தேர்தல் ஆணைக்குழு தலைவரின் அறிவிப்புக்கு பின்னரும் உள்ளூராட்சி தேர்தல் குறித்து தொடரும் சந்தேகங்கள் 

தேர்தல் ஆணைக்குழு தலைவரின் அறிவிப்புக்கு பின்னரும் உள்ளூராட்சி தேர்தல் குறித்து தொடரும் சந்தேகங்கள் 

        — ஸ்பார்ட்டகஸ் — 

   உள்ளூராட்சி தேர்தலை ஒத்திவைப்பதற்கு இலங்கை அரசாங்கம் திட்டமிடுகிறது என்று நீண்ட நாட்களாக எதிரணிக் கட்சிகள் கூறிவந்த நிலையில், இறுதியாக கடந்த வியாழக்கிழமை (டிச.8) தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமால் புஞ்சிஹேவா அந்த தேர்தலுக்கான நியமனப்பத்திரங்கள் தாக்கலுக்கான திகதிகளை இம்மாத இறுதிவாரத்தில் அறிவிப்பதற்கு ஆணைக்குழு தீர்மானித்திருப்பதாக அறிவித்திருக்கிறார். 

   அன்றைய தினம் ஆணைக்குழுவின் கூட்டத்துக்கு பிறகு மேற்கொள்ளப்பட்ட இந்த தீர்மானமே உள்ளூராட்சி தேர்தலை இவ்வருடம் பெப்ரவரியில், அரசாங்கம் ஒரு வருடகாலத்துக்கு ஒத்திவைத்த பிறகு அந்த தேர்தல் தொடர்பில் வெளியான முதன்முதலான உத்தியோகபூர்வ அறிவிப்பாகும். 

   இறுதியாக உள்ளூராட்சி தேர்தல் 2018 பெப்ரவரி 10 நடத்தப்பட்டது. அடுத்த தேர்தல் கடந்த பெப்ரவரியில் நடத்தப்பட்டிருக்க வேண்டும். 

   2023 மார்ச் 20 க்கு முன்னதாக உள்ளூராட்சி தேர்தல் நடத்தப்படவேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியும் (சமகி ஜன பலவேகய) ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) தலைமையிலான தேசிய மக்கள் சக்தியும் பல வாரங்களாக வலியுறுத்தி வருகின்றன. 

    உள்ளூராட்சி தேர்தலை நடத்துவது தொடர்பில் சட்டமா அதிபரின் அபிப்பிராயத்தை தான் பெற்றிருப்பதனால் 340 உள்ளூராட்சி சபைகளுக்கும் தேர்தலை 2023 மார்ச் 19 அளவில் நடத்துவதற்கு சட்ட ரீதியான இடையூறு எதுவுமில்லை என்று ஊடகங்களுக்கு கூறிய தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர், அந்த அபிப்பிராயத்தை வெளியிடவில்லை. தன்னால் அதை வெளியிடமுடியாது என்று அவர் குறிப்பிட்டார். 

   அதேவேளை, ஏற்படக்கூடிய சட்டரீதியான இடையூறுகள் குறித்து புஞ்சிஹேவா எச்சரிக்கையாக இருக்கிறார் போல தோன்றுகிறது. “நியமனப்பத்திரங்களை தாக்கல் செய்வதற்கான திகதிகளை அறிவிக்கும் வர்த்தமானி பிரகடனத்தை வெளியிடுவதற்கு முன்னதாக எதிர்வரும் நாட்களில் ஏதாவது சட்ட அல்லது அரசியலமைப்பு ரீதியான இடையூறுகள் ஏற்படுமா இல்லையா என்பது குறித்து எனக்கு தெரியாது” என்று அவர் கூறியதைக் காணக்கூடியதாக இருந்தது. 

   அக்டோபர் முற்பகுதியில் ஜனாதிபதி செயலகத்தில் துறைசார் நிபுணர்கள் குழுவொன்றுடன் நடத்திய சந்திப்பின்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நாட்டின் தேர்தல் முறைக்கு கொண்டுவரப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து பல யோசனைகளை அடுத்தே உள்ளூராட்சி தேர்தலை ஒத்திவைப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது என்ற வலுவான சந்தேகம் எதிரணி கட்சிகளுக்கு ஏற்பட்டது. உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்களின் தொகையை 8 ஆயிரத்தில் இருந்து 4 ஆயிரமாக குறைக்கவேண்டும் என்றும் ஜனாதிபதி அந்த சந்திப்பில் தெரிவித்திருந்தார். 

   உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்களின் தொகையை அரைவாசியாகக் குறைக்கும் ஜனாதிபதியின் யோசனையை தற்போதைய படுமோசமான பொருளாதார நெருக்கடியின் பின்புலத்தில் எதிரணி கட்சிகளினால் எதிர்க்கமுடியாது என்ற போதிலும், அரசாங்கம் தேர்தலை ஒத்திவைக்க திட்டமிடுகிறது என்ற அந்த கட்சிகளின் சந்தேகம் மேலும் வலுவடைந்திருக்கிறது என்றே தெரிகிறது. 

   ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் ஜனாதிபதியின் ஐக்கிய தேசிய கட்சியும் உள்ளூராட்சி தேர்தலை ஒத்திவைப்பதற்கு நாட்டம் காட்டக்கூடும் என்பதற்கு மிகவும் உறுதியான இரு காரணிகள் இருக்கின்றன. 

    நாட்டு மக்கள் முன்னென்றும் இல்லாத பொருளாதார இடர்பாடுகளை அனுபவிக்கும் இன்றைய தருணத்தில், இரு ஆளும் கட்சிகளும் அவற்றின் செல்வாக்கு குறித்து நம்பிக்கை கொண்டவையாக இல்லை என்பது ஒரு காரணி. முன்னைய ‘நல்லாட்சி’ அரசாங்க காலத்தில் மிகவும் தந்திரமான முறையில் மாகாணசபை தேர்தல்களை காலவரையறையின்றி ஒத்திவைத்த ஐக்கிய தேசிய கட்சியின் செயல் மக்கள் மனதில் இன்னமும் பசுமையாக இருக்கிறது. 

   முன்னைய அரசாங்க காலத்தில் ஒன்பது மாகாணசபைகளுக்கும் ஒரே நாளில் தேர்தல்களை நடத்துவதற்கு வகை செய்யக்கூடிய ஏற்பாட்டைக் கொண்ட சட்டமூலம் ஒன்றின் ஊடாக அந்த தேர்தல்களை ஒத்திவைப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சி முயற்சித்த போதிலும் அது சாத்தியமாகவில்லை. ஆனால், மாகாண சபைகளுக்கும் கலப்பான தேர்தல் முறையை (விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையும் பழைய தொகுதி அடிப்படையிலான முறையும் கலந்தது) அறிமுகப்படுத்தியதன் மூலம் அந்தத் தேர்தல்களை ஐக்கிய தேசிய கட்சியினால் ஒத்திவைக்க முடியுமாக இருந்தது. கலப்பான தேர்தல் முறையை அறிமுகப்படுத்துவதற்கு பாராளுமன்றத்தில் சகல கட்சிகளும் இணங்கிக்கொண்டன. அந்த இணக்கத்தை ஐக்கிய தேசிய கட்சி உள்நோக்கத்துடன் தனக்கு வாய்ப்பான முறையில் பயன்படுத்திக்கொண்டது. 

   கலப்பான தேர்தல் முறையை மாகாணசபைகளுக்கு நடைமுறைப்படுத்துவதாக இருந்தால் மாவட்டங்களில் வட்டாரங்கள் எல்லை நிர்ணயம் செய்யப்படவேண்டும். அதற்கு நியமிக்கப்படவேண்டிய எல்லை நிர்ணயக் குழு சமர்ப்பிக்கக்கூடிய அறிக்கை பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தைப் பெறவேண்டும். அது ஓரளவுக்கு நீண்டகாலம் தேவைப்படுகின்ற ஒரு செயன்முறையாகும். அதன் காரணத்தினால் மாகாணசபைகளின் தேர்தல்களை உடனடியாக நடத்தமுடியாமல் இருக்கிறது. அவ்வாறு நடத்துவதானால் தற்போது நடைமுறையில் உள்ள விகிதாசாரப் பிரதிநிதித்துவ தேர்தல் முறையே பின்பற்றப்படவேண்டும். 

     அதனால், மீண்டும் விக்கிரமசிங்க அத்தகைய ஒரு தந்திரோபாயத்தை பயன்படுத்தி உள்ளூராட்சி தேர்தல்களை ஒத்திவைக்கக்கூடும் என்ற எதிரணி கட்சிகள் சந்தேகிப்பதை குறைகூறமுடியாது. 

  பொதுஜன பெரமுனவினதும் ஐக்கிய தேசிய கட்சியினதும் தலைவர்கள் தேசிய தேர்தல்களையோ அல்லது பிராந்திய தேர்தல்களையோ தற்போது விரும்பவில்லை. தற்போதைய பாராளுமன்றம் இனிமேலும் மக்களின் உண்மையான அபிப்பிராயத்தை பிரதிபலிப்பதாக இல்லை என்று சுட்டிக்காட்டும் எதிரணி பாராளுமன்றத்தை கலைத்து இடைக்காலத்தில் பொதுத்தேர்தல் நடத்தப்படவேண்டும் என்று விடுத்த கோரிக்கையை ஆளும் கட்சிகள் நிராகரித்துவிட்டன.  

   சட்டத்தின் பிரகாரம் அடுத்த வருடம் மார்ச் மாதத்துக்கு முன்னர் நடத்தப்படவேண்டியிருக்கும் உள்ளூராட்சி தேர்தலையும் இந்த கட்சிகள் விரும்புவதாக தெரியவில்லை. உள்ளூராட்சி தேர்தல் ஒத்திவைக்கப்படமாட்டாது என்று பகிரங்கமாக பாராளுமன்றத்தில் அறிவிக்குமாறு ஜே.வி.பி.தலைவர் அநுரா குமார திசாநாயக்க சபையில் ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைத்த போதிலும் இதுவரையில் அவர் அதை செய்யவில்லை. 

   கடந்த சில வாரங்களாக நடந்த பட்ஜெட் விவாதத்தின் போது ஜனாதிபதி விக்கிரமசிங்க அடிக்கடி பாராளுமன்றத்துக்கு வந்து எதிரணியினர் கிளப்பிய கேள்விகள், சந்தேகங்களுக்கு எல்லாம் பதிலளித்ததைக் காணக்கூடியதாக இருந்தது. ஆனால், உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான திசாநாயக்கவின் கோரிக்கைக்கு பதிலளிப்பதை அவர் வேண்டுமென்றே தவிர்த்தார் என்று சந்தேகிக்காமல் இருக்கமுடியவில்லை. பிரதமர் தினேஷ் குணவர்தனவோ அல்லது விஜேதாச ராஜபக்ச போன்ற முக்கிய அமைச்சர்களோ கூட அதற்கு பதிலளிக்க முன்வரவில்லை. 

   பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தேர்தல்களை நாடு தாங்கமாட்டாது என்ற வாதத்தை ஜனாதிபதி உட்பட அரசாங்கத் தலைவர்கள் அடிக்கடி முன்வைக்கிறார்கள். அதனால் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நியமனப்பத்திரங்கள் தாக்கலுக்கான திகதிகளை மாத இறுதியில் அறிவிக்கப்போவதாக கூறியிருக்கின்ற போதிலும், உள்ளூராட்சி தேர்தலை ஒத்திவைப்பதற்கு ஏதாவது சட்டரீதியான காரணத்தை அரசாங்கம் முன்வைக்கக்கூடிய சாத்தியம் குறித்த சந்தேகம் அரசியல் வட்டாரங்களில் தொடரவே செய்கிறது. 

   இந்த சந்தர்ப்பத்தில் கடந்த மாத நடுப்பகுதியில் சகல எதிர்க்கட்சிகளும் கூட்டாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் தன்னை சந்தித்து அடுத்த வருடம் மார்ச் 20 அளவில் உள்ளூராட்சி சபைகள் நிறுவப்படக்கூடியதாக தேர்தல் நடத்தப்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டபோது தேர்தல் ஆணையாளர் கூறிய பதிலை நினைவுபடுத்துவது பொருத்தமாக இருக்கும்; 

  “உரிய காலத்தில் உள்ளூராட்சி தேர்தலை நடத்துவதற்கு எந்த தடையும் இல்லை. அவசியமான ஏற்பாடுகளை நாம் செய்துகொண்டிருக்கிறோம். மார்ச் 19 க்கு 65 நாட்கள் முன்னதாக அந்த தேர்தல் நடத்தப்படவேண்டும்.” 

எல்லை நிர்ணயக்குழுவின் செயன்முறை தேர்தலை தாமதிக்கக்கூடும் என்று கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன. தேர்தல்களை நடத்துவதற்கு அரசாங்கத்திடம் நிதி இல்லை என்று சில அமைச்சர்கள் கூறிவருகிறார்கள். உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்களின் தொகையைக் குறைப்பதற்கான செயன்முறைக்கு கால அவகாசம் தேவையென்பதால் தேர்தல் ஒத்திவைக்கப்படக்கூடும் என்று வேறு சிலர் கூறுகிறார்கள். 

  “என்ன காரணத்தை சொன்னாலும், இந்த செயன்முறைகளில் எதுவுமே தேர்தல் நடத்தப்படுவதற்கு இடையூறாக இல்லை. அமைச்சரவை காரணங்களைக் கூறினாலும் கூட அது எம்மைப் பாதிக்காது.” 

 ஆனால், எல்லை நிர்ணயக்குழுவுக்கு கூடுதல் கால அவகாசம் தேவை என்றோ அல்லது நிதிவசதி இல்லை என்றோ அல்லது சில சட்டத் திருத்தங்களைக் கொண்டுவர வேண்டியிருக்கிறது என்றோ ஒரு காரணத்தைக் காட்டி பாராளுமன்றம் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றுமானால், அந்த நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்வதற்கு தேர்தல் ஆணைக்குழு நிர்ப்பந்திக்கப்படும். ஆனால், தற்போதுள்ள நிலைவரத்துக்கு ஏற்ப நாம் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்துக்கொண்டிருக்கிறோம்”.