—- சட்டத்தரணி, பாடும்மீன். சு.ஸ்ரீகந்தராசா —-
“இது என் கதையல்ல,
என்னைத் தாங்கிய என் மண்ணின் கதை”
வானிலை அவதானத் திணைக்களத்திற்கு இடமாற்றம் பெற்று 1.11.1981 இலிருந்து கடமையாற்றத் தொடங்கிய நான், என் வாழ்வில் மறக்க முடியாத
பல அனுபவங்களை அங்கு பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பைப் பெற்றேன்.
நான் அங்கு சென்றபோது திணைக்களத்தின் பணிப்பாளராக மகாதேவா என்ற தமிழர் கடமையாற்றினார். ஏனயவர்கள் எல்லோரும் சிங்களவர்களாகவே இருந்தனர். நிர்வாகப் பகுதியிலும், கணக்குப் பகுதியிலும் என்னைத் தவிர வேறு தமிழர்கள் எவரும் இருக்கவில்லை.
இரண்டு உத்தியோகத்தவர்களைத் தவிர, சுற்றிவர எல்லோரும் தமிழர்களாக இருந்த பிரதேச அபிவிருத்தி அமைச்சிலிருந்து, பணிப்பாளர் ஒருவரைத் தவிரத் தமிழர்கள் எவரும் இல்லாதிருந்த ஒரு திணைக்களத்தில் கடமையாற்றுவது வித்தியாசமானதோர் உணர்வைக் கொடுத்தது. திறமையானவர்கள்மேல் பொறாமைப்படும் குணம் பெரும்பாலும் சிங்களவர்களிடம் இல்லை என்பதையும், திறமையான செயற்பாடுகளைப் பாராட்டி அங்கீகரிக்கும் மனப்பான்மை அவர்களுக்கு இருந்ததையும் பல தடவைகள் அங்கு கண்டும், அனுபவித்தும் மகிழ்ந்தேன்.
நிர்வாக அலுவலராக (ஏ.ஓ) இருந்தவர் எனக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்புகளை நான் நிறைவேற்றிய முறையிலும், துரிதத்திலும் மிகவும் திருப்தியடைந்தார். அதனால், அவர் மிகவிரைவிலேயே என்னில் மதிப்பும், நம்பிக்கையும் கொண்டவரானார். எனது படிப்புக்காகத் தனது தற்றுணிபு அதிகாரத்திற்கு அமைவாக, பல்வேறு வழிகளில் உதவி செய்தார். எனக்கு வேலை நாட்களைப் பதில்விடுமுறை நாட்களாக்கி (Lieu Leave), விடுமுறை நாட்களான சனி, ஞாயிறு தினங்களை வேலை நாட்களாக ஒழுங்கு செய்து, அங்கீகரித்து உதவினார்.
ஒரேயொரு தமிழன் என்பதாலோ, 1977 இனக்கலவரக் கசப்புணர்வு கடந்த ஐந்து வருடங்களாகச் சிறிது சிறிதாக மறைந்து போனதினாலோ, இரண்டு இனங்களுக்கிடையிலும் மெல்ல மெல்லப் புரிந்துணர்வு வளர்ந்து அல்லது சிங்களவர்களுக்குத் தமிழர்களின் மேல் பரிவுணர்வு மலர்ந்து வந்ததினாலோ, எதனாலோ, அங்கிருந்த பதவிநிலைச் சிங்கள உத்தியோகத்தர்கள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை எல்லோரும், அந்த இருபத்தியெட்டு வயதுத் தமிழ் இளைஞனுடன் மிகவும் நட்புணர்வுடன் பழகினார்கள்.
நான் சட்டமாணி இறுதிப் பரீட்சைக்குப் படித்துக்கொண்டிருக்கிறேன் என்பது அங்கு கடமையாற்றும் பலருக்குத் தெரியவந்துவிட்டது. என்னுடன் பேசக்கிடைக்கும் தருணங்களில் பலர் அவ்வப்போது என்னைப் பாராட்டினார்கள். ஊக்கம் அளித்தார்கள். உதவியாக இருந்தார்கள். அதிலும், அங்கிருந்த ஒரு தட்டெழுத்தாளினி, ஏனோ தெரியவில்லை என்னிடம் மிகுந்த அன்பு காட்டினாள். எனது வேலைகளில் சிலவற்றை அவள் எனக்காகச் செய்து உதவினாள். நாளாக நாளாக, நானாகவே சில வேலைகளை அவளிடம் ஒப்படைத்துவிடும் அளவுக்கு நெருங்கிய சினேகிதியானாள்.
இலங்கையிலே, இன்னும் ஒரு 77 “ஆவணி அமளி” இனிமேல் வரவேமாட்டாதென்ற நம்பிக்கை எல்லோர் மனங்களிலும் வேரூன்றி வளர்ந்துகொண்டிருந்த காலம் அது.
ஆனால் அந்த நம்பிக்கை அவ்வளவு விரைவில், அடுத்த வருடமே சின்னாபின்னமாகச் சிதறிப்போகுமென்றோ, இலங்கை வரலாறையே மாற்றி எழுதவைக்கும் 1983 ஜூலை இனக்கலவரம் வெடிக்கப் போகுமென்றோ அந்த நாட்களில் யாரும் கற்பனைகூடச் செய்திருக்கமாட்டார்கள்.
1983 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 23 ஆம் திகதி!
கொழும்புப் பல்கலைக்கழகத்தின் சட்டபீடத்தின் இறுதியாண்டுப் பரீட்சை நடந்துகொண்டிருக்கிறது. பரீட்சை மண்டபத்தில், நான்காவது பாடத்தின் இரண்டாவது வினாத்தாளுக்கு விடை எழுதிக்கொண்டிருக்கிறேன். காலை ஒன்பது மணிக்குப் பரீட்சை ஆரம்பமானது. நண்பகல் பன்னிரண்டு மணிக்கு முடிவடையும். குனிந்ததலை நிமிரமுடியாமலும், கண்ணிமைக்கக் கணப்பொழுதும் கிடைக்காமலும் மூளையின் வேகத்துக்கு இயன்றவரை ஈடுகொடுத்தபடி, கரம் பேனையை நகர்த்திக்கொண்டிருந்தது. பதினொரு மணியளவில் பரீட்சை மண்டபத்தில் இருக்கவேண்டிய அமைதிக்கு மாறாக, ஒருவித இனம்புரியாத சலசலப்பை உணரக்கூடியதாகவிருந்தது. தலையை நிமிர்த்திப் பார்த்தேன். பரீட்சை மேற்பார்வையாளர்கள் பரபரப்பாக அங்குமிங்கும் நடந்துகொண்டிருந்தார்கள். அவர்களது முகங்கள் இறுகியிருந்தன.
மண்டபத்தில் பரீட்சை எழுதிக்கொண்டிருந்தவர்களும் நிமிர்ந்து இடப்பக்கமும், வலப்பக்கமும் வெளியே பார்வையை எறியத் தொடங்கிவிட்டார்கள். இச்சையின்றி இயங்கிய என் கண்களும் வெளியே நோக்க… ஓ! எங்கும் புகைமண்டலமாகத் தெரிந்தது.
கொழுந்துவிட்டு எரியும் நெருப்பு சில இடங்களில் அசுர வேகத்தில் மேலெழுந்து விரிந்துகொண்டிருந்தது. குபீர் குபீரெனப் பல நிறங்களில் நெருப்புக் கலந்த புகை மண்டலம் கறுப்பாகி மேலெழுந்து வானிலே கலந்து கொண்டிருந்தது. ஏதோ தீவிபத்தாக இருக்கும் என்று முதலில் எண்ணினேன். ஆனால், அது வெறும் சாதாரண தீவிபத்து அல்ல, ஏதோ விபரீதம் நடக்கிறது என்று எனது உள்மனம் உறுத்தியது.
1977 ஆவணி அமளி எனது நினைவுக்கு வந்து நெஞ்சை உருக்கியது. பகீரென்று ஏற்பட்ட பயஉணர்வு அடிவயிற்றில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியதைப் போலத் தீயாய்ச் சுட்டு, உடலெங்கும் வலியாய்ப் பரவியது. விரல்கள் நடுங்கின. பேனாவுக்கும் விரல்களுக்கும் இடையில் இருந்த நெருக்கமான பிடிப்பில் விரிசல் ஏற்பட்டது. எழுத்துக்கள் உருமாறி, அளவிலும் பெரிதாகி, வரிகளும் தடுமாறி ஐந்து சொற்களுக்கு மேல் இடம்பெற வேண்டிய ஒவ்வொரு வரியிலும் இரண்டு, மூன்று சொற்களே எழுதுப்பட்டு, ஒரு பக்கத்தில் எழுதக்கூடிய விடயம் ஐந்து பக்கங்களை நிரப்பிக்கொண்டிருக்க… ஒருவாறு மதியம்12.00 மணியாயிற்று. பரீட்சை மேற்பார்வையாளர்கள் விடைத்தாள்களை விரைந்தோடிச் சேகரித்தார்கள். சிலரிடமிருந்து விடைத்தாள்களைப் பெற்றுக்கோண்டபோது அவை தவறிக் கீழேவிழுந்தன. பொறுக்கியெடுத்து அடுக்கி வைத்தார்கள். ஒவ்வொரு செயலும், ஒவ்வோர் அசைவும் வழமைக்கு மாறாக இருந்தது. அவர்களின் முகங்களில் தெரிந்த கலவரத்தையும், செயல்களில் இருந்த பதற்றத்தையும் பார்த்து காரணம் தெரியாமலே என் சிந்தை கலங்கியது. அப்போது தலைமை மேற்பார்வையாளர் விடுத்த அறிவிப்பு நிலைமையை உணர்த்தியது.
“இன்றுடன் உங்கள் பரீட்சை இடைநிறுத்தப்படுகிறது. கலவரம் தொடங்கிவிட்டது. அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மீண்டும் பரீட்சை எப்போது தொடங்கும் என்பது பின்னர் உங்களுக்கு அறியத்தரப்படும்.” அவர் ஒரு சிங்களவர். ஆங்கிலத்தில் கூறினார். நிசப்தமாக இருந்த மண்டபத்தில் சத்தம் எழுந்தது.
“நான் நினைச்ச நான்…..”
“எனக்குத் தெரியும் என்னவோ.. நடக்கப்போகுதெண்டு…”
“காலையில நான் வரேக்குள்ள மருதானையில இரண்டு கடை எரிஞ்சு கிடந்தது… அப்பவே நான் நினைச்சன்…”
“எப்படாப்பா மிச்சப்பாடம் நடக்கும்…?
“மிச்சப்பாடமா..? மண்ணாங்கட்டி…. உயிரோட போய்ச் சேருவமா எண்டு தெரியாமல் கிடக்கு…. அதுக்குள்ள… மிச்சப்பாடமும்.. சொச்சப்பாடமும்..!”
“எந்தப் பக்கத்தால போறது?”
“நடந்து போவமா?”
“டாக்சியில போறதுதான் நல்லது..”
“டாக்சியிலயா.. டாக்சிய மறிப்பாங்கள்…. எழுபத்தேழுல எங்கட மாமாவுக்கு அப்பிடித்தான் நடந்தது. இழுத்தெடுத்து உயிரோட கொழுத்தினவங்கள்”
“டாக்சிக்காரனே குத்திப்போடுவான்”
பலரும் இப்படிப் பலவிதமாகக் கதைத்துக்கொண்டிருக்க, என்னையறியாமலே நான் அந்த இடத்தைவிட்டு அகன்றேன். கொள்ளுப்பிட்டியிலிருந்து நடையாய் நடந்து சென்றேன். கொழும்பு பொது வைத்தியசாலைக்கு அருகாமையில் வரும்போது வீதியிலே பல கார்கள் எரிந்துகொண்டிருந்தன. உடைந்த தளபாடங்கள், நொருங்கிய கண்ணாடிகள், சேதமாக்கப்பட்ட பொருட்கள் தெருக்கள் எல்லாம் சிதறுண்டு, பரவிக்கிடந்தன. ஆங்காங்கே தொட்டம் தொட்டமாக இரத்தத் துளிகள் தென்பட்டன.
ஆம்! 1956 ஆம் ஆண்டு முதல் கொழும்பு வீதிகளுக்குத் தமிழனின் குருதியினால் குடமுழுக்கு நடைபெறுவது ஒரு சடங்காகிவிட்டது!
நான் தெமட்டகொடைக்குப் போக வேண்டும். அங்குதான் நான் தங்கியிருந்தேன். அங்கு செல்லும் வழியைத் தீர்மானிக்க முடியவில்லை. தெருவில் நடந்துகொண்டிருந்த பயங்கரவாதச் செயல்களைப் பொறுத்து, ஆபத்து இல்லாத வழி அதுதான் என்று அப்போது என் மனதில் தோன்றியபடி, என் கால்கள் இயங்கின. எனது முகத்திலே தாடி வேறு வளர்ந்திருந்தது. பரீட்சைக்கு ஆயத்தம் செய்தபோது வழிக்காமல் விட்டதால் கருகருவென்று அடர்ந்து வளர்ந்துவிட்ட இரண்டு மாதப் பயிர்! ஆனால் தாடியினால் எனக்கு ஓர் அனுகூலமும் இருந்தது. குழந்தைப் பருவத்தில் காது குத்திய அடையாளம், துளையும் தூராமல் இன்னும் எனக்கு இருக்கிறது. அதனைத் தாடி ஓரளவு மறைத்திருந்தது. காது ஓட்டையைப் பார்த்துதான் கழுத்தை அறுப்பார்களாம். முன்னர் நான் கேள்விப்பட்ட அந்தத் தகவல் அந்த நேரத்திலா எனது நினைவுக்குவரவேண்டும்? புஞ்சிபொறல்லை சந்திக்கு வந்து சேர்ந்துவிட்டேன். அங்கிருந்து சனசந்தடிமிகுந்த மருதானை வீதியூடாகத் தெமட்டகொடை நோக்கி நடந்தேன். தடால் புடால் என்று பயங்கரச் சத்தம் எல்லாப் பக்கங்களில் இருந்தும் தொடர்ந்து கேட்டுக்கொண்டேயிருந்தது. தொடர்மாடி வீடுகளில் இருந்து பொருட்களைத் தெருவிலே வீசிக்கொண்டிருந்தார்கள். வீதிகளில் அவற்றைச் சிலர் தீயிட்டுக் கொழுத்திக்கொண்டிருந்தார்கள். தொடர்மாடி வீடுகளில் இருந்து கிரீச்சிடும் அவலக்குரல்கள் காதில் நுழைந்து நெஞ்சைப் பிழந்துகொண்டிருந்தன.
“அன்ன துவனவா…. யண்ட… கப்பண்ட (அதோ ஓடுறாங்கள் போ வெட்டு)
பறதெமலோ… அபே ரட்ட….. ஐயோ… கபண்ட எப்பா.. கபண்ட எப்பா… ஐயோ… (பறத்தமிழன்…. எங்கள் நாடு…. ஐயோ…. வெட்டாதீங்க… வெட்டாதீங்க.. ஐயோ!)
கஹண்டெப்பா… கபண்டெப்பா… ஐயோ..”
(அடிக்காதீங்க…. வெட்டாதீங்க…..)
ஆவேசக் கோசங்களும், அவலக் கூக்குரல்களும் கலந்து தெருவெல்லாம் ஒரே அல்லோல கல்லோலமாக இருந்தது.
திடீரென்று ஓர் அமைதி! தூரத்தில் ஜீப் வண்டியொன்று வந்துகொண்டிருந்தது. கைகளிலே கத்திகள், தடிகளுடன் நின்றவர்கள் ஜீப்பைக் கண்டதும் ஓடிவிடுவார்கள் என்றெண்ணிக் கவலை சிறிதளவு குறைந்தது. ஆனால் அவர்கள் வீதியிலிருந்து சற்று விலகி நின்றார்கள். வேகமாக வந்துகொண்டிருந்த ஜீப்பில் ஆயுதம் தரித்த காவலர்கள் இருந்தார்கள். கும்பல் நின்றிருந்த இடத்தை அண்மித்ததும் ஜீப் தனது வேகத்தைக் குறைத்துக்கொண்டது. எனக்குள் ஒரு தென்புவந்தது. ” ஓ! பொலீஸ் வந்துவிட்டது. இனிப்பயமில்லை” என்று மனம் சொன்னது. வேகத்தைக் குறைத்த ஜீப், கூட்டம் நின்ற இடத்தைத் தாண்டியதும், மீண்டும் வேகமாகத் தன்பாட்டில் சென்றுகொண்டிருந்தது. “என்ன இது? காடையர்கள் “வேலை”யை ஒழுங்காகச் செய்கிறார்களா என்று கண்காணித்துச் செல்வதற்காகவா அந்த ஜீப் வந்தது?” எனது பயம் இருமடங்காகியது. நடையின் வேகத்தைக் கூட்டினாலும் சந்தேகப்படுவார்கள். சாதாரணமாக (?) நடந்தேன். புஞ்சிபொரல்லைச் சந்தியிலிருந்து மருதானைப் பக்கம் இரண்டு நிமிடங்கள் நடந்திருப்பேன். பல குரல்களின் மரண ஓலம் ஒரு காருக்குள் இருந்து பலமாகக் கேட்டது. அந்தக் காரைச் சுற்றி நின்று சிலர் தங்களின் கையில் கிடைத்த ஆயுதங்களால் காரைப் பலமாகத் தாக்கிக்கொண்டிருந்தார்கள். காரின் கண்ணாடிகள் அடித்து நொருக்கப்பட்டன. உயிருக்கும் மன்றாடும் ஆண் குரல், பெண்குரல், குழந்தைகளின் குரல் எல்லாம் ஒன்றாகக் கேட்டுக்கொண்டிருந்தன.
காருக்கு மேலே, பெட்டிகளும், பொட்டலங்களும் அள்ளிப்போடப்பட்டு, ஒழுங்கில்லாமல் கட்டிவைக்கப்பட்டிருந்தன. தங்கள் இருப்பிடத்தில் அபாயம் என்று எங்கோ தப்பியோட வந்த குடும்பமாக இருக்க வேண்டும். எங்கிருந்தோ ஓடிவந்த காடையன் ஒருவன் காரின்மேல் பெற்றோலை ஊற்றினான். எங்கிருந்து நெருப்பு வந்தது என்று தெரியவில்லை. குபீர் என்று பற்றிப்பிடித்த நெருப்பு காரை முற்றாக மறைத்தது. உள்ளே ஓலமிட்டுக்கொண்டிருந்தவர்கள் கண்ணாடிகளை உடைத்துக்கொண்டும்,
கதவுகளைத் திறந்து தள்ளிக்கொண்டும் குற்றுயிரும் குறையுயிருமாக வெளியே பாய்ந்து விழுந்தார்கள். விழுந்தவர் ஒருவர், நிலத்தில் கையை ஊன்றி எழுந்து நிமிர்ந்தபோது காடையன் ஒருவனின் கத்தி அவரது கழுத்தில் இறங்கியது. காரினுள்ளே இன்னும் யாரோ இருந்திருக்கவேண்டும். கையிலே குழந்தையுடன் வெளியே பாய்ந்து இறங்கிய அந்தப் பெண் காரை நோக்கிக் கத்திய தோரணை அப்படி உணர்த்தியது. கனத்த தடியொன்று அவளின் தலையில் விழுந்தது. தாயும் குழந்தையும் தார் வீதியிலே சரிந்தார்கள். ஒரேயொரு முறை குழந்தையின் அலறல் உரத்துக்கேட்டது. உடல் வலியினாலா.. அல்லது உயிர் போய்விட்டதாலா….. விழுந்த குழந்தையிடமிருந்து எந்தச் சத்தமும் பின்னர் கேட்கவே இல்லை. கார் முற்றாக எரிந்துகொண்டிருந்தது.
(தொடரும்)