இலங்கை:  பொருளாதாரத்தை  பாதுகாக்கத்தவறிய அரசியல்..!           (மூன்றாவது கண்: III)

இலங்கை:  பொருளாதாரத்தை  பாதுகாக்கத்தவறிய அரசியல்..! (மூன்றாவது கண்: III)

 — அழகு குணசீலன் —

“WHY HAS ONE OF THE WORLD’S OLDEST DEMOCRACIES OUT SIDE THE WEST, FAILD TO LEVERAGE ITS POLITICAL SYSTEM TO ENSURE ECONOMIC STABILITY?”. 

“மேற்கு உலகத்திற்கு வெளியே, உலகின் பழமையான ஜனநாயக நாடுகளில் ஒன்று பொருளாதார ஸத்திரத்தன்மையை உறுதிப்படுத்த அதன் அரசியல் முறைமையை பயன்படுத்த தவறியது ஏன்….?”

இந்த கேள்வியை இலங்கையின் இறைவரி, நாணய கொள்கை வகுப்பாளர்கள் முன்னிலையில் முகத்தில் அறைந்தாற்போல் கேட்டிருக்கிறார் அரவிந்த் சுப்பிரமணியன்.

இலங்கை மத்திய வங்கியில்  கடந்த வாரம் ஜனவரி 22 ம்திகதி அவர் ஒரு விரிவுரையாற்றினார்.  அப்போது இந்த கேள்வியை சுப்பிரமணியன் எழுப்பி உள்ளார். இலங்கையின் இன்றைய சமூக, பொருளாதார,   அரசியல் நெருக்கடிகளுக்கு விடை தேடும் ஆய்வாளர்கள் இந்த கேள்விக்குள் பதிலைத்தேடமுடியும். 

அரவிந்த் சுப்பிரமணியன் இந்திய அரசாங்கத்தின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர். தற்போது சர்வதேச பொருளாதாரத்துக்கான  பீற்றேர்சன் நிறுவனத்தின் சிரேஷ்ட ஆலோசகராக கடமையாற்றுகிறார்.

(PETERSON INSTITUTE FOR INTERNATIONAL ECONOMICS )

டாக்டர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ள  “இந்தியா குறித்த” ஒப்பீட்டளவான கருத்துக்களை நாம்  முற்றாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதல்ல. ஆனால் அவர் எழுப்பியுள்ள கேள்வியின் முக்கியத்துவத்தையும், நியாயத்தன்மையையும் , இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதில் உள்ள மறைமுக சவால்களையும், வழிமுறைகளையும் – வரலாற்றையும் நாம் தட்டிக் கழிக்க முடியாது.

இந்தியாவில் தீவிர அரசியல் வன்முறைகள் மற்றும் பொருளாதார குழப்பம் ஆகிய இரண்டையும் தடுக்க அந்த நாட்டின் “ஜனநாயகம்” பெரும் அழுத்தத்தை கொடுக்கும் ஒன்றாக செயற்பட்டுள்ளது  என்பது அவரது கருத்து. இக்கருத்து விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட ஒன்று அல்ல என்பது இந்தியாவின் அன்றாட சமூக, பொருளாதார, அரசியலை அறிந்தவர்களுக்கு புரியும்.

வரலாற்று ரீதியாகப் பார்க்கும்போது தேசத்தை கட்டியெழுப்பும் செய்முறை வன்முறையானதுதான்  என்றாலும் மேற்குலக மக்களின், சீன மக்களின் பெருந்தொகையான அழிவுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா குறைவான வெகுஜன வன்முறையை மாத்திரம் பயன்படுத்தி அதனைச் சாதிக்க முடிந்தது என்று அவர் கூறுகிறார். இது இந்தியாவின் சாதனைகளுள் ஒன்று. இந்திய ஜனநாயகத்திற்கு இதில் பெரும் பங்குண்டு என்றும் அவர் வாதிடுகிறார்.

இந்தியாவில் பணவீக்கம் ஐந்து வீதத்தை தாண்டினால், அரசாங்கம் அடுத்த தேர்தலில் தோற்க வாய்ப்புள்ளது என்பது ஒரு பரவலான நம்பிக்கை. இந்திய ஜனநாயகத்தின் குறைந்த பணவீக்கத்திற்கான சமூகக்கோரிக்கையாக இது வெளிப்படுத்தப்படுகிறது. இந்த அரசியல் பொறுப்புக்கூறல் மத்திய வங்கியையும், அரசாங்கத்தையும் ஸ்திரத் தன்மையைப்பேணச் அழுத்தம் கொடுக்கிறது. இந்தியாவுக்கு வெகு முன்னதாகவே சர்வஜன வாக்குரிமையை பெற்ற  இலங்கையின் ஜனநாயகத்தில் இது தவறியது  ஏன்….?

டாக்டர் அரவிந்த் சுப்பிரமணியனின் கருத்துக்களில் பெரும்பாலானவற்றை இலங்கையின் இன்றைய அரசியல், பொருளாதார நிலைமைகளுக்கு ஏற்ப மறுவாசிப்பு செய்யவேண்டிய தேவை ஆய்வாளர்களுக்கு உள்ளது.

இங்கு சுப்பிரமணியன் கூற வருவது என்ன? பணவீக்கம் அதிகமாகவும், பொருளாதார வளர்ச்சி குன்றியும், பொருளாதார உறுதி தள்ளாடிக் கொண்டும் இருந்த ஒரு அரசியலில் மக்கள் அதே  அரசாங்கங்களையே மீளவும்  ஏன் தெரிவு செய்தனர் என்பதா? 

இதன்படி தேர்தல் ஜனநாயகம் சரியாகச் செயற்படாததன் விளைவுதான் இலங்கை பொருளாதார நெருக்கடியின் அடிப்படை என்பதை வெளிப்படுத்துகிறாரா?  

அப்படியானால் அரசாங்க மாற்றம்,  அதனூடாக கொள்கை மாற்றம் ஒன்று ஏற்பட்டிருந்தால் இந்த பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை ஓரளவாவது தப்பிக்க முடிந்திருக்கும் என்று அவர் கருதுகிறாரா?

 என்றே நாம் மறுவாசிப்பு செய்ய வேண்டியதாகிறது. 

தாராள பொருளாதார – உலகமயமாக்கல் 1978 – 1993 க்கும் இடையே ஜே.ஆர்.ஜயவர்த்தன, ரணசிங்க பிரேமதாச, டிங்கிரி பண்டா விஜதுங்க தலைமைத்துவ காலத்தில் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டது. சுதந்திர வர்த்தக ஏற்றுமதி இறக்குமதி பொருளாதாரம், வெளிநாட்டு முதலீட்டு பாய்ச்சல், வெளிநாட்டு வேலைவாய்ப்பு என்பனவற்றிற்காக முதல் தடவையாக சுதந்திர இலங்கையின் பொருளாதாரத்திற்கான கதவுகள் 15 ஆண்டுகள் அகலத் திறந்து விடப்பட்டன. இந்த காலத்தில் 1991 இல் பூகோள அரசியல் மாற்றங்களுக்கு ஏற்ப இந்தியா எதிர் நோக்கிய பொருளாதார நெருக்கடிக்கு பொருளாதார சீர்திருத்தங்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால் துரதிர்ஷ்டவசமாக இலங்கையில் ஏற்பட்ட ஜனநாயக அரசாங்க மாற்றங்கள் சர்வதேச, பொருளாதார பூகோள அரசியல் மாற்றங்களை கணக்கில் எடுக்கவில்லை. டாக்டர் சுப்பிரமணியன் கூறுகின்ற  ஜனநாயகம் இங்கு இதற்கு எதிர்த்திசையில் சென்றது.

1994- 2024 வரையான காலப்பகுதியில் சந்திரிகா குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன, கோத்தபாய ராஜபக்ச, ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் அரச தலைமையை வகித்தார்கள். டாக்டர் சுப்பிரமணியன் குறிப்பிடுகின்ற கடந்த 35 ஆண்டுகளாக இந்தியா சர்வதேச நாணய நிதியை நாடவில்லை என்று கூறுகின்ற காலப்பகுதி இலங்கையில் இடதுசாரி சார்ந்த பண்டாரநாயக்கா – சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வழி வந்தவர்களின் தலைமைத்துவ காலப்பகுதியாகும்.  

ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவத்தை ஒரு அரசியல் விபத்தாக கடந்து சென்றால், கடந்த 30 ஆண்டுகாலம் இலங்கை உலக பொருளாதார பொது ஒழுங்கில் இருந்து விலகி சீனாவில் தங்கியிருந்த காலம் என்று கொள்ளலாம். அணிசேரா இயக்கம் முதல் சோவியத்தின் வீழ்ச்சியையும் தாண்டி இலங்கை தலைமைகள் பெருமளவுக்கு மூடப்பட்ட – சோஷலிசம் சார்ந்த அதேவேளை உலக, மற்றும் பிராந்திய பொருளாதார வளர்ச்சிக்கு ஈடுகொடுக்க முடியாத ஒரு மாயை கொள்கையில் சீனாவின் கையாளாக பயணித்திருக்கிறார்களா?

டாக்டர் சுப்பிரமணியன் கூறுகின்ற அரசியல் ஜனநாயகத்தின் இயலாமை என்பது முப்பதாண்டுகளாக இலங்கை தனது வளர்ச்சி -உறுதியில் படிப்படியாக அகல பாதாளத்தில் வீழ்ந்ததை குறிக்கிறது.  அயல் நாடான இந்தியா சீர்திருத்தங்களை 1991 இல் ஆரம்பித்து பிரமிக்கத்தக்க  வளர்ச்சியை அதே 30 ஆண்டுகளில் அடைந்துள்ளபோது, இலங்கை அரசியலில் ஜனநாயகம்  30 ஆண்டுகள் உறங்கு காலத்தில் இருந்துள்ளது. மக்கள் தலைமைகளை மாற்றினாலும், தவறான மாற்றம் அற்ற பொருளாதாரக்கொள்கைக்கு தங்கள் வாக்குரிமையை தொடர்ந்தும் வழங்கி வந்துள்ளனர் என்பது ஜனநாயகத்தில் கேள்விக்குரியது.

சிறுபான்மை தேசிய இனங்களுக்கு எதிரான, ஜனநாயக அடக்குமுறையும், அரசியல் அமைப்பு மீறலும் தொடர்ந்து வந்துள்ளது. இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியாமல் போனதும் டாக்டர் சுப்பிரமணியன் கூறுகின்ற ஜனநாயகத்தின் தோல்விதான். இந்திய – இலங்கை சமாதான உடன்படிக்கையும், அதனூடான அதிகாரப்பகிர்வும், தீர்வு நோக்கி நகராததும்  மூத்த அரசியல் ஜனநாயகத்தின் தோல்வி. இந்தியாவில் வன்முறையையும், பொருளாதார வளர்ச்சியையும் ஒரு கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ள கூடிய நிலை இருந்திருக்கிறது. ஆனால் இது விடயத்தில் இலங்கை அரசாங்கமும், விடுதலைப்புலிகளும் தோல்வி அடைந்தனர். இறுதியில் ஜனநாயக அரசியல் முறைமை தோற்றது. இலங்கையில் நிலவிய அசாதாரண அரசியல் சூழ்நிலையை மாற்றுவதில் ஜனநாயகம் வன்முறையிடம் தோற்றுப்போனது என்றே  டாக்டர் சுப்பிரமணியனின் பார்வையில் தெரிகிறது.

 சர்வதேச நாணய நிதியத்தின்  உறவை “பேய்பிடித்தது” என்று வர்ணிக்கும் சுப்பிரமணியன் இலங்கை அறுபது வீதம் நேரத்தை ஐ.எம். எப் திட்டங்களின் கீழ் செலவிட்டுள்ளது என்கிறார். இலங்கை 18 தடவைகள் சர்வதேச நாணய நிதியத்திலும், அதன் நிபந்தனைகளிலும் தங்கியிருந்திருக்கிறது என்பதை அவர் சுட்டிக்காட்டுவதாகவும், இதை விட மாற்று வழிகள் இருந்தும் அரசாங்கமும், கொள்கை வகுப்பாளர்களும் (திறைசேரி, மத்திய வங்கி) அதைத் தேர்வு செய்யவில்லை என்றும் அவர் கூற வருகிறார் என்பதே வெளிச்சம். 1965 இல் இருந்து 2024 வரை 18 தடவைகள் இலங்கை சர்வதேச நாணயநிதியத்திடம் கைநீட்டியுள்ளது. இதில் சோஷலிச நிலைப்பாட்டை -இடதுசாரி சார்புத்தன்மையை  கொண்ட ஆட்சிகள்1991, 2001,  2003, 2009,2016,2023,2024 காலங்களில் ஏழு தடவைகள் கைநீட்டியுள்ளன.

சர்வதேச நாணய நிதிய கட்டுப்பாடுகளை “வற்றாத பொருளாதார அழுத்தம்” என்று வர்ணிக்கும் டாக்டர் சுப்பிரமணியன் இந்த நிலையை இந்தியாவுடன் ஒப்பிடுகிறார். இந்தியா 1991 பொருளாதார சீர்திருத்தங்களை தொடர்ந்து கடந்த 35 ஆண்டுகளாக ஐ.எம்.எப்.திட்டத்தை நாடவில்லை. இது ஏன் இலங்கையில் நடக்கவில்லை என்ற கேள்வியையும் எழுப்புகிறார். இதற்கான பதில் மேலேயுள்ள  “தலைகளை மட்டும் மாற்றிய”  ஜனநாயகத்தில் தங்கியுள்ளது.

மூன்றாவது கண் பார்வையில் இந்தியாவும், இலங்கையும் 1970 களில் மிகவும் இறுக்கமான மூடப்பட்ட பொருளாதார கொள்கையை இந்திராகாந்தி, சிறிமாவோ பண்டாரநாயக்கா தலைமையில் செயல்படுத்திய நாடுகள். பொருளாதாரத்தில் மட்டும் அல்ல அரசியல் அமைப்பு ஜனநாயகத்திலும் ஒரு மறுப்பும், இறுக்கமும் இருந்தது. இருநாடுகளும் அவசர கால சட்டங்களின் மூலம் தங்கள் ஆட்சியை இழுத்துச்சென்றன.

அன்றைய உலக ஒழுங்கு அமெரிக்கா, சோவியத் யூனியன் என்பன வற்றால் பிரித்து கையாளப்பட்டது. அணி சேரா அமைப்பு பங்காளிகளான இந்தியாவும், இலங்கையும் சோவியத் சார்பு நிலைப்பாட்டைக் கொண்டவை. 1991 வரை இந்தப் பாதை ஒரு சாத்தியமானதாக இருந்தது. 1991 இற்கு பின்னர் கொர்பச்சேவ் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் அணிசேரா நாடுகளை நட்டாற்றில் கைவிட்டவையாக அமைந்தன. 

இதற்கு சமாந்தரமாக பேர்ளின் சுவர் சரிந்தது. அமெரிக்க – சோவியத் உறவு வலுத்தது. சோவியத் யூனியன் துண்டு, துண்டானது. இந்த கட்டம் உண்மையில் ஒரு பொருளாதார, அரசியல் ஜனநாயக மாற்றத்தை அணிசேரா தேசங்களிடையே வேண்டிநின்றது. அப்போது தான் 1991 இல் இந்திய பொருளாதார சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அன்றைய பிரதமர் சந்திரசேகர் தோற்கடிக்கப்பட்ட பின்னர் (5 வீதத்தைதாண்டிய பணவீக்கம்)  பிரதமர் நரசிம்ம ராவ் பதவியேற்றார். பொருளாதார அறிஞர் டாக்டர் மன் மோகன் சிங் நிதியமைச்சர் ஆனார். பொருளாதார சீர்திருத்தங்கள் உலகப்போக்கிற்கு ஏற்ப மாற்றப்பட்டன. இதுவரையான இறைவரிக்கொள்கை, நாணயக்கொள்கை என்பன ஏற்படுத்திய “இரட்டை சமநிலை தளம்பல்” நிலையில் இருந்து விடுபடுவதற்கான சீர்திருத்தங்கள் அறிமுகமாகின. இந்தியாவில் அரசியல் அமைப்பு ஜனநாயகம் செயற்பட்டது. ஆனால் இலங்கையில்……?  இது தான் டாக்டர் சுப்பிரமணியனின் கேள்வி.

வெளிநாட்டு மூலதன அணுகுமுறை இந்தியாவுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் அதிகளவுக்கு தங்கியிருத்தலை ஊக்குவிக்கிறது. மொத்த தேசிய உற்பத்தியில் விகிதாசார அடிப்படையில் இந்தியா, சீனாவை விடவும் இலங்கை வெளிநாட்டு மூலதனத்தில் அதிகம் தங்கியுள்ளது. சுப்பிரமணியின் கருத்துப்படி வெளிநாட்டு மூலதனம் ஒரு அவசியதேவை என்று எம்மவர்கள் கூறுவதை அவர் நம்பத்தயாராயில்லை.இந்தியாவும் குறைந்த உள்நாட்டு சேமிப்பால் பாதிக்கப்பட்ட ஒரு நாடு.ஆனால் சரியான பாதையை தேர்ந்தெடுத்ததினால் இன்றைய உயர் நிலையை அடைந்தது.இதனால் வெளிநாட்டு மூலதனத்தில் இந்தியா மிகவும் கவனமாகவும், எச்சரிக்கையாகவும் உள்ளது என்று வாதிடுகிறார் சுப்பிரமணியன்.

வெளிநாட்டு மூலதனம் வளர்ச்சிக்கு உதவினாலும் ,அது உள்ளேயும், வெளியேயும் பாய்வதால் ஆபத்தானது. இந்த வழியிலான வெளிநாட்டு கடனுக்கான அதிக வெளியேற்றமே இலங்கையை வேட்டையாடியது என்று அடித்துச் சொல்கிறார் அவர். உள்ளக பொருளாதார பாதுகாப்பை உறுதிப்படுத்தாமல் வெளிநாட்டு மூலதனத்திற்காக கட்டுப்பாடுகளை தளர்த்தி ஒரு தேசத்தை திறந்துவிட முடியாது.  அதன் விளைவுகளை தேர்தல் மேடைகளில் முன்னிறுத்தி, அந்த அணுகுமுறைகளை முற்றாக நிராகரித்த ஜே.வி.பி.- என்.பி.பி. அரசாங்கம் மக்களுக்கு அளித்த ஜனநாயக வாக்குறுதிகளை மீறிச்செயற்படுகிறது. மக்களின் ஜனநாயக ரீதியான அரசாங்கத் தேர்வு பொருளாதார கொள்கையில் வெளிப்படவில்லை. இந்த நிலையைக் கூட டாக்டர் சுப்பிரமணியன் கூறுகின்ற இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்த்திரப்படுத்த அரசியல் முறைமை தவறி விட்டது என்ற கண்ணாடியை அணிந்தே பார்க்க வேண்டியுள்ளது. 

ஒட்டு மொத்தத்தில் டாக்டர் சுப்பிரமணியனின் விரிவுரை இலங்கை புத்தி ஜீவிகளுக்கு ஒரு சவால்.  பொதுவாக ஜனநாயகம் என்பது அரசியல், மற்றும் பொருளாதார சீர்குலைவுக்கு எதிரான பாதுகாப்பாக இருக்க வேண்டும். இந்த அரசியல், பொருளாதார நச்சு இரத்த சுற்றோட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு இலங்கைக்கு  “அரசியல், பொருளாதார சுய பரிசோதனை” என்பது காலத்தின் கட்டாயம். இது விடயத்தில் பழைய பொருளாதார இரத்த சுற்றோட்டத்திலேயே பயணிக்கும் அநுர அரசாங்கம் இலங்கையை அரசியல், பொருளாதார சிறையில் இருந்து மீட்குமா? என்பதுதான் இன்றைய கேள்வி.