மாதா- பிதா- குரு – தெய்வம்..! தூக்குக்கயிறும், நச்சுக்காயும்..!! (மௌன உடைவுகள் – 10) 

மாதா- பிதா- குரு – தெய்வம்..! தூக்குக்கயிறும், நச்சுக்காயும்..!! (மௌன உடைவுகள் – 10) 

— அழகு குணசீலன் — 

மட்டக்களப்பு மாணவர்கள் மூவர் நவம்பர் நடுப்பகுதியில் மரணித்திருக்கிறார்கள். இந்த மரணங்கள் அனைத்தையும் வழமையானவையாக சமூகம் கடந்து செல்ல நினைத்தால் அது போன்ற தவறு இருக்கமுடியாது. இந்த மரணங்கள் முதன்முதலாகவும் நடக்கவில்லை, அதேபோல் இறுதியானவையும் இல்லை. இது எல்லோருக்குமே தெரிந்த விடயம். 

 இருபது வயது கல்வியியல் கல்லூரி மாணவி ஞா.டிலானி தூக்குப்போட்டு தன் வாழ்வை முடித்துக்கொண்டுள்ளார். 

பத்தொன்பது வயதான கல்லூரி மாணவன் சுதாகரன் வர்ஷனன் நச்சுக்காயை தன் இறுதி உணவாக தேர்ந்தெடுத்தான். 

இருபத்தியிரண்டு வயதான வவுனியா கல்வியியல் கல்லூரி  ஆசிரிய மாணவன் ஜிந்துஜன் நோயுற்று சிகிச்சைகள் பயனளிக்காது இறந்ததாக செய்திகள் கூறுகின்றன. 

இவற்றில் மட்டக்களப்பு கல்லூரி மாணவன் வர்ஷனனின் தற்கொலை சமூகத்தில் பெரும் தாக்கத்தை – பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. வர்ஷனன் “அந்த முடிவை” எடுப்பதற்கு காரணமானவர்களை – அந்ந முடிவுக்கு அவனைத் தள்ளி விட்டவர்களை சமூகம் வீட்டுக்குள்ளும், பள்ளிக்குள்ளும் தான் தேடுகிறது. வர்ஷனன் மரணித்துவிட்டார் என்பதற்காக, அவரால் தன் நிலைப்பாட்டை மக்கள் முன் இனி வைக்க முடியாது என்பதற்காக முழுப் பொறுப்பையும் அவன்மீது போட்டு யாரும் தப்பிக்கொள்ள முடியாது.  

அவனை வாழ்வின் விளிம்புக்கு கொண்டுவந்து விட்டு, தற்கொலையில் தள்ளி விட்டவர்கள் ஒரு வகையில் அவனது மரணத்திற்கு காரணமாகிறார்கள். இன்னொரு வகையில் சொன்னால் அந்த மாணவன் அவமானம், அழுத்தம், அதிருப்தியாலும் அன்பு, அரவணைப்பு  இல்லாத உடல், உளரீதியான வன்முறையாலும் இந்த முடிவை மாற்றுவழி இன்றி எடுக்க வேண்டிய “நெருக்குவாரம்” இருந்துள்ளது. 

எங்களது பிள்ளைகள் அவர்களின் தகுதிக்கு ஏற்ப கற்கைநெறி ஒன்றைத் தேர்வு செய்வதைத் தவிர்த்து, பெற்றோரின் போலி அந்தஸ்து, கௌரவம், சமூக மேலாண்மை போன்றவற்றைக் காப்பாற்றுவதற்காகவும், கல்லாரியின் அந்தஸ்த்தையும், பெருமையையும் பறைசாற்றுவதற்காகவும் “சிலுவையை” சுமந்து “சிலுவையில்” அறையப்படுகிறார்கள். கல்வியின் நோக்கம் அறிவூட்டல் என்பதைக்கடந்து வெறும் பொருள்முதல்வாத வியாபாரமாக மாற்றப்பட்டுவிட்டது.   

பெற்ற பிள்ளையை, கற்பிக்கும் மாணவரை முதலாகப்போட்டு அதன் உற்பத்தி மூலம் அதிக இலாப, நன்மைகளை குடும்பமும், பள்ளிக்கூடமும் அடைந்து கொள்கின்ற ஒரு பண்ட உற்பத்தியாக கல்வி மாற்றப்பட்டுள்ளது. இதனால்தான் கல்வியாளர்கள் உட்பட அனைவரும் டாக்டராக, என்ஜினியராக, லோயராக “ஆக்க” முயற்சிக்கிறார்கள். அ…., ஆ…. அரிச்சுவடி தொடங்கும் போதே “உன்னை டாக்டர் ஆக்குவேன்” என்று சபதம் எடுக்கின்ற சமூக மனநோயினால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கிறார்கள். 

இன்றைய கல்விமுறையானது அன்றைய திண்ணைக் கல்விமுறை அல்ல. பரம்பரை வம்ச – வாரிசுக் கல்விமுறையும் அல்ல. அதனால் ஆத்தி சூடி, கொன்றை வேந்தன் காலத்து கதைகளை நாம் அப்படியே அர்த்தப்படுத்திக் கொண்டிருக்க முடியாது. இவற்றில் சில கருத்துக்கள் இப்பவும் பொருந்திப் போகலாம். பல தற்காலத்திற்கு பொருத்தமற்றவை. இயங்கியல் சமூகம் பல நூற்றாண்டுகளாக மாற்றங்கள் இன்றி ஒரே நிலையில் இருக்கமுடியுமா?  

“தந்தை சொல் மிக்க மந்திரமில்லை”  

“தாயிற் சிறந்ததொரு கோயில் இல்லை”

“எழுத்தறிவித்தவன் இறைவன்” போன்ற வாசகங்களை தவறாக விளங்கிக் கொண்டும் அவற்றை பயன்படுத்தியும் சமகால பிள்ளைகளையும்- மாணவர்களையும் கட்டிப்போட முடியாது.  

பிள்ளைகளை /மாணவர்களை உள, உடல் வன்முறைக்கு உள்ளாக்கி அவர்களின் சுயவிருப்புக்குமாறாக தங்கள் விருப்பு, வெறுப்புக்களை திணித்து செயற்படுகின்ற இந்த சமூகத்தில் சொல்மந்திரம், கோயில், இறைவன் என்ற வார்த்தைகளுக்கு இவர்கள் எந்த வகையில் அருகதையானவர்கள்? இவை குறித்து கேள்வி எழுப்புவதற்கான உரிமை மாணவர்களுக்கு மறுக்கப்படுகிறது.  

பிள்ளைகளின் /மாணவர்களின் சுயவிருப்பமும், சுயமாக தீர்மானம் எடுக்கும் உரிமையும் வாய்மூல, உடல்ரீதியான வன்முறைகள் மூலம் மறுக்கப்படுகிறது. பிள்ளைகளின் மனித உரிமையை நிராகரித்து செயற்பட்டு, “தந்தை மகற்காற்றும் உதவியை” வன்முறையை பிரயோகித்து “இவன் தந்தை என்னோற்றான் கொல்லெனும் சொல்” என்ற அறுவடையைப் பெற முடியுமா?   

சமூகம் இந்த வாசகங்களை தமக்கு பாதுகாப்பு கவசமாக பயன்படுத்தி தப்பிக்கொள்கிறது. இறுதியில் பிள்ளைகளின் மீது பழியைப் போட்டு தப்பித்துக் கொள்கிறது. பாடசாலைகளில் மாணவர்கள் மீது அதிபர், ஆசிரியர்களால் மேற்கொள்ளப்படும் வன்முறைகளைப் பார்த்தால் அவர்களுக்கு “ஐயா ஆறுவது சினம்” என்று மாணவர்கள் வகுப்பு எடுக்கவேண்டிய தேவை உள்ளது. இந்த வகுப்பில் கல்வி அதிகாரிகளும் கலந்து கொள்வது சாலச்சிறந்தது. 

கடந்த ஆண்டுக்கான க.பொ.த .உயர்தரப்பரீட்சை முடிவுகளில் அகில இலங்கை ரீதியில் சாதனை படைத்த இரு மட்டக்களப்பு மாணவர்களுக்கு ஆசிரியர்கள் முதல் ஆளுநர்வரை கொடுத்த முக்கியத்துவம் வழக்கத்திற்கு மாறானதும், சமூகத்திற்கு முன்மாதிரியற்றதுமாகும். இந்த தவறான முன்னுதாரணம் மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோருக்கும், அதிபர், ஆசிரியர், அதிகாரிகளுக்கும் ஒரு அழுத்தத்தை வழங்குவதாக உள்ளது.  

பல கல்வியாளர்கள் எனக்கு இதில் உடன்பாடு இல்லைத்தான் ஆனால் மற்றவர்களின் நம்பிக்கைக்கு குறுக்கே நிற்க விரும்பவில்லை என்று சொல்கிறார்கள். அப்படியானால் இவர்களின் சமூகப் பொறுப்பு என்ன? இவர்களும் சேர்ந்து இந்த சமூகச்சீரழிவுக்கு பங்களிப்பு செய்கிறார்களா? 

இப்படியான பேர்வழிகளுக்கு மார்ட்டின் லூதர் கிங்கின் பதில் இதுதான். 

” கொடியவர்கள் இழைக்கும் தீங்குகளிலும் பார்க்க, அவற்றை நல்ல மனிதர்கள் என்போர் அதிர்ச்சியூட்டுமளவிற்கு மௌனமாய் சகித்துக்கொண்டிருப்பது பற்றியே நாம் இந்தத் தலைமுறையில் வருத்தமுற வேண்டும்”.  

இவர்கள் சால்வைக்கும், மலர் மாலைக்கும் தலைகுனிபவர்களே அன்றி சமூகத்தின் வழிகாட்டிகள் அல்ல. சமூகத்தில் நிலவும் பலவீனங்களைப் பயன்படுத்தி குளிர்காய்பவர்கள். மௌனவிரதக்கார்கள். 

 உளவியலாளர்களின் கருத்துப்படி, ஒரு தற்கொலைச் செய்தி குறைந்தது இருபேர்களை நெருக்கடியான ஒரு சூழலில் நாமும் இப்படிச் செய்தால் என்ன என்று எண்ணத் தூண்டிவிடுகிறது. 

“ஒருவர் சுயவிருப்பில் தனது வாழ்வை முடித்துக்கொள்வதாக எடுக்கும் இந்த முடிவானது அதிகமான இளைஞர்களைப் பொறுத்தமட்டில் உண்மையில் இறப்பதற்கான விருப்பம் அல்ல. மாறாக ஒரு பெரிய பிரச்சினையில் இருந்து வெளிவருவதற்கு வேறு வழி தெரியாத நிலையில் எடுக்கப்படுகின்ற ஒரு அவசர முடிவு” என்பது உளவியலாளர் கருத்து. 

மிச்சேல் ஹம்பே இதை இவ்வாறு கூறுகிறார்: 

“வாழ்வில் எப்படியெல்லாம் – என்ன விலை கொடுத்தாவது அதிஷ்டத்தை அடையலாம் என்பது பற்றியே நாம் சிந்திக்கிறோம். ஆனால் இந்த எண்ணம் எங்களை துரதிஷ்டத்தில் கொண்டு விடுகிறது. யார் இதைச் செய்கிறார்களோ அவர்கள் வாழ்வை இழக்கிறார்கள் ” 

“வன்முறை மனதைப் புண்படுத்துகின்றது. அவர்கள் சிதைக்கப்பட்டதாக உணர்கிறார்கள். ஆதரவற்றவர்கள் என்ற உணர்வு ஏற்படுகிறது. சுய கட்டுப்பாடு இழக்கப்படுகிறது. இந்த சமூகத்தில் பெறுமதியற்றவன் – ஒரு செல்லாக் காசு என்ற உணர்வும் இணைந்து கொள்கிறது. ஆத்திரமும், அச்சமும் ஏற்பட நரம்புசார் உடல் இயக்கம் தற்கொலையை நாடுகிறது”. 

ஆக, இந்த நிலைக்கு ஒருவரை தள்ளி விடுபவர்களே தற்கொலைக்கு பொறுப்பாகிறார்கள் என்பது உளவியலாளர் முடிவு. 

 ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச சிறுவர்/ இளையோர் உரிமைப் பிரகடனம் பல விடயங்களை சட்டரீதியாக உறுதி செய்திருக்கிறது. ஆனால் வழமை போன்று பிரகடனத்தில் ஒப்பமிட்டுள்ள நாடுகளே அவற்றை முறையாக கடைப்பிடிப்பதாக இல்லை. அதுவும் இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் புராண,இதிகாச, கர்ணபரம்பரைக் கட்டுக்கதைகளை பிள்ளைகளுக்கு “திணிப்பதற்கு” கொடுக்கின்ற முக்கியத்துவத்தை பாடசாலைகள் கூட பிள்ளைகளின் உரிமைகள் பற்றிப் பேசுவதற்கு கொடுப்பதில்லை. 

இந்த பிரகடனமானது முக்கியமாக நான்கு அடிப்படைகளைக் கொண்டதாக உள்ளது. முக்கியமாக பிள்ளைகள் மகிழ்ச்சியான மனநிலையுடன் வளரவேண்டும். அவர்கள் சம்பந்தமான எந்த முடிவையும் அவர்களின் விருப்பத்திற்கு மாறாக அல்லது அவர்களின் கருத்தறியாது, கலந்துரையாடாது எடுக்க முடியாது. பிள்ளைகள் உள, உடல்ரீதியான ஆரோக்கியத்துடன் வளர்வதுடன், புறக்கணிக்கப்பட்டவர்களாக அல்லது ஒதுக்கப்பட்டவர்களாக, சமசந்தர்ப்பங்கள் மறுக்கப்பட்டவர்களாக வளரக் கூடாது. 

காலனித்துவக் கல்விக்கொள்கையின் எச்சமாக தொடரும் இலங்கை கல்விமுறைமையானது மாணவர்களின் சுவிருப்புக்குமாறாக பெற்றோராலும், ஆசிரியர்களாலும் திணிக்கப்படுகின்ற ஒன்றாகவே உள்ளது. பிள்ளைகளின் உண்மையான தகுதியை விடவும் பெற்றோரின், ஆசிரியர்களின் எதிர்பார்ப்பு உயர்வாக உள்ளது. இன்றைய நிலையில் பெரும்பாலான வீடுகளிலும், பாடசாலைகளிலும் பிள்ளைகளின் அடிப்படை உரிமைகள் மீறப்படுகின்றன. இவை மனித உரிமை மீறலின்பாற்பட்டவை. எழுத்தறிவித்த இறைவனே (?) பாலியல் வன்முறைக்கு உட்படுத்துகிறான், உள, உடல் வன்முறையை மாணவர்களுக்கு செய்கிறான். 

பெற்றோரும், கல்லூரி அதிபர்களும், ஆசிரியர்களும் பிள்ளைகளின் ஆளுமையை அறிந்து செயற்படவேண்டிய கண்ணியமான பொறுப்பை கொண்டவர்கள். வர்ஷனனின் மரணத்தோடு பேசப்படும் புள்ளிப்பகுப்பாய்வு முறையானது மாணவர்களில் ஒரு பகுதியினரை கெட்டிக்காரர்கள் என்றும், மறு பகுதியினரை கெட்டித்தனம் அற்றவர்கள் என்றும் பிரித்து இரண்டாம் தர மாணவர்களாகப் பிரகடனம் செய்வதாக அமைகிறது.  

உண்மையில் இந்த பகுப்பாய்வின் நோக்கம் பிள்ளைகளின் தரத்தை அறிந்து ஊக்கப்படுத்துவதாக கூறப்பட்ட போதும் வெறுமனே டாக்டர்களையும், என்ஜினியர்களையும், லோயர்களையும் அல்லது ஐ.ரி. யையும் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை முறையாகவே உள்ளது. இந்தப் பகுப்பாய்வின் நோக்கம் கெட்டிக்கார்களை ஊக்குவிப்பதற்கு மாறாக கெட்டித்தனம் குறைந்தவர்களை இனம்கண்டு ஊக்குவிப்பதை இலக்காகக் கொண்டது. ஆனால் எமது கல்விச்சமூகம் இதைத் தலைகீழாக்கி குத்துக்கரணம் அடிக்கிறது. 

இலங்கைச் சமூகங்களில் பொதுவாகவும் தமிழ்ச் சமூகத்தில் சிறப்பாகவும் உள்ள பிள்ளை வளர்ப்பு-கல்வியூட்டல் மனநிலையில் மாற்றங்கள் தேவை. 

(*) பெற்றோர், ஆசிரியர்கள் சொல்வதையே பிள்ளைகள்/ மாணவர்கள் கேள்விக்குட்படுத்தாது பின்பற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு. 

(*)  பிள்ளைகள் தொடர்பான தீர்மானங்களில் அவர்களது விருப்பத்தை அறியாது, கலந்துரையாடாது வளர்ந்தோர் தன்னிச்சையாக முடிவுகளை எடுத்தல் அல்லது அந்த முடிவை ஏற்க அழுத்தம் கொடுத்தல். 

(*) உள, உடல்ரீதியாக தண்டனை வழங்கும் கல்வியூட்டல் பாரம்பரியம். இது வன்முறை, மனித உரிமை மீறல். குற்றவியல் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படக்கூடிய குற்றம். 

(*) பெற்றோரின் விருப்பை நிறைவுசெய்வதற்காக பிள்ளைகள் உள, உடல் பாதிப்புக்களுடன் சுமக்க முடியாத சுமையைக் தூக்க கட்டாயப்படுத்தப்படுகின்றனர். 

மட்டக்களப்பில் மாட்டு வண்டிகளில் அளவுக்கதிகமாக சுமையை ஏற்றி மணல் வீதிகளில், ஏற்றங்களில் இழுக்கமுடியாத நிலை ஏற்படும்போது வண்டில் மாடுகள்  நிலத்தில் விழுந்து படுத்துவிடும். அல்லது நுகம் போடும் – மாடு தன் கழுத்துடன் கட்டப்பட்டுள்ள நுகத்தை கழட்டிவிடும். இதன் மூலம் வண்டிக்காரனுக்கு அது சொல்லுகின்ற செய்தி என்ன? என்னால் இந்த சுமையை இன்னும் தூக்கவோ, இழுக்கவோ முடியாது என்பதுதான். ஆனால் அதை வண்டிக்காரன் கேட்டபாடில்லை. வாலை முறுக்குவான், வாலைக் கடிப்பான், அடிப்பான், நிலத்தில் நெருப்பு மூட்டி மிளகாய்ப் புகையடிப்பான், சூட்டுக்கோலும் வைப்பான்..! 

இவ்வாறு மாணவர்களால் தூக்கக் கூடிய சுமைக்கு அதிகமாக அவர்களுக்கு ஏற்றி, பெற்றோரும், கல்லூரிகளும், ஆசியர் சமூகமும் தங்கள் இலக்கை அடைய – முகத்தை காப்பாற்றிக்கொள்ள மாணவர்களை பலியிடுகின்ற இந்த வன்முறைக் கல்வியூட்டல் நிறுத்தப்படவேண்டும். வண்டில் மாடுகளுக்கு தற்கொலை செய்யத்தெரியாது ஆனால் மிருகவதைச் சட்டத்தின் கீழ் வண்டிக்காரனைத் தண்டிக்கமுடியும். 

அதேபோன்று இவ்வாறான உயிர் இழப்புக்களை இனிவரும் காலங்களில் தவிர்ப்பதற்கு சம்பந்தப்பட்ட சிலரை சட்டத்தின் முன் நிறுத்துவது தவிர்க்க முடியாதது. கல்விச்சமூகத்திற்கும் குறிப்பாக சட்ட, நிர்வாகச் சமூகத்திற்கும், சிவில், மற்றும் மனித உரிமை அமைப்புக்களுக்கும் இது விடயமாக இன்னும் நிறையவே வேலை இருக்கிறது. 

இறுதியாக வர்ஷனனின் வயது 19. அவர் வயது வந்தவர். சட்டப்படி வர்ஷனன் என்ன செய்யவேண்டும் என்று பெற்றோர், ஆசிரியர்கள் அவனைக் கட்டுப்படுத்தவோ, கட்டாயப்படுத்தவோ முடியாது. அப்படிச் செய்வது அவனது தனிநபர் அடிப்படை உரிமை மீதான தலையீடும், மறுப்புமாகும். வர்ஷனனுக்கு தனது எதிர்காலம் குறித்து முற்றுமுழுதாக சுயமாக தீர்மானிக்கின்ற உரிமையை சட்டம் வழங்குகிறது. அவனது உரிமையை மற்றவர்கள் பறித்ததன் விளைவே வர்ஷனனின் இழப்பு. 

இவை இலகுவானவை அல்ல. ஆனால் பூனைக்கு யாராவது மணியை கட்டியே ஆகவேண்டும். இல்லையேல் நாங்கள் வர்ஷனனுக்கு செலுத்தும் அஞ்சலி அர்த்தமற்றதாகிவிடும். டாக்கர்களை உருவாக்குகிறோம் என்று கூறிக்கொண்டு தற்கொலையாளிகளையே உருவாக்குகிறோம்.