ரணில் & சம்பந்தர் இரண்டாம்  “கல்யாணம்”..? “சீதனம் – சீர்வரிசையே” தீர்வைத் தீர்மானிக்கும்..! (மௌன உடைவுகள் – 11) 

ரணில் & சம்பந்தர் இரண்டாம்  “கல்யாணம்”..? “சீதனம் – சீர்வரிசையே” தீர்வைத் தீர்மானிக்கும்..! (மௌன உடைவுகள் – 11) 

           — அழகு குணசீலன் — 

இலங்கையின் இனங்களுக்கிடையிலான முரண்பாட்டு அரசியல் இரு அணுகுமுறைகளை அடிப்படையாகக் கொண்டது.  

ஒன்று  இனவாதம், மற்றையது வன்முறை.  

பலசந்தர்ப்பங்களில் இவை இரண்டையும் இருதரப்பும் ஒரு “கலவையாக” தங்கள் கட்சி அரசியல் – இராணுவ தேவைகளைப் பொறுத்து MIXED பண்ணி பயன்படுத்தி வந்துள்ளனர். கலப்பு பொருளாதாரம் போன்று இது ஒரு கலப்பு அரசியல். 

இந்த அரசியல் -இராணுவ அணுகுமுறைக்கூடான யுத்த அரசியலின் பின்னர் இருதரப்பும் சந்தித்து பேசுவது என்பது இலகுவானதல்ல. அதற்கான கட்டாய தேவை ஒன்று, சூழல் ஒன்று அவசியம். அதனை இலங்கையின் பொருளாதார நெருக்கடி ஏற்படுத்தி இருக்கிறது.  

பொருளாதார நெருக்கடியில் இருந்து விடுபடுவதற்கு சமாதானத்திற்கான -இனப்பிரச்சினைக்கான ஒரு தீர்வின் அவசியத்தை சிங்களத்தரப்பு உணர்ந்திருக்கிறது. இச் சூழலைப் பயன்படுத்த தமிழ்தரப்பும் எத்தனிக்கிறது. 

மேலோட்டத்தில் வழமைபோல் சாதகமாக பார்க்கப்பட வேண்டிய ஒன்றுதான். இல்லை என்று மறுப்பதற்கில்லை. ஆனால் இந்தப் பேச்சுக்களில் இருந்து பெறக்கூடிய அடைவு என்ன?  அதை எப்படி அடைவது? என்பதே இங்கு முக்கியமானது. சக்திக்குமீறிய, அளவுக்கு அதிகமான, உயர்ந்த கோரிக்கையுடன் (DEMAND) தமிழ்த்தரப்பும், அதிகபட்ச குறைந்தளவான வழங்கலுடன் (SUPPLY) சிங்களத்தரப்பும் அரசியல் சந்தையில் பேரம்பேச சந்திக்கின்றன. இங்கு தான் சிக்கல் இருக்கிறது. இதுவரையான தோல்விகளுக்கு இந்த கேள்வி, நிரம்பல் அளவுகளின் பாரிய இடைவெளியே காரணம். இது சமநிலை ஏற்படுவதைத் தடுத்துவந்திருக்கிறது. 

இந்த உயர்ந்த கேள்வியும் (கோரிக்கை) குறைந்த நிரம்பலும் (வழங்கத் தயாராகவுள்ள அளவு) பண்டங்கள், சேவைகள் சந்தைக்கு சமமான ஒரு விலை உயர்வை ஏற்படுத்திவிடும். அத்தோடு இச் சூழல் கள்ளச்சந்தை, பதுக்கல், மற்றும் தட்டுப்பாடு போன்ற போலித் தோற்றத்தையும் ஏற்படுத்தும். இலங்கை அரசியல் சந்தையில் சகல சமூகங்களும் இந்த நிலைமைகளால் அதிக “விலை” கொடுத்திருக்கிறார்கள். அரசியல் சந்தையை தளம்பலில் வைத்துக்கொண்டு அரசியல் இலாபம் பெற முற்பட்ட அரசியல் தலைமைகளும், கட்சிகளும் “கள்ளச்சந்தை”, “பதுக்கல்” செயற்பாட்டில் சமநிலை ஒன்றை ஏற்படுவதை தவிர்ப்பதில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதை இருதரப்பும் கவனத்திற்கொள்வதிலேயே வெற்றி, தோல்வி தங்கியுள்ளது. 

இந்த அணுகுமுறையானது இறுதியில் “யார் எங்களுக்காக இல்லையோ, அவர்கள் எங்களுக்கு எதிரானவர்கள்” என்ற முடிவுக்கு காரணமாகிறது. 

இந்த நிலைப்பாடு சமாதான பேச்சுவார்த்தைகளில் ஒரு சமநிலையை எட்டுவதற்கு பெரும் தடையாகும். பேச்சு வார்த்தைகளின் வெற்றி, தோல்வி சம்பந்தப்பட்ட இருதரப்பும் உண்மையிலேயே தீர்வொன்றைக் காண்பதில் ஆர்வம் கொண்டுள்ளார்களா? என்பதில் தங்கியுள்ளது என்பது எல்லோருக்கும் தெரிந்த பொது நியதி. 

பிரச்சினைக்கான தீர்வு   சட்டவாதப் பிரதிவாதங்களால் – வாதாட்ட திறனால் அடையப்படுவதற்கு இது குற்றவியல் நீதிமன்றம் அல்ல. சட்டத்தில் இருப்பதனால் மட்டும் தமிழர் பிரச்சினையைத் தீர்க்க முடியாது. இங்கு ஜதார்த்த நடைமுறை அரசியல் தேவை. பங்காளிகள் ஒருவரை ஒருவர் அங்கீகரித்தல் முக்கியம். இது பன்மைத்துவ அரசியல் அங்கீகாரமாகவும் இருக்கவேண்டும். ஏகபோக அரசியலாக இருக்கக்கூடாது. விட்டுக்கொடுப்பும், புரிந்துணர்வும் அவசியம். பழைய புதையல்களைக் கிண்டாதிருப்பதும், சுட்டுவிரலை நீட்டி குற்றம் சாட்டாதிருப்பதும் பேச்சுவார்த்தையில் ஒரு கலை. 

ஒரு தரப்பை மறு தரப்பு ஏமாற்றி, அழித்து வெற்றிபெறலாம் என்ற அணுகுமுறை கடந்த 70 , மற்றும் 30 ஆண்டுகளாக தொடர்ச்சியான தோல்விகளைச் சந்தித்துள்ளது. யார் எதைச் சொன்னாலும்  கடந்த காலங்களில் இரு தரப்பில் எத்தரப்பும் இங்கு வெற்றி பெறவில்லை. வேண்டுமானால் குறுகிய காலத்திற்கு யாரும் வெற்றி பெற்றதாகக் காட்டிக் கொள்ளலாம். அதன் விளைவுதான் இலங்கையின் இன்றைய நிலை.  

வெளித்தோற்றத்தில் இலங்கை ஒரு “ஜனநாயக” நாடு /அரசு என்று தெரிந்தாலும் முழுமையாக அது உண்மை அல்ல. வாக்குரிமை, ஒழுங்குமுறையான தேர்தல், அரசாங்கம் மாறுதல், ஆளும் கட்சிகள் மாறுதல், அரசியல் அமைப்பு மாற்றங்கள் போன்றவை ஜனநாயகத் தோற்றத்தை தருகின்றன. மறுபக்கத்தில் வன்முறைகள், மனித உரிமைகள், ஊடக, கருத்துச் சுதந்திரம், இன ஒடுக்குமுறை போன்ற விடயங்களில் ஒரு ஜனநாயகமற்ற தன்மை ஒழிந்திருக்கிறது. இந்த ஜனநாயக மாயையை தமிழ் போராட்ட அமைப்புக்களும், இன்றைய தமிழ்த்தேசிய கட்சிகளும் வெளித்தோற்றத்தில் கொண்டிருக்கின்றன. 

இனவாத நிறுவனங்கள் இன்றி இனவாதமயப்படுத்தல் இடம்பெற முடியாது. வழமையான ஜனநாயக பொறிமுறையானது பெரும்பான்மை முடிவுகளின் படி பெரும்பான்மையினத்தவர்களுக்கே சாதகமாக அமைகிறது. சமூக, பொருளாதார, அரசியல் ரீதியாக எண்ணிக்கையில் சிறுபான்மையினர் புறக்கணிக்கப்படுகிறார்கள். இங்கு ஒரு இனம் மேலாண்மை வகிக்கிறது. ஜனநாயகத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்கிறது. இந்தப் புறக்கணிப்பு சிங்களத் தேசிய அரசியலில் மட்டும் அன்றி தமிழ்த்தேசிய வடக்கு பெரும்பான்மை  – மேலாண்மை அரசியலிலும் உள்ளது. கிழக்கு சமூக, பொருளாதார, அரசியலில் புறக்கணிக்கப்படுகிறது. 

இன்னொரு புறத்தில் ஒரு சமூகத்தில் இனரீதியான வேறுபாடு கட்டாயமாக இனவாதமயமாக்கப்பட்ட அரசியலை குறித்து நிற்கவேண்டும் என்பதும் அல்ல. உதாரணமாக சமூகத்தில் பெரும்பான்மையினரின் அரசியலுக்கு எதிராக தங்கள் சமூகத்தை அணிதிரட்டி பலம் பெறுவதாகவும் அது இருக்கமுடியும். இன்றைய கிழக்குமாகாண பிரதேச அரசியலும், முஸ்லீம்களின் அரசியலும், மலையக அரசியலும் இந்தவகையில் பிரதேசவாதமோ, இனத்தை பிரிப்பவையோ, மறுதரப்புக்கு எதிரானவையோ அல்ல.   

சக பெரும்பான்மை சமூகத்திற்குள் மூழ்கிப்போகாமல் தங்களை தனியாக அடையாளப்படுத்திக் கொள்வதற்கான அரசியல் தற்காப்பு உரிமை. இதையே தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும், இராஜாங்க அமைச்சருமான சி.சந்திரகாந்தன் “கிழக்கு கிழக்காக” இருக்கக்கூடிய தீர்வுக்கு ஆதரவளிக்கத் தயார் என்று பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார். டக்ளஸ் பேச்சுக்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். பிள்ளையான் 13 பிளஸ் நோக்கிய நகர்வை வலியுறுத்தியிருக்கிறார். இந்திய பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் மனோகணேசன் உள்ளிட்ட மலையகப் பிரதிநிதிகள் ஒப்பமிடமறுத்தனர். 

தற்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ள பேச்சுவார்த்தைக்கான அழைப்பை நோக்கினால், சம்பந்தப்பட்ட இருதரப்பும் ஏற்கனவே பெற்றுக்கொண்ட கசப்பான, கடினமான அனுபவங்களுடனும், கடினமான இறுகிய மனநிலையுடனும், தாமாகப் பேசி ஒரு இணக்கப்பாட்டை அடைவது அவ்வளவு இலகுவானதல்ல. அதனால்தான் இவ்வாறு போரினால் பாதிக்கப்பட்ட நாடுகளில் குறிப்பாக இன, மத முரண்பாடுகளைக் கொண்ட நாடுகளில் மத்தியஸ்த பேச்சுவார்த்தைகள் வரவேற்கப்படுகின்றன.  

இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகளில் மத்தியஸ்தம் குறிப்பிடக்கூடிய வெற்றியைத் தரவில்லை என்று வாதிடமுடியும். அதேவேளை மத்தியஸ்த்தம் அற்ற பேச்சுவார்த்தைகளுக்கும் அதே கதிதான். ஆனால் இதுவரையான பேச்சுக்களில் மத்தியஸ்தம் வகிக்கப்பட்ட பேச்சுவார்த்தைகளே எதையாவது பலனாக, ஆரம்பபுள்ளியாக விட்டுச் சென்றுள்ளன.  

இந்திய மத்தியஸ்தத்துடனான திம்பு தாயகக் கோட்பாடு, இந்திய – இலங்கை சமாதான உடன்படிக்கை மாகாணசபைகள் அல்லது நோர்வேயில் இறுதியாகப் பேசப்பட்ட சமஷ்டி நோக்கிய தீர்வு என்பவை இங்கு கவனத்தில் கொள்ளத்தக்கவை. தலைப்பிற்கு ஏற்ப சந்தையில் ஒரு கல்யாணத்தரகர்- மத்தியஸ்தர் தேவைப்படுகிறது. மத்தியஸ்தம் சந்தையில் சமநிலையைப் பேணவும், தேவையேற்படின் கேள்வி, நிரம்பலை ஒழுங்குபடுத்தி சந்தையில் சமநிலை விலை ஒன்றை ஏற்படுத்தவும் அல்லது கட்டுப்பாட்டு விலை ஒன்றை நிர்ணயம் செய்யவும் மத்தியஸ்தம் தேவை. 

மத்தியஸ்தம் செய்யும் தரப்பின் சொந்த நலன்சார்ந்த விடயம் இங்கு முக்கியமாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். இது விடயத்தில் நூறு வீதம் இந்தியா, நோர்வே (மேற்குலகம்) தங்கள் நலன்சார்ந்து செயற்படவில்லை என்று கூறமுடியாது. அதை நிறுவுவதும் இப் பத்தியின் நோக்கம் அல்ல. அதேவேளை இன்றைய தங்கியிருத்தல் உலகமயமாக்கச் சூழலில் இது தவிர்க்க முடியாததும், பூகோள அரசியலின் ஒரு பகுதியுமாகும்.  

சமகால சமூக, பொருளாதார, அரசியல் நிலைமைகளைக் கருத்தில் கொண்டு பேசும்போது “POSITIONAL – BARGAINING” சூழ்நிலைக்கேற்ப பேரம்பேசல் இரு தரப்புக்கும் “WIN-WIN” பெறுபேற்றை தருவதாக அமையும். மாறாக தங்கள் நலன் சார்ந்த ஆர்வத்துடன் கூடிய பேரம் பேசலாக “INTEREST – BARGAINING” அது அமைந்தால் “LOST -LOST” பெறுபேறே மிஞ்சும். இந்த நிலையை  நெறிப்படுத்த ஒரு நடுவர் தேவைப்படுகிறார். 

அதேவேளை மத்தியஸ்தத்திற்கும் தன் நலன் சார்ந்த ஆர்வம் இருக்கக்கூடாது. கடந்த காலங்களில் மத்தியஸ்தம் உள்ளிட்ட அனைத்து தரப்பிலும் இந்த நலன் சார்ந்த ஆர்வம் இருந்திருக்கிறது. பேச்சுவார்த்தைகளின் தோல்விக்கு இதுவும் ஒரு காரணம். இந்த பேச்சுக்களுக்குப் பின்னால் அமெரிக்காவும், இந்தியாவும் இல்லை என்று யாரும் அடித்துச் சொல்ல முடியாது. 

கடந்த கால மத்தியஸ்தத்துடனான பேச்சுவார்த்தைகளின் போது புலிகள் கொண்டிருந்த பேரம்பேசும் பலம் தமிழ்தரப்பிடம் இன்று இல்லை என்பதை இன்றைய தமிழ்தரப்பு கவனத்தில் கொள்ள வேண்டும். பேச்சுக்களில் விரலுக்கு ஏற்ற வீக்கம் தேவையேயன்றி வெறும் வீறாப்பு பேசி இருப்பதையும் இழந்த   கதையாக முடியக்கூடாது.  

கையில் ஒரு பொல்லுக் கூட இல்லாமல் சிலர் தனிநாடு பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள். இது எதிர்த்தரப்பு வாயில் அவல் கூடுவது. அரசியலில் வெற்றி என்பது ஜதார்த்த அணுகுமுறையில், விட்டுக்கொடுப்பில், பலம் – பலவீனம் அறிந்து பேசுவதில் உள்ளது. சிறுபான்மைத் தேசிய இனங்களுக்கான சர்வதேச அங்கீகாரத்தை கொண்ட சட்ட உரிமைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. ஆனால் போருக்குப் பின்னரான இன்றைய சூழலில் தமிழ்தரப்பு அரசியல் பலமே அதைத் தீர்மானிக்கும். பேச்சுக்களில் பேரம்பேசும் பலத்தை இழந்துள்ள தமிழ் தரப்புக்கு மத்தியஸ்தம் பெரும்பாலும் சாதகமாக அமையமுடியும்.  

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும், தமிழ்த்தேசிய அரசியலும் இணைந்தமைக்கான வேறு ஆர்வங்களும், நலன்களும் இல்லாமல் இல்லை. இந்த இணைவுக்கு காரணம் இலங்கை மக்கள் மீதான நலன்சார் அக்கறையா? அல்லது இருதரப்பும் தமது அரசியல் எதிர்காலத்தை தக்க வைத்துக் கொள்வதற்கான மற்றொரு தந்திரமா? என்ற கேள்வியும் அரசியல் அரங்கில் எழாமல் இல்லை. 

தமிழ்த்தேசிய கூட்டமைப்பு சம்பந்தர் ஐயா தலைமையில் சிதைந்து கொண்டிருக்கிறது. தமிழரசுக்கட்சி இயக்கமற்று மார்ட்டின் ரோட்டில் முடங்கி கிடக்கிறது. ராஜபக்சாக்களைப் பிரதியீடு செய்த  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாரிய சமூக, பொருளாதார, அரசியல் நெருக்கடிகளை  சுமக்கவேண்டி உள்ளது.  

தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு அடுத்த தேர்தலுக்கு “முதலீடு” தேவை. நல்லாட்சியில் செய்த “முதலீடு” கடந்த தேர்தலில் குறைந்தபட்ச இலாபத்தையே தந்தது. தேர்தல் முடிந்த பின்னர்தான் சம்பந்தர் ஐயா “நல்லாட்சி எங்களை ஏமாற்றிவிட்டது” என்று மனம் திறந்தார். முதல் திருமண முறிவு ஏற்பட்டது. சிங்கள அரசு எங்களை ஏமாற்றிவிட்டது என்று தோல்வியைச் சொல்லி வாக்குக்கேட்கும் வங்குரோத்து அரசியல் தமிழ்த் தேசியத்தின் மரபணு. அரசியலில் மக்கள் முன்வைக்கப்பட வேண்டிய விடயங்கள் வெற்றிகளும், எதிர்கால கொள்கைத் திட்டங்களுமே. அவை இல்லை என்றால் அதற்குப் பெயர் அரசியல் வரட்சி. 

 ரணிலுக்கு அடுத்த ஜனாதிபதி தேர்தல் கண்ணில் குத்துகிறது. இன்றைய பொருளாதார நெருக்கடியில் பொறுப்பை ஏற்றவர் என்ற வகையில் ஒரு துணிச்சல் மிக்க தலைமைத்துவமாக தன்னை வெளிக்காட்டி வருகிறார். ஆனால், இவை மட்டும் போதாது என்பதால் சிறுபான்மை தேசிய இனங்களின் வாக்குகளைப் பெறுவதற்கான அரசியல் நகர்வே இந்த பேச்சுவார்த்தை அறிவிப்பின் பின்னணி. 

தமிழ்தரப்பு பேரம்பேசும் சக்தியை முற்றாக இழந்திருப்பது மட்டுமல்ல, ஒற்றுமையின்றி சிதறிக்கிடக்கின்றது. இதனைப் பயன்படுத்தி  “யாவது” ஒரு தீர்வுக்குள் அவர்களை இலகுவாக இழுத்து விடலாம் என்று ரணில் கருதுகிறார். இதன் மூலம் இனப்பிரச்சினைக்கான தீர்வைத் தந்தவன் தான் என்று கூறமுடியும். ஆகக் குறைந்த பட்சம் சர்வதேசத்தில் தீர்வுக்கான முயற்சிகளை மேற்கொண்டதாக கூறி நல்லெண்ணத்தையும், உதவிகளையும் பெறமுடியும். 

ரணில் & சம்பந்தர் கல்யாணத்தில், ரணில் வழங்கப்போகும் “சீதனம்” “சீர்வரிசை” பேச்சுவார்த்தையின் போக்கை நிர்ணயிப்பதாக அமையும். சம்பந்தர் சீதனமாக வடக்கு கிழக்கு இணைப்பைக் கேட்டால் கல்யாணம் இடைநடுவில் முறியும். ரணில் வழங்கப்போகின்ற சீதனத்தை பொறுத்தே  சஜீத் பிரேமதாச, ராஜபக்ச, அநுரகுமார திசாநாயக்க, தலஸ் அழகப்பெரும மற்றும் பௌத்த மத பீடங்கள், ஏனைய சிங்கள இனவாதிகளின் செயற்பாடு அமையப் போகிறது. இவர்களே அரசியல் கள்ளச்சந்தை நிலைமையைத் தீர்மானிப்பார்கள். 

ஆக, சிங்களத் தீவிரதரப்பின் “Reaction” ரணிலின் “Action” இல் தங்கியுள்ளது. முக்கியமாக வடக்கு, கிழக்கு இணைப்பு விவகாரம் இந்த பேச்சுவார்த்தைகளின் தோல்விக்கு வழிவகுக்கும். ரணில் இலகுவாக பின்வாங்குவதற்கு தமிழ்த்தேசியம் வழங்கிய சந்தர்ப்பமாகவும், குழப்புவதற்கு எதிர்த்தரப்பு தீவிரசக்திகளுக்கு சாதகமாகவும் அமையும்.  

தமிழ் தரப்பு தாங்கள் கேட்கும் “சீதனம் – சீர்வரிசை” அளவுக்கு அதிகமாகக் கேட்டு பேச்சுவார்த்தை முறியக்காரணமாய் அமைந்தால், தமிழ்த்தேசிய வரலாறு மற்றொரு தோல்வியைப் பதிவு செய்யும். ஏனெனில் வடக்கு கேட்கின்ற சீதனம் கிழக்கின் பரம்பரைச் சொத்து. கிழக்குவாழ் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு சொந்தமான “தாயதி” அது குறித்து முடிவு எடுக்கின்ற உரிமை கிழக்கு மக்களுக்கே உரிய பிறப்புரிமை.