‘அறகலய’ வுக்கு எதிரான ஜனாதிபதி ரணிலின் போர்ப்பிரகடனம் 

‘அறகலய’ வுக்கு எதிரான ஜனாதிபதி ரணிலின் போர்ப்பிரகடனம் 

      — ஸ்பார்ட்டகஸ் —  

    இலங்கையில் மீண்டும் ஒரு ‘அறகலய’ மக்கள் போராட்டம் முன்னெடுக்கப்படுவதை எந்த விதத்திலும் அனுமதிக்கப்போவதில்லை என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இப்போது அடிக்கடி சூளுரைப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. 

   பாராளுமன்றத்தில் வரவு — செலவுத்திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு நவம்பர் 23 புதன்கிழமை உரையாற்றிய அவர் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு முன்னெடுக்கப்படக்கூடிய எந்தவொரு அரசாங்க எதிர்ப்பு போராட்டத்தையும் ஒடுங்குவதற்கு அவசரகாலச்சட்டத்தை பிரகடனம் செய்து இராணுவத்தைப் பயன்படுத்தப்போவதாக அச்சுறுத்தினார். 

   “அரசாங்கத்தைக் கவிழ்க்க இன்னொரு அறகலயவை முன்னெடுப்பதற்கு திட்டமொன்று இருக்கிறது. ஒருபோதும் அதை நான் அனுமதிக்கப்போவதில்லை. மீண்டும் ஒரு அறகலய மூண்டால் அவசரகாலச் சட்டத்தையும் இராணுவத்தையும் பயன்படுத்துவேன். என்னை அதற்காக ஹிட்லர் என்று அழைக்கக்கூடும். மக்களும் அரசியல் கட்சிகளும் அமைதிவழியில் போராட்டங்களை நடத்துவதற்கு அனுமதியுண்டு. ஆனால், பொலிசாரிடம் முதலில் அதற்கு அனுமதியைப் பெறவேண்டும். அவ்வாறு அனுமதி பெறாமல் நடத்தப்படும் போராட்டங்கள் தடுத்துநிறுத்தப்படும்” என்று ஜனாதிபதி கூறினார். 

    “போராட்டங்களை கண்டனம் செய்த மதத்தலைவர்கள் குறிப்பிட்ட சில குழுக்களினால் அச்சுறுத்தப்படுவதாக செய்திகள் வருகின்றன. ஆர்ப்பாட்டங்களையும் வன்முறைகளையும் ஊடகங்கள் தூண்டிவிடுகின்றன. அறகலய குறித்து ஆராய ஆணைக்குழுவொன்றை நான் நியமிப்பேன். எந்த ஊடகங்கள் அவ்வாறு செய்கின்றன என்பதை நாம் கண்டறியவேண்டியிருக்கிறது” எனறும் அவர் தனதுரையில் மேலும் குறிப்பிட்டார். 

   இவ்வாறு ‘எதிர்கால அறகலயவுக்கு’ எதிராக அச்சுறுத்தல் விடுத்த அவர் மறுநாளும் (நவ.24) மீண்டும் சபையில் அதே அச்சுறுத்தலை வேறு ஒரு கோணத்தில் — அதாவது மனித உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் அமைப்ப்புக்களை குறிவைத்து — திசைதிருப்பினார். 

  “மனித உரிமைகள் என்ற போர்வையில் வன்முறையும் அராஜகமும் நிலவ நான் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை. எந்தவொரு தரப்பாவது அத்தகைய முயற்சியில் ஈடுபட்டால் அதை முற்றுமுழுதாக அடக்கியொடுக்க பாதுகாப்பு படைகள் பயன்படுத்தப்படும். நானும் கூட மனித உரிமைகளை பாதுகாக்க விரும்புகிறேன். ஆனால், வன்முறையையும் அராஜகத்தையும் அனுமதிக்கமுடியாது. மனித உரிமைகள் என்ற பெயரில் வன்முறையை விழைவிப்பவர்களை பாதுகாக்க முடியாது. 

  ” மனித உரிமைகளை பாதுகாப்பதாக கூறுகின்ற பேர்வழிகள் வெளிநாடுகளில் இருந்து வருகின்ற பணத்தில் வசதியான வாழ்க்கை நடத்துகிறார்கள். இதுவே யதார்த்தம். அவர்கள் அவ்வாறு செய்யவில்லை என்று எவராவது எழுந்து கூறமுடியுமா? அவர்களுடன் சேர்ந்து நான் பணியாற்றியிருக்கிறேன். அவர்களை பாதுகாத்திருக்கிறேன். இப்போது என்மீது அவர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள். குழப்பநிலையை நாட்டில் அனுமதிக்கமுடியாது” என்று விக்கிரமசிங்க கூறினார். 

    எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படக்கூடிய எந்தவொரு அறகலயவையும் அவசரகாலச் சட்டத்தையும் இராணுவத்தையும் பயன்படுத்தி ஒடுக்கப்போவதாக இன்று கூறுகின்ற விக்கிரமசிங்க கடந்த மே மாத முற்பகுதியில் அறகலய போராட்டம் உச்சக்கட்டத்தில் இருந்த வேளையில் ஒரு தடவை ஜனாதிபதி கோட்டாபய அரசாங்கம் கொழும்பு காலிமுகத்திடல் போராட்டக்களத்துக்கு அண்மையாக பெருமளவு பொலிஸ், இராணுவ வாகனங்களை கொண்டுவந்து நிறுத்தி அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் இறங்கியபோது அன்று அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்தி ‘கோட்டா கோ கம’வை அரசாங்கம் குழப்புவதற்கு முயற்சிக்குமானால் பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கான முயற்சிகளில் அரசாங்கத்துடன் ஒத்துழைப்பதை நிறுத்தப்போவதாகவும் பேச்சுவார்த்தைகளில் இருந்து விலகப்போவதாகவும் பாராளுமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எச்சரிக்கை செய்ததை இச்சந்தர்ப்பத்தில் நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது. 

   அது மாத்திரமல்ல, மே மாத நடுப்பகுதியில் பிரதமராக பதவியேற்றபோது ஜனாதிபதி கோட்டாபயவிடம் விக்கிரமசிங்க முன்வைத்த ஒரு கோரிக்கையையும் நினைவுபடுத்துவது பொருத்தமானதாகும். அறகலய போராட்டக்காரர்கள் மீது கைவைக்கக்கூடாது; அந்த போராட்டம் தொடர அனுமதிக்கப்படவேண்டும் என்பதே அந்த நிபந்தனையாகும். அந்த அரசாங்கமும் போராட்டத்துக்கு எதிராக எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. 

   எந்த அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்தி அறகலயவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று விக்கிரமசிங்க அன்று கோட்டாபய அரசாங்கத்திடம் கேட்டாரோ அதே அவசரகாலச் சட்டத்தை பயன்படுத்தி எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படக்கூடிய அறகலயவை ஒடுக்கப்போவதாக இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றுவதற்கு கிடைக்கக்கூடிய ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சூளுரைக்கிறார். 

  ஒரு சாதாரண பாராளுமன்ற உறுப்பினராகவும் பிறகு பிரதமராகவும் அவர் அறகலயவை நோக்கிய முறைக்கும் இப்போது ஜனாதிபதியாக அதை நோக்குகின்ற முறைக்கும் இடையில்உள்ள வேறுபாடு அவரின் அரசியல் சந்தர்ப்பவாதத்தின் ஒரு பக்கம். ஜனாதிபதியாக பாராளுமன்றத்தினால் தெரிவு செய்யப்பட்ட நாள் தொடக்கம் அறகலய போராட்டக்காரர்களுக்கு எதிராக விக்கிரமசிங்க ஆரம்பித்த வேட்டை இடையீடின்றி தொடருகிறது. அமைதிவழி போராட்டக்காரர்களுக்கு எதிராக கொடிய பயங்கரவாத தடைச்சட்டத்தையும் அவர் பயன்படுத்துகிறார். 

     இலங்கையின் வரலாறு காணாத மக்கள் கிளர்ச்சியின் அரசியல் முக்கியத்துவம் காரணமாகவும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை வெளிக்கொணர வேண்டிய கடப்பாடு காரணமாகவும் அறகலய காலகட்டத்தில் ஊடகங்கள் செயற்பட்ட முறையை அவை வன்முறையையும் ஆர்ப்பாட்டங்களையும் தூண்டிவிடுவதாக ஜனாதிபதி அர்த்தப்படுத்துவது ஊடக சுதந்திரத்துக்கு எதிரான அப்பட்டமான அச்சுறுத்தலாகும். 

ராஜபக்சாக்கள் போன்ற அரசியல் தலைவர்களுடன் ஒப்பிடும்போது மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக பண்புகளுக்கு ஒப்பீட்டளவில் கூடுதல் மதிப்பு கொடுக்கும் ஒரு தலைவராகவே விக்கிரமசிங்க அடையாளம் காணப்பட்டுவந்திருக்கிறார். ஆனால், ஜனாதிபதியாக அவர் இன்று மனித உரிமைகளுக்காக குரல்கொடுக்கும் அமைப்புக்களுக்கும் செயற்பாட்டாளர்களுக்கும் பெரிய ஒரு அச்சுறுத்தலாக மாறியிருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. 

  அண்மைய மாதங்களாக விக்கிரமசிங்க அரசாங்கம் எடுத்துவரும் நடவடிக்கைகளினால் பொருளாதார நெருக்கடியில் தணிவு ஏற்பட்டதாக கூறமுடியாது. எரிபொருள் நிரப்புநிலையங்கள் முன்னால் நீண்ட வரிசைகளில் மக்கள் காத்துக்கிடந்த நிலை இல்லாமல் போயிருக்கலாம். ஆனால், போக்குவரத்துக்காக மக்கள் பெருமளவு பணத்தைச் செலவு செய்யவேண்டியிருக்கிறது. போக்குவரத்து செலவு காரணமாக மக்கள் மருத்துவதேவை போன்ற அத்தியாவசிய தேவைகளுக்காகக்கூட பயணம் செய்யமுடியாமல் இருக்கிறது. 

  சில மாதங்களுக்கு முன்னர் இருந்ததைப் போன்று பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடு இல்லாமல் இருக்கலாம். ஆனால், அதிகப்பெரும்பான்மையான மக்களினால் உயர்ந்த விலைகளில் அந்த பொருட்களை வாங்க முடியாமல் இருக்கிறது. சமையல் எரிவாயு தாராளமாகக் கிடைக்கலாம். ஆனால், தற்போதைய உயர்ந்த விலையில் எத்தனை சதவீத மக்களுக்கு அதை வாங்கக்கூடியதாக இருக்கிறது?  

    வரிகள் அதிகரிப்பு அரசாங்கத்தின் வாடிக்கையாகிவிட்டது. வரவ — செலவுத் திட்டத்தின் மூலம் மக்கள் பொருளாதார இடர்பாடுகளில் இருந்து சிறிதளவேனும் விடுபடுவதற்கு எந்த நிவாரணமும் அறிவிக்கப்படவில்லை. நேரடி வரிகளும் மறைமுக வரிகளும் தான் அதிகரிக்கப்பட்டிருக்கின்றன. அதன் விளைவாக பொருட்களின் விலைகளில் ஏற்படப்போகின்ற கடுமையான அதிகரிப்பு ஏற்கெனவே திணறிக்கொண்டிருக்கும் மக்கள் மீது மேலும் சுமையை ஏற்றப்போகிறது. தற்போது கூட மக்கள் அத்தியாவசிய உணவு மற்றும் மருந்து பொருட்களுக்கு தினம் ஒரு விலைகொடுத்து வாங்கவேண்டியிருக்கிறது. 

   பெரும்பாலான மக்கள் தங்கள் உணவுப் பழக்கங்களை மாற்றிக்கொண்டுவிட்டார்கள். கணிசமான எண்ணிக்கையான குடும்பங்கள் அனேகமாக இரு வேளைகளே உணவு உண்கின்றன. வழக்கமான சத்தான உணவுப்பொருட்களை தவிர்த்து மலிவான உணவு வகைகளுக்கு மக்கள் தங்களை பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது. சிறுவர்கள் மத்தியிலான சத்துணவு பற்றாக்குறையில் தெற்காசியாவில் இலங்கை இப்போது முதலிடத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. 

    போக்குவரத்துச் செலவு, கற்றல் உபகரணங்களின் விலை அதிகரிப்பு மற்றும் காலைவேளை உணவின்மை காரணமாக நாட்டின் பல பகுதிகளிலும் பிள்ளைகள் பாடசாலைக்கு போவதை தவிர்க்கும் போக்கு அதிகரித்துவருவதாக கூறப்படுகிறது. மலையக தோட்டத்தொழிலாளர் குடும்பங்களில் உள்ள பிள்ளைகள் வாழ்க்கைச் செலவை சமாளிக்க பெற்றோரின் வருமானம் போதாமல் இருப்பதால் தாங்களும் தொழில் தேடிச் செல்வதால் கல்வியை இடைநிறுத்துவோரின் வீதத்தில் கடுமையான அதிகரிப்பு ஏற்பட்டிருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. 

  இவ்வாறாக இலங்கை சமூகத்தின் சகல பிரிவுகளின் மக்களும் பெரும் அவலத்துக்குள்ளாகியிருக்கிறார்கள். இதனால் மீண்டும் ஒரு அறகலய மூண்டு அது ஒரு ‘ரணில் கோ கம’ வாக மாறுவதை ஜனாதிபதி ஒருபோதும் விரும்பமாட்டார். பொறுமையின் விளிம்புக்குச் சென்று மக்கள் மீண்டும் வீதிகளில் இறங்குவதை தடுக்க முன்கூட்டியே அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் அவர் இறங்கியிருக்கிறார். 

  சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக ஜனாதிபதியும் அரசாங்கமும் கூறுகின்ற போதிலும் அடு்த்த வருடம் மார்ச்சுக்கு முன்னதாக அந்த நிதியத்திடமிருந்து கடனுதவி கிடைக்கக்கூடிய சாத்தியமில்லை. கடன்களை மறுசீரமைப்பது தொடர்பில் சீனா, இந்தியா மற்றும் நாடுகளுடன் முன்னெடுக்கப்படும் பேச்சுவார்த்தைகளில் இதுவரையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படவில்லை.  

   இதனால் வரும் நாட்களில் பொருளாதார நெருக்கடி மேலும் தீவிரமடையக்கூடிய ஆபத்து இருக்கிறது என்பது விக்கிரமசிங்கவுக்கு நன்றாக தெரியும். அறகலயவுக்கு எதிராக அவர் விடுக்கும் தொடர்ச்சியான அச்சுறுத்தலை இந்த பின்னணியிலேயே நோக்கவேண்டும். அவரின் இந்த அச்சுறுத்தல் உண்மையில் பொருளாதார நெருக்கடியில் அன்றாட வாழ்க்கையை ஒட்டுவதற்கு திணறிக்கொண்டிருக்கும் மக்களுக்கு எதிரான ‘போர்ப்பிரகடனமாகும்’.