(‘அரங்கம்’ கலை இலக்கியப் பத்தித்தொடர்)
– செங்கதிரோன் –
ஈழத்துக் கலைகளை சமூக ஆரோக்கியத்துக்கான மக்கள் கலைகளாக மெருகேற்றி வளர்த்தல் என்பதை அடிப்படைக் கருத்தியலாகக் கொண்டு, கலைகளினூடாக மானுட விடுதலையையும் சுதந்திரத்தையும் சமத்துவ நெறியையும் அடிப்படையாகக் கொண்ட புதிய தமிழ்ப்பண்பாட்டு உருவாக்கத்துக்காகப் பணியாற்றுவதைப் பிரதான குறிக்கோள்களிலொன்றாக வரித்துக்கொண்ட ‘ஈழத்தமிழ்க்கலைஞர் ஒன்றியம்’ கடந்த வருட ஆரம்பத்தில் (26.01.2025) வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் மன்றத்தில் நடைபெற்ற அதன் முதலாவது தேசிய மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பெற்ற மருத்துவ கலாநிதி. சி. சிவன்சுதன் தலைமையிலான மத்திய நிறைவேற்றுக்குழுவின் நெறிப்படுத்தலில் செயற்பட்டு வருகின்றது. ஒன்றியத்தின் செயலாளராக திரு.ம.செல்வராசா அவர்களும் பொருளாளராக இ.ராஜாமகேந்திரசிங்கம் அவர்களும் பணிசெய்கின்றனர்.

அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், மலையகம் ஆகிய பிரதேசங்களில் பிராந்தியக் கிளைகளை – பிராந்திய செயற்குழுக்களை உள்ளடக்கிய வலையமைப்பாகவும் செயற்படுகிறது. அதன் மாதாந்த மத்திய நிறைவேற்றுக்குழுக் கூட்டங்கள் ஒவ்வொரு மாதமும் கிரமமாக வெவ்வேறு பிராந்தியங்களில் நடைபெற்று வருகின்றன.
ஈழத்தமிழ்க் கலைஞர்களை நாடளவிய ரீதியிலே ஒன்றிணைக்கும் வலையமைப்பைக் கொண்டு செயற்பட்டு வருவது இவ்வமைப்பின் குறிப்பிடத்தக்க பரிமாணமாகும்.
அந்தவகையிலே ஈழத்தமிழ்க் கலைஞர் ஒன்றியத்தின் ஏழாவது மத்திய நிறைவேற்றுக்குழுக் கூட்டம் 05.11.2025 அன்று கிளிநொச்சிப் பிராந்தியம் முகமாலையில் அமைந்துள்ள ‘அன்பே சிவம்’ அறக்கட்டளையின் சிவபுர வளாக மூதாளர் இல்லத்தில் நடைபெற்றது.
அதில் பங்கேற்பதற்காக அம்பாறைப் பிராந்தியக்குழு அதன் தலைவர் ஜே.ஆர்.தருமராசா தலைமையிலும் மட்டக்களப்புப் பிராந்தியக்குழு எனது தலைமையிலும் இணைந்து ஒரே வாகனத்தில் மொத்தம் எட்டுப்பேர் பயணம் மேற்கொண்டோம்.
அம்பாறைப் பிராந்தியத்திலிருந்து ஜே.ஆர்.தருமராசா, திருமதி.எஸ்.யூ.செசலியா ஆகியோரும் மட்டக்களப்புப் பிராந்தியத்திலிருந்து தலைவராகிய நான் உட்பட கதிரவன் த. இன்பராசா (செயலாளர்) – கவிஞர் அழகுதுரை அ.தனுராஜ் (பொருளாளர்) – கவிமகள் ஜெயவதி – கவிஞர் சோலையூரான் (ஆ. தனுஷ்கரன்) – அ.குலேந்திரராசா ஆகியோரும் கலந்து கொண்டோம்.
பகல் 1.30 இலிருந்து பி.ப 3.00 மணிவரை நடைபெற்ற மத்திய நிறைவேற்றுக்குழுக் கூட்டம் நிறைவடைந்த பின்னர், ஈழத்தமிழ்க் கலைஞர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் சுவிஸ்சர்லாந்து உறவுகளும் (சூரிச் சைவத்தமிழ்ச் சங்கம், அருள்மிகு சிவன்கோயில்) யாழ்ப்பாணம் நித்திலம் கலையகமும் இணைந்து நடாத்திய கலைஞர் கௌரவிப்பு நிகழ்வும், நித்திலம் கலையகத்தின் Dr. சி. சிவம்சுதனின் தயாரிப்பு, இயக்கத்திலான ‘மகரந்தம்’ திரையிசை வெளியிடும் பி.ப 3.30 க்கு ஆரம்பமாகி மாலை 6.30 மணிவரை நடைபெற்றன.
இந்நிகழ்வுக்கு ஈழத்தமிழ்க் கலைஞர் ஒன்றியத்தின் ஆலோசகர்களில் ஒருவரான சட்டத்தரணி சோ. தேவராஜா தலைமை வகிக்க வடமாகாண ஆளுநர் கௌரவ.நா.வேதநாயகம் அவர்கள் முதன்மை விருந்தினராகவும் கலைப்பீடாதிபதி யாழ் பல்கலைக்கழகம் சி. ரகுராம் மற்றும் முன்னாள் பீடாதிபதி யாழ்ப்பாணம் தேசிய கல்வியியல் கல்லூரி சு. பரமானந்தம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
நிகழ்வுகள் ஆரம்பமாவதற்கு முன்னர் சிவபுர வளாகத்தின் நுழைவாயிலில் வைத்து ‘அன்பே சிவம்’ அறக்கட்டளையின் ‘வரப்புயர’ மரநடுகைத் திட்டத்தின் கீழ் வடமாகாண ஆளுநரைக்கொண்டு பயனாளிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பெற்றன.
கலைஞர் கௌரவிப்பு நிகழ்வில் ‘தூவானம்’ திரைப்படக் கலைஞர் அனைவருக்கும் சான்றிதழ்களும் விருதுகளும் நினைவுச் சின்னங்களும் வழங்கிக் கௌரவிக்கப் பெற்றார்கள். ‘மகரந்தம்’ திரையிசைப் பாடல்களும் மேடையில் திரையில் காட்சிப்படுத்தப் பெற்றன. Dr
P. சிவானி – Dr. மு. தர்ஷனன் – Dr. சிவன்சுதன் – கவிஞர் புதுவை அன்பன் ஆகியோர் எழுதிய பாடல்வரிகளைப் பூவன் மதீசன் அவர்களின் இசையமைப்பில் N. மதுராங்கனி – Dr. மு. தர்ஷனன் – V. S. மாகன் – P. இசைத்தமிழ் ஆகியோர் பாடியிருந்தனர்.
ஈழத்தமிழ்க் கலைஞர் ஒன்றியத்திற்கான இலச்சினையை வடிவமைத்தவரும் அதன் துணைப்பொருளாளருமான தர்மலிங்கம் பிரபு அவர்களும் இந்நிகழ்வில் வடமாகாண ஆளுநரால் பாராட்டிக் கௌரவிக்கப் பெற்றார்.
மூதாளர்களும் மேடையின் முன் பார்வையாளர்களாக அமர்ந்திருந்து நிகழ்வுகளை இரசித்தமை கவனிப்புப் பெற்றதொரு நிகழ்வாகும். கவிஞர் சோ. பத்மநாதன் அவர்களும் முதுமையிலும்கூட யாழ்ப்பாணத்திலிருந்து வந்து இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்.
இந்நிகழ்வுக்கு வருகை தந்திருந்த ஈழத்தமிழ்க் கலைஞர் ஒன்றியத்தின் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், மலையகம் பிராந்திய செயற்குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்திய குழு பிராந்திய ரீதியாகத் தனித்தனியே மேடைக்கு அழைக்கப்பெற்று ஒவ்வொரு பிராந்தியக் குழுவுக்கும் பணிகளைப் பாராட்டும் சின்னங்கள் பிரதமர் விருந்தினர் வடமாகாண ஆளுநர் நா. வேதநாயகம் அவர்களால் வழங்கி வைக்கப்பெற்றன.
‘தூவானம்’ மற்றம் ‘மகரந்தம்’ ஆகிய திரைப்படங்கள் குறித்த குறிப்புக்களையும் ‘அரங்கம்’ வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளவிழைகிறேன்.
Dr. சி. சிவன்சுதன் அவர்களின் கதை திரைக்கதை, வசனம் பாடல்கள் மற்றும் தயாரிப்பிலும், கலாநிதி. க. ரதிதரன் அவர்களின் இயக்கத்திலும் வெளிவந்த திரைப்படம் ‘தூவானம்’
‘தூவானம்’ 18.02.2023 அன்று வெளியாகி தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் நூற்றி எழுபதிற்கு மேற்பட்ட திரையிடல்களையும் தாண்டி கடந்த 2025 ஆண்டு வரைக்கும் பல திரையரங்குகள், பாடசாலைகள் என ஈழத்துத் திரைப்பட வரலாற்றில் ஒரு சாதனையைப் படைத்துள்ளது.
17.06.2023 அன்று அவுஸ்திரேலியா பேர்த் நகரிலும், 30.06.2023, 02.07.2023 ஆகிய தினங்களில் லண்டனிலும் திரையிடப்பெற்றது.
100ஆவது திரையிடல் 20.06.2023 அன்று யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.
172 ஆவது திரையிடல் 07.11.2025 அன்று கொழும்புத் தமிழ்ச்சங்க வினோதன் மண்டபத்தில் நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கு மூத்த இசை அமைப்பாளர் கண்ணன் மாஸ்டர் மற்றும் அவரது புதல்வர்கள் முரளி, சாயிதர்சன் இசை அமைத்திருந்தார்கள்.
இதன் ஒளிபதிவு முகுந்தன், இதன் படத்தொகுப்பாளர் பிரபு, மற்றும் 150க்கு மேற்பட்ட ஈழத்துக் கலைஞர்கள் பணியாற்றி இருந்தார்கள். நித்திலம் கலையகத்தின் முதலாவது முழு நீள திரைப்படம் ‘தூவானம்’.
இரண்டாவது முழு நீள திரைப்படமான ‘மகரந்தம்’ இந்த ஆண்டு வெளிவர இருக்கிறது. அதன் இசை வெளியீடுதான் ‘அன்பே சிவம்’ மூதாளர் இல்லத்தில் வெளியிடப்பெற்றது.
