தீர்வுக்கான வாய்ப்புகள் அதிர்ஸ்டம் நிறைந்தவை – தவறவிடப்பட முடியாதவை 

தீர்வுக்கான வாய்ப்புகள் அதிர்ஸ்டம் நிறைந்தவை – தவறவிடப்பட முடியாதவை 

 — கருணாகரன் — 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினுடைய அறிவிப்பின்படி அடுத்த சில நாட்களில் (12.12.2022) இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான (ஜனாதிபதியில் அறிவிப்பின்படி அதிகாரப் பரவலாக்கத்துக்கான) பேச்சுகள் ஆரம்பமாக வேண்டும். கிடைக்கின்ற தகவல்களின் அடிப்படையில் அவர் அதற்குத் தயார். இதை அவர் ஏற்கனவே பாராளுமன்றத்திலும் ஓரளவுக்கு வெளிப்படுத்தியிருந்தார் –வெளிப்படையாகப் பேசியிருந்தார். தான் மட்டுமல்ல, ஏறக்குறைய அனைவரும் இதற்குச் சம்மதம்தானே என்பதையும் நேரில் கேட்டிருந்தார். ஜே.வி.பி மட்டும் சறுக்கியது. மற்றத் தரப்புகள் விரும்பியோ விரும்பாமலோ தலையாட்டின. 

தமிழ்த்தரப்புகளில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கைத் தமிழ்க்காங்கிரஸ் தவிர, ஏனையவை பேச்சுகளுக்கு தயார் என்ற நிலையில் உள்ளன. அரசாங்கத்தில் அங்கத்துவம் வகிக்கின்ற ஈ.பி.டி.பி, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் உட்பட. 

அப்படியென்றால் பேச்சுகள் குறித்த நாளில் ஆரம்பமாகுமா? 

இதற்கு இந்தப் பத்தியை எழுதிக் கொண்டிருக்கும் வரையில் தெளிவான பதில் கிடைக்கவில்லை. பேச்சுகள் ஆரம்பிக்கப்படுவதாக இருந்தால் அதற்கான நிகழ்ச்சி நிரல் வேண்டும். அது இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை. நிகழ்ச்சி நிரலைத் தயாரிப்பதாக இருந்தால், நடக்கவுள்ள பேச்சுகள் எங்கே, எப்பொழுது ஆரம்பமாகும்? எந்த அடிப்படையில் பேச்சுகள் நடக்கும்? அதன் கால அட்டவணை என்ன? அதில் யார் யாரெல்லாம் பங்கேற்பர்? அதாவது தமிழ்த்தரப்பிலிருந்து யார் யார் பங்கேற்பர்? அரசாங்கத் தரப்பிலிருந்து யார் யாரெல்லாம் பங்கேற்பர்? என்ற விடயங்கள் முடிவு செய்யப்பட வேண்டும். 

அது மட்டுமல்ல, முஸ்லிம் தரப்பும் இந்தப் பேச்சுகளில் பங்கேற்குமா? என்பதைப் பற்றியும் எந்தத் தகவலும் இல்லை. இதேவேளை தங்களுடனும் பேச்சுகள் நடத்தப்பட வேண்டும் என மலையகக் கட்சிகளும் கேட்டுள்ளன. இதைப் பற்றியும் எந்தத் தகவல்களும் வெளியாகவில்லை. 

அப்படி எல்லாத் தரப்புகளின் கோரிக்கைகளையும் ஏற்று பேச்சுகள் நடத்தப்படுமா? என்பது ஒரு கேள்வி. இன்னொரு கேள்வி, அப்படியில்லை என்றால், தனித்தனியாகப் பேச்சுகள் நடக்குமா? எப்படியென்றாலும் வடக்குக் கிழக்குப் பிரச்சினை பற்றிப் பேசும்போது சமனிலையில் முஸ்லிம்களும் தமிழர்களும் பங்கேற்க வேண்டுமல்லவா! 

இதையெல்லாம் அடுத்து வரும் ஒரு வாரத்திற்குள் விரைந்து முடிவெடுத்தால்தான் பேச்சுகளை ஆரம்பிக்க முடியும். ஆனால் நடைமுறைகள் மந்த கதியிலேயே உள்ளன. 

இருந்தாலும் பேச்சுகளை நடத்த வேண்டும் என்று ஜனாதிபதி விரும்புவதாகத் தெரிகிறது. ஜனாதிபதியின் விருப்பம் எந்தளவுக்கு நிறைவேறும் என்று கேட்போரும் உண்டு. தன்னை இன்னும் பலப்படுத்த முடியாத நிலையில் இருக்கும் அவர், எப்படி இந்தப் பெரிய சுமையைத் தனியே தூக்கப்போகிறார்? என்று தமது கேள்விக்கான நியாயத்தை இவர்கள் முன்வைக்கின்றனர். பலமான நிலையில் இருந்த ஆட்சியாளர்களே தீர்வை முன்வைப்பதற்குத் தயங்கினர். இதைக் கடந்து சிலர் முயற்சித்தாலும் எதிர்க்கட்சிகள் அதைத் தடுத்தன. குறிப்பாக சந்திரிகா குமாரதுங்கவினால் முன்னெடுக்கப்பட்ட பேச்சுகளும் முன்வைக்கப்பட்ட தீர்வும் எதிர்த்தரப்பினரால் நிராகரிக்கப்பட்டன. இந்த எதிர்ப்பில் முக்கிய பாத்திரமேற்றவர் இன்றைய ஜனாதிபதியும் அன்றையை எதிர்க்கட்சித் தலைவருமான இதே ரணில் விக்கிரமசிங்கதான் என்றும் கூறுகிறார்கள். 

இப்பொழுது நிலைமை முற்றிலும் வேறாக உள்ளது. அரசாங்கம் மிகப் பலவீனமான நிலையில் உள்ளது. ஒற்றை மனிதராக ரணில் விக்கிரமசிங்க உள்ளார். இந்த நிலையில் இவரால் எப்படி இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியும்? எனவும் கேட்கின்றனர். 

இதெல்லாம் உண்மைதான். நடந்தவைதான். ஆனால், எப்போதும் ஒரே விதமாக நிலைமை இருப்பதில்லை. அதிலும் அரசியலில் இது முற்றிலும் வேறானது. அது புரிந்து கொள்ளவே கடினமானது. இதனால்தான் அரசியலில் நண்பரும் இல்லை. எதிரியும் இல்லை என்று கூறுவதுண்டு. 

ஏன், அண்மைக்கால இலங்கை அரசியற் சூழலை எடுத்துப் பாருங்கள். மைத்திரிபால சிறிசேன – ரணில் விக்கிரசிங்க கூட்டு. அதாவது, 2015 இல் வரலாற்றில் எதிரும் புதிருமாக இருந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் ஒன்றாக இணைந்து ஆட்சியமைத்தன. இதற்காக மகிந்த ராஜபக்ஸவை முழுமையாக எதிர்த்தார் மைத்திரிபால சிறிசேன. அடுத்த சில ஆண்டுகளில் தன்னை எதிர்த்துக் கவிழ்த்த மைத்திரிபால சிறிசேனவுடன் கைகோர்த்து அந்த ஆட்சியிலிருந்த பிரதமரான ரணில் விக்கிரமசிங்கவை விரட்டினார் மகிந்த ராஜபக்ஸ. இப்பொழுது அதே மகிந்த ராஜபக்ஸவின் தயவில், ஆதரவில்தான் ஆட்சி நடத்துகிறார், ரணில் விக்கிரமசிங்க. 

இதுதான் அரசியல். உலகம் முழுக்க, வரலாறு முழுக்க அரசியல் இப்படித்தான் உள்ளது. அதிகாரப் போட்டியும் அதற்கான சூழ்ச்சிகளும் குழிபறிப்புகளும் கூட்டணி சேர்தல்களும் கைகுலுக்கல்களும் கால் வாருதல்களுமாக. விதிவிலக்காக, அபூர்வமாக ஒரு சில தலைவர்கள் இதற்கு மாறான முறையில் ஆட்சியை நடத்தியிருக்கலாம். அரசியலை முன்னெடுத்திருக்கக் கூடும். ஆனால், பெரும்போக்கு முன்சொல்லப்பட்ட வகையில்தான் நடந்து வந்திருக்கிறது. அதிலும் ஆசிய, ஆபிரிக்கக் கண்டங்களில் இதைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. இந்த இடத்தில் நமக்கு நன்றாகத் தெரிந்த இன்னொரு உதாரணத்தையும் சொல்லலாம். 

தமிழ்நாட்டு அரசியலை எடுத்துப் பாருங்கள். கடந்த இருபது ஆண்டுகளில் தி.மு.க யார், யாருடன் எல்லாம் கூட்டு வைத்தது என்று. அதைப்போல, அ.தி.மு.க. ஒரு தடவை காங்கிரசுடன். மறுதடவை பாரதீய ஜனதாவுடன். இதெல்லாம் கொள்கையின் அடிப்படையில்தான் நடந்தா? நிலைமைகளின் –சூழ்நிலையின் விளைவானவை. அதாவது சூழலை, நிலைமையைத் தமக்குச் சார்பாகக் கையாள்வதற்கான உத்தியாக ஒவ்வொரு தரப்பும் இதைச் செய்துள்ளன. தி.மு.க, அ.தி.மு.க மட்டுமல்ல, வை.கோ, திருமாவளவன் போன்றோரும் அங்குமிங்குமாக தேவைக்கு ஏற்ற மாதிரித்தான் கூட்டுச் சேர்ந்துள்ளனர். 2008 இல் அ.தி.மு.க + பாரதீய ஜனதாக் கூட்டணியில் பங்கேற்றிருந்தன வை.கோ. அவை இரண்டையும் எதிர்த்து தி.மு.கவுடன் நிற்கிறார். 

இதுதான் அரசியல் யதார்த்தம். இதெல்லாம் சரியென்று இங்கே வாதிடவில்லை. ஆனால் இதுதான் நடைமுறையாக உள்ளது. 

வெளிப்பார்வைக்கு ரணில் விக்கிரமசிங்க தனி நபர்தான். கடந்த தேர்தலில் மக்கள் நிராகரித்த ஒருவர்தான். ஆனால், அவர்தான் இன்று நாட்டின் தலைவர். இதுதான் அரசியல் யதார்த்தம்.. இது எப்படி நடந்தது? இதே அரசியலமைப்பின் வழியாக, இதே அரசியற் சூழலில், இதே எதிர்க்கட்சிகளின் பலவீனமான நடத்தைகளின் ஊடாக. இதே மக்கள் சாட்சியத்தின் முன்பாக. 

சரியோ பிழையோ இந்தத் தனிநபர்தான் இன்று நாட்டைக் கட்டியாள்கிறார். இன்றுள்ள பொருளாதாரப் பிரச்சினை, அரசியல் பிரச்சினை, இனப்பிரச்சினை எல்லாவற்றுக்கும் தீர்வு காண வேண்டிய நிலையில் உள்ளார். இந்தத் தனி நபருடன்தான் உலகம் பேசுகிறது. உறவாடுகிறது. இந்தத் தனியாள்தான் பெரும்பான்மை பலத்தைக் கொண்டிருக்கும் அரசியற் கட்சிகளை வென்று நிற்கிறார். இந்தத் தனியாளைத் தவிர்க்க முடியாமல்தான் பொதுஜன பெரமுனவும் ராஜபக்ஸவினரும் உள்ளனர். இந்தத் தனியாளுக்கு  முன்னேதான் இப்பொழுது இனப்பிரச்சினைக்கான தீர்வும் முன்நிற்கிறது. 

இது நமக்கு விருப்பமாக இருக்கலாம். இல்லாமல் போகலாம். ஆனால் இதுதான் அரசியல் யதார்த்தம். இந்த அரசியல் யதார்த்தில்தான் நாம் வேலை செய்ய வேண்டும். 

இதை விடுத்து, ரணில் நல்லவரா? கெட்டவரா? அவர் நம்பிக்கையானவரா? இல்லையா? அவர் சொல்வது நடக்குமா? இல்லையா? என்று குழம்பிக் கொண்டிருக்க முடியாது. இதைச் சரிபார்த்துக் கொள்வதற்கு பூவா தலையா என்று நாணயத்தைச் சுற்றிப் போட்டுப் பார்க்க முடியாது. 

நம் முன்னே உள்ள களத்தை ஆட வேண்டும். அதற்குத் தயாராக வேண்டும். 

கடந்த ஐந்து மாதத்தில் ரணில் தன்னை முன்னிலைக்குக் கொண்டு வந்துள்ளார். கடந்த ஆண்டு அவர் மக்களால் நிராகரிக்கப்பட்ட –தோற்கடிக்கப்பட்ட ஒருவர். பின்னர் ஒரு சாதாரண பாராளுமன்ற உறுப்பினர். அதிலிருந்து அதிரடியாக பிரதமரானார். அதிலிருந்து ஜனாதிபதியாகினார். இதெல்லாம் எப்படி நடந்தது? 

சூழலைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் திறனால், அதற்கான துணிவினால்தான் இவையெல்லாம் சாத்தியமாகின. இதனால்தான் அவரை அரசியல் ரீதியாக எதிர்ப்போரும் விமர்சிப்போரும் பாராட்டுகிறார்கள். இதெல்லாம் யாரும் நினைப்பதைப் போல இலகுவானதல்ல. மக்களின் பேராதரவைப் பெற்றவர்கள், பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவ அடிப்படையில் பலமான தரப்பாக இருப்பவர்கள் எல்லாம் பின்னிற்க, ரணில் எப்படி முன்னுக்கு வந்தார்? 

இதையெல்லாம் நாம் புரிந்து கொள்ள வேண்டும். 

ஆகவே இன்றுள்ள அரசியல் யதார்த்தத்தின்படி நம்முன்னுள்ள சவால்களை ஏற்போம். பேச்சுகள் வெற்றியளிக்குமா இல்லையா என்பதை இப்பொழுதே தீர்மானிக்க முடியாது.. 

பேச்சுக்கு ஜனாதிபதி அழைக்கும்போது அவர் ஏதோ ஒரு திட்டத்தை மனதிற் கொண்டுதான் அழைத்திருப்பார். அந்தத் திட்டம் என்ன என்பதை அறிவது ஒரு பக்கமாக இருக்கட்டும். நாம் என்ன திட்டத்தை முன்வைப்பது? எப்படி இந்தப் பேச்சுகளை எதிர்கொள்வது? நடத்துவது என்று சிந்திப்போம். அது உடனடியாக நிகழ வேண்டும். செல்வம் அடைக்கலநாதனும் முருகேசு சந்திரகுமாரும் பிள்ளையானும் டக்ளஸ் தேவானந்தாவும் மெய்யாகவே தீர்வை நோக்கிச் சிந்திப்போரும் சொல்லியிருப்பதைப்போல இது இன்னொரு வாய்ப்பான சூழல். இதைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வாய்ப்புகள் அதிர்ஷ்ட தேவதைகள். அவை எப்போதும் மலிவாகக் கிடைப்பதில்லை. அபூர்வமானவை.