— கருணாகரன் —
“போருக்குப் பிந்திய அரசியல் என்கிறீர்களே! அது என்ன?” என்று கேட்டார் மூத்த அரசியல் தலைவர் ஒருவர்.
“அதைத்தானே சர்வதேச சமூகம் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக இலங்கையில் வலியுறுத்திக் கொண்டிருக்கிறது” என்றேன்.
“சர்வதேச சமூகம் என்ன சொல்லுது?” என்று திருப்பிக் கேட்டார் தலைவர்.
“நான் உட்படப் பலர் அதைப்பற்றி எழுதி வருகிறோம். சிராஜ் மஷ்ஹூர் போன்றோரின் பேட்டிகளில் இதுபற்றி விரிவாக உரையாடப்பட்டுள்ளது. இதை விட ஊடகத்துறையினர், சமூகச் செயற்பாட்டியக்கத்தினர் போன்றோருக்கெல்லாம் பல கோடிக் கணக்கான பணத்தைச் செலவழித்து, போருக்குப் பிந்திய நிலைமாறு காலகட்ட நீதியைப் பற்றியும் போருக்குப் பிந்திய அரசியற் சூழமைவு பற்றியும் சர்வதேச சமூகத்தினர் விளக்கியிருக்கிறார்கள். வதிவிட கருத்தமர்வுகள் பல நடத்தப்பட்டன. போருக்குப் பிந்திய அரசியல் முன்னெடுப்புக்காக செயலணிகள் கூட உருவாக்கப்பட்டன. புத்திஜீவிகள், கலைஞர்கள் போன்றவர்களும் இதற்கான வேலைத்திட்டங்களில் இணைந்திருந்தனர். அரசியல் கட்சிகள், தலைவர்கள் என அரசியற் தரப்புக்கும் போருக்குப் பிந்திய அரசியல் பற்றி வலியுறுத்தப்பட்டது. ஏன், அரசாங்கத்துக்கும் தொடர்ச்சியாக இதைப்பற்றிய அறிவுரையைச் சர்வதேச சமூகம் சொல்லி வருந்துள்ளதே. இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கும் நாட்டில் ஜனநாயகச் சூழலை மேம்படுத்துவதற்குமாக அரசியலமைப்புத் திருத்தம் உள்பட பல வேலைத்திட்டங்களை வலியுறுத்தியதே…இப்படியெல்லாம் இருந்தும் இதைப்பற்றி விளக்கம் கேட்கிறீர்களே! என்று கேட்டேன்.
“ஓ… அதுவா? அது ஏதோ என்.ஜி.ஓ வேலையாக்கும் எண்டெல்லோ நினைச்சன்” என்றார் தலைவர்.
இதற்கு என்ன பதிலைச் சொல்ல முடியும்?
“சரி, நீங்கள் சொல்கிற மாதிரி என்.ஜி.ஓ வேலைத்திட்டம் என்று வைத்துக் கொண்டாலும் அவர்கள் சொல்வதை இவர்கள் கேட்டார்கள் அல்லவா! இந்த வேலைத்திட்டத்தில் வழங்கிய கொடைகளைப் பெற்றிருக்கிறார்களே! மட்டுமல்ல, தென்னாபிரிக்கா உட்பட சில வெளிநாட்டுப் பயணங்களுக்கும் அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அந்தச் சந்தர்ப்பத்தில் இதெல்லாம் இலங்கைக்குச் சரிப்பட்டு வராது என்று யாராவது எப்போதாவது சொல்லியிருக்கிறார்களா?… அப்படிச் சொல்லி மறுத்திருந்தால் கொடைகள் கிடையாது. இதை அவர்கள் எப்படிப் பார்ப்பார்கள்?” என்று கேட்டேன்.
தலைவருக்கு ஒரு கணம் என்ன சொல்வதென்றே தெரியவில்லை. என்றாலும் அவர் தலைவரல்லவா! லேசில் விட்டு விடுவாரா என்ன?
“அப்பிடியெண்டால் நீங்கள் வெளிநாட்டுக்காரர் சொல்லிறதுக் கெல்லாம் தலையாட்டச் சொல்கிறீர்களா? இந்த வெளிநாட்டுச் சக்திகளை நம்ப முடியாது. அவர்களால்தான் இலங்கைக்கு வினை வந்ததே! இல்லையெண்டால் தமிழர்கள் தனியாகவும் சிங்களவர்கள் தனியாகவும் இருந்திருப்பம். இங்க வந்து எங்கட நாட்டைச் சுரண்டிக்கொண்டு போனது போதாதெண்டு, இனங்களுக்கிடையில் முரண்பாட்டை உருவாக்கி மோதவிட்டுப் போனார்கள். இப்ப சமாதானம் பேச வருகினமாம். ஆருக்கு விளையாட்டுக் காட்டுகினம்?அவையள் தாற காசை வாங்குவம். அதில என்ன தப்பிருக்கு? உண்மையில அது எங்கட காசுதான். இஞ்ச, இந்த மண்ணில சுரண்டிக்கொண்டு போன காசு. அதை இப்ப செலவழிக்கினம். செலவழிக்கட்டும். நல்லாச் செலவழிக்கட்டும்…” என்றார் தலைவர் சற்றுச் சூடாக.
எனக்கு நாக்கு எழவே இல்லை. மூச்சே நின்று விடும் போலிருந்தது. அதற்குள்ளும் சிரிப்புப் பொத்துக் கொண்டு வந்தது.
இந்த மாதிரி அறிவாளித் தலைவர்கள் இருக்கும் வரையிலும் இலங்கைக்கு …… (கீறிட்ட இடத்தில் எதையாவது போட்டு நிரப்பிக் கொள்ளுங்கள்) இல்லை. இவர்களுக்கு எல்லாமே தெரியும். ஆனால், தெரியாததைப்போல நடிக்கிறார்கள். அல்லது இந்த மாதிரி ஏமாளிகளைப் போலிருந்து எல்லோரையும் ஏமாற்றிப் பிழைக்கிறார்கள்.
இவர்களைப் போலத்தான் ஊடகத்துறையினரும். போருக்குப் பிந்திய ஊடக அளிக்கை பற்றிய சில அமர்வுகளுக்கு நானும் சென்றிருந்தேன். ஊடகத்துறையினர் பலரும் பங்கெடுத்திருந்தனர். அங்கே வழங்கப்படுகின்ற கொடைகளைப் பெறுவதிலும் அளிக்கப்படும் விருந்தை ஆர்வத்தோடு ருசித்துக் களிப்பதிலுமே பெரும்பாலானோர் கரிசனை காட்டினர். அங்கே பேசப்பட்ட விடயங்களில் ஒரு பத்து வீதமானவற்றைக் கூடக் கவனத்திற் கொள்ளவில்லை. பின்னாளில் எழுதப்பட்ட, எழுதப்படுகின்ற செய்திகள், கட்டுரைகள் எல்லாவற்றிலும் எந்த விதமான மாற்றங்களும் இல்லாமல் போருக்கு முந்திய, போர்க்காலத்தைய இனவாதத்தையே அள்ளி இறைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
சிலவேளை அரசியல்வாதிகளை விடவும் மோசமாக ஊடகத்துறையினர் நடந்து கொள்கின்றனர். உலகளாவிய அளவில் போருக்குப் பிந்திய சமூகங்கள் எப்படி தீர்வைக் கண்டிருக்கின்றன? அங்கெல்லாம் ஊடகத்துறை எப்படிச் செயற்பட்டிருக்கிறது? ஊடகவியலாளர்களின் பங்களிப்புகள் எப்படி இருந்தது? இங்கே எப்படி அந்தப் பங்களிப்பைச் செய்யலாம்? என்பதைப் பற்றியெல்லாம் சிந்திப்பதைக் காணவில்லை. வெளிநாட்டுப் பயணங்களில் அழைத்துச் செல்லப்பட்டு வந்தவர்கள் கூட அங்கே எதைப் பெற்றார்கள் என்று தெரியவில்லை.
இவர்களிடமும் என்.ஜி.ஓ மனநிலையே உள்ளது போலிருக்கிறது.
புத்திஜீவிகளின் கதையைச் சொல்ல வேண்டாம். அவர்களுக்கு இது மேலதிக உழைப்பு – மேலதிக வசதி. அப்படித்தான் நடந்து கொண்டனர். அதுவும் நல்லாட்சிக் காலத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தலைமையில் ஒரு பெரிய கட்டமைப்பு மீளிணக்கச் செயற்பாடுகளுக்கென உருவாக்கப்பட்டிருந்தது. அதில் நூற்றுக்கணக்கான சமாதான மேதைகள் பங்கெடுத்திருந்தனர். ஏராளமான திட்டங்கள் உருவாக்கப்பட்டது. கடையில் மிஞ்சியது…?
கலைஞர்கள் பாவம். அவர்களுக்கு இது ஒரு மேடை. எதிர்பாராத ஒரு சிறிய வாய்ப்பு. ஆடினார்கள், பாடினர்கள், ஓவியம் தீட்டினார்கள், சில ஒளிப்படங்களை எடுத்து காட்சிப்படுத்தினார்கள். சிலர் சில விவரணப் படங்களையும் குறும்படங்களையும் சமாதானத்துக்காக எடுத்தார்கள்.
சமாதான தேவதை மட்டும் இறங்கி வரவேயில்லை.
இவர்களே இப்படியென்றால், அரசும் கட்சிகளும் எப்படி நடந்திருக்கும் என்று எண்ணிப் பாருங்கள். வழங்கப்பட்ட கொடைகளை எல்லாம் வாங்கிக் கொண்டு பின்பக்கத்தைக் காட்டின.
இறுதியில் –
போருக்குப் பிந்திய அரசியல் காணாமலே போய் விட்டது. என்பதால்தான் இலங்கையில் எந்த மாற்றமும் நிகழவில்லை. சமாதானம் உருவாகவில்லை. சமூகங்களுக்கிடையிலான இணக்கம் ஏற்படவில்லை. புரிந்துணர்வு உருவாகவில்லை. பகை மறப்பு நிகழவில்லை. பொறுப்புக்கூறும் தன்மை ஏற்படவில்லை. நீதி வழங்கப்படவில்லை. நிவாரணம் அளிக்கப்படவில்லை. எதற்கும் எந்தப் பரிகாரமும் காணப்படவில்லை.
ஆக, அத்தனை பிரச்சினைகளும் அப்படியே கொதித்துக் கொண்டிருக்கின்றன. மேலும் புதிய பிரச்சினைகள் வேறு உருவாகியுள்ளன. பிரச்சினைகள் கொதிக்கக் கொதிக்க சமூகங்களுக்கிடையிலான முரண்பாடு அதிகரிக்கும். முரண்பாடு அதிகரிக்க மக்களின் வாழ்க்கை பாதிப்படையும். நாடு பின்னடையும். அதுவே நடந்தது– நடந்து கொண்டிருக்கிறது.
இன்று இலங்கை பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ளது என்றால் அதற்கு தனியே ராஜபக்ஸக்களின் ஊழல் மட்டும் காரணமில்லை. அல்லது அவர்களுடைய தவறான பொருளாதாரத் திட்டங்கள்தான் பிழைத்தன என்றில்லை. இனப்போரும் அது உண்டாக்கிய உற்பத்தித்துறை வீழ்ச்சியும் தொடரும் முரண்பாடும் காரணமாகும். அதிகரித்த படைத்துறைச் செலவு எதனால் ஏற்பட்டது?
உருவாகியிருக்கும் பொருளாதார நெருக்கடி இப்பொழுது அனைவரையும் பாதிக்கிறது என்றால்…அதற்குக் காரணம் முழு இலங்கையர்களும்தான். அவர்கள் விட்ட தவறுகள்தான். இதில் யாரும் யாரையும் சாட்டி விட்டுத் தப்பி விட முடியாது.
ஆனால், இதைப்பற்றிப் பகிரங்க வெளியில் வெளிப்படையாகப் பேசுவதற்கு யாரும் முன்வருவதில்லை. கடந்த வாரம் விக்டர் ஐவன் ஒரு கட்டுரையை எழுதியிருந்தார். அதில் சிங்களத்தரப்பின் உளச்சிக்கல்களைப் பற்றியும் அநாகரிக தர்மபால உருவாக்கிய சிங்க வரலாற்றுப் பெருமிதம் எப்படிச் சிங்கள மக்களைப் பிழையான சுழிக்குள் வீழ்த்தியது என்பதைப்பற்றியும் குறிப்பிட்டிருந்தார். இலங்கையின் இன்றைய பொருளாதார நெருக்கடிக்கான காரணங்களைப் பற்றி ஆராய்கின்ற ஐவன், இனப்பிரச்சினையும் அதன் விளைவான போரும் இன்னும் தொடருகின்ற இனவாதமும் செலுத்தும் தாக்கத்தைப்பற்றிப் பேசவேயில்லை. ஏன் யுத்தத்திற்குப் பின் அரசும் சிங்களச் சமூகத்தினரும் செய்திருக்க வேண்டிய பொறுப்பான வேலைகளைப் பற்றி ஒரு சொல் சொல்லவில்லை.
கடந்த பத்து ஆண்டுகளில் இலங்கை அரசுக்கும் இலங்கைச் சமூகங்களுக்கும் ஏராளம் நிதியை சர்வதேச சமூகம் அள்ளிக் கொடுத்தது. பல அறிவுரைகளைச் சொன்னது. சமாதானத்துக்கான வேலைத்திட்டங்களையும் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளையும் பரிந்துரைத்தது. சுருக்கமாகச் சொன்னால் நிறைய வீட்டுப்பாடங்கள் கொடுக்கப்பட்டன.
காசை வாங்கிக் கொண்டு அவ்வளவு பரிந்துரைகளையும் அறிவுரைகளும் அரசும் அதன் குடிகளும் காற்றில் பறக்க விட்டன. அதற்கு வழங்கப்பட்ட தண்டனையே இப்போதுள்ள நெருக்கடி. இதைப்பற்றியெல்லாம் ஐவன் போன்றோருக்கு நன்றாகத் தெரியும். ஐவன் போன்ற சிங்கள புத்திஜீவிகள், ஊடகத்துறையினருக்கு மட்டுமல்ல, தமிழ், முஸ்லிம் தரப்பிலுள்ள புத்திஜீவிகள், ஊடகத்துறையினருக்கும் நன்றாகத் தெரியும்.
போரில் நாடு அழிந்ததும் வாழ்க்கை சுருங்கிக் கிடந்ததும் எல்லோருக்கும் மறந்து விட்டது.
பதிலாக ஆளாளுக்குப் பழியுணர்ச்சியைப் பெருக்கிக் கொண்டு வென்றவர் ஒரு தரப்பிலும் தோற்றவர் இன்னொரு தரப்பிலுமாக நின்று அடிபடுகிறார்கள். இனவாதம் முன்னரை விடப் பன்மடங்கு செழித்து வளர்ந்துள்ளது. இந்த இனவாதப் போக்கிற்குள் நின்று கொண்டு அமைதியைக் காண முடியாது. இனவாதத்தைப் பெருக்கிக் கொண்டு தீர்வையும் எட்டமுடியாது. இல்லை, இதற்குள் தீர்வைக் காண முடியும் என்றால், அது எப்படி என்று அவர்கள் சொல்ல வேண்டும். அதைச் செய்து காட்ட வேண்டும்.
இப்போதைய போக்கில் ஒரு போதுமே இலங்கையில் அமைதி கிட்டாது. அமைதி கிட்டவில்லை என்றால் நாட்டில் முன்னேற்றம் ஏற்படாது. என்ன வித்தைகளைச் செய்தாலும் நெருக்கடியைக் குறைக்க முடியாது.
ஆகவே போருக்குப் பிந்திய அரசியலை முன்னெடுத்தே தீர வேண்டும்.
போருக்குப் பிந்திய அரசியல் என்றால், எதன் பொருட்டுப் போர் உருவாகியதோ அந்தக் காரணங்களை இல்லாமலாக்குவது. இதற்கே கற்றுக்கொண்ட பாடங்கள், படிப்பினைகள். இதற்கே கை மறப்பு. இதற்கே நல்லிணக்கம். இதற்கே நீதி பரிகாரம். இதற்கே பொறுப்புக் கூறல்.
இதைச் செய்வதாக இருந்தால் முதலில் நேர்மையான முறையில் தம்மை இதற்காக அர்ப்பணிக்க வேண்டும். இதில் வரும் சவால்களை ஏற்றுக்கொள்ளும் துணிவு வேண்டும். அர்ப்பணிப்பு உணர்வு வந்து விட்டால் அதற்கான துணிவும் பிறந்து விடும். சில சந்தர்ப்பங்களில் கட்சியை மீறி, அது பிரதிபலிக்கின்ற சமூகத்தை மீறிச் செயற்படவும் வேண்டும். தென்னாபிரிக்காவில் இதை மண்டேலா செய்தார். என்றபடியால்தான் அவரால் அங்கே நிறவெறியை – இன முரணை முடிவுக்குக் கொண்டு வரக்கூடியதாக இருந்தது. மண்டேலாவுக்கும் நெருக்கடிகள் ஏராளமாக இருந்தன. முதற்கட்டத்தில் அவர் வெள்ளையர்களின் நெருக்கடியைச் சந்தித்தார். இரண்டாம் கட்டத்தில் சொந்த இனத்தவர்களாகிய கறுப்பினத்தவர்களாலேயே நெருக்கடியைச் சந்தித்தார். ஆனால் உறுதியும் அர்ப்பணிப்பு மனநிலையும் மண்டேலாவுக்கு இருந்ததால் அதையெல்லாம் வென்றார்.
தலைமைத்துவம் என்பது அதுதான்.
இலங்கையின் மரபு நிலைப்பட்ட கட்சி அரசியல், தேர்தல் வெற்றிக்கான அரசியல் போன்றவற்றை மனதில் வைத்துக்கொண்டு இதையெல்லாம் செய்யவே முடியாது. அது வேறு. இது வேறு. இது நாட்டை மீட்பதற்கான முதலாம் கட்டப் பொறிமுறையாகும். நாட்டைக் கட்டியெழுப்புவோம் என்றே எல்லா ஆட்சியாளர்களும் பிரகடனங்களைச் செய்தனர். இந்தப் பிரகடனங்களை நம்பியே மக்களும் அவர்களுக்கு வாக்களித்தனர். ஆனால், சொன்னபடி நாடு கட்டியெழுப்பப்பட்டதா?
இதைப்பற்றி நாம் தெளிவாகச் சிந்திக்க வேண்டும்.
இலங்கை ஒரு பௌத்த சிங்கள தேசமல்ல. மாறாக இது ஒரு பல்லின நாடு. இங்கே ஒரு சுவாரசியமான முரணையும் அருமையான உண்மையையும் நாம் அறிய முடிகிறது. அநாகரிக தர்மபால தொடக்கம் இன்று வரையான பெரும்பாலான சிங்கள அறிஞர்களும் அரசியல்வாதிகளும் இலங்கையை பௌத்த சிங்கள தேசம் என்றே கட்டமைத்து வந்துள்ளனர். சிங்கள மக்களும் இந்த நம்பிக்கையோடுதான் உள்ளனர். இந்தப் பதட்டத்தில்தான் தொல் அடையாளங்களைத் தேடும் அவசரம் இந்த நெருக்கடிச் சூழலிலும் முடுக்கி விடப்பட்டிருப்பதாகும்.
ஆனால் சிங்களவர் அல்லாத ஏனைய மக்களும் சர்வதேச சமூகத்தினரும் இலங்கையை ஒரு பல்லின மக்கள் வாழும் நாடு என்றே கருதுகின்றனர். பல்லினங்கள் வாழுகின்ற நாடு என்ற அடிப்படையில் பன்மைத்துவம் பேணப்பட வேண்டும் என்று கூறுகின்றனர். இதற்கு மாறாகச் சிந்திப்பது என்பது எவ்வளவு மடத்தனமானது! இதேவேளை தமிழ்த் தரப்பிலும் இனவாதச் சிந்தனை நிறைய உண்டு. அதையும் சிங்கள இனவாதத்தையும் ஒரே நிலையில் பார்க்க முடியாது. ஆனாலும் இரு தரப்பிற்கும் பொறுப்புகளும் கடப்பாடுகளும் அதிகமுண்டு.
ஆகவே முதலில் போருக்குப் பிந்திய அரசியலுக்கான ஆரம்பப் புள்ளிகளை உருவாக்க வேண்டும். அதற்கு ஆரம்பமாகத் தேவைப்படுவது நம்முடைய மனநிலையில் உண்டாக வேண்டிய சிந்தனை மாற்றமாகும். அந்தச் சிந்தனை மாற்றத்தை உருவாக்குவதே முதற்கட்டப்பணி. ஆம், முதற்கட்டப் பணி கற்றுக் கொண்ட பாடங்கள் –படிப்பினைகளாகும்.