அரசியல் தீர்வுக்கான சவாலை எதிர்கொள்ள தயாராக வேண்டும் 

அரசியல் தீர்வுக்கான சவாலை எதிர்கொள்ள தயாராக வேண்டும் 

  — கருணாகரன் — 

இனப்பிரச்சினைக்குத் தீர்வு என்ற வகையில் அதிகாரப்பரவலாக்கம் பற்றி அரசாங்கம் பேசத்தொடங்கியுள்ளது. வரவு செலவுத்திட்ட விவாதத்தின்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதைப்பற்றிப் பகிரங்கமாகப் பேசியுள்ளார். அவருடைய அறிவிப்பின்படி எதிர்வரும் டிசெம்பர் 11 ஆம் திகதி பேச்சுகள் ஆரம்பிக்கப்பட வேண்டும். அதற்கேற்றவாறு தமிழ்த்தரப்புகள் ஒருமுகப்பட்டு பேசத்தயாராக வேண்டும் என்று கேட்டுள்ளார் ஜனாதிபதி. மக்களுடைய எதிர்பார்ப்பும் இதுதான். எல்லாக் கட்சிகளும் ஒருமுகப்பட்டு, பிரச்சினைக்குத் தீர்வு காண முயற்சிக்க வேண்டும் என்பதாகும். 

இதற்கேற்ற மாதிரி, 25.11.2022 கொழும்பில் சம்மந்தனின் வீட்டில் தமிழ்த்தேசிய அடையாளக் கட்சிகள் பலவும் கூடிப் பேசியிருக்கின்றன. 

இதைப்போல சிங்களத் தரப்பிலுள்ள கட்சிகளின் நிலைப்பாட்டைப் பற்றியும் ஜனாதிபதி பகிரங்கமாகவே கேட்டுள்ளார். சஜித் பிரேமதாச அன்று பாராளுமன்றத்தில் பிரசன்னமாகியிருக்கவில்லை. அதனால் லஷ்மன் கிரியல்லவே பதிலளித்தார். தலைவர் சஜித்துடன் கலந்து பேசி இதைப்பற்றிச் சொல்வோம் என்றார். 

அதேவேளை பிரதமர் தினேஸ் குணவர்த்தன, இந்த அதிகாரப் பகிர்வுக்குத் தயாரா? என்று லஷ்மன் கிரியல்ல கேள்வி எழுப்பியிருந்தார். ஏனென்றால் கடந்த காலத்தில் அதிகாரப் பகிர்வுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டவர் தினேஸ் குணவர்த்தன என்ற அடையாளம் அவர் மீது உண்டு. ஆகவேதான் அவரிடம் இதைப்பற்றி திரும்பத்திரும்ப லஷ்மன் கிரியல்ல கேள்வி எழுப்பினார். இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவிடத்திலும் கேள்வி எழுப்பப்பட்டது. 13 பிளஸ் வரை செல்லலாம் என்று அறிவித்தவர் மகிந்த ராஜபக்ஸ. அதிகாரப் பகிர்வுக்கு தாம் தயார் என்று கையைக் காட்டித் தம்முடைய சம்மதத்தைத் தெரிவித்தார் மகிந்த. தமிழ்த்தரப்பில் சுமந்திரன், மனோ கணேசன் போன்றோரும் இதற்கு தமது ஆதரவைத் தெரிவித்தனர். ஆதரவைத் தெரிவித்தனர் என்று சொல்வதை விட அப்படி நடந்தால் அது நல்லது. மகிழ்ச்சி என்றனர். 

ஆனால், முஸ்லிம்களின் தரப்பில் இருந்து இதைப்பற்றிக் கேள்விகள் எழுப்பப்பட்டன. இது குறித்து நாம் கூடிய கவனம் செலுத்த வேண்டும். ஏனென்றால், இனப்பிரச்சினைக்கான தீர்வில் முஸ்லிம் மக்களின் பிரச்சினையையும் கவனத்திற் கொள்ள வேண்டும். வடக்குக் கிழக்குப் பிரச்சினை என்பது முஸ்லிம்களையும் உள்ளடக்கியதுதான். ஆகவே நிச்சயமாக இதைப்பற்றி நாம் கூடிய கவனமெடுத்துச் செயற்பட வேண்டியுள்ளது. சம்மந்தன் வீட்டில் கூடியிருக்கும் தமிழ்க்கட்சிகள் இதைக்குறித்தும் சிந்திக்க வேண்டும். 

அன்று சபையில் ஜே.வி.பி இருக்கவில்லை. ஏனைய சிறிய கட்சிகளும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் தெளிவாக இதற்கான பதிலைச்சொல்லவில்லை. ஆனால் சஜித் பிரேமதாக இதற்கான பதிலைப் பின்பு சொல்லியுள்ளார். ஒற்றையாட்சிக்கும் அதிகாரப் பகிர்வு என்றால் அதற்குத் தாம் தயார் என. 

இப்பொழுது உள்ள பிரச்சினை, இந்த அதிகாரப் பகிர்வு எந்த அடிப்படையில் நடக்கப்போகிறது?மாகாண சபைகளுக்கான அதிகாரத்தை அதிகரிப்பதன் வழியாகவவா? அதாவது 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதா? அல்லது சந்திரிகா குமாரதுங்க பரிந்துரித்த – நீலன் திருச்செல்வம் உருவாக்கிய தீர்வு யோசனைகளின் வழியாகவா? அல்லது வேறு ஒன்றா?  

இதற்குள் 29.11.2022 அன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, மாவட்ட அபிவிருத்தி சபைகளைப் பற்றிப் பேசியிருக்கிறார். இது 1980களின் ஆரம்பத்தில் ஜே.ஆர். ஜெயவர்த்தனவினால் கொண்டு வரப்பட்ட அதிகாரப் பகிர்வுத்திட்டமாகும். ஆனால், இதனை தமிழர் விடுதலைக் கூட்டணி ஏற்றாலும் அப்பொழுதே தமிழ்த்தரப்புகள் மறுதலித்தன. அதற்குப் பிறகே 1987இல் மாகாணசபை இலங்கை இந்திய உடன்படிக்கை மூலமாக அறிமுகமாகியது. 

எப்படியோ இப்பொழுது ஜனாதிபதி முன்னெடுக்கும் தீர்வுக்கான முயற்சிகளில் இதில் தமிழ்த்தரப்புகள் என்ன நிலைப்பாட்டை எடுக்கப்போகின்றன? என்பது மிகப் பெரிய கேள்வி. தமிழ்த்தரப்பில் தீவிர நிலைப்பாட்டைக் கொண்ட அகில இலங்கைத் தமிழ்க்காங்கிரஸ் (கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தரப்பு), ஸ்ரீகாந்தா –சிவாஜிலிங்கம் போன்றோர் என்ன நிலைப்பாட்டை எடுப்பர் என்று தெரியவில்லை. இதுவரையிலுமான அவர்களுடைய மனப்பதிவு ரணில் விக்கிரமசிங்கவை நம்ப முடியாது. இப்பொழுதுள்ளது பொதுஜன பெரமுன அரசாங்கம். ஆகவே அவர்களை ஏற்றுக் கொள்ள முடியாது என்பதாகவே உள்ளது. 

ஆகவே எல்லாவற்றுக்கும் அப்பால், ஜனாதிபதியின் அறிவிப்பை நம்பலமா? என்ற கேள்விதான் இப்பொழுது பெரிதாக முன்னெழுந்து நிற்கிறது. தமிழர்கள் இதைப் பகிரங்கமாகவே பேசுகிறார்கள். ரணில் விக்கிரமசிங்க மிகப் பெரிய தந்திரசாலி. அவருடைய அரசியல் வழிகாட்டியான ஜே.ஆர். ஜெயவர்த்தனாவைப் போல அதிகார மனநிலை உடையவர். தன்முன்னே உள்ள கட்சிகளை (எதிர்த்தரப்பை) பிரித்து உடைத்துப் பலவீனப்படுத்துவதில் கெட்டிக்காரர். பேச்சுவார்த்தை என்ற போர்வையில் காலத்தைக் கடத்துவதில் சிரத்தையாக இருப்பார்  என்பது பலருடைய கருத்து. இதற்குப் பலரும் ஆதாரமாகக் காட்டுவது, விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் சொன்ன, ரணிலை நம்ப முடியாது, அவர் ஒரு நரி என்பதை. 

இதனால், ரணில் விக்கிரமசிங்கவை நம்பி, எப்படி அவருடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட முடியும்? என்று கேட்கிறார்கள். 

“அரசியல் என்பதே அப்படியானதுதான்”என்பதே இதற்குப் பதில். 

அது நண்பர்களுடன் தேநீர் குடிக்கும் விருந்தல்ல. எதிர்த்தரப்புடன் கவனமாகவும் திறமையாகவும் ஆடப்பட வேண்டிய ஆட்டம் அது. அதற்கேற்ப பல வழிகளிலும் பல முனையிலும் நம்மைத் தயார் செய்ய வேண்டும். அந்தத் தயார்ப்படுத்தலுடன் களத்தில் இறங்க வேண்டும். அப்படி இறங்கினால் நாமும் அரசியலில், நம்முடைய இலக்கில் வெற்றியடைய முடியும். 

இந்தியா, இங்கிலாந்து போன்ற பெரும் நாடுகளும் கிறிக்கெற் போட்டியில் கலந்து கொள்கின்றன. இலங்கை, வங்களாதேஸ் போன்ற சிறிய நாடுகளும் கலந்து கொள்கின்றன. பெரிய நாடுகளின் வீரர்களோடு எப்படி நாங்கள் போட்டியிடுவது என்று எந்த அணியும் சொல்வதில்லை. எந்த வீரரும் பின்னிற்பதில்லை. இங்கே பெரிது சிறிது என்பதல்லப் பிரச்சினை. திறமை,நம்பிக்கை, துணிவு, ஆற்றல், நற்சிந்தனை போன்றவையே முக்கியமாகும். 

ரணில் விக்கிரமசிங்க முதிர்ந்த அரசியல் தலைவர். இலங்கையின் கொந்தளிப்பு மிக்க ஐம்பது ஆண்டுகால அரசியலில் அரைவாசிக் காலத்துக்கும் மேலாக பெரும்பொறுப்பில் இருந்தவர். பேச்சுவார்த்தைகளிலும் உடன்படிக்கைகளிலும் ஈடுபட்டவர். ஆட்சியில் பல நெருக்கடிச் சூழலை எதிர்கொண்டவர். கட்சிக்குள் பல சிக்கல்களைச் சந்தித்தவர். வெற்றி –தோல்வி எல்லாவற்றிலும் தாக்குப் பிடித்து நின்றவர். இப்பொழுது ஜனாதிபதியாகியதும் பதவியில் தொடர்ந்து நீடிப்பதும் கூட அவருடைய தனியாற்றலினால்தான். அல்லது சூழலைத் தனக்கிசைவாக மாற்றிக்கொள்ளும் திறனால். முக்கியமாக எதிர்த்தரப்பையே தனக்கிசைவாக மாற்றிக் கொள்ளும் திறனால். இது இப்போது பொதுஜன பெரமுன, சிறிலங்கா சுதந்திரக் கட்சியை மட்டுமல்ல, கடந்த மைத்திரி – ரணில் நல்லாட்சிக் காலத்திலும் எதிர்க்கட்சியாக இருந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை –தமிழரசுக் கட்சியை –தனக்கிசைவாக வளைத்துப் போட்டிருந்தவர். 

ஆகவே அப்படியானவருடன் பேச்சுக்களில் ஈடுபடுவதென்பது மிகச் சவாலான ஒன்றே. இதைப் புரிந்து கொண்டு, இதற்கு, இதை எதிர்கொள்வதற்கு தயாராக வேண்டும். அதுவே செய்ய வேண்டியது. ரணிலை விட பத்து அடி பாயக் கூடிய ஆற்றலை பேசச் செல்வோர் வைத்திருக்க வேண்டும். அவர் எப்படிக் காய்களை நகர்த்துவாரோ அதை வெட்டிப் பல காய்களை நகர்த்தக் கூடிய திறனோடிருக்க வேண்டும். அவர் எப்படி உள்ளே கையை விட்டு காரியம் பார்ப்பாரோ அதற்கு இடமளியாமல், அதை முறியடிக்க வேண்டும். அவர் எப்படிப் பிராந்திய சக்தியாக இந்தியாவையும் சர்வதேச சமூகம் என்ற மேற்குலகையும் கையாள்வாரோ அதை விட நுட்பமாக தமிழ் – முஸ்லிம் தரப்புகள் – வேகமாக இந்தத் தரப்புகளைக் கையாளக் கூடியதாக இருக்க வேண்டும். அவர் எதிர்பாராத கோணங்களில் விடயங்களை நகர்த்த வேண்டும். 

இதற்கு முற்றிலும் புதிய முறையில் விடயங்களைக் கையாளும் சிந்தனை தேவை. அதாவது புதிய சிந்தனை முறை வேண்டும். அதில் நம்பிக்கை வேண்டும். அந்த நம்பிக்கையில் துணிவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். 

ஆனால், இப்பொழுது என்ன நடக்கிறது என்றால், ரணில் விக்கிரமசிங்க பேச்சுக்கு வருமாறு அழைத்தால், தமிழ்த்தரப்புகள் தொடை நடுக்கம் கொள்கின்றன. தமிழ்த்தரப்பிலுள்ள அரசியல்வாதிகள் மட்டுமல்ல, தமிழ் ஊடகவியலாளர்கள், தமிழ்ப் புத்திஜீவிகள்,தமிழ் ஆய்வாளர்கள் எல்லோருமே தடுமாறுகின்றனர். இந்தப் பலவீனத்தை மறைத்துக் கொள்வதற்காக “ரணிலை நம்ப முடியாது. அவர் மிகப் பெரிய தந்திரசாலி” என்று சொல்லித் தப்ப முயற்சிக்கின்றனர். 

அரசியல் என்பதே தந்திபோராயங்கள் நிறைந்ததுதான். அதைக் கையாள்வதற்கான சாணக்கியம் வேண்டும். ராசதந்திரம் வேண்டும். புத்திக்கூர்மையான, அதிரடியான நடவடிக்கைகள் வேண்டும். எந்தத் தந்திரசாலியென்றாலும் வரட்டும். அவருடன் விளையாடிக் காட்டுகிறோம் என்ற உற்சாகம் வேண்டும். அதைத் தமிழ் முஸ்லிம் தரப்புகள் வளர்த்துக் கொள்ளட்டும். 

ரணில் விக்கிரமசிங்கவை மடக்கக் கூடிய (முடக்கக் கூடிய அல்ல) உபாயங்களில் முக்கியமானது, இலங்கையின் அரசியலமைப்பில் பல்லினத்தன்மையையும் பன்மைத்துவத்தையும் கொள்ள வைத்தலாகும். ரணில் ஒரு லிபரல்வாதி. மேற்குலகின் நம்பிக்கையை எதிர்பார்ப்பவர். அல்லது அதைத் தக்க வைத்துக் கொள்வதற்கு விரும்புகின்றவர். தன்னை ஒரு சிறந்த ஜனநாயகவாதியாக காட்டுகின்றவர். ஆகவே அதை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் மேற்கின் பாணியில் நாம் விடயத்தைக் கையாளலாம். 

இன்னொன்று வழமையான கோரிக்கைகள், வழமையான அணுகுமுறைகளின் வழியாக இந்தப் பேச்சினை அணுக முற்படாமல் வேறு முறையில் தொடருதல். கடந்த 30 ஆண்டுகளாக அரங்கத்துடனான பேச்சுவார்த்தைகளில் புலிகளே ஈடுபட்டு வந்தனர். அவர்களே யார் யார் பேச்சில் கலந்து கொள்வது? என்னென்ன விடயங்களைப் பேசுவது? அதை எந்த ஒழுங்கில் எப்படிப் பேசுவது? போன்ற எல்லாவற்றையும் தீர்மானித்தவர். இப்பொழுது முதற்தடவையாக தமிழ் மிதவாத அரசியற் தரப்பின் கைகளுக்கு வந்துள்ளது. தமிழ்த்தரப்பு இதில் தனியே ஈடுபட முடியாது. முஸ்லிம்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும். அப்படி முஸ்லிம்களை இணைத்துக் கொள்வதே அரசுக்கும் ரணிலுக்கும் கொடுக்கும் முதலாவது நெருக்கடியாக இருக்கும். இப்படிப் பல கோணங்கள் உண்டு. 

எல்லாவற்றுக்கும் முதலில் எதிர்த்தரப்பைப் பார்த்துப் பயப்படுவதை விடுத்து, துணித்து களமாட முன்வர வேண்டும். ஆயிரமாயிரம் களங்களைக் கண்டவர் தமிழர் என்று பெருமை பேசிக் கொண்டிராமல் துணிந்து யதார்த்த வெளியில் களமாட வேண்டும். 

யார் இதற்கு முதற்குரலை எழுப்புவது?