—- தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் —-
2001 இல் தமிழீழ விடுதலைப் புலிகளால் உருவாக்கப் பெற்ற ‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு’ 2008 மே 18 இல் முள்ளிவாய்க்காலில் முடிவுற்ற யுத்தத்தின் பின்னர் அவ்வப்போது வெட்டியொட்டும் வேலைகள் நடந்து இறுதியாக இலங்கைத் தமிழரசுக் கட்சியும்- தமிழீழ விடுதலை இயக்கமும் (ரெலோ) -ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியும் (புளொட்) இணைந்த மூன்று கட்சிக் கூட்டாக வந்து நின்றது.
இப்போது, 10.01.2023 அன்று நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்ட முடிவின்படி தமிழரசுக் கட்சி தனித்தியங்கத் தீர்மானித்ததும் அதனைத் தொடர்ந்து 14.01.2023 அன்று ‘ரெலோ’வும், ‘புளொட்’டும், ஈ பி ஆர் எல் எப் உம், தமிழ்த் தேசியக் கட்சியும், ஜனநாயகப் போராளிகள் கட்சியும் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டு ‘ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி’ எனும் அரசியல் கூட்டமைப்பாகத் தம்மைப் பிரகடனம் செய்துள்ளன. இக்கட்சிகளிலே தமிழ்த் தேசியக் கட்சியும் ஜனநாயகப் போராளிகள் கட்சியும் தேர்தல்கள் திணைக்களத்தினால் அரசியல் கட்சியாக அங்கீகரிக்கப்படாதவை (பதிவு செய்யப்படாதவை). தமிழ்த் தேசியக் கட்சியின் பிரதானிகளான அதன் தலைவர் சிறீகாந்தாவும் செயலாளர் சிவாஜிலிங்கமும் ஏற்கெனவே ‘ரெலோ’விலிருந்து பிரிந்தவர்கள். இப்போது ஒரு அரசியல் கூட்டமைப்பின் கீழ் ‘ரெலோ’வுடன் இணைந்துள்ளனர். இந்த இணைவு எவ்வளவு காலத்திற்கு நீடிக்குமோ தெரியாது.
ஈ பி ஆர் எல் எப் ஐப் பொறுத்தவரை தேர்தல்கள் திணைக்களத்தில் நடைமுறையிலுள்ள அரசியல் கட்சிகளின் பதிவேட்டில் அக்கட்சியின் பெயர் இல்லை. காரணம் ஈ பி ஆர் எல் எப் தான் கடந்த 2020 பாராளுமன்றப் பொதுத் தேர்தலின்போது தனது பெயரைத் ‘தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி’ என மாற்றியும் தனது சின்னமான ‘பூ’ வை ‘மீன்’ சின்னத்துக்கு மாற்றியும் பெயர் மாற்றம் பெற்ற கட்சியின் தலைவராக அப்போது பதிவு செய்யப்படாத கட்சியாகவிருந்த ‘தமிழ் மக்கள் கூட்டணி’த் தலைவர் சி.வி.விக்னேஸ்வரனைத் தேர்ந்தெடுத்து அவரை இத்தேர்தலில் யாழ்மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினராகவும் ஆக்கியது. ஆனால், சி.வி.விக்னேஸ்வரனின் ‘தமிழ் மக்கள் கூட்டணி’ இப்போது தேர்தல்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டு அக்கட்சிக்கு ‘மான்’ சின்னமும் கிடைத்துள்ளது. ஈ பி ஆர் எல் எப் என்ற பழைய பெயர்ப் பலகையோடு புதிய அரசியல் கூட்டமைப்பான ‘ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி’ க்குள் தமிழ் மக்கள் தேசியக்கூட்டணி (சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் செயலாளர் சிவசக்தி ஆனந்தன்) உள்வாங்கப்படத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைவரான சி.வி.விக்னேஸ்வரன் புதிய கூட்டணியில் இணையாது முரண்பட்டுத் தனியே 2020 பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் தன்னை வெல்ல வைத்த கட்சியையும் சின்னத்தையும் நன்றிகெட்டு மறந்து தனது தற்போதைய சொந்தக் கட்சியான தமிழ் மக்கள் கூட்டணியையும் ‘மான்’ சின்னத்தையும் முன்னிலைப்படுத்தி நிற்கிறார். முன்னாள் ஈ பி ஆர் எல் எப் பின் செயலாளர் நாயகமான சுரேஷ் பிரேமச்சந்திரனின் தோளில் ஏறியிருந்து இப்போது அவரின் காதைக் கடித்திருக்கிறார் சி.வி.விக்னேஸ்வரன். ‘வரத்தைக் கொடுத்துச் சிவனே தவித்தான்’ எனும் கதையாகி விட்டது சுரேஷ் பிரேமச்சந்திரனுக்கு.
‘புளொட்’ தலைவர் சித்தார்த்தன் அந்த அமைப்பின் அரசியல் கட்சியான ‘ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி’ (DPLF) யை ‘நங்கூரம்’ சின்னத்தில் வைத்திருந்த போதும் தமிழ் அரசியல் பொது வெளியில் பகிரங்கப்படுத்தாமல் ‘குத்து விளக்கு’ச் சின்னத்தில் ‘ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி’ என்னும் பெயரில் வேறொரு கட்சியையும் பதிவு செய்து வைத்திருந்தார். இக்கட்சியையும் சின்னத்தையும் பயன்படுத்தும் சந்தர்ப்பம் இப்போது அவருக்கு வாய்த்துள்ளது. அதனால்தான் புதிய அரசியல் கூட்டமைப்பு ‘ஜனநாயகத் தேசியக் கூட்டணி’ யின் குத்து விளக்குச் சின்னத்தில் எதிர்வரும் உள்ளூர் அதிகார சபைத் தேர்தலில் போட்டியிடுகிறது. அதேவேளை பெயர் மாற்றம் பெற்ற ஈபிஆர்எல்எப் இன் தமிழ்த் தேசியக் கூட்டணியின் ‘மீன்’ சின்னத்தில் போட்டியிடுவது பற்றியும் கலந்துரையாடப்பட்டது. தன்னுடைய கட்சியான தமிழ் மக்கள் கூட்டணியின் ‘மான்’ சின்னத்தில் போட்டியிட வேண்டுமென்ற பிடிவாதம் காரணமாகவே சி.வி.விக்னேஸ்வரன் முரண்பட்டு இப்புதிய கூட்டணியில் இணையாது வெளியில் நிற்கிறார் (வெளியேறியிருந்தார்).
சின்னங்கள் பற்றிய பிரச்சினைகள் ஒருபுறமிருக்க மறு பக்கத்தில் நாய்கள் எண்ணெய்ச் சீலையைப் பிய்த்தது போல் தனித்து விடப்பட்டுள்ள தமிழரசுக் கட்சியும் அதற்கு எதிராகவோ அல்லது மாற்றீடாகவோ புதிதாக எழுந்துள்ள ‘ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி’ யும் ‘தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு’ எனும் பெயர்ப் பலகையைத் தமக்கே எனப் பிய்த்துக்கொண்டிருக்கின்றன. குத்துவிளக்குச் சின்னத்தைக் கொண்டுள்ள ‘ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி’ தன்னைத் ‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு’ எனப் பெயர் மாற்றம் செய்யப் போவதாகத் தகவல். அப்படி நடைபெற்றால் தமிழரசுக் கட்சி ‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு’ எனும் பெயரைப் பயன்படுத்த முடியாமல் போகும். இந்தக் கெடுபிடியில் தமிழரசுக் கட்சியே தனது பெயரைத் ‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு’ என விரைந்து மாற்றிக் கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
நிலைமை இப்படியிருக்க சுமந்திரன், ‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் யார் என்பதைத் தமிழ் மக்களே தீர்மானிப்பர். அதற்கு நீண்ட காலம் காத்திருக்கத் தேவையில்லை. உள்ளூராட்சித் தேர்தலிலேயே அது தெரியும்’ எனக் கதை வேறு அளந்தார்.
இரா. சம்பந்தன் அவர்களோ, ‘பல கட்சிகள் உருவாகலாம். கட்சிகளைப் பயன்படுத்திப் பல கூட்டணிகள்-கூட்டமைப்புகள் அமையலாம். ஆனால், தமிழ் மக்களின் ஏகோபித்த கட்சி எது என்பதைத் தேர்தலில் மக்கள் தங்கள் வாக்குகளால் நிரூபித்துக் காட்டுவார்கள். எனவே ஐந்து தமிழ்க் கட்சிகளைக் கொண்டு நேற்று (14.01.2023) உருவான புதிய கூட்டணி தொடர்பில் நான் அலட்டிக் கொள்ள விரும்பவில்லையென 15.01.2023 அன்று ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார்.
‘துரோகி’க் கட்சி-‘தியாகி’க் கட்சியென்றும் ‘தமிழ்த் தேசியக் கட்சி’-‘தமிழ்த் தேசியம் அல்லாத கட்சி’ யென்றும் வகைப்படுத்தல்களில்லாமல் தமிழர்களுடைய அரசியல் பொதுவெளியில் இலங்கையின் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் செயற்படும் அனைத்துத் தமிழ் அரசியற் கட்சிகளும் ஒரு பொது வேலைத்திட்டத்தில் ஒன்றிணைந்து தமிழர் தரப்பில் ஓர் ஐக்கியப்பட்ட அரசியல் வியூகத்தை ஏற்படுத்துவதே தேவையானதொரு காலகட்டத்தில், தமிழ் அரசியல் கட்சிகளின் ஐக்கியத்தையும் அதனுடாகத் தமிழ் மக்களின் ஐக்கியத்தையும் யாசிக்கும்-நேசிக்கும் ஒரு உண்மையான-பக்குவப்பட்ட தலைவனின் கூற்றாக இரா.சம்பந்தனின் மேற்படி கூற்று அமையவில்லை.
சுமந்திரன் தமிழ்த் தேசிய அரசியலுக்குள் இரா.சம்பந்தனால் எப்போது (2010) நுழைக்கப்பட்டாரோ அன்றிலிருந்து இன்றுவரை சுமந்திரனின் வேலை தமிழ்க் கட்சிகளிடையே பகைமையை உருவாக்குவதாகத்தான் இருந்துவருகிறது.
அதேபோல்தான், சி.வி.விக்னேஸ்வரன் தமிழ்த் தேசிய அரசியலுக்குள் இரா.சம்பந்தனால் எப்போது (2012) இழுத்துவரப்பட்டாரோ அன்றிலிருந்து இன்றுவரை சி.வி.விக்னேஸ்வரனின் வேலை குழப்பங்களையும் குளறுபடிகளையும் ஏற்படுத்துவதாகவே இருந்துவருகிறது.
இரா.சம்பந்தன் அவர்களோ இவைகளுக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லாதது போல் அவருடைய வார்த்தைகளிலேயே கூறப்போனால் அலட்டிக் கொள்ளாமல் தனது அந்திம காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் வடக்குக் கிழக்குத் தமிழர்கள் அனைவரும் எதிர்வரும் உள்ளூராட்சி அதிகாரசபைத் தேர்தலில் என்ன செய்ய வேண்டுமெனில், தமிழ்த் தேசியக் கட்சிகளெனத் தம்மைத் தாமே குறி சுட்டுக்கொண்டு தமிழ் அரசியற் பொதுவெளியில் உலாவரும் இக்கட்சிகளுக்கும் இக்கட்சித் தலைவர்களுக்கும் பாடம் படிப்பிப்பதற்காகவேனும்-ஒரு மாற்றத்திற்கான (மாற்று அரசியலுக்கான) அத்திபாரத்தை இடுவதற்காகவேனும் இக்கட்சிகளை முற்றாக நிராகரிக்கும் வகையில் வாக்களிப்பதே ஆகும்.
வீட்டுச் சின்னத்தைக் கொண்டுள்ள தமிழரசுக் கட்சியென்றாலும் சரிதான் அல்லது ‘குத்துவிளக்கு’ச் சின்னத்தோடு புறப்பட்டுள்ள ‘ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி’யென்றாலும் சரிதான் அல்லது ‘மான்’ சின்னத்தில் தனியே தலைநீட்டியுள்ள சி.வி.விக்னேஸ்வரனின் ‘தமிழ் மக்கள் கூட்டணி’ யென்றாலும் சரிதான் அல்லது தந்தை செல்வா உருவாக்கிய ‘தமிழர் விடுதலைக்கூட்டணி’ தம்முடையதுதான் எனக் கூறும் ஆனந்தசங்கரியின் ‘உதயசூரியன்’ சின்னக் கட்சியென்றாலும் சரிதான் அல்லது ‘இரண்டு தேசம்; ஒரு நாடு’ என உச்சரித்துக் கொண்டு ‘சமஸ்டி’ க்குக் குரல் எழுப்பும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி (அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்) என்றாலும் சரிதான் இவையெல்லாமே ‘கொழுக்கட்டை’ களும் ‘மோதகம்’ களும்போல் உள்ளீடுகள் ஒன்றேதான்.
தமிழ் மக்களின் அரசியல் ஐக்கியத்தைச் சந்தி சிரிக்க வைத்துள்ள இத்தலைவர்களுக்கான தண்டனை அது யாராயிருந்தாலும் எதிர்வரும் உள்ளூர் அதிகார சபைத் தேர்தலில் இவர்களையெல்லாம் தமிழ் மக்கள் நிராகரிப்பதன் மூலம் மாற்று அரசியலுக்கான திசை நோக்கிய அடித்தளத்தை எதிர்வரும் உள்ளூர் அதிகார சபைத் தேர்தலில் இட வேண்டும்.