போருக்கு பிந்திய அரசியல் என்றால் என்ன?

போருக்கு பிந்திய அரசியல் என்றால் என்ன?

கருணாகரன் ~
 
“போருக்குப் பிந்திய அரசியல் என்று சொல்கிறீர்களே! அது என்ன? அதை எப்படி முன்னெடுப்பது?” என்று என்னுடைய கடந்த வாரங்களில் வெளிவந்த கட்டுரைகளைப் படித்தவர்கள் கேட்கின்றனர். இப்படிக் கேள்வி எழுந்திருப்பதே மகிழ்ச்சிக்குரியது. அதாவது சிலராவது சிந்திக்கத் தயாராக உள்ளனர் என்ற மகிழ்ச்சி.

அது என்ன என்று பார்க்க முன், வரலாற்றுப் போக்கில் நிகழ்ந்த சில முன்னுதாரணங்களைப் பார்க்க வேண்டும். அரசியற் சரிகளும் தவறுகளும் வரலாற்றைத் தீர்மானிப்பதில் முக்கியமான பங்கை அளிப்பதால் அதைக்குறித்து பார்க்க வேண்டியது அவசியமாகிறது.

1970 இன் அரசியல் தவறு உண்டாக்கிய விளைவு:
1970 களில் அன்றைய தமிழரசுக்கட்சி – தமிழர் விடுதலைக்கூட்டணி காலப் பொருத்தமற்ற அரசியலையே முன்னெடுத்தது.  அன்றைய நிலவரத்தைச் சரியாகப் புரிந்து கொண்டு செயற்பட விளையாத காரணத்தினால் தமிழ் மக்களும் அரசியல் நெருக்கடிக்குள்ளாகினர். அந்தக் கட்சியினரும் பின்னர் பெரும் விலையைக் கொடுக்க வேண்டியிருந்தது.

அன்று நிலவிய பலவீனம், செயலின்மை, ஏமாற்று நாடகம் போன்றவற்றை அம்பலப்படுத்திய இளைஞர்கள் “சிந்திக்கத் தொடங்கி விட்டார்கள்”, “திருவிழா” போன்ற நாடகங்களை மக்கள் மத்தியில் நடத்தினர். இது ஏறக்குறைய இன்றைய நிலைக்கு ஒப்பானது.
எப்படியென்றால், அன்றைய சூழலுக்குப் பொருத்தமில்லாத அரசியலை அன்றைய தமிழ்த் தலைமைகள் முன்னெடுத்தபடியால் அதை அன்றைய இளைஞர்கள் எதிர்த்தனர். விமர்சித்தனர். புதிய வழியைக் காண முற்பட்டனர். அதன் விளைவே அந்த நாடகங்கள். அன்றைய இளைஞர் இயக்கங்கள், அமைப்புகள், செயற்பாடுகள், வெளியீடுகள்…எல்லாம்.
தமிழ்த் தரப்பு மட்டும் அன்று தவறான அரசியலை முன்னெடுக்கவில்லை.

சிங்களத் தரப்பும் தவறான – காலப் பொருத்தமற்ற அரசியலையே முன்னெடுத்தது. அதன் விளைவே அடுத்து வந்த காலம் யுத்தத்தில் அழிய வேண்டியதாகியது. அதாவது, 1960, 1970 களின் அரசியலை இலங்கைச் சமூகங்களும் அவற்றின் அரசியற் தலைமைகளும் சரியாக முன்னெடுத்திருந்தால் நாட்டில் போரே உருவாகியிருக்காது. அழிவு ஏற்பட்டிருக்காது. இன்றைய நெருக்கடிகள் எதுவும் இருந்திருக்காது.
போருக்குப் பிந்திய சூழல்
இதிலிருந்து பாடங்களைப் படித்துக் கொள்ளாமலே இலங்கைச் சமூகங்கள் உள்ளன. இப்பொழுது 1970 களில் இருந்த நிலையே இலங்கைச் சமூகங்களுக்கிடையில் உள்ளது. அதையும் விட மோசமான நிலையில் உள்ளது என்றே சொல்ல வேண்டும். 70 களில் தமிழ் – முஸ்லிம் உறவு நல்ல நிலையில் இருந்தது. இப்போது அது கெட்டுப்போயிருக்கிறது. அத்தனை  சமூகங்களும் இன்னும் தவறான வகையில் போருக்கு முந்திய – போர்க்கால அரசியலைக் கலந்து செய்து கொண்டிருக்கின்றன.

இது காலப் பொருத்தமற்றது.
என்பதால்தான் போர் முடிந்த பின்னும் அரசியல் தீர்வை எட்ட முடியவில்லை. அமைதியையும் சமாதானத்தையும் உருவாக்க முடியவில்லை. நாட்டைக் கட்டியெழுப்ப முடியவில்லை. அரசியல் உறுதிப்பாட்டை உருவாக்க முடியவில்லை. பாதிக்கப்பட்ட மக்களை மீள் நிலைப்படுத்த முடியவில்லை. சமூகங்களை ஒருங்கிணைக்க முடியவில்லை. ஒவ்வொரு சமூகமும் தம்மை ஸ்திரப்படுத்திக் கொள்ளவும் முடியவில்லை. பொருளாதார வளர்ச்சியைக் காண முடியவில்லை. வெளியாரின் அதிகரித்த தலையீடுகளைத் தடுக்க முடியவில்லை. நாட்டின் சுயாதீனத்தையும் சமூகங்களின் சுயாதீனத்தையும் தனியாட்களின் சுயாதீனத்தையும் பேண முடியவில்லை.
இது தொடருமானால் இலங்கை இப்போதுள்ளதையும் விடப் பெரும் பாதிப்பையும் பேரழிவையுமே சந்திக்க வேண்டியிருக்கும். ஏற்கனவே விடப்பட்ட அரசியற் தவறுகளே நாம் சந்தித்த, சந்தித்துக் கொண்டிருக்கின்ற பாதக விளைவுகள். அதைப்போல இப்பொழுதும் இனியும் அரசியற் தவறுகளைச் செய்வோமாக இருந்தால், அதற்கான விளைவுகள் – தண்டனை மிகப் பெரியதாகவே இருக்கும்.
இதனால்தான் போருக்குப் பிந்திய அரசியலைப் பற்றி நாம் பேசவும் அதைக்குறித்துச் சிந்திக்கவும் வேண்டும் என்கிறோம். கட்டாயமாக அதை முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்த வேண்டியுள்ளது.

சரி, போருக்குப் பிந்திய அரசியல் என்றால் என்ன?
1.      போர் உண்டாக்கிய இழப்புகள், அழிவுகள், பின்னடைவுகள், பிளவுகள், உள நெருக்கடிகள், நீதி மறுப்புகள், நம்பிக்கையின்மைகள், அலைச்சல்கள் போன்றவற்றிலிருந்து மீள்வதாகும். இதைச் சற்று விரிவாகப் பார்க்க வேண்டும்.
 
போரினால் நாடு முற்றாகவே பாதிக்கப்பட்டது. அழிவிற்குள்ளாகியது. இதை இன்னும் நேரடியாகச் சொன்னால், போரானது மக்களை பாதிப்புக்குள்ளாக்கியது. பொருளாதாரத்தை முடக்கியது. இயற்கை வளத்தை அழித்தது. நாட்டின் சிறப்பு வளங்களில் ஒன்றாகிய இளைய தலைமுறையில் பாதியை யுத்தத்தில் முடக்கியது. யுத்தப்பசி அவர்களைப் பலியெடுத்தது. இந்த அழிவு பன்முகமுடையது. உடல், உளப் பாதிப்பு. தொழில் பாதிப்பு – இழப்பு. உடமைகள் பாதிப்பு – அழிவு. உயிரிழப்பு – உறவுகள் இழப்பு…. இப்படிப் பலவகையில்.
 
ஆகவே இதை மீள் நிரப்புச் செய்ய வேண்டும். அல்லது மீள்நிலைப்படுத்த வேண்டும். சரி செய்ய வேண்டும். மீள்நிலைப்படுத்துவது மட்டுமல்ல, இயல்பான வளர்ச்சியை எட்டியிருக்க வேண்டிய நிலை வரை முன்னேறியிருக்க வேண்டும்.
 
இதற்கு மக்களிடம் உரிய விவரங்கள் திரட்டப்பட வேண்டும். நிகழ்ந்தது அரசு – அதிகாரிகள் மட்டத்திலான திட்டத்தயாரிப்புகளும் நடைமுறைப்படுத்தல்களுமே. உதாரணமாக மீள் குடியேற்றம். அதை அன்றிருந்த மீள்குடியேற்ற அமைச்சும் பகுதி அளவில் புனர்வாழ்வு அமைச்சும் மேற்கொண்டன. இரண்டும் போரின் விளைவு உண்டாக்கிய அமைச்சுகளாகும். அதாவது போர் உண்டாக்கிய அழிவுகளையும் இழப்புகளையும் சீராக்கம் செய்வதற்கான அமைச்சுகள்.
 
ஆனால் அந்த இரண்டு அமைச்சுகளும் போர்ப்பாதிப்புகள் செறிவாக நிகழ்ந்த வடக்குக் கிழக்கில் பிராந்தியப் பணியகங்களைக் கூடக் கொண்டிருக்கவில்லை. மட்டுமல்ல, மீள்நிலைப்படுதல் என்றால் என்ன என்பதைச் சரியாகப் புரிந்து கொண்டு செயற்படவில்லை. மீள் நிலைப்படுதல் வேறு. மீள் நிலைப்படுத்தல் என்பது வேறு. மீள்நிலைப்படுதல் என்பது மக்கள் தாமாக, இயல்பான  அடிப்படையில் மீள்நிலைப்படுதலாகும். அதற்கு ஏற்ற வகையில் அரசும் அரசாங்கத்துடன் இணைந்து அரசு சாராத தரப்புகளும் மக்களுக்கான ஆதாரத்தையும் ஊக்கத்தையும் வழங்கியிருக்க வேண்டும். அந்த ஆதாரத்தை ஊட்டமாகக் கொண்டு மக்கள் மீள்நிலையடைந்திருப்பர்.
 
மீள்நிலைப்படுத்தல் என்பது மேல் மட்டத்திலிருந்து தீர்மானித்து நடைமுறைப்படுத்தும் ஒரு அரசியல் – நிர்வாக நடவடிக்கை. மக்களுடைய இயலும் தன்மை, அவர்களுடைய பிரச்சினைகள், சூழலின் தன்மை போன்றவற்றையெல்லாம் தமது மேற்கண்கொண்டு பார்த்து, விளங்கி  நடைமுறைப்படுத்தும் அதிகாரத்துவ நிலையாகும். இதில் தோல்வியே ஏற்பட்டுள்ளது.
 
என்பதால்தான் மீள்குடியேறிய மக்கள் நுண்கடன் பொறி உள்பட பாரிய பொருளாதார நெருக்கடிக்குள்ளாகினர். பலர் தற்கொலை செய்யும் நிலை ஏற்பட்டது. இன்னும் மீள் குடியேறிய மக்கள் மிகச் சாதாரண வாழ்க்கைக்கே திரும்பமுடியவில்லை. உடல் உறுப்புகளை இழந்தோர், காணாமல் போனார், உள நெருக்கடிக்குள்ளானோர் பிரச்சினை எல்லாம் அப்படியே கொதி நிலையில் தீர்க்கப்படாமல் நீண்டு கொண்டிருக்கின்றன. மீள்குடியேற்றக் கிராமங்கள் – பிரதேசங்கள் சீரான வளர்ச்சியைப் பெறவில்லை. இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை.
 
மீள் குடியேற்றம், மீள் நிலை என்பது என்ன? இயல்பு நிலையாகுதல் அல்லவா!
 
யுத்தம் முடிந்து 14 ஆண்டுகளாகிறது. இந்தப் பதின்னான்கு ஆண்டுகளில் மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பி விட்டனர் என்று அரசாங்கமோ, அதிகாரிகளோ, எந்த அரசியற் தலைவர்களோ, அரசியற் கட்சிகளோ பதில் அளிக்கத் தயாரா?
 
முடியாது.
 
ஏனென்றால், மக்களுடைய தேவைகள், பிரச்சினைகள் என்ன என்று இவை அறியவில்லை. அதை அறிந்திருக்க வேண்டும். பாதிப்புகள் மக்களிடமிருந்து மதிப்பிடப்பட்டிருக்க வேண்டும். அதற்குரிய தீர்வுகள் என்ன என்று அவர்களுடன் இணைந்து கண்டறியப்பட்டிருக்க வேண்டும். இதற்கான பொறிமுறை, வழிமுறை, அணுகுமுறை, செயன்முறைகளை உருவாக்குவது எனத் தொடர் செயற்பாடு அவசியம்.
 
இதைக்குறித்து இந்தக் கட்டுரையாளர் உள்படச் சிலர் தொடர்ச்சியாக எழுதியும் பொது அரங்கில் பேசியும் வந்தனர். இருந்தும் அவை கவனத்திற் கொள்ளப்படவில்லை. விளைவு நெருக்கடி அப்படியே உள்ளது. மேற்கொள்ளப்பட்ட பல திட்டங்கள் தோல்விகண்டுள்ளன. மக்களின் வாழ்க்கை பாதிப்படைந்த நிலையிலேயே உள்ளது.
 
இதற்குத் தீர்வு?
 
இதை முன்னெடுத்துச் செல்லக்கூடிய அணிகளையும் அரசியற் சக்திகளையும் கண்டு, அவற்றை வலுப்படுத்துவதாகும். கூடவே அவற்றை ஒருங்கிணைப்பது. அல்லது பொருத்தமான புதிய சக்திகளை உருவாக்குவது.
 
ஏற்கனவே உள்ள அரசியற் சக்திகள் புதிய நிலைமைக்கு ஏற்றவாறு தம்மைத் மாற்றித் தகவமைத்துக் கொள்ளவில்லை என்றால் பதிலாகப் புதிய சக்திகளை உருவாக்குவதைப்பற்றிச் சிந்திக்க வேண்டும்.
 
இது மிகமிகக் கடினமான ஒரு அக -புறப் பிரச்சினைதான். ஆனாலும் இதைச் செய்வது அன்றைய நிலையில் அவசியமானது என்பதால் எப்படியாவது இதை நிறைவேற்றியே தீர வேண்டும்.
 
இதன் மூலம் முதலாவது கட்டம் நிறைவேற்றப்படும்.
 
2.       போருக்கு முந்திய அரசியல் அனுபவங்களையும் போர்க்கால அரசியல் அனுபவத்தையும் கற்றுக்கொண்ட பாடங்களின் அடிப்படையில் உளத்தில் கொண்டு போருக்குப் பிந்திய நிகழ்காலத்தை – அரசியல் வழிமுறைகளை மதிப்பீடு செய்ய வேண்டும்.
 
இதில் கிடைக்கும் அனுபவ அறிவு, புதிய சிந்தனை, உலகளாவிய பட்டறிவு போன்றவற்றை இணைத்து நமக்குப் பொருத்தமான வழிமுறைகளை உருவாக்க வேண்டும். அதன் மூலமாகத் தீர்வுகளைக் கண்டறிவது. இலக்கை எட்டுவது.
 
எட்டப்பட வேண்டிய இலக்கு, அதற்குரிய முறைமை, அதற்கான தந்திரோபாயம், அதற்கான செயற்பாட்டு வடிவம், அதை முன்னெடுக்கும் தரப்புகள், அவற்றை வலுவாக்கம் செய்தல் என அனைத்தும் வகுக்கப்பட வேண்டும்.
 
இதுவும் நமது சிதறிய அரசியல் ஒழுங்குச் சூழலில் கடினமான – சவாலான ஒரு காரியமே. ஆனாலும் செய்தே ஆக வேண்டும். நோய் தீர வேண்டும் என்றால் மருந்தை உட்கொண்டே ஆக வேண்டும். மருத்துவம் செய்தே ஆக வேண்டும்.
 
முக்கியமாக இலங்கை ஒரு பல்லின நாடு என்ற வகையில் அரசியலமைப்பை வலுவாக்கம் செய்ய வேண்டும். பல்லின நாடு என்ற வகையில் பன்மைத்துவத்துக்குரிய அடிப்படைகள் பேணப்படுவதை உறுதி செய்ய வேண்டும். அப்படியில்லாமல் சிங்கள பௌத்த நாடு அல்லது சிங்களத்துக்கும் பௌத்தத்துக்கும் முன்னுரிமை என்றால் – சிங்களத்துக்கும் பௌத்தத்துக்கும் மட்டுமல்ல, நாடே பின்னுக்குத் தள்ளப்பட்டு விடும்.
 
அதுதான் நடந்தது. இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. என்பதால் உடனடியாகவே இலங்கை ஒரு பல்லின நாடு. பன்மைப்பண்பாட்டைக் கொண்ட தேசம் என்ற வகையில் அனைவருக்குமான ஜனநாயக – சமத்துவத்தை அல்லது சமத்துவ ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டும். அதை உறுதிப்படுத்த வேண்டும். இதற்கான புரிதலை ஏற்படுத்த வேண்டும். இதற்குரிய வகையில் அரசியலமைப்புத்திருத்தம் செய்யப்பட வேண்டும். அந்தத் திருத்தத்தை இதையே சர்வதேச சமூகமும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறது.
 
அடுத்தது, நீதி வழங்கப்படுதலாகும்.
 
போர்ப்பாதிப்புகள், யுத்தத்தின்போது நிகழ்ந்தவை பற்றிய நீதியான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டாலே நீதியை வழங்க முடியும். நீதி வழங்குதல் என்பது நீதியாக நடப்பதில் உருவாகுவது. இதைச் செய்தால், இதற்குத் துணிவு கொண்டால் பல பிரச்சினைகள் தீர்ந்து விடும். ஆனால், இது மிகச் சவாலான விடயம். நீதி என்பது எல்லோருக்கும் பொதுவானது என்று கூறப்பட்டாலும் நடைமுறையில் ஆளாளுக்குத் தரப்புக்குத் தரப்பு வேறு விதமான கண்ணோட்டத்தையும் புரிதலையும் கொண்டதாகும். திருப்தி, திருப்தியின்மை, நிறைவு – நிறைவின்மை இதனால்தான் ஏற்படுவது. ஆகவே இங்கே அரசு வழங்கும் நீதியானது அல்லது நீதியின் அளவானது பாதிக்கப்பட்டோருக்குத் திருப்தியளிக்கக் கூடியதா, அவர்களுக்குப் போதுமானதா? என்று கவனிக்கப்பட வேண்டும். இதற்குரிய வழியை – இணக்கத்தை தமிழ்த்தரப்பினரும் கொள்ள வேண்டும். அதாவது பிரச்சினையை வளர்க்கப்போகிறோமா? தீர்க்கப்போகிறோமா என்ற அடிப்படையில் நோக்கிச் செயற்பட வேண்டும்.
 
அடுத்தது, தீர்வு யோசனைகள், தீர்வுக்கான கோரிக்கைகள் பற்றியது. கற்றுக் கொண்ட பாடங்களின் அடிப்படையிலும் உள்நாட்டு நிலமையிலும் பிராந்திய, சர்வதேசச் சூழலிலும்  எத்தகைய தீர்வு சாத்தியம் என்ற புரிதலைக் கொள்ளுதல். நமது விருப்பங்களும் தேவைகளும் பலவாக இருக்கும். அவற்றின் விரிவெல்லையும் அதிகமாக இருக்கும். ஆனால், அவற்றை எட்டுவதெப்படி? எவை சாத்தியம்? என்ற புரிதல் வேண்டும். இல்லையென்றால், இலக்கை எட்டவே முடியாது. இதில் அரசாங்கமும் சிங்களக் கட்சிகளும் தீர்வுக்கான அவசியம், அதை எட்டுவதற்கான வழிமுறைகள், அதில் வழங்கப்பட வேண்டிய நீதி என்பவற்றைத் தெளிவாகச் சிந்திப்பது கட்டாயமாகும். இது வரலாற்றின் நிபந்தனை. இல்லையெனில் இன்னும் நாடு பொருளாதார ரீதியில் பின்னடையும். அந்நிய சக்திகளின் ஆதிக்கத்தில் – பிடியில் சிக்கும்.
 
இதைத் தவிர்த்து, இலங்கையர்களாக நாம் மகிழ்ந்திருக்கப்போகிறோமா? அல்லது முரண்பாடுகளை வளர்த்து, உள் நாட்டில் நீதியை மறுத்து, பிறருக்கு அடிமையாக இருக்கப்போகிறோமா? என்று சிந்திக்க வேண்டும். சகோதரர்களுக்கு நீதியை மறுத்து விட்டு அந்நியருக்கு அடிமையாக இருப்பது எவ்வளவு முட்டாள்தனமாகும்.
 
இன்றைய சூழலில் இதைக்குறித்த தெளிவான உரையாடல்கள் அவசியம். அந்த உரையாடல்கள் பரஸ்பரத்தன்மையுடையனவாக இருக்க வேண்டுமே தவிர, பட்டிமன்ற வாதங்களாக அமையக் கூடாது. பாராளுமன்ற உரைகள் கூட குற்றம் சாட்டும் உரைகளாகவோ சவால் விடுக்கும் உரைகளாகவோ அமையக் கூடாது. அவை விழிப்புணர்வை ஊட்டக்கூடிய, பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காணும் வழிகளைக் கொண்டவையாக, நியாயங்களை உரிய முறையில் எடுத்துரைப்பவையாக, அறிவுபூர்வமானதாக இருக்க வேண்டும். முக்கியமாக அறிவுபூர்வமானதாக என்பதைக் கவனிக்க வேண்டும். ஏனென்றால் அறிவு என்பது சர்வதேசத் தன்மை வாய்ந்த ஒன்றாகும். அது எங்கே நின்று நோக்கினும் ஒரே பெறுமதியைக் கொடுப்பது.
 
இலங்கையில் இது நிகழ வேண்டும் என்ற வகையில்தான் யுத்தம் முடிந்த கையோடு 2010 தொடக்கம் இன்று வரை சர்வதேச சமூகமானது, ஊடகவியலாளர்கள், புத்திஜீவிகள், அரசியற் தரப்பினர், பெண்கள் அமைப்புகளைச் சேர்ந்தோர், சமூகச் செயற்பாட்டாளர்கள் போன்றோருக்கு இதைக்குறித்துப் பகிரங்கமாக அறிவுரைத்தது. முரண்பாடுகள் தீர்க்கப்படாமையினால் போர் உருவாகியது. போர் நிறுத்தப்படாமையினால் பேரழிவு நிகழ்ந்தது. போர்க்குற்றங்களும் உருவாகின. துயரமும் அலைவும் உண்டாகியது என்றெல்லாம் விளக்கமளிக்கப்பட்டது.
 
ஆனால், எல்லாவற்றிலும் பங்குபற்றியோர் உண்டு களித்து கொண்டாடியதேயன்றி, உரைத்ததை எடுத்ததாக இல்லை. இதுதான் வரலாற்றின் துயரமும் சர்வதேச சமூகத்தின் ஏமாற்றமுமாகும். அரசியல்வாதிகளையும் விட பிற தரப்பினர் (ஊடகவியலாளர்கள், புத்திஜீவிகள், பெண்கள் அமைப்புகளைச் சேர்ந்தோர், சமூகச் செயற்பாட்டாளர்கள்) மோசமாகச் செயற்படுகின்றனர் என ஒரு தடவை வெளிநாட்டுப் பிரதிநிதியொருவர் கவலையோடு சொன்னார்.
 
ஆகவே எதற்கும் இந்த இரண்டைப்பற்றியும் ஒரு தெளிவான வரைபை முதலில் உருவாக்க வேண்டும். இதற்கு கள யதார்த்தத்தைத் தெரிந்தவர்கள், சிந்தனையாளர்கள், அரசியல் அறிஞர்கள், சமூகச் செயற்பாட்டியக்கத்தினர், பெண் ஆளுமைகள், இளைய தலைமுறையைச் சேர்ந்த பிரதிநிதிகள், புலம்பெயர் தேசத்தில் மாற்று அரசியல் பிரக்ஞையோடு உள்ளவர்கள் என பல்வேறு ஆளுமைத் தரப்புகளை ஒரு கட்டமைப்பாக உருவாக்கம் கொள்ளுவது அவசியம். அப்படி இருக்கும்போதுதான் ஒரு விரிவான அறிதலையும் திட்டத்தையும் உருவாக்க முடியும்.