— தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் —-
23.11.2022 அன்று பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு முடிவடைந்த பின்னர் உரையாற்றிய போது, வரவு செலவு திட்டத்தின் பின்னர் -டிசம்பர் 11 ஆம் திகதியின் பின்னர் இனப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கான பேச்சுகள் நடத்தப்படுமென்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளதுடன் அப்பேச்சுகளில் பாராளுமன்றத்தில் அங்கம் வைக்கும் அனைத்து அரசியல் கட்சிகளையும் பங்கேற்குமாறும் அழைத்துள்ளார்.
இலங்கை அரசுத் தலைவர்கள் இப்படி அழைப்பது இது முதல் தடவையல்ல இவ்வாறானஅழைப்புகள் – சர்வ கட்சி மாநாடுகள்- அனைத்துக் கட்சி மாநாடுகள்-பாராளுமன்றத் தெரிவுக்குழுக்கள்- அரசியலமைப்புக் குழுக்களென்று பலதரப்பட்ட அனுபவங்களைக் கண்டவர்கள் தமிழர்கள். தமிழர் தரப்பைப் பொறுத்தவரை பல தடவைகள் ‘சூடு’ கண்ட பூனை.
எனவே, இந்த அழைப்பைத் தமிழர் தரப்பு, கட்சி அரசியலை- தேர்தல் அரசியலை ஒரு புறம் ஒதுக்கிவிட்டு, ‘துரோகி’ – ‘தியாகி’ என்ற குறி சுடுதல்களை ஒருபுறம் தள்ளி வைத்துவிட்டு ஒட்டுமொத்தத் தமிழர்களின் நலன்களுக்காக இச்சந்தர்ப்பத்திலாவது இலங்கை அரசாங்கங்கள் இன்னுமொருமுறை தமிழ் மக்களை ஏமாற்ற இடமளியாது தந்திரோபாயமாகக் கையாள வேண்டும். அதற்கு முதலில் தேவை தமிழர்களிடையே ஐக்கியம். கட்சி அரசியலுக்கு அப்பால்-தேர்தல் அரசியலுக்கு அப்பால் வடக்கு கிழக்கு தமிழர்கள் அனைவரும் அரசியல் ரீதியாக ஐக்கியப்பட்டு ஓர் அரசியல் திரட்சியாக எழுச்சி பெற்றால் மட்டுமே அரசாங்கம் சிறிதளவாவது அசையும்.
‘தமிழ்த் தேசியக் கட்சிகள்’ என்று தம்மைத்தானே குறிசுட்டுக் கொண்டு (தமிழ் ஊடகங்களுக்கும் இதில் பங்குண்டு) புலிகளின் முகவர்களாகச் செயற்படும் கட்சிகள் மட்டும் ஒன்றிணைவது தமிழ் மக்களின் ‘அரசியல் ஐக்கியம்’ ஆகிவிடாது.
பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் தமிழ் அரசியல் கட்சிகள்- பாராளுமன்றத்திற்கு வெளியே செயற்படும் தேர்தல்கள் திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தமிழ் அரசியல் கட்சிகள்- தேர்தல்கள் திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்படாவிட்டாலும் தேர்தல்கள் திணைக்களத்தின் அனுமதியுடன் செயற்படுகின்ற தமிழ் அரசியல் கட்சிகள் என்று தமிழர்களின் அரசியல் பொதுவெளியில் செயற்படுகின்ற அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளும்/ அமைப்புக்களும் ஒன்றிணைந்து தமிழர் தரப்பில் ஓர் ‘ஐக்கியப்பட்ட அரசியல் பொறிமுறை’ யொன்றை உடனடியாக நிறுவ வேண்டும். இப் பொறிமுறை கட்சி மற்றும் தனி நபர் அரசியல் வேறுபாடுகளுக்கும் முரண்பாடுகளுக்கும் அப்பாற்பட்டதாகும். இத்தகைய ‘பொறிமுறை’ யொன்றிற்குப் ‘பிள்ளையார் சுழி’ இடுவது யார்? அதாவது பூனைக்கு மணி கட்டுவது யார்?
அந்தப் பொறுப்பும் தகுதியும் மூத்த அரசியல்வாதியும், அதன் சரி -பிழைகளுக்கு; பலம்-பலவீனங்களுக்கு அப்பால் ஜனநாயக ரீதியான தேர்தலில் பெரும்பான்மையான தமிழர்களால் அங்கீகரிக்கப்பட்ட தமிழ் அரசியல் கட்சியென்ற வகையில் தமிழரசுக் கட்சியின் ஆதிக்கத்திலுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்கே உண்டு.
கடந்த காலங்களில் இரா.சம்பந்தன் தனது பொறுப்புணர்ந்து நடக்கவுமில்லை. தகுதி அறிந்து செயல்படவும் இல்லை. நடந்தவற்றை மறப்போம். மூப்படைந்திருக்கும் அவர் தனது வாழ்நாளின் இறுதிக் கட்டத்திலாவது இந்த ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்குத் தன்னை அர்ப்பணித்துச் செயற்பட வேண்டும். அதில் அவர் சாவைத் தழுவினாலும் கூட அது சங்கைக்குரியதே.
தமிழர்கள் ஐக்கியப்படுவதற்கான- ஐக்கியப்பட வேண்டிய இறுதிச் சந்தர்ப்பம் இது. இரா.சம்பந்தன் தனது மூப்பையும் உடல் நிலையையும் பொருட்படுத்தாது இந்த ஐக்கியப்பட்ட அரசியல் பொறிமுறையை ஏற்படுத்தும் விடயத்தில் நேரடியாகக் களமிறங்க வேண்டும். தனது சார்பில் சுமந்திரனிடமோ அல்லது தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராசாவிடமோ இப்பொறுப்பை ஒப்படைக்கக் கூடாது.
ஏனெனில், சுமந்திரன் போன்றவர்களுக்குத் தமிழ்த் தேசிய அரசியலின் நீள- அகல-ஆழம்தெரியாது. சுமந்திரன் போன்றவர்கள் பகையை வளர்ப்பவர்களே தவிர ஐக்கியத்தின்பால் அர்ப்பணிப்புடன் செயல்படுபவர்கள் அல்லர்.
தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராசாவுக்கு நீண்ட கால அரசியல் அனுபவமும் பாரம்பரியமும் உண்டெனினும் அதற்கான ஆளுமையும் ஆற்றலும் அறிவும் அவரிடம் இல்லை. அனுபவம் வேறு; அறிவு வேறு. மூப்பு வேறு; முதிர்ச்சி வேறு.
எனவேதான், தனது மூப்பையும் அதனால் ஏற்பட்டுள்ள உடல் தளர்வையும் பொருட்படுத்தாமல் இரா.சம்பந்தன் அவர்களே இவ்விவகாரங்களை நேரடியாகக் கையாள வேண்டும்.
அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளும்/ அமைப்புகளும் ஐக்கியப்பட்ட அரசியல் பொறிமுறையொன்றைத்தான் தமிழ் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்; ஏற்றுக்கொள்வார்கள்; நம்பிப்பின்னே வருவார்கள்.
இத்தகைய ஐக்கியப்பட்ட அரசியல் பொறிமுறையொன்றுதான் இலங்கை அரசாங்கத்தின் மீது அழுத்தத்தைக் கொடுக்கும். இத்தகைய பொறிமுறையொன்றைத்தான் இந்து சமுத்திரப் பிராந்தியவல்லரசான இந்தியாவும் அனுசரித்துச் செயற்படும். இத்தகைய பொறிமுறையொன்றைத்தான் சர்வதேச சமூகமும் ஏற்றுக்கொண்டு ஒத்தாசை புரியும். இந்தியாவின் அனுசரணையில்லாமல் எந்த முயற்சியும் கை கூடாது. இந்தியாவின் அனுசரணையில்லாத எந்த முயற்சிக்கும் சர்வதேச சமூகமும் ஒத்தாசை தராது. இதுவே யதார்த்தம். தமிழர் தரப்பு இந்த யதார்த்தத்தைத் தெளிவாகப்புரிந்து கொண்டுதான் அதன் அடுத்த அடியை எடுத்து வைக்க வேண்டும்.