___ அழகு குணசீலன் —-
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சமாதான பேச்சுவார்த்தைக்கு பின்னால் இருந்த மத்தியஸ்த மறைகரம் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே தெரிகிறது. இலங்கை அரசாங்கத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான இறுதிப் பேச்சுக்களின் போது மத்தியஸ்தம் வகித்தவர் எரிக்சொல்கைம். போர் ஓய்வுக்குப் பின்னர் இருதரப்பாலும் விரும்பப்படாத விருந்தாளியாக இருந்தவர், மீண்டும் களத்தில் நிற்கிறார்.
இவரை தனது சர்வதேச காலநிலை ஆலோசகராக ரணில் நியமித்தது ஒரு “மேலாடை” அன்றி “உள்ளாடை” அல்ல என்பது வெளிப்படத் தொடங்கி உள்ளது. ஒருவகையில் இது ரணிலின் இராஜதந்திர பாணி. சில தமிழ், முஸ்லீம் தரப்பு தலைவர்களை சந்தித்துள்ள ஜனாதிபதியின் சர்வதேச காலநிலை ஆலோசகர் அவர்களோடு புவியியல் காலநிலை மாற்றங்கள் பற்றிபேசவில்லை. இலங்கையின், மலையகத்தின், வடக்கு, கிழக்கின் புவியியல் காலநிலை மாற்றங்கள் பற்றி அவர்களும் பேசவில்லை. பேசியது எல்லாம் “அரசியல், பொருளாதார காலநிலை” பற்றியதே.
இதன்மூலம் எரிக்சொல்கைம் தன் போர்வையை படிப்படியாக கழட்டி தனது “உண்மையானபொறுப்பை” வெளியே கொண்டு வருகிறார். இந்த அணுகுமுறை ரணிலும், எரிக்சொல்கைமும் ஆரம்பத்தில் ஏற்படக்கூடிய சில தடைகளைத் தாண்ட உதவியுள்ளது. ஆனால் இந்த தடைதாண்டி ஓட்டத்தில் இவர்கள் இறுதியில் சாதனை புரிவார்களா? என்பதுதான் இன்றைய அரசியல் , பொருளாதார காலநிலை எழுப்புகின்ற கேள்வி.
கடந்தகால சமாதான பேச்சுக்களின் போதும், பின்னரும் எரிக்சொல்கைம் “மத்தளமாக” வாங்கிக்கட்டியவர். தென்னிலங்கை கடும்போக்கு சிங்கள பேரினவாதிகளும், தமிழ்த்தேசிய கடும்போக்காளர்களும் அவரை கடுமையாக விமர்சித்தது மட்டுமன்றி குற்றச்சாட்டுக்களையும் சுமத்தினார்கள். பொறுப்புக்கூறவும் சொன்னார்கள். இலங்கையின் இன்றைய பொருளாதார, அரசியல் காலநிலை அவரையே வரவேற்று விட்டுச்சென்ற இடத்தில் தொடங்கவேண்டிய நிலையை இருதரப்புக்கும் ஏற்படுத்தியுள்ளது. ஆனால் ஆரம்பப் புள்ளி பேச்சு வார்த்தை முறிந்தசமஸ்டி முடிவுப் புள்ளி அல்ல மாறாக 13.
எரிக்சொல்கைம் தனது கடந்த கால சமாதான முயற்சிகள் குறித்து யுத்த ஓய்வுக்குப் பின்னர் பல்வேறு சந்தர்ப்பங்களில், பல்வேறு ஊடகங்களில் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். புத்தகம் ஒன்றையும் எழுதியுள்ளார். இவற்றில் விடுதலைப் புலிகள் பற்றிய அவரது கருத்துக்கள் கடுமையானவை. மற்றும் புலிகளின் கடந்த கால நிலைப்பாடுகளை அம்பலப்படுத்துபவை. இதனால் முன்னாள் புலிகளும், ஆதரவாளர்களும் பெரும் கடுப்பில் இருக்கிறார்கள். சிங்களதரப்பு முகவராக எரிக்சொல்கைம்மை பார்க்கிறார்கள். இதனால் அவருக்கு எதிராக தமிழ் டயஸ்போரா புலம்பெயர்ந்த தேசங்களில் இருந்து காய்களை நகர்த்தத் தொடங்கியுள்ளது.
அப்படி.., எரிக்சொல்கைம் என்னதான் சொன்னார்…? கடந்த கால மத்தியஸ்த முயற்சிகளின்போது தீர்வுக்கு தடையாய் இருந்தவர்கள் யார்? தீர்வு கிடைக்காமைக்கான காரணம் என்ன? வெள்ளைக்கொடி விவகாரம் விபரிதமானது எப்படி …? போன்ற விடயங்களை எரிக்சொல்கைம் போருக்குப்பின் வெளியிட்டுள்ள கருத்துக்களில் கண்டறிய முடியும்.
இன்று முன்நிபந்தனைகளுடன் பேசவேண்டும் என்பவர்களுக்கு 12 செப்டம்பர் 2006 இல் எரிக்சொல்கைம் வெளியிட்ட அறிவிப்பை நினைவூட்டலாம்.
“சிறிலங்கா அரசாங்கமும், விடுதலைப்புலிகளும் ஒக்டோபரில், ஒஸ்லோவில் நிபந்தனைகள்அற்ற பேச்சுக்களுக்கு இணங்கியிருக்கிறார்கள்” என்பது அந்த அறிவிப்பு.
“புலிகளின் தாகம் தமிழீழத்தாயகம்” என்ற காலம் அது. அப்போது இருதரப்பும் இராணுவ ரீதியில் பலமாக இருந்த காலமும் கூட . அப்படி இருந்தும் இருதரப்பும் நிபந்தனையின்றி பேசினார்கள். இன்றைக்கு அடகு வைப்பதற்கும் எதுவும் இல்லை.
பெப்ரவரி 2002 இல் விடுதலைப் புலிகளுக்கும், இந்திய இராஜதந்திரிகள், உளவுத்துறை உயர் அதிகாரிளுக்கும் இடையே ஒரு இரகசிய சந்திப்பு நடந்ததாக கூறிய எரிக்சொல்கைம், இதனூடாக இந்தியாவின் முக்கிய நிலைப்பாடு புலிகளுக்கு சொல்லப்பட்டதாக கூறினாரர். இந்தியா புலிகளைத் தடைசெய்த பின்னர் இடம்பெற்ற முதல் இரகசிய சந்திப்பு இது.
இந்தியா சொன்னது என்ன..? “தமிழீழம் ஒருபோதும் இந்தியாவால் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது” என்றும், பேச்சுவார்த்தைகளில் முக்கிய சர்வதேச நாடுகள் தலையைப் போடுவதையும் இந்தியா விரும்பவில்லை என்றும் சொல்லப்பட்டதாகக் கூறியுள்ளார்.
“டயஸ்போரா பிரபாகரனுக்கு தவறான ஆலோசனைகளை வழங்கியது” இந்த நவீன உலகில் மிகமோசமான யுத்தம் ஒன்றை நடாத்திக் கொண்டிருக்கிறோம் என்பதை இருதரப்பு கடும்போக்காளர்களும் விளங்கிக் கொள்ளவில்லை”.
யுத்தத்தின் போது “நாங்கள் பிரபாகரனுக்கு, நீங்கள் இந்தப் போரில் தோற்றுப்போவீர்கள் என்றும், வெற்றிபெற வாய்ப்பே இல்லை என்றும் சொன்னோம்”. “கிழக்கை இழந்தால், வடக்கையும் இழக்கவேண்டிவரும் என்பதை அப்போது அன்ரன் பாலசிங்கத்திற்கும் விளங்கியது”.
இறுதி யுத்தத்தின் போது “நாங்கள் ஒரு வாய்ப்பை புலிகளுக்கு வழங்கினோம். பொதுமக்கள் ஒவ்வொருவரையும், அதேபோல் விடுதலைப்
புலிகளின் உறுப்பினர்கள் ஒவ்வொருவரையும் பதிவுசெய்து யுத்த களத்தில் இருந்து கப்பல் மூலம் தெற்கிற்கு அல்லது வெளிநாட்டுக்கு கொண்டுசெல்லமுடியும்” என்ற ஆலோசனையை வழங்கினோம். ஆனால் பிரபாகரன் அந்த ஆலோசனையை நிராகரித்துவிட்டார்”.
இந்தக் கட்டத்தில் சர்வதேசத்திற்கு தேர்வு ஒன்றைச் செய்ய வேண்டிய தேவை இருந்தது. அதாவது சர்வதேசம் சிறிலங்காவுக்கு யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கு ஆதரவளிக்கத் தீர்மானித்தது. விளைவு : இந்தியா, அமெரிக்கா, சீனா, முக்கிய ஐரோப்பிய நாடுகள் சிறிலங்காவுக்கு யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர ஆதரவளித்தன”.
“2006 இல் விடுதலைப்புலிகளுக்கு சமாதானத்தை எட்ட இறுதிச் சந்தர்ப்பம் இருந்தது. அதை அவர்கள் தவறவிட்டுவிட்டனர். சமாதான பேச்சுவார்த்தைகளை படிப்படியாக நகர்த்த புலிகள் விரும்பினர். ஆனால் அரசாங்கமோ விரைவாக செயற்பட விரும்பியது. இந்த சந்தர்ப்பம் புலிகளால் பயன்படுத்தப்பட்டிருந்தால் இருதரப்பு இலக்குக்கும் இடையே ஒரு புள்ளியில் – சமஷ்டியில் சந்தித்திருக்க முடியும், இந்திய மாதிரியின் அனுபவங்களை கொண்டதாக அது அமைய வாய்ப்பு இருந்தது” என்பதை எரிக்சொல்கைம் வெளிப்படுத்தினார்.
“தான் முழுமையான திறந்த மனதுடன் பிரபாகரனுடன் பேசவிரும்புகிறேன், என்று மகிந்தராஜபக்ச என்னிடம் கூறினார்”. என்று அரசாங்கத்தரப்பு நிலைப்பாட்டையும் அவர் கூறினார்.
“புலித்தேவன் உதவிகேட்கும்போது காலம் கடந்துவிட்டது. இதனால் வெள்ளைக்கொடியுடன் சரணடையுங்கள் என்று கூறினோம். இலங்கை அரசாங்கத்திற்கும் அறிவித்தோம். யுத்தத்தில் சரணடைந்தவர்கள் கொல்லப்பட்டது யுத்தமீறல், தண்டிக்கப்பட வேண்டிய போர்க்குற்றம்”.
என்று எரிக்சொல்கைம் சொல்ல, “இவரை நம்பித்தானே எங்கள் போராளிகள் சரணடைந்தார்கள்” என்று திருப்பிக் கேட்கிறார்கள் புலிகள் .
“நான் பிரபாகரனை சுமார் பத்து தடவைகள் சந்தித்திருக்கிறேன். பிரபாகரனுக்கும் வெளிநாட்டுப் பிரதிநிதிகளுக்குமான தொடர்பு மிகக்குறைவு. அவரால் சர்வதேச நிலைமைகளைப் புரிந்துகொள்ள முடியவில்லை. அவரிடம் அரசியல் அறிவு குறைவு. இராணுவ அறிவு அதிகம். அவரால் தென்னிலங்கை, இந்திய, உலக நிலைப்பாடுகளை புரிந்து கொள்ள முடியவில்லை.” என்று பல்வேறு சந்தர்ப்பங்களில் நடந்ததை வெளிப்படுத்தியிருக்கிறார் எரிக்சொல்கைம்.
இன்று இனப்படுகொலை, போர்க்குற்ற விசாரணை, காணாமல் ஆக்கப்பட்டவர்கள், என்றெல்லாம் பேசுகின்றோமே இவற்றை எல்லாம் தடுப்பதற்கு சர்வதேசம் எமக்கு வழங்கிய வாய்ப்பை பயன்படுத்தி அவற்றை தடுக்க முயன்றோமா..?
போர்க்குற்ற நீதிமன்றத்தில் விசாரணை என்று ஒன்று வந்தால் எரிக்சொல்கைம்மின் இந்த சாட்சியங்களும் அங்கு சமர்ப்பிக்கப்பட அதிக வாய்ப்புண்டு. அப்போது நடந்தவற்றிற்கு யுத்தத்தில் ஈடுபட்ட இருதரப்பும் பங்காளிகள். இதன் காரணமாகவே எரிக்சொல்கைம் மீது புலிகளுக்கு ஆத்திரம் அதிகரித்துள்ளது. இப்போது எரிக்சொல்கைம்க்கு திருப்பிக்கொடுக்க தமிழ்த்தேசிய கடும்போக்காளர்கள் முயற்சிக்கிறார்கள்.
இதிலிருந்து இன்றைய பேச்சுவார்த்தைக்கு தமிழ்தரப்பு பெற்றுக் கொள்ளக்கூடிய அனுபவம் என்ன?
விடுதலைப்புலிகள் தமது பலத்தை மிகைமதிப்பீடு செய்ததும், சர்வதேச பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தை இராஜதந்திரீதியாக வெற்றி கொள்ள முடியாமையும், அரசியல் அற்ற அரசியல் ஆலோசனைகளுமே தமிழ் மக்களின் இன்றைய அரசியல் அநாதை நிலைக்கு காரணம். இதனால் இன்று ஏற்பட்டுள்ள இந்த பேச்சுவார்த்தை சூழலை தமிழ்த்தேசிய தரப்பு கனவுகளைத் தவிர்த்து, ஜதார்த்த அணுகுமுறையைப் பின்பற்றி பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.
எரிக்சொல்கைம் சம்பந்தன், மனோகணேசன், ரவூப் ஹக்கீம், நஸீர் அகமட் ஆகியோரை சந்தித்துள்ளார். இந்த சந்திப்புக்களின் முக்கியத்துவம் என்ன..? சம்பந்தனிடம் இலங்கையின் பொருளாதார, இனப்பிரச்சினைகளுக்கு தீர்வுகாண ஒத்துழைப்போம் என்ற உறுதி மொழியைப் பெறுவது. அதை அவர் வழங்கியும் உள்ளார்.
ரவூப் ஹக்கீம், நஸீர் அகமட் சந்திப்புக்களில் என்ன பேசப்பட்டிருக்கும்..? வடக்கு கிழக்கு இணைப்பு / இணையாமை குறித்து இப்போது எதையும் பேசிக் குழப்பவேண்டாம் என்பதுதான் அது.
அடுத்து மனோகணேசனின் கோரிக்கை. நிலத்தொடர்பற்ற மலையக அதிகாரப்பகிர்வு அலகு ஒன்றை ஏற்படுத்தல். இதையும் இப்போது பேசி சற்று அமைதியாக இருக்கும் சிங்கள தேசியவாதிகளைத் தூண்டிவிடவேண்டாம் என்று கேட்டிருந்தார் எரிக்சொல்கைம்.
இவை எல்லாவற்றையும் காலநிலை பற்றிய பேச்சுக்கள் என்று இலகுவாக கடந்து செல்லப்பார்க்கிறார் அவர். தான் மத்தியஸ்த்தர் அல்ல என்பதையும் அடித்துச் சொல்கிறார். என்றாலும் சில சந்திப்புக்களை செய்த பின்னரான காலம் கடந்த அறிவிப்பு இது.
ஆக, இருதரப்பு கடும்போக்காளர்களையும் தனிமைப்படுத்தி 13 ஐ ஆரம்பப் புள்ளியாக கொண்டு, அதிகாரப்பகிர்வு பேச்சுக்கள் தொடரும் என்பதே இதன் அர்த்தம். முக்கிய தென்னிலங்கை கட்சிகளும், அதன் பங்காளிகளும் குறிப்பாக ஈழமக்கள் ஜனநாயக கட்சி, தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி என்பனவும் ஒற்றையாட்சிக்குள் அதிகாரப்பகிர்வுக்குதங்கள் ஆதரவை வெளிப்படுத்தியுள்ளன.
இந்த நிலையில் ஜனாதிபதியுடனான கடந்த சந்திப்பு தமிழ்த்தேசிய தலைமைகளுக்கிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சுமந்திரன் எம்.பி. வேண்டுமென்று தம்மைத்தவிர்த்து இச்சந்திப்பை ஒழுங்கு பண்ணியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். விக்கினேஸ்வரன், செல்வம் அடைக்கலநாதன், தருமலிங்கம் சித்தார்த்தன் சார்பிலும் ஜனாதிபதிக்கு கடிதம் எழுத….. ஜனாதிபதி செயலகம் அச்சந்திப்பு உத்தியோகப் பற்றற்றது என பல்டியடிக்க….. குத்துச்சண்டை தொடர்கிறது. இதைச் சமாதானப்படுத்த இந்தியாவைக் கொண்டு வருவேன் என்கிறார் விக்கினேஸ்வரன்.
கிடைக்கின்ற வாய்ப்பை பயன்படுத்துவதே இராஜதந்திரம். வாய்ப்புக்களை இழப்பதையே வரலாறாகக்கொண்ட தமிழ்த்தேசிய அரசியலுக்கு இன்னும் இழப்பதற்கு என்ன இருக்கிறது.
இந்தியா வந்தாலும், வராது விட்டாலும் ……
எரிக்சொல்கைம் வந்தாலும்,வராது விட்டாலும்…….
பதின்மூன்றே தீர்வு …! மற்றைய கோசங்கள் அனைத்தும் பிரச்சினை….!
யார் ஆரம்பம் இன்றி (13) முடிவைப் பற்றி (சமஷ்டி) பேசுகிறார்களோ அவர்கள் தீர்வுக்குதடையானவர்கள்… ! பிரச்சினையாளாளர்கள் …..!
முள்ளைப்பிடுங்கி, கட்டையை அடிப்பதால் பதின்மூன்று சமஷ்டியாகப் பழுத்துவிடாது…..!