ஜசிந்தாவின் பதவி விலகல் கூறும் செய்தி 

ஜசிந்தாவின் பதவி விலகல் கூறும் செய்தி 

வீரகத்தி தனபாலசிங்கம் 

 ஆட்சியதிகாரப் பதவிகளில் இருக்கும் அரசியல்வாதிகள் மக்கள் மத்தியில் செல்வாக்குடன் இருக்கின்றபோது மகிழ்ச்சியான ஒரு கட்டத்தில் பதவியில் இருந்து விலக முன்வராவிட்டால் இறுதியில் அவர்களின் அரசியல் வாழ்க்கை பெரும்பாலும் தோல்வியில்தான் முடியும்.

   அரை நூற்றாண்டுக்கு முதல் இதைச் சொன்னவர் காலஞ்சென்ற பிடிட்டிஷ் அரசியல்வாதி ஈனொக் பவல். கன்சர்வேட்டிவ் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த அவர் வெளிநாட்டு குடியேற்றவாசிகளுக்கு எதிரான அரசியலை முன்னெடுத்து இங்கிலாந்தில் இனவெறியைத் தூண்டியவர். மற்றவர்கள் பின்பற்றக்கூடிய அரசியல் கொள்கைகளைக் கொண்டராக அவர் விளங்கவில்லை என்ற போதிலும், அரசியல்வாதிகள் ஓய்வுபெறவேண்டிய கட்டம் குறித்து கூறிய கருத்து பொதுவில் ஏற்றுக்கொள்ளப்படக்கூடியதேயாகும்.

   நெல்சன் மண்டேலா தொடர்ந்து ஜனாதிபதி பதவியில் தொடர்ந்தும் இருக்கவேண்டும் என்று விரும்பியிருந்தால் எவரும் எதிர்ப்புக்காட்டியிருக்க மாட்டார்கள். வெள்ளையரின் இன ஒதுக்கல் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவருவதற்கான கறுப்பின மக்களின் பல தசாப்தகால — வெற்றிகரமான போராட்டத்துக்கு தலைமைதாங்கிய அவர் தென்னாபிரிக்காவில் நடைபெற்ற முதன்முதலான முழுமையான பிரதிநிதித்துவ ஜனநாயக தேர்தலில் முதல் கறுப்பின ஜனாதிபதியாகிய பிறகு ஒரு பதவிக்காலத்துக்கு (1994 — 1999) ஆட்சியல் இருந்துவிட்டு ஓய்வுபெற்றுக் கொண்டார். அவ்வாறு பதவியில் இருந்து இறங்கியதன் மூலம் மண்டேலா தனது நாட்டில் கண்ணியமான முறையில் தலைமைத்துவ மாற்றத்துக்கான உதாரணத்தை வகுத்தார். பிறகு பதவிக்கு வந்த ஜனாதிபதிகளிடம் அவரிடம் இருந்த தலைமைத்துவப் பண்பைக் காணமுடியவில்லை.

   அத்தகைய ஒரு அரசியல் ஞானியை இன்றைய உலகில் காணமுடியாது. மண்டேலா வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தோம் என்பதே எம்மெல்லோருக்கும் ஒரு பெருமை எனலாம்.

  எளிதாக அதிகாரத்தைக் கைவிட விரும்பாத தலைவர்கள் நிறைந்த உலகில் இன்று நாம் வாழ்கிறோம். கைவிடும் நோக்கத்துடன் எவரும் அதிகாரத்தைக் கைப்பற்றுவதில்லை என்று ஆங்கில நாவலாசிரியரும் பத்திரிகையாளருமான ஜோர்ஜ் ஓர்வெலின் பிரபலமான வாசகம் நினைவுக்கு வருகிறது.

  தங்களால் முறையாக ஆட்சிசெய்ய முடியாவிட்டாலும் கூட அதிகாரத்தில் அழுங்குப் பிடியாக தொங்கிக்கொண்டிருக்கும் அரசியல்வாதிகளை அறிந்து கொள்ள இலங்கையர்களாகிய நாம் வெளியுலகில் உதாரணங்களைத் தேடவேண்டியதில்லை. அந்த விடயத்தில் உலகிற்கே நேர்மறையான  உதாரணமாக விளங்கும் அரசியல்வாதிகளை நாம் நிறையவே கொண்டிருக்கிறோம்.

   தவறான ஆட்சிமுறைக்கு எதிராக கிளர்ந்தெழுந்த மக்களினால் அதிகாரத்தில் இருந்து விரட்டப்பட்ட அரசியல்வாதிகள் நாடு எதிர்நோக்குகின்ற நெருக்கடிகளுக்கு தங்களை தெரிவுசெய்த மக்களும் பொறுப்பு என்று கூறிக்கொண்டே அரசியலில் இருந்து ஓய்வு பெறமாட்டோம் என்று அடம்பிடிப்பதையும் பாராளுமன்ற தேர்தலில் ஒரு ஆசனத்தைக் கூடபெறமுடியாமல் வரலாற்றுத் தோல்வியைக் கண்ட கட்சியின் தலைவர் அதற்கான பொறுப்பை ஏற்று கண்ணியமான முறையில் தலைமைப் பொறுப்பை துறக்காமல் இருந்தது மாத்திரமல்ல மக்களால் பெரிதும் வெறுக்கப்படும் ஒரு பாராளுமன்றக் குழுவால் ஜனாதிபதியாக தெரிவாகியதையும் கடந்த வருடம் நாமெல்லோரும் கண்டோம்.

தேர்தல்களில் மக்கள் வழங்கிய தீர்ப்பை மதிக்காமல் தங்களது ஆதரவாளர்களை தூண்டிவிட்டு பாராளுமன்றங்களையும் நீதிமன்றங்களையும் முற்றுகையிடச் செய்கிற தலைவர்களும் உலகில் இருக்கிறார்கள். இரு வருடங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்பும் கடந்த மாதம் பிரேசிலில் ஜெயர் பொல்சோனாரோவும் இதற்கு அண்மைய உதாரணங்கள்.

  இத்தகையதொரு பின்புலத்தில், பத்து நாட்களுக்கு முன்னர் தனது பதவி விலகலை அறிவித்த நியூசிலாந்தின் பிரதமர் ஜசிந்தா ஆர்டேன் முனைப்பான கவனத்துக்குரியவராகிறார்.

   நியூசிலாந்து தொழிற்கட்சியின் தலைவியான ஜசிந்தா தனது 37வது வயதில் 2017 அக்டோபரில் பிரதமராக பதவியேற்றதன் மூலம் உலகில் அரசாங்கம் ஒன்றுக்கு தலைமைதாங்கும் மிகவும் இளம் பெண்மணி என்ற பெருமையைத் தனதாக்கிக்கொண்டார். 2020 பொதுத்தேர்தலிலும் பெருவெற்றி பெற்ற அவர் தற்போது தனது இரண்டாவது பதவிக்காலத்தில் மூன்று வருடங்களுக்கும் குறைவான காலத்துக்கு முன்னர் 42வது வயதில் தனது பதவி விலகலை அறிவித்ததன் மூலம் மிகவும் இளம் வயதில் எந்தவித நிர்ப்பந்தமும் இன்றி தானாகவே அரசியலில் இருந்து ஓய்வு பெறும் தலைவி என்ற இன்னொரு பெருமைக்கும் உரியவராகியிருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது.

   ஜசிந்தாவுக்கு முன்னரும் பெண்கள் நாடுகளை ஆட்சி செய்திருக்கிறார்கள். இப்போதும் சில பெண்கள் ஆட்சி செய்துகொண்டிருக்கிறார்கள். எதிர்காலத்திலும் ஆட்சியாளர்களாக பெண்கள் வருவார்கள். அதில் ஒன்றும் புதுமையில்லை.

  ஆனால், தனது பதவி விலகலுக்கும் அரசியல் ஓய்வுக்கும் ஜசிந்தா கூறிய காரணமே அவரை ஏனைய அரசியல்வாதிகளை விடவும் பிரத்தியேகமானவராக வெளிக்காட்டி உலகின் கவனத்தை அவர் மீது திருப்பியிருக்கிறது.

   “ஒரு நாட்டுக்கு தலைமை தாங்குவதற்கு வாய்ப்புக் கிடைப்பது மிகப்பெரிய சிறப்புரிமை. அந்த சிறப்புரிமையுடன் சேர்ந்து பொறுப்புணர்ச்சியும் வந்துவிடவேண்டும். நாட்டுக்கு தலைமை தாங்குவதற்கு தான் சரியான ஆளா என்பதையும் எப்போது தான் சரியான ஆள் இல்லை என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டிய பண்பும் இந்த பொறுப்புணர்வில் உள்ளடங்குகிறது.

  “என்னைப் பொறுத்தவரை பிரதமராக இருந்தபோது என்னால் முடிந்தததை செய்தேன். முழுமையான ஆற்றல் இல்லாமல் நாட்டுக்கு தலைமை தாங்கும் பதவியை வகிக்க முடியாது. வகிக்கவும் கூடாது. அத்தகைய ஆற்றல் இல்லையென்றால், அந்த பதவிக்கு நீதி செய்ய எம்மால் முடியாது. எதிர்பாராமல் வரக்கூடிய சவால்களுக்கு முகங்கொடுப்பதற்கு மேலதிக ஆற்றல் தேவை. பதவிக்கு நீதியைச் செய்வதற்கு என்னிடம் அந்த மேலதிக ஆற்றல் இல்லை என்பதே கணிப்பு. நான் களைப்படைந்துவிட்டேன்” என்று பதவி விலகலை அறிவித்த செய்தியாளர்கள் மகாநாட்டில் அவர் கூறினார்.

  நல்ல ஒரு பிரதமராக வருவதற்கு எத்தகைய பண்பு தேவை என்று ஜசிந்தாவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு அவர்களின் மனப்போக்கை அறிந்து அதற்கேற்ப ஒத்துணர்வாற்றலுடன் செயற்பட வேண்டியதே ஒரு அரசாங்க தலைவருக்கு இருக்கவேண்டிய பண்பாகும் என்று பதிலளித்தார்.

  நியூசிலாந்து மக்கள் உங்களை எவ்வாறு நினைவில் வைத்திருக்கவேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்று அவரிடம் கேட்டபோது எப்போதும் இரக்கமுடையவளாக இருக்க முயற்சித்த ஒருத்தி என்று மக்கள் நினைவில் வைத்திருக்கவேண்டும் என்று கூறினார். மற்றவர்களின் அனுபவங்களை விளங்கிக்கொள்ள முயற்சிக்காவிட்டால் தீர்வுகளைக் கொடுப்பதுகடினம். அதுவே தன்னைப் பொறுத்தவரை முக்கியமான விடயம் என்றும் அவர்செய்தியாளர்களிடம் சொன்னார்.

  ஜசிந்தாவின் இந்த விளக்கம் தார்மீக விழுமியங்களில் வேரூன்றிய ஒரு அரசியலில் அவர் நம்பிக்கை கொண்டிருக்கிறார் என்பதைக் காட்டுகிறது. அத்தகைய அரசியல் எந்தளவுக்கு நடைமுறைக்கு பொருந்தும் என்று கேட்பவர்களே உலகில் ஏராளம் என்பதில் சந்தேகமில்லை.

  ஆனால் தனது பதவிக்காலத்தில் முகங்கொடுக்கவேண்டியிருந்த முக்கியமான நெருக்கடிகளுக்கு குறிப்பாக கிறைஸ்ட்சேரச் பள்ளிவாசலில் தீவிர வலதுசாரிகள் நடத்திய பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் கொவிட் –19 பெருந்தொற்று நோய் போன்ற பிரச்சினைகளை அவர் கையாண்ட விதம் தலைமைத்துவத்துக்கு முன்மாதிரியாக அமைந்ததுடன் உலகெங்கும் உள்ள தாராளவாதப் போக்குடைய சக்திகள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பெற்றது.

   ஆறு வருடங்களுக்கு முன்னர் பதவியேற்றபோது நியூசிலாந்து மக்களுக்கு வாக்குறுதிகள் பலவற்றை ஜசிந்தா நிறைவேற்றத் தவறியதாக கடந்தவாரம் பல அரசியல் விமர்சகர்களும் ஊடகங்களும் முன்வைத்தனர். அத்துடன் அவரின் செல்வாக்கில் அண்மைக்காலத்தில் ஏற்பட்டிருக்கும் வீழ்ச்சி அக்டோபரில் நடைபெறவிருக்கும் தேர்தலில் தொழிற்கட்சியின் வாய்ப்புக்களை பாதிக்கும் என்ற கருத்துக்கள் வெளியானதற்கு மத்தியில்தான் அவரது பதவிவிலகல் அறிவிப்பு வந்தது என்ற விமர்சனங்களும் முன்வைக்கப்படுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. ஆனால் பதவி விலகலுக்கு அதுவல்ல காரணம் என்று மறுத்த அவர் எதிர்வரும் தேர்தலில் தனது கட்சியினால் வெற்றியைப் பெறமுடியும் என்ற நம்பிக்கையை வெளியிட்டிருந்தார்.

   அரசியல்வாதிகள் மீது இத்தகைய விமர்சனங்கள் முன்வைக்கப்படுவது வழமையானதே. மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றிய ஒரு தலைவரை உலகில் காணமுடியாது. குறைந்த பட்சம் தனது நாடு எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினைகளை தீர்த்துவைப்பதற்கு தன்னாலியன்றவரை நேர்மையாக முயற்சித்த தலைவர் என்று மக்களின் நம்பிக்கையை பெற்றாலே அது பெரியவிடயம். இது ஜசிந்தாவுக்கும் பொருந்தும்.

  ஆனால், அவர் தனது பதவி விலகலை அறிவித்த விதம் உலகின் பாராட்டைப் பெற்றிருக்கிறது. ஆட்சித் தலைவர்கள் இரக்கமுடையவர்களாகவும் மற்றவர்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு செயற்படக்கூடியவர்களாகவும் இருக்கவேண்டும் என்பது அவரது நம்பிக்கையாக இருக்கிறது. இரக்கம் இல்லாத தலைவர்களினால் மக்களின் பிரச்சினைகளை புரிந்துகொள்ளமுடியாது என்பது அவரது எண்ணமாக உள்ளது. புத்தி சுவாதீனமற்ற ஒருவரைத் தவிர வேறு எவரும்  இதற்கு எதிராககருத்தை முன்வைக்கமாட்டார்.  

   முன்னர் குறிப்பிடப்பட்டதைப் போன்று எளிதாக அதிகாரத்தைக் கைவிட விரும்பாத தலைவர்கள் நிறைந்த உலகில் ‘பதவியில் தொடர தனக்கு போதுமான ஆற்றல் இல்லை’ என்று ஜசிந்தா வெளிப்படையாகவே ஒத்துக்கொண்டு பிரதமர் பதவியில் இருந்து மாத்திரமல்ல, அரசியலில் இருந்தும் ஓய்வுபெறுவதாக அறிவித்ததைப் போன்று நேர்மைத்திறனுடன் செயற்படஎத்தனை தலைவர்கள் தயாராயிருக்கிறார்கள்? வகிக்கும் பதவிக்கு நீதி செய்யமுடியவில்லை என்று கதிரையில் இருந்த இறங்கும் நேர்மை எத்தனை தலைவர்களிடம் இருக்கிறது.

  ஜசிந்தாவின் அந்த அறிவிப்பு அவரது பலவீனத்தை அல்ல, அரசியல்வாதிகளிடம் இன்று எம்மால் காணமுடியாமல் இருக்கும் நேர்மையையும் துணிவாற்றலையுமே வெளிக்காட்டியிருக்கிறது.

   அரசியல் சமுதாயம் பொதுச் சொத்துக்களை சூறையாடுபவர்களாலும் பழிபாவத்துக்கு அஞ்சாத சமூக விரோத சக்திகளினாலும் நிரம்பி வழிகின்ற இன்றைய காலகட்டத்தில் ஜசிந்தாவின் பதவிவிலகல் உலகிற்கு ஒரு முக்கியமான செய்தியைக் கூறுகிறது. அவர் அரசியல் பதவியை ஒரு பொறுப்பாக அன்றி வேறு எதுவுமாக பார்க்கவில்லை என்பது தெரிகிறது. அந்த பொறப்பை நிறைவேற்றக்கூடிய ஆற்றல் தங்களிடம் இல்லை என்று கண்ட அடுத்த தருணம் அரசியல் தலைவர்கள் விலகிவிடவேண்டும்.

  எம்மத்தியில் உள்ள அரசியல்வாதிகளில் எவராவது தன்னிடம் ஆற்றல் இல்லை, களைப்படைந்துவிட்டேன் என்று கூறுவார்கள் என்று எதிர்பார்க்க முடியுமா? முறைகேடான ஆட்சிமுறையை முன்னெடுப்பதில் அவர்களுக்கு களைப்பே கிடையாது.

   (நன்றிவீரகேசரி வாரவெளியீடு)