—- சபீனா சோமசுந்தரம்—-
நேரம் மாலை 6.30 ஐ தாண்டிக்கொண்டிருந்தது. அந்த கடற்கரை வெறிச்சோடிப் போயிருந்தது. இருள் சூரியனை கவ்விக்கொண்டிருந்தது. அந்த கடற்கரையில் பிரவீன் தனியாக அமர்ந்திருந்தான். அவன் முகத்தில் ஒரு வெறுமையோடு கடலை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தான். அவன் கால்களை கடல் அலை வந்து தொட்டு விட்டு சென்றது.
அப்போது யாரோ “பிரவீன்..” என அழைக்கும் குரல் குரல் கேட்டது. யாராக இருக்கும் எனதிரும்பிப் பார்த்தான். அங்கு அவனுடைய நண்பன் அகிலன் நின்றிருந்தான்.
அவனை பார்த்ததும் திடுக்கிட்டு எழுந்தான் பிரவீன். அவனது கால்கள் தடுமாறியது. பேசமுயன்றான் பேச்சு வரவில்லை. முகம் பயத்தில் வெளிறிப் போனது. அவன் கால்கள் மெல்ல மெல்லபின் நோக்கி நகர்ந்தது.
“பிரவீன்… பயப்படாதடா.. நான் தான் உன்ர பிரண்ட் அகிலன்…” என்றாள் அகிலன்.
“அகில்… எனக்கு பயமா இருக்குடா… நீ எப்பிடி இங்க வந்தனீ…? நீ தான் 6 மாசத்துக்கு முதல் தற்கொலை பண்ணி செத்து போயிட்டியே…” என்றான் பிரவீன். அவனுடைய குரல் நடுங்கியது. வார்த்தகைள் திக்கிதிணறி வந்தன.
“பயப்படாதடா… நான் உன்னோட கதைக்க தான் வந்தன்…நீ இவ்வளவு நேரமும் இதில இருந்து என்னை பற்றி தானே யோசிச்சிட்டு இருந்த… அதுதான் நான் உன்ர கண்ணுக்கு தெரியிறன்… எப்பிடிடா இருக்கிற..? என்று கேட்டான் அன்போடு அகிலன்.
பிரவீனுடைய முகத்தில் பயம் மறைந்து கோபமும் கவலையும் குடிகொண்டது.
“முட்டாள் பைத்தியகாரன்டா நீ… டேய் ஏன்டா இப்பிடி எல்லாரையும் விட்டுட்டு போன…?” என்று ஆவேசமாக கத்திக் கேட்டான் அகிலன்.
அகிலன் சிரித்துக்கொண்டு “எனக்கு வாழ பிடிக்கலடா.. அதான் மருந்து குடிச்சன்… இப்ப பாரு நிம்மதியா இருக்கிறன்… என்னய கண்டபடி திட்டுன எங்க அப்பா கூட இப்ப நிம்மதியா இருப்பாரு…. நான் இருந்தா தானே பிரச்சினை…இப்ப எல்லாரும் நிம்மதியா இருப்பாங்க.. என்னால யாருக்கு என்ன கஸ்டம்…” என்றான் ஒரு ஏளனப் புன்னகையோடு.
அதைக்கேட்ட பிரவீனுக்கு கோபம் வருகிறது.
“முட்டாள்… எல்லாரும் நிம்மதியா இருக்கிறாங்களா… அதோட நீ இப்பிடி உங்கட அப்பாதிட்டிட்டார் என்டு தற்கொலை பண்ணின பிறகு நீ பாவம் என்டு ஊரில இருக்கிற எல்லாரும் உன்னில பரிதாபப்படுறாங்க என்டு நினைக்கிறியா…? என்று கோபமாக கேட்டான் பிரவீன்.
“டேய் நான் என்னடா பிழை செய்தன்…பிழை செய்தது எங்க அப்பா… எல்லாத்துக்கும் திட்டிட்டே இருந்தா எப்பிடி நிம்மதியா இருக்கிறது… அந்த மனுசனுக்கு என்னில பாசமே இல்லடா…” என்கிறான் அகிலன் விரக்தியோடு.
அதைக்கேட்டு ஒரு பெருமூச்சோடு நண்பனை பார்க்கிறான் பிரவீன்.
அவன் அகிலனிடம் “நான் சொல்லுற இடத்துக்கு போய் வாறிய அகில்…? நீ வாற வரைக்கும் நான் இங்கயே வெயிட் பண்ணறன்…? என்ற கேட்கிறான் அமைதியாக.
“சொல்லுடா… எங்க போகனும்…” என்று கேட்கிறான் அகிலன்.
“நீ உங்க வீட்டுக்கு போ… ஒரு பத்து நிமிசம் உங்க வீட்டுல என்ன நடக்கிது என்டு மட்டும் பாத்திட்டுவா… நான் இங்கயே இருக்கிறன்…” என்கிறான் பிரவீன்.
அகிலன் யோசிக்கிறான். யோசித்து விட்டு நன்பனை பார்த்து புன்னகைத்துவிட்டு அங்கிருந்து நடக்கிறான்.
அகிலனின் வீடு மயானம் போல் வெறிச்சோடிக் கிடக்கிறது.
வீட்டைப் பார்த்ததும் அவனால் ஒரு அடி கூட நகர முடியவில்லை. அவன் பிறந்து வளர்ந்த வீடு. அவன் ஓடி ஆடி விளையாடிய வீடு. அந்த வீட்டில் அவனது புகைப்படம் மாலை அணிவிக்கப்பட்டு மாட்டப்பட்டிருந்தது. அதைக் கண்டதும் அப்படியே திகைத்து நிற்கிறான்.
திரும்பி பார்க்கிறான் அங்கே அவனுடைய அறை. கால்கள் அவனது அறையை நோக்கி நடக்கிறது. உள்ளே போகிறான். அவன் பாடசாலையில் வாங்கிய பதக்கங்கள் அவனுடைய பொருட்கள் எல்லாம் அடுக்கி வைக்கப்பட்டு அறை வெறிச்சோடிப் போய் கிடக்கிறது.
அங்கே அவனது மேஜையில் பார்க்கிறான் இறுதியாக அவன் படித்த புத்தகங்கள். எல்லாவற்றையும் தொட்டுப் பார்க்கிறான். மனம் கனக்கிறது. கண்கள் கலங்கியது.
திரும்பிப் பார்த்தான் கதவிற்கு வெளியே அவனது பெற்றோரது அறை தெரிந்தது. அவன் கால்கள் அந்த அறையை நோக்கி நகர்ந்தது.
அங்கு அவனது பெற்றோரை கண்டதும் “அம்மா… அப்பா…” என்று அவன் மனம் அலறியது.
ஓரமாக நின்று அவர்களை பார்த்தான்.
“ஆறு மாசம் ஆகிட்டு… என்னங்க நீங்க… இப்பிடி யோசிச்சு யோசிச்சு வருத்தம் தான் வரப்போகுது… என்று அவன் தாய் சொல்ல
மனைவியை கவலையோடு பார்க்கிறார் அகிலனின் தகப்பன்.
“என்ர மகன் நல்லா வாழனும் என்டு கண்டிச்சன்… என்ர பிள்ளை தானே… அப்பாவ பத்தி அவனுக்கு தெரியாதா..? பாசத்தில தான் கண்டிக்கிறார் என்டு தெரியாம போச்சே என்ர பிள்ளைக்கு…. நீ யாருடா என்னை கண்டிக்க…? என்டு என் கழுத்தை பிடிச்சு கேள்வி கேட்டுட்டு என்டாலும் அவன் உயிரோட இருந்திருக்கலாம்…
நான் அவன திட்டியிருக்க கூடாது… காலையில எழும்பி அவனுட்ட மன்னிப்பு கேக்க கூட அவன் எனக்கு சந்தர்ப்பம் தரலேயம்மா…” என்று சொல்லி கதறி அழுகிறார்.
முதன் முறையாக தன்னுடைய அப்பா அழுது பார்க்கிறான். அவனால் அங்கு நிற்க முடியவில்லை. அங்கிருந்து வேகமாக வெளியேறுகிறான். வேகமாக நடந்தவன் ஒரு நிமிடம் அப்படியே நிற்கிறான்.
“காவியா… என் தங்கச்சி…” என்று மனம் அங்கலாய்க்கிறது. திரும்பி வீட்டிற்குள் ஓடுகிறான்.
அங்கே ஓர் அறையில் மேஜை முன்னால் கதிரையில் அமர்ந்திருந்து எதையோ எழுதிக்கொண்டிருக்கிறாள் அவனது தங்கை. அவளை பார்த்ததும் அவனால் தன்னை கட்டுப்படுத்தமுடியவில்லை.
தங்கையுடன் பேச வேண்டும் என்று துடிக்கிறான். “காவியா… காவியா…” என்று கத்துகிறான். ஆனால் பலனில்லை. அவளுக்க எதுவும் கேட்கவில்லை.
அவள் எதையோ எழுதிக்கொண்டிருக்கிறாள். அவள் அழுது கொண்டிருந்தாள். கண்ணீர் அவள் எழுதிய புத்தகத்தில் விழ கண்ணைத் துடைத்துக் கொண்டு எழுந்து போய் போர்வையை போர்த்திக் கொண்டு படுத்துவிடுகிறாள்.
அவன் ஓடிப்போய் தங்கையை எழுப்புகிறான். முடியவில்லை. அவள் மேஜையில் இருக்கும் அவளது கொப்பியை எடுத்து பார்க்கிறான். அதில் அவள் ஒவ்வொரு நாளும் நடப்பதை எழுதிவைத்திருந்தாள். அவனால் அதை தொடர்ந்து படிக்க முடியவில்லை.
“ஏன் அண்ணா என்னை விட்டுட்டு போன…அம்மா அப்பாவ விட உன்னை தானே எனக்கு நிறையபிடிக்கும்… எனக்கு ப்ரண்ட்ஸ் கூட இல்ல அண்ணா…” என்ற அவன் தங்கையின் குரல் அவன் காதுகளில் பெரிய சத்தமாக ஒலித்துக் கொண்டிருந்தது.
அங்கிருந்து ஓடுகிறான். அவன் கால்கள் வலுவிழந்தன. அவனால் வேனமாக ஓட முடியவில்லை.
வெறிச்சோடிப் பொன கடற்கரை. நன்றாக இருட்டி விட்டிருந்தது. நண்பனை தேடி கடற்கரை மணலில் கால் புதைய ஓடினான் அகிலன்.
“பிரவீன் பிரவீன்…” என்று கூச்சலிட்டான். அங்கே நிலவு வெளிச்சித்தில் ஓரிடத்தில் பிரவீன் அமைதியாக அமர்ந்திரந்தான்.
அகிலன் பிரவீன் முன்னால் போய் மண்டியிட்டு அமர்ந்தான்.
பிரவீனுடைய கால்களை பற்றிக்கொண்டு அழுதான் அகிலன். பிரவீன் முகத்தில் ஓர் விரக்தியோடு அமைதியாக அமர்ந்திருந்தான்.
“பிரவீன்… நான் அவசரப்பட்டுட்டன் போலடா… டேய் இப்ப நான் என்னடா செய்ய…?” என்று நண்பனின் முகத்தை பார்த்து அழுதபடி கேட்டான்.
“ஏன்டா அழுற.. நீ தான் நிம்மதியா இருக்கியே… என்னால யாருக்கு என்ன கஸ்டம் இப்ப… எல்லாரும் நல்லா தானே இருக்கிறாங்க…” என்கிறான் பிரவீன் ஓர் ஏளனப் புன்னகையோடு எங்கோ பார்த்தபடி.
“ஐயோ… மன்னிச்சிடுடா… அப்பா திட்டுனது மட்டும் தான்டா மனசில பதிஞ்சது… அவர்ட பாசம் புரியலடா…ஏன் திட்டுறார் என்டு விளக்கம் சொல்ல கூட அவருக்கு நான் டைம் குடுக்கலடா… ஐயோ எங்க அப்பாவ நான் புரிஞ்சுக்கலயே… அவசரப்பட்டுட்டனே…
அப்பறம் காவியா… பிரவீன்… டேய்… என் தங்கச்சி அவ பாவம்டா… தனியா இருந்து அழுறாள்டா… உங்க அண்ணன் ஒரு கோழை… ஒரு முட்டாள்… என்டெல்லாம் சொல்லி அவள்ட வகுப்பு பொடியன்மார் நக்கல் பண்ணுறாங்களாம்டா…
அவள்ட முடிய பிடிச்சு இழுத்த எண்டு ஒருத்தன அடிச்னான்டா ஒருக்கா… அவன் இப்ப எந்த அண்ணன கூட்டி வருவ… செத்து போன உன் முட்டாள் அண்ணன் வருவானா என்டு கேட்டு காவியாவ தொல்லை பண்ணுறான்டா… டெய்லி எல்லாம் எழுதி வச்சிருக்காள்டா… என்னால பாக்க முடியல அவள… “ என்று சொல்லி பிரவீனுடைய கால்களை பற்றிக் கொண்டு அழுகிறான் அகிலன்.
தன்னுடைய கால்களை பற்றி இருந்த அகிலனின் கைகளை உதறிவிட்டு எழுகிறான் பிரவீன்.
“அழுடா… இன்னும் கத்தி அழு.. யாருக்கு என்ன பிரயோசனம்.. போன உயிர் திரும்பி வருமா…? டேய் சின்ன வயசில இருந்து பழகின நட்பு… இந்த கையால தான்டா உன் சவப்பெட்டிய தூக்கினன்… செத்து பிழைச்சம்டா நாங்க எல்லாம்.. தாங்க முடியலடா…
நம்மள மாதிரி எல்லாம் இருக்கிற பசங்களுக்கு தான்டா தேவையில்லாத சிந்தனை தேவையில்லாத ஆசைகள் எல்லாம்.. சாப்பாட்டுக்கே கஸ்டப்படுற வீட்டு பிள்ளைகள பாரன்… அதுகளுக்கு வாழுறதே ஒரு போராட்டம் தான்… அந்த போராட்டத்திலயே வாழ்க்கை போகுது…
ஆனா நமக்கு எல்லாம் இருந்தும் திமிர்.. ஆணவம்… ஒன்டுக்கும் பியோசனமில்லாத கௌரவம்… ச்சேக்… அப்பா திட்டுனா என்னடா… அடிச்சா என்னடா… என்னால இதை தான் செய்ய முடியும் என்டு நம்மால செய்த முடிஞ்சதா பெஸ்டா செய்து வாழ்ந்து காட்டனும்…
நம்மள பெத்து வளக்க நாயா பேயா ஓடி ஓடி கஸ்டப்படுறாங்க நம்ம அப்பா அம்மா… அவங்கள சமாளிச்சு போறதில என்னடா குறைஞ்சு போயிட போறம்…
நாம் தற்கொலை பண்ணினா இந்த உலகம் நம்மள கோழைன்னு சொல்லி தூற்றுமே தவிர பாவம்ன்னு சொல்லி பரிதாபப்படாது…
ஏதும் பிச்சினை என்டா யார்கிட்டயாவது மனம்விட்டு கதைச்சு என்ன செய்யலாம் என்டுகேளுங்கடா… நம்ம சுத்தி நிறைய அன்பான நல்ல மனுசங்க இருக்கிறாங்க.. அத விட்டுட்டு இப்பிடி உப்பு சப்பு இல்லாத விசயத்துக்கு எல்லாம் செத்து தொலையாதீங்கடா..
இந்த உயிர் போனா போனது தான்.. திரும்பி வராது… ” என்று ஒரு பெருமூச்சோடு சொல்லிமுடிக்கிறான் பிரவீன்.
அகிலன் ஓடி வந்து பிரவீனுடைய காலடியில் விழுந்து அவன் கால்களை பற்றிக்கொண்டு அழுகிறான்.
“எனக்கு திரும்பவும் எங்க வீட்டுல வாழனும்.. அப்பாட்ட சொறி சொல்லனும்… என் தங்கச்சிய நல்லா பாத்துக்கனும்… டேய் பிரவீன்… ஏதாவது செய்டா… நான் வாழனும்டா… ப்ளீஸ்டா…” என்று கெஞ்சுகிறான்.
“எல்லாம் முடிஞ்சு போச்சு… அழுது புலம்பினாலும் போன உயிர் வராது… என்ன மன்னிச்சிடுடா… வாழ்க்கை முழுக்க உன்னை மிஸ் பண்ணுவன்… “ என்று சொல்லி தனது கால்களை விடுவித்துக்கொண்டு அங்கிருந்து நடக்கிறான் பிரவீன்.
கடற்கரை மணலில்; கைகளை ஓங்கி அடித்தபடி அழுகிறான் அகிலன். “பிரவீன்.. ப்ளீஸ்டா…” என்ற அகிலனின் குரல் அந்த இருளை கிழித்துக் கொண்டு ஓங்கி ஒலித்து ஓய்கிறது.