-தம்பியப்பா கோபாலகிருஸ்ணன்- (செயலாளர், அகில இலங்கை தமிழர் மகா சபை/தலைவர், கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு)
1944 இற்கு முற்பட்ட காலத்து – சேர்.பொன்னம்பலம் இராமநாதன் மற்றும் சேர்.பொன்னம்பலம் அருணாசலம் காலத்து – அரசியல் சீர்த்திருத்தக் கோரிக்கைகள்; 1944 இலிருந்து 1949 வரை அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் தலைவர் ஜி.ஜி.பொன்னம்பலம் தலைமையில் முன்னெடுக்கப்பெற்ற ஐம்பதுக்கு ஐம்பது கோரிக்கை உள்ளடங்களான அரசியல் முயற்சிகள்; 1949 இல் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தோற்றத்தின் பின்பு எஸ்.ஜே.வி.செல்வநாயகம் தலைமையில் 1972 வரை ‘சமஸ்டி’ கோரி முன்னெடுக்கப்பெற்ற அகிம்சைப் போராட்டங்கள் – இலங்கை அரசாங்கங்களுடனான ஒப்பந்தங்கள்; 1972 இல் இலங்கைத் தமிழரசுக்கட்சியும் அகில இலங்கைத் தமிழக் காங்கிரஸும் இணைந்து தமிழர் கூட்டணியாகி 1976 வரை முன்னெடுக்கப்பெற்ற அரசியல் செயற்பாடுகள் ; 1976 இல் தமிழர் கூட்டணி தமிழர் விடுதலைக் கூட்டணியாகப் பெயர்மாற்றம் பெற்று வட்டுக்கோட்டை மாநாட்டில் எடுக்கப்பெற்ற தமிழீழத் தனிநாட்டுத் தீர்மானம்; 1976 இலிருந்து 2009 மே வரை தமிழ்த்தரப்பில் முன்னெடுக்கப்பெற்ற தனிநாட்டுக்கான ஆயுதப் போராட்டம்; 2009 மேயிலிருந்து இன்றுவரை 2001 இல் உருவான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் முன்னெடுக்கப்பட்டுவரும் இராஜதந்திரப் போராட்டம் என்று தமிழ்த்தேசிய அரசியல் தரப்பின் அத்தனை முயற்சிகளும் – முன்னெடுப்புக்களும் – போராட்டங்களும் தோல்வியுற்று இறுதியில் பேரழிவைக்கண்டு தமிழ்த்தேசிய அரசியல் தடம்புரண்டுபோயுள்ளதொரு தருணத்தில் பேச்சுவார்த்தைக்கான அழைப்பு தமிழர்தரப்பை நோக்கி மீண்டுமொருமுறை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசுத் தலைவர்களின் தமிழர்தரப்பை நோக்கிய பேச்சுவார்த்தைக்கான அழைப்புக்கள் – ஒப்பந்தங்கள் – சர்வகட்சி மாநாடுகள் – அனைத்துக்கட்சி மாநாடுகள் – பாராளுமன்றத் தெரிவுக் குழுக்கள் – அரசியல் பொதிகள் – அரசியலமைப்புக் குழுக்கள் தமிழ்த்தேசிய அரசியலுக்குப் புதியனவல்ல. இந்த விடயங்களில் தமிழர்தரப்பு பலதடவைகள் ஏமாந்த -சூடுகண்ட பூனையாகும். இந்தப் பின்னணியிலேயே மீண்டுமொருமுறை இலங்கை அரசுத்தலைவரால் தமிழர்தரப்பை நோக்கிய பேச்சுவார்த்தைக்கான அழைப்பு 23.11.2022 அன்று பாராளுமன்றத்தில் வைத்துப் பகிரங்கமாக விடுக்கப்பட்டுள்ளது. தடம்புரண்டு போயுள்ள தமிழ்த்தேசிய அரசியல் இத்தருணத்தைப் பயன்படுத்தி மீண்டும் சரியானதொரு தடத்தில் தன்னைத் தகவமைத்துக் கொள்வது எவ்வாறு என்பது பற்றியே இவ் அரசியல் பத்தி தன் கவனத்தைக் குவிக்கிறது.
கடந்தகாலங்களில் தமிழ்த்தேசிய அரசியல் அகிம்சைப் போராட்டத்தினாலும், ஆயதப்போராட்டத்தினாலும் பெற்றுக்கொண்ட யதார்த்தபூர்வமான ஓர் அரசியல் அடைவுதான் 1987 யூலை 29 இல் கைச்சாத்தான இந்திய – இலங்கை சமாதான ஒப்பந்தமும் அதன் விளைவான 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமும், அதன்கீழ் உருவான – தற்காலிகமாகவேனும் இணைந்த வடக்கு கிழக்கு மாகாண ஒற்றை அதிகாரப்பகிர்வு அலகுமாகும் என்பதையும்; ஆனால் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அறிவுபூர்வமற்ற அரசியல் மற்றும் இராணுவ நடவடிக்கைகளும் அதனைத் தொடர்ந்து வந்த தமிழர்தம் அரசியல் தலைமைகளின் தவறான அரசியலுமே இந்த ஒப்பந்தத்தினால் விளையக்கூடிய நன்மைகள் தமிழ்மக்களைச் சென்றடைவதை இன்றுவரை தடுத்துக் கொண்டிருக்கின்றன என்பதையும் தமிழர்களுடைய அரசியற்தரப்பு முதலில் நேர்மையாகவும், உணர்வுபூர்வமாகவும் ஒத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் விட்ட இடத்திலிருந்து – தடம்புரண்ட இடத்திலிருந்து – அடுத்தகட்டப் பயணத்தை ஆரம்பிக்கலாம்.
தடம்புரண்டுபோயுள்ள தமிழ்த்தேசிய அரசியல் பயணம் தன்னை மீள்தகவமைத்துக்கொண்டு தொடர்ந்து பயணிப்பதற்கான ஆரம்பப்படி பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தச்சட்டத்தின் முழுமையான – முறையான – அரசியல் விருப்புடனான – அர்த்தமுள்ள வகையிலான அமுலாக்கலேயாகும். அதனைவிடுத்து, தமிழ்த்தேசியக் கட்சிகள் என்று கூறிக்கொள்ளும் அல்லது குறிசுட்டுக் கொண்ட தமிழ் அரசியல் கட்சிகள் தற்போதைய தென்னிலங்கை- இந்துசமுத்திரப் பிராந்திய – பூகோள அரசியல் களநிலையில் ‘சமஸ்டி’யை முன்னிலைப்படுத்துவதும், அதிகாரப்பகிர்வு ஒற்றையாட்சியின் கீழா அல்லது ‘சமஸ்டி’க் கட்டமைப்பின்கீழா என்று தமக்குள் கயிறிழுத்து, மல்லுக்கட்டுவதும் தவிர்க்கப்படவேண்டும். தமிழர்களைப் பொறுத்தவரை அதிகாரப்பகிர்வும் அதன் பிரயோகமும்தான் முக்கியமானது, பாத்திரத்தின் வடிவத்தைவிடப் பாத்திரத்தின் உள்ளீடுதான் முக்கியமானது. இந்திய அரசியலமைப்பில் ‘சமஸ்டி’ என்ற வார்த்தைப் பிரயோகமில்லாமலே மாநிலங்களுக்கு அதிகாரங்கள் பகிரப்பட்டுள்ளன.
இலங்கைத் தமிழர்களது சமூக பொருளாதார அரசியல் அபிலாஷைகளும் எதிர்பார்ப்புக்களும் இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார, அரசியல் நலன்களை மீறலாகாது. இவ்விதமான எல்லைக் கட்டமைப்புக்குள் நின்றுதான் இலங்கைத் தமிழர்கள் தங்கள் சமூக, பொருளாதார, அரசியல் இருப்பைப் பேணி வளர்த்துக் காப்பாற்ற முடியும் என்பதையே இந்திய – இலங்கை சமாதான ஒப்பந்தம் எமக்கு உணர்த்தும் உண்மையாகும். இந்த யதார்த்தத்தை ஓரம் தள்ளிவிட்டுப் புதிய அரசியலமைப்பு ஒன்றின் மூலம் இனப்பிரச்சினைக்கான தீர்வை நாடுவதும் தேடுவதும் பலனளிக்கப்போவதில்லை. 13ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தினால் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களை முழுமையாக அமுல்படுத்தும் கோரிக்கையை ஒற்றுமையாக நின்று வலியுறுத்துவதைத் தள்ளிவைத்துவிட்டுப் புதிய அரசியலமைப்பொன்றின் மூலம் இனப் பிரச்சனைக்கான தீர்வை நாடுவது அரசனை நம்பிப் புருஷனைக் கைவிட்ட கதையாகவே முடியும்.
எனவே, உத்தேச பேச்சுவார்த்தை மேசையில், தமிழர்தரப்பில் அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளும் அமைப்புக்களும் இணைந்ததோர் ஐக்கியப்பட்ட அணி பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் முழுமையான – முறையான – அரசியல் விருப்புடனான – அர்த்தமுள்ள விதத்திலான அமுலாக்கலை மட்டுமே ஒற்றைக் கோரிக்கையாக (Single Demand) முன்னெடுக்க வேண்டும். பல கோரிக்கைகளை முன்வைத்தால் தமிழர்தரப்புக் கோரிக்கை ஐதாகிவிடும் ஆபத்துண்டு. இழுத்தடித்து ஏமாற்றும் எண்ணம் கொண்ட இலங்கை அரசாங்கத்திற்கும் அது வாய்ப்பைக் கொடுத்ததாகிவிடும்.
மேலும், பதின்மூன்றாவது அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்தை முழுமையாக அமுல்செய்ய வேண்டுமென்ற கோரிக்கையை வெறுமனே மொட்டையாக முன்வைக்காமல் அதன் அமுலாக்கலுக்கான சில களவேலைகளைத் தமிழ்த்தரப்பு உத்தேச பேச்சுவார்த்தைக்கு முன்னரே பூர்த்தி செய்து தயாராகவிருக்க வேண்டும். இதற்கு முதலில் தேவை அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புக்களுக்கிடையேயான ஓர் ‘ஐக்கியப்பட்ட அரசியல் பொறிமுறை (வியூகம்)யேயாகும்.
தற்போது தமிழர்களுடைய அரசியல் பொதுவெளியில் தமிழ்த்தேசியக் கட்சிகள் எனக் குறிசுட்டுக்கொண்டு (தமிழ் ஊடகங்களுக்கும் இக்குறி சுட்டுதலில் பங்குண்டு). குறுகிய வட்டத்திற்குள்ளே செயற்படும் தமிழ் அரசியல் கட்சிகள் மட்டுமே ஒன்றிணைவது அர்த்தமுள்ள அரசியல் ஐக்கியம் ஆகாது. இவ்வாறான மட்டுப்படுத்தப்பட்ட ஐக்கியத்தை தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை ஆதரிக்கும் சிங்கள சமூகத்திற்கிடையேயுள்ள முற்போக்குச் சக்திகளும்கூட ஆதரிக்கப்போவதில்லை. இதுமட்டுமல்ல, இவ்வாறான மட்டுப்படுத்தப்பட்ட ஐக்கியத்தை இந்தியாவோ அல்லது சர்வதேச சமூகமோ அங்கீகரித்து அனுசரணை வழங்கவும் மாட்டாது. இந்தியா அங்கீகரிக்காத ஒன்றைச் சர்வதேச சமூகமும் அங்கீகரிப்பது அரிது.
எனவே, பலனளிக்கக்கூடிய – வலுவான – தமிழ்மக்கள் ஏங்கிநிற்கும் – எதிர்பார்க்கும் – நம்பிக்கை கொள்ளக்கூடிய – இந்தியாவும் சர்வதேச சமூகமும் அங்கீகரித்து அனுசரணை வழங்கக்கூடிய தமிழ் மக்களின் அரசியல் ஐக்கியம் என்பது, பாராளுமன்றத்தில் வடக்குக்கிழக்குத் தமிழர்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் அனைத்துத் தமிழ்க் கட்சிகளும், பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்காது தமிழர்களுடைய அரசியல் பொதுவெளியில் செயற்படுகின்றதும், தேர்தல்கள் திணைக்களத்தினால் அங்கீகாரம் பெற்றதுமான அனைத்துத் தமிழ்க் கட்சிகளும், தேர்தல் திணைக்களத்தினால் இதுவரை அங்கீகாரம் பெறாது, ஆனால் அதன் அனுமதியுடன் செயற்படுகின்ற பதிவு செய்யப்பெறாத அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளும், அமைப்புக்களும் கட்சி மற்றும் தேர்தல் அரசியல் நலன்களைக் கடந்து – தனிநபர் மற்றும் கட்சி, அரசியல் முரண்பாடுகளையும் வேறுபாடுகளையும் மறந்து – அரசியல் தத்துவார்த்த/ கோட்பாட்டு முரண்பாடுகளுக்கும் அப்பால் ஒட்டுமொத்தத் தமிழர்களினதும் நலன் கருதி ஓர் ஐக்கியப்பட்ட அரசியல் பொறிமுறையை (வியூகத்தை) தமிழ்த் தரப்பில் ஏற்படுத்துவதேயாகும். இத்தகைய ஐக்கியத்திற்கான பிள்ளையார்சுழியை இடுவது அதாவது பூனைக்கு மணிகட்டுவது யார்?
அதற்கான பொறுப்பும் பொருத்தப்பாடும் தகுதியும் மூத்த அரசியல்வாதியும், வடக்குக் கிழக்குத் தமிழர்களால் ஜனநாயக ரீதியாகத் தேர்தலில் பெரும்பான்மையாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியென்ற வகையில் அதன் சரி- பிழை; பலம்-பலவீனங்களுக்கும் அப்பால் தமிழரசுக்கட்சி ஆதிக்கம் செலுத்தும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கே உண்டு. கடந்தகாலங்களில் இரா.சம்பந்தன் தன் பொறுப்புணர்ந்து நடக்கவுமில்லை. தன் தகுதியுணர்ந்து செயற்படவுமில்லை. அவற்றை மறப்போம். பழைய விடயங்களைக் கிண்டாதிருப்போம்.
ஆனால், இரா.சம்பந்தன் அவர்கள் தனது சார்பில் ஐக்கியத்தை ஏற்படுத்தும் பொறுப்பைச் சுமந்திரனிடமோ அல்லது தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராசாவிடமோ ஒப்படைக்காது, தனது மூப்பையும் அதனால் ஏற்பட்டுள்ள உடற் தளர்வையும் பொருட்படுத்தாது தானே நேரில் களமிறங்க வேண்டும். ஏனெனில், சுமந்திரன் தமிழ்த்தேசிய அரசியலின் நீள – அகல – ஆழம் தெரியாதவர். அவர் பகைமையை வளர்ப்பவரே தவிர, ஐக்கியத்தின்பால் அர்ப்பணிப்புடன் செயற்படுபவரல்லர்.
மாவை சேனாதிராசாவுக்கு நீண்டகால அரசியல் அனுபவமும் பாரம்பரியமும் உண்டெனினும், அதற்கான ஆளுமையும் அறிவும் ஆற்றலும் பற்றாக்குறையுடையவர். அனுபவம் வேறு; அறிவு வேறு. மூப்பு வேறு, முதிர்ச்சி வேறு. இதனால், இரா.சம்பந்தன் அவர்களே இவ்விவகாரங்களைக் கையாள வேண்டும். இந்த விடயத்தில் அவர் சாவைத் தழுவினாலும்கூட அது சங்கைக்குரியதே.
கடந்தகாலத்து முரண்பாடுகளையும் வேறுபாடுகளையும் பகைமைகளையும் களைந்துவிட்டுப் பார்த்தால், இன்று வடக்குக் கிழக்குத் தமிழர்களிடையே நீண்டகால அரசியல் அனுபவமும் ஆளுமையும் ஆற்றலும் அறிவும் படைத்த மூத்த அரசியல் தலைவர்களாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் – தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி – அகில இலங்கை தமிழர் மகாசபையின் தலைவர் கலாநிதி. எந்திரி கா.விக்னேஸ்வரன் ஆகியோரையே அடையாளப்படுத்தலாம். இவர்கள் மூவருமே இந்திய- இலங்கை சமாதான ஒப்பந்தத்துடன் சம்பந்தமுடையவர்களும் கூட.
தமிழர் தரப்பில் ஓர் ஐக்கியப்பட்ட அரசியல் பொறிமுறையை ஏற்படுத்தும் வியூகத்தின் முதற்கட்டமாக இந்த மூன்று மூத்த அரசியல் தலைவர்களும் முதலில் ஒன்றுகூடி தமக்குள்ளே மந்திராலோசனை கலக்கவேண்டும். இதற்கான முதல் அடியை எடுத்துவைக்கும் பொறுப்பும் பொருத்தப்பாடும் தகுதியும் அரசியல் அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கும் இரா.சம்பந்தனுக்கே உண்டு.
இரண்டாம் கட்டமாக இந்த மூவரும் ஒன்றிணைந்து அடுத்த தலைமுறைத் தலைவர்களாகவும் அரசியல் அனுபவமிக்கவர்களாகவும் கட்சித் தலைவவர்களாகவும் உள்ள சுரேஸ் பிரேமச்சந்திரன் (ஈ.பி.ஆர்.எல்.எப்) – சித்தார்த்தன் (புளொட்) – செல்வம்அடைக்கலநாதன் (ரெலோ) – ஸ்ரீகாந்தா மற்றும் சிவாஜிலிங்கம் (முன்னாள் ரெலொ / இந்நாள் தமிழ்த்தேசியக் கட்சி) – வரதராஜப்பெருமாள் (முன்னாள் ஈ.பி.ஆர்.எல்.எப். / இந்நாள் தமிழர் சமூக ஜனநாயகக்கட்சி) – மாவை சேனாதிராசா (தமிழரசுக்கட்சி) – சி.வி.விக்னேஸ்வரன் (தமிழ்மக்கள் கூட்டணி / தமிழ் மக்கள் தேசியக்கூட்டணி / – கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (அகில இலங்கைத் தமிழ்க்காங்கிரஸ் / தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி) – மு.சந்திரகுமார் (சமத்துவக்கட்சி) ஆகியோரை அழைத்துப்பேசி ஐக்கியம் குறித்த சாதகமான முடிவுக்கு வரவேண்டும். இம்முடிவுக்குக் கட்டுப்படாதவர்களை வெளியே விடவேண்டியதுதான். வேறு வழியில்லை. அவர்களை மக்கள் இனங்கண்டுகொள்வார்கள். இப்போது ஐக்கியத்தின் இரண்டாம் கட்ட அணி உருவாகிவிடும். இதுதான் ஐக்கியத்தின் ஆரம்பத் திரட்சியாகும்.
மூன்றாம் கட்டமாக, அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளாக விளங்கும் தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களான டக்ளஸ் தேவானந்தா (ஈழமக்கள் ஜனநாயகக்கட்சி) மற்றும் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான் – தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி) ஆகியோரை அழைத்து இரண்டாம்கட்ட அணி பேசி ஐக்கியத்தை மேலும் வலுப்படுத்த வேண்டும். ஏற்கெனவே இருவரும் ஐக்கியத்திற்கான- பேச்சுவார்த்தைக்கான பச்சைக்கொடி காட்டியுள்ளனர்.
நான்காம் கட்டமாக தமிழர்களுடைய அரசியல் பொதுவெளியில் செயற்பட்டுக்கொண்டிருக்கும் அடையாளம் காணப்பட்ட – தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் கட்சி மற்றும் அமைப்புகளுடைய தலைவர்களோடு கலந்துரையாடி அவர்களையும் அணைத்துக்கொண்டு தமிழர் தரப்பின் ஐக்கியப்பட்ட அரசியல் பொறிமுறைக்கு இறுதி வடிவம் கொடுக்க வேண்டும். இதற்குத் தேவையானவை தமிழ் அரசியல் கட்சித் தலைவர்களின் தன்னலமறுப்பும் – விட்டுக்கொடுப்பும் – சகிப்புத்தன்மையும் – அர்ப்பணிப்பும் – விசாலமான மனப்பக்குவமும் – ஒட்டுமொத்தத் தமிழர்களினதும் ஐக்கியத்தின் மீதான ஈடுபாடுமே தவிர வேறில்லை.
மேலும், ஒரு சாதகமான விடயத்தை இப்பத்தி வெளிச்சத்துக்குக் கொண்டுவர விரும்புகின்றது.
அது என்னவெனில், கடந்தவருடம் 09.04.2021 அன்று தமிழர் விடுதலைக்கூட்டணி – அகில இலங்கைத் தமிழர் மகாசபை – தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி – தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி, சமத்துக்கட்சி ஆகிய ஐந்து கட்சிகளும் கொழும்பில் ஒன்றுகூடி, அதிகாரப்பகிர்வுக்கான இயக்கம் ( MOVEMENT FOR THE DEVOLUTION OF POWER) எனும் அமைப்பை உருவாக்கி அதன் விளைவாக அரசியலமைப்பின் பதின்மூன்றாவது அரசியல் சட்டத் திருத்தத்தை முழுமையாக அமுல் செய்வதற்கான வழிகாட்டி| ( A guide for full implementation of the 13th amendment to the constitution) எனும் தலைப்பிலான ஆங்கிலமொழிமூல ஆவணமொன்றைத் தயாரித்து இவ்வருடம் மார்ச் மாத நடுப்பகுதியில் முன்னாள் ஜனாதிபதி/பிரதமரிடமும் பின்னர் முன்னாள் பிரதமர் (இந்நாள் ஜனாதிபதி) ரணில் விக்கிரமசிங்க உட்படப் பல சிங்கள தமிழ் அரசியல் பிரமுகர்களிடமும் இலங்கையிலுள்ள வெளிநாட்டுத் தூதுவர்களிடமும் கையளித்துள்ளது.
உத்தேச பேச்சுவார்த்தையின் ஆரம்பக் கட்டத்திலேயே தமிழர்தரப்பு இந்த ஆவணத்தைப் பேச்சுவார்த்தை மேசையில் சமர்ப்பித்து இவ் ஆவணத்திலுள்ள விடயங்களைத் தாமதமின்றி உடனடியாக அமுல்படுத்தும்படியானதொரு ஒற்றைக் கோரிக்கையை ஜனாதிபதியிடம் விடுக்கமுடியும். இத்தகையதொரு அரசியல் செயற்பாடு நிச்சயம் அரசாங்கத்திற்கு ஓர் இராஜதந்திர அழுத்தத்தைக் கொடுக்கும். இந்தியாவும் இக்கோரிக்கையை அனுசரித்து அனுசரணை வழங்கும். சர்வதேச சமூகமும் ஒத்தாசைதரும்.
மேலும், இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்கள் இலங்கைத் தமிழர்களின் மரபுவழித் தாயகம் என்பது இந்திய – இலங்கை சமாதான ஒப்பந்தத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதனால், ஏற்கெனவே ஏற்றுக்கொள்ளப்பட்ட இவ்விடயத்தைப் பேச்சுவார்த்தை மேசையில் விவகாரமாக்கத் தேவையில்லை. இதுமட்டுமல்ல தமிழ்த்தேசியக் கட்சிகளிடையே தற்போது பேசுபொருளாக இருக்கின்ற ‘சமஸ்டி’யை உள்ளடக்கிய புதிய அரசியலமைப்பு இப்பேச்சுவார்த்தையினூடாக எட்டப்படப்போவதில்லை. எனவே, தமிழர் தரப்பு இப்பேச்சுவார்த்தை மேசையில் ‘சமஸ்டி’ க் கோரிக்கையை முன்னிலைப்படுத்துவதைத் தந்திரோபாயத்தோடு தவிர்த்துக் கொள்ளலே அரசியல்ரீதியாக அறிவுபூர்வமானது. பட்டுவேட்டிக்கு ஆசைப்பட்டுக் கோவணத்தை இழக்கக்கூடாது. கனவுகளையும் கற்பனாவாதங்களையும் விட நடைமுறைச் சாத்தியமான விடயங்களே நன்மைகளைக் கொண்டுவரும்.
இத்தருணத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமிழர்தரப்பைப் பேச்சுக்கு அழைப்பது பௌத்த சிங்கள பேரினவாத அரசாங்கம் / சமூகம் திருந்திவிட்டது அல்லது மனமாற்றமடைந்துவிட்டது என்பதற்கான அறிகுறியல்ல. இன்று இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் காரணமாகவும் எதிர்வரும் ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற, மாகாணசபைகள், உள்ளூராட்சி அதிகார சபைகளுக்கான தேர்தல் தேவைகளுக்காகவுமே இந்த அழைப்பு என்பது சாதாரண அரசியல் மாணவனும் புரிந்துகொள்ளக்கூடிய இலகு எண்கணிதமாகும்.
நாம் விரும்பியோ விரும்பாமலோ சரியோ பிழையோ எதிர்காலத்தில் இலங்கையின் பாதுகாப்பு, பொருளாதார, அரசியல் விவகாரங்களைத் தீர்மானிக்கும் காரணியாக இந்துசமுத்திரப் பிராந்திய புவிசார் அரசியல்தான் இருக்கப்போகிறது, பூகோளரீதியாக இந்தியாதான் இந்துசமுத்திரப் புவிசார் அரசியலில் தீர்மானிக்கும் காரணியாக விளங்கப்போவதைத் தவிர்க்கவும் முடியாது. தடுக்கவும் முடியாது. இதனை நன்கு புரிந்துகொண்டுதான் ஜனாதிபதி 13 ஐப் பாதுகாப்பேன் என்பதும் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ச 13+க்கு ஆதரவு என்பதும் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித்பிரேமதாஸ 13 இன் கீழான அதிகாரப் பகிர்வுக்கு முழுமையான ஒத்துழைப்பு என்பதும்.
இக்கூற்றுக்களெல்லாம் 13 இன் மீது கொண்ட அளப்பரிய காதலால் அல்ல தத்தம் அரசியல் தேவைகளுக்காகத் தமிழர்களைத் தாக்காட்டுவதையும் இந்தியாவைத் தாஜா பண்ணுவதையுமே அரசியல் நோக்கமாகக் கொண்டவை. ஆனாலும் 13 க்கு ஆதரவான இக்கூற்றுக்களையும் பேச்சுவார்த்தைக்கான அழைப்பையும் தமிழர் தரப்பு தந்திரோபாயமாகத் தமக்குச் சாதகமாக்கிக் கொள்ள வேண்டும்.
இந்துசமுத்திரப் பிராந்திய புவிசார் அரசியலில் இந்தியாவின் வகிபாகத்தை பௌத்த சிங்களப் பேரினவாத அரசாங்கங்களும் மேற்குலக நாடுகளும் புரிந்து கொண்ட அளவுக்குத் தமிழ்த் தேசிய அரசியல் தரப்பு புரிந்துகொள்ளாமல் விட்டதும் /இருப்பதும் துரதிர்ஷ்டமே.
இந்திய – இலங்கை சமாதான ஒப்பந்தத்தின் அமுலாக்கலைப் பொறுத்தவரை ஆரம்பத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கமும், அதன்பின் தமிழர்களுடைய அரசியல் தலைமைகளும் கடந்த காலங்களில் விட்ட தவறை இனிமேலும் இழைக்கக்கூடாது. மொத்தத்தில் தமிழர் தரப்பை நோக்கிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பேச்சுவார்த்தைக்கான அழைப்பு தந்திரோபாயம்மிக்கது, அரசியல் என்பது தர்மநியாயங்களுக்கும் அறவிழுமியங்களுக்கும் அப்பால் தந்திரோபாயமான அணுகுமுறைகள் நிறைந்ததுதான். கடந்தகாலங்களில் தமிழர்தரப்பு (தமிழீழ விடுதலைப்புலிகள் உட்பட) ‘ வளர்த்தால் குடும்பி வழித்தால் மொட்டை’ – ‘அறக்குழைப்பேன் அல்லது அரிசியாக்குவேன்’ – ‘அடைந்தால் மகாதேவி அடையாவிட்டால் மரணதேவி’ எனும்படியான அறிவுபூர்வமற்ற அரசியல் நிலைப்பாடுகளை எடுத்துச் சந்தர்ப்பங்களைக் கோட்டைவிட்டு விட்டு அதனால் தமிழ் மக்களுக்குப் பேரழிவை ஏற்படுத்தியது போலல்லாமல் இந்தத் தருணத்தையாவது தந்திரோபாயமாகக் கையாளவேண்டும்.
‘சூழ்ச்சியைச் சூழ்ச்சியால் வெல்வதும் தர்மமே’ இதற்கு முதலில் தேவையானது தமிழர் தரப்பில் ‘ஐக்கியப்பட்டதோர் அரசியல் பொறிமுறையே’. இந்த விடயத்தில் எறிகிற பொல்லு இப்போது இரா.சம்பந்தன் அவர்களிடமே இருக்கிறது. தமிழர்களிடையே அரசியல் ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்காக எவ்வாறு 1972 இல் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்கள் தனது அரசியல் எதிரியான ஜி.ஜி.பொன்னம்பலம் அவர்களின் வீடுதேடிச் சென்றாரோ அதே மனமாற்றத்துடனும் மனப்பக்குவத்துடனும் ஈடுபாட்டுடனும் இரா.சம்பந்தன் அவர்கள் தனது அரசியல் பயணத்தினதும் வாழ்நாள் பயணத்தினதும் இறுதிக்கட்டத்திலாவது செயற்பட வேண்டும். இல்லையேல் எதிர்காலம் அவரைச் சபிக்கும்.