~~~தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் —-
23.11.2022 அன்று மாலை நீண்ட நாட்களுக்குப் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் (தமிழரசுக் கட்சியின்) பாராளுமன்றக் குழு கொழும்பில் இரா.சம்பந்தன் இல்லத்தில் அவரது தலைமையில் கூடி தேசிய இனப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க டிசம்பர் 11ஆம் தேதிக்குப் பின்னர் கூட்டவுள்ள கூட்டத்தில் வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்திற்குச் சமஸ்டி அடிப்படையிலான தீர்வை வலியுறுத்த வேண்டுமென்று தீர்மானித்தது.
இதனைத் தொடர்ந்து 25.11.2022 மாலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் இல்லத்தில் தமிழ்க் கட்சிகளின் பூர்வாங்க சந்திப்பாக நடைபெற்ற கூட்டத்தில் கட்சித் தலைவர்கள் என்று பார்க்கும்போது தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்கினேஸ்வரன் பா.உ. (தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் கூட) -ஈ.பி.ஆர்.எல்.எப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் (ஈ பி ஆர் எல் எப் தானே தனது பெயரைத் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியென்று கடந்த 2020 தேர்தலின் போது மாற்றிக் கொண்டது மனம்கொள்ளத்தக்கது)- ‘புளொட்’ தலைவர் த.சித்தார்த்தன் பா.உ., தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராசா, ‘ரெலோ’ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் பா.உ. ஆகியோர் கலந்துகொண்டுள்ளதுடன் இவர்களுடன் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், கோவிந்தன் கருணாகரம் , வினோ நோகாராதலிங்கம் , சி.சிறீதரன் ஆகியோரும் பங்குபற்றியுள்ளனர்.
இக்கூட்டத்தில், உள்ளக சுயநிர்ணய அடிப்படையில் தமிழ் மக்கள் சரித்திர ரீதியாக வாழ்ந்து வந்த வட, கிழக்குப் பிரதேசத்தில் சமஸ்டி அடிப்படையில் அதியுச்ச அதிகாரப் பகிர்வுடனான புது அரசமைப்பு உருவாக்கப்பட வேண்டுமென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதுடன், அரசாங்கத்துடன் பேசுவதற்கு முன்னர் அனைத்துத் தமிழ்த் தேசியக் கட்சிகளுடனும் கலந்துரையாடி இறுதி முடிவுகளை எடுப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனவே மேற்படி தீர்மானம் முடிந்த முடிவல்ல. என்பதால் இத் தீர்மானம் குறித்து எந்தக் கருத்தையும் இப் பத்தி இப்போது முன்வைக்கவில்லை.
கடந்த எழுபத்தைந்து வருட காலத்தில் கட்சி அரசியல் போட்டா போட்டிகளும்- இயக்க மோதல்களும்- சகோதரப் படுகொலைகளும் – ஏகப்பிரதிநிதித்துவ மனப் போக்கும்- கூட்டுச்செயற்பாடுகள் இல்லாமையுமே தமிழ்த் தேசிய இனத்தின் உரிமைப் போராட்டத்தைச் சீரழித்து இறுதியில் தமிழ் மக்களுக்குப் பேரழிவை ஏற்படுத்தின என்ற வரலாற்றையும்- அனுபவப் பாடத்தினையும் மறந்துவிட்டு மீண்டும் மீண்டும் குண்டுச் சட்டிக்குள் குதிரையோடும் வேலையை 25.11.2022 இல் கூடிய தமிழ்த் தேசியக் கட்சிகள் இனியும் செய்ய முயலக்கூடாது.
‘தமிழ்த் தேசியக் கட்சிகள்’ என்று தங்களுக்குத் தாங்களே குறி சுட்டுக் கொண்டு (தமிழ் ஊடகங்களுக்கும் இக்குறி சுடுதலில் பங்குண்டு) குறுகிய வட்டத்திற்குள் இயங்கும் இக்கட்சிகள் இவ்வட்டத்தை விட்டு வெளியே வரவேண்டிய தருணம் இது.
இக் குறுகிய வட்டத்திற்கு வெளியே 09.04.2021 இலிருந்து ‘அதிகாரப் பகிர்வுக்கான இயக்கத்தில்’ (MOVEMENT FOR DEVOLUTION OF POWER) தம்மை இணைத்துக்கொண்டு செயற்படுகின்ற தமிழர் விடுதலைக் கூட்டணி – அகில இலங்கை தமிழர் மகாசபை-தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி-தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் சமத்துவக் கட்சி ஆகிய (தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட) தமிழ்க் கட்சிகளும் அதிகாரப் பகிர்வுக்கான இயக்கத்தில் இதுவரை தன்னை இணைத்துக் கொள்ளாது விட்டாலும் அதிகாரப் பகிர்வுக்கான இயக்கத்தை ஆதரிக்கும் அதே வேளை அரசாங்கத்தின் பங்காளியாகவும் விளங்கும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியும் உள்ளன. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி (அகில இலங்கைத் தமிழ்க்காங்கிரஸ் கட்சி) யும் இப்போது இவ்வட்டத்திற்கு வெளியேதான் விடப்பட்டுள்ளது.
இவற்றைவிட, தேர்தல்கள் திணைக்களத்தின் அங்கீகாரம் இன்னும் கிடைக்கப்பெறாமல் தமிழ் அரசியல் பொது வெளியில் இயங்கிவரும் தமிழ்த் தேசியக் கட்சி-தமிழர் சுயாட்சிக்கழகம்-ஜனநாயகப் போராளிகள் கட்சி-தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம்-தமிழர் ஐக்கிய சுதந்திரமுன்னணி-கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு – புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள்கட்சி- ஈரோஸ் ஜனநாயக முன்னணி (தற்போது தேர்தல் திணைக்களத்தினால்அங்கீகரிக்கப்பட்டுவிட்டது)- தாயக ஜனநாயகக் கட்சி போன்ற தமிழ்க் கட்சிகளும்/அமைப்புகளும் உள்ளன.
இன்றைய தமிழ்ச் சூழலில் வடக்குக் கிழக்குத் தமிழர்களின் அரசியல் ஐக்கியம் என்பது இக்கட்சிகள்/அமைப்புகள் அனைத்தையும் உள்ளடக்கிய அல்லது பிரதிநிதித்துவப்படுத்தும் ஓர் ‘ஐக்கியப்பட்ட அரசியல் பொறிமுறை’ யினூடாகவே (வியூகத்தினூடாகவே) சாத்தியப்படுவது மட்டுமல்ல அதுவே பலம் உள்ளதாகவும் அமையும்.
இன்றைய களநிலையில் இவ்வாறானதோர் ஐக்கியப்பட்ட அரசியல் பொறிமுறையொன்றினை ஏற்படுத்துவதற்கும் அப்பொறிமுறைக்குத் (வியூகத்திற்குத்) தலைமையேற்பதற்கும் இரா.சம்பந்தன் அவர்கள் மூப்பின் அடிப்படையில் தன் வாழ்நாளின் விளிம்பில் உள்ள இந்தக் கட்டத்திலாவது தற்றுணிவுடனும் அர்ப்பணிப்புடனும் களமிறங்க வேண்டுமென்று இப் பத்தி மீண்டுமொருமுறை வலியுறுத்துகிறது. இது தனி நபர் ஒருவரின் தேவையோ அல்லது கட்சி ஒன்றின் தேவையோ அல்ல. இது ஒட்டுமொத்தத் தமிழ் மக்களினதும் தேவையாகும்.
‘ஈழநாடு’ (30.11.2022) பத்திரிகையின் ஆசிரிய தலையங்கம் என் கவனத்தை ஈர்த்தது. அண்மைக்காலமாக, நான் ‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடரான ‘வாக்குமூலம்’ பத்தியில் சுட்டிக்காட்டும்-வலியுறுத்தும் விடயங்களில் பெரும்பாலானவை ஈழநாடு பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கங்களுடன் பெரும்பாலும் ஒத்துப் போகின்றன என்பதையும் அவதானித்து வந்துள்ளேன்.
30.11.2022 ‘ஈழநாடு’ ஆசிரிய தலையங்கத்தில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூட்டவுள்ள உத்தேச பேச்சுவார்த்தைக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெறும் கையுடன் செல்லாது, உடனடி-இடைக்கால-நீண்டகால அடிப்படையிலான முன்மொழிவு ஆவணமொன்றை அனைத்துக் கட்சிகளுடன் இணைந்து தயாரிக்க வேண்டுமெனக் கூறப்பட்டுள்ளது.
இப்பத்தி, இடைக்கால-நீண்டகால அடிப்படையிலான முன்மொழிவு ஆவணம் பற்றிப் பிரஸ்தாபிப்பதை இப்போது தவிர்த்துக் கொண்டு உடனடி முன்மொழிவு ஆவணம் பற்றியே பேசமுனைகிறது.
13 ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தை முழுமையாக அமுல் செய்ய வேண்டுமென்றும் மாகாண சபைத் தேர்தல் விரைவில் நடத்தப்பட வேண்டுமென்றும் தமிழர் தரப்பு ‘மொட்டை’யாகக் கேட்பதால் எதுவும் ஆகப்போவதில்லை.
13 ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தின் கீழ் பகிரப்பட்ட அதிகாரங்கள் சில இதுவரை பிரயோகிக்கப்படவில்லை. சில அதிகாரங்கள் மத்திய அரசினால் மீளக் கையகப்படுத்தப்பட்டுள்ளன அல்லது ஐதாக்கப்பட்டுள்ளன. இவை சீர்செய்யப்படாமல் 13 ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தை முழுமையாக அமுல் செய்ய முடியாது. எனவே இவற்றைச் சீர்செய்யாமல் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதால் அதிகாரப் பகிர்வைப் பொறுத்தவரை தமிழ் மக்களுக்கு எந்த மாற்றமும் ஏற்படமாட்டாது. மாகாண சபைத் தேர்தல் விரைவில் நடாத்தப்படவேண்டும் என்பதில் ஜனநாயகத்தை நேசிக்கும் எவருக்கும் முரண்பட்ட கருத்து நிலவ முடியாது. ஆனால், அதற்கு முன்பு மேற்கூறப்பட்ட குறைபாடுகள் சீர் செய்யப்பட வேண்டும். இந்தச் சீர்செய்யும் வேலையைச் செய்வதற்குப் புதிய அரசியலமைப்புச் சட்டத் திருத்தங்கள் எதுவும் தேவையில்லை. ஜனாதிபதிக்குள்ள நிறைவேற்று அதிகாரத்தினாலும் அமைச்சரவைத் தீர்மானங்களாலும் பாராளுமன்றம் நிறைவேற்றக்கூடிய சாதாரண சட்டமூலங்களாலும் (மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவையில்லை) இவ் அதிகாரப் பகிர்வுச் சீரமைப்பு சாத்தியப்படக்கூடியது.
கடந்த வருடம் 09.04.2021 அன்று கொழும்பில் தமிழர் விடுதலைக் கூட்டணி, அகில இலங்கைதமிழர் மகாசபை, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி, சமத்துவக் கட்சி ஆகிய ஐந்து கட்சிகளும் கூடி உருவாக்கிய ‘அதிகாரப் பகிர்வுக்கான இயக்கம்’ பற்றியும் அவ் இயக்கம் அமைதியாகவும் ஆரவாரமில்லாமலும் இயங்கித் தயாரித்த’ அரசியலமைப்பின் 13 ஆவது அரசியல் சட்ட திருத்தத்தை முழுமையாக அமுல் செய்வதற்கான வழிகாட்டி’ (A guide for full implementation of the 13th amendment to the constitution) என்னும் ஆவணம் இவ் வருடம் மார்ச் மாத நடுப்பகுதியில் முன்னாள் ஜனாதிபதி/பிரதமரிடமும், பின்னர் முன்னாள் பிரதமர்/ இந்நாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடமும்; முக்கியமான முன்னாள் அமைச்சர்கள், வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் தமிழ் அரசியல் பிரமுகர்களிடமும் கையளிக்கப்பட்ட விடயம் குறித்தும் இப் பத்தித் தொடரில் பல தடவைகள் பதிவிட்டுள்ளேன்.
அடுத்த மாகாண சபைத் தேர்தல் நடைபெறும் காலம் வரை காத்திராமல் பதின்மூன்றாவது அரசியல் சட்டத் திருத்தத்தினை முழுமையாகவும் முறையாகவும் அர்த்தமுள்ள விதத்திலும் அரசியல் விருப்புடனும் அமுல் செய்வதற்கான கட்டம் கட்டமான நடைமுறைச் சாத்தியமான முன்மொழிவுகளையும் மாற்று ஏற்பாடுகளையும் அதற்கு அவசியமான சாதாரண சட்ட மூலவரைபுகளையும் இவ்வறிக்கை – ஆவணம் உள்ளடக்கியுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ அல்லது ஒன்றிணையும் தமிழ்த் தேசியக் கட்சிகளோ இது குறித்த புதிய ஆவணமொன்றைத் தயாரிக்க வேண்டிய அவசியமில்லை. அதிகாரப் பகிர்வு இயக்கத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்யும் ஏனைய தமிழ்க் கட்சிகளும் / அமைப்புக்களும் இணைந்து உத்தேச பேச்சு வார்த்தையின் ஆரம்பக் கட்டத்திலேயே முதற்கட்டமாக இவ் ஆவணத்தைப் பேச்சுவார்த்தை மேசையில் தமிழர் தரப்பின் ஒற்றைக் கோரிக்கையாகச் (Single Demand) சமர்ப்பித்தால் இலங்கை அரசாங்கத்தின் மீது இது நிச்சயம் ஒரு இராஜதந்திர அழுத்தத்தை ஏற்படுத்தும். அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியாக விளங்கும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியும்இதனை நிச்சயம் ஆதரிக்கும். இந்தியாவும் இதற்கு முழு அனுசரணை வழங்கும். மேற்படி அதிகாரப் பகிர்வுக்கான இயக்கத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணைந்து இயங்கும் விடயத்தில் கட்சி மற்றும் தனி நபர் அரசியல் நலன்களுக்கும் கருத்து வேறுபாடுகளுக்கும் முரண்பாடுகளுக்கும் அப்பால் நின்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் தற்றுணிவுடன் தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும்.
மேலும், வடக்கு கிழக்கு மாகாணங்கள் இலங்கைத் தமிழரின் மரபுவழித் தாயகமென்ற விடயம் இந்திய-இலங்கை சமாதான ஒப்பந்தத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
எனவே ஏற்கெனவே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள ஒரு விடயத்தைப் பேச்சு வார்த்தை மேசையில் மீண்டும் ஒரு விவகாரமாக ஆக்கத் தேவையில்லை. இத்துடன் தமிழர் தரப்பில் துண்டு துண்டாகப் பல கோரிக்கைகளை முன்வைத்து முதன்மைக் கோரிக்கையை ஐதாக்கக் கூடாது. கோரிக்கை ஒற்றைக் கோரிக்கையாக (Single Demand) இருக்க வேண்டும். அந்த ஒற்றைக் கோரிக்கை என்னவெனில் அதிகாரப் பகிர்வுக்கான இயக்கத்தின் மேற்படி ஆவணத்தில் உள்ள விடயங்களை உடனடியாக நடைமுறைப்படுத்துவதாகும். தமிழர்களைப் பொறுத்தவரை அதிகாரப் பகிர்வும் அதன் முழுமையான பிரயோகமும்தான் முக்கியமானதே தவிர, அது ஒற்றையாட்சிக்குள்ளா அல்லது சமஷ்டிக் கட்டமைப்பின் கீழா என்று கயிறிழுக்கத் தேவையில்லை. இந்திய அரசியலமைப்பில் ‘சமஸ்டி’ என்ற வார்த்தைப் பிரயோகம் இல்லாமலே மாநிலங்களுக்கு அதிகாரங்கள் பகிரப்பட்டுள்ளன.
இனப் பிரச்சனைக்கான அரசியல் தீர்வை-அதிகாரப் பகிர்வைத் தந்திரோபாயமாக அணுகும்பௌத்த-சிங்களப் பேரினவாத அரசாங்கத்தைத் தமிழர் தரப்பும் தந்திரோபாயமாகவே கையாளவேண்டும்.
‘சூழ்ச்சியைச் சூழ்ச்சியால் வெல்லுவதும் தர்மமே’ என்னும் அணுகுமுறையைத் தமிழர் தரப்பு கைக்கொள்ள வேண்டும். இதற்கு முதலில் தேவை தமிழ்க் கட்சிகள்/அமைப்புகளிடையே ஓர் இறுக்கமான ‘அரசியல் ஐக்கியம்’ ஆகும். இவ் அரசியல் பத்தித் தொடரின் சென்ற பதிவுகளில் இந்த விடயம் தெளிவாகவும் விபரமாகவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. மொத்தத்தில் ‘எறிகிறபொல்லு’ இப்போது இரா.சம்பந்தன் கையிலேயே உள்ளது. இப்போதாவது தன் அரசியல் பயணத்தினதும் வாழ்நாளினதும் இறுதிக்கட்டத்திலிருக்கும் அவர் அதனை இலக்குடன் எறியவேண்டும். இல்லையேல் காலம் அவரைச் சபிக்கும்.