‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர் (வாக்குமூலம்-39) 

‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர் (வாக்குமூலம்-39) 

— தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் — 

தமிழ் மக்களுக்குக் கௌரவமான அரசியல் தீர்வுவேண்டி (அந்தக் கௌரவமான அரசியல் தீர்வு என்னவென்று தெளிவாகக் கூறாமல்) வடக்கு கிழக்கு மாகாணங்களின் மாவட்டங்கள் தோறும் பவனி வந்த ‘வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு’ தமது 100 நாள் பவனியின் முடிவில் தற்போது பூனையை அவிழ்த்திருக்கிறார்கள். ‘அரசியல் தீர்வுக்கான மக்கள் பிரகடனம்’ மூலம் அக்குழு அதனை வெளிப்படுத்தியிருக்கிறது. இந்தப் பிரகடனம் 10.11.2022 அன்று யாழ் இந்திய துணைத் தூதுவர் ஸ்ரீ ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரனிடம் அக்குழுவினரால் கையளிக்கப்பட்டும் உள்ளது. 

‘ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப்பெறமுடியாத சமஸ்டி முறைமையிலான அதிகாரப் பகிர்வைத் தரவேண்டும்’ என்பதே அக்குழுவின் மக்கள் பிரகடனம். 

கேட்பதற்குக் காது குளிர்கிறது. இதைத்தானே தமிழ் மக்கள், தமிழரசுக் கட்சி தோற்றம் பெற்ற 1949 இலிருந்து புதிய குடியரசு அரசியலமைப்பு 1972இல் நிறைவேற்றப்படும் வரை கோரி வந்தார்கள். பின்னர் 2009இல் ஆயுதப்போராட்டம் முடிவுக்கு வந்த பின்னர் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் இன்று வரை கூறி வருகிறார். தமிழ் மக்கள் தேசியக்கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரனும் இதைத்தான் சொல்லி வருகிறார். ‘இரு தேசம்; ஒரு நாடு’ என்று உச்சாடனம் பண்ணும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் அவ்வப்போது இதைத்தான் வெளிப்படுத்தி வருகிறார். ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவும் ‘மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி’ என்று இதைத்தானே தமது கட்சியின் கொள்கையாக வெளிப்படுத்தியுள்ளார். இவர்கள் எல்லோருமே ஜனநாயக ரீதியாக மக்களால் தேர்தலில் தேர்வு செய்யப்பட்டுப் பாராளுமன்றத்தில் மக்கள் பிரதிநிதிகளாக உள்ளார்கள். ஆக இந்த வடக்கு கிழக்கு இணைந்த ‘சமஷ்டி’ விடயத்தில் புறநடையாக இருப்பவர் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஒரே ஒரு பாராளுமன்ற உறுப்பினரான அக்கட்சியின் தலைவர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) மட்டுமே. வடக்கு கிழக்கு மாகாணத் தமிழர்களைப் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் அரசியல் கட்சிகளை மட்டுமே இப்பத்தி குறிப்பிடுகிறது. 

 1949 இலிருந்து 1976 வரையிலான அஹிம்சைப் போராட்டமும் 1976 இலிருந்து 2009 வரையிலான ஆயுதப் போராட்டமும் 2009 இலிருந்து இதுவரையிலான இராஜதந்திரப் (?) போராட்டமும் இலங்கையின் ஆட்சியதிகாரத்தில் எப்போதும் வீற்றிருந்த/ வீற்றிருக்கும் பௌத்த சிங்களப் பேரினவாத அரசாங்கங்கள் மீது ஏற்படுத்தாத அழுத்தத்தை அல்லது மனமாற்றத்தை மக்கள் அங்கீகாரம் பெறாத சிறு குழுவான இந்தத் ‘திடீர்’ ‘வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு’ வின் மேற்படி ‘அரசியல் தீர்வுக்கான மக்கள் பிரகடனம்’ ஏற்படுத்தப் போகிறதா? தமிழ்த் தேசிய அரசியலில் இதுவும் ஒரு ‘ஏட்டுச் சுரக்காய்’ தான். இதுவும் அரசியல் பொது வெளியில் ‘பொங்குதமிழ்’ – ‘எழுகதமிழ்’ -‘பொத்துவிலிருந்து பொலிகண்டி வரையிலான பேரணி’ (P2P) – ‘பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரிக் கையெழுத்து வேட்டை’ போன்ற தேர்தல் தேவைகளை நோக்காகக் கொண்ட வெறும் ‘சிலுசிலுப்பு’ த்தான் ‘பலகாரம்’ ஆவது கேள்விக்குறி. 

இலங்கைப் பாராளுமன்றத்தில் வடக்குக் கிழக்குத் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல தமிழ் அரசியற் கட்சிகளும் பாராளுமன்றத்திற்கு வெளியே செயற்படுகின்ற அரசியல் கட்சிகளும் பொதுமக்களும் இணைந்து ஒரு பாரிய வெகுஜன இயக்கத்தைப்- போராட்டத்தைத், தற்போது அரசியலமைப்பின் ஓர் அங்கமாகவுள்ள 13 ஆவது அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்தை முழுமையாகவும்முறையாகவும் அமுல் செய்யக்கோரி முன்னெடுத்தால் மட்டுமே ஏதாவதொரு நேர்மறையான விடயம் விளையச் சாத்தியமுண்டு. ஏனெனில், மேற்படி மக்கள் பிரகடனம் கூறும் இலக்கை அடைவதென்றாலும் கூட அதற்கு ஆரம்பமாகவும் அடிப்படையாகவும் 13 ஆவது அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் அமைதலே சாத்தியம். எனவே, ‘வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு’வின் அடுத்தகட்ட உடனடிப் பணி அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளையும் தேர்தல் அரசியலுக்கப்பால் ஒன்றிணைப்பதற்கான வெகுஜனப் போராட்டத்தை ஆரம்பிப்பதாகும். இல்லையேல் பிரகடனம் செல்லாக்காசாகிவிடுவதோடு காலத்தை வீணடித்ததாகிவிடும்.