— கருணாகரன் —
நான்கு மாதங்களுக்கு முன்பு (கடந்த ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில்) இலங்கைத் தீவில் அதிசயங்களும் அற்புதங்களும் நிகழப் போவதாக ஒரு தோற்றம் உண்டானதை பலரும் மறந்திருக்கக் கூடும். ஆனால், அப்பொழுது நாடு மெல்ல மெல்ல மாற்றத்தை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாகப் பலரும் நம்பினார்கள். அந்த நம்பிக்கையில்தான் காலிமுகத்திடலை நோக்கி நாட்டின் எல்லாத் திசைகளிலிருந்தும் மக்கள் சென்றனர். உருவாகி வந்த மக்கள் அலையையும் மாற்றத்தை நோக்கிய போராட்டச் செயற்பாடுகளையும் கண்டு ஆட்சியாளர்களும் அரசியல்வாதிகளும் நடுங்கத் தொடங்கினர். அதனால்தான் அசுர பலத்தோடிருந்த ராஜபக்ஸக்கள் பதவிகளை விட்டு ஓடினர். தொடர்ச்சியாக ஆட்சி மாற்றம் மட்டுமல்ல, அரசியல் மாற்றமும் ஏற்படப்போகிறது என்று எதிர்பார்ப்புப் பலருக்கும் உண்டானது. அப்படித்தான் பேசவும் பட்டது. பாராளுமன்றத்தில் உள்ள 225 பேரும் வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்ற குரல்கள் ஓங்கியொலித்தன. அமைச்சர்களும் அரசாங்கத்தில் இருந்தவர்களும் வாழ்வா சாவா என்ற அச்சத்தில் நடுங்கிக் கொண்டிருந்தனர். அடுத்து என்ன நடக்கும் என்று தெரியாத அதிரடி மாற்றங்கள் நடந்து கொண்டேயிருந்தன. மக்கள் புதிய நாடொன்றையும் புதிய வாழ்வொன்றையும் எதிர்பார்த்தனர். இதுவரையிலும் நிலவிய இனமுரண்பாட்டில் சிறியதொரு மாற்றம் ஏற்படலாம் என்ற நம்பிக்கையும் ஏற்பட்டது. இந்தச் சிறிய அழகிய நாட்டில் நாம் எல்லோரும் அவரவருடைய தனித்துவங்கள், அடையாளங்களோடு –அவற்றை மதிப்பதன் மூலம் – மகிழ்ச்சியாக வாழலாம் என்று பேசப்பட்டது.
ஆனால், இதெல்லாம் பின் வந்த நான்கு ஐந்து மாதங்களில் முற்றாகவே மாறி விட்டன. இப்பொழுது கழுதை தேய்ந்து கட்டெறும்பானதைப்போல அல்லது வேதாளம் பழையபடி முருங்கையில் ஏறியதைப்போல ஆகிவிட்டது.
பாராளுமன்றத்திலும் அமைச்சரவையும் ஆட்சியிலும் அதே ஆட்கள்தான் இருக்கிறார்கள். தலைமைப் பொறுப்பில் ஒன்றிரண்டு தலைகள் மட்டும் மாறியுள்ளனவே தவிர, தரப்புகளில் மாற்றம் ஏதும் நிகழவில்லை. இதனால் மாற்றங்களை விரும்பியோர் ஏமாற்றங்களுக்கு உள்ளாகியுள்ளனர். மாற்றங்களுக்காக முன்னிலையில் நின்று போராடிய, பாடுபட்டவர்கள் சிறையில் தள்ளப்பட்டுள்ளனர்.
மாற்றங்களை விரும்பாத 225 பேரும் அவர்களைக் கண்மூடி ஆதரிக்கின்ற தரப்பினரும்,
“அப்பாடா, தப்பிப் பிழைத்தோம். இனி எம்மை அசைக்க முடியா” தென்று தங்கள் அதிகாரத்தைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டனர்.
இதுவரையிலும் மேற்கொண்டு வந்த இனவாத அரசியலுக்கு அச்சுறுத்தல் வந்துவிட்டது என்பதையிட்டே இவர்கள் அச்சமடைந்தனர். இதில் சிங்கள ஆளும் தரப்பினர் மட்டுமல்ல, ஜே.வி.பி உள்ளடங்கலான சிங்களக் கட்சிகளும் தமிழ்க்கட்சிகளும் உள்ளடக்கம்.
இலங்கையில் இனவாதமே அரசியலுக்கான முதலீடு. மற்றதெல்லாம் இரண்டாம் பட்சம் என்பது பகிரங்கமான –தெளிவான – உண்மை.
அபிவிருத்தி, சமாதானம், நல்வாழ்க்கை என்ற சொல்லை விட தமிழ்த்தேசியம், சிங்களத் தேசியம், முஸ்லிம் தேசியம், மலையகத் தேசியம் என்ற தேசியவாதச் சொற்களுக்கு ஈர்ப்பும் அதிகம். மதிப்பும் அதிகம். சிங்களத் தேசியவாதம் தமிழ்த் தேசியவாதத்தைத் தோற்றுவித்தது. பிறகு இரண்டுமாக இணைந்து முஸ்லிம் தேசியவாதத்தைத் தோற்றுவித்தன. இறுதியாக மலையகத் தேசியவாதமும் தோன்றிவிட்டது.
ஆனால், இந்தத் தேசியவாதம், மெய்யாகவே தேசியவாதமாக அல்லாமல், அநேகமாக இனவாதமாகவே சுருங்கி நிகழ்கிறது. நடைமுறையில் இங்கே எல்லாத் தரப்பிலும் இனவாதமே உள்ளது. படிமுறையில் இதன் வீரியமும் வீச்செல்லையும் வேறுபடுகிறதே தவிர மற்றும்படி ஒவ்வொன்றும் தமது காலடிக்குள் சுருங்கியே உள்ளன. இதைப் புரிந்தும் புரியாமலும் பலர் உள்ளனர். தெரிந்தும் தெரியாமற் சிலர் உள்ளனர்.
தமிழ்த் தேசியவாதம் தமிழர்களுக்கு மிகமிக உவப்பானது. அவசியமானது. சரியானது என்ற வகையிலேயே நோக்கப்படுகிறது. தர்க்க பூர்வமாக இதை ஏற்றுக்கொள்ளவே தோன்றும். தமிழ்த் தேசியவாதத்தின் பலமும் எழுச்சியும் தமிழர்களுடைய விடுதலைக்கு அவசியமான ஒன்று. அவர்களுக்கு ஆதாரமானது அது. அதன் மூலமே தமிழ் மக்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்றெல்லாம் உணர வைக்கும்.
ஆனால், இதன் மறுபக்கம் வேறானது.
தமிழ்த் தேசியவாதத்தின் எழுச்சியையும் அதன் பலத்திரட்சியையும் காணும் சிங்கள மக்கள் அல்லது சிங்களத் தரப்பு அச்சமடைகிறது. அது அதை எதிராகவே பார்க்கிறது. இதுதான் வரலாறு முழுவதிலும் நிகழ்ந்தும் வருகிறது.
இதன் காரணமாக அது தன்னுடைய பலத்தைப் பிரயோகித்து தமிழர்களை ஒடுக்கவும் எதிர்க்கவும் முற்படுகிறது. அரசியற் சூழ்ச்சிகளின் மூலமாக தமிழ் மக்களையும் அவர்களுடைய எழுச்சியையும் பலவீனப்படுத்துகிறது. இதற்கு அது சிங்களத் தேசியவாதத்தை எழுச்சியடைய வைக்கிறது. அதற்கேற்ற மாதிரியான அரசியற் தூண்டல்களைச் செய்கிறது. இது நமக்கு– தமிழர்களுக்கு எதிரானதாக மாறுகிறது. அதாவது சிங்கள தேசியவாதத்தின் எழுச்சியானது தமிழர்களுக்கு இனவாதமாகிறது.
ஆக தமிழ்த் தேசியவாதமானது சிங்கள மக்களின் நோக்கு நிலையில் தமிழ் இனவாதமாகவும் சிங்களத் தேசியவாதமானது தமிழ் மக்களின் நோக்கு நிலையில் சிங்கள இனவாதமாகவும் தென்படுகிறது.
இதற்கான அரசியற் பொறிமுறையை இரண்டு தரப்பும் மிக நேர்த்தியாகவே செய்து வருகின்றன.
நாட்டைப் பொருளாதார ரீதியில் மீட்பது, ஊழலற்ற நாடாக கட்டியெழுப்புவது, மக்கள் நலன்களுக்கு முன்னுரிமை அளித்துச் செயற்படுவது, அனைவருக்குமான உரிமைகளைப் பற்றிச் சிந்திப்பது என்று செயற்படுவதற்குப் பதிலாக, இனவாதத்தை வளர்ப்பதிலேயே குறியாக உள்ளன. பாராளுமன்றத்திற் கூடப் பெரும்பகுதி நேரத்தை இனவாதத்துக்காகவே செலவிடுகின்றன.
இதற்கேற்ற வகையில் பிரமுகர்த்தரமான அரசியல் – எதிர் மக்கள் – என்றவகையில் மேல் –கீழ் என்ற அடுக்கில் (உண்மையில் இது நிலப்பிரபுத்துவ முறையிலேயே) வடிவம் கொண்டுள்ளது.
ஒரு பாராளுமன்ற உறுப்பினரோ ஒரு அமைச்சரோ செல்லும் காட்சியை ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள். அப்போது அவரைச் சூழ ஒரு பெரிய அணி கூடிச் செல்லும். அவர் மக்களைச் சந்தித்தாலும் பண்ணையார் ஒருவர் சந்திப்பதைப்போலவே நடந்து கொள்வார்.
இது மக்களை கீழான நிலையில் வைத்தே –ஜமீந்தார் – குடிமக்கள் என்ற வகையிலே –இருப்பதைக் காண முடியும். சில வேளை குறித்த பிரமுகருக்குக் குடை பிடிக்கும் வேலையைக் கூடச் செய்ய வேண்டியிருக்கும். சிலருக்கு அவர்களுடைய கால் செருப்பைக் காவுகின்ற சம்பவங்களும் நடப்பதுண்டு.
அரகலய போராட்டம் இந்தப் போக்கைக் கேள்விக்குள்ளாக்கும் நிலையை நோக்கி வளர்ந்தது. என்பதால்தான் அதையிட்டு இந்த இனவாதத் தரப்புகள் அச்சமடைந்தன. என்பதால்தான் 225 பாராளுமன்ற உறுப்பினர்களையும் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று அரகலயவினர் சொன்னார்கள். என்பதால்தான் இருக்கின்ற சிஸ்டத்தை (இந்தத் தேசியவாத முலாம் பூசப்பட்ட இனவாதக் கட்டமைப்பை) உடைத்து புதிய சிஸ்டம் கிரியேற் பண்ணப்பட வேண்டும் என்று கூறப்பட்டது. என்பதால்தான், புதிய மாற்றங்களை விரும்புவோர் அந்தப் போராட்டத்தை ஆதரித்தனர். என்பதால்தான் அதற்கொரு புதிய தோற்றம் உருவாகியது. என்பதால்தான் அது புதுமையான ஒன்றாகக் கொண்டாடப்பட்டது.
ஆனால், அதனை அப்படியே திருகிச் சிறையில் அடைத்துப் பொது மக்களைப் பயமுறுத்திக் கொண்டிருக்கிறது அரசு.
இப்பொழுது அரசாங்கம் தமிழ் மக்களுடைய நினைவு கூருதலுக்கு அனுமதி அளித்துள்ளது. இதைக் கொஞ்சம் விரிவாக்கம் செய்து பெருந்தன்மையோடு இடமளித்தது என்று சொல்லலாம். ஆனால், இந்த இடத்தில் ஒரு கேள்வியை நாம் எழுப்ப வேண்டும். நினைவு கூர்தலுக்கு இடமளிக்கின்ற இந்த அரசாங்கம் மக்களுடைய நியாயமான போராட்டங்களை அங்கீகரிக்குமா? அதை அனுமதிக்குமா –அதற்கு இடமளிக்குமா?
இங்கே ஒரு பொறி வைக்கப்படுவதை நாம் கவனிக்க வேண்டும். பொறி என்பது பெரும்பாலும் நம்மை அறியாமல் நம்மைச் சிக்கவைக்கும் ஒரு அபாயக் கண்ணியாகும்.
மீளவும் இனவாதத்தை அரசியல் முதலீடாக்கும் உபாயத்தைப் பலப்படுத்தும் முயற்சி இது. இது தனியே உள் நாட்டிலுள்ள சக்திகள் மட்டும் சம்மந்தப்பட்ட விடயமல்ல. இதைத்தான் பிராந்திய சக்திகளும் விரும்புகின்றன. மேற்கின் வல்லாதிக்கச் சக்திகளும் விரும்புகின்றன. ஆக அதிகாரத் தரப்புகளுக்கு இது தேவையாக உள்ளது. இவை எல்லாம் கூட்டுச் சேர்ந்து நம்மை –மக்களைத் தங்களுடைய தின்பண்டமாக்குகின்றன.
இவற்றுக்கு மக்கள் நலனோ, மக்கள் முன்னேற்றமோ, மக்களுக்கான அமைதியோ விருப்பமில்லை. அதில் அக்கறையுமில்லை. நாமும் பலதைப் புரிந்து கொள்ளாமல், புரிந்து கொள்ள முடியாமல் நமக்குக் கிடைக்கின்ற சிறிய இடைவெளிகளில் பெரிய நாடகங்களை நடத்தி விட முயற்சிக்கிறோம்.
இதையிட்டு கவலைப்படுவதா சிரிப்பதா?
ஏனிந்தக் கேள்வி என்றால், நாம் சரியாக இந்த விடயங்களைப் புரிந்து கொள்ளத் தவறினால், நம்முடைய தவறுகளுக்கான விலையை நாம்தான் கொடுக்க வேண்டும்.
இப்பொழுது நாம் நியாய விலையில் எந்தப் பொருளையும் பெறவில்லை. அநியாய விலையில்தான் பெறுகிறோம். இந்த அநியாய விலை கொடுப்புக்கு நம்முடைய முட்டாள்தனமும் ஒரு வகையில் காரணம்.