—-அழகு குணசீலன்—-
இனப்பிரச்சினை தீர்வுக்கான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பொங்கல், சுதந்திரதின காலக்கெடுக்கள் காலாவதி கட்டத்தை கடந்தும், நெருங்கியும் கொண்டிருக்கின்றன.
இறுதியாக இடம்பெற்ற சர்வகட்சி (?) கூட்டத்தில் அரசியலமைப்பின் 13 வது ,திருத்தத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது என்ற ஜனாதிபதியின் அறிவிப்பு தென் இலங்கையில் தூக்கத்தில் இருந்த நாய்களுக்கு கல் எறிந்த கதையாக முடிந்திருக்கிறது.
சிங்கள தேசியவாத கடும்போக்காளர்களான விமல் வீரவன்ச, பௌத்த பிக்குகள், சரத்வீரசேகர போன்றோர் ஜனாதிபதியின் ஆலோசனையை கண்டித்தும், எதிர்த்தும், நிராகரித்தும் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
இன்னும் சிலர் ஜனாதிபதிக்கு அதற்கான அதிகாரத்தை மக்கள் வழங்கவில்லை என்று வாதத்தை வேறு திசைக்கு திருப்புகின்றனர்.
மௌன உடைவுகள்: 16, ரணிலின் அக்ஷனைப் பொறுத்தே எதிர்த்தரப்பின் ரியாக்ஷன் இருக்கும் என்றும், அதற்காக அவர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டது. இப்போது அது தென்னிலங்கையில் ஆரம்பம் மட்டுமே முடிவல்ல.
வைக்கோல் பட்டறை நாய்கள் குரைப்பதற்கு தனியே ஜனாதிபதியின் அமைச்சரவை முடிவு மட்டுமா காரணம்? என்றால் இல்லை. இந்திய வெளியுறவு அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கரின் வருகையும், அவர் தமிழ்தரப்பு அரசியல்வாதிகளைச் சந்தித்ததும் ஒரு காரணம். இதுவும் தூக்கத்தில் இருந்த நாயை எழுப்பிய கதைதான். இந்தியாவின் தாளத்திற்கு ரணில் ஆடுகிறார் என்பதே தென்னிலங்கை கடும்போக்காளர் நிலைப்பாடு.
13 வது அரசியல் அமைப்பு திருத்தம் சிறிய நாடான இலங்கையை பிரித்துவிடும் என்றும், நாட்டைப் பிரிப்பதாக அமையும் என்றும் தவறான புரிதலில் அல்லது புரிந்திருந்தும் அரசியலுக்காக- தேர்தலுக்காக இவர்கள் இப்படிச் பேசுகிறார்கள்.
இது தென்னிலங்கை அரசியல் என்றால் வடக்கில் நம்மவர்களின் அரசியல் என்ன திறமையானதா…? என்றால் அதுவும் ஒரே குட்டையில் ஊறிய மட்டையாகத்தான் உள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொங்கலுக்கு யாழ்ப்பாணம் போகிறார். அது ஒரு உத்தியோகபூர்வ விஜயம். நிலைமைகளை குறிப்பாக இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பான களவிஜயம். வைக்கோல் பட்டறை நாய்களுக்கிடையே சிங்களம், தமிழ் என்று வேறுபாடில்லை என்பதை இது வெளிக்காட்டியது. அவை ஒரேமொழியிலேயே குரைக்கும்.
நாட்டின் ஜனாதிபதி பல தசாப்தங்களாக தமிழர்கள் எதிர்நோக்கும் காணிப்பிரச்சினை குறித்த களவிஜயம் ஒன்றை மேற்கொள்ளும் போது சக்திவேல் என்று பாதிரியார் “உமக்கு இங்கு என்ன வேலை திரும்பிப் போ” என்று கூறினார். அப்படியானால் அந்த மக்களின் காணிப் பிரச்சினைக்கு இவரிடம் உள்ள தீர்வு என்ன? அந்த தீர்வை அவர் ஜனாதிபதியைத் தவிர்த்து யாரிடம் எதிர்பார்க்கிறார்…?
ஜனாதிபதியிடம் இனப்பிரச்சினை தீர்வைக் கோருகிறீர்கள் அதன் ஒரு பகுதியாக காணி அதிகாரம் உள்ளது. அது விடயமாக நிலைமையை அவதானித்து முடிவுகளை எடுக்க அவர் வருகிறார். அவரை திரும்பிப் போகச் சொல்கிறீர்கள். தென்னிலங்கையில் குரைப்பவர்களுக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம். கடந்த 75 ஆண்டுகால எதிர்ப்பு அரசியலில் இருந்து இவர்கள் இன்னும் கற்றுக்கொள்ளவில்லை.
இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் நோர்வே நீண்டகால பங்களிப்பை வழங்கிய ஒரு நாடு. எரிக்சொல்கைம் தங்களை சந்திக்காமல் சம்பந்தர் அணியைச் சந்தித்தார் என்பதற்காகவும், இந்தியாவைத் திருப்திப்படுத்தவும், ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் அவருக்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டார். விக்கினேஸ்வரன் ஒரு படி மேல் ஏறி இந்தியாவைக் கொண்டு வருவேன் என்று அச்சுறுத்தினார்.
அப்போது தென்னிலங்கை கடும்போக்காளர்கள் அமைதியாகவே இருந்தார்கள். இப்போது ஜெய்சங்கர் வந்தார் நீங்கள் தமிழ் தரப்பு அமைதியாக இருக்கிறீர்கள் தென்னிலங்கையில் குரைக்கிறார்கள். இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வில் உள்ள சிக்கல்களையும் இராஜதந்திர நகர்வுகளையும் தங்களின் சொந்த கட்சி நலன் சார்ந்து சிங்கள கடும்போக்காளர்கள் மட்டும் பயன்படுத்தவில்லை மாறாக தமிழ்த்தேசிய அரசியல்வாதிகளும் அதையே செய்கிறார்கள். ஏனெனில் பிரச்சினை இருக்கும் வரையுமே இவர்கள் இரு தரப்பாலும் அரசியல் வியாபாரம் செய்யமுடியும்.
இன்னொரு குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால் எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியன் ஆகியோர் பேச்சுவார்த்தைகளில் முன்னாள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பங்கு கொண்டிருக்கும்போதே நம்பிக்கை இன்மையை வெளியிட்டார்கள். பல்வேறு முரண்பாடுகளைக் கொண்ட சமாதான முயற்சிகளில் இவ்வாறு செயற்படுவது சிறுபிள்ளைத்தனமானது. பேச்சுக்களைக் குழப்புவதும், மக்களின் நம்பிக்கையை சிதறடிப்பதும்.
பொதுவாக பேச்சுவார்த்தைகளின் முடிவில் அடையப்பட்டவற்றை இருதரப்பு இணக்கப்பாட்டுடன் மட்டுமே வெளியிடுவதும் அதுவும் சாதகமான விடயங்களை வெளியிடுவதுமே அரசியல் நடைமுறை. போற போற இடங்களில் எல்லாம் ஒலிவாங்கி கிடைக்கிறது என்பதற்காக இருதரப்பு இடைவெளிகளைப் பேசுவதில்லை. இவர்கள் எத்தனை இராஜதந்திரிகளை சந்தித்திருக்கிறார்கள், எத்தனை பேச்சுக்களில் கலந்து கொண்டிருக்கிறார்கள் இவற்றில் இருந்து இவர்கள் உள்வாங்கிக் கொண்டவை எவை ?
இலங்கையின் இன்றைய இன நெருக்கடிக்கும், பொருளாதார நெருக்கடிக்கும் உள்ளூராட்சி தேர்தல் தீர்வைத்தரும் என்று இந்த கட்சிகள் நம்புகின்றனவா? இன்றைய நெருக்கடியான நிலையில் இந்த “பஞ்சாயத்து” தேர்தல்களின் அவசியம் என்ன? தேர்தல் சாதிக்கப்போவது என்ன?
தேர்தல் ஒன்றினால் மட்டும் ஜனநாயகம் பாதுகாக்கப்படுவதில்லை. இதற்கு பல உதாரணங்களை பட்டியல் இடமுடியும். கட்சிகளின் ஒரே இலக்கு ஆட்சி மாற்றமே. தேர்தலில் அரசுதரப்பு தோல்வியுறும் என்று நம்பும் இவர்கள் அதைக்காட்டி பாராளுமன்றத்தை கலைக்கவும், பின்னர் ஜனாதிபதியைத் துரத்தவும் நினைக்கின்றனர்.
இதன் மூலம் இலங்கையின் இன, பொருளாதார நெருக்கடிகள் தீர்ந்து விடுமா ?
உண்மையில் இலங்கையின் இன்றைய தேவை தேர்தல் அல்ல. நெருக்கடிகளுக்கான தீர்வு. தீர்வின் ஊடாக அரசியல், பொருளாதார ஸ்த்திரத் தன்மையைப் படிப்படியாக ஏற்படுத்தி அதன் பின்னர் தேர்தல் ஒன்றுக்கு முகம் கொடுப்பதே காலத்தின் தேவையாக அமையமுடியும்.
ஆனால் இப்போது தமிழ்த்தேசியம் பல கூறுகளாக உடைந்து கதிரைப் பிரச்சினைக்கு தீர்வைத்தேடுகிறது. இன்னொரு வகையில் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பான கருத்து முரண்பாடு இவர்களை உடைக்கவில்லை அப்பட்டமான “கதிரைக்கணக்கே” இவர்களை உடைத்தது.
இப்போது தமிழ்த்தேசிய கட்சிகளுக்கு ஒரு பொறுப்பு இருக்கிறது. தென்னிலங்கை கடும்போக்காளர்களிடம் இருந்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை காப்பாற்றுவதுதான் அது. அதாவது அமைச்சரவையில் அவர் 13ஐ அமுல் படுத்த அடைந்துள்ள இணக்கப்பாட்டை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து அதன் ஆதரவைப் பெற்று நடைமுறைப்படுத்துவதற்கு தமிழ்தரப்பு ஜனாதிபதியின் கரத்தை பலப்படுத்தவேண்டும்.
அப்படியானால் செய்யவேண்டியது என்ன….?
(*) நல்லாட்சியில் முட்டுக்கொடுத்ததற்கு பிரதியுபகாரமாக பாராளுமன்றத்தில் ஜனாதிபதியின் யோசனையை ஆதரிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி சிறிசேனவைக் கோருவது.
(*) சம்பந்தர் தலஷ் அளகப்பெருமாவை அவர் ஒரு இனவாதியல்ல என்று கூறியே ஜனாதிபதி தேர்வில் ஆதரித்தார். எனவே தலஸ், பீரிஸ் போன்றவர்களைச் சந்தித்து ஜனாதிபதி ரணிலின் யோசனைக்கு பாராளுமன்றத்தில் ஆதரவளியுங்கள் என்று கேட்பது.
(*) சஜீத் பிரேமதாசாவிடம் எங்கள் கோரிக்கையின் படி தமிழ் மக்கள் உங்களுக்கே ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்தார்கள். உங்கள் வேண்டுகோளின் படியே தலஸ்ஸையும் ஆதரித்தோம் இதனால் நீங்கள் 13ஐ நடைமுறைப்படுத்தும் யோசனைக்கு ஆதரவளியுங்கள் என்று கோரவேண்டும். புலிகள் மட்டும் அல்ல உங்கள் தந்தை பிரேமதாசாவின் செயற்பாடும்தான் இந்த நிலைக்கு காரணம் என்று தெரியப்படுத்துங்கள்.
(*) ரவூப் ஹக்கீம், மனோ கணேசன் ஆகியோரிடம் வடக்கு -கிழக்கு இணைப்பு விவகாரத்தையும், நிலத்தொடர்பற்ற மலையக மாகாணத்தையும் இப்போது பேசுபொருளாக்கி வைக்கோல் பட்டறை நாய்களின் தூக்கத்தை மேலும் கலைத்துவிட வேண்டாம் என்றும், இருதரப்பு கோரிக்கைளும் கவனத்தில் கொள்ளப்படும் என்ற உறுதியை வழங்கவேண்டும்.
(*) இனி தென்னிலங்கை இடதுசாரிகள், தமிழ்த்தேசியத்திற்கு வெளியே உள்ள கட்சிகளும் பாராளுமன்றத்தில் ஆதரவை வழங்கினால் ரணிலின் யோசனை நிறைவேற்றப்படுவதற்கு அதிக வாய்ப்புண்டு. இதன் மூலம் தென்னிலங்கை கடும்போக்காளர்களைத் தனிமைப்படுத்த முடியும். ஒரு கட்ட நகர்வை எட்ட முடியும்.
தமிழ்த்தேசிய பாராளுமன்ற அரசியல் ரணில் வழங்கியுள்ள இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தாவிட்டால் இவர்களும் இன நெருக்கடிக்கு தீர்வு காண்பதை தடுக்கும் – மக்களின் அபிலாஷைகளை புறக்கணிக்கும் வைக்கோல் பட்டறைக் காவலாளிகள்தான்.
பிரச்சினைக்கு சாத்தியமான தீர்வைத் தேடாத இவர்கள்…., பிரச்சினையை வைத்து கதிரையைத் தேடுபவர்கள்.