடைமுறைப்படுத்தல் குறித்து முதலில் கருத்தை வெளியிட்ட தேசிய மக்கள் சக்தியின் பிரமுகரும் அவரே.

ஆனால், ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது தொடர்பான விவாதத்தைப் பயன்படுத்தி பிரதான அரசியல் கட்சிகள் இனவாத உணர்வுகளைக் கிளறுகின்றன என்றும் அண்மைக்காலம் வரை நாட்டில் எவரும் அந்த திருத்தம் குறித்து கவலைப்படவில்லை. ஜனாதிபதி விக்கிரமசிங்கவே இந்த விவாதத்தை மூளவைத்திருக்கிறார். இந்த பொறியில் மக்கள் சிக்கிக்கொள்ளக்கூடாது என்றும் கூறினார்.தேசிய மக்கள் சக்தியினால் அமைக்கப்படக்கூடிய அரசாங்கம் ஒன்று தமிழர் பிரச்சினைக்கு  தீர்வுகாண்பதற்கான ஏற்பாடுகளுடன் கூடிய அரசியலமைப்பு ஒன்றைக் கொண்டுவரும் என்றும் அவர் தெரிவித்தார்.

இறுதியாக, அநுரா குமார திசாநாயக்க 13 வது திருத்தத்தை அல்லது 13 பிளஸை நடைமுறைப்படுத்துவது மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையப்போவதில்லை என்றும் சகல குடிமக்களினதும் உரிமைகளைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய அரசியலமைப்பு ஒன்று தேவைப்படுகிறது. புதிய அரசியலமைப்பு தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்படவேண்டும் என்றும் சில தினங்களுக்கு முன்னர் தெரிவித்தார்.

13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதால் இனப்பிரச்சினைக்கு தீர்வுகிட்டுமோ இல்லையோ என்பது வேறு விடயம்.

ஆனால், ஜனாதிபதியின் அறிவிப்புக்கு எதிராக கடும்போக்கு சிங்கள தேசியவாத சக்திகளும் மகாசங்கமும் கிளர்ந்தெழுந்ததை அடுத்து நாட்டில் மீண்டும் பெருமெடுப்பில் தலையெடுக்கக்கூடிய பெரும்பான்மையினவாத அணி திரட்டல் ஆபத்தை, மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றுவரும் முக்கியமான அரசியல் சக்தியாக தன்னைக் கருதும் ஒரு கட்சி எவ்வாறு அணுகுகின்றது என்பது இங்கு முக்கியமானது. நவீன உலகின் போக்குகளுக்கு இசைவான முறையில் மாறுதலுக்குள்ளாகியிருப்பதாக உரிமை கோரும் தேசிய மக்கள் சக்தி இது விடயத்தில் அதற்குரிய பொறுப்பை உணர்ந்து செயற்பட முன்வருவதாக இல்லை.

தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்து புதிய அரசியலமைப்பு ஒன்றைக் கொண்டுவந்து இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் என்ற அறிவிப்பு உடனடியாக முகங்கொடுக்க வேண்டிய பிரச்சினையில் இருந்து நழுவும் ஒரு தந்திரோபாயமே. அதன் மூலமாக 13 வது திருத்தத்துக்கு எதிரான தென்னிலங்கை சக்திகள் மாத்திரமல்ல, சிறுபான்மைச் சமூகங்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளில் குறைந்த பட்சமானவற்றைக்கூட ஏற்றுக்கொள்ள மறுக்கும் சக்திகளும் வலுவடைகின்றன. தேசிய மக்கள் சக்தியின் நிலைப்பாடு இதற்கு உதவுமேதவிர, இனப்பிரச்சினைக்கு பயனுறுதியுடைய தீர்வைக் காண்பதற்கு ஒருபோதும் உதவப்போவதில்லை. தேசிய மக்கள் சக்தியின் ‘மாறுதல்’ அர்த்தமுடையதாக அமைய இனப்பிரச்சினை தொடர்பிலான அதன் நிலைப்பாட்டிலும் பழைய போக்கில் இருந்து முற்றிலும் விடுபட்ட  உருப்படியான மாற்றம் அவசியம்.

(நன்றிவீரகேசரி வாரவெளியீடு)