திலகம் (கவிதை)

திலகம் (கவிதை)

உன் கருத்தில் 

நிலையில்லையெனில் 

நீக்கிவிடு திலகத்தை 

நீ 

அவனொருவன் 

உயிர்போனால் 

அமங்கலக் காவி 

அடையாளமா 

நீ? 

பலர் திட்டமிட்டு 

உன் சுற்றம் வட்டமிட்டு 

நுதல் பொட்டழிக்க 

வேண்டுமா 

நீ? 

ஓர் உயிரிழப்பில் 

வதனக் கலையிழப்பை 

நிதம் முகம் கொடுக்க 

வேண்டுமா 

நீ? 

மலர் கசக்கி, 

வளை நொருக்கி, 

நெற்றி மதி அழிக்கும் 

சதி வலை பின்னிகள் 

உள்ளார்கள் 

உன் தெருவிலும்கூட 

மலர் கூறவில்லை, 

வளை கூறவில்லை, 

பல்நிற உடை கூறவில்லை 

உன் மங்கலம் 

அவனிடமுள்ளது 

என்பதனை 

நிலம் கூறவில்லை 

நீ இறந்தபின் 

உன் உடலை 

நான் மறுப்பேன் 

என்பதனை 

பிடித்திருந்தால் 

வரைந்துகொள் 

உன் சுதந்திரத்தை 

பிடுங்க முயல்வோரிடம் 

கூர்முனை வினாவெழுப்பும் 

திண்ணமுள்ள 

நீ 

பிடிக்கவில்லையா? 

வழங்கிவிட்டுப்போ 

நுதல் சுதந்திரத்தை 

உன் மனதிற்கும் 

சேர்த்து 

நீ 

வடித்தவர்: 

செல்வி. துஷாந்தினி.யோ 

thushanthiniy@gmail.com 

பாரதிபுரம், கிளிநொச்சி