—- தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் —-
இலங்கையின் இனப் பிரச்சனைக்கான தீர்வு சம்பந்தமாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அரசியற் கட்சித் தலைவர்களுடனான சந்திப்பு ஜனாதிபதியின் அழைப்பின் பேரிலும் தலைமையிலும் 13.12.2022 அன்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
23.11.2022 அன்று பாராளுமன்றத்தில் வைத்து ஜனாதிபதி பேச்சு வார்த்தைக்கான அழைப்பை விடுத்த ஆரம்பத்திலிருந்தே இது சர்வ கட்சி மாநாடு என்றே அழைக்கப்படுகிறது. சர்வ கட்சி மாநாடு என்று அழைக்கப்பட்டாலும் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சித்தலைவர்களின் கூட்டமாக இது மட்டுப்படுத்தப்பட்டது. அதாவது பாராளுமன்றத்தில் அங்கத்துவம் (பிரதிநிதித்துவம்) இல்லாமல் வெளியே செயற்படும் அரசியற் கட்சிகள் இப்பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்படவில்லை.
தமிழர் தரப்பைப் பொறுத்தவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தல்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட – அங்கீகரிக்கப்பெற்ற ஒரு அரசியற் கட்சியல்ல. தமிழரசுக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களாகவே அவ்வமைப்பைச் சேர்ந்தவர்கள் அங்கம் வகிக்கின்றனர். இதில் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து ‘ரெலோ’ வும் ‘புளொட்’ டும் அடக்கம். உத்தியோகபூர்வமாக-சட்டபூர்வமாக ‘ரெலோ’ மற்றும் ‘புளொட்’ கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் இல்லை. அவர்கள் தமிழரசுக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களே. தமிழரசுக்கட்சியுடன், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி)-தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி-தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி-ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகிய கட்சிகளே வடக்குக் கிழக்கு தமிழர்களைப் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் செய்கின்றன.
தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா இக்கூட்டத்தில் பங்கு பங்குபற்றவில்லை.( அவர் அழைக்கப்படவுமில்லையென்றும் தகவல். கட்சித் தலைவராக இருந்தும் அவர் பாராளுமன்றஉறுப்பினராக இல்லாததுதான் காரணமோ தெரியவில்லை.) இரா.சம்பந்தனும் சுமந்திரனும் எந்த அரசியல் கட்சிகளினதும் தலைவர்களல்ல. தேர்தல் திணைக்களத்தின் அங்கீகாரம் பெறாத தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினதும் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுவினதும் தலைவராகவே இரா.சம்பந்தன் உள்ளார். சுமந்திரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளராகக் கருதப்படுகிறார். அடைக்கல நாதனும் சித்தார்த்தனும் (முறையே ரெலோவினதும் புளொட்டினதும் தலைவர்களாக இருந்தாலும் கூட) தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களே தவிர அவர்கள் தமது சொந்தக் கட்சியிலே வேட்பாளர்களாக நின்று வெற்றியீட்டிப் பாராளுமன்றத்திற்கு வந்தவர்களல்ல. ஆனால் இவர்கள் எல்லோரும் ஜனாதிபதியினால் அழைக்கப்பட்ட பேச்சுவார்த்தையில் பங்குபற்றியுள்ளனர். இவர்களின் அரசியல் முக்கியத்துவம் கருதி ஜனாதிபதி இவர்களை அழைத்திருக்கக்கூடும்.
இப் பேச்சுவார்த்தையில் வடக்குக் கிழக்குத் தமிழர் தரப்பில் பங்குபற்றிய ஏனைய சி.வி.விக்னேஸ்வரன், டக்ளஸ் தேவானந்தா மற்றும் சிவனேசதுரை சந்திரகாந்தன் ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் முறையே தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஆகிய கட்சிகளின் தலைவர்களாகவுமுள்ளனர். பாராளுமன்றத்தில் இரு அங்கத்தவர்களைக் கொண்ட அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அழைக்கப்பட்டிருந்த போதிலும் பேச்சுவார்த்தையில் அவர் பங்குபற்றவில்லை.
இந்தப் பின்னணியிலே, இந்தக் கூட்டத்தை ‘சர்வகட்சி மாநாடு’ என்று கூறுவதை விடவும் அல்லது பாராளுமன்றத்தில் அங்கத்துவம் வகிக்கும் கட்சித் தலைவர்களின் கூட்டம் என்பதை விடவும் கட்சித் தலைவர்களாகவும்/அரசியல் முக்கியத்துவம் உடையவர்களாகவும் உள்ள அதேவேளை பாராளுமன்ற உறுப்பினர்களாகவும் உள்ளவர்களை மட்டுமே உள்ளடக்கிய கூட்டம் என்று கூறுவதே மிகவும் பொருத்தமானது. ஜனாதிபதி அவர்கள் தான் விரும்பியவர்களை-தனக்கு வேண்டப்பட்டவர்களை- முக்கியமானவர்களென்று தான் கருதியவரகளை- தான் தேர்ந்தெடுத்த அனைத்துக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களையும் அழைத்துள்ளார் என்றே கொள்ளவேண்டியுள்ளது. இந்த அவதானத்துடன், இப்பேச்சு வார்த்தை குறித்த மேலும் சில விடயங்களுக்குச் செல்லலாம்.
பேச்சு வார்த்தைக்கான அழைப்பு ஜனாதிபதியினால் 23.11.2022 அன்று பாராளுமன்றத்தில் விடுக்கப்பட்ட பின்பு அன்று மாலையே தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுவும் பின்னர் 25.11.2022 மாலை தமிழ்த் தேசியக் கட்சிகளெனத் தம்மை அழைத்துக் கொள்ளும் சில கட்சிகளும் (தமிழரசுக் கட்சி, ரெலோ, புளொட், ஈ பி ஆர் எல் எப், தமிழ் மக்கள் தேசியக்கூட்டணி) இரா.சம்பந்தன் தலைமையில் கொழும்பில் கூடிப் பேசின.
பின்னர், ரெலொவின் சார்பில் 09.12.2022 அன்று அதன் ஊடகப் பேச்சாளர் குருசுவாமி சுரேந்திரன் பா.உ. ஒரு பொறி முறையை முன்மொழிந்து அதனை ஊடகத்திலும் வெளியிட்டிருந்தார்.
இந்தப் பொறிமுறையானது,
* அரசாங்கத்துடனான-ஜனாதிபதியுடனான பேச்சு வார்த்தை இந்தியாவின் தலைமையிலான மேற்பார்வையில் முன்னெடுக்கப்பட வேண்டும்.
* சர்வதேச நாடுகளான பிரித்தானியா, அமெரிக்கா, கனடா, ஜெர்மனி மற்றும் நாடுகளும் இந்தியாவுடன் இணைந்து இப் பொறிமுறையில் பங்குபற்றல் அவசியம்.
* ஐநாவின் பிரதிநிதித்துவமும் இந்தப் பொறிமுறையில் அவசியமானது.
* மேற்கூறிய பிராந்திய, சர்வதேச வல்லரசுகளின் நிபுணர்களும் ஐநாவின் நிபுணர்களும் தமிழ் மக்கள் தரப்பில் அரசியல் யாப்பு தயாரிப்பு நிபுணர்களும், எல்லைகள் மீள் நிர்ணயம் நிர்வாகம் மற்றும் நிதி ஆளுமை சம்பந்தப்பட்ட நிபுணர்களும் கொண்ட குழு உருவாக்கப்பட வேண்டும். இந்தக் குழுவில் தமிழ் மக்கள் சார்பில் புலம்பெயர் உறவுகளில் இருந்து நிபுணர்களும் இடம்பெறுவர்.
* தவிர, ஆலோசனைகள் வழங்கவும் நிபுணர்கள் கொண்ட ஆலோசனைக் குழுவும் உருவாக்கப்படவேண்டும்.
* அரசியல் தீர்வானது இந்த நிபுணர்கள் குழுக்களின் வழிகாட்டுதலிலே முற்றும் முழுதாக நடைமுறைப்படுத்தும் வரை இப் பொறிமுறை செயற்பாட்டில் இருக்கவேண்டும்.
என்ற அம்சங்களை உள்ளடக்கியிருந்தது.
‘ரெலோ’ சார்பில் முன்மொழியப்பட்ட பொறிமுறைக்கு ஈபிஆர்எல்எப் சுரேஷ் பிரேமச்சந்திரன் சாதகமாக 10.12.2022 அன்று ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார்.
‘ரெலோ’ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் பா.உ., அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தை இந்தியா தலைமையிலான மேற்பார்வையின் கீழ் பிரித்தானியா, அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளின் மேற்பார்வை இருக்க வேண்டும் என 12.12.2022 அன்று வவுனியாவில் உள்ள ரெலோ அலுவலகத்தில் ஊடகச் சந்திப்பொன்றின் மூலம் கருத்துத் தெரிவித்திருந்தார். பேச்சுவார்த்தையில் இதுவே தமது கட்சியின் பிரதான கோரிக்கையாக இருக்குமெனவும் கூறியிருந்தார்.
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் (பெயர் மாற்றம் பெற்ற ஈபிஆர்எல்எப்- அத்துடன் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் கூட) தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் பா.உ, தீர்வு தொடர்பில் ஜனாதிபதி உண்மையான அக்கறையுடன் இருப்பவரானால் இந்திய மத்தியஸ்தத்துடன் பேச்சை ஆரம்பிப்பதற்கு இணங்க வேண்டும். இதனைத் தான் 13 ஆம் திகதிச் சந்திப்பில் வலியுறுத்தவிருப்பதாகவும் 12.12.2022 அன்று ஊடக அறிக்கையிட்டிருந்தார்.
இவர்களது இந்த ஊடக அறிக்கைகளையெல்லாம் படித்த போது கிராமங்களில் வழங்கும் “ஆசை பெரிசு; கோவணம் சிறிசு” என்ற பழமொழிச் சொற்றொடர்தான் நினைவுக்கு வந்தது.
இவர்கள் கேட்கிறார்கள் என்பதற்காக இப் பேச்சுவார்த்தைக்குத் தலைமை வகிக்கவும்/மத்தியஸ்தம் வகிக்கவும்/மேற்பார்வை செய்யவும் இந்தியா ஓடோடி வந்து விடுமா? இவர்கள் சொன்னதையெல்லாம் சிரமேற்கொண்டு செய்வதற்கு இந்தியா இத் தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஏவலாளியா என்ன?
இவர்கள் கேட்கிறார்கள் என்பதற்காக ஓடோடி வந்து பேச்சு வார்த்தையை இந்தியா தலைமையில் மேற்பார்வை செய்வதற்கு பிரித்தானியாவும் அமெரிக்காவும் கனடாவும் ஜெர்மனியும் ஐநாவும் இத்தமிழ்த் தேசியக் கட்சிகளின் ‘பொக்கற்’ றுக்குள் இருக்கின்றனவா?
இக்கட்சிகள் கேட்பது ஒருபுறமிருக்க இலங்கை அரசாங்கம் கேட்டுக் கொண்டாலும் கூட ( இலங்கை அரசாங்கம் ஒரு போதும் அப்படி இந்நாடுகளை அழைக்கப் போவதுமில்லை) இந்தியாவும், பிரித்தானியாவும், அமெரிக்காவும், கனடாவும் ஜெர்மனியும், ஐநாவும் வந்துவிடுமா?
இவர்களது இந்த அறிக்கைகளைப் படித்துவிட்டுச் சாதாரண அரசியல் மாணவனும்கூடச் சிரிக்கிறான்.
மேலும், இப் பேச்சு வார்த்தைக்கு முன்னம் 08.12.2022 அன்று மாலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்த்தன, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் பா.உ. ஆகியோர் சந்தித்து மந்திராலோசனை நடத்திய செய்தியும் வெளியாகியிருந்தது.
இத் தமிழ்த் தேசியக் கட்சிகளின் அல்லது குறைந்த பட்சம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டுத் தீர்மானமில்லாமல் சுமந்திரன் தன்னிச்சையாகச் சென்று ஜனாதிபதியையும் பிரதமரையும் சந்தித்தது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில், முன்பு பல தடவைகள் சுமந்திரனின் இவ்வாறான தன்னிச்சையான செயற்பாடுகள் தமிழரசுக் கட்சிக்குள்ளேயும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்புக்குள்ளேயும் தமிழர்களுடைய அரசியல் பொதுவெளியிலும் வேண்டத்தகாத பல சர்ச்சைகள் ஏற்படக் காரணமாயிருந்துள்ளன. தமிழரசுக் கட்சிக்குள்ளே அதாவது தமிழ்த் தேசியக்கூட்டமைப்புக்குள்ளே அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கோ சுமந்திரன் மீது எந்த கட்டுப்பாடும் கிடையாது என்பதையே இது காட்டுகிறது. இது எதிர்காலத்தில் கூட்டுச் செயற்பாட்டைப் பாதிக்கும்.
இத்தகைய ஊடக அறிக்கைகள் எல்லாம் உண்மையிலேயே அரசியல் ‘அரைவேக்காட்டு’ த்தனமானவை. தத்தம் அரசியல் ‘வித்துவம்’ களை வெளிக்காட்டி விளம்பரப்படுத்தித் தேர்தல் தேவைகளுக்காகத் தமிழ் மக்களைக் கவர்வதுதான் இவ் அரசியல் ‘பிரகிருதி’ களின் நோக்கமே தவிர இவை வெறும் வெற்றுப்-வெட்டிப் பேச்சுகள்தான். சாணக்கியன் அடிக்கடி கொளுத்திப்போடும் அரசியல் ‘சத்தவெடி’ களைப்போல.
இறுதியில்-உண்மையில் என்ன நடந்திருக்கின்றது என்றால், இவ்வளவு ஆரவாரம் பண்ணியவர்களெல்லாம் 13.12.2022 அன்று நடைபெற்ற சந்திப்பின்போது இவை குறித்து வாய்திறக்கவேயில்லை. பேச்சுவார்த்தைக்குப் புறப்படுமுன்னர் அன்று காலை இக்கட்சிகள் கொழும்பில் இரா.சம்பந்தன் இல்லத்தில் கூடிப் பேசிய போது கூட இவ்விடயங்கள் பிரஸ்த்தாபிக்கப்படவுமில்லை. இந்தப் பிரதாபங்களை ‘காலைக்கதிர்’ மின்னிதழ் (14.12.2022 காலைப் பதிப்பு)” Play to the Gallery’ எனக் கிண்டலடித்திருக்கிறது.
இவையெல்லாம் ஒருபுறமிருக்க, பேச்சுவார்த்தையின் முதல் நாள் இந்தத் தமிழ்த் தேசியக் கட்சிகளால் (தமிழரசுக் கட்சி, ரெலோ, புளொட், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஆகிய நான்கு கட்சிகளாலும்) முன்வைக்கப்பட்ட கூட்டுக் கோரிக்கையை பற்றிப் பார்ப்போம். பிரதானமாக மூன்று கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
1) அபகரிக்கப்பட்டுள்ள காணிகள் விடுவிப்பு-தொடர்ச்சியான நில ஆக்கிரமிப்பு நிறுத்தம் -காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள் நிறுத்தம்.
2) தற்போது அரசமைப்பிலும் சட்டங்களிலும் உள்ள அதிகாரப் பகிர்வு விடயங்கள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டு மாகாண சபைத் தேர்தலை நடத்துதல்.
3) வடக்குக் கிழக்கில் சமஸ்டிக் கட்டமைப்பில்-உள்ளக சுய நிர்ணய அடிப்படையில் அதிகாரப்பகிர்வு.
உண்மையிலேயே 11.12.2022 அன்று வவுனியாவில் நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களே மேற்கூறப்பட்ட நான்கு தமிழ்த்தேசியக் கட்சிகளினதும் கூட்டுக் கோரிக்கையாகப் பேச்சுவார்த்தையில் முன் வைக்கப்பட்டது.
முதலாவது கோரிக்கையைப் பொறுத்தவரை, கடந்த காலங்களில் தமிழ்த் தேசியத் தரப்பினால் மேற்கொள்ளப்பட்ட ஆயுத நடவடிக்கைகளின் ஒட்டுமொத்த விளைவாக வடக்குக் கிழக்கு மாகாணங்களில் இருந்து சுமார் 15 லட்சம் தமிழர்களைக் கடல் கடந்து அனுப்பி விட்டும் வடக்குக்கிழக்கு மாகாணங்களின் எல்லையோரக் கிராமங்களில் வாழ்ந்த தமிழர்களை இடம் பெயரச்செய்துவிட்டும் நிலத்தைக் காப்பது கடினமான பணிதான். ஆனாலும், இப்பிரச்சினையை இவ்வாறான பேச்சுவார்த்தையில் முன் வைப்பது பொருத்தமற்றது. இப்பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மேசைக்கு வெளியே ஜனாதிபதி /பிரதமர்/அமைச்சர்/ உயர் அதிகாரிகளுடன் தகுந்த அணுகுமுறையைக் கையாள்வதன் மூலமும் வேறு தந்திரோபாயங்கள் மூலமுமே வெற்றி கொள்ளவேண்டுமே தவிர இவ்வாறான பேச்சுவார்த்தையில் பிரதான பிரச்சினையாக முன் வைப்பதால் அல்ல. இதனைப் பேச்சு வார்த்தையின் போது முன் வைத்ததால் முதன்மைப் பிரச்சினையான ‘அதிகாரப்பகிர்வு’ விடயம் ஐதாக்கப்பட்டுவிடும்.
இரண்டாவது கோரிக்கையின் வார்த்தைப் பிரயோகங்களைப் பார்க்கும் போது 1987 இந்திய – இலங்கை சமாதான ஒப்பந்தம் குறித்துப் பிரஸ்த்தாபிப்பதையும் அதன் விளைவான 13ஆவது திருத்தச் சட்டத்தின் முழுமையான அமுலாக்கலை வெளிப்படையாக வலியுறுத்துவதையும் தவிர்த்துக் கொண்டு தற்போது அரசமைப்பிலும் சட்டங்களிலும் உள்ள அதிகாரப் பகிர்விடயங்களை முழுமையாக நடைமுறைப்படுத்த ‘மொட்டை’ யாகக் கோரியிருப்பது இத் தமிழ்த்தேசியக் கட்சிகளின் அரசியல் நேர்மையை வெளிப்படுத்தவில்லை. இந்த விடயத்தில் இத்தமிழ்த்தேசியக் கட்சிகள் யார் யாரையோ திருப்திப் படுத்துவதற்காக “எவடம் எவடம் புங்கடி புளியடி” என்று ஒளித்து விளையாடுவது போல்தான்படுகிறது. ‘அப்புக்காத்து மூளை’ களின் கைங்கரியம்தான் இது போலும். இந்த ஒளித்து விளையாடுதல் இந்தியாவை முகம் சுளிக்கவே செய்யும். இப்படி நடந்துகொண்டு பேச்சு வார்த்தையில் இந்தியாவைத் தலைமைவகிக்கவும்-மேற்பார்வை செய்யவும்-மத்தியஸ்தம் வகிக்கவும் கோருவது ஒன்றுக்கொன்று முரணானவையாகும். 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல் செய்யும்படி வெளிப்படையாகவும்-நேர்மையாகவும் கேட்பதற்கு இத் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு இருக்கும் தடைதான் என்ன?
மூன்றாவது கோரிக்கையாகச் ‘சமஸ்டி’ யை (அது புதிய அரசியலமைப்பொன்றின் மூலமே சாத்தியம்) இப்போது முன் வைத்திருப்பது அரசியல் முட்டாள்தனமாகும். புதிய அரசியலமைப்பு வருவதற்கான அரசியல் சாத்தியங்கள் அரிது. அப்படி வந்தாலும் தற்போது அமுலிலுள்ள அரசியலமைப்பின் அங்கமாகவுள்ள உள்ள 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு மேலதிகமாக எவ்வதிகாரத்தையும் பகிரப் போவதில்லை. இத்தகையதொரு அரசியல் களநிலையில் விளக்குச் சுவாலையில் விட்டில் பூச்சி மீண்டும் மீண்டும் விழுந்து எரியுண்டு சாவதைப் போல தமிழ்ச் சமூகமும் புதிய அரசியலமைப்பு எனும் விளக்குச் சுவாலையில் மீண்டும் மீண்டும் விழுந்து இறுதியில் ஏமாந்ததுதான்- எரியுண்டுதான் போகும். புதிய அரசியலமைப்பு என்பது தற்போதைய அரசியல் அமைப்பிலிருந்து 13 ஆவது திருத்தத்தை நீக்குவதற்கும் இலங்கையின் இனப் பிரச்சினை விவகாரத்திலிருந்து இந்தியாவை ஓரம் கட்டுவதற்குமான ஒரு ‘பொறி’ என்பதைத் தமிழ்த் தேசியத் தரப்பு உணர்ந்து செயற்பட வேண்டும்.
13.12.2022 அன்று நடைபெற்ற கூட்டத்தின் ‘பிளஸ் பொயிண்ட்’ என்னவெனில், தமிழ்த் தேசியக்கட்சிகளால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் மீது எந்தவிவாதமோ -சர்ச்சைகளோ-எதிர்ப்புகளோ எழவில்லை என்பதுதான்.
ஆனாலும், இக்கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதியும் பொது ஜன பெரமுன கட்சியின் தலைவருமான மஹிந்த ராஜபக்ச மௌனம் சாதித்துள்ளமையும்- ஜே வி பி கட்சியும் விமல்வீரவன்ச, உதய கம்மன்வில, வாசுதேவநாணயக்கார ஆகியோரும் பங்குபற்றவில்லையென்பதும்- கவனத்தைப் பெறுகிறது.
இக் கூட்டத்தில் வடக்குக் கிழக்கு மாகாணத் தமிழர் தரப்பில் பங்கு பற்றிய நான்கு கட்சிகளும் (இலங்கைத் தமிழரசுக் கட்சி, ரெலோ, புளொட், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி) இணைந்து தமிழர்களுடைய அரசியல் பொதுவெளியில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளுடனும்/அமைப்புகளுடனும் ஒரு பரந்துபட்ட கலந்துரையாடலை மேற்கொண்டு தமிழர் தரப்பின் அடுத்த கட்ட நகர்வை ஆயத்தம் செய்யவேண்டுமென்று இப்பத்தி இக் கட்சிகளை வேண்டிக் கொள்கிறது.
அத்துடன், அன்றைய கூட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றுவதற்கு அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக அமுல்படுத்துவதே சரியான அணுகுமுறையாகவிருக்கும் எனத் தெரிவித்து, உருவாகியுள்ள இந்தச்சூழலை அனைத்துத் தரப்புகளும் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார். தற்போதைய சூழலில் புதிய அரசியலமைப்பு என்பது நடைமுறைச் சாத்தியமற்றது என்றும் கூறியுள்ளார். இது மிகவும் யதார்த்த பூர்வமான அரசியல் கணிப்பீடு ஆகும். இதனையே இப்பத்தித் தொடரும் பல தடவைகள் சுட்டிக் காட்டி வந்துள்ளது. இந்த விடயத்தைத் தமிழர்களுடைய அரசியல் பொது வெளியில் செயற்படும் அனைத்துக் கட்சிகளும்/அமைப்புகளும்கூடிய கவனத்தில் எடுத்துத் தமிழர் தரப்பின் அடுத்த கட்ட நகர்வைக் கூட்டுத் திட்டமிடவேண்டுமெனவும் இப் பத்தி மீண்டுமொருமுறை வேண்டிக் கொள்கிறது.