தமிழ் கட்சிகள் இணைவு – ஒரு கனவு! 

தமிழ் கட்சிகள் இணைவு – ஒரு கனவு! 

   — கருணாகரன் — 

சுமந்திரனும் கஜேந்திரகுமாரும் இணைந்தால்…! தமிழ் அரசியல் மாற்றத்துக்குள்ளாகுமா? அப்படியான அதிசயமொன்று நிகழுமா? என்ற விருப்பக் கேள்விகளுக்கான பதிலை அண்மைக்காலச் சம்பவங்கள் மிகத் துலக்கமாகக் காட்டுகின்றன. இதை விளங்கிக் கொண்டால் மேற்படி கேள்விகளுக்கான பதில் எளிதாகக் கிடைக்கும். 

ஆனால், அரசியலில் எதுவும் எப்போதும் நடக்கலாம். எதிரிகள் நண்பர்களாவதும் நண்பர்கள் எதிரிகளாவதும் சாதாரணம். அந்த வகையில் இணைவும் பிரிவும் எப்போதும் எப்படியும் நிகழலாம் என நீங்கள் எண்ணக் கூடும். 

இருந்தாலும் சிங்கள, முஸ்லிம் தரப்புகளைப் போல நெகிழ்ச்சியைக் கொண்டதல்ல, தமிழ் அரசியல். அது துரோகம் –தியாகம் என்ற அடிப்படையில் கறுப்பு – வெள்ளையாகக் கட்டமைக்கப்பட்டது. அதாவது இறுக்கமான கட்டமைப்பு. இதனால் இந்தக் கரடுமுரடுத் தன்மையைக் கடந்து எதுவும் நடப்பதென்பது எளிதானதல்ல. இதுவே பிரச்சினை. 

இதற்கு மேலும் ஒரு நல்ல உதாரணம், தற்போது நடந்து கொண்டிருக்கும் திருக்கூத்தாகும். 

அடுத்த ஆண்டுக்குள் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணத் தாம் தயார் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்ததை அடுத்து, அதற்கான தயாரிப்புகளுக்காக தமிழ்க்கட்சிகள் அனைத்தையும் சம்மந்தனின் வீட்டில் கூடுமாறு சுமந்திரன் அழைப்பு விடுத்தார். 

சுமந்திரனின் அழைப்புக்கு மாவை சேனாதிராஜா மட்டுமே செவி கொடுத்து சம்மந்தனின் வீட்டுக்குச் சென்றார். கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளிலிருந்து எவரும் போகவில்லை. இவ்வளவுக்கும் அன்று காலை கொழும்பில் ஐ.நா பிரதிநிதிகளுடன் நடந்த சந்திப்பில் ரெலோ – செல்வம் அடைக்கலநாதனும் புளொட் – சித்தார்த்தனும் கலந்து கொண்டனர். 

ஆனால், கொழும்பிலுள்ள சம்மந்தன் வீட்டில் நடந்த மாலைக் கூட்டத்துக்குப் போகாமல் இருவரும் தவிர்த்துள்ளனர். பங்காளிக் கட்சிகள் மட்டுமல்ல, அதற்கு வெளியே உள்ள ஆனந்தசங்கரி, கஜேந்திரகுமார் அணி, சுரேஸ் பிரேமச்சந்திரன், முருகேசு சந்திரகுமார், சுகு ஸ்ரீதரன், சி.கா. செந்தில்வேல், கிழக்குத் தமிழர் ஐக்கிய முன்னணி, விக்னேஸ்வரன், ஐங்கரநேசன், அனந்தி சசிதரன், சிவாஜிலிங்கம் – ஸ்ரீகாந்தா போன்றோரும் இந்த அறிவிப்பைப் பொருட்படுத்தவேயில்லை. 

இதனால் வேறு வழியின்றி,வேறொரு இடத்தில், வேறொரு திகதியில் கூட்டத்தை நடத்துவதற்கு யோசிக்கப்படுவதாக சம்மந்தன் அறிவித்திருக்கிறார். தற்போதுள்ள அரசியல் தலைவர்களில் வயதில் மூத்தவர் சம்மந்தனே. பாராளுமன்றத்திலும் தமிழ்த்தரப்பில் செல்வாக்குள்ள தரப்பின் தலைவராகவும் சம்மந்தனே உள்ளார். பேச்சுகளிலும் அவருக்கு முக்கிய இடமளிக்கப்படும். 

இப்படியெல்லாம் இருந்தும் சம்மந்தனுடைய அழைப்பு புறக்கணிக்கப்பட்டுள்ளது. மட்டுமல்ல, சம்மந்தனின் சார்பாக அழைப்பை விடுத்தவர் சுமந்திரன். சுமந்திரன் கூட்டமைப்பின் பேச்சாளர். தமிழசுக் கட்சியில் இரண்டாம் நிலைத்தலைவர். இருந்தும் அவருடைய அழைப்பு செவிகூரப்படவில்லை. 

என்றால் இவர்களுடைய அரசியல் மதிப்பு – பெறுமானம் எப்படியிருக்கிறது? என்ற கேள்வி எழுகிறது. இது சிங்களத்தரப்பிலும் அரசாங்க மட்டத்திலும் பலவீனமாகவே உணரப்படும். மட்டுமல்ல, சர்வதேசப் பரப்பிலும் பிராந்திய சக்தியாகிய இந்தியாவிடத்திலும் இது கூட்டமைப்பின் வீழ்ச்சியையே காட்டும். ஆக மொத்தத்தில் மிகப் பெரிய சரிவை நோக்கி தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் தமிழரசுக் கட்சியும் போய்க் கொண்டிருக்கிறது என்பதை இதுவும் நிரூபிக்கிறது. 

இந்த நிலையில் எப்படி சுமந்திரனும் கஜேந்திரகுமார் அணியும் இணைய முடியும்? அப்படி இணைந்தாலும் அந்த இணைவு எவ்வளவு காலத்துக்குத் தாக்குப் பிடிக்கும்? ஏனைய தரப்புகள்தான் கூட்டமைப்பின் அரசியலோடு ஓரளவுக்கு ஒத்துப் போகக் கூடியவை. சமஸ்டியையோ 13 ஆவது திருத்தத்தையே ஏற்றுக் கொள்ளும் நிலையில் உள்ளவை. ஆனால் கஜேந்திரன்களின் அரசியல் அவ்வாறானதல்ல. அவர்களுடைய இயல்பும் வேறானது. 

இப்பொழுதே கஜேந்திரகுமார் ரணிலின் அரசியல் தீர்வு அறிவிப்பைப் பற்றி எதிர்மறையாகப் பேசத் தொடங்கி விட்டார். இந்த நிலையில் சுமந்திரன் –கஜேந்திரகுமார் இணைவு சாத்தியக் குறைவானதே. 

ஆனால், இருவரிடத்திலும் சில திறமைகள் உண்டென்பது உண்மை. ஆனால், அது ஒடுக்குறைக்குள்ளாகியிருக்கும் மக்களின் அரசியல் விடுதலைக்கு உதவக்கூடியதல்ல. அதற்கு மக்கள் அரசியலைச் செய்ய வேண்டும். மக்கள் அரசியலைச் செய்ய வேண்டும் என்றால் மக்களுடன் வாழத் தயாராக வேண்டும். அது என்ன என்று தெரியவேண்டும். அதற்கான உளநிலை வேண்டும். மக்களுடைய பிரச்சினைகளை தங்களின் பிரச்சினையாக உணரக் கடிய பண்பு வேண்டும். அல்லது நடைமுறை அனுபவத்தில் மக்கள் சந்தித்த பாதிப்புகளையும் நெருக்கடிகளையும் சந்தித்திருக்க வேண்டும். 

இப்பொழுது சுமந்திரனால் விடப்பட்ட  அழைப்பைப் பார்த்தீர்களா? அதை அவர் விடுத்திருக்க வேண்டிய முறையே வேறு. ஏனென்றால்,அவர் கூட்டமைப்பின் பேச்சாளர். விடப்பட்ட அறிவிப்பு இந்தக் காலகட்டத்தில் முக்கியமானது. அல்லது அவருடைய நோக்கம் இந்தச் சந்தர்ப்பத்தில் – பேச்சுக்குச் செல்வதற்கு முன்பு ஒழுங்கமைக்க வேண்டும் என்ற வகையில் முக்கியமானது. அதுவும் சம்மந்தனால் விடச்சொன்ன அழைப்பு. 

அதை வெறுமனே ஊடகச் செய்தியாக விடுக்க முடியாது. இதையே இந்த அழைப்புத் தொடர்பாக ஏனைய தலைவர்களும் சொல்கிறார்கள். தங்களுக்கு உத்தியோகபூர்வமாக எத்தகைய அறிவிப்பும் கிடைக்கவில்லை என்று. 

உத்தியோகபூர்வ அழைப்பு என்றால், அதில் எந்த அடிப்படையில் ஒன்று கூடல் நடக்கிறது? யார் தலைமையில் சந்திப்பு நடக்கும்? அதில் பேசப்படும் விடயங்கள் என்ன? இந்த மாதிரி ஒரு நிகழ்ச்சி நிரலையும் இணைத்தே அறிவிப்பை – அழைப்பை விடுக்க வேண்டும். அதுவும் முரண்நிலைக்குள்ளாகியிருக்கும் தமிழ் அரசியற் தரப்புகளை விசுவாசமாகவே அழைப்பதாக இருந்தால், சுமந்திரன் நேரடியாகக் களத்தில் இறங்கி ஒவ்வொரு தரப்பையும் சந்தித்திருக்க வேண்டும். அப்படிச் சந்தித்திருந்தால் அதன் பயன் – பெறுமதி கூடியிருக்கும். சில வேளை அப்படி நேரில் சென்று அழைத்த பின்னும் சிலர் கலந்து கொள்ளத் தயங்கி நின்றாலும் சுமந்திரனின் மதிப்பும் கூட்டமைப்பின் மதிப்பும் கூடியிருக்கும். ஆகக் குறைந்தது சுமந்திரன் சம்மந்தப்பட்டோருடன் பேசியிலாவது நேரம் ஒதுக்கிப் பேசியிருக்க வேண்டும். கூட அவர் செய்யவில்லை. 

இதை அவரிடம் நாம் எதிர்பார்க்க முடியாது. அவரிடம் மட்டுமல்ல, அவருடைய அரசியற் குருவான சம்மந்தனிடமும் எதிர்பார்க்கவியலாது. இதுதான் இவர்களுடைய பிரச்சினையே. மக்களைப் பற்றியோ அரசியல் தீர்வைக் குறித்தோ இவர்களுடைய இதயத்தில் ஆத்மார்த்தமான ஈடுபாடு இல்லை. சம்மந்தனை விட அரசியலிலும் வயதிலும் குறைந்த ஸ்டாலின் இன்று தமிழகத்தில் செயற்படுகின்ற விதத்தை சம்மந்தன் கவனிக்க வேண்டும். எதிரும் புதிருமான தரப்புகளையெல்லாம் முடிந்தளவுக்குத் தன்னுடைய கைகளில் கொண்டு வந்திருக்கிறார் ஸ்டாலின். அப்படிச் செய்தபடியால்தான் அவரால் பா.ஜ.கவின் நெருக்கடியைச் சமாளித்து நிற்க முடிகிறது. தமிழக அரசியலைப் பலரும் வியக்கும்படி செய்யவும் முடிந்திருக்கிறது. 

இதற்குக் காரணம் ஸ்டாலின் தன்னுடைய இதயத்தைச் சற்று அகலமாக்கி வைத்ததுதான். என்றபடியால்தான் திருமாவளவனும் இடதுசாரிகளும் வை.கோவும் முஸ்லிம் லீக்கும் ஒன்றிணைந்து நிற்க முடிந்தது. 

ஆகவே பிற சக்திகளை ஒரு புள்ளியில் ஒன்றிணைய வைப்பதென்பது ஒரு கலை. ஏனென்றால் வெவ்வேறு அரசியற் கட்சி என்றாலே கொள்கை, நடைமுறை, அணுகுமுறை, ஆளுமை, தனிநபர் இயல்பு எனப் பல வேறுபாடுகளும் தனித்தன்மைகளும் இருக்கும். இதையெல்லாம் விளங்கிக் கொண்டே அழைப்பு விடுக்கப்பட வேண்டும். அழைப்பை பகிரங்க வெளியில் விடுவதையும் விட நேர்ப்பேச்சாக முன்னெடுப்பதே எப்போதும் கூடுதலான பயனைத் தருவதுண்டு. 

பெரும்பாலான அரசியற் கூட்டுகள் அப்படித்தான் அமைவது – அமைக்கப்படுவது. இதைத்தான் அழைக்கும் விதத்திலேயே அதனுடைய பெறுமதியை தெரியும் என்று சொல்வது. உண்மையில் இந்த அழைப்பே ஒரு வேலைத்திட்டமாகும். 

ஆகவே ஒன்றிணைவுக்கான அடிப்படை வேலையைச் செம்மையாகச் செய்ய வேண்டும். அதற்கான பொறுப்பை உரியவர்கள் உணர்ந்து செயற்பட வேண்டும். அத்தகைய பண்பு இன்றுள்ள தமிழ் அரசியற் தரப்புகள் பலவற்றிடமும் இல்லை. ஏட்டிக்குப் போட்டியாக யாரிக்கு நிற்கும் சிறுபிள்ளைத்தனத்தையே காணமுடிகிறது. 

தலைவர்களில் பெரும்பாலானோர் மிகுந்த உளச் சிக்கலுக்குள்ளானோராகவே உள்ளனர். தங்கள் நிலை என்ன? தகுதி என்ன? தாம் என்ன செய்கிறோம்? என்ன செய்ய வேண்டும்? என்பதில் தெளிவோ சீரிய சிந்தனையோ இல்லாதவர்களாகவே உள்ளனர். குறைந்த பட்சம் சமகால நிலைமையையும் மிகக் கிட்டிய கடந்த கால அனுபவத்தையும் கூடப் பரிசீலித்துப் பார்க்க முடியாதோராக இருக்கிறார்கள். 

இவ்வளவுக்கும் தமிழ் மக்களோ சிறுபான்மையினர். அதிலும் ஒடுக்குப்படும் நிலையில் இருப்போர். போராட்டத்திலும் போரிலும் தோற்கடிக்கப்பட்டோர். இழப்புகளையும் பாதிப்புகளையும் தங்கள் தலைக்கு மேலா சுமக்க முடியாமல் சுமந்து கொண்டிருப்போர். இந்த யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு அந்த மக்களுக்கான விடுதலைப் பெறுவதைப்பற்றிச் சிந்திக்க வேண்டிய தலைவர்கள், நான் பெரிதா? நீ பெரிதா என்று கங்கணம் கட்டிக் கொண்டு நிற்கிறார்கள். 

இன்னொரு சாரார், தமது அரசியல் செல்வாக்கென்ன? பலமென்ன? என்பதைக் கூடப் புரிந்து கொள்ள முடியாமல் உள்ளனர். பெரும்பாலானோர்கள் கற்பனைக் குதிரையில் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். யதார்த்தம் என்ன என்பதைக்கூட மதிப்பிட முடியாதோராக. இதில் சிலர் கடந்த காலத்தில் பெறுமதியான பங்களிப்புகளைச் செய்தவர்கள். இருந்தாலும் இவர்கள் கூட இப்போதுள்ள தங்களின் நிலையையும் தங்கள் கட்சியின் செல்வாக்கையும் பற்றிப் புரிந்து கொள்ள முடியாதாராகவே இருக்கிறார்கள். மக்களுக்கும் தமக்கும் இடையில் உள்ள உறவையும் இழந்து விட்டனர்.. இருந்தாலும் தம்மைப் பற்றிய பெரீய்ய நினைப்புகளோடுதானிருக்கிறார்கள். இது எவ்வளவு பிழை. எவ்வளவு பலவீனம்! 

இப்படியான நிலையில்தான் இணைவு, ஒற்றுமை பற்றியெல்லாம் பேசப்படுகிறது. இதில் பல வகையான இணைவுகள் அல்லது ஒன்றுபடுதல்கள் பற்றிச் சிந்திக்கப்படுகிறது. 

1.     சுமந்திரன் –கஜேந்திரகுமார் இணைவு (பெரும்பாலும் இது கற்பனையானதே) ஒரு உறைக்குள் இரண்டு வாள்கள் இருக்க முடியாதல்லவா! 

2.     கூட்டமைப்போடு (தமிழரசு, புளொட்,ரெலோ) சுரேஸ், விக்னேஸ்வரன், சிவாஜிலிங்கம் –ஸ்ரீகாந்தா போன்றோரின் ஒன்றிணைவு. அதாவது பிரிந்தவர்கள் மீண்டும் இணைந்து கொள்வது. 

3.     தமிழ்த்தேசிய அடையாளத்துக்கு அப்பால் உள்ள தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி,சமத்துவக்கட்சி,ஈபிஆர்எல்எவ்,தமிழ்த்தேசிய பசுமை இயக்கம், ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகம், புளொட்,ரெலோ, கிழக்குத் தமிழர் ஐக்கிய முன்னணி, புதிய லெனினிஸ மாக்ஸிஸக் கட்சி போன்றவற்றின் இணைவு. 

4.     அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் ஈ.பி.டி.பி, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் மற்றும் வடக்குக்கிழக்கில் உள்ள சிறு தரப்புகள். 

எதுவானாலும் இணைவு –ஒன்றுபடுதல் என்பது தமிழரசியலில் மிகக் கடினமான ஒன்றாகவே உள்ளது. குலுக்கப்படும் கை ஒன்றென்றால் மறு கையில் கத்தி இருக்கும் என்ற நிலை. இதுதான் வரலாறாகவும் உள்ளது.