வரதராஜா பெருமாள் எழுதியுள்ள இலங்கையின் பொருளாதாரம் குறித்த நூல்

வரதராஜா பெருமாள் எழுதியுள்ள இலங்கையின் பொருளாதாரம் குறித்த நூல்



–         கருணாகரன்

இன்று நாடு சந்தித்திருக்கும் பொருளாதார நெருக்கடியை  முன்னுணர்ந்து “எழுந்து முன்னேற முடியாமல் இறுகிப் போயிருக்கும் இலங்கையின் பொருளாதாரம்” என்ற நூலை எழுதியிருக்கிறார் வட கிழக்கு மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் அ. வரதராஜா பெருமாள், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இன்றைய நெருக்கடி நிலையைச் சரியாக மதிப்பிட்டிருக்கிறார் பெருமாள். பொருளாதாரத்துறையில் நிபுணத்துவ அறிவைக் கொண்டிருந்ததால், தன்னுடைய மதிப்பீட்டையும் முன்னுணர்தலையும் சரியாகவே வெளிப்படுத்தியுள்ளார். இந்த “இலங்கையின் பொருளாதாரம்”என்ற புத்தகத்தை எழுதுவதற்கு முன்பு, Econometics – Economic Inegualiteis Among Nation என்ற ஆங்கில நூலை எழுதியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதில் இரண்டு வகையான பொறுப்புகளை அவர் நிறைவேற்றியுள்ளார். ஒன்று, இந்தக் காலகட்டத்துக்குரிய தன்னுடைய பொறுப்பாக – தனக்குரிய கடமையாக இதை உணர்ந்திருக்கிறார். இரண்டாவது இந்த நெருக்கடியை முன்னுணர்ந்து எச்சரித்திருக்கிறார்.

தான் படித்த பொருளாதாரத்துறைக்கு நேர்மையாக இருக்க வேண்டும். அந்தத் துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும்.  அது உண்டாக்கியிருக்கும் நாடளாவிய  பாதிப்புக்கு, அதனால் மக்கள் சந்திக்கின்ற இன்னல்களுக்கு முடிவைக் காண வேண்டும் என்று அக்கறையுடன் சிந்தித்ததன் விளைவே இது. இதுதான் அறிவொழுக்கம் எனப்படுவது.

எவர் ஒருவர் தான் படித்த –  தன்னுடைய துறைசார் அறிவைப் பொருத்தமான முறையில் பயன்படுத்தத் தவறுகிறாரோ, அவர் தனக்கும் நாட்டுக்கும் இந்த உலகத்துக்கும் அநீதியை இழைக்கிறார். தான் பெற்ற கல்வியை, அறிவை அவரே நிராகரிப்புச் செய்கிறார். இலங்கையில் பெரும்பாலும் நடந்திருப்பதும் – நடந்து கொண்டிருப்பதும் இதுதான். பொருளாதாரத் துறையில் மட்டுமல்ல, அரசியலில், விஞ்ஞானத்தில், விவசாயத்துறையில், மொழியில், சமூகவியலில் என அத்தனை துறையிலும் பெரும்பாலானவர்கள் தாங்கள் பெற்றுக் கொண்ட கல்விக்கும் அறிவுக்கும் மாறாகவே நடந்து கொள்கின்றனர். இவர்களுக்கு மக்கள் மீது அக்கறையோ கரிசனையோ இல்லை. சரியாகப் பொறுப்புடன் நடந்திருந்தால் இன்று  முடிவற்ற பிரச்சினைகளுக்குள் நாடு கிடந்து சீரழிய வேண்டி வந்திருக்காதல்லவா!

ஆனால், வரதராஜா பெருமாள், இதற்கு மறுதலையாக, இலங்கையைப் பாதித்திருக்கின்ற – இன்று பெரும் நெருக்கடியை உண்டாக்கியுள்ள – பொருளாதார நெருக்கடியைப் பற்றி, அதற்கான காரணங்களைப் பற்றி, அதற்குக் காரணமானவர்களைப் பற்றி விரிவாக துணிவாக – வெளிப்படையாக எழுதியிருக்கிறார். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பொருளாதாரக் காலகட்டத்தை, பொருளாதாரப் போக்கைப் பகுப்பாய்வு செய்திருக்கிறார்.

இந்த நூலில் 23 அத்தியாயங்கள் உள்ளன. சற்று விரிவான அளவில் அத்தியாயங்களுக்குத் தலைப்பிடப்பட்டுள்ளது. உதாரணமாக மக்களின் வாழ்வுரிமை உறுதிபட சுயசார்பு நிலையை அடைய வேண்டும் என்பது. இது இரண்டாவது அத்தியாயத்துக்கான தலைப்பு. ஆனால், இந்த நூல் சொல்ல விரும்புகின்ற – மறைமுகமாக வலியுறுத்துகின்ற சேதியும் இதுதான். இந்தத் தலைப்புகளை அல்லது அத்தியாயங்களை நாம் இரண்டு வகையாகப் பிரித்துப்பார்க்கலாம். ஒன்று, இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கான காரணிகள் பற்றியது. இந்த அடிப்படையில் 14, 15 அத்தியாயங்கள் உள்ளன.

1.    காலனியப் பொருளாதாரப் போக்கை அடியொற்றியே பின் வந்த சுதந்திர இலங்கையின் ஆட்சியாளர்களும் நடந்து கொண்டனர் என்பது.

2.    ஜனநாயக ஆட்சி என்று சொல்லப்பட்டாலும் – தேர்தல் முறையினால் ஆட்சித் தெரிவுகள் நடந்தாலும் நடைமுறையில் மன்னராட்சித் தன்மையே இன்னும் மேலோங்கியிருப்பது என்பதைச் சுட்டுவது.

3.    சுயசார்ப்புப் பொருளாதாரத்தைப் பற்றி – ஆக்கத்திறன் பொருளாதார அடிப்படையைப் பற்றிச் சிந்திக்காமல் இறக்குமதிப் பொருளாதாரத்தில் நாட்டை வழிநடத்தியதைப் பற்றியது

4.    அளவுக்கு அதிகமான அரச உத்தியோகத்தர்களை அரசியலுக்காக நியமனம் செய்ததைப் பற்றியது

5.   படைத்தரப்பினால் உண்டான சுமையைக் குறித்தது.

6.    வரி வருமானத்தைச் சரியாக அமுலாக்கம் செய்யத் தவறியதைப் பற்றியது

7.    கடல் வளம், நிலவளம், நீர்வளம் போன்ற வளங்களைப் பொருளாதார அடிப்படையில் முகாமைத்துவம் செய்யத் தவறியமை பற்றியது

8.   வேலையற்றோர் பிரச்சினை – அதை முகாமைத்துவம் செய்யும் தவறான முறைமையைக் குறித்தது.

9.    உணவு உற்பத்தியில் கூடத் தன்னிறைவை எட்டமுடியாமல் திணறுவதைக் குறித்தது.

10.                      தோட்டத்தொழிலாளர்களின் உழைப்பில் கொழுத்தவர்கள், குறைந்த பட்சம் அந்த மக்களின் அடிப்படைத் தேவைக்கான ஊதியத்தைக் கூடக் கொடுக்க முடியாமல் இருப்பதைப் பற்றியது –

11.                       கடனில் நாட்டுக்கான நிதிமுகாமைத்தும் செய்யும் பாரம்பரியத்துக்குள் நாட்டைக் கொண்டு சென்றமை பற்றியது –

12.                       மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கு  அப்பால் விருப்பத் தெரிவுகளைச் செய்ய முடியாத பொருளாதார நிலைக்குள் தொடர்ந்தும் வைத்துக் கொண்டு – பொருளாதார வளர்ச்சியை எட்டி விட்டதாக – தவறாகப் படம் காட்டியதைப்பற்றியது.

13.                       அரசின் பொருளாதாரத்துறை சார்ந்த மையங்களில் இருந்தோரும் ஆட்சித் தரப்பினரும் மேற்கொண்ட சமூகப் பொருளாதார ஆய்வுகளும் மதிப்பீடுகளும் தவறானவை. கள ஆய்வுகளாக இல்லை என்பது.

14.                      ஊழல்களால் நாடு திவாலானதைப்டி பற்றியது –

15.                       இயற்கை வளச் சுரண்டல், பொறுப்பற்ற – தவறான திட்டமிடல்கள் பற்றியது

16.                       கனவுத் திட்டங்களை உள்ளடக்கிய வரவு செலவுத்திட்டங்கள் குறித்ததது – இது ராஜபக்ஸக்களின் காலத்திலேயே அதிகமும் இருந்தது. குறிப்பாக பஸில் ராஜபக்ஸவின் வரவுசெலவுத்திட்டம் – வெறுமனே சித்தாந்த வெளிப்பாடே தவிர, நடைமுறைக்குரியதல்ல என்பதைப் பற்றியது

17.                       அந்நிய செலாவணியைத் திரட்டுவதில் உள்ள சிக்கல்கள் தொடர்பானது

18.                       கொரானா சூழலில் பொருளாதார நிலை – அதைச் சொல்லித் தப்பி விட முயற்சிக்கும் தவறுகளைப் பற்றியது

19.                      போருக்குப் பிந்திய சூழலில் கிடைத்த பன்னாட்டு உதவிகளைப்பொருளாதார விருத்தியாக தவறாக மதிப்பிட்டமையைக் குறித்தது

இப்படிப் பல இந்தப் பகுதியில் உண்டு.

இரண்டாவது, இந்த நெருக்கடியைத்தீர்ப்பதற்கான வழிமுறைகளை  – மாற்றத்துக்கான சிந்தனைகளைப் பற்றியது. இந்த வகையில் 5, அல்லது 6 அத்தியாயங்கள் உள்ளன.

1.    தேசம் என்பது மக்களின் சமூகப் பொருளாதாரப் பரப்பு எனக் கூறுவது

2.    மக்களின் வாழ்வுரிமை உறுதிப்படுவதற்கு சுயசார்ப்புப் பொருளாதாரம் வேண்டும் எனச் சொல்வது

3.    வரவு செலவுகளின் சரியாத சமன்பாட்டில் பயணிக்கும் பொருளாதாரமே சரியாது எனக் கூறுவது.

4.    அரசியல் ஜனநாயகமும் அதிகாரப் பகிர்வும் பொருளாதார விருத்திக்கான அடிப்படைகள் என நிறுவுவது

5.    உலகளாவிய மாற்றங்கள்  – விஞ்ஞான வளர்ச்சிக்கு ஏற்ப நமது பொருளாதார முறைமையும் மாற்றமடைய வேண்டும் என வலியுறுத்துவது

6.    முக்கியமாக சரியான பொருளாதாரக் கொள்கை ஒன்று வகுக்கப்பட வேண்டும் எனக் கோருவது.

தேசியப் பாதுகாப்புக்கொள்கையில் கரிசனை உள்ள அளவுக்குத் தேசியப் பொருளாதாரத்தில் இல்லை என்பது எவ்வளவு வேடிக்கையானதும் வேதனையானதுமாகும்?

ஏனையவை பொருளாதார அடிப்படைகளைப் பற்றியவையாக உள்ளன. முக்கியமாக இந்த நூல் தனியே பொருளாதாரம் பற்றிய புள்ளி விவரச் சுட்டிகளால் நிரப்பப்படாமல், தேவையான எடுகோள்கள், விவரங்களோடு கூடிய – சமூகப் பொருளாதாரக் கண்ணோட்டத்தில், பொருளாதார நெருக்கடிக்கான காரணங்களையும் அவற்றுக்கான தீர்வையும் பற்றி அறிய விரும்பும் எவரும் வாசிக்கக் கூடிய முறையில் – எளிமையாக எழுதப்பட்டுள்ளது.

இதற்குக் காரணம், வரதராஜா பெருமாள் ஒரு நடைமுறை அரசியல் செயற்பாட்டாளராக இருப்பதேயாகும். இதனால்தான் இந்த நூலைப் பற்றிக் குறிப்பிடும் மு. நித்தியானந்தன் , “வரதராஜா பெருமாளின் இந்த நூலின் சிறப்பு, அவர் ஒரு ஈடுபாட்டுடன் இலங்கைப் பொருளாதாரத்தையும் அதன் பின்னணியையும் அதற்கான அடிப்படைகளையும் அணுகியிருப்பதுதான். பொருளியலாளர்கள் பல்கலைக்கழகத்திலும் குளிரூட்டப்பட்ட விசாலமான அறைகளிலும் பன்னாட்டு உயர் அதிகார மையங்களில் இருந்து மட்டும் உருவாகுவதில்லை. இதற்கு வெளியிலிலும் ஓரங்கட்டப்பட்டவர்களின் – ஒடுக்கப்பட்டவர்களின் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்ட ஜீவன்களை முன்னிறுத்தி, மாற்று அரசியலைத்தேடி, சமூக நீதி கோரி தொடர்ச்சியாகச் செயற்படும் தளத்திலிருந்தும் அவர்கள் வருவார்கள். மக்கள் சார் பொருளியலாளனின் மூர்ச்சனையை வரதராஜ பெருமாளின் இந்த நூலில் கேட்கமுடிகிறது” என்று. ஆக மக்கள் நலன், தேச நலன் என்ற கண்ணோட்டத்தில் பொருளாதாரத்தை நோக்க மறுத்து வரையப்பட்ட திட்டங்களே இன்றைய – நாளைய நெருக்கடிகளுக்குக் காரணமாகும் என்பதை பெருமாள் தெளிவாக எடுத்துரைக்கிறார்.

இதற்கு அவர் 1970 தொடக்கம் 77 வரையான ஐக்கிய முன்னணி அரசாங்கத்தில்தான் ஓரளவுக்கு இத்தகைய கண்ணோட்டம் இருந்தது என்பதையும் அதற்கான – அதாவது அந்தக் காலத்தைய பொருளாதாரக் கொள்கை, நடைமுறைகள், அதனால் உண்டான மாற்றம் போன்றவற்றை ஆதாரப்படுத்துகிறார்.

ஆனால், அதற்குப் பின்னர் 1977 இல் ஜே.ஆர் ஜெயவர்த்தனா கொண்டு வந்த திறந்த பொருளாதாரக் கொள்கை நாட்டைப் பின்தள்ளியது. அதன் பாதகமான விளைவுகள் இன்று வரையில் தொடர்வதையும் அதை ராஜபக்ஸக்கள் உச்ச நெருக்கடிக்கு கொண்டு சென்றனர் என்பதையும் கூறுகிறார். இதன் உச்சமாக கோத்தபாய ராஜபக்ஸ மேற்கொண்ட அதிரடித் தீர்மானங்கள் – குறிப்பாக Vat யில் மேற்கொண்ட தளர்வு போன்றவை பொருளாதாரத்தைப் படுமோசமாகப் பின் தள்ளியது என்பதையும் குறிப்பிடுகிறார்.

இங்கே அரசாங்கத்தையும் ஆட்சியாளர்களையும் குறை சொல்லும் விமர்சனங்களாக, கண்டிக்கும் கண்டனங்களாக மட்டும் இந்த நூல் அமையாமல், வழிப்படுத்தும் நூலாகவும் அமைந்துள்ளது. இதுவே இதன் சிறப்பாகும். இதற்காக அவர் எடுத்திருக்கும் கரிசனையும் செலுத்தியிருக்கும் உழைப்பும் கொண்டிருக்கும் அர்ப்பணிப்பும் பெரிது. மதிக்கப்பட வேண்டியது.

அறிவொழுக்கத்தின் அடிப்படையைப் புரிந்து கொண்டு செயற்பட்டிருக்கிறார் வரதராஜா பெருமாள். வரலாறு எப்போதும் முக்கியமான தருணங்களைக் கொண்டிருக்கும் என்று சொல்லப்படுவதுண்டு. வரலாற்றின் எந்தச் சந்தர்ப்பமும் முக்கியமான காலகட்டம்தான். இப்போது கூட, நமக்கு ஒரு முக்கியமான காலகட்டமே. பொருளாதார நெருக்கடியில் நாடும் நாமும் சிக்கியுள்ளதைப் போல இதிலிருந்து மீளவேண்டியிருப்பதும் முக்கியமானதே.

பசிக்கும்போதுதான் உணவு தேவை. சாப்பாட்டின் அருமை அப்பொழுதுதான் அதிகமாகத் தெரியும். அதைப்போல இந்தக் காலகட்டத்திற்குத் தேவையான –  இந்தக் காலத்துக்குப் பொருத்தமான புத்தகமாக இது வந்துள்ளது. உண்மையில் இந்தக் காலகட்டத்தில் இது போலப் பல நூல்கள், பல ஆய்வுகள், பல முன்வைப்புகள் வந்திருக்க வேண்டும். தமிழில் மட்டுமல்ல, ஆங்கிலத்தில்,சிங்களத்தில் என பிற மொழிகளிலும் வந்து உரையாடல்களை நிகழ்த்த வேண்டும். அந்த உரையாடல்கள் அரகலயவைப் போல, நெருக்கடியை – அழுத்தத்தை ஆட்சியாளருக்கு உண்டாக்க வேண்டும்.

இதேவேளை அவ்வப்போது சில பொருளாதார நூல்கள் வந்துள்ளனதான். ஆனால், அவை போதாது. இது ஒரு பெரிய அலையை உருவாக்கக் கூடிய அளவுக்கு – தாக்கத்தை, நெருக்கடியை உண்டாக்கக் கூடிய அளவுக்கு  – வரவேணும். ஏனென்றால் ஆட்சியாளர்கள் ஒன்றும் நல்லவர்கள் கிடையாது. லேசுப்பட்டவர்களுமில்லை. யாரும் ஒரு நல்ல விடயத்தைச் சொன்னால் அதை மதிப்போடு கேட்டு, ஆராய்ந்து பார்க்கக் கூடிய ஒழுக்கத்தைக் கொண்டவர்களில்லை. ஆகவே இந்தக் கல் நெஞ்சக்காரர்களைக் கரைக்கக் கூடிய அளவுக்கு, இவர்களுடைய அதிகார மமதையை உடைக்கக் கூடிய அளவுக்கு, அறிவார்ந்த ரீதியில் நாம் அலைகளை எழுப்ப வேண்டியவர்களாக இருக்கிறோம். அதற்கு இந்த மாதிரி முன்வைப்புகளும் விமர்சனங்களும் புதிய யோசனைகளும் தொடர் செயற்பாடாக இருக்க வேணும். மட்டுமல்ல, இதெல்லாம் பன்முனைச் செயற்பாடாகவும் இருக்க வேண்டும். வரதராஜா பெருமாள் இதை நன்றாகப் புரிந்து கொண்டு தன்னுடைய முன்வைப்பைச் செய்திருக்கிறார்.

பலரும் நெருக்கடி ஒன்று வரும்போது – அல்லது நெருக்கடி வந்த பிறகே அதைப்பற்றிச் சிந்திப்பார்கள்: பேசுவார்கள். ஆனால். இது அப்படியல்ல. நெருக்கடி தீவிரமடைகிறது என்பதை முன்னுணர்ந்து சொல்லப்பட்ட – பேசப்பட்ட விடயங்களைக் கொண்ட புத்தகம். இதுதான் அறிஞர்களின் வேலையாகும். வருமுன் காப்பது. வருமுன் எச்சரிப்பது. இதைத் தன்னுடைய காலக்கடமையாகக் கொண்டு செய்திருக்கிறார் பெருமாள்.

இதேவேளை இப்பொழுது இனப்பிரச்சினைத் தீர்வுக்காக – அதிகாரப் பகிர்வுக்காக பேச்சுகள் நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையெல்லாம் எப்படி நாங்கள் புரிந்து கொள்கிறோம்? எப்படி அதைக் கையாள்கிறோம் என்பதைப் பொறுத்தே நம்முடைய வெற்றி தோல்விகள் அமையவுள்ளன. தனியே குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாலும் விமர்சனங்களைச் செய்வதாலும் மட்டும் ஆக்கபூர்வமான விடயங்கள் நடப்பதில்லை. மாற்றங்கள் ஏற்படாது.

சில விசயங்கள் தனிநபர்களைப் பாதிக்கும். சில ஊர் மட்டத்தில், சமூக மட்டத்தில் பாதிப்பை உண்டாக்கும். சில நாடாளாவிய ரீதியில் தாக்கத்தை – பாதிப்பை உண்டாக்கும். சில விடயங்கள் உலக அளவில் செல்வாக்குச் செலுத்தக் கூடிய பாதிப்பை ஏற்படுத்துவதுண்டு.
துறைசார் அறிவொழுக்கத்தின்படி செயற்பட்டமைக்காக நம்முடைய  மகிழ்ச்சியை தோழர் வரதராஜப் பெருமாள் அவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும். இந்தப் புத்தகம் உருவான வரலாற்றைப் பற்றி – அந்தச் சூழலைப்பற்றி இந்தப் புத்தகத்திலே ஆசிரியரும் பதிப்பாளரும் குறிப்பிட்டிருக்கிறார்கள். இந்த நூலில் உள்ள கட்டுரைகள் – அல்லது அத்தியாயங்கள் சீவகனின் அரங்கம் இணையத் தளத்திலும் சூத்திரத்திலும் வெளிவந்தன. அவற்றில் காலப்பொருத்தம் கருதிச் சில திருத்தங்களைச் செய்து இன்றைய சூழலுக்கு ஏற்றவாறு நூலாக்கியிருக்கிறார்கள். இந்த நூலாக்கப்பணியில் சமூகம் இயல் பதிப்பகம் ஈடுபட்டுள்ளது.