~~~ தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் ~~~
ஜனநாயகப் போராளிகள் கட்சியின் முதலாவது தேசிய மாநாடு யாழ்ப்பாணத்தில் 17.12.2022 அன்று நடைபெற்றது. இதில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா-தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் (ரெலோ) பா.உ. வினோநோதராதலிங்கம் – வடக்கு மாகாணசபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் (தமிழரசுக் கட்சி) – ஈ பி ஆர் எல் எப் சுரேஷ் பிரேமச்சந்திரன்-தமிழ்த் தேசியக் கட்சிச் செயலாளர் சிவாஜிலிங்கம் (முன்னாள் ரெலோ) ஆகிய தமிழ் அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
தமிழரசுக் கட்சியின் ஒரு பிரிவினரும் ஈபிஆர்எல்எப் உம் தமிழ்த் தேசியக் கட்சியினரும் ஜனநாயகப் போராளிகள் கட்சியை ஒட்டி நிற்கிறார்கள் என்பது தெரிகிறது.
‘ரெலோ’ த் தலைவர் செல்வம் அடைக்கலநாதனும் ‘புளொட்’ தலைவர் சித்தார்த்தனும் மாநாட்டில் கலந்து கொள்ளவில்லையென்பதால் அக்கட்சிகளின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு என்னவென்று தெரியவில்லை. அதுபோலவே சி.வி.விக்னேஸ்வரனும் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் இம்மாநாட்டில்க் கலந்து கொள்ளவில்லையென்பதால் அவர்களுடைய (கட்சிகளின்) நிலைப்பாடும் என்னவென்று தெரியவில்லை. இரா.சம்பந்தனும் சுமந்திரனும் இதில் கலந்து கொள்ளவில்லையென்பதால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் (பங்காளிக் கட்சிகளின்) கூட்டு நிலைப்பாடு என்னவென்றும் தெரியவில்லை. தேர்தல் ஒன்று வந்தால்தான் இவர்களின் ‘கூட்டு’ ம் வெளிப்படும்; ‘குட்டு’ ம் வெளிப்படும்.
ஜனநாயகப் போராளிகள் கட்சி இம்மாநாட்டில் தனது கட்சியின் கொள்கைப் பிரகடனத்தை வெளியிட்டுள்ளது. இவர்களது கொள்கை விளக்க அறிக்கையில் ‘தமிழ் மக்களின் அரசியல் தீர்வைவென்றெடுக்க 13 ஆவது திருத்தச் சட்டத்தை அடிப்படையாக வைத்து பிராந்தியங்களின் சுயாட்சி அதற்கு மேலான முறை ஒன்றை ஸ்தாபித்தல் மற்றும் பிராந்திய வல்லரசான இந்தியா தலைமையிலான சர்வதேச மத்தியஸ்தம் ஏற்படுத்தப்பட வேண்டும்’ என்றும் கூறப்பட்டுள்ளது.
போதாக்குறைக்குத் தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராசாவும் ஏதோ புதிதாகச் சொல்வது போல ‘தமிழ் மக்களுக்கான தீர்வு பற்றிப் பேசுவதாயின் தமிழர்களின் விடுதலையை நேசிக்கும் கட்சிகளையும் ஒன்றிணைத்து சர்வதேச நாடுகளின்- குறிப்பாக இந்தியாவின்-அனுசரணையுடன் இலங்கை அரசுடன் பேச வேண்டும்’ என்று 18.12.2022 அன்று தமிழரசுக் கட்சியின் பவள விழாவுக்கான (?) ஆரம்ப நிகழ்வுகள் அவரது தலைமையில் கிளிநொச்சியில் நடைபெற்ற போது கூறியிருக்கிறார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அண்மைய பேச்சு வார்த்தைக்கான அழைப்பு வெளிவந்ததன் பின்னர் சுரேந்திரன் பா.உ.(ரெலோ) முன்மொழிந்து பின் ஈபிஆர்எல்எப் சுரேஷ் பிரேமச்சந்திரன் வழிமொழிந்து தொடர்ந்து ‘ரெலோ’ த் தலைவர் செல்வம் அடைக்கலநாதனும் ஒத்தூதி 13.12.2022 அன்று நடைபெற்ற பேச்சு வார்த்தைக்கு முதல் நாள் சி.வி. விக்னேஸ்வரன் வெளியிட்ட ஊடக அறிக்கையில் குறிப்பிட்ட விடயங்களுக்கும் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் கொள்கைப் பிரகடனத்திற்குமிடையில் வார்த்தைப் பிரயோகங்களைத் தவிர அவற்றின் ஒட்டுமொத்த விடயங்களில் வேறுபாடு தெரியவில்லை. எல்லாமே உள்ளீடு ஒன்றான கொழுக்கட்டையும் மோதகமுமாக வேயிருக்கின்றன.
இவர்கள் எல்லோருமே தென்னிலங்கை- இந்து சமுத்திரப் பிராந்திய -பூகோள அரசியல் நீரோட்டங்களைக் கவனியாது அரைத்த மாவையே மீண்டும் மீண்டும் அரைத்து ஆளுக்கு ஆள்கட்சிக்குக் கட்சி விருதுக்கு வேட்டையாடிக் கொண்டிருக்கிறார்கள். அதாவது தத்தம் அரசியல் மேதாவித்தனங்களை விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். எதனைக் கேட்பதென்றாலும் எதனைச் செய்வதென்றாலும் முதலில் இலங்கைத் தமிழர் தரப்பிற்குத் தேவை ஐக்கியப்பட்ட ஓர் அரசியல் திரட்சியாகும் என்பது பற்றிய பிரக்ஞை இவர்கள் எவரிடமுமே காணப்படவில்லை.
இலங்கையில் நடந்த 1983 இனக் கலவரத்தைத் தொடர்ந்தே இலங்கைத் தமிழர் விவகாரத்தில் இந்தியாவின் நேரடித் தலையீடு ஏற்பட்டது. அந்தத் தலையீட்டின் விளைவுதான் 1987இல் கொழும்பில் கைச்சாத்தான இந்திய – இலங்கை சமாதான ஒப்பந்தம். அதன் பின் 2009 மே 18 வரை-முள்ளிவாய்க்கால் யுத்தம் வரை என்ன நடந்தது என்பதை விளக்க வேண்டிய அவசியமில்லை. அவை அனைவரும் அறிந்ததே.
இலங்கைத் தமிழர்களுக்கு-வடக்குக் கிழக்கு தமிழர்களுக்கு ஓர் அதிகாரப் பகிர்வு முறைமையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென்பதே ஆரம்பத்திலிருந்தே இந்தியாவின் நோக்கமே தவிர, (இலங்கை அரசாங்கம் இந்திய-இலங்கை சமாதான ஒப்பந்தத்தை ஒருதலைப் பட்சமாகமீறியிருந்தால், இலங்கைத் தமிழர்களுக்கு எந்த விதமான தீர்வைப் பெற்றுக்கொடுத்திருக்குமென்பதை அறிந்து கொள்வதற்கான சந்தர்ப்பத்தையோ கால அவகாசத்தையோ தமிழர் தரப்பு இந்தியாவுக்கு வழங்கவில்லையென்பது வேறு விடயம். இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி “வடக்குக் கிழக்குப் பகுதிகளைத் தமிழ் மக்களின் பாரம்பரியப் பிரதேசங்களாகவும் அவை இணைந்த மாகாணங்களாகத் தமிழ் மக்களின் சுயாட்சிக்கான அடிப்படைகளாக ஏற்றுக்கொள்ள ஜே.ஆரைக் கொண்டு வந்துள்ளோம். எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் அடைந்து கொள்ள முடியாது. கட்டம் கட்டமாகத்தான் முன்னேறவேண்டும்” என்று கூறிய கூற்று மனம் கொள்ளத் தக்கது) தமிழீழத்தைப் பெற்றுக் கொடுப்பது அல்ல என்பதை இலங்கைத் தமிழர் தரப்பு தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். இதனைப்புரிந்து கொள்ள மறுத்து நேச சக்தியாகவிருந்த இந்தியாவை எதிரியாக்கியதே முள்ளிவாய்க்காலில் நடந்த பேரழிவுக்கு முழுக்காரணம்.
முன்னாள் ஜனாதிபதி ஜே ஆர் ஜெயவர்த்தன மனம் விரும்பித் தமிழர்களுக்கு நன்மை செய்யவேண்டுமென்று எண்ணி இந்திய-இலங்கை சமாதான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவுமில்லை; 13ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றவுமில்லை; மாகாண சபைகளை உருவாக்கவுமில்லை. எல்லாமே இந்தியாவின் அழுத்தம் காரணமாக விளைந்தவைதான். இந்தியா தலையிடாமல்விட்டிருந்தால் மாகாண சபை முறைமை கூட சாத்தியமாகியிருக்கமாட்டாது.
இலங்கைத் தமிழர் தரப்பு இதனைச் சரிவரப் பயன்படுத்திக் கொள்ளாமல் இலங்கைத் தமிழர் விவகாரத்தில் இந்தியா தலையிட்டதற்குக் ‘கைமாறாக’ இந்தியாவைச் ‘சங்கை’ குறைத்து அனுப்பியதுதான் நடந்தது. அதனால் இலங்கைத் தமிழர் விவகாரத்தில் இந்தியா நல்லது செய்யவந்து தனது கையைச் சுட்டுக் கொண்டதுதான் கடந்த கால வரலாறு.
இந்தியாவைப் பொறுத்தவரை கடந்த காலங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவுக்கெதிராக இழைத்த இராணுவ மற்றும் அரசியல் துரோகங்களின் காரணமாக இலங்கைத் தமிழ்ச் சமூகம் ஒரு நன்றி மறந்த-நம்ப முடியாத சமூகமென்றே எடைபோட்டு வைத்துள்ளது. இந்த எடுகோளுடன்தான் எல்லாவற்றையும் நோக்குகிறது. மட்டுமல்லாமல் இந்தியாவுக்கெதிரான-இந்திய – இலங்கை சமாதான ஒப்பந்தத்தையெதிர்த்த- இந்திய அமைதிகாக்கும் படையினரோடு போர் தொடுத்த- இந்திய – இலங்கை சமாதான ஒப்பந்தத்தின் கைச்சாத்தியான இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியைக் கொலை செய்த தமிழீழ விடுதலைப் புலிகளையே அல்லது புலிகளின் முகவர்களையே பெரும்பான்மையான வடக்குக் கிழக்குத் தமிழர்கள் இப்போதும் ஆதரித்து நிற்கிறார்கள். இந்தச் சூழலில்-இந்த நிலைமை நீடிக்கும் வரை இன்னுமொரு முறை இந்தியா, தமிழ்த் தேசியக் கட்சிகளும் அதனோடு இணைந்து இப்போது ஜனநாயகப் போராளிகள் கட்சியும் எதிர்பார்ப்பது போல் பேச்சுவார்த்தைக்குத் தலைமை வகிக்கவோ-மேற்பார்வை செய்யவோ-மத்தியஸ்தம் வகிக்கவோ வரப்போவதில்லை. இந்தியாவின் சம்மதமில்லாமல்-அனுசரணயில்லாமல் வேறு எந்த சர்வதேச நாடும் இவ்விவகாரத்தில் தலையீடு செய்யப் போவதுமில்லை.
இத்தகைய யதார்த்தச் சூழ்நிலையில் தமிழர் தரப்பு இந்தியாவைத் தம் பக்கமிழுக்க வேண்டுமாயின் ‘உள்ளக சுயநிர்ணயம்’- ‘சமஸ்டி’-‘பிராந்தியங்களின் சுயாட்சி’- ‘சர்வதேச மத்தியஸ்தம்’- ஐ.நா. என்கின்ற விடயங்களைப் பேச்சு வார்த்தை மேசைக்கு எடுத்துச் சென்று வாயைச் சப்பாமல்,-வார்த்தைகளோடு விளையாடாமல் தமிழர் தரப்பினர் எல்லோரும் ஒன்றிணைந்து 13ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின் முழுமையான அமுலாக்கத்தை ஓர் ஒற்றைக்கோரிக்கையாக முன்வைத்தால் மட்டுமே இலங்கைத் தமிழர் பிரச்சினையைத் தீர்க்கும் விவகாரத்தில் இந்தியா பங்காளராகக் களம் இறங்குமே தவிர மற்றபடி அது பார்வையாளராகவே இருக்கும். இந்தியா பார்வையாளராக இருக்கும் வரை இலங்கைத் தமிழருக்கான அதிகாரப்பகிர்வு இன்னும் இழுபட்டுக்கொண்டே செல்லும்.