பேச்சுக்கான முஸ்தீபு மும்முரம்? 

பேச்சுக்கான முஸ்தீபு மும்முரம்? 

— கருணாகரன் —

எதிர்பார்க்கப்பட்டதற்கும் மாறாக அடுத்த சில தினங்களில் அதிகாரப்பகிர்வுக்கான பேச்சுகள் நடப்பதற்கான சூழல் கனிந்துள்ளது போலிருக்கு. தமிழ்த் தரப்பிலும் இதற்கான கவனம் ஏற்பட்டுள்ளது. தமிழ்க் கட்சிகள் இதைப் பற்றிக் கூடிப் பேசுவது, பேச்சுகள் குறித்துப் பொதுவெளியில் உரையாடுவது, பொறிமுறைகளைப் பற்றிச் சிந்திப்பது என்று பச்சைக் கொடி காட்டியுள்ளன. 

ரெலோ இதில் இன்னும் முன்னுக்கு வந்து இந்தச் சூழலைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளது. இது தொடர்பாக – பேச்சுக்கு செல்லும்போது நாம் ஒரு பொறிமுறையை வகுத்துக் கொள்ள வேண்டும் என்று ரெலோவின் பேச்சாளரான சுரேந்திரன் கேட்டுள்ளார். “ஐ.நா. விடயங்களில் மாத்திரமல்லாமல் அன்றாட விடயங்களிலும் தமிழ் மக்கள் எதிர்கொண்டிருக்கும் அவசர அவசியமான பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் நாங்கள் அக்கறையோடும் செயலாற்றுவோம். அறிக்கைகளைத் தாண்டி மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற செயல் வடிவம் கொடுப்பதே அர்த்தமுள்ளதாக அமையும் என்பதில் நாங்கள் நம்பிக்கை கொண்டவர்கள். தமிழ் மக்களின் அரசியல் விடுதலைக்காக பல வழிகளிலும் போராடி வரும் வரலாற்றைக் கொண்ட எமது கட்சி தொடர்ந்தும் உறுதியுடன் பயணிக்கும் என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறோம்” என்று சொல்லியுள்ளார். 

ஆனால், இந்தப் பேச்சுகள் எந்த அடிப்படையில் நடக்கும் என்பதைப் பற்றி இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. அனைத்துக் கட்சிகளுடனும் நடக்குமா? பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் உள்ள கட்சிகளுடன் நடக்குமா? அரசுக்கும் தமிழ் தரப்புக்கும் இடையில்தான் நடக்குமா?தமிழ்த் தரப்பினரோடு முஸ்லிம்களும் இணைத்துக் கொள்ளப்படுவரா? மலையகக் கட்சிகளுக்கான இடம் இதில் உண்டா? சிறுபான்மைத் தேசிய இனங்களுடைய பிரச்சினைக்கான தீர்வு என்ற அடிப்படையில் நடக்குமா? அல்லது பல்லினங்களைக் கொண்ட நாட்டுக்குரிய அடிப்படைகளைப் பேணி பன்மைத்துவ இலங்கை என்பதாக நடக்குமா? அல்லது இது பற்றிக் கேள்வி எழுப்பியுள்ள ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டிருப்பதைப்போல, 

“வடக்குக் கிழக்கு தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பானதா?” (இதில் அவர் வடக்குக் கிழக்கிலுள்ள முஸ்லிம்களைப் பற்றிக் குறிப்பிடவில்லை). 

“அல்லது புதியதோர் யாப்புத் தொடர்பானதா?” 

“அல்லது வடக்குக் கிழக்கு மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்கான தீர்வு தொடர்பானதா?” (அன்றாடப் பிரச்சினைகளுக்கான பேச்சுகள் என்றால், அது இன்று நாடு முழுவதற்குமானதாகவே உள்ளது. முக்கியமாக பொருளாதார நெருக்கடி. இதைக் கடந்து வடக்குக் கிழக்குப் பிரச்சினை பிரத்தியேகமானது என்றால் இராணுவ நெருக்கடி, நில அபகரிப்பு, பௌத்த மயமாக்கல் போன்றவையாகும். இதற்குப் பெருமெடுப்பிலான பேச்சுகளை அரசாங்கம் இப்பொழுது முன்னெடுக்கும் என்றில்லை) என எதுவும் தெரியவில்லை. 

ஆனால், பேச்சுகள் நடக்கவுள்ளன. 

எந்த அடிப்படையில் பேச்சுகள் நடக்கும் என்று முற்கூட்டியே அறிவித்தால் அதையொட்டி ஆயிரம் பிரச்சினைகளை ஒவ்வொரு தரப்பும் கிளப்பக் கூடும். போதாக்குறைக்கு ஊடகங்கள் கண்டபாட்டுக்கு எழுதி சூழலைக் கெடுத்து விடக் கூடும். மேலும் பௌத்த பீடங்கள் உறங்கு நிலையிலிருந்து விழித்துக் கொண்டு சந்நதமாடலாம். எல்லாவற்றையும் விட சமாதானத்தின் எதிரிகளும் இனவாதிகளும் துள்ளிக் குதித்துக் கொண்டு வீதியில் இறங்கி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்யக் கூடும் என்று கருதி இதைப்பற்றி முற்கூட்டியே பகிரங்கமாகப் பேசாமல் விடலாம். 

ஆனாலும் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணவேண்டும் என்பதைப் பகிரங்கமாகப் பேசிய ஜனாதிபதி, அதற்கு எல்லோரும் தயாரா என்பதையும் கேட்டிருந்தார். இது அவர் சமாதானத்தின் மீது கொண்டுள்ள ஆர்வத்தையும் விருப்பத்தையும் காட்டுகிறதா? அல்லது இந்த இனப்பிரச்சினையை இதற்கு மேலும் தாங்க முடியாதடா ராமா என்று எண்ணினாரோ தெரியவில்லை. 

எப்படியோ, இந்த அறிவிப்பு வந்து ஏறக்குறைய இரண்டு வாரங்களுக்கு மேலாகிறது. இதுவரையில் எந்தப் பெரிய சலசலப்பையும் காணவில்லை. 

ஆகவே கொஞ்சம் வெளிப்படையாகப் பேச வேண்டிய விடயங்களை அரசாங்கம் பேசலாம். அல்லது பொறுத்திருந்து பேச்சு மேசையில்தான் பேசப் போவதாக இருந்தால், அதுதான் சரியென்று அரசாங்கம் கருதினால் நாமொன்றும் அதை மறுத்து முந்திரிக் கொட்டை போல அப்படி இப்படி ஒன்றும் சொல்லிக் கெடுக்கப்போவதில்லை. 

இருந்தாலும் இந்தப் பேச்சுகளைக் குறித்து (பேச்சுக்கான அறிவிப்பைக் குறித்து) சந்தேகத்தைக் கிளப்புவோர் பலவற்றையும் சொல்லிக் கொண்டேயிருப்பதையும் நாம் புறக்கணித்து விட முடியாது. 

ஏனென்றால் பலரும் கருதுவதைப்போல இந்தப் பேச்சுவார்த்தையும் காலத்தைக் கடத்தும் தந்திரோபாயமாக இருக்குமா? என்ற ஐயமும் ஒரு பக்கத்தில் உண்டு. ரணில் விக்கிரமசிங்கவின் அணுகுமுறை, அரசியற் தந்திரோபாயம், தற்போதைய சூழல் எல்லாம் அப்படிச் சிந்திக்க வைக்கிறது. ஏன் சிங்களத் தரப்பின் அரசியல் முதிர்ச்சியை எதிர்கொள்ளக் கூடிய நிலையில் தமிழ்த் தரப்பில் இன்னும் வளர்ச்சி இல்லை. ஒரு பழைய வாய்பாட்டை மட்டும் வைத்துக்கொண்டு, அதே பழைய பாணி அணுகுமுறையில் போய்ப் பேச்சுக் கதிரையில் குந்த வேண்டிய நிலைதான் உள்ளது. 

ஆனால், பல பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டிய வரலாற்றுச் சூழல் இது என்பதை பலரும் புரிந்துள்ளனர். இதில் ரணில் விக்கிரமசிங்கவும் அடங்குவார். வழமையான தந்திரோபாயங்களை இனிமேலும் தொடர முடியாது என்று உள்ளுணர்வு உணர்த்தலாம். 

அதற்காக பேச்சுவார்த்தையில் எடுத்ததற்கெல்லாம் சந்தேகப்படுவதோ பின்னிற்பதோ பொருத்தமானதில்லை. வரலாற்றுப் படிப்பினைகளை மனதில் கொள்வது வேறு. அதை எந்த அடிப்படையில் நோக்க வேண்டும் என்பது முக்கியமானது. இதன் அர்த்தம் கண்மூடித்தனமான நம்பிக்கையோடு பேச வேண்டும். விட்டுக் கொடுக்க வேண்டும் என்று அல்ல. 

ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்  அனைவரும். 

இது போர்ச் சூழலோ போர் முடிந்த போதிருந்த சூழலோ இல்லை. போர்ச் சூழலில் புலிகள் (தமிழர் தரப்பும்)) பலமாக இருந்தனர். ஏறக்குறைய சமனிலையில்  இருந்தனர். அந்தச் சூழல் வேறு. அதனால் அப்போதைய பேச்சுகளின் தன்மையும் வேறாகவே இருந்தது. அடிப்படைப் பிரச்சினை, தீர்வின் இலக்கு பொதுவாக இருந்தாலும் சூழலின் தன்மை வேறாக இருந்தது. 

போரின் முடிவுக்குப் பின்னர் புலிகள் தோற்கடிக்கப்பட்டு, அரசு வெற்றிபெற்று மேலெழும்பியிருந்த சூழல். ஆகவே அந்த மனநிலையிலிருந்தே (வெற்றிபெற்ற மனநிலை) பல விடயங்களும் அணுகப்பட்டன, கையாளப்பட்டன. போர்ப் பாதிப்புத் தொடர்பாக எழவேண்டிய, எழுந்திருந்த குற்றவுணர்ச்சியோ, பொறுப்புணர்ச்சியோ பெரிய அளவில் – அதிகார மட்டத்தில் ஏற்படவில்லை. அமைதி, சமாதானம், அன்பு, கருணை என்று போதனைகளைச் செய்யும் பௌத்தத் தரப்பும் இந்தப் பொறுப்பையும் கடப்பாட்டையும் உணர்ந்து செயற்படவில்லை. 

இதைப்போலவே மிஞ்சியுள்ள நிலைமை, யதார்த்தச் சூழல் போன்றவற்றைக் கவனத்திற் கொண்டு தமிழ்த் தரப்பும் செயலாற்றவில்லை. ஆனால், சிங்களத் தரப்பின் தவறும் தமிழ்த் தரப்பின் தவறுகளும் சமனிலையானவை அல்ல. தமிழ்ச் சூழலை யதார்த்தத்துக்கு வெளியே நிறுத்தியதில் புலம்பெயர் தரப்பில் ஒரு பகுதியினருக்கும் உண்டு. அவர்கள் வாழ்க –பிரச்சினையின் தாற்பரியத்துக்கு – யதார்த்தத்துக்கு வெளியே நின்று (கற்பனாவாத) அரசியலைச் சிந்திப்பதன் வெளிப்பாடு அது. 

எது எப்படியோ இன்னும் நாம் எதையும் சுழித்து விளையாடலாம் என்றில்லை. அது இனப்பிரச்சினைக்கான தீர்வாக இருக்கலாம். பொருளாதார நெருக்கடியாக இருக்கலாம். ஊழல் முறைகேடுகளாக இருக்கலாம். இவை எதற்கும் தீர்வைக் காணாமல் காலத்தை இழுத்தடிக்கலாம் என்று கருதிச் செயற்பட்டால் அதன் விளைவு மிக மோசமானதாகவே இருக்கும். அப்படி இழுத்தடிப்புச் செய்து சுத்து மாத்துக் காட்டியதன் விளைவையே நாடு இன்று சந்தித்துக் கொண்டிருக்கிறது. 

இன்று ஒவ்வொரு குடிமக்களுடைய தோளிலும் நெருக்கடிச் சுமை ஏறியுள்ளது. தமிழர், சிங்களவர், முஸ்லிம்கள், மலையக மக்கள், பிற இனத்தவர் என்ற எந்தப் பேதமும் இல்லாமல் அனைவரும் சுமக்க முடியாத சுமைகளைச் சுமந்து கொண்டிருக்கிறோம். நம்முடைய இந்தச் சுமையேற்றத்துக்கு தனியே சில அரசியல்வாதிகளும் ஆட்சியாளர்களும் மட்டும் காரணமில்லை. மக்களாகிய நாமும்தான் காரணம். நம்முடைய அசமந்தத்தனமும் கண்மூடித்தனமாக செயற்பாடுகளும் காரணம். 

நாம் தெரிவு செய்த பிரதிநிதிகள் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார்கள் என்ற அதீத நம்பிக்கையினால் அவர்கள் எடுத்த, எடுக்கின்ற தீர்மானங்கள் –முடிவுகள், அவர்களுடைய அணுகுமுறைகள் எதைப்பற்றியும் நாம் கேள்வி கேட்கவில்லை. இதனால் தவறுகள் வளர்ந்து பெருத்தன. அது வளர்ந்து இன்று நம்முடைய கழுத்தைப் பிடித்து இறுக்குகின்றன. 

இன்று நாடு உலக வங்கி, ஐ.நா. அனைத்துலக சமூகம் என அனைவரிடத்திலும் கையேந்தி நிற்கிறோம். 

வளமான ஒரு நாட்டை நம்முடைய கையில் வைத்துக் கொண்டு பிச்சைப் பாத்திரம் ஏந்துகிறோம். 

ஒரு அழகிய, சிறிய நாட்டில், இரண்டு மொழியைப் பேசுகின்ற நான்கைந்து இனத்தைச் சேர்ந்த  மக்களாகிய நாம் ஒற்றுமையாக நின்று செயலாற்ற முடியாமல் உள்ளோம். ஆளாளுக்குப் பழியைச் சுமத்திக் கொள்ளும் பழங்குடிச் சமூக மனநிலையில் உள்ளோம். காற்சட்டை அணிந்து அதி நவீன கணினியையும் கைத் தொலைபேசியையும் நம் கையில் வைத்திருப்பதால் மட்டும் நாம் நவீனமடைந்து விட்டோம் என்று அர்த்தமல்ல. நம்முடைய சிந்தனை முறையினால், நடைமுறைகளால், எண்ணங்களால், செயற்பாடுகளில், நாம் உண்டாக்குகின்ற விளைவுகளால், நம்முடைய அணுகுமுறைகளால், சவால்களை எதிர்கொள்ளும் முறையினால், பிரச்சினைகளைப் புரிந்து கொள்ளும் விதத்தினால், அவற்றைத் தீர்க்கும் வழிகளால், சிந்தனையினால் நாம் நவீனமானவர்களாக இருக்க வேண்டும். 

நவீனத்தின் முக்கியமான அடிப்படை பன்மைத்துவமும் ஜனநாயகமுமாகும். இதை மறுக்கும்தோறும் நாம் பழங்குடி மனநிலையுடையோராகவும் பழங்குடிச் சமூகத்தினராகவுமே இருப்போம். இன்றைய இலங்கை மக்களில் எண்பது வீதமானோர் அப்படித்தான் உள்ளனர். இதனால்தான் இனவாதக் கட்சிகள் வெற்றிவாக சூடுகின்றன. சாதியம் அப்படியே பேணப்படுகிறது. நீதிபதிகளே நீதி மன்றத்துக்கு வெளியே தங்கள் வீடுகளிலும் வாழ்விலும் சாதியத்தையும் இனவாதத்தையும் தாராளமாகப் பேணுகிறார்கள் என்றால்…இதை விட வேறு என்ன சான்று வேண்டும்? நீதிபதிகள் மட்டுமல்ல, ஆசிரியர்கள், கல்விப்புலத்தினர், ஆன்மிகத்துறையில் இயங்குவோர், மதகுருக்கள் எனப் பல தரப்பினரும் இனவாதிகளாகவும் சாதியவாதிகளாகவும் மதவாதிகளாகவும்தானே உள்ளனர். 

இந்த மாதிரி வாத நோய்களைக் கொண்டிருப்போர் பழங்குடி மனநிலையின் பிரதிநிதிகளேயாவர். பழங்குடி மனநிலை என்பது எப்போதும் பிறரை எதிர்ப்பதிலும் பிறரைக் குறித்து சந்தேகப்படுவதுமாகவே இருக்கும். 

ஆனால், இதையெல்லாம் கடந்து விடுமாறு வரலாறு நம்மை நிர்ப்பந்திக்கிறது. ஏனென்றால் வரலாறு நிகழ்ந்து கொண்டிருப்பது நவீனத்துவத்தின் காலத்தில். உலகம் இயங்குவதும் நவீனத்துவத்தின் காலத்தில்தான். ஆகவே அது அதன் அடிப்படையிலேயே நிபந்தனைகளை விதிக்கும். அதற்கு மாறாக நாம் சிந்தித்தால், செயற்பட்டால் நம்மைத் தூக்கி எறிந்து விடும். அதனுடைய சுழற்சி அப்படியானது. 

இப்பொழுது கூட நாம் இவற்றையெல்லாம் புரிந்து கொள்ளத் தவறினால் தண்டனைகளை அனுபவித்தே தீர வேண்டும். இதை இலங்கையர்கள் ஒவ்வொருவரும் தெளிவாகப் புரிந்து கொள்வது அவசியம். 

இப்பொழுது நம்முன்னே உள்ள தெரிவுகள் இரண்டுதான். பிரச்சினையை வளர்க்கப்போகிறோமா? தீர்க்கப்போகிறோமா என்பதேயாகும். பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என்று மக்கள் விரும்பினார்கள். விரும்புகிறார்கள். ஆனால் பிரச்சினையை  வளர்க்க வேண்டும் என்றே அரசியற் தரப்பினர் சிந்தித்தனர். செயற்பட்டனர். 

இந்த இடைவெளி நிகழ்ந்து கொண்டே இருந்தது. இனி இப்படி நிகழ முடியாது. இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். முக்கியமாக மக்கள் விழிப்படைய வேண்டிய சூழல் – காலகட்டம் இது. 

இலங்கையர்களாக நாம் மகிழ்ந்திருக்கப் போகிறோமா? அல்லது முரண்பாடுகளை வளர்த்து, உள் நாட்டில் நீதியை மறுத்து, பிறருக்கு அடிமையாக இருக்கப்போகிறோமா? என்ற கேள்வியை நாம் கேட்டுக் கொள்ள வேணும். சகோதரர்களுக்கு நீதியை மறுத்து விட்டு அந்நியருக்கு அடிமையாக இருப்பது எவ்வளவு முட்டாள்தனமாகும்? அதை விட முட்டாள் தனமானது சகோதர்கள் அடிபட்டுக் கொண்டிருப்பதாகும். 

இந்தப் பேச்சுவார்த்தையை ஆக்கபூர்வமானதாக முன்னெடுத்து அர்த்தபூர்வமானதாக்குவதற்கு முயற்சிப்போம்.