கண்டது கற்க : “வழிப்போக்கர் புத்தகப் பெட்டகம்…..!” மௌன உடைவுகள் – 15

கண்டது கற்க : “வழிப்போக்கர் புத்தகப் பெட்டகம்…..!” மௌன உடைவுகள் – 15

அரங்கம் வாசகர்களே…! நண்பர்களே….!

வணக்கமும், புத்தாண்டு வாழ்த்துக்களும்.

2021 நத்தார் பண்டிகைக்கும் 2022 புத்தாண்டுக்கும் இடைப்பட்ட விடுமுறை நாளொன்றின் காலைப்பொழுதில்… சூரியன் சிரித்த வேளையில்….. ஒரு நடைப்பயிற்சி…!

சுவிற்சர்லாந்தில் சிவப்பு வாவி (ROTSEE) என்று ஜேர்மன் மொழியில் அழைக்கப்படுகின்றதும் , சர்வதேச தோணி ஓட்டப்போட்டிக்குப் பெயர்பெற்றதும், இயற்கை வனப்புக்களையும் கொண்ட அந்த சிவப்பு வாவியைச் சுற்றி நடக்கப் சென்றிருந்தான் இவன். சுற்றிவருவதற்கு வேகத்தைப் பொறுத்து 90 முதல் 120 நிமிடங்கள் எடுக்கும். அப்போது அவ்வழியில் ஒரு புத்தகப்பெட்டகம் கண்ணில் பட்டது. இது பற்றி செய்திகள் வாயிலாக அறிந்திருந்தபோதும் அன்றுதான் அதைக் காணக்கிடைத்தது.

உலகின் பல நாடுகளில் பழைய பொருட்களை குப்பைத்தொட்டியில் வீசுவதற்குப் பதிலாக மீளப்பயன்படுத்தல் செயற்திட்டங்கள் அண்மைக்காலமாக நடைமுறைப்படுத்தப்படுகின்றன. தனியார், பொது அமைப்புக்கள், உள்ளூராட்சி நிறுவனங்கள் என்பன இதில் ஆர்வம் காட்டுவது அதிகரித்துவருகிறது. உணவுப்பொருட்கள் தொடக்கம் தளபாடங்கள் வரை இதில் அடங்கும். அந்த மீளப் பயன்படுத்தல் வரிசையில் இது புத்தகங்களை மீளப் பயன்படுத்தல் திட்டம்.

இவன் இதனை வழிப்போக்கர் புத்தகப்பெட்டகம் என்று அழைக்கிறான். 

பலநாடுகளில் வெவ்வேறு பெயர்களில் இத்திட்டம் அழைக்கப்படுகிறது. புத்தகப்பகிர்வு-  BOOK SHARING , திறந்த புத்தக றாக்கை – OPEN BOOK SHELF, திறந்த நூலகம் -OPEN LIBRARY என்றெல்லாம் கூப்பிட்டாலும் செயற்பாடும் , நோக்கமும் ஒன்றுதான்.  

அமெரிக்கா “இலவச நூலகம் – FREE LIBRARY” என்று கூப்பிடுகிறது .பல நாடுகளில் பொது  டெலிபோன் அறைகள் இன்று பயன்பாடற்றுள்ளன . இதற்கு பொருத்தமானவையாக இவை பயன்படுகின்றன. குறிப்பாக இங்கிலாந்தின் தனித்துவ அடையாளமாக விளங்கும் டெலிபோன் அறைகள் இதற்கு மிகவும் பொருத்தமானவை.

மக்கள் கூடும் பூங்காக்கள், வாவிக்கரைகள், கடற்கரைகள், தொங்கோட்டப் பாதைகள், நடைப்பயிற்சி வழிகள், மலையடிவாரம், மலை உச்சிகள், வீதியோரங்கள்… என்று எல்லா இடங்களிலும் புத்தக அலுமாரிகளை அமைத்து விரும்பியவர்கள் தம்மிடம் உள்ள புத்தகங்களை பெட்டகத்தில் கொண்டு வைப்பதற்கும், விரும்பியவர்கள் எந்த நிர்வாகப் பதிவு நடைமுறைகளும் இன்றி எடுத்துச்சென்று படிப்பதற்குமான ஒரு அருமையான முயற்சி.

புத்தகங்களை வீட்டுக்கு எடுத்துச் செல்லலாம் வாசித்து முடிந்த பின்னர் ஏதாவது ஒரு புத்தப்பெட்டகத்தில் மீளக் கொண்டு வைக்கலாம். ஆனால் அதுவும் கட்டாயம் இல்லை. அதுபோல் எம்மிடம் உள்ள புத்தகங்களையும் கொண்டு வைத்துவிட்டு நாம் அங்குள்ள வேறு புத்தகங்களை எடுத்துக் கொண்டும் வரலாம். ஆனால் எதுவும் கட்டாயம் இல்லை. எந்த காவற்காரனும் அங்கு இல்லை. பெட்டகத்தின் கதவுகள் திறந்தே இருக்கும். கதவுகள் இருப்பது திருட்டைத் தடுப்பதற்காக அல்ல மாறாக வானிலை மாற்றங்களால்  நூல்கள் பழுதடையாமல் இருப்பதற்காக. 

ஆம்….!  கண்ணில் பட்ட பெட்டகத்திற்குள் கண்களால் துழாவினான். 

ஏற்கனவே இவனுக்கு அறிமுகமான ஒரு சினிமா நாவல் கண்ணில் பட்டது. திரைப்படம் பார்த்திருக்கிறான் ஆனால் நாவலை வாசித்ததில்லை. தெரிந்த கதையாக இருந்தாலும், என்னதான் குறைந்து விடப்போகிறது என்று எடுத்துக்கொண்டான். கதை தெரியும் என்பதால் ஜேர்மன் மொழியில் வாசிப்பதற்கு இலகுவாகவும் இருக்கும், ஆர்வத்தையும் அதிகரிக்கும் என்று மனம் சொன்னது.

NOT WITHOUT MY DAUGHTER..!

நாவலின் நேரடி ஜேர்மன் மொழிபெயர்ப்பு : ‘NICHT OHNE MEINE TOCHTER”

நாவல் ஆசிரியை: பேற்றி மஃமோடி – BETTY MAHMOODY. பிறப்பால் அமெரிக்கரான நாவல் ஆசிரியை இருபது ஆண்டுகளாக அமெரிக்காவில் வாழும், ‘ டாக்டராக தொழில் புரியும் ஈரானியரான   மஃமோடியை திருமணம் செய்கிறார். ஏற்கனவே முதல் திருமணத்தில் இரு மகன்கள் இருக்கும் பேற்றிக்கு இது இரண்டாவது திருமணம். இரண்டாம் திருமணத்தின் மூலம் ஒரு மகள் பிறக்கிறாள் பெயர் MAHTAB -மஃதாப். பேர்ஸிய -ஈரானிய மொழியில் “நிலா”. இவளுக்கு நான்கு வயதாக இருக்கும் போது தகப்பனின்/கணவனின் ஆணிவேரைத் தேடி இருவார விடுமுறையில் மூவரும் ஈரான் வருகிறார்கள். 

இதுவரை அமெரிக்கனாக வாழ்ந்த மோடியின் தத்தெடுத்த வாழ்வை தீடீரென ஈரானிய ஒரிஜினல் வாழ்வியல் விழுங்கிவிடுகிறது. பேற்றிக்கும் மோடிக்கும் இடையே நாளுக்கு நாள் முரண்பாடுகள் அதிகரிக்கின்றன.   அதிகரித்தது உறவின் இடைவெளியும் தான். ஏற்பட்ட இடைவெளியில் அமெரிக்க -ஈரானிய அரசியல் புகுந்து விளையாடுகிறது. 

மோடி அமெரிக்காவுக்கு குடும்பத்துடன் திரும்பிச் செல்வதில்லை என்ற முடிவுக்கு வருகிறான். வாழ்நாள் முழுவதும் ஈரானில் வாழமுடியுமா..? மோடி திட்டமிட்டு ஏமாற்றிவிட்டார் என்று நினைக்கிறார்கள் தாயும், மகளும். கலாச்சார அதிர்ச்சி, அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக அணிவகுக்கிறது. ஈரான் ஊடகங்கள் அமெரிக்க சாத்தானுக்கு எதிராக ஊதித்தள்ளுகின்றன. பேற்றியும், மகளும் இப்போது ஈரான் வந்துள்ள அமெரிக்க சாத்தான்கள்.

எப்படியாவது அமெரிக்காவுக்கு தப்பிச்செல்ல முயற்சிக்கிறார் பேற்றி. ஆலோசனை சொல்பவர்கள் எல்லாம், மகள் மஃதாப்வை ஈரானில் விட்டு தனியாகச் செல்லுமாறு கூறுகிறார்கள். ஏனெனில் ஈரானிய சட்டப்படி மகளுக்கான முழு உரிமையும் தகப்பனுக்குரியது. மற்றையது மகளை விட்டுச் சென்றால் தாய் திரும்பி வருவாள் என்று மோடியை இலகுவாக நம்பவைக்கலாம். தாயோ அந்த யோசனையை முற்றாக நிராகரிக்கிறாள். மகளை விட்டுச் செல்ல அவள் விரும்பவில்லை. ‘NOT WITHOUT MY DAUGHTER ‘ என்று இறுதிவரை போராடுகிறாள். 

பல்வேறு இரகசிய உதவிகளை அமெரிக்க உளவாளிகளுக்கூடாகப் பெற்று ஈரான் – குர்திஸ்தான் – துருக்கி எல்லைகளைக் கடந்து அமெரிக்கா மண்ணில் கால்பதிக்கிறார்கள் தாயும், மகளும். ஆட்கடத்தல்காரர்களின் உதவியுடன் மிகவும் கரடுமுரடான மலைப் பிரதேச பயணங்களையும், பனிகொட்டும் பாதைகளையும் கடந்த பயங்கரங்கள் நிறைந்த, ஆபத்துக்கள் நிறைந்த பயணம். அமெரிக்க -ஈரான் அரசியலும், “MARK BAR AMERIKA”- அமெரிக்கா ஒழிக என்ற கோசமும், புரட்சிக்குப் பின்னரான ஈரான் மீதான அமெரிக்க தலையீடும் இந்த நாவலின் பின்னணியை புரிந்துகொள்ள அவசியம்.

இதற்கு அப்பால் மாற்று கலாச்சார, பண்பாட்டு விழுமியங்களை பக்க சமாச்சாரங்களாக ஒதுக்கிவிட்டு, வெறும் பாலியல் வாழ்வியல் தேவையை முதன்மைப்படுத்தும் மேற்குலக இருகலாச்சார இணைவு குடும்பங்களுக்கு அவர்கள் “மரபுக்கு” வழங்குகின்ற சமூக, பொருளாதார, அரசியல் பெறுமதியைப் பொறுத்து ஒரு பாடம். 

ONE MORE LIFE…!

இப்போதெல்லாம் போகிற போகிற இடங்களில் புத்தகப்பெட்டகங்களைத் தேடுவதே இவனுக்கு வழக்கமாகிவிட்டது. முதல் புத்தகம் வாசித்து முடியும் தறுவாயில் இருக்கும் போது இரண்டாவதும் கைக்கு கிட்டியது. 

அதுவும் ஒரு வாவியோரப் பூங்காவில் இருந்த இரண்டு பெட்டிகளில் தேடுதல் வேட்டை நடாத்தி முதலாவதில் தோற்றுப்போக இரண்டாவதில் அதிர்ஷ்டம் அடித்தது.

ஆபிரிக்க பெண் ஒருவரின் படம் போடப்பட்ட அந்தப் புத்தகத்தை எடுத்து உள்ளே மூக்கை நுழைத்தபோது அதுதான் தேடல் என்று தெரிந்தது. 1994 இல் உலகை உலுக்கிய ருவாண்டா இனப்படுகொலை பற்றி பேசுகின்ற ஆவணம். ஒரு வகையில் இனப்படுகொலையை அனுபவித்த ஒரு பெண்ணின் கண்கண்ட சாட்சியம்.

இந்த புத்தகத்தின் தலைப்பை நமது மதங்கள் பேசுகின்ற “மறுபிறப்பில்” இருந்து வேறுபடுத்தி நோக்கவேண்டும். மறுபிறப்பு இறந்தபின் மீண்டும் பிறக்கும் நம்பிக்கை. இது அதுவல்ல சாகாமலே செத்துப்பிழைத்த மாதிரியான உளவியல் உணர்வு. இனப்படுகொலையில் ஒரு வாழ்வை தொலைத்து அந்த அநீதியில் இருந்து மீண்டு எழுந்து ஒரு மறுவாழ்வை – புது வாழ்வை ஏற்படுத்திக்கொள்வது.

1958 இல் ருவாண்டாவில் பிறந்தவர் எஸ்தர் முஜாவாஜோ. (ESTHER MUJAWAYO) சமூகவியலாளராக ருவாண்டா உள்ளிட்ட பல ஆபிரிக்க நாடுகளில் ஒக்ஸ்பாம் (OXFAM) அபிவிருத்தி அமைப்பில் வேலை செய்தவர். இனப்படுகொலையின் போது தனது தாய், தந்தை உள்ளிட்ட பதினைந்து குடும்ப உறவினர்களை இழந்தவர். ஆனாலும் அவரும், அவரது மூன்று பெண் பிள்ளைகளும் ஒரு தவறான சூழலில் சரியான இடமொன்றில் இருந்ததால் தப்பிப்பிழைத்தார்கள்.

எஸ்தர் தன் அனுபவத்தின் ஊடாகப் பேசுகின்ற விடயங்கள், அதிலிருந்து இன்னொரு வாழ்வுக்கு எப்படி அவர் பாதிக்கப்பட்ட – குறிப்பாக “கைம்பெண்களை” மீட்டு வந்தார் என்பதை இந்நூல் பேசுகிறது. இந்த இடத்தில் ஒரு விடயத்தை பதிவிடவேண்டிய தேவை இருக்கிறது.   கலைஞர் கருணாநிதி கலந்து கொண்ட ஒரு கவியரங்கொன்றில் ஒரு இளைஞர் எழுதிய கவிதையை படித்துபார்த்த அவர் சொன்ன அற்புதமான மொழி அறிவியல் இது. 

கலைஞர் சொன்னார் ” விதவை என்பது வடசொல் அதற்குப் பொட்டு இல்லைகைம்பெண் என்பது தமிழ்ச்சொல் அதற்கு ஒன்றுக்கு இரண்டு பொட்டு இருக்கிறது“. 

உண்மைதான். கைம்பெண் என்ற சுத்த தமிழ் வார்தையை மட்டக்களப்பின் கிராமங்களில் மூத்தவர்கள் இன்னும் பேசுகிறார்கள். இது வடக்கு மொழி அல்ல சுத்த தமிழ் மொழி – கிழக்குமொழி வளப் பாரம்பரியத்தின் தனித் தமிழ் தனித்துவம்.

இனி இனப்படுகொலைக்கு …….! 

எஸ்தர் ஒக்ஸ்பாம் உள்ளிட்ட அனைத்து மேற்குலக உளவியல் உதவி வழங்கும் நிறுவனங்களுடன் முரண்படுகிறார். மேற்குலக உளவியல் சிகிச்சை அணுகுமுறை எங்கள் ஆபிரிக்கர்களுக்கு பொருந்தாது என்று நிராகரித்து போராடி உளவியலாளராகவும் படித்து பட்டம் பெற்று தனது சமூகத்திற்கு சேவையாற்றுகிறார். 

நம்மவர்கள் இனப்படுகொலையை அல்லது நடந்து முடிந்த போர் அழிவுகளை தமது அரசியலலுக்கு பயன்படுத்திக்கொண்டு, வருகின்ற மேற்குலக அதிகாரிகளை குளிர்ப்பாட்ட அவர்களின் நாட்டுக்கொடிகளை அசைத்து குளிர்த்திப் பாடல்களை பாடிக்கொண்டும், வரவேற்றுக்கொண்டும் இருக்கிறோம். மறுபக்கத்தில் இத்தனைக்கும் இனப்படுகொலைக்கும்   அவர்களும் காரணம் என்று கூறுகிறோம் .

ருவாண்டா இனப்படுகொலை சர்வதேச நீதிமன்றத்திற்கு வந்தது அது வேறு விடயம். எஸ்தர் இங்கு பேசுவது இனப்படுகொலையில் பாதிக்கப்பட்ட கைம்பெண்களுக்கான உளவியல் சிகிச்சை பற்றியது. அவர்கள் தொலைத்த வாழ்வை மீண்டும் எப்படி அவர்களுக்கு ஏற்படுத்தமுடியும் என்பது பற்றியது. காணாமல் போனவர்களை கொண்டுவா.? போதுமான நஷ்ட ஈடு தா..?  போர்க்குற்றவாளிகளை நீதிமன்றில் நிறுத்து என்பதற்கெல்லாம் அப்பால் அந்த மக்களுக்கு வாழ்வை வழங்குவது பற்றியது. தமிழ்தேசிய அரசியலோ இந்தப் பொறுப்பை மக்களின் தலையில் கட்டிவிட்டு தன் கட்சி அரசியலை நடாத்திக்கொண்டிருக்கிறது .

எமது அரசியலோ அந்த மக்களின் வாழ்வை சிந்திக்காமல், அதே மக்களைப் பயன்படுத்தி, அவர்களின் உளவியல் பாதிப்புக்களைப் பயன்படுத்தி அடையமுடியாத இலக்குகளுக்காக கொடிபிடிக்க விட்டிருக்கிறது. இது இனப்படுகொலையினால், யுத்தத்தினால் பாதிக்கப்பட்டமக்களுக்கான உண்மையான நிவாரணம் அல்ல. பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வாழ்வை மீளக்கட்டியெழுப்ப சுயநம்பிக்கை, தற்துணிவு, அச்சம் தவிர்த்தல், மனச்சோர்வு விலக்கு….. போன்றவற்றை உளவியல் சிகிச்சையின் மூலம் அவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்று கூறுகிறார் எஸ்தர்.

உளவியல் சிகிச்சைக்கு பின்னரான அடுத்தடுத்த கட்டநகர்வுகளின் போது கைம்பெண்களின், தாய்மார்களின், சிறார்களின் சமூக, பொருளாதார, அரசியல் வாழ்வியல் பற்றி சிந்திக்க முடியும்.‌ சமூகத்தை மனநோயாளிகளாக வைத்துக்கொண்டு அரசியல் செய்பவர்கள் மனநோயாளிகள். இதனால் தான் தமிழ்த்தேசிய அரசியலில் மனநோயாளர் குணாம்சம் நிறைந்து காணப்படுகிறதோ என்னவோ..?

மனநிலை பாதிக்கப்பட்ட பெண்கள், சிறார்கள், படுகொலையின் நினைவுகளில் இருந்து விடுபட முடியாதிருப்பவர்கள், பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டவர்கள், அதுவும் ருவாண்டாவில் இந்தப் பெண்களுக்கு எயிட்ஸ் தொற்று பரப்பப்பட்டவர்கள் எல்லோரையும் மீண்டும் நாளாந்த வாழ்வியலுக்கு அழைத்து வருவதற்கான பாதை பொருத்தமான உளவியல் சிகிச்சை என்று அடித்துச் சொல்கிறது (ONE MORE LIFE) மேலும் ஒரு வாழ்க்கை.

INDIA EIN COUNTRY IN TURMOILI….!

வி.எஸ்.நைபோல்- V.S.NAIPAUL அவர்களின் மூதாதையர் இலங்கையின்தேயிலைத் தோட்டங்களுக்கு இந்தியாவில் இருந்து அடிமைகளாக தொழிலாளர்கள் கொண்டுவரப்பட்டது போன்று ரினிடிடாட்டுக்கு (TRINIDAD) கரும்புத் தோட்டங்களுக்காக கொண்டு செல்லப்பட்ட பரம்பரையைச் சேர்ந்தவர். ரினிடிடாட்டில் பிறந்து வளர்ந்து லண்டனில் உயர்கல்வி கற்றவர். பயணக் கட்டுரைகளை – நாவல்களை வெறுமனே உல்லாசப் பிரயாணங்களுக்கான விளம்பரங்களாக எழுதாது

தனது பயணத்தின் ஊடாக கண்டு கொண்ட சமூக, பொருளாதார, அரசியல் கட்டமைப்பை கட்டுடைப்பு செய்கின்ற ஒரு படைப்பாளி.

தனது பாட்டன், பாட்டியும், பெற்றோரும் பேணிய கலாச்சார பாரம்பரியங்களும் , தலைமுறை இடைவெளியில் ஏற்பட்ட கலாச்சார மோதல்களும் அவரை தனது ஆணிவேரைத் தேடத் தூண்டுகிறது.

புலம் பெயர்ந்த தமிழர்களின் வீடுகளில் ஒரு மூலையில் அத்தனை இடநெருக்கடிகளுக்கு மத்தியிலும் “சாமிக்கு” ஒரு இடம் இருக்கும். தனது பள்ளிப்பருவத்தில் தனது பாட்டியின் வீட்டில் இந்த சாமி மூலையையும், சாம்பிராணி மணத்தையும், சடங்குகளையும் நினைவு கூருகிறார் நைபோல்.

அன்றைய இந்தியாவில் அவர் கண்ட இந்திய சமூகத்தை “INDIEN EIN LAND IN AUFRUHR” என்ற இந்தப் படைப்பில் கட்டுடைப்பு செய்கிறார். இதுவும் வீதியோரப் புத்தகப்பெட்டகம் ஒன்றில் இந்தியா என்றவுடன் இவன் கையில் தூக்கிக்கொண்ட  ஒன்றுதான். 658 பக்கங்களைக் கொண்ட இந்த நூலில் 512 ம் பக்கத்தில் தரித்து நிற்கிறான். காரணம் மீண்டும் 2022 நத்தார் -புத்தாண்டு விடுமுறைக் காலம்தான் .

1960 களின் ஆரம்பம். பம்பாய் விமானநிலையத்தில் இருந்து வாடகைக்காரில் ஹொட்டலுக்கு போய்க் கொண்டிருக்கிறார் நைபோல். நகரின் மூலை முடுக்குகள், சேரிகள் எங்கும் கூட்டம், கூட்டமாக மக்கள். என்ன விசேடம் என்று சாரதியைக் கேட்கிறார் அவனிடம் பதில் இல்லை. மக்கள் கூட்டத்தைப் பார்க்க பூசைக்கு வந்தவர்கள் மாதிரி புத்தாடைகள் – அழுக்கற்ற ஆடைகள் அணிந்திருப்பது போன்ற காட்சி .

ஹொட்டலுக்கு போனதும் முதலாளியிடம் சாரதியிடம் கேட்ட அதே கேள்வியைக் கேட்கிறார். விசேடம் என்று ஒன்றும் இல்லை. கூப்பனுக்கு – ரேசன் கார்டுக்கு எதோ இலவசமாக கொடுக்கிறார்கள் போலும்.. என்று சந்தேகத்துடன் கூறுகிறார். 

அறைக்குப் போனதும் தனது நண்பர் ஒருவருக்கு டெலிபோன் போட்டு மீண்டும் அதே கேள்வி…! அவரிடம் இருந்து இரண்டு பதில்கள் ஏதும் இலவசமாகக் கொடுக்கிறார்கள் போலும் அதுவாகவும் இருக்கலாம். மற்றது எனது வேலைக்காரப் பெண் இப்போதுதான் நகரில் இருந்து வந்திருக்கிறாள். அவள் சொன்னாள் “நகரில் சனக்கூட்டமாம் இன்று டாக்டர் அம்பேத்காரின் பிறந்ததினமாம்” அதற்காகவும் மக்கள் கூடியிருக்கலாம் என்று கூறினார். வேலைக்காரிக்கு தெரிந்தது….?

நைபோல் நினைக்கிறார் “இந்த பார்ப்பனர் ஏன் இவ்வளவு இருட்டடிப்புச் செய்கிறார்கள். சுதந்திர இந்தியாவின் முதலாவது சட்டத்துறை அமைச்சர், அரசியல் அமைப்பு நிபுணர், தலித் மக்களுக்கு சமூகநீதி வேண்டி போராடியவர், சமுக விஞ்ஞானி, பொருளியலாளர், சீர்திருத்தவாதி…. இந்திய சுதந்திரம் என்பதன் அர்த்தம் இதுதானா? இவரை இவ்வளவு விரைவாக மறக்கமுடியுமா..?மறைக்கத்தான் முடியுமா…? பார்ப்பன – வர்ணாச்சார இந்து வெறியின் உச்சம்” என்று தொடர்ந்து சிந்தனையில் ஆழ்கிறார் அவர்”. இப்படி ஆரம்பிக்கிறது நூலின் முதல் அத்தியாயம்.

பிராமணர், இந்துக்கள், முஸ்லீம்கள், சீக்கியர்…. இவ்வாறு பல்வேறு தரப்பினருடனும் உரையாடிப்பெற்ற தகவல்கள், அரசியல்வாதிகள், சமூகவிஞ்ஞானிகள், வர்த்தகர்கள், செல்வந்தர்கள், வறியவர்கள், தீண்டத்தகாதவர்கள், நாடோடிகள், நக்சலைட்டுகள் போன்றவர்களை நேர்கண்டு பெற்றுக்கொண்ட விவரங்களின் அடிப்படையில் அவரது “சமூக விஞ்ஞான ஆய்வு” அமைகிறது.‌ அவர் அறிந்து கொண்ட ஒவ்வொரு வார்த்தையையும் மறுவாசிப்பு செய்து கட்டுடைப்பு செய்கிறார்.

இவன் இப்போது வாசிக்கின்ற 512 ஐ தொடரும் பக்கங்கள் ‘பெண்பார்த்தல்’ பற்றி பேசுகிறது.‌ இந்தியாவில் இது கலாச்சாரத்தின் ஒருபகுதி – திருமண சடங்கு பாரம்பரியத்தில் தவிர்த்துப்பார்க்க முடியாதது. ஆனால் அதில் பேணப்படும் சமூகக் கொடுமையை – மறுக்கப்படும் சமூகநீதியை – வாழ்க்கைத்துணை தேர்வுச் சுதந்திரத்தை கேள்விக்குட்படுத்துகிறார் ஆசிரியர்.

இந்திய கல்விமுறை பற்றி அவர் குறிப்பிடும் ஒருவிடயம் கவனத்திற்குரியது. இது இலங்கையின் கல்விமுறைக்கும் பொருந்திப்போகும்.‌ “இந்திய கல்விமுறையானது பாரம்பரிய சிந்தனைகளையும், கர்ணபரம்பரை இதிகாச, புராணப் புனைவு சிந்தனைகளையும், வேத ஆகமங்களையும் அடிப்படையாகக்கொண்டு கட்டி எழுப்பப்பட்டுள்ளது”. என்று கூறுகிறார் நைபோல்.

உண்மையில் இது ஒரு கல்வி முறையல்ல மாறாக இது ஒரு “கிளிப்பிள்ளை படிப்பு” என்கிறார். அதாவது எந்த ஆய்வும் இன்றி, எதையும் கேள்விக்குட்படுத்தாமல் “அது அப்படித்தான்” என்ற பதிலோடு கடந்து செல்கின்ற மனனம் செய்து பரீட்சைக்கு அப்படியே ஒப்புவித்தல் என்பதே இதன் மறுவாசிப்பு.

வாசகர்களே…! நண்பர்களே…!!

கடந்த 2022 இல்‌ முறையே 480, 337,658 பக்கங்களைக் கொண்ட மூன்று நூல்களை வாசிக்க முடிந்திருக்கிறது. இது ஒன்றும் சாதனை அல்ல சாதாரண பொழுதுபோக்கு. அனேகமாக காலைக் கோப்பியுடன் சில பக்கங்களை மட்டுமே இவன் வாசித்தான். அதுற்கும் தினமும் காலம் கனிந்ததில்லை. 

இதுபோன்ற புத்தகப்பெட்டிகளை பொது அமைப்புக்கள், உள்ளூராட்சி அமைப்புக்களால் ஏன்? தனிநபர்களால் கூட செய்யமுடியும். எவரும் படித்த புத்தகங்களை வைக்கலாம், படிக்காதவற்றை எடுத்துப் படிக்கலாம்.‌ எடுத்து வீட்டுக்கு கொண்டு போய் வாசித்து முடிக்கவேண்டும் என்ற நிர்ப்பந்தமும் வேண்டாம். கல்லடி கடற்கரையில், காந்தி பூங்காவில், வாவிக்கரையோரப் பூங்காவில், ஆலயமுன்றலில், கிராம சந்திகளில் எல்லாம் இதைச்செய்யலாம். இது போன்று நாடுபூராவும் இதைச் செய்ய முடியும். 

வருகிறவர்கள்… போகிறவர்கள்… வழிப்போக்கர்… எல்லோரும் போற போற இடத்தில் கண்டதைக் கற்க இது ஒரு இலவச பொழுதுபோக்குடன் கூடிய அறிவூட்டல். இல்லையா…?

2023 இல் இதே காலப்பகுதியில் உங்கள் அனுபவங்களைப் பகிருங்கள்.

புத்தாண்டில் உங்கள் அறிவுத் தேடல் சிறகடித்துப் பறக்க வாழ்த்துக்கள்.

தேடல்கள்…… தேடல்கள்….. தொடரட்டும்….!

வாசிப்போம்…. வாசிப்போம்….. வாசித்ததை மறுவாசிப்பு செய்வோம்….!